கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 12,689 
 
 

தட் தட் தட்

“யாரது?”

தட் தட் தட்

“யாரது?”

ஜக்குவும் ராமானுஜநாயக்கரும் எழுந்து அவசர அவசரமாக “கால்” கழுவிக்கொள்கிறார்கள்.

கிளக்……… கிறீச்ச்

‘ஒருத்தரையும் காணமே’

இப்பொத்தானே மழை பெய்து வெரித்திருந்தது;

யாரும் வந்த சுவடே காணமே

‘மாட்டுக் குளம்பின் காலடிதான் தரையில் பதிந்திருக்கிறது;

எவ்வளவு பெரிய காலடி!

‘தட்டியது யாராக இருக்கலாம்? ம்……..யாரோ’ திடீரென்று கோழிகள் பட படவென்று இறக்கைகளைத் தட்டிக்கொண்டு கலைந்து கொக்கரிக்கின்றன. தாய்க் கோழிகளின் இறக்கைகளுக்குள் குஞ்சுகள் பாய்ந்து ஓடி பயத்தால் ஒளிந்து கொள்கின்றன. பசுவின் கன்று தும்பு அறுந்து போவதுபோல் தாயின் பக்கம் வெட்டி வெட்டி இழுத்து “அம்மா”வென்று குரல் கொடுக்கிறது. தொழுவத்திலுள்ள மாடுகள் மிரண்டு நோக்கி காதுகளை விடைத்து வைத்துக்கொள்கின்றன. வீட்டின் நாய் ஐயோ….. என்று ஊளையிடுகிறது.

“ஆயப்பா”

“என்ன? என்ன உடம்புக்கு, திடீரென்று?”

“யோ, யப்பா நெஞ்சு வலிக்கிறதே… ஜக்கூ…”

“ஏன் என்ன செய்கிறது உடம்புக்கு; ஏன் அப்படி என்னைப் பார்க்கிறீர்கள்; எனக்கு பயமாக இருக்கிறதே”

ஜக்கம்மா தன் ஒரு கையால் புருஷனின் மார்பைத் தடவிக் கொடுத்துக்கொண்டே மறுகையின் புறங்கையால் தன் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள். துடைக்கத் துடைக்க ஊறி ஊறிக் கண்ணீர் பார்வையை மறைக்கிறது “தண்ணீர்…தண்ணீர்”

“கொஞ்சம் இருங்கள்; இதோ ஒரு நொடியில் வென்னீர் போட்டுக் கொண்டு வந்துவிடுகிறேன்”

ராமானுஜ நாயக்கருக்கு மூச்சுவிட முடியவில்லை. வாயை அகலத் திறந்து திறந்து மூடுகிறார், மார்பு மேலே உன்னிப்புடைக்கும் போதெல்லாம் வயிற்றில் ஆழமான பள்ளம் விழுகிறது. இப்படி இரண்டு மூன்று தடவைதான்; கொம்பை ஒடித்து உருவியவுடன் அதைச் சுற்றியுள்ள கொடி தொங்குவதுபோல் தலை தொங்கிவிடுகிறது.

தடால்.

வென்னீரோடு தம்ளர் கீழே விழுகிறது.

ஐயோ என் அதிகாரி, என்னை தவிக்கவிட்டுப் போயிட்டீளே….

“ஐயோ என்னைப் பெத்தாளே சண்டாளி.”

படீர், படீர்.

“அது என்னம்மா அநியாயமாய் இருக்கு”

“அதுதானே; நேத்து சும்மா இருந்தானேம்மா! நேத்தென்ன, இண்ணக்கிக் காலையிலே இளவட்டங்களெல்லாம் சேந்து கிளித்தட்டு விளையாட இந்தக் கண்ணாலே பாத்தேனே.”

“பாத்தாத்தான் நம்பமுடியுது”

“ஆளைப்பாத்தா செத்தவன் மாதிரியா தோணுது?”

“என்னமோ போ பாவம், அவளை நினைச்சாத்தான் பகீரெங்கு”

“என்ன மனுச வாழ்க்கை ; சைய்!”

ராமானுஜ நாயக்கரின் மகன் – மூணு வயசு நிரம்பிய சிறுவன், கையில் ஒரு சின்ன சாட்டைக்கம்பை சொடுக்கிக்கொண்டே பிறந்த மேனியாய் வீட்டுக்குள் நுழைகிறான். வீட்டினுள் ஒரே ஆட்கள் இருப்பது கண்டு திரும்பி வெளியில் போய்விடுவமா என்று தயங்கு கிறான். இந்தச்சமயம் ஒரு வெள்ளைச்சீலைப் பெண் ஓடிவந்து அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே வருகிறாள். சிறுவன் ஒன்றும் புரியாது திகைத்து அழுகிறான். அவன் அழுவது கண்டு எல்லோருமே அழுகிறார்கள். பலர் இதைக் காண சகிக்காமல் வெளியே போகிறார்கள்.

(பதினாறாவது நாள்)

சர்வ அலங்காரங்களும் பண்ணி ஜக்கம்மாவை வீட்டினுள்ளிருந்து முற்றத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

தரையில் வட்டமான பெரிய சொளகு (முறம்) அதன்மேல் குவிக்கப் பட்டுள்ள கம்மம்புல் அம்பாரம். அதன் மேல் எருமைத்தோலினால் முறுக்கப்பட்ட உழவு வடங்கள் இரண்டு வைத்திருக்கிறது. அதன்மேல் ஜக்கம்மாவை ஏற்றி நிற்க வைக்கிறார்கள். கைகள் நிறைய புதுவளையல் கள், மஞ்சள் பூசிக்கழுவிய முகத்தின் நெற்றியில் துலாம்பரமாகத் தெரியும் சிவப்புக் குங்குமம். கண்களிலிருந்து மாலைமாலையாய்க் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கிறது. அவளை எவ்வளவு அழகு படுத்த முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார்கள். இது அவளுடைய சுமங்கலியின் கடேசிக்கோலம். விடைபெற்றுப் போக சுமங்கலியின் அதிதேவதையே வந்து நிற்கிறாள்.

இந்தச் சமயத்தில், தும்பைப்பூவைப்போல் தலைநரைத்த ஒரு வயசான கிழவி, சாப்பிடும் வெண்கலத் தாலத்தைக் கொண்டுவந்து கூட்டத்தை நோக்கி ஒரு மரக்கழியினால் ‘கண் கண் கண்’ என்று தட்டி ஓசை எழுப்புகிறாள். இப்பொழுது தாலி அறுக்கப்போகும் இந்த சுமங்கலி முழுகாமல் இருக்கிறாள் என்பது இதற்கு அர்த்தம்.

இந்த ஒலியைக் கேட்ட ஜக்குவின் தந்தை மயக்கமுற்று விழுகிறார். தொடர்ந்து பெண்களின் அழு ஓசை கேட்கிறது.

தலைக்கோழி கூப்பிடுகிறது.

குத்துவிளக்கின் மங்கிய வெளிச்சத்தின் முன் தனிமையாக உட்கார்ந்து கொண்டு தலைமுடி அவிழ்ந்து கிடக்க ராமானுஜ நாயக்கரின் மனைவி சொல்லி அழுகிறாள்;

“கொச்சி மலையாளம்
கொடிபடரும் குற்றாலம்
கொடிபடந்து ஏது செய்ய – இப்போ
கொடி மன்னர் இல்லாமெ”

“இஞ்சி மலையாளம்
இலை படரும் குற்றாலம்
இலை படந்து ஏது செய்ய – இப்போ
இளவரசர் இல்லாமெ”

“மஞ்ச மலையாளம்
மலை படரும் குற்றாலம்
மலைபடந்து ஏது செய்ய – என்
மகராசர் இல்லாமெ”

அப்பொழுதுதான் மழை பெய்து வெரித்திருக்கிறது முற்றத்தில், மூன்று வயசும் பத்துமாதமும் நிரம்பிய ஜக்குவின் மகன் மண் அளைந்து விளையாடிக்கொண்டிருக்கிறான்; விளையாட்டின் சுவாரஸ்யத்தில் தானே பேசிக்கொள்கிறான்; தலையை ஆட்டி ஏதோ நீட்டிப் பாடுகிறான்.

உள்ளே அப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *