(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பச்சைக் கொச்சிக்காய் என்ன விலை?” சிங்களத்தில்தான் கேட்டேன்.
“அமு மிரிஸ் கீயத?” என்று.
எந்தக் கடைக்காரனிடம் “பச்சை மிளகாய் என்ன விலை?” என்று தமிழில் கேட்க முடியும்.
அதுவும் இன்றைய சூழ்நிலையில்.
தமிழில் கேட்டேன் என்பதற்குத் தண்டனையாக விலையைக் கூட்டிச் சொல்வான். அல்லது தமிழில் கேட்பவர்களுக்கெல்லாம் காய்கறி விற்பதில்லை என்றும் கூறிவிடலாம்.
என் மொழி, எனது உரிமை என்று ஞாயம் கேட்டு இதற்கெல்லாம் கோர்ட்டுக்கா போகமுடியும்.
“நூறு கிராம் 32 ரூபாய்.”
சிங்களத்தில் பதில் வந்தது.
50 கிராம் வாங்கிக் கொண்டேன்.
“பீட் என்ன விலை?” ஒரு அறிதலுக்காகத்தான் கேட்டேன். வாங்கு வதற்கல்ல.
“40 ரூபாய்.”
“ஐநூறா” என்று கேட்ட என்னை ஒரு எரிச்சலுடன் முறைத்தான். இப்போதெல்லாம் 500க்கு அவர்கள் விலை சொல்வதுமில்லை. நாம் வாங்குவதுமில்லை . 250 கிராம் தான்!
நீலமாய் நஞ்சேறுவது போல் வாழ்க்கைச் செலவு ஏறிக் கொண்டிருக்கும்போது கூடுமானவரை செலவுகளைக்குறைக்கத்தானே வேண்டும்.
வாழ்க்கைச் செலவு பெருஞ்சுமையாக மக்களை இப்படி அழுத்துவது பற்றி ஆட்சிப் பொறுப்பாளர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்!” என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவார்கள். மைக்கின் முன் நின்றுக் கொண்டு.
“பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுங்கள்” என்று முன்னொரு காலத்தில் என்.எம். கூறினார்.
இப்போதெல்லாம் யாரும் அப்படிச் சொல்லுவதில்லை. “சொல்லாதீர்கள். செயலில் காட்டுங்கள்” என்னும் உயர் சிந்தனையின் விளைவுகள்.
“வெள்ளவத்தை வெலை சொல்லுறானுகளே பாவிகள்” என்று முனகியபடி சுற்றிய பச்சைமிளகாய் பார்சலுடன் பாதையில் இறங்கினேன்.
“என்ன வத்தளையில் நின்றுகொண்டு வெள்ளவத்தை என்கின் றீர்கள்?” என்றபடி ஒரு நண்பர் குறுக்கிட்டார்.
பலமாக முனகி விட்டேன் போலிருக்கிறது காய்கறி விலைகள் பற்றி ஆதங்கத்துடன் கூறினேன்.
“அதுவா…!” என்று இழுத்தவர், “வெள்ளவத்தைக்கு ஏன் அப்படி ஒரு விலை. அப்படி ஒரு மவுசு!” என்று என்னை நோக்கினார். பிறகு தொடர்ந்தார்.
“வெள்ளவத்தைக்கு இன்னொரு பெயர் இருக்கிறது தெரியும் தானே! குட்டி யாழ்ப்பாணம் என்று. அதுதான் அந்த விலை. யாழ்ப்பாணத்து ஆக்கள் என்றால் வெளிநாட்டுக் காசு விளையாடும் என்கின்ற ஒரு பொது நினைப்பு!”
“வத்தளை மட்டும் சும்மாவா? அதற்கும் ஒரு தனி மவுசு இருக் கிறது. குட்டி வெள்ளவத்தை என்று ! அதுதான் நீங்கள் ஆச்சர்யப்பட்ட வெள்ளவத்தை விலை” என்றார்.
தமிழர்களுக்கு வீடு கொடுக்கக்கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டிக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வத்தளை நிரம்பி வழிகிறது நம்மவர்களால்.
எங்காவது ஒரு குண்டு வெடிப்பென்றால் சுற்றி வளைக்கப்படும் முக்கிய இடமாக வத்தளையும் மாறியுள்ளமை இதற்கோர் உதாரணம்.
இந்த மனமே இப்படித்தான். ஒன்றைத் தொட்டு ஒன்றைத் தொட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.
கடிவாளமிட்டு இழுத்து வந்தால்தான் கதையிடம் வரும். கதையும் வரும்.
கேட்டைத் திறந்தேன்.
உள்ளே இருப்பவர்களை “ஓடிவா…. ஓடிவா…” என்று குரல் கொடுத்துக் கூப்பிடுகிறது. கேட்டமகள் ஓடிவந்தாள். பச்சை மிளகாய் பார்சலை டக்கென்று இழுத்தெடுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.
அது ஒரு குடும்ப ரகசியம்!
தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணைய் கொதிக்கையில் தான் கறிவேப்பிலை தேடுவார்கள். வெங்காயம் தேடுவார்கள். அடுப்பைக் குறைத்து விட்டு வெங்காயம் உரிப்பார்கள். நறுக்குவார்கள். கறிவேப் பிலை உறுவுவார்கள்!. அப்படி ஒரு தாளிப்பு.
அடுப்பு என்ன கேஸ் அடுப்புதானே! விறகா, சாம்பலா, புகையா, முன்சிகையில் சாம்பல் பொட்டுப் பொட்டாய்ப் பூச்சிட ‘பூஸ் பூஸ்’ சென்று அடுப்பூதலா? கண் கசக்கலா? கண் எரிவா?
டிக்கென்று இந்தப் பக்கம் திருப்பினால் எரியும். அந்தப் பக்கம் திருப்பினால் அணையும். இரண்டுக்கும் இடையில் திருப்பி வைத்தால் குறைந்தெரியும்….பிறகென்ன…?
காலையில் தொடங்கி, ஒன்பதரைக்கொன்று, பத்துக்கொன்று, பத்தரைக்கொன்று, பதினொன்றுக்கொன்று என்று மெகா சீரியல் களும், தொல்லைக்காட்சிகளும் குடும்பச் செயற்பாடுகளை எப்படி சீர்குலைக்கின்றன. நான்
இந்த லட்சணத்தில் குடும்பம் என்ற அமைப்பே கூடாது, அதை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்னும் பிரசாரக் குரல்கள் வேறு.
முன்பெல்லாம் விருப்பத்துடன் சென்று ஒரு படம் பார்ப்போம். சில வேளைகளில் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்வோம்.
இப்போது!
யார் விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன? வீட்டின் நடுவே படம் ஓடுகிறது.
கண்றாவிக் கண்றாவிக் காட்சிகளுடன். இரவு பன்னிரண்டு, ஒன்றுக்கு மேல் ஏதோ ஒரு சனலில் பேஷன் காட்டுகின்றார்கள். அரை நிர்வாண..முழு நிர்வாணங்களுடன்…!
இல்லம் எங்கும் அசுத்தக்காற்று ஒரு இங்கிதமின்றி ஊடாடி நிற்கின்றது.
உலகின் எல்லா மூலைகளிலிருந்தும், அது ஓடி வருகின்றது எனது இல்லம் நாடி.
யாதும் ஊரே! என்பது ஏன் இப்படி அர்த்தம் கெட்டுப்போய் இருக்கிறது.
மனம் மீண்டும் அலையத் தொடங்கிவிட்டது.
அலையாமல் என்ன செய்யும்?
கல் வீடே உலகமாயிருந்த நிலைமைகள் மாறி உலகமே வீடாகிப் போகின்ற ஒவ்வாமைகள் மேலெழுகின்றபோது மனம் அலையத்தான் செய்யும். செய்யும்.
பச்சைமிளகாய்ப் பார்சலை மகள் பிடுங்கிக் கொண்டு போய் விட்டதும், மாமரத்தடியில் நின்றேன்.
ஆளுயரத்துக்கு மேலிருந்து பாதி மரம் பச்சையாய் நிற்கிறது. வர்ணம் தீட்டியது போல் பொசுபொசுவென்று பாசி படர்ந்து கிடக் கிறது. மேற்கிளைகளில் புல்லுருவி வளர்ந்து தண்ணீர்க் கொடி போல் தலையாட்டிக் கொண்டிருக்கிறது.
மாமரத்தைப் பார்க்கையில் பாவமாக இருக்கிறது.
யாரையாவது பிடித்து பாசி துடைத்து புல்லுருவிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
மரநிழல் படாத ஒரு சின்ன வாலோடியான இடத்தில் மூன்று பாத்தி மிளகாய்ச்செடி வைத்திருக்கின்றேன்.
மரத்தடியில் தானாய் முளைத்து ஒன்றன் மேல் ஒன்றாகப் பின்னிக் கிடந்த கன்றுகள்தான். தன்
திரி திரிபோல் இருந்தவைகளை வேரறுக்காமல் பிடுங்கி எடுத்து நட்டு வைத்தேன்.
கொழும்பில் காயும் நேரடி வெய்யிலிலிருந்து காப்பாற்ற நிழலூன்றி நீர் தெளித்து காபந்து செய்தேன்.
லேசாக வாடித் தொங்கி பிறகு மெதுவாகத் தலை நிமிர்த்தி இரண் டிலை, மூன்றிலை, நாலிலை என்று வளர்ந்து கரும்பச்சையும் கத்த ரிப்பூ நிறமும் கலந்த ஒரு வண்ணத்தில் தள தளத்து நிற்கும் இலைக் கவடுகளில் இருந்து சின்னச் சின்னதாக கிளை வெடித்துக் கொண்டு.
மெலிதாக மேலுதட்டில் மீசை அரும்ப மினுமினுக்கும் உதடு களுடன் துறுதுறுக்கும் ஒரு வாலிபனின் எழிலுடன்..!
முன்பொரு தடவை இப்படித்தான். இதே மரத்தடியில் தானாய் முளைத்த கன்று ஒன்று தளதளவென்று நின்றது… இரண்டிலைகளுடன்.
புதிதாக முளைத்த கன்று என்றதும் வீட்டின் அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
நாலாவது இலை விரிந்தபோது கத்தரிக்கன்றென்றார்கள்…. ஒரே குரலில் அத்தனை பேரும்.
கத்தரிக் கன்றென்றால் எப்படி வானத்திலிருந்தா வந்து நிற்கும். பறவைகளின் எச்சம் மூலமாகத்தான் இருக்க வேண்டும்.
சுண்டைச் செடியாக இருக்கலாம் என்பதே எனது கணிப்பு! – இலையை வைத்து எழுந்ததுதான் இந்தக் குரல்கள். சிலவேளை முட் கத்தரியாகவும் இருக்கலாம். காறைக்கத்திரி என்போமே சிங்களத்தில் “தளனப்பட்டு” என்பார்களே..! அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறை வானதுதான்.
“கத்தரிக்கன்று இல்லை” என்றேன் நான்.
என் குரல் எடுபடவில்லை.
கத்தரிக்கன்றுதான் என்று எழும்பிய எல்லாக்குரல்களின் பொய்க் கோஷத்தில் “இல்லை” என்ற எனது உண்மைக்குரல் இல்லாமல் கரைந்து போயிற்று.
பெரும்பான்மை கூறுவதே சரி! என்றாகி விடுவதுதானே ஜனநாயகம்.
நானும் விவாதம் செய்யவில்லை. எனக்கு அது பிடிப்பதுமில்லை.
வாதிட்டு என் குரலை நியாயப்படுத்திக் கொள்வதென்பது எனக்குப் பிடிக்காத ஒன்று.
நிஜமற்ற ஒன்றை நிஜம் என்று நிலைநாட்ட ஏகோபித்த சத்தங்கள் – குரல்கள் மூலம் எத்தனிப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
மேலெல்லாம் முள் முள்ளாக நீட்டிக் கொண்டு, காட்டுத்தனமாக வளர்ந்து மாமரத்தின் பாதிவரை வந்துவிட்ட கண்டைச் செடியை வெட்டி, வீசுவதற்கு இடமில்லாமல் நான் பட்டபாடு! –
தோட்டத்தில் நான் வாழ்ந்த அந்த நாட்களில் நான் போடாத காய்கறித் தோட்டமா, நான் பார்க்காத கத்தரிச் செடியா?
சம்பளத்துக்கான வேலை முடிந்த பிறகு முழு நேரமும் காய்கறித் தோட்டத்துக்குள்தான்.
பூவாளியும் நானுமாக, கை முள்ளும் கரண்டியுமாக, கையும் மண் ணுமாக..!
“ஐயாவுவைலயத்துல தேடுனேன். தோட்டத்துலேன்னாங்க…! தந்தி ஒன்னைக் குடுத்திட்டுப் போனான் பங்களாப் பொடியன்” என்றபடி வருபவர்களைக் கூட கை மண்ணை உதறிவிட்டு விரல் நுனியால் பிடித்துப் பிரித்து படித்துக் கூறி அனுப்புவேன்.
கத்தரி, வெண்டி, போஞ்சி, நோக்கல், பீட் ரூட், கேரட் என்று பாத்தி கொள்ளாமல் விளைந்து!’ பாத்தி ஓரங்களில் வெள்ளை நரம்புகள் ஓட இளமஞ்சள் நிறத்தில் சலாத்துச் செடிகள்!.
அந்த நினைவுகள் எத்தனை அற்புதமானவை! இவர்கள் இப்போது எனக்கு கத்தரிச் செடி சொல்லித் தருகின் றார்கள். மாஞ்சருகுகள் காலடியில் கவியிசைக்க மெலிதாகக் காலூன்றி நடந்து மிளகாய்ச் செடிகளிடம் வந்து நின்றேன்.
கட்டிளம் காளையர் போல் தளதளத்து நின்ற செடிகளில் நான் கைந்து சோகம் கப்பிய முகங்களுடன் சோர்வுற்று தலை கவிழ்ந்து…
நேற்று ஊற்றிய தண்ணீரில் தரை ஈரளித்துக் கிடக்கின்றது. செடியருகே அமர்ந்து உற்று நோக்குகின்றேன் . மண்ணுக்கு மேலாக சுண்டுவிரல் பருமனில் நிற்கின்ற தண்டுகளில் பட்டை உரிக்கப்பட்டிருக்கின்றது. தேமல் விழுந்த தோல் போல், பழுப்பும் வெள்ளையுமாக தண்டின் இரண்டொரு இடங்கள் காயப் பட்டுப்போய்.
“இந்த காயங்கள் எப்படி…?”
தலை தொங்கும் இலைகளை லேசாக நிமிர்த்துகின்றேன். பிடி விட்டதும் மீண்டும் சரிந்து கொள்ளுகின்றன.
உள்ளங்காலடியில் ஏதோ முணுமுணுக்கிறது. முன் சரிந்து அடிபாதத்தை உயர்த்தி விரலால் தடவிப் பார்த்தேன்.
சிலு சிலுவென்று எச்சில் ஒழுகும் நீண்ட உடலுடன் நெளிகின்றது, நாக்கட்டான் பூச்சி, மெதுமெதுவாக மண்ணில் இருந்து முண்டி முண்டி மேலெழும் அதன் முயற்சியின் முணுமுணுப்பேயது. சற்றே நகர்ந்தமர்ந்து கொண்டேன்.
லேசாகக் கொஞ்சம் ஈரமண்ணை தெள்ளி எடுத்து காயம் பட்டி ருக்கும் இடங்களில் பூசினேன் . மனம் முழுக்க ஒரு வேதனையின் கனம்.
எஸ்.எஸ்.எல்.சி.யில் பொட்டனி ‘ தான் படித்தேன். எனது பேவரிட் சப்ஜெக்ட்டும் அதுதான். இந்த பட்டையுரிப்புக்கான சிகிச்சை பற்றி, பரிகாரம் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை எனக்கு.
”ஏட்டுச் சுரைக்காய்…” என்பது இதுதானோ?
அடுத்தநாள் பின் இரவில், அவைகளின் பிரச்சினைக்கான கார ணம் தேடி டோர்ச்லைட்டும் நானுமாக மிளகாய்ச் செடியிடம் வந்த மர்ந்தேன்.
‘நொய்ங் நொய்’கென்று கொசுக்கள் முகத்தில் மோதி, காதுகளில் நுழைந்து வெளியேறுகின்றன. இந்த அகால வேளையில் இங்கு உனக் கென்ன வேலை என்னும் எரிச்சலுன் சுள் சுள்ளென்று கடிக்கின்றன.
செடி செடியாய் டோர்ச் அடித்துப் பார்க்கின்றேன்.
ஒவ்வொரு செடியிலும் பெரிது பெரிதாய் இரண்டு மூன்று ஊரிகள் உட்கார்ந்திருக்கின்றன.
ஓட்டை நெளித்து, நெளித்து ஓட்டுக்கு வெளியே கொல்லன் பட்ட ரைத் துருத்தி போல் கருமஞ்சள் நிறத்தில் சதையைப் பிதுக்கிக் கொண்டு, பிசுபிசுவென்று உமிழ்நீர் ஒழுகிக் கொண்டு…
துருப்பிடித்த குண்டூசிகள் போல் மண் நிறத்தில் நாலைந்து கொம் புகளை நீட்டுவதும் டக்டக்’கென சுருக்கிக் கொள்வதுமாக…!. செடியில் தண்டுகளுடன் கழுத்தை நீட்டி, நீட்டி, வளைத்து வளைத்துக் கவ்வி பிடித்துக் கொண்டு, செடிகளின் இளம்பச்சைத் தோலை உரித்துச் சுவைத்தபடி.
கொசுக்கடியையும் தாங்கிக் கொண்டு டோர்ச்சொளியில் ஒவ் வொன்று ஒவ்வொன்றாக ஓட்டை பிடித்துப் பிடுங்கி உருவி எடுத்து உருவி எடுத்து குப்பையள்ளியில் குவிக்கின்றேன்.
ஒரு பத்துப் பதினைந்துக்கு மேலான ஊரிகள். கொம்பு நீளும் தலை, முகம், தசை அனைத்தையும் உள்ளிழுத்து ஓட்டுக்குள் மறைத்துக் கொண்டு…!
உப்பு நீரைக் கரைத்தூற்றி வெளிக் கானில் வீசி எறிந்தேன்.
அவைகள் வெளியேற்றிய மெலிதான துர்மணம் தலையைச் சுற்ற செய்கிறது.
தனக்குப் பலனளிப்பவற்றைப் பாதுகாப்பதிலும், அல்லாதவற்றை அழிப்பதிலும் மனிதனுக்கு நிகர் மனிதன் தான்
மறுநாள் இரவு, மறுநாள் இரவு என்று கொசுக்கடி, டோர்ச்சொளி, ஊரி அழிப்பு தொடர்ந்தது.
செடிகள் திமிர் விட்டுத் தளதளத்துக் கிடந்தன. இலைக் கக்கங்களில் இருந்து வெள்ளை வெள்ளையாகப் பூக்கள் அரும்பி நின்றன. பூப்பூக்கும் பருவத்தின் தேன் மணம் தென்றலில் இழைந்தது.
நாள்தோறும் அவைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி கொண்டேன். மீண்டும் ஒரு நாள் அதிகாலையில் செடிகள் வாடி நிற்கின்றன. தளதளத்து நிற்கும் குருத்திலைகள் சோர்ந்து சுருட்டிக் கொண்டு கிடக்கின்றன.
குனிந்து உற்றுப் பார்க்கின்றேன்.
துள்ளிக் கிளம்பிய வெள்ளை வெள்ளைப் பூக்களின் குதூகலங் களை அள்ளிக் கொண்டு போனவர் யார்…?
ஒரு மாதிரியான, ஆனால் மகிழ்விற்குரியதல்லாத மணம் ஒன்று செடி நுனிகளிலிருந்து வீசுகின்றது.
குருத்துக்களும், மொட்டுக்களும், பூக்களும் சோடைபட்டுப்போய், மண்நிறமாகி, சுருண்டு சுருண்டு படுத்தபடி..!
சின்னச் சின்னதான சிவப்பெறும்புகள் சாரி சாரியாக, செடிக ளிலும் கூட்டம் கூட்டமாக மொட்டுகளிலும், பூக்களிலும், நுனிக்குருத் துக்களிலும்! மேலேபோவதும், கீழே வருவதுமாக! சிற்றெறும்பின் சுறுசுறுப்புடன், படைநடை பயில்கின்றன.
பச்சைச் செடிகளில் மின்னல் மின்னலாய் செங்கோடிழுத்துக் கொண்டு!
இலைகளை லேசாகத் தொட்டுப் பார்த்த எனது விரல்களில் ஏழெட்டுப் பத்தாக ஊர்ந்தேறி குண்டி உயர்த்திக் குண்டி உயர்த்தி கடிக்கின்றன. ஊசியால் குத்துவது போன்ற அவைகளின் கெடுபடிகள் என்னைக் கோபமடையச் செய்கின்றன.
கோபம் வந்து என்ன செய்ய?
எறும்பு சின்னதுதான்…..! அற்பமானதுதான்…! எந்த ரீதியிலும் சிரேஸ் டனான, பெரியவனான, என்னுடன் ஒப்பிட்டு நோக்கத் தகுதியற்றது தான்..
ஆனாலும் அதை ஒன்றும் செய்ய முடியாத ஏக்கம் என்னை வதைக்கிறது. மனம் வீங்கி வெடிக்கிறது.
“அழித்துவிடு” என்று ஆக்ஞை இடுகின்றது. நினைத்தால் அழித்து விடுவேன் தான்..!
மண்ணெண்ணைய்யும், தீப்பெட்டியும், பந்தமுமாய் கிளம்பினேன் என்றால் எரித்துப் பொசுக்கி விடுவேன்தான்…!
ஆனால் எனது செடிகள்..?
எதிரியை அழிப்பதை விடவும், எனக்குச் செடிகள் முக்கியம்.
என்னுடைய சகலவிதமான செயற்பாடுகளும், போராட்டங்களும் அதன் வளர்ச்சிக்காகத்தான் … செழுமைக்காகத்தான் …. அழிவிற்காகவல் வளர்ச்சிக்காகத்தான் செயற்பாடுக
எனது தோட்டத்துச் செடிகளை நேசிக்கும், விசுவசிக்கும், மகிழ்ச்சி கண்டு பூரிக்கும், வேதனை கண்டு பொருமும் கோபப்படும் நல்ல தோட்டக்காரன் நான் .
பைபிள் கூறும் கிடைப்பதற்கரிய நல்ல மேய்ப்பன்.
அந்தஸ்துகளுக்காகத் தோட்டக்காரன் ஆனவனல்ல.
ஆடுகளை பலியிட்டாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற வர்களே மேய்ப்பர்களாக கொடியுயர்த்தும் காலம் இது. மனம் மீண்டும் அலைகிறது.
“என்ன கொச்சிக்காய்த் தூரடியில் ஆராய்ச்சி…? தேங்காய் தேடியா? மாசி தேடியா?”
சிரித்தபடி ஓடிவந்த அண்ணாச்சியின் குரல், அலைந்த மனதை ஆசுவாசப்படுத்தியது.
இந்த அண்ணாச்சி எனது அந்த நாளைய பள்ளிக்கூட நண்பன்.
இப்போது பஸ் சந்திப்பு மட்டுந்தான். இடைக்கிடை இப்படிச் சந்தித் துக் கொள்வதுண்டு.
எல்லா விதமான கேள்விகள், பிரச்சினைகளுக்கும் ஏதாவதொரு ரெடிமேட் பதில் வைத்திருப்பான். சரியா? பிழையா? என்பது வேறு விஷயம்.
“வந்து பார், இந்த அநியாயத்தை” என்கின்றேன். அருகே வந்து உற்றுப் பார்த்து, குனிந்து அவதானித்துவிட்டுக் கூறுகின்றான், “இதில் என்னப்பா அநியாயம் இருக்கிறது? நீ செடியை மட்டுமே பார்க்கின்றாய். எறும்புகளைப் பார்க்காமல்…!”
எறும்புகளைப் பார் எப்படிக் குதூகலமாய் ஓடித்திரிகின்றன, மேலும் கீழும், கீழும் மேலுமாக.. அத்தனை மகிழ்ச்சி! ஒன்றின் மனக் கஷ்டத்தில் தான் இன்னொன்றின் மகிழ்ச்சி இருக்கிறது.
ஒன்றை ஒன்று ஆக்கிரமிப்பதும்….. ஒன்றை ஒன்று அழிப்பதும்.. ஒன்றை ஒன்று தின்று பசியாறுவதும்… ஒன்றை வருத்தி ஒன்று மகிழ்வதும் தான் இயற்கையின் நியதி… இதில் நியாயம் ஏது? அநியாயம் ஏது?”
“நீ அநியாயம்…அநியாயம் என்று கூக்குரலிடுவதை, அதுவே நியாயம்…அதுவே நியாயம்…என்று கொக்கரிப்போர் இல்லையா?”
இவனே இப்படித்தான்.
“என்னப்பா மௌனமாகிட்டே..! எறும்பையும் பார் என்றதும் குழப்பமாயிடுச்சா! சரிவிடு அடுப்புச் சாம்பலை அள்ளி செடிகளின் மீது தூவி விடு. பிறகு பார் எண்பத்து மூன்றில் நீயும் நானும் ஓடியது மாதிரி, எறும்புகள் தறிகெட்டு ஓடும்… கலவரமடைந்து.
“செடிகளை விட்டிறங்கி உடும்பு போனாலும் பரவாயில்லை கையை விட்டால் போதும் என்பது மாதிரி ஓடும். செய்து பார்! செடிக ளைச் சுற்றி வட்டம் வட்டமாகச் சாம்பலைத் தூவி வை. அதைத் தாண்டி வந்து மீண்டும் எறும்புகள் செடிகளில் ஏறாது! என்ன தோட் டத்தில் குந்தி இருக்கின்றாய் என்று பார்க்கத்தான் உள்ளே வந்தேன். நெறைய வேலை கெடக்கு…. பேரனை வேனுக்கனுப்ப வேண்டும்! கிம்புளா பனிஸ் தேடித்தான் வந்தேன்! நான் வர்றேன்…” என்றபடி நடந்துவிட்டான். சாம்பல்…! எத்தனை முக்கியமானது. எனக்கும் தெரிந்ததுதான்.
சூழலால் மறக்கடிக்கப்பட்டு விட்ட ஒன்றை நினைவு கொள்ளச் செய்தது அந்தப் பழைய நட்பு.
இப்போதே சாம்பலை அள்ளித் தூவி எறும்புகளை கலைந்தோடச் செய்து செடிகளைக் காப்பாற்றி.
சமையலறையை நோக்கி விரைகின்றேன்.
‘டிக்’கென்ற சத்தத்துடன் அடுப்பைப் பற்ற வைக்கின்றாள் மனைவி.
– மல்லிகை 2009.
– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.