கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 2,656 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூரின் ஒரு முடுக்கு சாலையிலிருந்த அந்த அலுவலகமே எபரபரப்போடு காத்திருந்தது. ஏனென்றால் விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை, அன்று வரவேற்புத்துறைக்கு புதிதாக இளம்பெண் ஒருத்தி வேலைக்கு வர இருந்தாள். அந்த அலுவலகத்தில் இரண்டு பெண்களே இருந்தார்கள். அவர்களும் பெதும்பை, பேதை பருவமெல்லாம் கடந்த முதிர்கன்னிகள்.

பார்த்துப்பார்த்து சலித்துப்போன இந்த ஜடவாழ்க்கையில், திடீரென்று ஒரு இளம்பெண் எட்மின் செக்ஷனுக்கு வருகிறாள் என்றதும், அவனவனுக்கும் தலைகால் தெரியவில்லை . துப்புரவுத்தொழிலாளி ரஹீமிலிருந்து, உயர்மட்ட அதிகாரிவரை எல்லோருக்குமே ஒருவித பரபரப்புத் தொற்றிக் கொண்டிருப்பதை, அலுவலகத்தின் ஒவ்வொரு செங்கல்லும், சுவரும், கூட அவதானித்துக்கொண்டுதானிருந்தது. அந்த எரிச்சல் தாளாமல்தான் “போங்கடா, நீங்களும் உங்க , —–” என்பதுபோல் நட்ட நடு ஹாலிலிருந்த பிரதான குளிரூட்டி அன்று பார்த்து சட்டென்று கெட்டுப்போனது. ஆளாளுக்கு பரக்கம் பாய்ச்சல் தூள் பறந்தது.

டெக்னிஷியன் சிவப்பிரகாஷுக்கு வந்த கடுப்பம் இம்மட்டு அம்மட்டு அல்ல. கொஞ்சநேரம் வெளியில் டெலிவரிக்குப்போய் வருவதற்குள் அப்படி என்ன இவன்களுக்கு உயிர்நாடியில் அடிபட்டாற்போல் அப்படி ஒரு வாதை ? “சிவா சீக்கிரண்டா?” என்று, கெஞ்சாத குறையாக, கோபக்குரலாய், கடுகடுப்பாய், வந்த எந்தக் குரலையும் சிவப்பிரகாஷ் பொருட்படுத்தவில்லை. திருகவேண்டியதைத் திருகி, முடுக்க வேண்டியதை முடுக்கி, பொருத்த வேண்டியதைப் பொருத்தி, செய்து முடிக்கவேண்டிய நேரத்தில் தான் செய்து முடித்தான். இந்த வேலை என்றில்லை, அலுவலகத்தில் எந்த வேலைக்கும் சிவா தோள் கொடுப்பான். சமயத்தில் ஏற்றி இறக்குவதிலிருந்து, எல்லோருமே போனபிறகு அலுவலகத்தைப் பூட்டி பொறுப்பாய், வாட்ச்மேனை அதட்டி, தூங்காமலிருக்க உபதேசரத்தினமாலையும் வழங்கிய பிறகே வீடு திரும்புவான். முதலாளி ரத்தினத்துக்கு இவன் மேல் அவ்வளவு நம்பிக்கை.

இத்தனைக்கும் இவன் ஒன்றும் ஜெகத்ஜால சூரனல்ல. ஆனால் மனிதாபிமானமும் அயராஉழைப்புக்கும் அஞ்சாதவன். அதனாலேயே இன்றும் இங்குகுப்பை கொட்டிக்கொண்டிருக்கிறான். ஏனென்றால் இதுவும் பெரிய அலுவலகமோ, அல்லது லட்சம் கொழிக்கும் பெரிய தொழில் நிறுவனமோ அல்ல. ஆக இருப்பதே ஐம்பதோ அறுபதோ பேர்தான். மிகச்சிறிய அலுவலகம். மிகக் குறைந்த ஊழியர்கள். அவ்வப்போது ஊழியர்கள் மாறுவார்கள். புதியவர்கள் வருவார்கள் அல்லது அவர்களும் போவார்கள். ஆனால் சிவாமட்டும் இவ்விடம் விட்டு எங்குமே போகமாட்டான்.

அலுவலகம் தொடங்கிய நாள் முதலாய் சிவா இங்கிருக்கிறான். ஓ’ லெவலும் ஒழுங்காகப் பாஸாகாமல், கைத்தொழில் கல்வியைப் பிரைவேட்டாகப் படிக்கப்போய், அங்கும் முழுசாக ஒப்பேறாமல், எப்படியோ அப்பாவின் நண்பரின் துளி கருணையால், இந்த கம்பெனியில் நுழைந்தவன், வந்த நாள் முதலாய் வஞ்சகமின்றி உழைக்கிறான். ஆச்சு போச்சு, அம்மாக்காச்சு! எனும் தத்துவத்துக்கேற்ப, ஓவர்டைம், அது, இது என்று, எல்லாமாக ஒரு நல்ல தொகை கிடைப்பதால் வீட்டிலும் பெரிதாக பிரச்சினை ஒன்றும் இல்லை .

ஆனால் சிவாவுக்குத்தான் கொஞ்சநாளாகவே யாரைக் கண்டாலுமே எரிச்சல் எரிச்சலாய் வருகிறது. அதிலும் இந்தப் பெண்களைக் கண்டாலே, கார மிளகாயை எடுத்து உடம்பெல்லாம் அரக்கித் தேய்த்தாற்போல், பற்றி எரிகிறது. பின் என்னங்க? ஆரம்பத்தில் அவனும் தன் வயதுக்கே உரிய ஆர்வத்தோடு இளம்பெண்களைக் கண்டாலே வியந்து ரசித்துப் பார்த்தவன்தான். ஆசையோடு பழகவும் கூட முயன்றிருக்கிறான்.

ஆனால் எல்லாமே கொஞ்ச நாட்களுக்குத்தான். ஏனோ அந்த மங்காத்தாக்களுக்கு, சில நாட்களுக்கு மேல் அல்லது சில வாரங்களுக்குமேல் இவனோடு நட்பைத் தொடரப் பிடிக்கவில்லை. 32 வயசாகிறது. ஆள் பார்ப்பதற்கும் சுமாராக இருப்பான். மது, புகை, இரவுகேளிக்கை, என்று எந்த டகால்ட்டி பழக்கமுமில்லை. அட, பெண்களைக் கவர்வதற்காக குன்ஸாவாக எதையும் வளைத்துக்கட்டி பேசுவானா, என்றால் அதுவும் தெரியாது. மொத்தத்தில் ஆள் அப்பாவி. பரம் சுத்தன்.

“இதுதான், இதுவேதான், எம் புள்ளையைக் கண்டாலே, இப்ப உள்ள பொண்ணுங்களுக்கு புடிக்கலையாம். நல்லவுங்களுக்குத்தான் இது காலமில்லையே?” அம்மாக்காரி அம்மாக்கண்ணு கணவரிடம் அடிக்கடி இப்படிப் புலம்பியதில் தப்பில்லை. ஆனால் செய்தி காற்றுவாக்கில் பரவி ஒருநாள் அவன் உறவுவழி நண்பன் ஒருவன் கேட்கிறான்.

“பேசாம ஏதாவது ஒரு நல்ல டாக்டராப்பாத்து உடம்பை ஒரு ஃபுல் செக்கப் பண்ணிப் பாக்கவேண்டியது தானே?” அகம் அடியுண்ட வலியில் அப்படியே வெகுண்டு போனான் சிவா. ஒண்ணு இல்ல, மூணு பொண்ணுங்களை ஒரே நேரத்தில கல்யாணம் செய்தாலும் நான் தாக்குப்பிடிப்பேன்.

“உன்னைப்போல் 30 வயசுக்குள்ளேயே, இனிப்புநீரு , ரத்தக்கொதிப்புன்னு, வியாதி புடிங்கித் திங்கலை எனக்கு ,” என்று சுடச்சுட பதிலடி கொடுத்த அன்றுதான் சூறாவளியாய் ஒரு சபதமெடுத்தான். எத்தனை வயசானாலும் சரி. என்னைப்பார்த்து, எனக்கே எனக்குன்னு என்னை விரும்பி வற பொண்ணைத்தான் இனிமே கல்யாண்ம் செய்வேன்.

அன்றிலிருந்து அலுவலகத்தில் பூகம்பமே வெடித்தாலும் அவன் அலட்டிக்கொள்வதில்லை. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் எனக்கென்ன?

எந்தக்கழுதை எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன? எல்லாம் அந்தப் புதிய பெண் அலுவலகத்தில் கால் வைக்கும் வரைதான்.

அன்று அலுவலகமே ஒரு வினாடி அந்த ஒளிப்பிழம்பில் திணறிப்போனது. வைத்த கண் வாங்காமல், அத்தனைபேருமே அந்தப் பெண்ணை திகைத்துப்போய்ப் பார்த்தார்கள்.

சிவா தன் வாழ்நாளிலேயே இவ்வளவு அழகான ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை. பேசும்போதே படபடவென்று சிமிட்டும் அந்தக் கண் சிறகுகள், நடக்கும் போது குலுங்கும் அந்த நளினம், சிரிக்கும்போதே மிதந்து வந்து தாக்கும் அந்த கிண்கிணிநாதம், என்று வரதன் கதை வசனமே எழுதத் தயாராக இருந்தான். பெயர்கூட மாளவிகா, –அட, வாளைமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணமா?, –சூசைப்பயல் இடுப்பை வளைத்து ஆடாத குறைதான்.

இதையெல்லாம் விட அந்த முன்னெழிலும், பின்னெழிலும் காட்டிய சொகுசில் தான், சிவா கிறங்கிப்போனான். ஆளாளுக்குக் கிறுக்குப் பிடிக்காத குறைதான்.

மறுநாளிலிருந்து ஹோட்டலில் விருந்துக்கு வருவதுபோல் அப்படி பளிச்சென்று வந்தார்கள். தேவையற்ற ஜோக்கும், சல்லோபில்லோ பேச்சுக்களுக்கே இடமில்லாமல், கர்மசிரத்தையாய் வேலை பார்த்தார்கள். மாளவிகாவும் வஞ்சனையில்லாமல் அவர்கள் உஷ்ணப்பெருமூச்சை அதிகரிக்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேஷத்தில் வந்து அவர்களை அசத்தினாள். ஒருநாள் குஜராத்தி ஸ்டைலில், ஒருநாள் கேரள முண்டும் நேரியலும், மற்றொரு நாள் புடவை, ஜிமிக்கை, காஞ்சிப்பட்டு, அதற்கு அடுத்த நாளே ‘அல்ட்ராமோடன்” ஸ்டைலில், முதுகுபிளந்த ஸ்லீவ்லெஸ்டாப்பும், ஒட்டிப்பிடித்த முக்காப்பேண்டுமாய், —- என விதம் விதமாய், அணிந்து வந்து அனைவரையும் தண்ணீர் குடிக்க வைத்தாள்.

ஆனால் ஏனோ சிவாவுக்கு மட்டும் மற்றவர்களைப்போல், மாளவிகாவிடம் பேசவோ, அசடு வழியவோ கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை. ஏற்கனவே சராசரிப்பெண்களிடம் பழகிய லட்சணமே தெரியாதாக்கும், என மனக்குறளி இடித்துக்காட்டிய அவலம் வேறு.

இந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. விழுந்து விழுந்து மாளவிகாவின் கவனத்தை ஈர்க்க, போட்டிபோட்ட அத்தனை பயல்களும் மின்சாரம் தாக்கினாற் போல், அப்படியே மாறிப்போனார்கள். மறந்தும் மாளவிகாவின் பக்கம் கூட அவர்கள் திரும்புவதில்லை. திடீரென்று இவர்களுக்கு என்னாயிற்று?

வழக்கமான அவர்கள் அரட்டையிலும், வேலையிலுமாக சராசரியாகிப்போகுமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது? தலைக்கு ஜெல் போட்டு, முடியை ஜிவ்வென்று நிறுத்தி வைத்தவனாகட்டும். மடிப்புக் கலையாத உடையணிந்து பளிச் காட்டியவர்களாகட்டும். எவனுமே மாளவிகாவைத் திரும்பியும் பார்ப்பதில்லை.

“மாலு,” என்று உருகிப்போனான் சிவா. (மாலு! ஆம், இப்படித்தான் சிவா தினமும் அவளை மனசுக்குள் அழைப்பது வழக்கம்.) இப்பொழுதுதான் சிவாவுக்கு மாலுவின் மீது பேரன்பு ஏற்பட்டது. இவன்களுக்கு வேண்டும். பாவம், ஒரு பெண் எவ்வளவுதான் தாங்குவாள்?

ஈஎன்று வழிவதற்கும், ஜொள்ளு விடுவதற்கும் ஒரு எல்லையே இல்லையா? எப்பேர்ப்பட்ட கற்புக்கரசியாக இருந்திருந்தால் இவன்களையெல்லாம் விரட்டி அடித்திருப்பாள்? “மாலு” வைப் பார்த்துப் பார்த்து மருகினான் சிவா.

அன்று ஓவர்டைம் செய்வதற்காக அலுவலகத்திலேயே தங்கிவிட்ட சிவாவுக்கு கடுமையாகத் தலை வலித்தது. ஏழு மணியாவதற்குள் உடம்பில் அனல் அடித்தது. உடம்பெலாம் முறுக்கி விட்டாற்போல் வலியில், அப்படியே உடம்பைச் சாய்த்து விட்டான்.

“பிரகாஷ்” என்று ——–அழைப்பொலி! கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தால். எதிரே நின்றது யார்? சிவாவால் தன் கண்களையே நம்பமுடியவில்லை மாளவிகாவா? அதைவிட இதுவரை சிவப்பிரகாஷை யாருமே பிரகாஷ் என்றழைத்ததில்லை.

இவள் இன்னும் போகவில்லையா? அலுவலகத்தில் ஒரு சுடுகுஞ்சு இல்லை. பதறிப்போய் எழ நினைத்தாலும் சிவாவால் அசையக்கூட முடியவில்லை . “முதலில் இந்த மாத்திரையை போட்டுக்கங்க, பிரகாஷ்,” என்று, ஆதுரத்துடன் அவன் தலையைத் தூக்கி, மடியில் வைத்துக்கொண்டு, அன்பு கனியக்கனிய மருந்தும் நீரும் புகட்டினாள்.

நெற்றிப்பொட்டை இதம் பதமாய்ப் பிடித்துவிட்டாள். கை கால்களையெல்லாம் பரிவுடன் நீவி, நீவி, சொடக்கு எடுத்தாள். ஹா, வென்று பிரமிப்பில் லயித்துக்கிடந்த சிவா ஆகாயத்தில் மிதக்காத குறைதான். அப்படி சொக்கிப்போய் கிடந்தான். காய்ச்சல் போன இடம் தெரியவில்லை, உடம்பு வலி போய் வேறு தினவுக்கு மனசு ஏங்க, நல்லவேளை, அதற்குள் சுதாரித்துக்கொண்ட சிவா, மாளவிகாவின் கைகளைப்பிடித்து, தைரியமாக முச்சென்று ஒரு முத்தம் கொடுத்தான்.” போங்க பிரகாஷ், என்றவாறே நாணிக்கண் புதைக்காத குறையாய், மாலு அவ்விடம் விட்டகன்றாள்.

இப்பொழுதெல்லாம் சிவா தினசரி ஓவர்டைம் செய்தான், தீப்பிடித்தாற்போல் செய்தி அலுவலகம் முழுக்கப் பரவிக் கொண்டுதானிருந்தது. இது போதாதா? மாட்டுக்கு கொம்பு சீவி விட்டாற்போல், இருவரும் சேர்ந்தே பகல் உணவுக்கு அருகிலிருந்த ஹாக்கர் செண்டருக்கு போனார்கள். அலுவலகத்தில் இந்த ஜோடிப்பொருத்தம் சேர்ந்து வெளியாகும்போது, அவனவனும் கண்சிமிட்டி சிரிப்பதைப் பார்த்து சிவா அலட்டிக்கொள்ளவில்லை, “பொறாமை பிடித்தவன்கள், நல்லா வெந்து சாகட்டும்.” என்று ஆகி முதிர்ந்த திமிரோடேயே மாலுவோடு சேர்ந்து சுற்றினான்.

அன்று மாலை ஏனோ அப்படி ஒரு பேய்மழை பொழிந்து தள்ளியது. அரைமணிநேரத்துக்குப் பிறகு, இடியும் மின்னலும் சற்று ஓய, அவனவனும் பஸ் பிடிக்க ஓட, மாளவிகாவும் சிவாவும் தனித்திருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தப் பொன்னான நேரத்தில் மாளவிகா சிவாவின் கழுத்துப்பட்டையை மஸாஜ் செய்யத் தொடங்கியதுதான் தாமதம். அதற்குமேலும் தாளமாட்டாது, சிவா கேட்டான்.

“இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் மாலு இப்படி பாத்துப்பாத்து ஏங்கறது? சீக்கிரமே நாம கல்யாணம் செய்துக்கிட்டா என்ன?”

“பிரகாஷ், நிஜம்மாவா சொல்றீங்க? நாளைக்கேன்னாலும் நான் ரெடி”, என்று சொல்லி முடிக்கவில்லை. சிவா தனை மறந்தான். “மாலு, மாலுக்குட்டி,” என காட்டுப்பாய்ச்சலாய் அவளை வீழ்த்தத் தொடங்கியவன் வீழ்த்தினான், வீழ்த்தினான். ஆனால் சிவாதான் வீழ்ந்து கிடந்தான்.

ஆனால் சில நிமிடங்களிலேயே விதிர்விதிர்த்துப்போய், எழுந்துகொண்டவனின் உடலெல்லாம் அதிர்ந்து கொண்டிருந்தது.

“ஏன் பிரகாஷ்,” என்று மாளவிகா, ஏக்கத்தோடு கையைப்பிடித்திழுக்க, சிவாவுக்கு குமுறிக்கொண்டு வந்தது. நினைக்க நினக்க அவனுக்கு ஆறவே இல்லை.

இது, ஏன், இப்படி? என்று சிவா, நாக்குழறலோடு கேட்கப்போக, அடுத்த கணம் அது நிகழ்ந்தது. அப்படியே சிவாவின் கைகளைப்பற்றிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

“நான் திருநங்கை பிரகாஷ்,”

“அப்படீன்னா?” சிவாவுக்கு சத்தியமாய் புரியவே இல்லை.

கண்ணீரும் கரைசலுமாய் மாளவிகா தன்னுடைய சுய சரிதம் சொல்லத்தொடங்க, பொறி தட்டினாற் போல் சிவா கேட்டான்.

அது, அப்படீன்னா, நீ, நீ, 10க்கு முன்னாடி வரும் இலக்கமா?

சிலிர்த்தெழுந்து சீறினாள் மாளவிகா. “முதலில் நாகரீகமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் பிரகாஷ்?”

கடுப்பம் கொஞ்சமும் மாறாமல் சிவாவும் சீறினான். “முதல்லே என் கேள்விக்கு நீ பதில் சொல்லு!”

சற்றும் தயங்காமல் மாலு ஒப்புக்கொண்டாள்.

“ஆமாம், பிரகாஷ், உண்மைதான். ஆனா, உங்களுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத்தர முடியாதே தவிர, வேறு எந்தக்குறையும் வைக்க மாட்டேன். வாழ்நாள் பூரா உங்க அடிமையாவே உங்களுக்காகவே, உங்க சுகத்துக்காக மட்டுமே நான் வாழ்வேன், என்னை நம்புங்க பிரகாஷ்!’

இதுதான் சிவா கேட்கக் காத்திருந்த திருமந்திரம். இவனுக்காகவே உருகி உருகி காலடியில் கிடக்கும் பெண்ணை மணப்பதுதான் சிவாவின் சபதமும் கூட. ஆனால் இந்த கணம் ஏனோ சிவாவுக்கு அந்த பேச்சையே ரசிக்க முடியவில்லை.

திடீரென்று அடிவயிற்றிலிருந்து ஓங்கரித்துக்கொண்டு வர குமட்டிக்குமட்டி பித்த வாந்தியாய் எடுத்தான். ஆதுரத்தோடு அவன் மார்பைத் தடவி விட மாளவிகா வர, தலை தெறிக்க வெளியே ஓடினான்? அலுவலக நண்பர்கள் எல்லோருமே தன் முதுகுக்கு பின்னால் சிரித்தது ஏன், என்பதே அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது

பிறகு சிவாவை யாருமே அந்த அலுவலகத்தில் பார்க்கவில்லை. ஒரு திருநங்கையை மணக்கும் அளவுக்கு அவனுக்கு பக்குவம் வரவில்லை என்று யாராவது நினைத்தால், அட, போங்க சார், சிங்கப்பூரில் இந்த திருமணம் சட்டப்படி குற்றம் என்பதுகூடவா உங்களுக்குத் தெரியாது?.

– சூரிய கிரஹணத்தெரு, முதற் பதிப்பு: 2012, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *