(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வேதாரண்யம் கடற்கரைக்குப் போகும் உப்புச் சத்தியாக்கிரகிகள் எங்கள் ஊருக்குள் அடுத்த நான்காம் நாள் நுழையப் போகிறார்கள். எங்கள் ஜில்லாவுக்குள் நுழையும் முன்பே, “தொண்டர்களுக்குத் தங்க இடமும், நிற்க நிழலும், குடிக்க நீரும் கொடுத்து உதவுபவர்கள் குற்றவாளிகளாவார்கள்” என்று கலெக்டர் ஒரு சுற்றறிக் கையை அனுப்பிவிட்டார். அவ்வவ்விடத்தில் குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தாசில்தார் ஈசுவர ராவுக்கு அந்தச் சுற்றறிக்கை கொஞ்சம் சங்கடம் செய்தது. அதற்குக் காரணம் ஜகதீசராவ் என்ற தம்பியும், ஜஸ்வந்தராவ் என்ற பதினைந்து வயதுள்ள தம் பிள்ளையும். பிள்ளைக்குச் சிற்றப்பாவின் மீது அபாரப் பிரேமை. அவன் சுதந்தரம், விடுதலை என்று கெடுபிடியாக யாருடனும் தேசீய விஷய மாக வாதாடுவது அவருக்குப் பரம ஆச்சரியமாக இருந்தது. எனவே கதர்க் குல்லாயும், காந்தி சவுக்கமும், வேஷ்டியும் அணியாமல் ஜஸ்வந்தராவைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.
இந்தப் பிரேமையின் பலனாக ஜஸ்வந்துக்கு, “குட்டி காந்தி” என்ற பெயர் வந்துவிட்டது. “குட்டிகாந்தி”க்கு ஒரு தொண்டர் படை உண்டு. தொண்டர்களுக்கும் தலைவருக்கும் வேலை வேண்டாமா? ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் தாசில்தார் வீட்டுத் தோட்டத் தில் பையன்கள் எல்லோரும் கூடுவார்கள். தொண்டர் படை இரு வகுப்பாகப் பிரியும். ஒரு வரிசையின் முதலில் குட்டி காந்தி நிற்பான். எதிர்ப்புறத்து வரிசையில் போலீஸ் காரன்போல் சட்டை அணிந்தவர்களும், வெள்ளைக் காரரைப்போல் அட்டையால் ஹாட் செய்து போட்டுக் கொண்டவர்களும், மூங்கில் கழியைத் துப்பாக்கிபோல் தோளில் சாத்திக்கொண்டு சிப்பாய்களாக விளங்குபவர் களும், காதில் பேனாவைச் செருகிக்கொண்டு நிற்கும் குமாஸ்தாக்களும், பட்லர்கள்போல் வேஷம் தரித்தவர் களும் நிற்பார்கள். குட்டி காந்தி, “மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கத்தினவுடன் இரு வரிசையும் சண்டை போடுவதுபோல் கலக்கும். கடைசியில் குட்டி காந்தியின் கட்சி எப்படியோ ஜயித்துவிடும். இந்த விநோதமான சுதந்தரப் போரைக் கண்டு களிப்பவர் ஒருவர் உண்டு- ஜஸ்வந்தின் சிற்றப்பா ! இவ்வளவுக்கும் தாம் மூலகாரணம் என்ற பெருமை!…
உப்புச் சத்தியாக்கிரகிகள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முதல் நாள் சிற்றப்பாவினிடம் குட்டிகாந்தி ஓடிவந்தான்.
“ஏன் சித்தப்பா, உனக்குத் தைரியம் உண்டா இல்லையா?”
சிற்றப்பாவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும், “ஏண்டா?” என்றார்.
“நீதான் சி. ராஜகோபாலாச்சாரியார் எல்லாம் வரார் இன்னியே. அதுக்காக இன்னிக்கு மொதல் தோட்டத்திலே சத்தியாக்கிரகச் சண்டை இல்லை.”
“சரி,வேண்டாம்.”
“கவர்மென்டிலே அவாளுக்கெல்லாம் ஜலம், சாதம் ஒண்ணும் கொடுக்கப்படாதுன்னு சொல்லிவிட்டாளாமே.”
“ஆமாம்.”
“நம்ப ஊரிலே யாரு குடுத்தாலும் சரி, குடுக்காட்டா லும் சரி. நம்ப சத்தரத்திலே சொல்லி அவாளுக்குச் சாதம், ஜலம் எல்லாம் சப்ளை செய்யணும்.”
இதைக் கேட்டதும் காலண்டை வெடிகுண்டு வெடித்ததைப் போன்ற பயம் சிற்றப்பாவுக்கு உண்டா யிற்று. ஆனால் சிறு வாண்டுக்கு முன் அதைக் காட்டலாமா?
“போடலாம். அங்கே தள வரிசை யெல்லாம் பெயர்ந்து கிடக்கேடா? எடமில்லையே. அதற்காக யோசிக் கிறேன்.’
“சத்தரத்துத் தோட்டத்திலே போட்டாப் போச்சு. ஷோக்கா இருக்குமே.”
இந்த இடத்தைக் குறிப்பிட்டவுடன் எலிப்பொறி யில் அகப்பட்டுக்கொண்டதுபோல விழித்தார் சிற்றப்பா. “அப்பா கவர்மென்டு உத்தியோகஸ்தர். அவருக்குப் பிளாக் மார்க் விழுமே; யோசிக்க வேண்டாமா?”
“அதுக்குத்தான் மொதல்லியே கேட்டேன்-உனக் குத் தைரியம் உண்டா இல்லையா என்று. கோடியாத்துச் சங்கரன் சித்தப்பாகூட ஒரு தொண்டராம். அவர் ஒன்னைவிடச் சின்னவர். நீ என்னவோ சாதம் போடப் பயப்படறே’ என்று சொல்லிவிட்டுக் குட்டி காந்தி மோவாய்க்கட்டையை முன்புறம் தள்ளினான். அவனுடைய சிஷ்யன்கள், “மகாத்மா காந்திக்கு ஜே’ போட்டார்கள். “பாருடோய்-ஜஸ்வந்த் சித்தப்பாவை” என்று ஒருவரை ஒருவர் முழங்கையால் இடித்தார்கள். கண்களை ஹாஸ்யமாகச் சிமிட்டினார்கள்.
“பாருடோய்” என்று பையன்கள் சொல்லியது சிற்றப்பாவின் காதைவிட்டு அகலவில்லை. எது வந்தாலும் சரி; சத்திரத்தில் ஏற்பாடு செய்துவிடுகிறது என்று தீர்மானம் செய்துகொண்டார் சிற்றப்பா.
2
தொண்டர்கள் வந்துவிட்டுப் போன மூன்றாவது நாள்.
“ஏனப்பா ஜகதீசா! இந்தச் சங்கடத்தில் கொணாந்து விட்டூட்டியே?” என்றார் தாசில்தார்.
“நீ நம்ப சத்திரத்திலே அந்த உப்புச் சண்டைக் காரர்களுக்குச் சாப்பாடு செய்து வைத்தாயாமே?”
“என்ன குத்தம்? காக்காய்க்கும் சோம்பேறி களுக்கும் தேசாந்தரிகளுக்கும் போடலாம்; இவாளுக்குப் போடப்படாதா?”
“இப்படி அசட்டுப் பொஸ்தகமும் தத்துவமும் படிச்சு என் வேலைக்கு ஆபத்துக் கொணாந்தூட்டே.”
“பெசகுதான், அண்ணா, இதை அமிக்கிப்பிடேன். போலீஸிலே சொல்லி”
“அது முடியாதப்பா… போலீஸ் உன் புத்தக அல மாரியைச் சோதிச்சுப் புஸ்தகங்கூட எடுத்துக்கிண்டு போயிட்டா.” புஸ்தகங்களைப் போலீஸார் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் சிற்றப்பாவின் நாடி தளர்ந்து போய்விட்டது.
“வாஸ்தவமா எனக்கு இதிலெல்லாம் சம்பந்தமில்லை ; ஜஸ்வந்தைக் கேக்கணும்.”
“உன் சிஷ்யன் தானே அவன்?”
“இப்பொ இல்லை. இப்பொ அவன்தான் குரு. இந்தத் தெரு அத்தனை பசங்களும் சிஷ்யன்கள்.”
“அதிகப் பிரசங்கிகள்!” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு, தின்னும் உப்புக்குத் துரோகம் செய்வ தில்லையென்று முடிவு செய்துகொண்டார் தாசில்தார்.
3
ஈரங்கி தினம். சப் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எள் ளுப் போட்டால் எள்ளு விழாது. லொட லொட என்ற வாய்வீரமும், கெக்கெக்கே என்ற பொழுது போக்குச் சிரிப்பும்.
தாசில்தாரின் உள்ளம் தூண்டிற் புழுவைப் போல் துடித்துக்கொண் டிருந்தது. சாட்சி சொல்லிவிட்டு ஓடிப் போய்விட்டால் போதும் என்று ஆகிவிட்டது. கவர் மென்ட் தரப்பில் தாசில்தார்! குற்றவாளிக் கூண்டில் அவர் தம்பியும் குட்டி காந்தியும்!
வாதி தரப்புச் சாட்சியம் முடிந்துவிட்டது – தாசில் தார் வாக்கு மூலம் உள்ளது உள்ளபடியே இருந்தது. மாஜிஸ்திரேட் மூக்குக் கண்ணாடியை நெற்றிக்கு ஏற்றினார்.
“வாதி சாட்சியம் கேட்டீர்களே-என்ன சொல்லு கிறீர்கள்?” என்றார்.
ஜகதீச ராவ்: “ஏதோ தெரியாமல் செய்துவிட் டேன். மன்னிப்புக் கோருகிறேன்.”
மாஜிஸ்திரேட் குட்டி காந்தியைப் பார்த்து “நீ என்ன சொல்லுகிறாய்?” என்றார்.
ஜஸ்வந்த் ராவ்: “இந்தக் கச்சேரியின் அதிகாரத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை. சத்திரம் கட்டிவைத்தால், தண்ணீர்ப் பந்தல் வைத்தால் புண்ணியம் என்கிறார்கள். நேற்றைத் தினம் உங்கள் வீட்டார் கோவிலில் அன்னப் பாவாடை போட்டார்களாம். நான் செய்ததில் என்ன குற்றம் ?”
மாஜிஸ்திரேட்டின் கண்கள் சிவந்தன. ஆதி முதற் கொண்டு மாஜிஸ்திரேட்டுக்குத் தர்மசங்கடமா யிருந்தது. மன்னிப்பைக் கேட்டதும் அது மாறிப்போய் விட்டது. ஆனால் அடுத்தாற்போல் குட்டிகாந்தியின் பேச்சு அவரை வேர்க்கச் செய்தது. “சரி, சாட்சி உண்டா?” என்று சீறினார்.
“கடவுள் சாட்சி. வேறு இல்லை” என்றான் குட்டி காந்தி.
மாஜிஸ்திரேட் தீர்ப்புக் கூறி முதல் குற்றவாளிக்குப் 10 ரூபா அபராதம் விதித்தார். அது கொடுபட்டது.
ஜஸ்வந்துக்கு 100 ரூபாய் அபராதம் அல்லது மூன்று பிரம்படி. யாரோ கூட்டத்திலிருந்து கோர்ட் குமாஸ்தா விடம் 100 ரூபாயை நீட்டினார்.
“அதை வாங்க உமக்கு அதிகாரம் இல்லை. நான் அபராதம் செலுத்தவில்லை” என்றான் ஜஸ்வந்த்.
மாஜிஸ்திரேட் முதலில் திகைப்படைந்தார்.
4
வீட்டின் வாசல் ரூமில் தாசில்தார் தனிமையில் கலங்கிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். நிமிஷத்துக்கு ஒரு தரம் தலையை எடுத்துப் பார்த்தார், தெருப்புறம்.
சில நிமிஷங்கள் சென்றன; “அச்சமில்லை, அச்ச மில்லை” என்று பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஜஸ்வந்த். பிள்ளையை நேரே தலையெடுத்துப் பார்க்க முடியவில்லை. பையன் வீட்டுக்குள் சென்றபோது அவனுடைய முதுகில் பரமசிவனார் சூலம் போல் தழும்பு கள் தென்பட்டன.
அன்றைத் தினத்து அந்தித் தபால் தாசில்தாரின் ராஜீநாமாவைத் தாங்கிச் சென்றது.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.