(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
“தொப்! தொப்!!” என்று அவள் கதவை இடித்தாள்; பதில் இல்லை. இன்னும் பலமாக இடித்தாள்; அப்போதும் நிச்சப்தம். கதவைத் ட்டின கை நடுங்கிற்று. அவள் தேகம் முழுவதும் குளிரினால் நடுங்குவதுபோல் உதறிற்று. தெருவில் அதிக ஜன நடமாட்டம் இல்லை. அந்தத் தெரு பாதி அந்தகாரத்தில் மூழ்கி இருந்தது. எதிரே இருந்த முனிஸிபல் ராந்தல் மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தபடியால் வீட்டு வாசலிலும்,வாசற் படியில் நின்ற உருவத்தின் மேலும் சிறிது வெளிச்சம் விழுந்தது.
மறுபடியும் அவள் பலங்கொண்ட மட்டும் கதவை இடித்தாள். அப்போது உள்ளே இருந்து, “யாரது?” என்று யாரோ கோபத்துடன் எரிந்து விழும் குரல் கேட்டது. அவள் பேசாமல் திக் திக் கென்று அடித்துக் கொண்ட ஹ்ருதயத்துடன் நின்றாள். உள்ளே இருந்து யாரோ கதவை நோக்கி வந்த சப்தம் கேட்டது. மறு விநாடியில் தாழ்ப்பாள் பட் என்று சப்தித்தது; கதவு திறந்தது.
கதவைத் திறந்த மனிதன் “யாரது?” என்று மறுபடியும் கேட்டுக் கொண்டே அவளை உற்றுப் பார்த்தான். அவளும் தலையை நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
“நீயா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்டான்.
அவள் மௌனம் சாதித்தாள்.
“ஏன் இங்கே வந்தாய்?’
“சாம்புவைப் பார்க்க.”
“சாம்புவைப் பார்க்கவா? சாம்புவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? சனியனே! எதிரே நிற்காதே! ஓடிப்போ!”
அவள் தேகம் குலுங்கிற்று; “அவனுக்கு ஜுரமாமே?” என்றாள் தழுதழுத்த குரலில்.
“ஜுரமாவது, சுண்டைக்காயாவது உன்னை யார் கேட்டது? உனக்குத்தான் தலை முழுகியாச்சே? போ; என் கண் எதிரில் வராதே” என்று அவன் கதவை மூடப்போனான்.
அவள் கதவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்; “மூடாதேயுங்கள்! மூட வேண்டாம். ஒரு நிமிஷம் விடுங்கள். குழந்தையைப் பார்த்து விட்டு வந்துவிடுகிறேன்” என்றாள்.
“சீ, நாயே! போ என்றால் மன்றாடுகிறாயா? சுரணை இல்லை? எந்த மூஞ்சியுடன் இங்கே வருகிறாய்? சாம்புவைப் பார்க்க வந்தாளாம், சாம்புவை!” என்று இரைச்சல் போட்டுவிட்டு அவன் அவளை வெளியே தள்ளிக் கதவை மூடினான்.
மதுரம் ரங்கனின் மனைவி. அவர்களுக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷ காலம் ஆகிறது. கல்யாணம் ஆன ஒரு வருஷத்தில் சாம்பு பிறந்தான். அது வரையில் அவர்கள் இல்வாழ்க்கை சந்தோஷமாகத் தான் இருந்தது. அதன் பிறகு ரங்கனிடம் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குடிக்கவும் தாசி வீட்டுக்குப் போகவும் பழக்கம் செய்துகொண்டான். அதிலிருந்து வீட்டில் எப்போது பார்த்தாலும் மனைவியுடன் சச்சரவுதான். அவள் நகைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டான். அவள் வாய் திறவாமல் கொடுத்துவிட்டாள்.
ஆனால், அவனிடம் திட்டுக் கேட்கவும் உதை படவும் அவளால் முடியவில்லை. தன்னால் முடிந்த வரையில் பொறுத்துப் பார்த்தாள். தன்னையும் மிஞ்சிப் போகவே தன் தகப்பனாருக்குக் கடிதம் எழுதினாள். அவர் வந்து, மகளிருந்த கோலத்தைப் பார்த்து, “இப்படிப்பட்ட புருஷனுடன் வாழ்ந்தால் என்ன? வாழா விட்டால் என்ன?” என்று அவளைத் தம்முடன் அழைத்துப் போனார். அப்பொழுது குழந்தை சாம்புவுக்கு நான்கு வயசு. ரங்கன் குழந்தையை அவர்களுடன் அனுப்பவில்லை. மனைவியைத் தன் வீட் டுக்குத் திரும்பி வரவேண்டியதில்லை என்று சொல்லி விட்டான். மதுரத்தை ஊரார் ‘வாழாவெட்டி’ என்றார்கள். அதை யெல்லாம் அவள் பொருட்படுத்த வில்லை. சாம்புவை நினைத்து அவள் உருகினாள். அவனுக்கு ஜுரம் வந்துவிட்டது என்று தெரிந்த பிறகு பெற்ற தாயின் மனம் கேட்குமா?
2
“அப்பா!”
“ஏண்டாப்பா, இன்னும் தூங்கலியா நீ?”
“தூக்கம் வரல்லேப்பா. குளிராய் இருக்கு: போத்தி விடு; அம்மா எங்கே?”
“அம்மாதானே? பேசாமே தூங்கு. அம்மா வருவாள்!”
“அப்போ தூங்கி எழுந்தேனே; அம்மா வரல்லியே?”
“பேசாமே தூங்குடாப்பா. அம்மாவை அழைச்சுண்டு வர ஆளை அனுப்பி இருக்கேன். வருவாள்.”
“ஏம்பா, அம்மா வந்தா என் ஜூரம் சரியாயிடு மோல்லியோ? அம்மா எனக்குக் கஷாயம் தந்தா சமத்தா குடிக்கிறேம்பா. அம்மாவை வரச்சொல்லுப்பா!”
மதுரம் அந்த வீட்டை விட்டுப்போன புதிதில் குழந்தை, ‘அம்மா எங்கே?’ என்று கேட்டபோது, ரங்கன் ஒரு பொய் சொல்லி வைத்தான். ‘நீ ரொம்பப் படுத்தறயாம். அதான் அம்மா உன்னை விட்டு விட்டுப் போய்விட்டாள்’ என்று கூறியிருந்தான்.
“அப்பா!…”
“ஏண்டா கண்ணே?”
“நான் இன்னமே சமத்தா யிருக்கேம்பா! விஷமம் பண்ணலேப்பா. அம்மாவை வரச் சொல்லு!”
“இதோ வந்துடுவாள். இந்தா, இந்த மருந்தைக் குடித்துவிட்டுத் தூங்கு.”
தகப்பனாரின் வார்த்தையை நம்பி, தூங்கினால் அம்மா வருவாள் என்று குழந்தை கண்ணயர்ந்தான். கனவில் சாம்பு தாயைக் கண்டான்.
“அம்மா!”
“ஏண்டா கண்ணே, இப்படி இளைச்சுப் போயிட்டியேடாப்பா?”
“ஆமாம்மா; ஏன் என்னை விட்டுட்டுப் போனே? நான் இப்போவெல்லாம் விஷமமே பண்றதில்லையே! சமத்தா இருக்கேன், அம்மா.”
அம்மா சிரித்தாள்; “என் செல்லம் சமத்துத் தான்; அதுதான் நான் திரும்பி உங்கிட்டே வந்துட்டேன்!” என்று வாரி எடுத்து முத்தமிட்டாள்.
சாம்பு விழித்துக்கொண்டான். மேஜைமேல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே மையிருள். இருண்ட வானத்திலிருந்த நக்ஷத்திரங்கள் கண்ணைச் சிமிட்டி அவனைக் கூப்பிடுவது போல் பிரகாசித்தன. எங்கிருந்தோ, “சாம்பு, சாம்பு!” என்று கூப்பிடும் குரல் கேட்டது. கேட்டது. அவன் தாயின் குரல் ! குழந்தை படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். “அம்மா!” என்று கூப்பிட்டான்.
ரங்கன் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தான்.
“சாம்பு! ஏன் உட்கார்ந்துண்டு இருக்கே? உட்காரப்படாது; படுத்துக்கோ. ஜுரம் அடிக்கிறது.”
“அம்மா வந்துட்டாளா?”
“இல்லை. இந்த இருட்டிலே எப்படி வருவாள்? போது விடிந்தால்தான் வருவாள் : நீ தூங்குன்னா தூங்கலியே?”
“இப்போ என்னை அம்மா கூப்பிட்டாளே, சாம்பு சாம்புன்னு?”
“இந்தா, வெந்நீர் சாப்பிடு. பால் தரட்டுமா?” ரங்கன் குழந்தையின் மார்பில் கை வைத்துப் பார்த்தான். உடம்பு நெருப்பாய் இருந்தது. கம்பளியைப் போர்த்திவிட்டு விளக்கைத் தாழ்த்தினான்.
“என்ன காரியம் செய்துவிட்டாய்? வீட்டைத் தேடி வந்த மனைவியைத் துரத்திவிட்டாயே!” என்று அவன் மனச்சாட்சி கேட்டது.
“பின் அவளை வீட்டிலே சேர்ப்பதா? வாழா வெட்டி என்று பெயர் எடுத்தவளையா?”
“உன்னால்தானே அவளுக்கு அந்தப் பெயர் வந்தது?”
“என்னால் எப்படி? என்னிடமிருந்து கோபித்துக் கொண்டு போனாள். ‘இனிமேல் திரும்பி வராதே’ என்று சொல்லி விட்டேன். புருஷனிடமிருந்து கோபித்துக் கொண்டு போகலாமா?”
“கோபம் வரும்படி நீதானே செய்தாய்? நீ நடந்து கொண்ட விதம் எப்படி? அது ரொம்ப ஓழுங்கானதா? நீ குடியன், தாசி லோலன். பிறர் நடத்தையில் குற்றங் கண்டு பிடிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?”
“நான் எப்படி இருந்தால் என்ன? நான் ஆண் பிள்ளை. புருஷனிடம் கோபித்துக் கொண்டு மனைவி போய் விடலாமா? போனால் ஏன் திரும்பி வர வேண்டும்?”
“ஓஹோ! நீ ஆண் பிள்ளை. அதனால் உனக்கு முறை தவறிப்போக உரிமை உண்டு. அவள் பேதைப் பண். அவளுக்குக் கோபித்துக் கொள்ளவும் உரிமை இல்லை. அப்படித்தானே?”
பதில் இல்லை.
3
சாம்புவின் ஜுரம் அதிகமாய் விட்டது. ”அம்மா, அம்மா” என்று அவன் வாய் ஓயாமல் பிதற்றிக்கொண்டே இருந்தான். “அம்மா வருவாள், வருவாள்” என்று சொல்லிச் சொல்லி ரங்கனுக்கும் அலுத்துப் போய்விட்டது. மதுரத்தின் மேலிருந்த கோபமும் அதிகமாய் விட்டது. குழந்தையை வைத் துக்கொண்டு அவன் தன்னந் தனியாய்த் தவிக்க வேண்டி யிருக்கிறதே என்று கடைசியில், ஒரு சமயம், “அம்மா எங்கே?” என்று குழந்தை கேட்டபோது கோபத்துடன், “அம்மா இல்லை; போய்விட்டாள்” என்றான்.
“அம்மா இல்லியா?”
“இல்லை,”
“எங்கே அப்பா போயிட்டா, அம்மா?”
ரங்கன் ஜன்னலுக்கு வெளியே ஆகாயத்தைச் சுட்டிக் காண்பித்தான்.
“மானத்து மேலேயா?”
“ஆமாம்.”
“எப்போ திரும்பி வருவா?”
“வரமாட்டாள்!”
“வர மாட்டாளா? அப்படின்னா, மானத்து மேலே இருந்தா நன்னா இருக்குமா, அப்பா?”
“இருக்கும். பேசாமே படுத்துண்டு இரு. பேசினா ஜுரம் அதிகமாயிடும்.”
“மானத்து மேலே இன்னும் யார் அப்பா இருக்கா அம்மாவோடே?”
“…”
“ஏம்பா; அம்மா மட்டும் ஒண்டியாவா இருப்பா? பயமாய் இருக்காது?”
“பேசப் படாதுன்னு சொன்னேனே! பேசாமே இருந்தாத்தான் உடம்பு சொஸ்தமாகும்.”
“ஏம்பா, மானத்திலே சாமி கூட இருக்காரோல் லியோ?”
“ஆமாம். நீ தூங்கு! விசிறட்டுமா?”
4
அன்றிரவு சாம்புவுக்கு ஜன்னி கண்டுவிட்டது. திடீரென்று ஜன்னலுக்கு வெளியே பார்த்து, “அப்பா! அதோ இருக்கா பாரு, அம்மா” என்று வானத்தைச் சுட்டிக் காட்டினான். ரங்கன் குழந்தையின் முகத்தை விழித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
வானத்திலிருந்து நக்ஷத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. சிலு சிலு என்று காற்று அடித்தது. வானத்தில் மேகங்கள் பரவின. மின்னல் வெட்டியது.
“என்ன அப்பா அது வெளிச்சம்? பளிச் பளிச்சுங்கறதே!”
“ஒண்ணும் இல்லேம்மா, மின்னல்தான்; பயப் படாதே. மழை வரும்போலே இருக்கு.”
கடபுடா என்று இடி இடித்தது.
“என்ன அப்பா அது?”
“இடி!”
“ஏம்பா! அம்மா மானத்திலே இருக்காளே, மழை பேஞ்சா நனைஞ்சுட மாட்டா?”
ரங்கன் பதில் சொல்லவில்லை.குழந்தை, “அம்மா, அம்மா” என்று கத்தினான். திடீரென்று, “அப்பா, நானும் அம்மா கிட்டே போறேன்” என்றான்.
“வேண்டாம், அப்படிச் சொல்லாதே.”
“இல்லை, போறேம்பா. அம்மா கிட்டத்தான் போகணும். மானத்து மேலே நன்னா இருக்கும்னு சொன்னயே!”
“அங்கே நன்னா இருக்காது. எங்கிட்டயே இரம்மா. நான் அப்பா இல்லையா உனக்கு?”
“பின்னே அம்மாவை ஏன் அங்கே அனுப்பிச்சுட்டே? நானும் அங்கே போறேனே ? என்னையும் அனுப்பிச்சுடு; அப்பா…அம்மா! அம்மா! நானும் வரேன்.”
ரங்கன் குழந்தையைத் தழுவிக் கொண்டான். “சாம்பு! நீ அங்கே போக வேண்டாண்டா. இங்கேயே இருடா. உன் அம்மாவை இங்கேயே வரச் சொல்லுகிறேண்டா” என்றான்.
‘ஜோ’ என்று மழை பெய்தது. வாசல் கதவை யாரோ தடால் தடால் என்று இடித்தார்கள். ரங்கன் கதவைத் திறந்தான். மழையில் தெப்பமாய் நனைந்தபடி மதுரம் வெளியே நின்றுகொண்டிருந்தாள். “குழந்தை…சாம்பு…எப்படி இருக்கான்?…” என்று குழறினாள்.
ரங்கன் பேசாமல் திரும்பி உள்ளே நடந்தான். அவளும் அவன் பின்னாலேயே சென்றாள். அறைக்குள் இருட்டாக இருந்தது. ரங்கன் விளக்கைப் பெரிதாக்கினான். அவள் கட்டிலின் அருகில் போய் உட் கார்ந்து, “சாம்பு! என் கண்ணே! உன் அம்மா இதோ வந்திருக்கிறேனே. என்னைப் பாரடா!” என்றாள்.
பதில் இல்லாமல் போகவே மதுரம் திரும்பி ரங்கன் முகத்தை நோக்கினாள்.
“மதுரம்! நம் செல்லக் கிளி உன்னைத் தேடிக் கொண்டு போய் விட்டதடி!” என்று கணவன் மனைவியைக் கட்டிக்கொண்டு தேம்பினான்.
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.