கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 2,326 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(ஓரங்க நாடகம்) 

[காலம் – தற்போது] 

[நவநாகரிக முறையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு கூடம். ஒரு ஸோபாவில் சுமார் இருபது இருபத்திரண்டு வயதுள்ள இரண்டு பெண்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதிரில் ஒரு சிறு மேஜைமேல் இரண்டு உயர்ந்த ரகப் புடவைகள் மடிப்பு விரித்துக் கிடக்கின்றன.] 

லீலா: உன் கடிதங்களி லிருந்தே நான் எல்லாம் தெரிந்து கொண்டேன். நீ நினைத்தபடி உனக்குச் சிற்றன்னை வாய்க்கவில்லை; எப்படியும் உன் தகப்பனார் சந்தோஷமா யிருக்கிறாரல்லவா? 

பத்மா : இன்னும் புதுமை மாறவில்லை ; கலியாணமாகி நாலு மாதம்கூட ஆகவில்லையே. லீலா, இது என்னால் முடிந்த காரியம், நான் வற்புறுத்தி யிராவிட்டால் என் தகப்பனார் கலியாணம் செய்து கொண் டிருக்கமட்டார். 

லீலா: அது நிஜம். உன் தாயார் இறந்துபோய் எட்டு வருஷங்களாகவில்லையா? நீ ஒரே பெண், உன் மனம் நோகக்கூடா தென்றுதான் அவர் யார் சொல்லியும் இதுவரை கேட்க வில்லை. இந்த வருஷம் இந்த வீட்டுக்கு ஒரு புது யஜமானியைக் கொண்டுவர நீயே முனைந்தாய். 

பத்மா: அதில் என்ன தப்பு? என் கணவர் சீமையிலிருந்து வர இன்னும் இரண்டு மாதங்கூடச் செல்லாது; நான் அவருடன் போனால், இந்த வீட்டையும் என் தகப்பனாரையும் கவனித்துக் கொள்வது யார்? ஆனால் நான் விரும்பியது வேறு. உன்னைப் போல ஒரு படித்த பெண், என் சிநேகிதியா யிருக்கத் தக்கவளை நான் தெரிந்தெடுக்க அவர் மணந்து கொள்வாரென்று நினைத்தேன். அந்த சிரமத்தையும், பெருமையையும் அவர் எனக்குத் தரவில்லை. 

லீலா: நடந்தது நடந்தாய் விட்டது, பத்மா, அவள் உன்னிடம் பிரியமாயிருக்கிறாளா? நீ அவளை என்ன சொல்லிக் கூப்பிடுகிறாய். 

பத்மா: அவளுக்கு என் சியாமளா என்று வயதுதான், சியாமளா பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறேன். அவள் எப்பொழுதும் குதூகலமாயிருக்கிறாள்; எனக்குத்தான் மனம் தாளவில்லை. 

லீலா: உன் தகப்பனார் அவளுக்குத் தகப்பனாராயிருக்கலாம்; அந்த வயது வித்தியாசத்தைப் பாராட்டாமல், அவள் அவருக்கு இங்கிதமாய் நடந்துகொண்டால், நீ இவ்வளவு வருத்தப்படக் காரணனமில்லையே. 

பத்மா: என் தகப்பனாருக்கு இவள் ஈடாவாளா? அவருடைய அருமை, பெருமை இவளுக் கெப்படித் தெரியும்? அவர் எவ்வளவு பரோபகாரம் செய்கிறார், எத்தனை நிதிகளுக்குக் காரியதரிசியா யிருக்கிறார்? சமூக சேவையில் அவருடன் கூட உழைக்கக் கூடிய நாகரிகம் தெரிந்த மனைவி வாய்த்தால், அவருடைய கியாதி இன்னும் அதிகமாய் விளங்காதா? 

லீலா: பத்மா, இதெல்லாம் வீண் பகற்கனவு ; உனக்கு அவளைப் பிடிக்காததற்கு வேறு காரணமுண்டா? 

பத்மா: (சிரித்து) அவளுக்குப் பிடித்த புடவை எனக்குப் பிடிக்கவில்லை. 

லீலா: (சிரித்து) உனக்கு இஷ்டமானபடி நீ புடவை எடுத்துக் கொள்ளேன். 

பத்மா : என்னைப்பற்றிச் சொல்ல வரவில்லை. அவள் தனக்கு இந்தப் பச்சைப்புடவை வாங்கிக்கொள்ளப் போவதாகச் சொல்கிறாள். இது சரிகை பகட்டாயிருக்கிறது, அடியிலிருக்கிற சாம்பல் வர்ணப் புடவையில் சரிகை நூலிழைபோலிருக்கிறது, அதுதான் அழகு என்று சொல்லிக் கொடுத்தாலும் தெரியவில்லை. இதோ வருகிறாள் (சியாமளா வருதல்) சியாமளா, இவள் தான் என் சிநேகிதி லீலா, பி.ஏ.பி.டி. ஸ்ரீவைசியப் பள்ளிக்கூடத்தில் கணக்கு உபாத்தியாயினி. 

சியாமளா: நீ முன்பே சொல்லியிருக்கிறாய். 

பத்மா: (லீலாவிடம்) இந்த இரண்டு புடவைகளில் எது அழகென்று உனக்குத் தோன்றுகிறது. 

லீலா: பச்சை சிலருக்கு ஒத்திருக்கும்; சரிகை எடுத்துக் காட்டுகிறது. சாம்பல் வர்ணப் புடவை புது மாதிரியில் சரிகை பகட்டில்லாம லிருக்கிறது. 

சியாமளா: நூற்றைம்பது ரூபாய் கொடுத்து சரிகை கண்ணுக்குத் தெரியாத புடவையை வாங்குவானேன். 

பத்மா: அப்படியானால் விலைச் சீட்டை வெளியில் தெரியும்படியாக உடுத்திக் கொள்ளலாம். 

சியாமளா: (சிரித்து) இதென்ன கேலி ; உனக்கு அவ்வளவு பிடிக்காவிட்டால், நான் இரண்டு புடவைகளையும் திருப்பி விடுகிறேன்; எனக்கு அந்த சாம்பல் வர்ணம் பிடிக்கவில்லை. 

பத்மா: அரக்கு, பச்சை, மயில் நீலம் போன்ற வர்ணங்கள் உனக்குப் பிடிக்கும்போலிருக்கிறது. உடையிலும். வேறெதுவிலும், வெளித்தோற்றம் பகட்டாயிருப்பது நாகரிகமில்லை ; எளிமையாய்த் தோன்ற வேண்டும். 

சியாமளா : அதுவும் ஒரு வேஷம், பிறர் பார்வைக்காகத் தானே, நீங்கள் உள்ளாடைகளுக்கு லேஸ் வைத்துத் தைத்துக்கொண்டு, அதன்மேல் மெல்லிய துணிகளை உடுத்திக் கொள்கிறீர்கள் ; எங்கள் ஊரில், அரை கஜப் பட்டுத்துணியை வெளிக் கைக்கும் முதுகுக்கும் வைத்து, புடவை மறைக்கும் தோளுக்குக் காங்குத் துணியை ஒட்டுப் போட்டு விடுவார்கள். எப்படியானாலென்ன, சிறுக்கி சிங்காரிப்ப தெல்லாம் தேர்க் கூட்டம் பார்ப்பதற்காகத்தான் (சிரிக்கிறாள்.)

பத்மா: ஒருவிதம் நாகரிகம் மற்றது அநாகரிகம், நீ அடிக்கொரு வசனம் சொல்லிப் பேசுகிறாயே, அது சுத்த நாட்டுப்புறம்.

சியாமளா: உன் தகப்பனார் ஏன் இன்னும் வரவில்லை; நேரமாகுமென்று சொன்னாரா? 

பத்மா: ஒன்றும் சொல்ல வில்லை, அவருக்கு பல அலுவல்களிருக்கும். 

சியாமளா: சமையற்காரனை அனுப்பிப் பார்த்து வரச் சொல்கிறேன். 

(உள்ளே போகிறாள்)

பத்மா: (புடவைகளைத் மடித்து ஒரு துண்டிற் கட்டி வைத்து) பார்த்தாயா, உன்னிடம் மரியாதையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. மனத்திலுள்ளதை அப்படியே பேசிவிடுவாள். 

வீலா: கள்ளங்கபடில்லை!

பத்மா : இதுவா ஒரு புகழ்சி! இன்று வீட்டில் மைசூர்ப்பாகு செய்திருந்தது; ஐந்தாறு தின்று விட்டாள். தித்திப்பு, ஒன்று தின்னது, எனக்குத் தெவிட்டி நெஞ்சைக் கரித்தது. ரோஜாவுக்கு உரமிட்ட பாத்தியில் கீரைத் தண்டு முளைத்தது போலாயிற்று, இவள் இங்கு வந்து சேர்ந்தது. 

லீலா: இதோ உன் தகப்பனார் வந்து விட்டார், நான் போகிறேன். 

(கையில் ஒரு கைப் பெட்டியுடன், கவலை தேங்கிய முகத்துடன் நரசிங்கராவ் வருதல்). 

நரசிங்கராவ்: அம்மா, லீலா ஒரு நிமிஷம் இரு. உன் மாமா ஊரிலிருக்கிறாரா? 

லீலா : இருப்பாரென்று நினைக்கிறேன். நிச்சயமாய்த் தெரியாது. 

நர : நான் டெலிபோனில் கூப்பிட்ட பொழுது அவர் வீட்டிலில்லை. நீ மறுபடியும் கூப்பிட்டுப் பார், இருந்தால் நரசிங்கராவ் உங்களை அவசரமாய் வரச்சொல்கிறார் என்று சொல்; வற்புறுத்திச் சொல், தெரியுமா? 

லீலா : சரி, அவருடன் பேச முடிந்தால் சொல்கிறேன் – நமஸ் காரம்- வருகிறேன் பத்மா; (போகிறாள்). 

பத்மா: (தகப்பனாரிடம்) உங்களுக்கு உடம்பென்ன? இவ்வளவு அவசரமாக வக்கீல் எதற்கு? 

நர : உடம்பு ஒன்றுமில்லை; சியாமளா எங்கே ? 

பத்மா: உள்ளே யிருக்கிறாள். உங்கள் முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரியாயிருக்கிறது. அவசரமாக வக்கீலைத் தருவிக்கிறீர்கள். அவரிடம் சொல்லப் போவதை முதலில் என்னிடம் சொல்லக்கூடாதா? 

நா : சொல்லிப் உன்னிடம் பிரயோசனமில்லை (ஒரு சாய்வு. நாற்காலியில் சாய்கிறார்.) 

பத்மா : சியாமளாவுக்கு விளங்கும் விஷயம் எனக்குப் புரியாதா? 

நர : அவளிடமும் ஒன்றும் சொல்லிப் பயனில்லை. எல்லாம் என் தலைவிதி (கையால் தலையைத் தாங்கிக் கொள்கிறார். சியாமளா காபி கொண்டு வருகிறாள்.) 

சியா : உங்கள் குரலைக் கேட்டு காபி கொண்டு வந்தேன். முதலில் அதைச் சாப்பிடுங்கள் அப்புறம் மதியால் விதியை வெல்லலாம். 

நர: நான் எதைப் பற்றிப் பேசுகிறேனென்று உனக்கு என்ன தெரியும்? 

சியா : தெரியாது, ஏதோ சௌக்கிய மில்லாமலிருக்கிறீர்கள். சற்று சிரமபரிகாரம் செய்து அப்புறம் யோசனை செய்யலாமென்று சொல்கிறேன். 

பத்மா: நான் போகிறேன். (தகப்பனாரிடம், சற்றுக் கோபமாய்) நீங்கள் வக்கீலை யழைத்து உயிலை எப்படி மாற்றினாலும் எனக்கு அதில் வருத்தமில்லை. 

சியா : உயிலைப்பற்றியா பேச்சு? ஒருநாள் உடம்பு சடைவாயிருந்தால் உயிலைப் பற்றியா நினைவு? உங்களுக்கு உடம்பு சரியாயில்லா விட்டால் வைத்தியனைக் கூப்பிடுங்கள். வக்கீலுக்கு இப்பொழுது அவசரமில்லை. நான் சொல்வதைக் கேட்பீர்களா? உங்களுக்கு உடம்பு ஒன்றுமில்லை; மனத்தில்தான் ஏதோ உறுத்திக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நாள் இந்த அலுவல்களை யெல்லாம் விட்டு ஓய்வெடுத்துக் கொண்டு பங்களூருக்குப் போயிருக்கலாம். 

நா : ( கசந்த சிரிப்புடன்) அந்த ஓய்வுநாள் எடுத்துக் கொள்ள வேண்டாம், தானாகவே கிடைத்துவிடும். என் வேலைக்கு ஓய்வு காலம் வந்தாய் விட்டது. 

பத்மா: (பரபரப்பாய்) உங்களுக்கு என்ன உடம்பு? 

சியா: (சாவதானமாய்) அதுவும் நல்ல காலம்தான்; என்ன வாயிற்று? 

நர : நான் திடீரென்று ஒரு வியதிக்குள்ளாகி, உயிலை மாற்ற வக்கீலைத் தேடுகிறேன் என்று பத்மா நினைக்கிறாள். அப்படியாவது ஒரு வியாதி நேர்ந்து உயிர் நின்று விடாதா என்று தான் நான் கோருகிறேன். அவ்வளவு பெரிய அவமானத்துக்காளாகியிருக்கிறேன். 

பத்மா : நீங்களா? நீங்கள் ஏதாவது தப்பாகச் செய்து விட்டிர்களா ? 

சியாமளா: நீ பேசாமலிரு. பத்மா. அவர் சொல்லட்டும். யாரோ உங்கள் மேல் பழிசாட்டி யிருக்கிறான்; அதற்காக வக்கீலைத் தேடுகிறீர்கள் ; பிராணனை விடலாமா என்று யோசிக்கிறீர்கள். இந்தக் கோழைத்தனத்தி லிருந்தே உங்கள் மேல் தப்பில்லை என்று அறிவேன்; வேண்டுமென்று அநியாயமாய் நடந்தவனுக்கு இன்னும் சற்று நெஞ்சழுத்தம் இருக்கும். வாய் விட்டுச் சொல்லுங்கள். காரணமிருந்தால், (சிரித்து) நாமிருவரும் சேர்ந்து பிராணத் தியாகம் செய்யலாம். 

நர : பத்மாலய நிதிக் கணக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது; சங்கரராவ் கண்டு பிடித்து என்னை விவரம் கேட்டான்: எனக்கு சரியாய்த் தெரியவில்லை. 

சியா : எவ்வளவு தொகை குறைகிறது? 

நர : ஏதோ, இரண்டாயிரம். 

சியா : எவனாவது அதை வாயில் போட்டுக் கொண்டிருப்பான்; உங்களுக்கு வெளுத்த தெல்லாம் பால். உங்கள் மேல் பொறுப்பிருப்பதால் நீங்கள் நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும்; இவ்வளவுதானா? 

பத்மா: இது போலவே, நீங்கள் கண்காணிக்கும் மற்ற நிதிகளிலும் குறைவிருக்கிறதோ? 

நர: இல்லை; அவையெல்லாம் சரியாய்த்தான் இருக்கின்றன. ஹரிஜன சங்க நிதியில் இருநூறு ரூபாய் குறை; அது நான் எடுத்துச் செலவழித்தது. திரும்பவும் போட்டு விடலாமென்று கணக்கில் காட்டவில்லை. அந்த பாக்கியின் விவரம் நினைவிருக்கிறது, நான் சொல்லியாய் விட்டது. 

பத்மா : சங்கரராவ் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்; இது பெரிய அவமானம்தான்; பெண்கள் கூட இதைவிடச் சீராகக் கணக்கெழுதுவார்கள். 

சியா : பத்மா, சமயம் தெரிந்து பேசு, அல்லது பேசாமலிரு. மாளிகை யிடிந்தாற் கட்டலாம்; மனமிடிந்தாற் கட்ட முடியுமா? 

பத்மா : என் தகப்பனார் மேல் இம்மாதிரி அவதூறு ஏற்படுமென்று நான் நினைக்கவேயில்லை. 

சியா: (நரசிங்கராவிடம்) இப்படி ஒரு பெண் பேசுகிறாளே யென்று மனம் கசந்து கொள்ளாதேயுங்கள். பத்மாவுக்கு வயதாகிறதே யொழிய, அநுபவ மில்லை; குழந்தைத்தனமா யிருக்கிறாள். குழந்தைகளுக்குப் பெற்றோர்மேல் ஒரு நாளும் அநுதாபம் கிடையாது; பிள்ளை மனம் கல். அதோ வருகிறது யார், உங்கள் வக்கீலா? நானும் கூட விருக்கிறேன், நீங்கள் தடுக்கா தேயுங்கள். 
 
(வக்கீல் பிரசன்னராவ் வருகிறார்) 

பிர : (அவசரமாய்) என்ன நரசிங்கராவ், இப்படிக் கவலைப் படுகிறீர்கள். நான் சங்கரராவை பார்த்துவிட்டுத்தான் வருகிறேன்; தன் சாமார்த்தியத்தைத் தானே மெச்சிக்கொண்டு ஏதோ துள்ளுகிறான். ‘தவறைக் கண்டு பிடித்தாய், தவறு செய்தவனைக் கண்டு பிடிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு வந்தேன். நீங்கள் தொகையைச் சரிப்படுத்திவிட வேண்டும். அது தவிர, மேல் நடவடிக்கை எடுத்துக்கொள்ள ஒரு நியாயமுமில்லை. 

நர : சரிதான். ஜெயிலுக்குப் போகவேண்டாம். மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள வழியில்லையே. 

பிர : கணக்கு விஷயங்களில் தப்பு நேர்ந்தால் பலர் பலவிதமாய்ப் பேசுவார்கள்; நான் இன்றிரவு ரயிலேறி பெஜவாடாவுக்குப் போகிறேன். நீங்கள் நாளை மடாதிபதியைப் பார்த்து உள்ளதை உள்ளபடி சொல்லி விடுங்கள்.நான் இரண்டு நாளில் சங்கரராவால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள்கூட ஸ்டேஷனுக்கு வரு கிறீர்களா. பேசிக்கொண்டே போகலாம். 

(பிரசன்ன ராவும் நரசிங்க ராவும் போகிறார்கள்.) 

பத்மா : ஐயோ ! இப்படியும் உண்டா? (ஒரு சோபாவில் சாய்கிறாள்.) 

சியா : பத்மா, நீ நடந்து கொள்வது அழகாயில்லை. இதனால் அவர் மனம்கோலிட்ட புண்போலாகிறது. 

பத்மா: ஊர் சிரிக்கத் தப்புக் கணக்கெழுதினால், அவர் மனம் நோகக் காரணமில்லையா? நான் அவரைப் பற்றி எவ்வளவோ சிறப்பா யெண்ணி யிருந்தேன். 

சியா : வீட்டில் ஆறு வருஷமாய் உன் இஷ்டப்படி நடந்தவர் வெளிக் காரியங்களிலும் மற்றவர் பேச்சுக்குட்பட்டு நடக்கக் கூடியவர் என்பது உனக்குத் தெரியவில்லையா? பலரும் அவரை தங்கள் சௌகரியப்படி உபயோகப் படுத்திக் கொண்டார்கள். ஓரிடத்தில் சம்பளத்துக்கு வேலை செய்பவன், வேறிடங்களில் ஊ தியத்துக்கு உழைக்கக் கூடா தென்று ஒரு கட்டுப்பாடு உண்டு. இலவச வேலைக்கு ஒரு வரம்பு கிடையாது – எத்தனை அலுவல்களை ஒருவனால் கவனிக்க முடியும்? தாக்ஷண்யத்துக்காகவும், பெருமைக்காகவும், உன் தகப்பனார் வேண்டாத பளுவைச் சுமத்திக் கொண்டார். தலை வலிக்குப் பூ எதற்கு ? இதுவே அவருக்கு ஓர் எச்சரிக்கையாயிற்று. அதுவும் நல்லதுதான். 

பத்மா : நரசிங்கராவின் பெண் என்று சொல்லிக் கொள்வது பெருமையா யிருந்தது. இப்பொழுது அதற்காகத் தலைகுனிய வேண்டும். 

சியாமளா : எந்த சமயத்திலும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொள்ளாதே. 

பத்மா : உன்னைப் பற்றி நினைக்கட்டுமா? சமார்த்தியமில்லாமல் பெயரைக் கெடுத்துக் கொண்ட என் தகப்பனாரைப் பற்றி நினைக்கட்டுமா? நீ அவருக்கு ஏற்றவள்தான். 

சியாமளா: (சிரித்து) வசிஷ்டர் வாக்குப்போல், இந்தச் சொல் பலிக்கட்டும். 

(இருவரும் உள்ளே போகின்றனர்). 

– மங்கை, ஜூலை 1947.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *