சின்ன சின்ன கனவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 14,925 
 
 

பள்ளி வாசலில் மழலையின் சத்தங்கள். மணல்துகள்கள் அந்தரத்தில் அலைபாய்ந்தபடி இருந்தன. வருகின்ற அத்தனை மழலைகளின் வெள்ளை சட்டைகளிலும் டிசைன் டிசைனாக மை கறைகள். வெகுளி சிரிப்புகள். 15 நிமித்திற்கு முன்பிலிருந்தே வெயிலில் கால் கடுக்க காத்துக்கொண்டிருக்கும் ஸ்ப்லெண்டர்களும்,அபேச்சியும்,பஜாஜ் கப்பும் வைத்திருக்கிற ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டு பள்ளியின் வாசலில் இருக்கும் அப்பாக்களும், காலை உணவை முடித்துவிட்டு வீட்டு வேலைகள் முடித்து, மதிய நேர சீரியல்களை பார்க்க முடியாத வருத்தத்தோடு அம்மாக்களும், கடைசி பரீட்சையை முடித்துவிட்டு அடுத்த 2 மாதங்களை வீட்டில் பல சில்மிஷங்களை செய்ய காத்துகொண்டிருக்கும், காலில் ஷூ போட்ட, கழுத்தை இறுக்கி பிடிக்கும் டை போட்ட வருங்கால மானுட இயந்திரங்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இடையில் மஞ்சள் தோல் போர்த்திய மூன்று சக்கர வாகனமான ஆட்டோக்களும், அதனுள் எப்படியெல்லாம் குழந்தைகளை அடைக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் ஆட்டோ டிரைவர்களும் இருந்தனர். ஏனோ தற்போதெல்லாம் ரிக்ஷாவில் பயணம் செய்யும் பள்ளிக்குழந்தைகள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

விக்னேஷ், தெத்துப்பல், மூக்கொழுகுதல், வகுடெடுத்து வாரப்பட்ட தலை, 1.5 மைனஸ் பவர் உள்ள கண்ணாடி என்று தனக்கே உரிய சிறிய அடையாளங்கள் உடைய, ஏழாவதிலிருந்து எட்டாம் வகுப்புக்கு முன்னேறும் மாணவன். வாசலில் தன் சகாக்களுடன் அரட்டையடித்துகொண்டிருந்தான். “லீவ்ல என்ன பண்ணப் போற?”அவன் சகா. “தெரியலடா.. எல்லா கம்ப்யூட்டர் கேமும் விளையாடி முடிச்சாச்சு.. எல்லா புது படமும் பாத்தாச்சு.. கே டிவில போடுற படத்த தான் இனிமே பாக்கனும்..” “டே நான் கௌண்டெர் ஸ்ட்ரைக் இன்ஸ்டால் பண்ணிட்டேன், என் வீட்டுக்கு வா. சம கேம். சான்சே இல்ல தெரியுமா. வரவன் போறவன் எல்லாரையும் ஸ்னைப்பர வெச்சு போட்டுக்கிட்டே இருக்கலாம்”.. அவன் சொல்ல சொல்ல, இவனுள் ஆர்வம் உண்டானது.

காத்துக்கொண்டிருந்த அவர்களின் கால்கள் உட்கார இடம் தேடிய போது, அவர்களுக்குறிய ஆட்டோ வந்தது. அரட்டை ஆட்டோவிலும் தொடர்ந்தது. “11 டு 2 கௌண்டெர் ஸ்ட்ரைக், 2.30 டு 5.30 டி.வி, 6 டு 9 வேற ஏதாவது வீடியோ கேம்ஸ், சம ஜாலியா இருக்க போகுது, போட்டுக்கோ”, கையை “போட்டுக்கோ” விற்காக சற்று ஆர்வ மிகுதியில் அவன் சகா கையை நீட்டினான். விக்னேஷ் நெரிசலில் மாட்டிக்கொண்ட தன் கையை ஒரு மாதிரியாக கஷ்டபட்டு எடுத்து, அவன் கையில் தட்டினான், உதடுகளின் ஒரு ஓரத்தை சற்று அகலபடுத்தி, சிரமமாக சிரித்து,”ஹூம்……..” என்றான்.

தன் அபார்ட்மெண்டுக்கு,கையில் ஒரு கோன் ஐசுடன், அதன் ஓரங்களில் வழிவதை நக்கியவாறு தன் ஃப்ளாட்டை நெருங்கினான். மதிய வேளையில், பக்கத்து வீட்டிலிருந்து சாவியை வாங்கிகொண்டு, தானே வீட்டை திறந்து, தானே புத்தக மூட்டையை இறக்கி, தானே சாக்ஸ் ஷூ வை கிழற்றி, தானே உணவு பறிமாறிக்கொண்டு சாப்பிடும் 99.99 சதவிகித ஃப்ளாட்டில் வசிக்கும் சிறார்களில் இவனும் ஒருவன். விக்னேஷுக்கு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் 32 வயது நிரம்பிய, சாரதா என்ற பெயர் கொண்ட அம்மா மட்டும் தான். மூன்று வருடங்களுக்கு முன் கோர்ட்டில் அம்மா டைவர்ஸ் பத்திரத்துடன் நிற்கையில், அப்பாவை அன்று தான் கடைசியாக பார்க்க நேர்ந்தது. அதன் பிறகு அவர் வடநாட்டில் ஏதோ ஒரு குஜராத்தி பெண்ணோடு வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவனுக்கு கிட்டிய அரைகுறை செய்தி.

அன்று மதிய உணவு கடையிலிருந்து ஆர்டர் செய்யப்பட்ட டொமேட்டோ சீஸ் பீட்சா. இதுவே இந்த வாரத்தில் மூன்றாவது முறை. அம்மாவுக்கு ஒழுங்காக சமைக்க தெரியாததாலோ, இல்லை சமைக்க அலுத்து கொள்ளும் காரணத்தினாலோ தான் அப்பா அம்மாவை விட்டு பிரிந்துவிட்டார் என்று தோன்றும் விக்னேஷுக்கு இந்த பீட்சாவை பார்க்கும்போது. பல நாட்களில் இவனே மதியம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிடுவான்.. பாடம் கற்று கொடுத்தாளோ இல்லையோ, நூடுல்ஸ் சமைக்க கற்றுக்கொடுத்துவிட்டாள். கடமையே என்று அந்த பீட்சாவை உண்டபிறகு, தனது ஆஸ்தான இருக்கைக்கு வந்தவுடன், கையில் வீடியோ கேம் ரிமோட்டை எடுத்து விளையாட ஆரம்பித்தான். ஜன்னல் பக்கத்திலிருந்து வந்த சத்தங்கள் அவனை முகம் சுளிக்க செய்தன. ஜன்னலோரம் வந்த பிறகு, மனதில் ஒருவிதமான கோபமும், பொறாமையும, ஏக்கமும் கலந்துகட்டி முகத்தில் வெளிப்பட காத்துக்கொண்டிருந்தது. இவ்வளவும் ஏற்பட காரணம், பக்கத்து தெரு குடிசைகளில், குப்பங்களில் வசிக்கும் சிறார்கள்,ஒற்றை ஸ்டெம்புடன், உடைந்து போகும் நிலையில் உள்ள பந்தை வைத்துக்கொண்டு, அதையும் முழுவதுமாக உடைக்க, ஹேண்டில் இல்லாத மட்டையை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். விக்னேஷின் ஏக்கமான முகம் மிகவும் தொங்கிபோனது, அந்த ஐஸ்காரன் வந்தவுடன் ஐஸ்காரனை வளைத்து சுற்றிக்கொண்டு, ஐஸ்களை வாங்கி சப்பிக்கொண்டும், வேர்வையை துடைத்துக்கொண்டும் கூத்தடித்து கொண்டிருந்தார்கள்.

இவன், தான் இங்கு ஏக்கமாக உள்ளதை, தான் பார்த்த எல்லா படங்களிலும் பாவமாக சித்தரிக்கப்படும் ஏதோ ஒரு கதாபாத்திரத்தினுடன் ஒப்பிட்டு கொண்டிருந்தான். நாயகன் படத்தில் வரும் பிண்ணனி இசை ஒன்று தான் குறை. உலகிலேயே மிகவும் கொடியது, தன்னைத் தானே பாவமாகவும், யாருமின்றி தனிமையில் விடப்பட்ட நிலையையும் தான்… இன்று அவன் அப்படி உணர்ந்திருக்க கூடும், இல்லையென்றால் அவன் கண்கள் அப்படி கலங்கியிருக்காது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் தலையை திசை திருப்பிய அவனுக்கு, எப்போதும் அம்மாவிடமிருந்து கிடைக்கும் வசவு சொற்களினால் அர்ச்சனை செய்யப்பட்டது.
“சனியனே, சனியனே….. இங்க வீடியோ கேம் அது பாட்டு ஓடிட்டு இருக்கு, அங்க என்ன ஜன்னல்ல வேடிக்க..இத ஆஃப் பண்ணிட்டு போய் தொலஞ்சா தான் என்னவாம்” தினமும் இந்த வசவு சொற்கள் அவனது இடமிருந்து வலது காதோ,வலதிலிருந்து இடது காதோ ஊடுறுவி வெளியே சென்றுவிடும்.மூளையில் எல்லாம் தங்காது. ஆனால் இன்று அந்த சொற்கள், அவனின் அட்ரீனலினை தூண்டியிருக்கவோ, உசுப்பேற்றியிருக்கவோ வேண்டும். கண்ணில் தேக்கி சேர்த்துவைத்திருந்த கண்ணீர் பெருகிவர துடித்துகொண்டிருந்தது. அவன் உச்சஸ்தாதியில், குறைந்தது சுற்றியிருக்கும் 5 வீடுகளுக்கு கேட்குமளவில்,” போடி நாயே” என்றான். இந்த வார்த்தைக்கு காரணம், இவ்வளவு நாட்கள் இவன் எவ்வளவு கெஞ்சியும் வெளியில் விளையாட விடாததற்கா, சின்ன வயதிலிருந்தே மிரட்டியே வளர்த்ததற்கா, மதிய நேரங்களில் சாப்பாடு கொண்டு வரும் மற்ற அம்மாக்களை போல் தன்னை ஒரு நாள் கூட காண வராததற்கா, எவ்வளவோ நாள் கேட்டும் இரவில் கதை சொல்லாததற்கா,ஆபீசிலிருந்து வரும்போது இவன் கட்டிபிடிப்பதை பிடிக்காமல் அறைந்ததற்கா, இப்படி பல சொல்லி கொண்டே போகலாம். ஏதோ ஒரு தருணத்தில் தான் இது போன்ற ஏக்கங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து கொண்டு, ஒரு மனிதனை ஒரு உச்ச நிலைக்கு தள்ளி விடுகிறது.. சம்மந்தமே இல்லாமல் எதனாலோ தூண்டப்பட்டு, ஒரு விதமான எரிச்சலுடன், அது பிறர் மேல் வெளிபடுகிறது.. இவன் குழந்தையாக போனதால் “போடி நாயே” என்பதுடன் நின்றுவிட்டது. அதற்கான பின் விளைவுகளை அவன் யோசித்திருக்கவில்லை.

“போடி நாயே”, சனியனே, சனியனே வை மிஞ்சிவிட்டது. அவள் பத்ரகாளிபோல், வேக நடை போட்டு, அவன் கன்னத்தில், தன் ஐந்து விரல்கள் பதியும் அளவிற்கு அறைந்தாள். அவனின் இடது பக்க கன்னத்தில் அறையப்பட்டதால் வலது பக்கம் ஒருவாறாக சாய்ந்து கொண்டிருக்கும் தருணத்திலேயே அழத் தொடங்கினான். அழுகை இரவு வரை நீடித்தது. இது நாள் வரை நேர்ந்த நிகழ்வுகளுக்கும் சேர்த்து அழுதுகொண்டிருந்தான். இரவு உணவை வேண்டா விருப்பாக முடித்துவிட்டு படுத்துக் கொண்டான். தூக்கம் வருவது போல் தெரியவில்லை. சாரதா எதையும் கண்டுகொள்ளவில்லை. தனது கம்பெனியில் கொடுக்கப்பட்டிருக்கும் அடுத்த மாத ப்ராஜெக்ட்டை எப்படி முடிக்கலாம் என்பது தான் அவளின் தற்போதைய மன ஓட்டம். இரவில் எப்போதும் போல் தனது நண்பரான(??) பாலாஜியிடம் தொலைபேசியில் உரையாட (அரட்டையடிக்க)தொடங்கினாள். இங்கு பாலாஜி பற்றி ஓர் சிறுகுறிப்பு. பாலாஜி, சாரதாவின் “கொல்லீக்” என்பதை தாண்டி அவளது கணவன் பிரிந்து சென்ற பின் அவள் மனதிற்கு நெருக்கமான ஓர் நண்பன். கம்பெனியிலும் சரி, இவள் வசிக்கும் ஃப்ளாட்களிலும் சரி இவர்களை இணைத்து பேசாத ஆட்கள் கிடையாது. ஆனால், இதற்கெல்லாம் கவலைபட்டவர்களில்லை அவர்கள். பாலாஜி அவள் வீட்டிற்கு வருவது வாடிக்கைஆகிவிட்டது.

அதுவும் இரவு நேரங்களிலும் சாரதாவின் வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பாலாஜிக்கு எப்படிதான் அப்படி சிரிக்க முடிகிறதோ?. சிரிப்பொலி விக்னேஷை எழுப்பும். அவன் தண்ணீர் குடிக்கவோ சிறு நீர் கழிக்கவோ வரும்போது,” இன்னுமா தூங்கல, என்ன பண்ணிட்டு இருக்க?” என்று வழக்கம் போல் திட்டு தான். அந்த நேரங்களில் பாலாஜி “எப்டிடா இருக்க?” என்று வினவுவான். இவன் பதில் ஏதும் சொல்லாமல் சிறுநீர் கழித்துவிட்டு உள்ளே சென்று தூங்குவான். ஏனோ விக்னேஷுக்கு பாலாஜியை அறவே பிடிக்காது.

இன்று சாரதா வழக்கம் போல் அவனுடன் தொலைபேசியில் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள். “போடி நாயே” விஷயத்தை பாலாஜியிடம் சொல்லும் போது விக்னேஷ் தூங்கி விட்டானா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டாள். அடுத்த பத்து வருடங்கள் சேர்த்து அழ வேண்டிய அழுகையை அன்றே அழுது தீர்த்த விக்னேஷ் அசதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

மறு நாள் காலை இவன் எழுந்திருக்கும் முன்னே துணிகள் மடித்துவைக்கப்பட்டு, ஊருக்கு புறப்படும் நிலையில் இருந்தன. சாரதா, அவனுக்கான காபியை கலந்து மேஜையில் வைத்து, அவனை பார்க்காமலேயே “காபி” என்று தன் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பதை ஊர்ஜிதபடுத்தினாள். அவன் ஒன்றும் புரியாமல் “எங்கமா போறோம்?” என்றான். அவள் “உன் பாட்டி வீட்டுக்கு. லீவ் முடிஞ்சு வந்தா போதும். உன்ன வெச்சுக்கிட்டு நான் அவஸ்த பட முடியாது. இன்னிக்கு போடி நாயேனு சொல்லுவ, நாளைக்கு வேற ஏதாவது செய்யுவ.கொஞ்ச நாள் அங்க போயி இரு. அப்பதான் அம்மாவோட அரும தெரியும். எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். எல்லாம் உங்கப்பன் புத்தி. அதான் அப்படி பேசுன” என்றாள் எரிச்சலுடன். பாட்டி, அம்மாவின் அம்மா. பாட்டி வசிக்கும் இடத்திற்கு சென்றது இரண்டு வருடங்களுக்கு முன்பு. பாட்டி வீட்டை பற்றி பெரிய ஞாபகங்கள் ஏதுமில்லை. விக்னேஷுக்கும் வீட்டை விட்டு வித்தியாசமான இடத்திற்கு போக வேண்டும் என்ற மன நிலை உருவாகியிருந்தது. அதன் பின் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் பாட்டி வீடு வரை பயணமானார்கள். மூன்று மணி நேர பயணத்தில், சாரதாவின் கைகள் சதா செல்போனை உபயோகித்து கொண்டே இருந்தது. பாலாஜிக்கு குறுஞ்செய்தி.”goin t mom’s home wit vignesh.. wil b alone in my home for de next 1 month..” பயணத்தின் முடிவில் கிராமமும் அல்லாத, முழு வளர்ச்சி அடைந்த நகரமும் அல்லாத அந்த ஊருக்குள் நுழைந்து, ஒரு ஆட்டோவின் உதவியுடன், பாட்டி இருக்கும் அக்ரஹாரத்திற்குள் நுழைந்தனர்.

பாட்டி வீடு, நுழையும்போதே கமகமக்கும் ஊதுபத்தி வாசனை, வீட்டு வராந்தாவிலிருந்து, ஹால் வரை எங்கு காணினும் பெருமாள் படங்கள். ஒரு கோயிலினுள் நுழைவது போன்ற உணர்வு விக்னேஷுக்கு. வீட்டில் நுழைந்தவுடன், “என்னடி, இப்படி திடுதிப்புனு, சொல்லாம கொள்ளாம வந்து நின்னுண்டிறுக்க” என்று ஆரம்பித்தாள் சரோஜா பாட்டி. பாட்டிக்கு ஃப்ளாட்ஸ் வீடு, கூட்ட நெரிசல், மூஞ்சை தூக்கி வைத்து கொண்டிருக்கும் நகர மக்களின் வாழ்க்கை ஒத்துவராது. அதனால் தான் இந்த தனிக்குடித்தனம். “எப்படி டா இருக்க? இன்னும் விஷமம் பண்ணிண்டு இருக்கியா?”, பாட்டி விக்னேஷிடம். “ஹூம்,… உன் பேரன் நன்னா வாய் பேச கத்துன்ட்டான். என்னையே போடி நாயேனு சொல்ற அளவுக்கு நாக்கு நீண்டிருத்து” சாரதா பாட்டியிடம். “அடப்பாவி,அம்மாவல்லாம் அப்படி சொல்லலாமா,.. ம்?” என்று உதட்டில் சிரிப்புடன், ஒரு செல்ல குட்டு வைத்தாள் அவன் தலையில். அவன் உதடுகளும் விரிந்தன, சிரிப்பால். சாரதா, “அம்மா, நீ அவனுக்கு செல்லம் கொடுக்க ஆரம்பிச்சுடாத, ஒரு மாசம் இங்க விட்டுட்டு போறேன், லீவ் தான், சஹஸ்ர நாமம் சொல்லிக்கொடு, கர்னாடிக் சொல்லிக்கொடு,இங்க இருந்தாவது கொஞ்சமாவது ஆச்சாரம்னா என்னன்னு கத்துக்கட்டும், காபி கூட ஓகே, தூத்தத்த கூட தூக்கி குடிக்க மாட்டேங்குறான், சப்பி தான் குடிக்கிறான், அப்பப்பா பார்க்கவே கஷ்டமா இருக்குமெனக்கு” விக்னேஷ், இதை சாரதா சொல்லும் போது அவளை வெறித்து பார்த்து, “ஆ”வென்று வாயை பிளந்துவிட்டான், “நம்ப அம்மாவா இது, என்ன நடிப்பு…..கமல்ஹாசன் லாம் தோத்தான்”…. என்று மனதிற்குள் முணுமுணுத்தான். அவன் அதன் பிறகு ஏதும் பேசவில்லை, சாரதா சாயுங்காலம் ஊருக்கு கிளம்பும் வரை. பாட்டி முன்பு போல் இல்லை, ஆச்சாரம் பார்ப்பதெல்லாம் குறைந்திருந்தது, ஏதேதோ தத்துவங்கள் சொல்வது, காலையில் பாத்திரங்கள் தேய்க்க வரும் வேலைக்காரியை முன்புபோல் பின்வழியாக வரவழைக்காமல், வீட்டினுள்ளே அனுமதிப்பது, அவளுக்கு காபி போட்டு தருவது என்று நிறையவே மாறியிருந்தாள். முதல் இரண்டு நாட்களுக்கு விக்னேஷுக்கு, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், சோகங்கள், தாத்தாவின் மரணம் என அனைத்தையும் புலம்பித்தீர்த்தாள். அவளுக்கு பேச ஆள் கிடைத்து விட்டது போல் இருந்தது. மூன்றாம் நாள் காலை, பாட்டி பத்து தேய்த்து கொண்டிருந்த செல்வியிடம்,”உம் பையன் எத்தனாவது படிக்கிறான்?” “9ஆவது மா” அவள், “அப்படியா….. சரி சரி….” இது பாட்டி. விக்னேஷ் இந்த வயதிலேயே தனிமையை உணர்வது போல் பாட்டிக்கு பட்டது.

பாட்டி திடீரென்று,”உம் பையன் எங்கயாவது விளையாட போவானா? அப்படி போனா இவனையும் சித்த அழைச்சுண்டு போக சொல்லேன்….. இவன் இங்க போரடிச்சிண்டு உட்கார்ந்திட்டு இருக்கான்…. இவன் அம்மாக்காரி பாட்டு இங்க விட்டுட்டு போய்ட்டா…” உம்மனா மூஞ்சியாக இருந்த விக்னேஷ் பளிச்சென்று 100 வாட்ஸ் பல்பு போன்று பிரகாசித்தான். அதை பார்த்த பாட்டிக்கும் சந்தோஷம். செல்வி,”சரிம்மா…. அதுக்கென்ன இப்பவே என் கூட வரட்டும்… அங்க தெருவுல 24 மணி நேரமும் பேட்டும் கையுமாகத்தான் சுத்தும் எல்லா வாலுங்களும்… சாயந்தரம் நானே கொண்டு விட்டுட்ரேன்….” இது அவனை மேலும் உற்சாகபடுத்தியது.. செல்வியை பார்த்துவிட்டு மறுபடியும் பாட்டியை பார்த்தான். பாட்டி,”ச……ப்…..பா….. இப்ப தான் குழந்த முகத்துல சிரிப்பே வர்றது”.

“டேய்…. கேண பு**……. என்னடா “பால்”அ கப்பையில வுட்டுட்டு நிக்கிற….” “அடிங்க…… வீட்டுக்கு வா சூடு வைக்கிறேன் நாயே….” மைதானத்திற்கு செல்வியின் வருகையை எதிர்பார்க்காத அவள் மகன் மாரி, அந்த கொச்சை சொல்லை அம்மா முன்பு அப்படி பயன்படுத்தி விட்டோமே என்ற துளி வருத்தம் கூட இல்லாமல், “நீ எதுக்கு இங்க வந்த?..” என்றான் கடுப்புடன். “இந்தா இந்த பையனையும் சேத்துக்கிட்டு விளையாடு” என்று விக்னேஷை அறிமுகம் செய்தாள். விக்னேஷுக்கோ பயம். தான் இதுவரை பெரிய மைதானத்தில் நீளமான மட்டையை வைத்து விளையாண்டதே இல்லை. முன்பொருமுறை, பள்ளியில் விளையாண்டது, அவ்வளவுதான். அதன்பின் இப்போது தான் பெரிய மட்டை மற்றும் பெரிய மைதானத்தின் விஜயம்.

மைதானத்திலுள்ள அனைவரும் விக்னேஷை ஒருமுறை ஏலியனை பார்ப்பது போல் பார்த்தார்கள்.அங்கிருந்த அனைவருக்கும் “மெலேனின் பிக்மென்ட்” ஜாஸ்தி. அவர்களை தொட்டு மையிட்டு கொள்ளலாம். இவனோ பால் நிறத்திற்கு சற்று கம்மி. சிறிது நேரம் மௌனம் நிலவியது,கலைக்கப்பட்டது செல்வியால்,”என்னடா பூதத்த பாக்குற மாதிரி பாக்குறீங்க எல்லாரும்.. டேய் மாரி ஒழுங்கா இவனையும் சேத்துக்கிட்டு விளையாடு” என்று அவள் புறப்படலானாள்.

மாரி விக்னேஷை,”வாங்க….. நீங்க இப்ப பேட்டிங் டீம்” என்றான் மரியாதையுடன். செல்வி ஒரு புள்ளியாகி போய் கொண்டிருப்பதை பார்த்தான் விக்னேஷ். மாரி,”நீங்க ரைட் ஹாண்டரா? லெஃப்ட் ஹாண்டெரா?…” விக்னேஷ் “ரைட்டு, அண்ணா…” இந்த அண்ணா என்ற சொல்லை கேட்டவுடன், சுற்றியிருந்த கூட்டம் சிரித்துவிட்டது. அதில் ஒருவன்,”உன்னையும் அண்ணன்னு சொல்ல ஒருத்தன் சிக்கிட்டாண்டோய்…” என்றான். மாரி கோபத்துடன்,”சும்மா இருடா”, “அண்ணன்லாம் கூப்புடாதீங்க, மாரின்னே கூப்பிடுங்க” என்று விக்னேஷிடம் கூறினான்.

விக்னேஷுக்கு பேட்டிங் வாய்ப்பு வந்தது. மாரி,”நல்லா அடிங்க…” என்றான். வலதுகை ஆட்டக்காரர்கள் போல் நின்று, இடது கையை முன்னேயும், வலது கையை பின்னேயும் வைத்திருந்தான். பௌலிங்க் போடும் சிறுவன் இதை பார்த்து சிரித்து விட்டான். மாரி, அருகில் வந்து, ஒரு ஆசிரியர் ஒரு குழந்தையை கை பிடித்து ஸ்லேட்டில் எழுதவைப்பது போல, விக்னேஷின் கையை இடம் மாற்றிவைத்தான். இது போன்ற சொல்லி கொடுக்கும் விஷயங்கள் மாரிக்கு புதிதாக இருந்தது. முதல் பந்தினை மட்டையால் அடித்தவுடன், விக்னேஷும், மாரியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். காரணமே இல்லாமல் அவர்களுள் கண்ணுக்கு தெரியாத நட்பு கிளர்ந்தது. இது போன்ற தருணங்கள் சில நேரங்களில் தான் சிலருக்கு அமையும். அந்த சிலரில் இப்போது விக்னேஷும், மாரியும். நான்காவது பந்திலே விக்னேஷ் போல்டு.

ஃபீல்டிங் முடிந்ததும், மாரி விக்னேஷை வீட்டுக்கு அழைத்து சென்றான். வீட்டிற்கும் மைதானத்திற்கும் நடந்தால் ஐந்தே நிமிடங்கள் தான். அப்பா வீட்டில் இருந்தார். மாரியின் அப்பா எலெக்ட்ரிக் கம்பத்தின் மேல் ஏறி வேலை பார்க்கும் சாதாரண ஊழியர். இவரின் வருமானம் போதுமானதாக இருந்தாலும், மாரியின் ஆங்கில வழி படிப்பு செலவுக்கு செல்வி ஒன்றிரண்டு வீடுகளில் பத்து பாத்திரம் கழுவ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மாரியின் அப்பா தமிழ் மீதும், இலக்கியம் மீதும் கொஞ்சம் பற்று உள்ளவர். வீட்டில் இலக்கியம், வரலாற்று புத்தகங்கள் என அடுக்கி வைத்திருப்பார். சின்ன வயதில் நன்றாக படித்து கொண்டிருந்த அவரை இந்த வேலைக்கு தள்ளியது ஏழ்மை. வாசிப்பு அவர் அப்பாவிடமிருந்து அவருக்கு தொற்றி கொண்டது. ஏழ்மையும். விக்னேஷை பார்த்த உடன், அவனை பற்றி விசாரித்து மடியில் தூக்கி வைத்து கொண்டார்,”ய….ப்…..பா…. பையன் என்னமா கொலுக்கு மொலுக்குனு இருக்கான்” என்றார். “கண்ணு வைக்காதீங்க” என்று செல்வி வேலையில் இருந்த வாறே சொன்னாள். மாரி குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான். இருவரும் அந்த வீட்டில் இருந்த ஒற்றை டேபிள் ஃபேனை பங்கு போட்டனர். விக்னேஷ் தன் பாட்டி வீட்டிற்கு தயாரானான். விக்னேஷ் செல்வியுடன் புறப்படும் வேளையில், மாரி “கவலப்படாதீங்க, நாளைக்கு ரன் அடிச்சுடலாம்” என்றான் புன்னகைத்தபடி. பதிலுக்கு விக்னேஷிடமிருந்து, புன்னகையுடன் சேர்ந்து “போயிட்டு வரேன்” என்ற கையாட்டலும்.

வீட்டை வந்து சேர்ந்தவுடன், பாட்டியின் உத்தரவின் படி கைகால் அலம்பிக்கொண்ட விக்னேஷ், தெருவிற்கு வந்து நிற்கலானான். வாழ் நாளில் அப்படி ஓர் புத்துணர்ச்சியை அவன் உணர்ந்ததில்லை. வேர்த்து கொட்டும் அளவுக்கு விளையாடிவிட்டு வந்து உட்காரும் சுகம், அவன் இதுவரை அனுபவித்திராதது. ஏனோ பாட்டிக்கு “தாங்க்ஸ்” சொல்ல தோன்றிற்று அவனுக்கு. சந்தோஷத்தில் இருக்கும் போது நன்றி சொல்ல கசக்குமா என்ன?.. அன்று முழுக்க உற்சாகமாக காணப்பட்டான். சிறுவர்களுக்கே உள்ள அந்த விறுவிறுப்பு இப்போது தான் அவன் உடம்பில்குடியேறி இருப்பதாக கண்டாள் பாட்டி. காற்றிலேயே கையை ஓங்கி ஓங்கி மட்டையால் பந்துகளை அடிப்பதுபோல் வீசிக்கொண்டிருந்தான். இரவு நல்ல உறக்கம் கண்டது அவனுக்கு. எப்போதும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் ஆகும் அவன் தூங்குவதற்கு. இன்று படுத்த இரண்டாவது நிமிடம் கண்கள் சொக்கின.

மறு நாள் பல் தேய்த்து, காபி குடித்து செல்வியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தான். செல்வி வந்தாள். மைதானத்தை அடைந்தான். இன்றும் மாரி டீமில் அவனுக்கு சீட் ரிசர்வ்டு. பேட்டிங்கும் வந்தது. உறுதியாக பிடித்தான். பந்தை கண்ணை மூடிக்கொண்டு நேற்று கையை வீசியது போல் மட்டையை வீசியதில், தெரியாமல் பந்து பட்டு விட்டது. நேற்று கப்பையை விட்ட சிறுவன் அதே கடமையை இன்றும் செய்தான். பந்து “ஃபோர்” என்று வைக்க பட்டிருந்த ஒரு கல்லை தாண்டியது. அவ்வளவு தான். விக்னேஷுக்கு உடம்பெங்கும் பூரிப்பு. மயிர்கால்கள் சில்லிட்டு எழுந்து நின்றது.,”வெயிட்டு டா, வெயிட்டு டா…” சுற்றியிருந்த அவன் அணியினர். மாரியை பார்த்தான் அவன். மாரி,”சமையா விளையாண்டீங்க”. வழக்கம் போல் திரும்பவும் அவுட் ஆகி மாலை வரை பொழுது விளையாட்டில் கழிந்தது. வீடு திரும்புகையில், விக்னேஷ் மாரியிடம்,”மாரி ப்லீஸ் இனிமே “….ங்க” சொல்லி கூப்புடாத, சாதரனமா கூப்புடு..” என்றான். மாரி, ஐயர் பாட்டி வீட்டு பேரன் ஆயிற்றே என்று தான் அப்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.. விக்னேஷ் இப்படி சொன்னது அவர்களிருவருக்கிடயே நட்பை அதிகரித்தது..

வீடு திரும்புவதற்கு தாமதமானது. செல்வி வசவு சொற்களால் பூசை செய்து கொண்டே மாரியை வரவேற்றாள்,”எரும மாடு, எத்தன மணிக்கு வர்றது, புள்ளைய கொண்டு விட வேண்டாம்…” மாரி முறைப்போடு,”வெளிய விளையாட போறவங்களுக்கு ஆயிரெத்தெட்டு வேல இருக்கும்… சும்மா கத்தாத…” என்று அலுத்துக்கொண்டான். மாரியின் அப்பா வீட்டில் இருந்தார். அவர்,”சரி, சரி… விடு.. ஓய்…விக்னேஷ்… எப்டிடா இருக்க?” என்று செல்லமாக கொஞ்சி அங்கிருந்த செல்வியின் உஷ்ணத்தை தணித்தார். மாரி நக்கலாக,”நேத்து தான பாத்த…. அப்டியே தான் இருக்கான்…” விக்னேஷுக்கு மாரியின் அப்பா இதுபோல் கொஞ்சிக் கொண்டு தன் கன்னத்தை கிள்ளுவது சற்று வலித்தாலும், அவனுக்கு அது பிடித்திருந்தது. விக்னேஷ், கொஞ்சலுக்கு பதிலாக,”நல்லா இருக்கேன் அங்கிள், நீங்க இப்ப தான் வீட்டுக்கு வந்தீங்களா?” என்று மழலை ராகத்துடன் இழுத்தான்.”ஆமாண்டா செல்லம்” ராக இழுத்தலுக்கு இந்த கொஞ்சல் தான் பதில். செல்வி சமையற்கட்டில் இருந்தவாறே,”கண்ணு, கொஞ்ச நேரம் கண்ணு, 10 நிமிசம் இரு, வீட்டுக்கு போயிடலாம்… சாதம் வடிச்சிட்ருக்கேன், இறக்கி வெச்சிட்டு போயிரலாம்” விக்னேஷ் தலையாட்டினான். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொறு வாசனை இருக்கும். அந்த வீட்டின் வாசம் விக்னேஷை கவர்ந்தது. மாரி, விக்னேஷை அழைத்துக்கொண்டு வீட்டில் ஹால், கிச்சனை தவிர்த்து இருக்கும் ஒரே ஒரு அறைக்கு கூட்டி போனான். அறை நிறைய புத்தகங்கள். மாரி,”இது எங்க அப்பா வாங்குன புக்ஸ் எல்லாம். எனக்கும் வாங்கி கொடுப்பாரு, ராஜா கத, அது இதுனு நிறைய இருக்கு. நல்லா இருக்கும். இந்தா எடுத்துட்டு போ… படிச்சுட்டு தா. நீ இதெல்லாம் படிப்பியா?” என்று தன் கையில் உள்ள ஒரு கதை புத்தகத்தை நீட்டியவாறு வினவினான் மாரி. விக்னேஷ்,”மேத்ஸ்,ஃபிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி தவிற குமுதம், ஆனந்த விகடன் கூட படிக்க விட மாட்டாங்க” என்றான். மாரி சிரித்து விட்டு,”எங்கம்மாவும் இப்டி தான். ஸ்கூல் புக்ஸ் படிக்காம ஏண்டா கண்ட கதையெல்லாம் படிச்சு கெட்டு போறன்னு திட்டும், எங்கப்பா தான், கதையெல்லாம் படிச்சா ஒண்ணும் தப்பில்லனு படிக்க வைப்பாரு. எனக்கும் கதை படிக்கறது ரொம்ப பிடிக்கும். இது பத்தாதுனு எங்கப்பா நிறைய கதை சொல்லுவாரு”.
….அவ்ளோ கதை படிச்சிருக்காரு…” விக்னேஷ் ஆர்வமாக “உங்கப்பா நைட்டு கதையெல்லாம் சொல்லுவாரா?” என்று வினவினான் ஆச்சர்யமாக. “ஆமா” என்றான் மாரி.

செல்வி சேலையை சரி செய்து கொண்டு, “விக்னேஷ்…. போலாமா?” என்றாள். விக்னேஷுக்கு ஏதோ ஓர் உந்து சக்தி முளைத்தது. அது உடம்பெங்கும் பரவி வாய்வழியாகவே வந்துவிட்டது,”ஆண்ட்டி, இன்னிக்கொரு நாள் நைட்டு நான் இங்க இருந்துட்டு போறேனே ப்லீஸ்” என்றான், புரியாதவாறு முழித்தனர் செல்வி, மாரியின் அப்பா மற்றும் மாரி. விக்னேஷ் தொடர்ந்தான்,”நான் பாட்டிக்கிட்ட சொல்லிக்கிறேன்… ஒண்ணும் சொல்ல மாட்டாங்க…” என்றான். செல்வி,எதுவும் யோசிக்காமல் உடனே,”சரி நீ இங்கயே இரு, நான் போய் பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று புறப்படலானால். வாசலுக்கு நுழைந்து செருப்பை அணிந்து கொள்ளும் போது, மாரியின் அப்பா, மிகவும் மெதுவாக, விக்னேஷின் காதிற்கு கேட்காதவாறு,”என்னடி இது?…. பாட்டி தப்பா நினைச்சுப்பாங்க, கொண்டு போய் விட்டுடு…” என்றார். செல்வி நிதானமாக,”பாவங்க புள்ள, நம்ம வீட்டுக்கு வந்தப்புறம் தான் சிரிச்சுக்கிட்டு இருக்குது… முதல் ரெண்டு நாள், செத்த மூஞ்சா கிடந்தது, ஆளுங்களே இல்லாம, ஒரு நாள் தானே, இருந்துட்டு போவட்டும்….” என்றாள். மாரியின் அப்பா,”சரி சரி…” என்று தரையை பார்த்தே சிரித்து கொண்டார்.செல்வி கிளம்பும் முன்,”இருக்குற சாப்பாடு பத்தாது, நான் சீக்கிரம் போய் பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வரேன். இல்லனா பாட்டி எதிர்பார்த்துட்டு உட்கார்ந்திருக்கும்..” என்றாள்.

இரவு ஏழானது. விக்னேஷ், மாரி மற்றும் அவன் கூட்டாளிகளுடன், கல்லா மண்ணா விளையாடிக்கொண்டிருந்தான். விக்னேஷுக்கு “கல்லா மண்ணா” என்ற வார்த்தையே புதிது. விளையாட்டை கற்றுக்கொண்டவுடன் மிகவும் ஆர்வமாக விளையாட்டில் மூழ்கினான். விக்னேஷ் அவன் ஃப்ளாட்ஸ் வாசலில், சில மீசை துளிர்விட்டு கொண்டிருக்கும் பெரிய பசங்க ஷட்டில் விளையாடுவதை பார்த்திருக்கிறான் அவ்ளவுதான். அங்கே பந்து பொறுக்கி போடும் வேலை தான் அவனுக்கு. தெருவில் இறங்கி முட்டிக்கு கீழ் மணல் அச்சுகள் பதியும் வரை விளையாடியது இன்று தான். கல்லா மண்ணாவிற்கு பிறகு, லாக் & கீ, நாடு பிரித்து, செவென் ஸ்டோன்ஸ் என விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்து சேர ஒன்பதரை ஆகியது. கைகால் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்கள். மாரியின் அப்பா தட்டில் சாதம் போட்டுக்கொண்டு, சாம்பார் ஊற்றிக்கொண்டு, மாரியையும், விக்னேஷையும் அவர்கள் தட்டுடன் வாசலுக்கு அழைத்து சென்று கட்டிலில் மூவரும் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினர். சனல்கயிற்று கட்டிலில் உட்கார்ந்தவுடன் ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது விக்னேஷுக்கு. உட்கார்ந்தவுடன் வித்தியாசமான சத்தம் ஒன்று சனல் கயிற்று கட்டிலில் உருவானது. செல்வி”உயிர வாங்காதீங்க… திடீர்னு வாசல்ல போய் உட்கார்ந்தா என்ன அர்த்தம்?.. வாங்க உள்ள வந்து உட்காருங்க” என்று கத்தினாள். மாரியின் ஆப்பா,”வெளியில வந்து பாரு…. நிலா வெளிச்சம்… எவ்ளோ அழகா இருக்கு!.. இத விட்டுபுட்டு, உள்ள உட்கார்ந்து என்னத்த சாப்டபோற, அதே நாலு செவுரு தான…” என்றார் நிலாவை பார்த்துகொண்டே. செல்வி இருமுறை சொல்லி பார்த்தாள். கடைசியில் எல்லாவற்றையும் எடுத்து வெளியே வந்து விட்டாள். நிலாச்சோறு முடிந்தவுடன் , வீட்டில் சென்று டி.வி போடபட்டது. மாரியின் அப்பா புஸ்தக அறைக்கு சென்று புத்தகத்தை புரட்டலானார். விக்னேஷ் அவர் அருகில் சென்று, அவர் வைத்திருந்த “உறுபசி” நாவலை பார்த்த படி கேட்டான்,”என்ன மாமா இது?” “இந்த புக்கெல்லாம் நீங்களும் படிக்கனும் ஆனா இப்போ இல்ல, கொஞ்ச நாள் போகட்டும்…” என்றார். “சரி, எப்ப கதை சொல்ல போறீங்க?” என்றதற்கு,”கொஞ்ச நேரம்…. ஒரு நாலு பக்கம் புரட்டிட்டு வரேன். நீ அது வரைக்கும் டி.வி பார்த்துட்டு இரு” என்றார். உள்ளே புதுமைபித்தன், ஜி.நாகராஜன், வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், ஜெயமோஹன், சுஜாதா, ஜெயகாந்தன்,…… போன்றோர் எழுதிய புத்தகங்கள் மற்றும் இரண்டாம் உலக போர், சே குவேரா, ஸ்டாலின், வந்தார்கள் வென்றார்கள்,……. போன்ற புத்தகங்களும் இருந்தன. அவை எல்லாவற்றையும் மேலோட்டமாக வாயை பிளந்தவாறு பார்த்து சென்றான் விக்னேஷ். சிறிது நேரம் கழித்து, தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் அவசியம் இருக்க வேண்டிய மின் வெட்டு நிகழ்ந்தது. அனைவரும் வாசலில் வந்து உட்கார்ந்தார்கள்.”கரெண்ட்டு போறது கூட சில நேரத்துல நல்லா இருக்கு. இல்லன்னா வெளிய வந்து இது மாதிரி காத்து வாங்க தோனுதா நமக்கு?” என்றார் மாரியின் அப்பா.

பின், கட்டிலுக்கு தாவி, கதை சொல்லும் அந்தஸ்த்தை அடைந்து, கதை சொல்ல ஆரம்பித்தார். ஏதோ ஓர் புத்த பிக்குவின் கதையில் தொடங்கி, உருக்கமான சில கதைகளையும் சொல்லத் தொடங்கினார். மாரி புத்த பிக்கு கதையின் நடுவிலேயே கொட்டாவி விட்டு, அந்த கதை முடிந்தவுடன் அப்பாவின் கால் மேல் தன் காலை போட்டு தூங்கினான். விக்னேஷ் அசரவில்லை. அப்புறம்….. அப்புறம்….. என்று கேட்டுக்கொண்டே இருந்தான். மாரியின் அப்பாவிற்கே கொட்டாவி வந்துவிட்டது. விக்னேஷ் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டே இருந்தான். கடைசியாக ஒரு ஜென் கதையோடு முடித்துக் கொண்டார். ஒன்பதாவது படிக்கும் மாரிக்கு இன்னும் அவர் அப்பா கதை கூறி கொண்டிருக்கிறார். நமக்கு சிறு வயதில் கூட யாரும் கதை சொல்ல வில்லையே என்ற ஏக்கம் விக்னேஷின் மனதில் உருவானது..

காலை விடிந்தது. மாரி தன் வலது காலையும், விக்னேஷ் தன் இடது காலையும், மாரியின் அப்பாவின் கால்கள் மீது போட்டு கொண்டு உறங்கிக் கொண்டிருப்பது செல்விக்கு பார்க்க அழகாக இருந்தது. இரண்டு நிமிடம் கண்ணிமைக்காமல் தன்னை மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். விக்னேஷ் முதல் முறை ப்ரஷ் இல்லாமல் பல் தேய்த்தான். காபி குடித்த பிறகு, பாட்டி வீட்டை சென்றடைந்தான் செல்வியோடு. கனவுலகத்திலிருந்து வந்தது போல் இருந்தது அவனுக்கு. பாட்டி,”எப்டிடா இருந்தது நேத்து” என்றாள். அவன் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளிவிட்டான். செல்விக்கு பெருமையாக இருந்தது. பாட்டிக்கு விக்னேஷின் சந்தோஷத்தை பார்த்து முகத்தில் சிரிப்புடன் ஓரங்களில் கண்ணீரும் கசிந்தது. ஆனால் அவள் அதை வெளி காட்டிகொள்ளவில்லை.

விக்னேஷ் மெதுவாக,”பாட்டி, காலையிலேர்ந்து மதியம் வரைக்கும் உங்க கூட இருக்கேன். மதியத்திலேர்ந்து காலை வரை செல்வி ஆண்ட்டி வீட்ல இருக்கேன் பாட்டி” என்று தயங்கினான். பாட்டியின் சிரிப்பு குறைந்தது. பாட்டி யோசிக்க தொடங்கினாள்.”ப்ளீஸ் பாட்டி” என்று கெஞ்சினான். செல்விக்கு இது எங்கு போய் முடியுமோ என்ற வீண் பயம் உண்டானது. பாட்டி,” சரி சரி நீ உள்ள போ அப்றம் பாக்கலாம்” என்றாள். உடனே செல்வியை அழைத்து,”செல்வி, உனக்கு சரின்னா, எனக்கு சரிம்மா…. உனக்கு தொந்தரவா இருந்தா விட்டுடுமா…. இன்னும் குறஞ்சது இருபது நாள் இருப்பான் இங்க” என்றாள். செல்வி,”அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா…. நல்ல புள்ள…. சமர்த்து குட்டி…. நான் பாத்துக்குறேன்” என்றாள்.

வேலையை முடித்து விக்னேஷையும் அழைத்து போகும் வேளையில், பாட்டி செல்வியை தனியாக அழைத்து,”எனக்கு தெரியும் உனக்கு சிரமமா தான் இருக்கும்னு… ஆனா பாரு, இவன் முகத்துல சிரிப்பே உங்க ஆத்துக்கு போனதுக்கப்புறம் தான் வர்றது… அங்க இவன் அம்மா இவன படுத்தி எடுத்துடுவா…. எனக்கு தெரியும்…. ஹும்….. புருஷங்காரனே அதனால தானே ஓடிப்போனான்” என்று சொல்லி நீண்ட மௌனத்திற்கு பிறகு செல்வியின் கையில் நான்கு நூறு ரூபாய் தாளை திணித்தாள். செல்வி,”எதுக்கும்மா?….” என்றாள் பதட்டத்துடன். பாட்டி,”பரவா இல்ல…. வெச்சுக்கோ” என்றாள்.

செல்வி தன் வீட்டில் உள்ள காலி அரிசி கேனையும், தீர்ந்து போன சர்க்கரை டப்பாவையும் நினைத்துக்கொண்டாள்…. வாங்குவது தப்பில்லை என்று தோன்றிற்று.

அடுத்த ஒரு மாதம் விக்னேஷுக்கு எப்படி சென்றதென்றே தெரியவில்லை. இருக்கும் அத்தனை தெரு விளையாட்டுக்களையும் கற்றாயிற்று. தினமும் ஏதோ தேவதை கதையையோ, நீதி கதையையோ படித்துக்கொண்டு, இரவில் நிலா வெளிச்சத்தில் உணவுண்டு, தூங்கும் பொழுது கதைகளை கேட்டுக்கொண்டு என அவனின் இந்த ஒரு மாத காலம், அவன் இனிமேல் தன் வாழ்க்கையில் பெறமுடியாத ஒரு பொக்கிஷம் போல் ஆனது. எதேச்சையாக அமைந்த இன்னொரு விஷயம், அவன் தங்கியிருந்த நாட்களில் செல்வியின் தெருவில் ஒரு ஓரமாக இருக்கும் சிறிய அம்மன் கோவிலில் ஏதோ விசேஷம் ஒன்று நடந்தது.. இரண்டு மூன்று நாட்கள் தெருவில் எப்போதும் மனித கூட்டங்கள் நிரம்பி வழிந்தன.. இரவு நேரங்களில் ஏதோ ஒரு அம்மன் பாட்டை போட்டு காது கிழியும் அளவுக்கு அலறவிட்டிருந்தார்கள்.. இரவில் இவர்களது விளையாட்டு நேரம் அதிகரித்தது.. விளையாட்டு நேரம் போக கோயிலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.. தெருவே கல்யாண வேலைபாடுகள் பார்க்கப்பட்டது போல் தோன்றியது.. கோயிலில் மாரியின் நண்பர்கள் அடித்த அரட்டைக்கு வெறும் பார்வையாளனாகவே இருந்தான் விக்னேஷ்.. ஆனாலும் எல்லாமும் தெரிந்த மாதிரி அவர்களுடன் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தான்.. திருவிழா முடிந்ததும் தெரு சற்று மந்தமாக காணப்பட்டாலும், விக்னேஷுக்கு உற்சாகமாகவே இருந்தது.. இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பாட்டி வீட்டில் இருக்கும் போது கூட, அவனுக்கு சதா மாரி வீட்டின் நினைவுகளே இருந்தது. இதில் பாட்டிக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது என்றாலும் அதை கோபமாகவும், எறிச்சலாகவும் மாற்றிக்கொள்ளாமல், வயோதிகத்துக்கு உடைய பக்குவத்துடன் செயல்பட்டாள்.. ஒரு மாத காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது போல் இருந்தது விக்னேஷுக்கு.. சந்தோஷமான தருணங்கள் மட்டும் ஏன் இப்படி வேகமாக ஓட வேண்டும்.. நோயில் அகபட்டவனின் இரவு போல இந்த அரிய தருணங்களும் நீண்டுக்கொண்டிருக்கக்கூடாதா..?

விக்னேஷ், மாரி மற்றும் அவனது அப்பா அம்மாவிடமிருந்தும், பாட்டியிடமிருந்தும் விடைபெற்றான்.. செல்வி, விக்னேஷ் இல்லாத தனது மாலை நேர வீட்டை ஒரு வெற்றிடமாக உணர்ந்தாள்.. ஏதோ ஒரு இருள், மௌனம் அவளை வெகுவாக தாக்கியது.. இந்த உணர்வு, மாரியின் அப்பாவிடமும் இருந்திருக்க வேண்டும்.. புத்தகத்தை புரட்டும் போது நடு நடுவே சிந்தனையில் மூழ்கினார். மாரி ஒருவன் தான், “ச்ச… விக்னேஷ் போனதுலேர்ந்து, ஒரு மாதிரியா இருக்கும்மா…” என்று வாய் திறந்து சொல்லி விட்டான்.. அது போன்று வெளிப்படையாக செல்வியாலும் சரி, மாரியின் அப்பாவினாலும் சரி சொல்ல முடியவில்லை..

விக்னேஷுக்கு அங்கு இரு மடங்காக சோகம் கவ்விக்கொண்டிருந்தது.. பாடத்தில் சுத்தமாக கவனம் செலுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.. எந்நேரமும், அங்கிருந்த நினைவுகள் இவனை தாக்கின.. கிடுகிடுவென்று காலம் நகர்ந்தது.. அரையாண்டு பரிட்சை விடுமுறையை பாட்டி வீட்டில் கழிக்க வேண்டுமென சாரதாவிடம் கெஞ்சிக் கூத்தாடிவிட்டான்.. சாரதா மறுப்பது போல் முதலில் மறுத்து, சற்று முரண்டு பிடிப்பது போல் பிடித்து பிறகு ஒத்துக்கொண்டாள்.. கம்பெனியில் இருக்கும் வேலை பளு காரணமாகவும், பாலாஜியுடன் அதிக நேரம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலாலும், அவளுக்கு விக்னேஷை ஒதுக்கும் மனப்பாங்கு உருவாகிவிட்டது..

விக்னேஷ் பாட்டி வீட்டுக்கு பயணமானான்.. பயணத்தின் போது, இரண்டு வார விடுமுறை நாட்களை எப்படியெல்லாம் மாரி வீட்டில் கழிக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தான்.. பாட்டி வீட்டுக்கு சென்றடைந்து, மறு நாள் காலை எப்போது வரும் என்றும், செல்வி எப்போது வருவாள் என்றும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தான்.. அப்போது தான் பாட்டி அவனிடம் அந்த கொடூரத்தை கூறினாள்.. மூன்று மாதத்திற்கு முன்பு மாரியின் அப்பா ஏதோ ஒரு மின்சார விபத்தினால் இறந்து விட்டதாகவும், செல்வியும் மாரியும் வேறு வழியின்றி பிழைப்புக்கு வழியில்லாமல், செல்வியின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாகவும் சொன்னாள்.. விக்னேஷ் அது வரை அவன் வாழ் நாளில் அடைந்திராத ஒரு மிகப்பெறும் மனத்துயரை அடைந்தான்.. மனதின் இருதய துடிப்பு கேட்டது.. பாட்டி சொன்ன அனைத்தையும் கற்பனை செய்ய முயற்சித்தான்.. அவன் முகமே மாறிப்போயிருந்தது.. சுற்றியிருக்கும் எந்த விஷயமும் அவனுக்கு புலப்படவில்லை.. முகம் சுருங்கிவிட்டது.. அவன் ப்ரக்ஞைக்கு வருவதற்கு சற்று நேரம் எடுத்தது.. உள்ளிருந்து ஒரு விம்மல்.. செல்வி, போன முறை அவன் விடைபெறும் போது ஒரு முத்தம் கொடுத்தாள்.. அதை நினைத்தான், அவ்வளவு தான், பொங்கிக் கொண்டு வழிந்தது அழுகை.. அவனால் அடக்கவே முடியவில்லை.. பாட்டி மிகவும் சிரமபட்டு சமாதானம் செய்தால்.. தனிமையாக, மௌனம் சூழ்ந்திருக்க அவன் அதே சிந்தனையில் மூழ்கினான்.. அவன் வாழ் நாளின் முதல் நீங்கமுடியாத துயரம் இது.. அவன் கண்ட கனவுகள் எல்லாம் காகிதம் போல் கிழிக்கப்பட்டது..

மாலை, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த அவனுக்கு செல்வியின் வீட்டை பார்க்க வேண்டும் போல் இருந்தது.. புறப்பட்டான்.. வீடு பூட்டியிருந்தது.. அதை பார்த்தபடியே கொஞ்ச நேரம் நின்றுக்கொண்டிருந்தான்.. சற்று அருகில் சென்று பார்வையிட்டான்.. வாசலில் யாரும் தீண்ட விரும்பாத மாரியின் அப்பாவின் புஸ்தகங்களெல்லாம் சிதறி கிடந்தன.. பல புத்தகங்கள் கிழிந்த நிலையில் இருந்தன.. பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எடைக்கு போட்டிருக்க கூடும்.. கிழிந்த நிலையிலிருந்த இரு புத்தகங்களை எடுத்துக் கொண்டான்.. மறு நாள் காலையில், துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு, பாட்டியிடம்,”பாட்டி நான் போகனும் ஊருக்கு, நீ என்ன பஸ் ஸ்டேண்டு வரையும் வந்து என்ன ஏத்தி விடுறியா?” என்று முதல் முறை ஒரு பெரிய மனுஷத்தனம் தன்னிடம் வந்ததாக எண்ணிக் கேட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *