‘சித்த இங்க வரேளா…!’
சன்னமான குரல்ல , கஸ்தூரி , அவர் காதுக்கு மட்டும் கேக்கறாப்படி கூப்படற சத்தம் கேட்டு சுவாமிநாதன் ஒடம்பெல்லாம் அப்படியே சிலுத்து போறது…
‘இதோ ..வரேண்டி…தங்கம்…’
வாய்தான் முணுமுணுக்கறதே தவிர ஒரு அனக்கமும் இல்ல… வெறும் காத்து தான் வரது…
“என்ன தாத்தா…?? மறுபடியும் கனவா…??பாட்டியம்மா கூப்பிடுதா…??மொகத்தில என்ன சந்தோஷம் பாரு…!”
ட்யூட்டி நர்ஸ் அமலா லேசா கிழவர் கன்னத்தை தட்டிக்குடுத்துட்டு போர்வைய நன்னா இழுத்து போத்திட்டு , எல்லா ட்யூபும் ஒழுங்கா சொருகியிருக்கான்னு ஒரு தடவைக்கு இரண்டு தடவ செக் பண்ணிட்டு ஒரு ஸ்டூல இழுத்துப் போட்டுண்டு, தாத்தாவையே பாத்துண்டு இருக்கா..
அவர் இந்த அஸிஸ்டட் கேருக்கு வந்து மூணு வருஷம் ஆயிடுத்து… நேரமும்… காலமும்……
என்னமா ஓடறது…??
அன்னிக்கு ஒரு புதன் கிழமை…அமலாதான் அன்னிக்கும் ட்யுட்டில இருந்தா…கூட ஹெட் நர்ஸ் விஜயாவும்..
பெங்களூர்ல ஊருக்கு தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கு இந்த நர்ஸிங் ஹோம்… நர்ஸிங் ஹோம்னா என்னமோன்னு நெனச்சுடாதீங்கோ…
அஞ்சு நட்சத்திர ஓட்டல் மாதிரி , பாக்கறதுக்கு, பளபளன்னு , தரையெல்லாம் கண்ணுல ஒத்திக்கறாமாதிரி , ஒரு தூசி…தும்பு.. ம்ஹூம்…. தேடினாலும் கெடைக்காது…
இந்த நர்ஸிங் ஹோம் கட்டி பத்து வருஷம் இருக்குமா..??? மேலயே இருக்கும்.. இங்க சேத்துக்கறதுக்கு ஒரு வருஷம் மின்னாடியே சொல்லி வைக்கணுமாம்..
அத்தனை டிமாண்டு..
யாருக்கோசரம் கட்டி வச்சிருக்கா…??
நல்ல வசதி இருக்கணும்..
குழந்தைகள்ளாம் இருந்தும் பக்கத்தில் இருந்து பாத்துக்க முடியாதவாளா இருக்கணும்…
உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்கணும்…
பணத்தை தண்ணியா செலவு பண்ற மனசும் ..ஆளும் வேணும்…
இவாளப் பாத்து நமக்கு பொறாமையா வரும்??பாவமான்னா இருக்கு..!!
உடம்பு முழுக்க ட்யூப் இல்லாத இடமே இல்ல…மூச்சுவிட குழாய்..சாப்பிட குழாய்..ஒண்ணுக்குப் போக குழாய்..
அதத் தவிர மூச்சு விட முடியல்லனா தனியா ஆக்ஸிஜன் குழாய்…
இவாள்ளாம் உயிரோட இருக்கிறதே இந்த குழாயாலதான்.. இதுக்குத்தானே அத்தனை காசும்…!
ஆனா…சும்மா சொல்லக்கூடாது…பாத்தா ஒண்ணு..பாக்காட்டா ஒண்ணெல்லாம் கெடையாது…
ஒத்தர் மாத்தி ஒத்தர்..எத்தன டாக்டர் வரா தெரியுமா…. என்னென்னமோ பேர் சொல்லறா….
கார்டியாலஜிஸ்ட்…நியூரோ.. நெஃராலஜிஸ்ட்..யூராலஜிஸ்ட்… காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்…
அப்புறம் வாயில நொழையாத ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள்… இவ்வளவு பேருக்கும் ஃபீஸூ , ரூம் வாடகை..நர்ஸ்..ஆயா.. இவாளுக்கெல்லாம் சம்பளம்……
ஒரு லட்சத்திலேர்ந்து மூணு லட்சம் வரைக்கும்… மொத்த செலவு…
வருஷத்துக்கான்னு கேக்கறேளா…இல்லவே இல்லை…மாசத்துக்கு…!!
மயக்கம் வருதா…இல்லையா…???
பாவம்…சுவாமிநாதனுக்கு மட்டும் ப்ரக்ஞை இருந்தா … குழந்தைகள் தனக்காக இவ்வளவு செலவு பண்றான்னு தெரிஞ்சா…
குழாயெல்லாம் பிடுங்கி எறிஞ்சுட்டு…
“கஸ்தூரி… என்னையும் கூட்டிக்கோம்மான்னு பிராணன விட்டுட மாட்டாளா…???
அவர் சொன்னது என்ன…இவா அடிக்கிற கூத்தென்ன…???
சுவாமிநாதனுக்கு கொழந்தைகள் இல்லையான்னு கேக்கத் தோணறதா…??
ஏன் இல்லாம….???
ஒண்ணுக்குமூணு…
மணிமணியா..!
அப்பா..அம்மாவோட ஒத்துக்கலயா…???
சான்ஸே இல்ல..
அப்பா..அம்மான்னா..உயிர விட்டுடுவா…!!
அப்போ பணமில்லயா…??
பணமில்லாட்டா இங்க சேக்க முடியமா…?? கோடி கோடியான்னா சம்பாதிக்கறதுகள்…!!
வேறென்ன…????
கலிகாலம் தான்…!!!
ராம்…பரத்.. லக்ஷ்மண்…
ராமாயணத்தில வராப்போல பசங்க அத்தனை புத்திசாலி…அத்தனை ஒத்துமை…!
இரண்டு பேர் அமெரிக்கால டாக்டரா இருக்கா..சொந்தமாக ஆஸ்பத்திரிகூட வச்சிருக்காளாம்…
கடைசி பையன் ஏதோ பெரிசா படிச்சுட்டு ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்கான்… கேம்ப்ரிட்ஜ் யுனுவர்சிடியாமே..அங்க…!
அவன் மட்டும் கல்யாணம் பண்ணிக்கல…
ஒவ்வொருத்தரா நன்னா படிச்சு ஸ்காலர்ஷிப் வாங்கி வெளிநாட்டுக்குப் போறச்சே நன்னாதான் இருந்துது…
சுவாமிக்கும்…கஸ்தூரிக்கும்…பெருமையாத்தான் இருந்தது…
இருக்காதா பின்ன…???
அப்பறம் கல்யாணம்..அந்த ஊருல அவாளுக்கு பிடிச்சமாரி…
இரண்டு பேருமே வெள்ளக்காரியத்தான் பண்ணிண்டா..என்னவோ அவாதான் ஒத்துவருமாம்…
இரண்டு மாட்டுப் பொண்ணுமே டாக்டர் தான்….
சுவாமியும்..கஸ்தூரியும் வாயில்லா பூச்சிகள்… ஒண்ணும் சொல்லத்தோணல..
ஆனா…சும்மா சொல்லப்படாது.. மாட்டுப் பொண்கள் இரண்டு பேருமே தங்கம்னா…சொக்கத் தங்கம்..
இவாதான் அங்க போக முடியலயே தவிர அவா மூணு.. நாலு..தடவ வந்தாச்சு..
பொடவ கட்டிண்டு..பொட்டு வச்சிண்டு..அப்பா..அம்மான்னு.. வாய் நெறய கூப்பிட்டுண்டு..
எல்லாம் ஒரு வாரக் கூத்துக்கு தானே…
வரது தெரியாது…போறது தெரியாது…!!!
கடைசி பையன்… கேட்கவே வேண்டாம்.. அவன் ஏதோ ஒரு ஒலகத்தில இருக்கான்.. மாசம் ஒருக்கா ஃபோன்ல பேசறதோட சரி..
வளவளன்னு பேசிண்டே இருக்காப்போல தோணறது இல்லையா…?????
மூணு பசங்களுக்கும் எல்லாம் குடுக்க முடிஞ்சுது. ஒண்ணத்தவிர…அவாளோட நேரம்… அதுக்குத்தான் ஏங்கினா இரண்டு பேரும்..!
கஸ்தூரி இருக்கிற வரைக்கும் சுவாமிக்கு அது ஒரு பெரிய விஷயமாப் படல…
ஆனா அவ போனப்புறம்.. பாழாய்ப்போன பக்கவாதம் வந்தப்புறம்..நடக்க முடியாம…தானே சாப்பிட முடியாம போனப்புறம்…!
சுவாமிக்கு சீக்கிரம் போய்ட்டா தேவலைன்னு தோணிப் போச்சு… அவர் இருக்கிற இருப்ப பாத்தா ரொம்ப நாள் தாங்காது போல இருக்கு..
இந்த கதையே அவரப்பத்திதானே..அத விட்டுட்டு..மத்தவா பேச்சு எதுக்கு..??
இருங்கோ .. டாக்டர் ஏதோ சொல்றார்….
“அமலா… இவருக்கு பல்ஸ் ரொம்ப வீக்கா போயிட்டிருக்கு..இவங்க பசங்களுக்கு சொல்லி அனுப்பற நேரம் வந்திடுச்சு….
வென்ட்டிலேட்டர்ல வைக்க வேண்டிவரும்…
“அவரோட பையன கூப்பிட்டு சொல்றேன் டாக்டர்…”
அடுத்த நாள் சாயரட்ச வந்துட்டான்.. வந்தது பையன் இல்ல… பேரன்… வினய்…!!
“தாத்தா..தாத்தா…!”
கையைப் பிடிச்சுண்டு அழறான்..தாத்தா ஒடம்புல மின்சாரம் பாஞ்ச மாதிரி… தூக்கிப் போடறது…
கண்ணத் தொறந்து பாக்கறார்..பேரன அடையாளம் தெரியாட்டாலும் ரத்த பந்தம்னு புரிஞ்சுதுடுத்து..
என்னமோ சைகை பண்றார்..தலகாணியத் தொட்டு தொட்டு காட்றார்…மூச்சு ஏறி ஏறி இறங்கறது… வாய் எதோ முணுமுணுக்கறது…
ஐய்யோ…மூச்சு நின்னுடுத்து போல இருக்கே… பேரன் கைய கெட்டியா பிடிச்சுண்டு உசிர விட்டுட்டாரே கிழவர்…!!!
“தாத்தா…தாத்தா….!!”
அமலா தான் பெரிசா அழறா…மூணு வருஷம் கண்ணுக்கு கண்ணாக பாத்துண்டவ அவதானே… சொந்தமா..பந்தமா…???
தாத்தா போய் இரண்டு நாள் இருக்குமா…??
வினய் காரியமெல்லாம் பண்ணிட்டு ஊருக்குப் போறதப்பத்தி யோசிச்சிண்டு இருந்தான்..
இன்னும் சில ஃபார்மாலிட்டி எல்லாம் முடிக்க வேண்டி இருக்கே…!!
நர்ஸ் அமலாவோட நிறைய பேச வேண்டி இருந்தது..
“மிஸ்.அமலா..எனக்கு உன்னப் பாத்தா பொறாமையா இருக்கு…
நான் பேரன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.. நீதான் அவருக்கு பிள்ளை.. பேரன்..பேத்தி.. எல்லாம்…அவரப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது..
ஆனா அப்பா அடிக்கடி ஒண்ணு மட்டும் சொல்லுவார்..
“வினய்.. your grandparents are the greatest human beings I’ve ever come across…சாரிடா….உன்னை அவர் கிட்டேந்து ரொம்ப தூரத்துக்கு கொண்டு வந்துட்டேன்……”
அமலா …!! வந்து சேந்ததிலேர்ந்து கடைசி வரை ஒண்ணுவிடாம சொல்லுவியா…???”
“வினய் .. அவர் இங்க வரும்போது பாதி கோமா நிலையிலதான் இருந்தார்..Stroke…ஆனா ஒரு வருஷத்தில கொஞ்சம் பேச ஆரம்பிச்சார்…
எப்பவுமே, “கஸ்தூரி..கூப்பிட்டயாம்மா’..இதோ வரேன்’ னு அடிக்கடி சொல்வார்..
ஒரு நோட்டுல என்னமோ எழுதணும்னு சொல்லி ஒரு நாளு பேனா கூட வாங்கி வச்சுகிட்டாரு…
பிள்ளைங்க பேரையும் நிறைய தடவ கூப்பிடுவாரு….
அமலா….அமலான்னு.. ‘என் கையப் பிடிச்சா விடவே மாட்டார்…”
அமலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது…
“அவர் போகும்போது என்னமோ தலகாணியத் தொட்டு காமிச்சாரே…”
“ஆமா.. நானும் மறந்துட்டேன்… ஒரு நிமிஷம்….”
திரும்பி வந்த அமலா கையில் ஒரு டைரி…
“வினய் …you are lucky…இது உங்களுக்கு கெடச்ச ஒரு பொக்கிஷமா இருக்கப் போவுது…!
தலகாணிக்கு அடியில பத்திரமா வச்சிட்டு போயிருக்காரு உங்க தாத்தா…!!
படிச்சு முடிச்சப்புறம் விருப்பமிருந்தா எனக்கும் ஷேர் பண்ணுங்க… நான் அவர் ரொம்பவே மிஸ் பண்ணறேன்….!”
அதை டைரின்னு சொல்லறதுக்கில்ல.ஒரு நோட்டுப் புத்தகம்…
மணிமணியா ஆரம்பிச்ச கையெழுத்து.. போகப்போக கிறுக்கின மாதிரி… கை நடுக்கம் வந்துடுத்து போல இருக்கு…
ஆனா ஒரு பக்கத்தில எழுதி அடிக் கோடு வேற போட்டிருக்கு..
‘எனக்கு ஒடம்புக்கு ரொம்ப முடியாம போனா என்ன அப்பிடியே விட்டுடுங்கோ… நான் சீக்கரமா கஸ்தூரிகிட்ட போணம்…’
‘தாத்தா…எங்கள மன்னிச்சிடுங்கோ…’
வினய் தாத்தா கிட்ட மானசீகமா மன்னிப்பு கேக்கறான்…
படிக்கப் படிக்க தாத்தா..பாட்டிமேல இருந்த மதிப்பு கூடிண்டே வருது…
***
எனக்கு இப்பல்லாம் மறதி நெறய வந்துடுத்து…ஆனா பழசெல்லாம் இப்ப நடந்த மாதிரி.. பளிச்சுன்னு…
இதுவும் மறந்து போறதுக்குள்ள எழுதி வச்சுடறேன்…
இத யாராவது படிச்சு பாத்தாலே என் ஜென்மம் சாபல்யம் அடஞ்சதா நெனச்சுக்கறேன்…
தவமா தவமிருந்து என்னப் பெத்ததா அம்மா சொல்லுவா..
மூணு பொண்கள் வரிசையா…
அதப்பத்தி கவலப்படலயாம்… அவருக்கு பொண்ணுனா உசிரு…
ஆனா அம்மாக்கு பிள்ள வேணும்ன்னு ஒரே பிடிவாதம்.. நான் பொறந்த போது பொண்ணு மாதிரிதான் இருந்தேனாம்…
அக்காமார் வளத்ததாலேயோ என்னமோ பொண் குழந்தைகள் மாதிரி சாதுவா, அடக்கமா வளந்துட்டேன்…
கொஞ்சம் அம்மாகோண்டுன்னும் வச்சுக்கலாம்…
அப்பறம் அடுத்தடுத்து மூணு தம்பிகள்..என்ன மாரி இல்ல..ரெட்ட வாலுகள்…
எங்காத்தில எப்பவுமே பாராயணம்… புத்தகம்..படிப்பு..
இப்பிடித்தான் பொழுது போகும்.. இத்தனைக்கும் வீடு கொள்ளா மனுஷர்…
இந்த காலத்து கொழந்தைகள் பொறந்து கண்ணத் தொறந்து பாக்கும் போதே சுத்திவர மனுஷா ஒயரத்துக்கு யான…வாத்து… பூன..நாய்க்குட்டி…கரடின்னு..
பொம்ம மூஞ்சிலன்னா முழிக்கறா..
ஆனா நான் கண்ணத் தொறந்து பாக்கும்போது சுத்திவர அப்பா..அம்மா..அக்கா..மாமா..அத்த
.தாத்தா..பாட்டின்னு .. ரத்தமும் சதையுமா ..மனுஷாதான் இருந்திருப்பா…
நடுவில பொறந்ததாலேயோ என்னமோ எனக்கு எல்லோரையும் அணச்சு கட்டிண்டு போற சுபாவம் இயற்கையாகவே அமஞ்சிருக்கணும்…
ஆத்தில எல்லோருக்கும் செல்லம்….
பள்ளிக்கூடத்தில எல்லாத்திலையும் ஃபர்ஸ்ட்…
நான் பி.ஸ்ஸி. கடைசி வருஷம் படிக்கும்போதே அக்காமார் எனக்கு பொண்ணு பாக்கத் தொடங்கிட்டா…
நல்ல வேல கிடைக்காம எப்பிடி கல்யாணம் பண்ணிக்கறதுன்னு சொன்னா கேட்டாதானே…
கஸ்தூரி…எங்காத்துக்கு தெரிஞ்ச குடும்பம்.போகவரபாத்துருக்கேன்.
அபிஷேகம் எல்லாம் பண்ணி…
பளபளன்னு அலங்காரத்துக்கு தயாரா நிக்கற அம்மன் சிலை மாதிரி காதுல மூக்கில ஒண்ணும் இல்லாமலேயே பளபளன்னு மின்னும் அவளோட மொகம்…
கொஞ்சம் ஏழப்பட்ட குடும்பம்…ஆனா படிப்பு ஜாஸ்தி.. அவளும் சமஸ்கிருதத்தில பி.ஏ.முடிக்கப் போறா… அவள கல்யாணம் பண்ணிக்க கசக்குமா???
கல்யாணம் முடிஞ்சாச்சு…அவ மொகத்தக் கூட சரியா ஜப் பாக்க முடியல… தனியா சந்திக்க துடிச்சிண்டிருப்பேன்..
என்னவோ நாள் கிழம பாத்துண்டு…எங்க சாந்தி முகூர்த்தம் தள்ளி போயிண்டே இருந்தது…
ஒரு நா ஆபூர்வமா ஆத்தில யாரையும் காணோம்.. தாத்தாவும் பாட்டியும் திண்ணையில் உக்காந்திருந்தா.’
“சித்த இங்க வரேளா….??”
கஸ்தூரி குரல்னா…! காதுல தேன் வந்து பாஞ்ச மாதிரி…
அப்பிடியே போட்டது போட்டபடி பாஞ்சு உள்ள போனேன்…
இன்னைக்கு அவள எப்படியும் கட்டிப் பிடிச்சு ஒரு முத்தம் குடுத்தாத்தான் தான் வெறி அடங்கும்…
ஒரு எடத்திலேயும் காணம்… குரல் மட்டும் கேக்கறதே…
ராட்சசி..பரண் மேல ஒக்காந்து கலகலன்னு சிரிக்கிறா….எனக்கு அப்பிடியே பத்திண்டு வரது…
அதுக்கப்புறம் எத்தன தடவ…
“சித்த இங்க வரேளா…???”
ஒவ்வொரு தடவையும் அப்படியே இழுக்கிற குரல்..
முதல்ல ரொம்ப எதிர்பார்த்துண்டுதான் போனேன்…அவ குணம் புரிஞ்சப்புறமா ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம கூப்பிட்டதுமே ஒடத்தோணும்…
“இந்த வாளி கிணத்தில விழுந்துடுத்து.. கொஞ்சம் எடுத்துக் குடுங்கோ…”
“இந்தாங்கோ…சின்னவனப் பிடிங்கோ…பரத்துக்கு அவசரமா பாத்ரூம் வரதாம்…”
“அடுப்புல கத்திரிக்கா தீயர வாசன வருது..சித்த இந்த தூளிய ஆட்டுங்கோ..குழந்த முழிச்சிண்டா ரகளதான்…”
கஸ்தூரி எதுக்காக கூப்பிட்டா என்ன???? , அவ…
“சித்த இங்க வரேளா…???”ன்னா
எனக்கு உடனே போயாகணும்…
இப்பவும் அடிக்கடி கூப்பிடறா…! போகத்துடிக்கிறேன்…… ஆனா முடியலயே….
கதவுக்கு பின்னாடி நின்னுண்டு…அவ குறும்பா என்னப்பாக்கற பார்வ… இன்னும் கண் முன்னாடி நிக்கறதே…!
கஸ்தூரி எங்காத்துக்கு கெடச்ச ஒரு பொக்கிஷம்…
ஆத்தில ஒவ்வொருத்தரா படுக்கையில விழறா…
அந்தக் காலத்தில எல்லாம் ஒடம்பு ரொம்ப முடியாம போய்ட்டா இழுத்து ரேழில போட்டுடுவா…
பாயிலதான் படுக்க…! சகலமும் அதிலதான்…
அத்தன பேரையும் கஸ்தூரிதான் பாத்துண்டா.அலுக்காம.சலிக்காம……
காத்தால நாலு மணிக்கு எந்திருப்பா… …அவாளோட ஈரத்துணியெல்லாம் , மூஞ்சி சுளிக்காம மாத்தி…மணக்க மணக்க காப்பி.. டிபன்..கொண்டு போய் குடுத்து..நாலு வார்த்த நல்லதா சொல்லிட்டு…
சாம்பிராணி.. ஊதுபத்தி ஏத்தி வச்சு…அவா இருக்கிற எடத்த ஒரு கோவில் மாதிரி மாத்திடுவா…
சாயங்காலம் அவா பக்கத்தில உக்காந்து ராமாயணமோ…
பாகவதமோ..படிச்சுக் காட்டுவா…!!
தாத்தா…பாட்டி.. பெரியம்மா..அத்தை…மாமா…!!
எல்லாரும் தொண்ணுறு வயசு வாழ்ந்தா… கஸ்தூரி சொஸ்ததையா கடைசிவரை கவனிச்சு… அவஸ்த்தப்படாம கரை ஏத்தி அனுப்பி வச்சவாதான்…குடுத்து வச்சவா…
ஒரு ட்யூப் கெடெயாது..
மருந்து ..மாத்திர.. டாக்டர்.. நர்ஸ்..எல்லாமே கஸ்தூரிதான்…
கஸ்தூரி.. என்னையும் அப்பிடி அனுப்பிச்சுட்டு நீ போயிருக்கக் கூடாதா…??
வினய்க்கு படிக்கப்படிக்க இப்படிக்கூட ஒரு ஆத்மா இருக்குமான்னு ஆச்சரியமா இருக்கு…
மத்தவாளுக்காகவே வாழ்ந்த பாட்டிமேல மதிப்பும் மரியாதையும் ஒசந்துண்டே போச்சு…
குழந்தைகள் ஆன மட்டும் கூட வரச்சொல்லி கூப்பிட்டுண்டே இருந்ததும்… கஸ்தூரி தீர்மானமா போகக் கூடாதுன்னு சொல்லிட்டா…
பசங்க வரல்லன்னு ஒரு நாக்கூட கொறப்பட்டுண்டது கெடையாது…
“நம்ப பசங்க அங்க எத்தன பேருக்கு வைத்தியம் பண்றா… நாம குடும்பத்தில இருக்கறவாள மட்டும்தானே பாத்துக்கறோம்..
ஆனா அவா முன்னப் பின்ன தெரியாத ஆயிரக் கணக்கான ஜனங்களோட உயிர காப்பாத்தறாளே…
அவாளுக்கு பாரமா நாம இருக்கப்படாது…நாம நம்ம மனுஷாளோட இருக்கறதுதான் உத்தமம்…
..அவா வேலய நிம்மதியா பண்ணட்டும்….
***
பத்துநாள் லீவுன்னுதான் வந்தான்.ஆனா ஒரு மாசம் போல ஆச்சு..கெளம்ப மனசில்லை…
இதோட அமலாவ நாலஞ்சு தடவ மீட் பண்ணிட்டான்..
தாத்தா எழுதின விஷயங்களைப் பத்தி அமலாகிட்ட நிறைய பேசினான்…
அமலாவும் தாத்தா தங்கிட்ட பேசினத ஒண்ணொண்ணா நெனவுபடுத்தி வினய் கிட்ட சொல்றா…
“வினய்..உங்க தாத்தா ஒடம்புக்கு முடியாம இருந்தாக்கூட எப்பவும் ஜோக்கடிச்சட்டு…சிரிச்சுகிட்டே இருப்பாரு… வெரி பாஸிட்டிவ் பர்ஸன்……
எம்பேரன் பாக்க வெள்ளக்காரன் மாரி இருப்பான்…பேசாம நீ எனக்கு மாட்டுப்பொண்ணா வந்துடு …என்ன…??
நாம இந்த குழாயெல்லாம் பிடுங்கி போட்டுடுட்டு ஆத்துக்கு போயிடலாம்.. கஸ்தூரி மாதிரி என்ன பாத்துக்க மாட்டியா..??”
ன்னு கலாட்டா பண்ணுவார்…
“அமலா.. சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ எங்க வீட்டு பெண்தான்…
அப்பாவே ஆச்சரியப்படப்போறாரு பாரு…தாத்தாவப் பத்தி அப்பாவ விட எனக்கு இப்போ நிறைய தெரியும்…
நான் இனிமே இந்தியாவுக்கு வருவேனான்னு சந்தேகப்பட்டேன்…
ஆனா இப்போ எனக்கு இங்க ஒரு நல்ல ஃப்ரண்ட் கிடைச்சிருக்கே… அடிக்கடி வருவேன்…”
ஆமா..அவாத்தில இன்னோரு கஸ்தூரி….!
இந்தியால கஸ்தூரிகளுக்கு பஞ்சமில்ல…
உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே…