சினிமாக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,473 
 

அந்த கிராமத்தின் இரயில் நிலையத்தில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது, அந்தப் பெரியவர் அவர் மகளிடம் அழுதது தான். அதனை வெறும் அழுகை என்று சொல்ல முடியாது. அது ஒரு கதறல், மன்றாடல் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த பெண் இரயில் ஜன்னலருகே அமர்ந்திருந்தாள். அவர் வெளியே நின்றார்.

“அம்மா வடிவு! உன் முடிவை மாத்திக்கோ… அங்கே போனால் உன்னால் சமாளிக்க முடியாது! சினிமாங்கறது, பெரிய கோடீஸ்வரங்க உலாவுற இடம். நாம ஏழை, நம்மள மாதிரி ஆளுங்களுக்கு அங்க இடம் இல்லை. உனக்கு நான் பாதாம் பருப்பும், ஆப்பிள் ஜூஸூம் கொடுத்து வளர்க்கலை. வெறும் பழைய சோறு தான். அப்படி கஷ்டப்பட்டு உன்னை படிக்க வெச்சது இப்படிக் கெட்டுப் போகத்தானா?” என்று அந்த பெரியவர் கதறினார். அவருக்கு அறுபது வயதிருக்கும். கந்தல் வேட்டியும், கசங்கிய சட்டையும், ஒடுங்கிய கன்னமும் அவரின் பொருளாதாரத்தை படம் போட்டுக் காட்டியது.

“அப்பா நம்ம நிலைமையை மாத்தத்தான் நான் சினிமாலயே நடிக்க போறேன். ” என்றாள் வடிவு.

“நம்ம ஊர்லயே உனக்கு டீச்சர் வேலை வாங்கித் தர்றேன் மா…சினிமா வேணாம்மா..”- அவர் கெஞ்சினார்.

“அப்பா நடிகையாகணும் என்பது சின்ன வயசில் இருந்தே என் கனவு. அது தான் என் வாழ்க்கை லட்சியமும். சும்மா பொறந்தோம் வளர்ந்தோம், போனோம்னு என்னால இருக்க முடியாதுப்பா..!” – வடிவு அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். உண்மையிலேயே ஒரு கதாநாயகிக்கு உரிய அத்தனை அம்சங்களும் அவளிடம் இருந்தன. அதது இருக்க வேண்டிய லட்சணத்தில், அடக்கமாய் இருந்ததால், கொஞ்சம் அதிக அழகுடன் தான் அவள் இருந்தாள்.

இவையெல்லாவற்றையும் அந்த நடுத்தர வயது மனிதர் சற்று தூரத்தில் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். குறிப்பாக வடிவை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பிரபல தமிழ் சினிமா டைரக்டர் குபேரன். இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர்.

அந்தப் பெரியவர்– ” நீ ஆயிரம் சொன்னாலும் என்னால் உன்னைவிட முடியாதும்மா!” என்று சொன்ன போது இரயில் கிளம்ப ஆரம்பித்தது. அவர் வடிவின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடி வர.. அவள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அப்பாவின் கைகளை விடுவித்தாள்.

“மன்னிச்சிடுங்கப்பா…” -என்று விட்டு திரும்பி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள்.சினிமாக்காரி

டைரக்டர் குபேரனும் உணர்ச்சிவசத்தில் இருந்தார்.. இரயில் கொஞ்ச தூரம் சென்றிருக்கும், தீடீரென ஆக்ரோஷமாக

“கட்!” -என்றார். இரயில் நின்றது.

“டேக் ஓகே!” என்றவர் இரயிலிலிருந்து வெளியே இறங்கி வந்த பிரபல நடிகை சனந்தாவைப் பார்த்து,

“ஒரே டேக்ல அசத்திட்டீங்க..” என்றார் உற்சாகமாக. அவள் ” தேங்க் யூ சார்!” என்று விட்டு, விரல்களைச் சொடுக்கி யாரையோ அழைத்து,

“ஆப்பிள் ஜூஸ் ப்ளீஸ்”- என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *