கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 6,121 
 
 

கந்தவேலுக்கு சிறு பரப்பில் வேளாண் நிலங்கள் இருப்பினும் நெசவுதான் முழுநேர தொழில். வீட்டின் எதிரில் உள்ள கொட்டகையில் ஆறு விசைத்தறிகள் அமைத்திருக்கிறார். அனைத்திலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஊரில் பெரும்பகுதியினர் நெசவை நம்பியே இருக்கின்றனர். ஓரிரு சாயப் பட்டறைகளும் உள்ளன. அவினாசியிலிருந்து சற்று தொலைவில்தான் சொக்கம்பட்டி உள்ளது. ஊரின் கிழக்கே உள்ள தன் தென்னந்தோப்பிற்கு அருகிலேயே கந்தவேலுவின் வீடு அமைந்திருக்கிறது.

அவரது மனைவி தனலட்சுமி கால்நடைகளையும், விவசாயத்தையும் கவனித்துக் கொள்கிறார். வீட்டின் பின்புறம் பராமரிக்கப்படும் மூன்று கறவை மாடுகளில் இருந்தும் தனலட்சுமி காலையும் மாலையும் பால் கறந்து வைப்பார். ஒவ்வொரு நாள் காலையும் மகன் கௌதம், ஊரின் மேற்கே உள்ள பால் சேகரிப்பு நிலையத்திற்கு சென்று பால் ஊற்றி வருவான். கௌதம், அவினாசி மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறான். மகள் சந்தியா, சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மகளைப் பார்த்து, பறிட்சைப் பணம் கொடுத்து வரலாம் என்று கந்தவேலும், தனலட்சுமியும் பேசி வைத்திருந்தார்கள். சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு வந்தான் கௌதம்.

“அம்மா, கேசவன் தாத்தாவ மறுபடி ஆஸ்பத்திரியில் சேத்துருக்காங்களாம்,” என்று கையிலிருந்த வெற்று தூக்குப் பாத்திரத்தை திண்ணையின் மேல் வைத்தான்.

“ஆரு கண்ணு சொன்னாங்க” என்று சற்று பதற்றத்துடன் கேட்டார் தனலட்சுமி.

“வர வழியில் சுப்பு அண்ணன் சொன்னுச்சு. வயித்த வலிக்குதுன்னு நேத்து சாயுங்கலாம் கோயம்புத்தூர் ஆஸ்பத்திரியில சேத்துருக்காங்கலாம்.”

தனலட்சுமியின் தாய்மாமன் கேசவமூர்த்தி நீண்ட நாட்களாக ஈரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று ஒருமுறை மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது. அதில் நிறைய புகையிலை சேர்த்துக் கொள்வார். அதனாலேயே அவருக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தறிக் கொட்டகையில் இருந்து வெளியே வந்த கந்தவேலிடம் விவரத்தைச் சொன்னார் தனலட்சுமி. அதனால் கேசவமூர்த்தியைப் பார்த்துவர தனலட்சுமி செல்வதாகவும், சந்தியாவைப் பார்த்துவர கந்தவேல் மட்டும் சென்று வருவதாகவும் முடிவு செய்தனர்.

கந்தவேல் புறப்பட்டு வெளியே வந்தபொழுது சேவல், கோழிகள் வாசலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தன. திண்ணையின்மேல் வைக்கப்பட்டிருந்த வள்ளத்தில் இருந்து ரேஷன் அரிசியை ஒரு நாம்பு (கைப்பிடி) அள்ளி வாசலில் இறைத்துவிட்டு கிளம்பினார்.

அவினாசி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது பலூன் வியாபாரி ஒருவர் பல நிறங்களிலும் வடிவங்களிலும் பலூன்களை பறக்கவிட்டுக் கொண்டு ஒரு பலூனைத் தடவி கீச்சிடும் ஒலி எழுப்பிக்கொண்டு அவரைக் கடந்து சென்றார். தன் மகள் சிறு வயதில் திருவிழாக்களில் பலூன்களுடன் சுற்றிவரும் காட்சி ஏனோ அவர் நினைவில் தோன்றியது. கந்தவேலுக்கு பேன்ட் அணிந்து பழக்கம் இல்லை. எப்பொழுது வெளியே சென்றாலும் வெள்ளை வேட்டி சட்டைதான். பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெறும்பாலும் படித்த நாகரிகமான குடும்பத்தில் இருந்து வந்திருப்பர் என்பது அவருடைய எண்ணம். அதனாலேயே தன் மகளை கல்லூரிக்குச் சென்று பார்க்கத் தயங்குவார். ஆனால், சந்தியா கட்டாயப்படுத்தி அவரை வரவழைத்துவிடுவாள்.

சற்று நேரத்தில் சேலம் செல்லும் பேருந்து ஒன்று வந்தது. சேலத்திற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு கடைசியில் இருந்து மூன்று வரிசை தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். பேருந்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஒலி மிகவும் இரைச்சலாக இருந்தது. முன்னிருக்கையில் ஒரு கிழவி வெற்றிலையை மென்றுகொண்டு இருந்தாள்.

வடக்கு திசையில் கருமேகம் திரண்டு மோடமாக (மேக மூட்டமாக) இருந்தது. பள்ளிப்பளையத்தில் பேருந்து நின்றபொழுது மிகவும் சன்னமான உருவத்தில் ஒருபெண் கைக்குழந்தையுடன் ஏறிக்கொண்டார். கந்தவேலுக்கு இடது பக்க எதிர் சன்னல் இருக்கையில் தனியாக அமர்ந்து கொண்டார். அவள் கண்கள் சிவந்து தலைமுடியில் மண்ணும் தூசும் ஒட்டியிருந்தது. வலது கையின் மணிக்கட்டில் சிகப்பு மை பேனாவால் கோடிட்டது போல் ஒரு கீரல் இருந்தது. குழந்தையும் மெலிந்துபோய் காணப்பட்டது. இளம்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சேலையில் ஆங்காங்கே பல நிற சாயங்கள் தெளிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, அந்தப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு சாயப்பட்டறையில் வேலை செய்கிறவளாக இருக்களாம் என்று எண்ணிக்கொண்டார்.

தன் மடியின்மேல் குழந்தையை வைத்து இடது கையால் பிடித்துக்கொண்டு சேலையின் ஒரு நுனியை வலது கையால் பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டு சன்னலுக்கு வெளியே வெறுப்புடன் பார்த்திக்கொண்டு இருந்தாள்.

“எங்கம்மா போவனும்” நடத்துனர் கேட்டார்.

“மகுடஞ்சாவடி”, என்று முந்தானையில் முடிந்து வைத்திந்து சில்லரைக் காசுகளைப் பொருக்கிக் கொடுத்தாள்.

“இன்னும் மூன்று ரூவா குடுமா,” என்று கேட்டு வாங்கிக் கொண்டு பயணச்சீட்டை அவளுக்குக் கொடுத்தார்.

குழந்தை சினுங்கத் தொடங்கியதும் தன் தோள்மேல் போட்டு தட்டிக்கொடுத்தாள். சிணுங்களை நிறுத்திக் கொண்ட குழந்தை சிறிது நேரம் கழித்து மீண்டும் அழத்தொடங்கியது. அழுகையை நிறுத்த மீண்டும் முயன்றாள். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை. அவளை யாரோ தாக்கியிருக்கிறார்கள் என்று நிச்சயமாக எண்ணினார் கந்தவேல். அந்தப் பெண்ணைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தன்னுடைய மகளின் கல்லூரிச் சூழல், படிப்பு எதிர்கால வாழ்க்கை குறித்து எண்ணிக் கவலை அடைந்தார்.

முன் இருக்கைக் கிழவி வெற்றிலையை மென்றுகொண்டே அந்தப் பெண்ணை நோட்டமிட்டுக்கொண்டு இருந்தாள். மகுடஞ்சாவடி வந்ததும் அந்தப் பெண் இறங்கிக்கொண்டாள். சேலம் சென்றடையும் வரை கந்தவேலுக்கு ஏதோ எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சேலத்தில் இறங்கியதும் பழங்கள் வாங்கிக் கொண்டு நகரப் பேருந்தைப் பிடித்து சந்தியா பயிலும் கல்லூரிக்குச் சென்றடைந்தார். கல்லூரி விடுதியின் வெளியே காவலர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் இன்டர்காமில் தொடர்பு கொண்டு சந்தியாவை வரவழைத்தார். சந்தியா சிரித்துக்கொண்ட ஆவலுடன் வெளியே வந்தாள். இருவரும் அருகில் இருந்த மரத்தடித் திண்ணையில் பேசிக்கொண்டே அமர்ந்தார்கள்.

“அம்மா வல்லீங்களாங்கப்பா”

“இல்ல கண்ணு. கேசவன் தாத்தாவ ஆஸ்பத்திரில சேர்ந்துருக்காங்க அவரபாக்க போயிருக்கா உங்க அம்மா,” என்று விவரத்தைச் சொன்னார்.

“அப்பா, எங்க காலேஜ்ல ‘சயின்ஸ் ஃபெஸ்ட்’னு அறிவியல் கண்காட்சி நடத்தினாங்க. அதுல நான் கலந்துகுட்டு பரிசு வாங்கியிருக்கேன்,” என்று கையில் வைத்திருந்த பரிசுப் பொருளைக் காண்பித்தாள். பாடங்களில் தான் சிறந்த மதிப்பெண்கள் வாங்கி வருவதைப் பற்றி மகிழ்ச்சியாக கூறிக்கொண்டாள். கந்தவேலுவின் மனத்தில் கலக்கம் தீர்ந்து அமைதி அடைந்தார். மகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை ஏற்பட்டது.

சென்றமுறை கந்தவேலுவுடன் தனலட்சுமியும் கௌதமும் வந்திருந்த பொழுது நாட்டுக் கோழி குழம்பு சமைத்து எடுத்து வந்திருந்தார். அதை சொல்லி சந்தியா நினைவுபடுத்திக் கொண்டாள். சிறிது நேரம் பேசிவிட்டு கந்தவேலு கிளம்ப எத்தனித்தார்.

“சரி கண்ணு, மழ வர மாதிரி இருக்கு. நான் போய்ட்டு வற்றேன்,” என்று கூறி சட்டையின் உள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பறிட்சைக்கும், கைச் செலவுக்கும் கொடுத்தார்.

அவர் திரும்பி நடந்த பொழுது கண்கள் ஈரமாயின.

அங்கிருந்து அவர் மறைந்ததும் மழை மண்ணை ஈரமாக்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *