சின்னாத்தா காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 4,214 
 

ஒரு ஊர்ல புருசி பொண்டாட்டி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு பொம்பளப்பிள்ள பெறந்திச்சு. பெறக்கவும், அவங்கம்மா செத்துப் போனா. சாகவும், அப்ப, எளய குடியா கெட்டிக்கிட்டா. எளய குடியா ரொம்பக் கொடுமக்காரியா இருந்தா. அவளுக்கும் ஒரு பொம்பளப் பிள்ள.

ரெண்டு பிள்ளைகளும் சிறுசு – பெருசுமா வளர்ராங்க. கொஞ்சம் பெரியபிள்ளைகளா ஆகவும், இவ மகள, பள்ளிக் கொடம் போகச் சொல்லிட்டா. இந்தப் பிள்ளயப் போயி சாணி பெறக்கிட்டு வாண்டு, கூடயக் குடுத்துப் போகச் சொல்லிட்டா. மூணு நேரமும் கஞ்சி ஊத்துறதில்ல. ஒரு நேரமட்டும் கஞ்சி ஊத்துவா. பாவம்!! கஞ்சியுமில்லாம – தண்ணியுமில்லாம சாணி பெறக்கிப் போட்டுக்கிட்டு இருக்கா.

எருப் பெறக்கப் போகயில, கஞ்சி இல்லாமப் போவா. இந்தப் பிள்ள போகயில, அவங்கம்மாளப் பெதச்ச எடத்ல போயி, கொஞ்ச நேரம் ஒக்காந்திட்டு போகுமாம். அப்படி ஒக்காரயில.

அவங்கம்மா, மகளே! இப்டி கஞ்சில்லாம கெடக்க வேணாம். எங்குழி மேட்டுல தண்ணிக்கா – வெள்ளரிக்கா காச்சுக் கெடக்கு. நிய்யி, சாணி பெறக்கிட்டு வந்து, இந்தக் காயுகளத் திண்டுட்டு, வீட்டுக்குப் போண்டு சொல்றா. சொல்லவும், வெளியெல்லாஞ் சாணி பெறக்கிட்டு, அவங்கம்மா குழி மேட்டுல வந்து காயுகளப் பெறக்கித் திண்டு, பசியாறிட்டு தெளிச்சியா வீட்டுக்கு வாரா.

வரவும், கஞ்சியில்லாமப் போனாளே, இப்டி தெளிச்சியா வாராளேண்டு நெனச்சு, அடுத்த நா, தன் மகளயுங் கூடப் போகச் சொல்றா.

சொல்லவும், சரிண்டு, இந்தப் பிள்ளயுங் கூடப் போறா. ரெண்டு பேரும் சாணி பெறக்கிட்டு, குழி மேட்டுல வந்து, காயுகளப் புடிங்கித் திண்டுட்டு வந்தாங்க.

வந்து, அம்மா! அம்மா! அவங்கம்மாளப் பெதச்ச குழி மேட்ல காயுகளாக் காச்சுக் கெடக்கு. அதப்புடிங்கித் திண்டுட்டு வாராண்டு, சொல்லிட்டா. சொல்லவும், அந்தக் காயுக ஓயுர வரைக்கும் நிய்யுங் கூடப் போண்டு சொல்றா.

போயி, வந்துக்கிட்டிருக்கயில, குழிமேட்ல காச்சிருந்த காயுக ஓஞ்சு போச்சு. ஒஞ்சு போகவும், வந்து, ஒஞ்சு போச்சும்மாண்டு சொல்லிட்டா. அப்ப, இவளப் பள்ளிக்கொடம் போகச் சொல்லிட்டு, அவளச் சாணி பெறக்கப் போகச் சொல்றா.

இந்தப் பிள்ள, கஞ்சியுமில்லாம – தண்ணியுமில்லாம சாணி பெறக்கப் போனா. போகயில, அவங்கம்மா கூப்ட்டு, மகளே! நிய்யிபோற வழியில், காராம்பசுவு ஈண்டு, பாலா ஒரஞ்சு கெடக்கு, அதப் பெறக்கி திண்டுட்டு, சாணி பெறக்கிட்டு வாண்டு சொல்றா.

அப்டித்தான் போகயில. காராம்பசுவு ஈண்டு, பாலாச் சிந்திக் கெடக்கு. பால அள்ளித் திண்டுட்டு, சாணி பெறக்கி, கூடயில வச்சுச் செமந்துகிட்டுத் தெளிச்சியா வாரா

வரவும், அடுத்த நாளக்கி, அவ பின்னாலயே போயி, பால அள்ளித் திண்டுட்டு, சாணி பெறக்கப் போகவும், இவ போயி அந்தக் காராம்பசுவ வெட்டிப் போட்டுட்டு வந்திட்டா.

இப்டி இருக்யில், ஒருநா, வீணாராச், சாக்ல பணத்தச் செமந்துகிட்டு பொண்ணு குடுங்கண்டு கேட்டுக்கிட்டு, வீதி வழியா வாராரு. பாத்தவங்க சாமி, நீங்க அரமணக்ககாரு. நாங்க எப்டி ஒங்களுக்குப் பொண்ணு தரதுண்டு சொல்லிட்டாங்க.

அப்ப, இவ அந்தப் பக்கம் வந்தவ சாமி, எங்க வீட்ல பொண்ணு இருக்குண்டு கூட்டிட்டுப் போயி, பணத்த வாங்கி வச்சுக்கிட்டு, இந்தப் பிள்ளய, வீணா ராசாவுக்குக் கட்டிக் குடுத்திட்டா.

கல்யாணம் முடிச்சுக் குடுக்கவும், ராசா பின்னால, அவங்க ஊரு அரமணக்கிப் போயிட்டா. இவங்க போன பெறகு, ஏழெட்டு மாசங் கழிச்சு, சின்னாத்தாகாரி போறா. போனாளே! எப்டி? இருக்காளோண்டு பாக்கப் போறா. போயிப் பாக்கயில, நல்லா வசதியா அரமணயில இருக்கா. இதப் பாத்ததும், இவளுக்கு வகுறு எரியுது. இவ இருக்க, இந்த எடதல மகளக் கொண்டாந்து வைக்கணும்ண்டு நெனச்சு, வீணா ராசாகிட்ட, எம் பிள்ள, வகுறு வாயுமா இருக்கா, பேரு காலத்துக்கு எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறோம்ண்டு சொல்றா.

சொல்லவும், வேணாங்கத்த, இங்க என்னா கொறச்சண்டு ராசா சொல்றாரு. கெடுதலக்காரி, இல்லங்க. மொதப்பிள்ள எங்க வீட்லதான் பெறக்கணும்ண்டு சொல்றா. சொல்லவும் -, சரி! பின்ன – கூட்டிட்டுப் போங்கண்டு சொல்லிட்டாரு.

இவளுக்கு போக மனசில்ல, மனசில்லாம, மாவு இடிச்சு, ரெண்டு வேரு கையயும்மாவுல வச்சு, ரெண்டு கையயும் சரியா மதுல்ல வச்சாங்க. ரெண்டு கையும் சரியா, சோடியா இருக்கு, அப்ப ராசா, கையில் இருந்த கணயாழியக் கழத்தி, இத எங்கயாச்சும் வச்சிட்டுப் போண்டு சொன்னாரு.

சொல்லவும், கணயாழிய வாங்கி, ஒரு தூணுக்கிட்ட நிண்டு, “நா ஒருவனுக்கு முந்திவிரிச்ச உத்தமியா இருந்தா, இந்தத் தூணு வெலகி இந்த மோதிரத்த வாங்கிக்கிணும்ண்டு” சொன்னா.

சொல்லவும்; தூணு வெலகி எடங் குடுத்திச்ச. எடங் குடுக்கவும், உள்ள வச்சா, வைக்கவும், தூணு வந்து பொருந்திக்கிருச்சு.

வச்சிட்டு, மனசில்லாமப் போறா. வீட்டுக்குப் போகயில, சின்னாத்தாகாரி; இவள, எப்டிண்டாலும் சாக வச்சிட்டு, மகள வாழ வைக்கணும்ண்டு நெனச்சுக்கிட்டுப் போறா. வீட்ல போயி, இவ கூடத் தண்ணியெடுக்க, மகளப் போகச் சொல்றா.

மககிட்ட, மகளே! இவ போட்ருக்ற நகைகள நிய்யி வாங்கிப் போட்டுக்கிட்டு, கெங்கையில் உத்துப் பாரு! பாத்து, நல்லா இருக்காண்டு கேளு. அவகெங்கைய உத்துப் பாப்பா, அப்ப-கெங்கைக்குள்ள தள்ளி விட்டுருண்டு சொல்லிவிடுறா.

சரிண்ட்டுப் போறா, போகயில, யக்கா, ஒனக்கு இந்த நகநட்டுக நல்லா இருக்கு. எனக்குப் போட்டு பாப்போம்ண்டு கேக்குறா. சரி தங்கச்சிண்டு, பரமாத்தமா, கழத்திக் குடுத்திட்டா. குடுக்கவும், போட்டுக்கிட்டு கெணத்துக்குள்ள பாத்தா. பாக்கயில நல்லா இருந்திச்சு. நல்லா இருக்காண்டு அக்காகிட்டச் கேட்டா. கேக்கவும், இவ உத்துப் பாத்தா. பாக்கவும், கெணத்துக்குள்ள புடிச்சு தள்ளி விட்டுட்டா. தள்ளி விட்டுட்டு, நகநட்டுகள போட்டுக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா. கெங்கைக்குள்ள போனவள, ஒரு நாகேந்திர ஏந்திக்கிருச்சு. ஏந்தி, கெணத்துக்குள்ளயே வளக்குது.

இங்க, இவ மகள மொட்டையடிச்சு, சிக்கு விழுந்தவ மாதிரி வச்சிருக்கா. ராசா வந்தா, பிள்ள செத்துப் போச்ச, சீக்காயிப் போச்சு. இப்பத்தர், நல்லா இருக்காண்டு சொல்லலாம்ண்டு வச்சிருக்கா. இருக்கயில, வீணாதிராசா, பொண்டாட்டியப் பாக்கலாம்ண்ட்டு வாராரு. வீட்டுக்கு வரவும், பேருகாலமாக மாட்டாம பிள்ள செத்துப் போச்ச. இவளுஞ் சாகக் கெடந்து, இப்பத்தா எப்டியோ பொளச்சிருக்கா. நாலஞ்சு நா கழிச்சுக் கூட்டிட்டுப் போங்கண்டு சொல்றா.

வியா சொல்லவும், இவனுக்கு சந்தேகம் வந்திருச்சு. பொண்டாட்டி என்னா ஆனாண்டு பாக்கணும்ண்ட்டு தேடிப் போனர். தேடிப் போகயில், ஒரு வளவிச் செட்டியாரு, அலஞ்சு திரிஞ்சு வளவி வித்திட்டு, ஒரு புங்க மரத்தடில ஒக்காந்திருக்காரு. இந்த ராசாவும், அந்தப் புங்க மரத்தடிக்குப் போறாரு. போயி, வளைவிச்செட்டியாரக் கேட்டாத் தெரியும்ண்டு, ஐயா! வளவிச் செட்டியாரே! இந்த மாதிரி, எம் பொண்டாட்டியக் காணம் எங்குட்டாச்சும், சேதி தெரியுமாண்டு கேக்குறாரு. யாரு? இந்த ராசா கேக்குறாரு.

கேக்கவும், அடேயப்பா! கெங்கைக்குள்ள ஒரு பொண்ணு இருந்திச்சு. அந்த வழியா, வளவி! வளவிண்டு வித்துக்கிட்டுப் போனே. போகயில, வளவிச் செட்டியாரேண்டு கூப்டுச்சு போனே, போகவும்,

வீண மகராச பெத்த மக

வீதியழகு பாண்டி ராசனுக்கு

அங்க வாருங்கய்யா வளையல் செட்டி

வந்திரங்கு வாசல்ல – ண்டு

சொல்லிக் கூப்டுச்சு. நூலேணி வழியா எரங்கிப் போயி, வளவி போட்டே, போடவும், பணங் குடுத்திச்சு வாங்கிட்டு வந்து, இங்கன ஒக்காந்திருக்கேண்டு வளவிச் செட்டியாரு சொன்னாரு.

சொல்லவும், அந்த வளவிக்குப் பணங் காசுகளக் குடுத்திட்டு, அத வாங்கித் தோள்ல போட்டுக்கிட்டு அலஞ்சு திரியுறாரு. திரியயில், ஒரு மாசம் ஆச்சு, அந்த கெங்கை வழியா வளவி! வளவிண்டு சொல்லிக்கிட்டுப் போனாரு.

போகயில், வளவி போடணும்ண்டு கெங்கைக்குள்ள இருந்து கூப்ட்டா . கூப்டவும் போனாரு. போனவரு வழி தெரியாம கெணத்தக் கெணத்தச் சுத்றாரு. சுத்தவும் நூலேணி வழியா எரங்கி வாங்கண்டு சொன்னா. எரங்கிப் போகயில,

அவ, ஆம்பளப்பிள்ள பெத்து, தங்கத் தொட்டில் போட்டு ஆட்டிக்கிட்டிருக்கா. போனதும் அடயாளம் கண்டுகிட்டாரு. பொண்டாட்டி அடயாளம் தெரியாமப் போயிருமா. தெரியவும் ரெண்டுவேரும் கெட்டுச் சேந்து புடிச்சு அழுகுறாங்க.

அளுகவும், அளுகச் சத்தங் கேட்டு, நாகேந்திர வந்தாரு. என்னாண்டு கேட்டாரு. இவருதா, எம் புருசண்டு சொன்னா. சொல்லவும், ஏராளமாச் சீர்களக் குடுத்து, கூட்டிப் போண்டு சொன்னாரு.

சொல்லவும், இப்ப இங்க இருக்கட்டும். நா வீட்டுக்குப் போயிட்டு வந்து, கூட்டிட்டுப் போறேண்டு சொல்லிட்டு போறா. போயி, இவளோட தங்கச்சியக் கூட்டிட்டுப் போயி, ஊருக்கு மேற்க கழுத்தளவு குழி தோண்டி, அந்தக் குழிக்குள்ள எரக்கி, மண்டய மட்டும் வெளிய தெரிய விட்டு பெதச்சிட்டாரு. பெதச்சிட்டு, அங்கிட்டு வெளிய போறவுங்க, வெளிய இருந்திட்டு, இவ தலயில வந்து நக்கிளிக்கச் சொல்லிட்டாரு. அதே மாதிரி போறவங்க, வாரவங்க அவ தலயில நக்களிச்சிட்டு போயிக்கிட்டிருக்காங்க.

இப்டி இருக்கயில, இவளப் பெத்த அம்மா வந்து வெளிய இருந்திட்டு, மக தலயில வந்து தொடைக்க வாரா. வர்ரபோது, இந்த ஊரு ஆளுக மாதிரி, நிய்யும் எம்மேல நக்கிளிக்க வரேயம்மாண்டு சொல்லிக்கிட்டு அளுகுறா.

அளுகவும், நிய்யா மகளேண்டு அழுது – பெறக்கி, தூக்கிக்கிட்டு ஊருக்கு வாரா. தலயில பிய்யி, காஞ்சு போயி, அடயாளம் தெரியாம இருக்கு.

இங்கிட்டு வரயில, ஒரு வண்ணர் தொவச்சிக்கிட்டிருந்தர். அவங்கிட்ட வந்து, இது போக என்னா செய்யணும்ண்டு கேட்டா. அவ துணி தொவக்கிற வேகத்ல, அந்தா தெரியுது பாரு, வழுக்கப்பாற, அந்த பாறயில போயி, காலப் புடிச்சுக்கிட்டு நாலடி அடி, போயிருமண்டு சொன்னர்.

சரிண்ட்டு, பாறைக்குப் போனா. போயி, மகளோட காலு ரெண்டயும் புடிச்சு, டம்மு – டம்முண்டு நாலடி அடிச்சா. அடிக்கவும் அவ செதறிப் போனா. பெறகு அளுதுகிட்டு வீட்டுக்கு வந்தாளாம். அவங்க, தொந்தரவு இல்லாம நல்லாப் பொளச்சாங்களாம். யாரு, ராசாவும் அவரு பொஞ்சாதியும்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *