சித்திரச் சாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 8,361 
 
 

வெகு நாள் கழித்து அந்த தொலைபேசி எண்ணை என் விரல்கள் அழுத்தியது. எவ்வளவோ காலமாகியும் அந்த எண் மனதிலிருந்து உதிர்ந்து போய் விடவில்லை. இணைப்புக் கிடைக்கவில்லை.மீண்டும் முயற்சித்தேன். இம்முறை எதிர்முனை நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்தது., பதிலில்லை. நம்பிக்கை இழந்து ,முயற்சியைக் கைவிடத் தீர்மானித்த தருணத்தில் எதிர்முனை உயிர் பெற்றது.

”ஹலோ’ ‘என்ற அந்தக் குரலில் காலம் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணியதாகத் தெரியவில்லை.

வேண்டுமென்றே குரலை லேசாக மாற்றிக் கொண்டு ” நல்லா இருக்கியா ”என்றேன். ”நல்லா இருக்கேன்…யாரு பேசறது ?” என்றான் அவன்.

”மறந்திருப்பேன்னு தெரியும்….” என்றேன்.

”மன்னிச்சுக்கங்க..என்னால நினைவுப் படுத்திக்க முடியலை ”என்று அவன் பணிவாக வருத்தம் தெரவித்த போது சிறிது ஏமாற்றத்துக்கு உள்ளானேன்.

என்றாலும் அதை வெளிக்காட்டாமல் ,பரவாயில்லை” என்ற படி என் பெயரைக் கூறினேன்.

அவன் பரவசம் பொங்கிய உரத்த குரலில் ”அட வளர்மதி…எப்படி இருக்கே…”என்றான். ”நல்லா இருக்கேன். முழுப்பேரும் ஞாபகம் இருக்கே ,ரொம்ப சந்தோஷம் என்றேன். அவனுடன் கடைசியாகப் பேசி ,கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டன .

”அப்படி இல்லை மதி…ரொம்ப நாளாயிருச்சு…உன் குரல் இப்பத்தான் தெளிவா கேட்குது .நல்லா இருக்கியா ?”என்றான். ”

நல்லா இருக்கேன் மேகா ”என்றேன். மேகவர்ணன் என்ற அவனுடைய பெயரை மேகா என்று சுருக்கி நான் அழைப்பதுண்டு. ..

”எவ்வளவு நாளாச்சு நீ பேசி என்றான். ”

”நீயும்தான் பேசி”என்று திருத்தினேன். ஆழ்ந்த அமைதிக்குப் பின் ” நல்லா இருக்கே தானே ” என்று மறுபடியும் கேட்டான்..

”ரொம்ப நல்லா இருக்கேன்”என்று அழுத்தமாக சொன்னேன்.

”அப்பறம் ?”என்றான்.

சரி,இப்போ எதற்கு அழைத்தாய் என்ற விசாரிப்பு அந்தக் கேள்வியின் பின்னால் ஒளிந்திருப்பது எனக்குத் தெரிந்தது .எதற்காக அவனை அழைத்தேன் என்று உண்மையில் எனக்கே அந்தக் கணத்தில் தெரியாமல் போய் விட்டது போல்தான் இருந்தது.

ஒரு புத்தகத்தைப் பிரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த ஓவியம் அவனை நினைவு படுத்தி விட்டது என்று வேண்டுமானால் ஒரு பொய்யை அவனிடம் சொல்லி விடலாம். அதில் கண்ட முகம் வேறொன்றிலும் ஈடுபட முடியாத படி தன்னைத் தொந்தரவுப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினால் அவன் இன்னும் சந்தோஷப் படக் கூடும். தவிர இரண்டு பேருக்கும் பொதுவாய் இருந்த தோழி ஒருத்தி சமீபத்தில் சொன்ன தகவல் ஒன்று அவன் நினைவை மீண்டெழச் செய்துவிட்டது என்பதை எடுத்த எடுப்பில் எப்படி வெளிப்படுத்துவது?

மனதின் படபடப்பும் , குழப்பமும் வெளியே தெரியாத வண்ணம் மறைத்துக் கொண்டு சாதாரண குரலில்,

”சும்மா தான் கூப்பிட்டேன் மேகா…அப்பறம் பேசறேன் ”என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் சட்டென்று அழைப்பைத் துண்டித்தேன். அவனுடைய குழப்பமான முகத்தை மனதுக்குள் ரசித்தேன். எதற்கு இப்படிச் செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் சில சமயம் நம் செய்கைகளின் அர்த்தங்கள் புறத்தே தெளிவில்லாமலும் அகத்தின் தீர்மானங்களாகவுமே இருந்து விடுகின்றன.

‘ஸே இட் லவுட்’ என்ற விளம்பரக் கம்பெனியைத் தொடங்கி நான் நிறுவனராக இருக்க, மேகா கிரியேட்டிவ் இயக்குனராக சேர்ந்தான். பள்ளி, கல்லூரி காலங்களில் எட்டிப் பார்க்காத பட்டாம்பூச்சிக் காதல் இருபத்து ஆறு வயதில் மேகாவின் மீது வந்து ஒட்டு மொத்தமாக ஒட்டிக் கொண்டது.. மறக்க முடியாத ஐந்து வருடங்கள் அவை. முதல் இரண்டு வருடம் காதல் அதன்பின் அலுக்கவே அலுக்காத இரண்டு வருட திருமண வாழ்க்கை.,கடைசி வருடம் பிரிவு என்று அந்த ஐந்து வருடங்களை வசதி கருதி ஒரு வரியில் சுருக்கிவிட முடியும்.. ஆனால் வாழ்க்கை என்பது பெரியதொரு புத்தகம் .எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட அந்த நூலை ஒரு வரியில் அடக்கி விடுவது எப்படி? அவனுக்கும் எனக்கும் இடையே எந்த அளவுக்கு விருப்பம் இருந்ததோ அதே போல் கடைசி சில மாதங்களில் ஒருவித வெறுப்பின் நிழலும் ஒட்டிக் கொண்டு பின் தொடர்ந்தவாறிருப்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டோம். வண்டியை ஆளுக்கொரு திசையில் ஏககாலத்தில் செலுத்த முடியாத இக்கட்டான வேளையில்தான் பிரிவதென்ற முடிவுக்குள் தள்ளப் பட்டோம் . என்னால் அந்த நாட்களின் வலியை நினைத்துப் பார்த்தால் இன்று கூட கண்களின் ஓரம் இரண்டு துளிகள் துளிர்த்துவிடுகின்றன .

மேகாவைப் பற்றிய நினைவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு ராகுலுக்குப் போன் செய்தேன். ”இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவேன் ”என்றான் அவன்..

”அப்பறம் வேறென்ன ?” என அவன் கேட்டதற்கு ”ஒண்ணுமில்லை .உன் குரலைக் கேட்கணும் போல இருந்துச்சு”என்றேன்.

”அட! ஏதேது அதிசயமா என்றான் .

”ஆமாம் ராகுல், கொஞ்சம் லோன்லியா இருந்துச்சு ”என்றேன்.

”சாஹி எங்கே?”என்றான்.

” உன் அம்மா வீட்லே”

”ஓ சரி உன்னோட தனிமையை ரெண்டே நாள்ல ஓட ஓட விரட்டறேன்”என்று சிரித்தான். ”அதை உன்னால விரட்ட முடியாது ஏன்னா அது எனக்குள்ள எப்பவும் ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும் ”என்று சொல்ல நினைத்த நான் அவனுடைய பதிலை முன் கூட்டியே யூகிக்கத் தெரிந்தவளாததால் ” ம் ” என்றேன்.

”ஓகே நிறைய வேலை இருக்கு….பை டியர்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

இந்த இடத்தில் ‘சுபம் ‘ என்று போட்டுக் கதையை நிறுத்திக் கொண்டால் இப்போதைய வாழ்க்கை போல் இந்தக் கதைக்கும் இனிப்பான ஒரு முத்தாய்ப்பு கிடைத்திருக்குந்தான். ஆனால் விதி அழைத்துச் செல்லும் பாதை சில வேளைகளில் கரடு முரடானதாகவும் ,துயரம் என்ற மரங் கொத்தியை எதிர் கொள்ளுவதாகவும் அமைந்து விடுகின்றது. காட்சி முடிந்ததும் ,ஒளி பரவ வெண்ணிறமாகும் ஒரு திரை போல மனதால் .ஆக முடிவதில்லை.

சில வருடங்களுக்கு முன் இருந்த அதே நானா இப்போதும் இருப்பவள் என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழும்.

கோபமும் வேகமுமாக நான் உயிர்ப்புடன் இருந்த பருவம் அது. என்னைக் காலம் செதுக்கி இளக வைத்து விட்டதென்பது புரிகின்றது.. இந்த முப்பத்தி ஏழு வயதில் கூர்கள் மழுங்குவதுதான் இயல்பா,விதியா என எனக்குப் புரியவில்லை. வாழ்க்கை வெவ்வேறு வண்ணங்களை வாரி வாரி மழை போல் பொழியும் போது அதில் நனைவதைத் தவிர வேறு என்னதான் செய்துவிட முடியும்.

பல்வேறு யோசனைகளுடன் மொட்டை மாடிக்கு வந்தேன். மேகம் கறுத்திருந்தது. எந்த நேரமும் மழை வரலாம் போலிருந்தது. எனக்கு மழை மிகவும் பிடிக்கும். என்னுடைய தூரிகை வரைந்த ஆகச் சிறந்த ஓவியஙகள் மழை மேகங்கள், மலைச் சாரல்கள், நீர்ப் பரப்புகள்,,பசும் புல்வெளிகள் ஆகவே இருக்கும்..

சென்னை கவின்கலைக்கல்லூரியில் படிக்கும் போது அந்த அழகான பழம்பெரும் கட்டிடம் மழை காலத்தில் ,மேகங்களின் இருள் கவ்வுகையில் இந்த உலகிலிருந்து விடுபட்ட இன்னோர் உலகமாகிவிடும். என்னைப் பொறுத்தவரை மழையோடிருக்கும் கணங்களில் புத்துயிர் பெற்று விடுவதாக உணார்வேன்.

இப்போதும் வானத்தின் இரக்கத்துக்காக ஏங்குபவள் போல் அண்ணாந்து பார்த்த படி நின்றேன்.பொட்டுகள் போல் முதலில் ஓரிரு தூறல்கள் விழுந்தன. வேகமாக நடந்து கொடியின் அருகே சென்றேன்.

என் வீட்டுப் பணிப் பெண் மேகலா துணிகளை நேர்த்தியாகக் காயப்போட்டிருந்தாள். மேகலா வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளை மேகா என்றுதான் அழைப்பேன். ஆனால் ராகுல் வித்யாசமாக நினைத்துவிடக்கூடாது என்று காலப் போக்கில் மேகலா என்று முழுமையாக அழைக்கப் பழகிக் கொண்டேன். ஆனால் எனக்குத் தெரியும்.உண்மையில் ராகுல் அதை நிச்சயம் வித்யாசமாகவே நினைத்திருக்க மாட்டான். அவனுடைய சுபாவமே வேறு. என் பழைய வாழ்க்கையை அவன் தோண்டித் துருவி ஒரு போதும் அறிய முனைந்தவனல்ல .நானாகச் சொன்னால் ஒழிய எதையும் அறியும் ஆவல் அவனுக்கு இருந்ததில்லை . கடந்த காலத்தை முற்றிலும் துடைத்தெறிய முடியாத என் மனதின் விசித்திர நினைப்பு தரும் உறுத்தல்தான் அது என்று எனக்குத் தெரியும். அவசர அவசரமாக க்ளிப்பை விடுவித்து ஒவ்வொரு துணியாய் எடுத்தேன். என் மகள் சாஹித்யாவின் பூப்போட்ட ப்ராக்கை தொடுகையில் அவளைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பல்வேறு யோசனைகளுடன் மொட்டை மாடிக்கு வந்தேன். மேகம் கறுத்திருந்தது. எந்த நேரமும் மழை வரலாம் போலிருந்தது. எனக்கு மழை மிகவும் பிடிக்கும். என்னுடைய தூரிகை வரைந்த ஆகச் சிறந்த ஓவியஙகள் மழை மேகங்கள், மலைச் சாரல்கள், நீர்ப் பரப்புகள்,,பசும் புல்வெளிகள் ஆகவே இருக்கும்..

சென்னை கவின்கலைக்கல்லூரியில் படிக்கும் போது அந்த அழகான பழம்பெரும் கட்டிடம் மழை காலத்தில் ,மேகங்களின் இருள் கவ்வுகையில் இந்த உலகிலிருந்து விடுபட்ட இன்னோர் உலகமாகிவிடும். என்னைப் பொறுத்தவரை மழையோடிருக்கும் கணங்களில் புத்துயிர் பெற்று விடுவதாக உணார்வேன்.

இப்போதும் வானத்தின் இரக்கத்துக்காக ஏங்குபவள் போல் அண்ணாந்து பார்த்த படி நின்றேன்.பொட்டுகள் போல் முதலில் ஓரிரு தூறல்கள் விழுந்தன. வேகமாக நடந்து கொடியின் அருகே சென்றேன்.

என் வீட்டுப் பணிப் பெண் மேகலா துணிகளை நேர்த்தியாகக் காயப்போட்டிருந்தாள். மேகலா வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளை மேகா என்றுதான் அழைப்பேன். ஆனால் ராகுல் வித்யாசமாக நினைத்துவிடக்கூடாது என்று காலப் போக்கில் மேகலா என்று முழுமையாக அழைக்கப் பழகிக் கொண்டேன். ஆனால் எனக்குத் தெரியும்.உண்மையில் ராகுல் அதை நிச்சயம் வித்யாசமாகவே நினைத்திருக்க மாட்டான். அவனுடைய சுபாவமே வேறு. என் பழைய வாழ்க்கையை அவன் தோண்டித் துருவி ஒரு போதும் அறிய முனைந்தவனல்ல .நானாகச் சொன்னால் ஒழிய எதையும் அறியும் ஆவல் அவனுக்கு இருந்ததில்லை. கடந்த காலத்தை முற்றிலும் துடைத்தெறிய முடியாத என் மனதின் விசித்திர நினைப்பு தரும் உறுத்தல்தான் அது என்று எனக்குத் தெரியும். அவசர அவசரமாக க்ளிப்பை விடுவித்து ஒவ்வொரு துணியாய் எடுத்தேன். என் மகள் சாஹித்யாவின் பூப்போட்ட ப்ராக்கை தொடுகையில் அவளைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

மழை காலங்கள் மேகாவை இப்போதும் நினைவூட்டத் தவறுவதில்லை. மழை காலத்தில் ஒரு குடையின் கீழ் பாதி நனைந்தும், நனையாததுமாக ஓட்டமும்,நடையுமாக காபி ஷாப் ஒன்றில் நுழைந்திருக்கிறோம்.

‘ மிலன் ‘ என்ற ஒரு காபி ஷாப்தான் எங்கள் விருப்பத்துக்குரிய இடம். எங்கள் இருக்கையில் அமர்ந்து பார்க்கையில் மஞ்சள் பூக்கள் நீராடி சிலிர்த்துக் கொண்டு நிற்பது கண் கொள்ளாக் காட்சி.

எங்கள் உறவைப் போலவே அந்தக் காபி ஷாப்பும் இப்போது இல்லை. எனக்குத் தெரிந்த அரை குறை இந்தியில் அங்கு வேலை செய்யும் வட இந்தியப் பையன்களை நான் கேலி செய்வேன். ”மேடம்ஜி கியா சாஹியே ”என்பான் மூனீச் என்ற பையன்.. குச் குச் ஹோதா ஹை என்பேன் பதிலுக்கு. அவன் திரு திருவென்று விழிக்க, ஹிந்தி நஹி மாலும், அங்க்ரேஸி போலோ என்று அவனை திணறடித்து கடைசியில் எனக்குப் பிடித்த நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் செய்வேன். என்னுடைய அலப்பறைகளை பொறுமையாக எதிர்கொள்வான் மேகா.

அண்ணா நகர் மெயின் ரோட்டில் நானும் அவனும் சேர்ந்து தொடங்கிய விளம்பர நிறுவனமும் இப்போது இல்லை. மெட்ரோ ரயிலுக்காக இடிக்கப் பட்ட பல கட்டிடங்களுள் அதுவும் ஒன்று. அந்தச் சாலையின் முடிவில்தான் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த வீடு இருந்தது. பூக்களும் மரங்களும் இருந்த அந்த ஆறாவது நிழற்சாலையை சித்திரச் சாலை என்றுதான் நான் சொல்லிக் கொள்வேன் . மழைக் காலத்தில், பூக்கள் தெரு நீரில் வீழ்ந்து வர்ணக் காகிதக் கப்பல்கள் போல் மிதந்தபடி இருக்கும் அந்த சாலையை நான் பல முறை என் கேன்வாசில் வரைந்திருக்கிறேன். அந்த வீட்டில் இப்போது வட இந்தியக் குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எங்கள் நிறுவனத்துக்கு வெகு அருகிலேயே வீடு அமைந்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.அந்தத் தெருவின் ஒவ்வொரு வீடும் எனக்குப் பிடித்திருந்தது. வாழ்க்கை இனிமையாக இருக்கும் போது அகத்திலும், புறத்திலும் அழகு பொங்கிக் கொண்டிருக்கும் என்பது எவ்வளவு உண்மை.ஒவ்வொரு விளம்பரத்துக்கும் நாங்கள் முழுத் திறமையையும் பிரயோகித்தோம்.. கடுகா அல்லது கழுகு மார்க் தீப் பெட்டியா என்றெல்லாம் நாங்கள் கவலைப் பட்டதில்லை.

விளம்பரப் பொருள் பற்றிய அனைத்து செய்திகளையும் தீவிரமாக ஆராய்ந்து , எங்கள் கற்பனைத் திறனைப் பயன் படுத்தி வடிவமைத்து படப்பிடிப்புக்குச் செல்லுவோம் . . இருவரும் ஓடி,ஓடி நிறைய உழைத்தோம், நிறைய சிரித்தோம், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைப்பதென்று பேசி முடிவெடுத்தோம் . தினம் தினம் புத்தம் புதியவர்களாய் மலர்ந்து கொண்டேயிருந்தோம் ,

எல்லாமே அந்த ஷோபனா வரும் வரைதான் .

அவளுடைய வருகை எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றப் போகின்றது என எனக்கு அப்போது தெரியாது..

நம்ம புது ப்ராஜக்ட் சாரதா நைட்டீஸ்க்கு நான் செலக்ட் பண்ணியிருக்கற மாடல், மிஸ் ஷோபனா என அவளை மேகா அறிமுகப் படுத்திய போது பின்னாட்களில் அவளால் ஏற்படப் போகும் விபரீதங்களை அறியாமல் நான் அவளுடன் கை குலுக்கிக் கொண்டேன். எல்லோரையும் நல்லவர்களாகவே நினைத்துப் பழக்கப் பட்ட மனம் எனக்கு.

அவளை நெருங்கும் போது அவள் பூசியிருந்த பெர்ப்யுமின் மல்லிகை வாசனை இப்போது வரை மறக்க முடியாததாகி நாசியில் நிலைத்திருக்கின்றது. அவள் என் கையை விட்டு விடாமல் இறுகப் பற்றிய படி அழகாகப் புன்னகைத்தாள் . முகத்துக்கு முன் சிரிக்கும் சிலர் முதுக்குக்குப் பின்னால் கத்தியையும் ஒளித்து வைத்துக் கொண்டிருப்பார்கள் என்பது அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. .

காலப் போக்கில் மேகாவின் நடத்தையில் சில மாற்றங்களை உணரத் தொடங்கினேன்.

நள்ளிரவு வரை விழித்திருந்து தணிந்த குரலில் ‘யாருடனோ ‘ பேசிக் கொண்டிருப்பான்.

என்னைக் கண்டதும் அவசர அவசரமாக சம்பாஷணையை முடித்துக் கொள்ளுவான்.

சில நாட்களில் இரவு தாமதமாக வீடு வந்து சேர்வான். இரவு உணவை சேர்ந்து சாப்பிடக் காத்துக் கொண்டிருக்கும் என்னிடம் ‘சாப்பிட்டாயிற்று ‘ என்று சொல்லிய படி படுக்கையில் போய் விழுவான்.நான் ஏதும் கேட்டால் எங்கோ பார்த்த படி ‘ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வான்.

ஒருநாள் அவன் சட்டையில் வீசிய பெர்பியூமின் மல்லிகைப் பூ வாசனை எல்லாவற்றையும் ஒரே நொடியில் எனக்குக் காட் டித் தந்து விட்டது. அந்த வாசனை மூலம் எனக்குப் பதில் கிடைத்து விட்டது.

நான் சுற்றி வளைக்க விரும்பவில்லை. நேரடியாகவே ஷோபனாவைப் பற்றிக் கேட்டு விட்டேன்.அவளைப் பற்றிக் கேட்டதும் அவன் முகம் ஒரு கணம் இருளடைந்து விட்டது. மறுகணம் சமாளித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

”அவள் என் தொழில் சம்பந்தப் பட்ட சிநேகிதி. ஒரு மாடல் ..அவ்வளவுதான் ..நீ ஏன் தேவையற்ற முடிச்சுகளைப் போடுகிறாய் ” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கண்கள் நிஜத்தை சொல்லாமல் சொல்லி விட்டன. அங்கே கள்ளத் தனமும், பொய்மையும் ஒளிந்திருந்தன.அவனுடைய உதடுகள் வெளுப்பேறி முகமும் சிவந்து போயிருந்தது..

துரோகத்தின் வலி தாளாமல் ஒரு கட்டத்தில் நான் நிலை குலைந்து கத்த ஆரம்பித்தேன்.உடனே அவனுடைய குரலின் தொனியும் ,தலையும் இப்போது தாழ்ந்து போயிருந்தன.

” யெஸ் .. அவளுக்கும் எனக்கும் எப்படியோ. ஓர் உறவு வந்து விட்டது.. ஓர் ஈர்ப்பு….நெருக்கம்…கண் மூடித்தனமான காதல்…” இப்படி என்னென்னவோ நாக் குழறிய படி சொல்லிக் கொண்டிருந்தான்.

நான் பூச்சாடியை ஆத்திரத்துடன் விட்டெறிந்தேன் .

” ஏன்…ஏன்… நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்.. என்கிட்ட என்ன குறை மேகா ?” எனக் கத்தினேன்.

அவன் என்னை உற்றுப் பார்த்து விட்டு சற்றுத் தயக்கத்துடன் சொன்னான்.

” உன் மேல் எனக்குப் பழைய ஈர்ப்பு கிடையாது. இந்த உறவில் ஏதோ ஒரு சலிப்புத் தட்டியது போல் உணர்கிறேன். பொய்யாக அருகருகே தூங்கி, எழுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…. இதுதான் உண்மை”

அவன் இப்படிச் சொன்னதும் அதிர்ந்து போய் இருந்தேன்.திகைப்பு என் வாயை அடைத்து விட்டிருந்தது..என் கட்டுப்பாடை மீறி கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வீழ்ந்தன.

அவன் என்னை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

” அதற்காக உன்னை நான் வெறுத்து விட்டேன் என்று அர்த்தமில்லை. நாம் நல்ல நண்பர்களாக ஒரே கூரையின் கீழ் இருக்கலாம்” .

நான் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

”பட்டதெல்லாம் போதும் ” என்று முடிவெடுத்து அன்றே அந்த உறவிலிருந்து வெளியேறி வந்துவிட்டேன். அதன் பின் தனியாக வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்த போதுதான் தில்லியில் ராகுலின் சந்திப்பு. அது ஒரு கவித்துவமான திருப்பம் போல் என் வாழ்க்கை மீண்டும் சித்திரச் சாலை ஆக்கியது ராகுலை முதன் முதலில் சந்தித்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. மேகாவுடனான மண முறிவுக்குப் பின் எதிலும் பிடிப்பில்லாமல் ஒரு மனமாற்றம் கருதி தில்லியில் உள்ள என் தோழி வந்தனாவின் வீட்டுக்குப் போனேன். அவள் கணவனின் தம்பி தான் ராகுல். திக்கித் திக்கி நான் பேசும் ஹிந்தியைக் கிண்டல் செய்வதிலிருந்து என்னை பழையபடி சிரிக்க, வாழ்க்கையை ரசிக்கச் செய்தவன் அவன் தான். மெல்லிய பனிப் போர்வையூடாக நாங்கள் நடக்கும் போது புறாக்கள் எதிரே சிறகடித்துப் பறக்கும்.

நானும் மெல்ல மெல்ல அவைகளில் ஒன்றைப் போல் சிறகடிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் ஆரம்பித்தது ராகுலுடனான என் நேசம். இறுகப் பற்றிக் கொள்ள எனக்கு ஒரு கரம் தேவைப் பட்ட கணம் அது.

வந்தனாவும் நானும் ஆலூ மட்டர் செய்து கொண்டிருந்தோம். வந்தனா நாளைக்கு ஊருக்குப் போகப் போறேன்.

அதுக்குள்ளேவா பேசாம டிக்கெட் கான்சல் பண்ணிட்டு இன்னும் ரெண்டு வாரம் இங்க இரேன் என்றாள்.

எவ்வளவு நாள் இருந்தாலும் என் மூட் சரியாகுமான்னு தெரியலை வந்தனா…பரவாயில்லை…ஐ வில் பி ஓகே, நீ வா சென்னைக்கு என்றேன்.

வந்துட்டா போச்சு. அது சரி வந்த அன்னிலேர்ந்து வீட்டிலேயே அடைஞ்சி கிடந்துட்டே வா ஷாப்பிங் இல்லை சினிமான்னு எங்காவதுபோலாம். இதுக்கப்பறம் தில்லிக்கு எப்ப வரப் போறியோ?

இல்லை வந்தனா…எனக்கு எதுவுமே இஷ்டமில்லை….நிச்சயம் அடுத்த தடவை வரேன்…அப்ப ஊர் சுத்தலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் ராகுல் வந்தான்.

அடுப்படியில் ஏதோ வேலை என்று வந்தனா உள்ளே சென்றுவிட, ராகுல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பாபி சொன்னாங்க, ஊருக்கா போறீங்க…

ஆமா போய்த் தானே ஆகணும்?

சரி நான் உங்களை ரயில் வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணறேன் என்றான்.

இல்லை பரவால்லை. நான் பாத்துக்கறேன் என்றேன்.

நீ….ஸாரி நீங்க எங்க கெஸ்ட்… ஊர் போய் சேர்ற வரைக்கும் எங்க பொறுப்பு சரியா என்றான். ம் என்றேன் பிடிப்பில்லாமல்.

மறுநாள் வந்தனாவிடம் சொல்லிக் கொண்டு அவனுடன் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தேன். ரயில் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. ஒரு காபி சாப்பிடலாமா என்றான் ராகுல். பதிலுக்குக் கூட காத்திருக்காமல் ரெயில்வே ரெஸ்டாரன்டுக்குள் சென்றான். எதிர் எதிர் இருககைகளில் அமர்ந்து கொண்டோம். சர்வரிடம் தோ சாயா என்றான். ஒரு சிகரெட்டை கையில் எடுத்து என்னைப் பார்த்தான் நான் பதில் ஏதும் சொல்லாததால் பற்ற வைத்தான். அதற்குள் காபி வர சிகரெட்டை அணைத்துவிட்டு எனக்கான காபியை ஆற்றினான்.

உன்கிட்ட பேசணும்னு தான் வந்தேன் மதி என்றான்.

புரிஞ்சுது ஆனா….

மறுபடியும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே,

ஆனா ஆவன்னா எல்லாம் கிடையாது மதி. உன்னை எனக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னு எனக்கே தெரியலை. உன் முகத்துல இருக்கற அமைதி சாத்வீகம், உன்னோட இந்த பதறாத குணம் நிதானம் எல்லாம் பிடிச்சிருக்கு மதி…நீ நீ சிம்பிள் அன்ட் க்ரேட் என்றான். அவனுடைய சிகரெட்டிலிருந்து வெளிப்பட்ட புகையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

உனக்கு கோவம் வரும்னு தெரியும். வந்தனா பாபிகிட்டே கூட பேசிட்டேன். அவங்க நேரடியா உங்கிட்ட பேச சொல்லிட்டாங்க…அதான் சரின்னு எனக்கும் தோணுச்சு என்றான். இப்போது அவன் விட்ட புகை சிறு வளையங்களாகி என்னை நோக்கி வந்தது. அதன் காட்டமான மணத்தை மனதின் ஆழத்துக்குள் உணர்ந்தேன்.

அவன் என்னை வினோதமாக பார்ப்பது போல் இருந்ததால் புகையிலிருந்து பார்வையை விலக்கி அவன் முகத்தில் நிறுத்தினேன். அவன் கண்கள் மிகவும் அழகாய் இருந்தது. அதில் ஒரு தவிப்பும் தேடலும் இருந்தது. அவன் ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

உன்னை நாம் கம்பெல் பண்ணலை உன்னோட கடந்த கால வாழ்க்கையைப் பத்தி நான் எதுவும் பேசமாட்டேன். ஆனா நிச்சயம் நீ என்னோட இருந்து எனக்கு எல்லா வகையிலும் துணையா இருந்தா நிச்சயம் என்னோட கனவுகள் எல்லாத்திலேயும் நான் ஜெயிப்பேன் மதி.

உங்களை நான் லவ் பண்ணலேயே ராகுல். லவ்ங்கற உணர்வே மரத்துப் போச்சு. ஒரு நாள் ரெண்டுநாள் இல்லை, அஞ்சு வருஷ வாழ்க்கை, அஞ்சே நிமிஷத்துல சில வார்த்தைகள்லே முடிஞ்சிப் போச்சு.எதையும் தொடர விருப்பம் இல்லை ராகுல் ப்ளீஸ் நேரமாகுது கிளம்பலாம் என்றேன்.

சிகரெட்டை கடைசியாய் ஒரு இழு இழுத்துவிட்டு எழுந்தான். உடனே எல்லாம் சொல்ல வேண்டாம்.யோசிச்சு முடிவெடு மதி. நான் வெயிட் பண்றேன்.

என்னை நேசிக்கும்,என் அருகாமையை விரும்பும் ,என் துணையை வாழ்நாள் முழுவதும் வேண்டி நிற்கும் ஒருவனைப் புறக்கணிக்க இயலாமல் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது.. ஆனால் ஏற்கனவே தீக்குள் விரலை வைத்து அனுபவித்த வலியின் துயர் இன்னும் அகன்றிருக்கவில்லை.. அந்தக் கணத்தில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க இயலாதவளாக இருந்தேன்.

யோசிக்கறேன் ராகுல் ஆனா நிச்சயம் எனக்காக உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க என்றேன் ரயிலில் ஏறியபடி. என் பெட்டியை தூக்கி வந்தவன் இருக்கை கண்டு பிடித்து பத்திரமாக என்னை அமர வைத்தான். கையுடன் வாங்கி வந்திருந்த ஃபெமினா, விகடன் பத்திரிகைகளைத் தந்தான். ஆழமாக என்னை மறுபடியும் பார்த்துவிட்டு ”சரி பாத்துப்போய் இறங்கினதும் போன் பண்ணு ” என்றான்.

சரி என்று தலையசைத்தேன். ஜன்னல் அருகே நின்று கையசைத்து விடை தருவான் என்ற என் எண்ணத்தைப் பொயபித்து விட்டு , சட்டென்று இறங்கிச் சென்றுவிட்டான். வெளிர் நீல நிறச் சட்டையணிந்த அவனுடைய முதுகுப்புறம் ஜனத் திரளில் கலந்து மெல்ல பார்வையிலிருந்து மறைந்து போனது.

ரயில் கிளம்பிவிட்டது. பாங் என்ற கூவல் மனதை அதிரச் செய்தது. ஏதோ ஒருவிதமாக உடலும் மனமும் துவண்டு போய் நடுக்கமாக இருந்தது. மௌன ராகம் படத்தில் வருவது போல எதாவது நடக்குமா என்று கிறுக்குத் தனமாக யோசித்தேன்..

ஆனால் சென்னைக்கு வந்தபின் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. வந்தனாவும் அவள் கணவன் அஸ்வினும் ஃப்ளைட் பிடித்து எனக்கு முன்னே வந்திருந்தார்கள். ராகுல் பித்து பிடித்தது போல இருக்கிறான் என்றும் அவன் முடிவுகள் எதுவும் தவறானவை அல்ல என்றும் சொனனார்கள். என் அண்ணனிடம் பேசி சம்மதம் வாங்கியபின், அடுத்த சில வாரங்களில் சிம்பிளாக மாலை மாற்றி சின்னதாக ஒரு ரிசப்ஷனுடன் ஒன்றிணைந்தோம். ராகுலுக்கும் எனக்கும் ஜாதகத்தில் எத்தகைய பொருத்தம் என்று இன்று வரை தெரியாது ஆனால் என்னை முழுவதுமாக புரிந்து கொண்ட ஒருவனாக அவன் இருந்தான். என் பழைய வாழ்க்கையைப் பற்றித் தப்பித் தவறி கூட பேச்செடுக்க மாட்டான். அவனால் நான் மேலும் மெருகேறினேன். நிறைய வரைந்தேன். நிறைய வேலை செய்தேன். குழந்தை ஆசை இருவருக்கும் வர, ட்ரீட்மென்ட் எடுத்து சாஹிதாவைப் பெற்றுக் கொண்டோம். மெல்லிசையைக் கேட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் வாழ்க்கை சீராக போய்க்கொண்டிருந்தது.

ஆனால் யாரை என் வாழ்க்கையிலிருந்து அகற்றி விட்டேன் என்று நினைத்தேனோ , அவன் இன்னும் மனதளவில் முற்றிலும் அகலவில்லை. ஒரு கரையானைப் போல அவன் நினைவுகள் அவ்வப்போது மனதை அரிக்கத்தொடங்கும். அவன் என்ன செய்து கொண்டிருப்பான். இப்படி நான் சந்தோஷமாக இருப்பது தெரிந்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொண்டே இருப்பேன். இன்று போனில் அவனைத் தொடர்பு கொண்டது மனதின் தினவா அல்லது தேவையற்ற தைரியமா என்று தெரியவில்லை. ராகுலுடனான இப்போதைய இந்த வாழ்வின் சௌகர்யமும், சந்தோஷமும் நிம்மதியும் போதுமானவையாக இருந்த போதும் ஏதோ ஒரு நினைப்பு என்னைத் தினந்தோறும் அலைக்கழித்துக் கொண்டே இருந்தது.

அதுதான் அவன் தொலைபேசி எண்ணை மறுபடியும் அழைக்க வைத்தது ;அவன் குரலைக் கேட்க வைத்தது ;பின் அவனிடம் கேட்கத் திராணி இல்லாமல் பின் வாங்க வைத்தது.

கடந்த காலத்தின் சவுக்கடித் தழும்புகள் எவ்வளவு வலி தரக் கூடியவை என்பதை முதல் முறையாக உணர்ந்தேன். இரவு முழுவதும் நான் தூங்கவில்லை..கரையே புலப்படாத நெடு நதியொன்றில் படகில் அலைந்து கொண்டிருந்தேன்.அவசியமற்ற ஒரு திசையை நோக்கிப் பயணிக்கிறேனா ,கல்லறைக்குள் மறுபடியும் நுழையப் பார்க்கிறேனா என்று எனக்கே புரியவில்லை. உறுத்தல்கள் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.உதிர்ந்த பூவொன்றிலிருந்து வாசனையை நுகர எண்ணுகிறேனோ என்பதை நினைக்கையில் எனக்கே என் மீது கோபமாக வந்தது. தூண்டில் இரைக்கு மாட்டிக் கொள்ளும் மீனுக்காக ஆற்றங் கரையில் காத்திருக்கும் மனநிலை எனக்கு எப்படி வாய்த்தது என்று எனக்குத் தெரியவில்லை.

நான் காத்திருந்தது வீண் போகவில்லை.

மேகாவின் மொபைலில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது…’.உனக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்துவிட்டேன். உன்னுடன் பேச முடியுமா? ‘

‘பேசலாம் ‘ என்று நான் பதில் அனுப்பிய மறு நிமிஷமே அவனுடைய அழைப்பு ஒலித்தது.பதட்டமான மனதுடன் போனை எடுத்தேன்.

எடுத்த எடுப்பிலேயே ”மதி , என்னை மன்னித்துவிடு ” என்று தொடங்கினான்..நான் பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

” வளர்மதி , உன் மனசுல இருக்கற வேதனை எனக்குப் புரியுது. அந்த சூழ் நிலையில் ஷோபனாவை நிச்சயமா என்னால மறந்திருக்க முடியாது அது ஒரு நொடி சபலம் இல்லை மதி அது உயிர் வரைக்கும் போய் என்னை தவிக்க வைச்ச உணர்வு. என் கண்ணுக்கு அவளைத் தவிர வேறெவரும்,வேறெதுவும் அப்போ தெரியவே இல்லை. . எனக்கு ஏன் அவ மேலே அத்தனை அன்பு அதுவும் கண்ணுக்கு கண்ணா இருக்கற உன்னை விட்டுட்டு போற அளவுக்குன்னு கேட்டா இந்தக் கேள்விக்கு எனக்கே பதில் தெரியாது. ஆனா கடைசி வரைக்கும் அவளைப் பாத்துக்கிட்டு உன்கிட்ட திரும்ப வரணும்தான் நினைச்சேன். ஆனா லேட்…உன்னைப் பத்தின எல்லா விபரமும் என்கிட்ட இருக்கு. ஆனா நீதான் என்னை ஒரேயடியாக மறந்து போனாய்.உன்னை தொந்திரவு படுத்தக் கூடாதுன்னுதான் நான் கான்டாக்ட் பண்ணணும்னு முயற்சிக்கல்ல… மத்தபடி நான் உன்னை எப்பவும் மறக்க மாட்டேன் ”என்றான்.

நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

” ம் ..ம் .. என்ன செய்யலாம்…? அதுக்குப் பேர்தான் விதி …. அது சரி உன்னோட ஷோபனாவோட சந்தோஷமாக இருக்கிறாயா ? ” என்று உணர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாத குரலில் கேட்டேன்.

எதிர் முனையில் சிறிது நேரம் மௌனம் நீடித்தது. பின் ஒரு விம்மல்.

மேகா அழத் தொடங்கினான்.

” மதி… உன்னிடம் சொல்லுவதற்கென்ன …. அந்தத் துரோகி இப்போது என்னுடன் இல்லை….நீல்சன் என்ற பாடகனோடு ஓடிப் போய் விட்டாள் ..”

நான் மீண்டும் உணர்ச்சியற்ற குரலில் கேட்டேன்.

”என்ன… ஓடிப் போய் விட்டாளா ?…ஏன்..ஏன்..?”

”மதி , எனக்கு சத்தியமாகத் தெரியாது. அவளை நான் எப்படிப் பார்த்தேன், எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்…”

அவன் அழுது கொண்டிருந்தான்.

” மேகா , அழாதே ! மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது…. ஒன்றே ஒன்று நான் கேட்கட்டுமா?உன்னை விட்டுப் போகும் போது அவள் ஏதாவது சொல்லி விட்டுச் சென்றாளா ?”

”ஒன்று கூடச் சொல்லவில்லை மதி, ஏன் அப்பிடிக் கேட்கிறாய் ?”

” இல்லை…. ” உன் மேல் எனக்குப் பழைய ஈர்ப்பு கிடையாது. இந்த உறவில் ஏதோ ஒரு சலிப்புத் தட்டியது போல் உணர்கிறேன். பொய்யாக அருகருகே தூங்கி, எழுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…. இதுதான் உண்மை என்று ஏதாவது சொல்லி இருப்பாளோ ” என்று எண்ணினேன்.”

எதிர்முனையில் அழுகை நின்று போய் இருந்தது .

நான் இத்தனை வருடங்களாக மனதில் அடை காத்து வைத்திருந்த அந்தக் கேள்வியை உரிய இடத்தில் இறக்கி வைத்து விட்டேன்.

எதிர்முனை தொலைபேசித் தொடர்பை மறுகணமே துண்டித்துக் கொண்டது.

ஷோபனா மேகாவை விட்டு ஓடிப் போன செய்தியை சென்ற வாரமே நான் அறிந்து வைத்திருந்தேன்.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *