“டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக் கலங்கறே? ஓ காட்!”
கவிதா மவுனமாக இருந்தாள். இந்தக் கோடை காலத்தில், “ஸôன்டியாகோ”விலிருந்து சென்னைக்கு வருவது அவருக்குப் பிடிக்காது. வெயில் சுட்டெரிக்கும். அவ்வப்போது லேசான தூறல் விழுந்து பூமி குளிர்ந்தால் கூட, கொசுக்கள் மொய்த்து படையெடுக்கும். உறவினர் வீட்டுக்குப் போவதென்றால் ஆட்டோவில் வீசுகிற அனலும் போக்குவரத்து நெரிசலும்…
இருந்தாலும் வேறு வழியில்லை. கணவருடைய அத்தை இறந்து விட்டாள், சின்ன வயசிலேயே அம்மாவை இழந்து சித்தியைப் பார்த்தவர். கொடுமைக்கார சித்தியில்லை என்றாலும் சிடு சிடு சித்தி. “”அந்தக் காலத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவள் அத்தைதான்”” என்று சொல்லிக் கொண்டிருப்பார். சொல்லப் போனால் சேகருடன் யு.எஸ். இரண்டாம் முறை போனபோது, அத்தையையும் அழைத்தான்.
“போடா! அங்கே எனக்கு பொழுதே போகாது” என்றாள் அவள். “நீதான் மார்கழி சீசனுக்கு இங்கே வருவாயே?”
“ஓ அதுவும் சரி” என்றான் ராமலிங்கம். அவன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வருவதுண்டுதான். கவிதாவும் கூட வருவாள். சேகரின் படிப்பு கெட்டுவிடக் கூடாதென்று, அங்கேயே விட்டு விட்டு வருவான். அவனைப் பற்றிய ஞாபகம் நெருடலாகத்தானிருக்கும். ஆனால் இங்கு வந்து, சொந்த பந்தங்களைப் பார்த்தவுடன் புரட்டிப் போட்டாற்போல் மாறுதல் நிகழ்ந்து விடும். உடலுக்கு இதமான குளிர்ச்சி… மனத்துக்கு அமைதி தரும் சூழல்… சந்திக்கிற உறவினர்கள்…
கவிதாவுக்கு சங்கீதத்தில் கணவன் மாதிரி அத்தனை ரசனை இல்லாவிட்டாலும் கூட, மணமான பின் அவனுடன் போய்ப் போய் கொஞ்சம் ஆர்வம் துளிர்க்க ஆரம்பித்தது. சில பாடகர்களின் கச்சேரிக்குப் போய்தான் ஆக வேண்டுமென்று ராமலிங்கம் பிடிவாதம் பிடிப்பான். கவிதாவுக்கோ வேறு ஒரு வழக்கம்!
உள்பாவாடை, ரவிக்கை தைப்பதற்கென்று குறிப்பிட்ட இடத்துக்குப் போவாள். இந்த முறையும் பிடிவாதம் பிடித்தாள்.
ராமலிங்கத்துக்கோ ஆச்சரியம். வழக்கமாக டிசம்பர் சீஸனென்றால் சரி இந்தக் குறுகிய காலக்கெடுவில் கூட, போக வேண்டுமென்றால்?
“அப்படி என்ன ஸ்பெஷல் அந்த டெய்லரிங்லே?” என்ற ஒரு கேள்வி கேட்டதுதான் தப்பாகப் போயிற்று.
அதற்குத்தான் கண்ணீர்.. கலங்கல்… வருத்தம்… வாட்டம்…
கவிதாவின் பார்வை விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் மீது பதிந்திருந்தது. “இன்னும் நாலைஞ்சு நாள் இருக்கிறதே, நீங்களும் கூட வாருங்கள்! அப்புறம்”
“அப்புறம்” என்று ஆவலாக வினவினான் ராமலிங்கம்.
அவள் வேகமாக பாய்ந்து சென்ற ஆட்டோவை நிறுத்தினாள், “எங்கே போகணும்? நேரே கே.கே.நகருக்குத் தானே? இல்லை அத்தை பெண் வீட்டுக்கா?”
“வேண்டாம் நீ ஏதோ சொல்ல ஆரம்பிச்சே?”
“மறந்தே போச்சு!” என்றாள் கவிதா வேண்டுமென்றே யோசித்துக் கொண்டிருந்தாள். கணவரை அந்த டெய்லரிங் கடைக்குக் கூட்டிக் கொண்டு போகலாமா?
ஆயிற்று. அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் நெருங்கியாகி விட்டது. கிட்டத்தட்ட இந்த ஆறேழு வருடத்தில் உறவினர்களிடம் எவ்விதம் பேசவேண்டும் யாரை நேரில் பார்க்க வேண்டும் யாரிடம் போனில் விசாரிக்க வேண்டும் போன்ற சமாச்சாரங்களெல்லாம் அத்துபடியாகி இருந்தன. எல்லாம் முடிந்தாகிவிட்டது.
வழக்கம்போல சில உணவு வகைகள்… சேகர் ஏதோ விளையாட்டுச் சாமான்களும் கிட்டாரும் வாங்கி வரச் சொல்லியிருந்தான். ராமலிங்கத்துக்குத் தான் அந்த நாளில் “மவுத்ஆர்கன்’ பிரியமாக வாங்கி வாசித்துப் பழகியது ஞாபகம் வந்தது. இப்போது சேகருக்கு கிட்டார்…
என்ன வாசிப்பான்? “”என்ன கவி வாங்க போலாமா? அந்த நஹற்ன்ழ்க்ஹஹ் சண்ஞ்ட்ற் ஊங்ஸ்ங்ழ் வாசிக்கச் சொல்லலாமா?”
திடீரென்று ஏதோ மின் அதிர்வு ஏற்பட்டாற் போல கவிதாவின் உடல் ஒரு குலுங்கு குலுங்கியது. ராமலிங்கம் பதறிப் போய், “”என்ன? என்ன ஆச்சு கவி?”
சில நிமிடங்களில் அவள் சுதாரித்துக் கொண்டாள் “ஒன்றுமில்லை. ஏதோ பழைய ஞாபகம்!” என்றாள்.
ராமலிங்கத்துக்கு அவள் நிச்சயம் எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது. ஆனால் சேகருக்கென மகிழ்ச்சியாக பொருள் வாங்கப் போகும்போது அவள் மனிநிலையைக் கெடுப்பானேன் என்றும் எண்ணினான்.
“நாளைக்கு அந்த டெய்லரிங் ஷாப்புக்கு போகணும் அவர்களுக்கு. ஏதாவது புது மெஷின் கிஃப்டாக தரலாமா?” என்று கேட்டாள் கவிதா.
“நானும் வரலாமா?”
“ஓ..” என்றாள், பிறகு “”இந்த வருஷம் சீஸனுக்கு வர மாட்டோம்.. அதான் இப்போது புது வருஷ கிஃப்ட்”
“என்ன கவிதா இதெல்லாம்? இத்தனை நீளமாக விளக்கம் வேணுமா?” என்று புன்னகை செய்தான்.
கவிதாவின் மனம் வேறு யோசனையிலாழ்ந்தது. மனத்துள் ஒரு முடிவு செய்து கொண்டாள்.
சொன்னபடி கவிதா அந்த இடத்துக்குச் சென்றாள், மெருகு குறைந்த நுங்கம்பாக்கமும் கசகசவென்ற அமைந்தகரையும் இணையும் இடம் நெல்சன் மாணிக்கம் சாலை.
ராமலிங்கத்துக்கு இது போன்ற தையற் கடைக்குப் போய் வந்த அனுபவமுண்டு. மாம்பலத்தில் கௌடிக் என்றொரு பெரிய கடை. பெண்கள் பிளவுஸ் தைக்கக் கொடுப்பதற்கு க்யூவில் காத்திருப்பார்கள். ஏதோ மருத்துவ நிபுணரைச் சந்திப்பது போல, அதுவும் உடனே கொடுப்பார்களா? மாட்டார்களா? குறைந்தது மூன்று வாரமாகும். கல்யாணம், விசேட நாள் என்றால் இன்னும் தாமதமாகும்.
ஆனால் இப்போது கவிதா செல்வது தைக்கக் கொடுப்பதற்கல்லவே? ஏதோ பரிசு தரத்தானே? சுமாரான சாதாரண கடையாக இருக்கும்…
கவிதா பரபரவென்றின்றிருந்தாள். டிரைவரிடம், “சீக்கிரம் போப்பா! ஏதோ ஊர்வலம் இருக்காம், டிராபிக் நின்னுடும்” என்றாள். ஆட்டோ டிரைவர் வேறு பாதையில் விரைவாக வண்டியைச் செலுத்தினான்.
திடீரென்று அவள் “”ஏதாவது ஆக்ஸிடெண்ட் ஆகிவிடப் போகிறது. மெதுவாப் போ!” என்றாள்.
ராமலிங்கத்துக்கு அவள் செய்கை ஆச்சரியமாக இருந்தது. ஏன் இவ்வளவு பரபரப்பு? மனைவியிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது.
ஆனால் கவிதாவுக்கோ வேறு யோசனை. கணவர் அங்கு வந்தால் அவருடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்? என்ன கோள்விகள் கேட்பார்? எப்படிப் பதில் சொல்லுவது? போன்ற பல எண்ணங்கள் அவளைக் குடைந்து கொண்டிருந்தன.
கடிகாரத்தைப் பார்த்தாள், அந்தக் கடை மூடுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு திருப்பம் தெரிந்தவுடன் “இந்த பக்கம் ரைட்டிலே போ!” என்றாள்.
ஆட்டோ நின்றது. இறங்கினார்கள். பெயர் பலகை காணோம். கூட்டமும் இல்லை. ஏதோ டிரஸ்ட் என்ற பெயர் வெளி வாசலில் காட்சியளித்தது.
ராமலிங்கம் தன் வியப்பை அடக்கிக் கொண்டான்.
உள்ளே நுழைந்தார்கள். முன் அறையில் அமர்ந்திருந்த ஒரு பெண், “”மேடம் உங்களை எதிர்பார்த்திட்டிருக்காங்க” என்றாள்.
கவிதாவை கண்டதும் அந்த நரைமுடி மேடத்தின் முகம் மலர்ந்தது. ஏதோ பள்ளி ஆசிரியர் மாணவர்களை அழைப்பது போல் “புவனா! சுந்தர்! பிரகாசம்!” என்று திரும்பி பார்த்துக் கூவினாள்.
அழைக்கப்பட்ட அந்த மூன்று பேர் மட்டுமல்ல, இன்னும் கூடச் சிலர். ஒருத்தியின் வாயில் கோணலாக எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. இன்னொருத்தனின் உதட்டில் அசட்டுச் சிரிப்பு, மூன்றாமவனின் கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்தபடியிருந்தன.
“தைச்சது திருப்தியா இருந்ததுன்னு எழுதின மெயில் கிடைத்தது” என்றாள் மேடம். ஒரு விதப் பெருமையுடன், “”பார்த்தா ஒரு மாதிரியா இருப்பாங்கதான். ஆனா கண் பார்த்ததை கை சடக்குனு பிடிச்சுடும்”.
கவிதா எல்லோரிடமும் சென்று கனிவாக விசாரித்தாள். “”ஹலோ ஹாய்! எப்படி இருக்கே? தட்டிக் கொடுத்தாள். பிறகு தலைவியிடம் “”இது எங்கள் கிஃப்ட் இந்த சீசனுக்கு நாங்க வரமாட்டோம்” என்றாள்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டாள். “”அட மறந்தே போயிட்டேனே? உங்க செல்லப் பொண்ணு சந்தியாவை எழுப்பட்டுமா? இந்த வேளையில் என்னவோ தூக்கம்.”
“வேண்டாம் வேண்டாம்” என்று தடுத்தாள் கவிதா “போட்டோ அனுப்பிச்சீங்களே பார்த்தேன்”.
“நீங்க அடிக்கடி செய்யற உதவிக்கு ரொம்ப சந்தோஷம் உங்க மாதிரி சில நல்லவங்களாலேதான் இந்த ட்ரஸ்ட் ஓடிட்டிருக்கு”.
கவிதா ஓரக்கண்ணால் கணவனை நோக்கினாள். ராமலிங்கம் பிரமித்து போய் நின்றிருந்தான். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பலவகை உணர்ச்சிகள் அவளை ஆட்கொண்டிருந்தன.
“போகலாமா?”
காத்திருந்த ஆட்டோவில் ஏறினார்கள். புது மீட்டர் பளபளவென்று மின்னியது. ராமலிங்கம் கனவில் ஆழ்ந்தது போன்ற நிலைமையிலிருந்தான். ஒரு பழைய நிகழ்ச்சி மனக் கண் முன் விரிகிறது.
ஒரு சனிக்கிழமை இரவு குடியிருக்கும் தளத்தில் ஆண்டு விழா. சிறுவன் ஒருவன் மேடையில் பாடுகிறான். மைக் வேலை செய்யாவிட்டாலும் குரல் நன்கு ஒலித்தது. இளையராஜாவின் பழைய பாடல், “”கண்ணே கலைமானே” பாடும் போது உதட்டிலிருந்து எச்சில் வழிந்து சட்டையை நனைக்கிறது. பாடி முடிந்ததும் “எக்ஸலண்ட்” என்று எல்லோரும் கை தட்டுகிறார்கள்.
பாட்டு, ஆட்டம் சிறு கேளிக்கைகளுக்குப் பிறகு பஃபே டைப் உணவு. ஓரமாக ராமலிங்கம் வெஜி புலவை ருசித்துக் கொண்டிருந்தான். ஒருத்தர் அவனை அணுகி “”நீங்கதான் அந்தப் பையனோட ஐ மின் கண்ணே கலைமானே பாடினானே தகப்பனாரா?”
“ஆமாம். நல்லா பாடுவான் சார்” என்றான் ராமலிங்கம் பெருமை பொங்க.
மற்றவரின் குரல் தீவிரமாகிறது. “நான் பாட்டைச் சொல்வில்லை. இந்தாங்க கார்ட்” என்று ஒரு கார்டை நீட்டினார். “இந்த டாக்டரிடம் அந்த பையனைக் காண்பியுங்கள்”!
அதற்குப் பிறகு நடந்ததை எண்ணினால் இப்போதும் ராமலிங்கத்துக்குக் கலக்கம் ஏற்படும். டாக்டரிடம் பல்வேறு சோதனைகள்… ஆரம்ப நிலை ஆட்டிஸம் என்ற நீதிபதியின் தீர்ப்பு மாதிரி நிபுணர்களிடம் டயக்னோஸிங்..”இங்கேயே பல சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன வசதி இருந்தால் வெளி நாட்டுக்குப் போய்ச் சிகிச்சை தரலாம்”
வசதிக்கென்ன குறைவு? ஏற்கெனவே சில வருடம் அமெரிக்காவில் இருந்தவன்தான். இப்போது மனைவியுடன் சேகரையும் அழைத்துச் சென்றான். அற்புதமான பள்ளிக் கூடம், நவீன தன்மை கொண்ட சிகிச்சைகள். கிட்டத்தட்ட சேகர் நார்மலாகிக் கொண்டிருக்கிறான்.
“என்ன தூங்கறீங்களா? கே.கே.நகர் ஃப்ளாட் வரப்போகுது” என்றாள் கவிதா.
“எனக்கு மனசு ரொம்ப கலங்கிப் போச்சு கவிதா”.
கவிதா மெதுவாக “இந்த டிரஸ்ட்டைப் பற்றி தற்செயலாக இன்டர்நெட்டில் பார்த்தேன். அதற்குப் பிறகுதான் இங்கே வருகிறேன்” என்றாள். “நமக்கு வசதி இருக்கு. வெளிநாடு போனோம் சேகருக்கு நல்ல குணம் அடஞ்சது. ஆனால் இவங்க அதுவும் அந்த சந்தியான்னு குழந்தையை மேடம் சொன்னாங்களே, அப்படியே அவள் சேகர் மாதிரிதாங்க! மியூசிக்லே விருப்பம் ஜாஸ்தியாம்” சொல்லிக் கொண்டே போனவளின் குரல் உடைந்து அழுதாள். “உங்களுக்கு தெரியாமல் நிறைய உதவி செஞ்சிருக்கேன். ஏதோ சின்ன சந்தோஷம்”!
ராமலிங்கம் அவள் முதுகை தடவிக் கொடுத்தான் “”இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் வாழ்க்கையை முழுமையாக்குகிறது” என்றான்.
– வாதுலன் (நவம்பர் 2013)