கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 11,427 
 
 

”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு முகம் கழுவி வாய் கொப்பளித்தார்.

 

 

 

 

 

 

 

”மாசம் பொறந்துருச்சா சாமி..?” – கார்த்திகை பிறக்க இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ இருக்கு. அவருக்கென்று செல்ஃபில் இருந்து ஒரு சில்வர் டம்ளரை எடுத்து டீ ஊத்தித் தந்தான். மாசம் பொறந்துவிட்டால் நிறைய தம்ளர்கள் வேண்டியிருக்கும்.

”நமக்கென்ன சாமீ மாசம், கெழம. நான் பொரட்டாசில இருந்தே வெரதந்தான!”

”அதே இம்புட்டு முடி தொங்குதோ?”

”ஐயப்பா என்னைக்கி மால போடப் போறீக?” – இவனைக் கேட்டார்.

அதுதானே பிரச்னை. டீக்கடை ஏவாரத்துக்கு மாலை போட்டுத்தான் ஆக வேண்டும். ஊரில் அட்டியில்லாமல் அமலாகும் சட்டம். இல்லாவிட்டால், ஏவாரம் குறையும். சாமி கடை என்று தயக்கமில்லாமல் வருவார்கள். ஆனால், ஏவாரத்துக்காக மாலை போட வேண்டுமா. அப்படிதான் ஏவாரம் பார்க்கணுமா. ஒரே யோசனையாக இருந்தது.

வீட்டில் வழக்கம் போல சுத்தம் செய்யும் வேலை நடந்துகொண்டு இருந்தது. நேத்து ராத்திரி படுக்கிறபோது மனைவியிடம் கேட்டான். ”இந்த வர்ஷம் மாலை போடணுமா?” அவள் இதிலெல்லாம் அழுத்தமானவள். ”ம்… ஒங்க இஷ்டம்!” என்றாள். கழுத வேணும் வேணாம்னு சொன்னாலாச்சும் முடிவெடுக்கத் தோதுமா இருக்கும். மழுப்பிட்டாளே… அந்த ஊசலாட்டத்துடனே எழுந்து கடை திறந்ததில் ஏவாரமே ஊசலாடிக்கொண்டு இருந்தது. இதைத்தானோ மனம் போல வாழ்வு என்கிறார்கள்?

குருசாமி போனதும் மேற்கே விறகுக்குப் போகும் மலையேறிகள் இரண்டு பேர் வந்தார்கள். பெரிய கேரியரோடு சைக்கிள் உருட்டி வந்து நிறுத்தி டீ கேட்டார்கள். போட்டுக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது நிறுத்தி இருந்த சைக்கிளில் ‘பா.விஜய்’ என்று எழுதி இருந்தது. ‘நிச்சயமாக இது இளவயசுக்காரன் சைக்கிளாத்தான் இருக்கும்’ என யூகித்து அவனிடம் கேட்டான்.

”என்னா… பா.விஜய்னு எழுதிருக்கு?”

”ஏன் கமலஹாசன், ரஜினிகாந்த்னு வக்கெலியா?” சடக்கென வார்த்தைகள் வந்துவிட்டன. வருத்தமாக இருந்தது. கோபப்படப் போகிறான். காலை நேரத்தில் நம்ம எரிச்சலை பிறத்தியான் மேல காட்டிட்டமே.

”ம்… வெச்சிருக்கமே. எந்தம்பி பேரு ரசினிகாந்து. எங்க சின்னையா மவனுக்கு கமலகாசெ!” கொஞ்சமும் கோபமே இல்லாமல் இயல்பாக பதில் சொன்னான்.

”பரவால்லயே. முந்தியெல்லாஞ் சாமி பேர்தான் வெப்பாங்க. அதேங் கேட்டே!”

”இதும் சாமி பேர்தான்!” முகஞ்சுளியாமல் பேசினான்.

”சாமி பேரா…!”

”ஆமா. காத்தவராயன் மொத எழுத்து, கா. கமலஹாசன், ராக்காச்சியம்மனுக்கு ரசினிகாந்து!”

மடமடவென குடித்து, காசைத்தந்துவிட்டு சைக்கிளைக் கிளப்பினார்கள்.

”வெளிய போகணும்னீங்க!”மனைவி வந்தாள். லேட்டாக எழுந்ததால் காலைக் கடன் கழிக்கவில்லை. கிராமத்தில் இது சவுகரியம். எந்தக் கடையிலும் வீட்டுப் பொம்பளைகளை கடையில்விட்டுப் போகலாம்.

”என்னா… மாலை போடுறீகளா. இல்லியா? வீட்ல குருணி வேலை கெடக்கு”

”சொல்றேன்!”

சைக்கிளை எடுத்துக்கொண்டுகுளத் துப் பக்கம் மிதித்தான். எதிரே பால் காரர் வந்தார் எம்.எய்ட்டியில். ”பால் வெச்சிருந்தேன், லேட்டாத் தொறந்தீ களாக்கும்?” போகிறபோக்கில் ஒரு விசாரிப்பு.

”ஆமெ!” தலையை ஆட்டினான்.

வீரப்பனார் கோயிலுக்குச் செல்லும் மினி பஸ் இடங்கொள்ளாமல் ஆட்க ளைத் திணித்துக்கொண்டு குளக்கரை ஓரமாய்ச் சென்றது. இந்த பஸ் வந்த பிறகு தோட்ட வேலைகளுக்கு நடந்து செல்கிற ஆட் கள் குறைந்துபோனார்கள். இதன் நேரத்தைக் கணக்கு வைத்தே வேலைகளை அமைத்துக்கொண்டனர். மதியம் 3 மணிக்கு ஒரு ட்ரிப் வருகிற போது வேலை முடித்துத் தயாராக இருப்பார்கள். அங்கங்கே நின்று ஆட்களை அள்ளி வந்துவிடும்.

சங்கிலி கோயிலைத் தாண்டி போக முடியவில்லை. ரோட்டின் ரெண்டு பக்கமும் நரகல். ராத்திரிப் பொழுதில் வரும் அன்பர்கள் குளத்துக்குள் இறங்கிப் போகச் சோம்பேறித்தனப்பட்டு நடைபாதையிலேயே அசிங்கப்படுத்துவது வழக்கமாகிப்போனது. மூச்சை இழுத்து ‘தம்’ பிடித்து சைக்கிளை வேகமாய் மிதித்து நரகல் குவியலைக் கடந்ததும் மூச்சைவிட்டான். கடைமடைப்பகுதியில் நீரொழுக்கல் இருந்தது. அங்கே சைக்கிளைநிறுத்திவிட்டு நடந்தான். வீரப்பய்யனார் கோயிலிருந்துஎதிரே சைக்கிள்களில் சாமிகள் ஐயப்பனுக்கு மாலைபோட்டுக்கொண்டு வந்தார்கள்.

”மாசம் பொறக்கலியே சாமி?” – வந்தவர்களிடம் கேட்டான்.

”நாள் நல்லாருந்துச்சு. ரெண்டு நாள் ஐயப்பனைச் சேத்துச் செமக்கறதுல தப்பில்லை சாமி” – விபூதி மணம் கமழப் பதில் சொல்லிவிட்டுப் பறந்தார்கள்.

முத்துராமலிங்கம் கரும்புத் தோட்டத்துக்கு நடந்தான். வேலிகளில் அரளிச்செடி அடர்த்தியாய் வளர்ந்திருந்தது. காட்டாமணக்கும் நாயுருவிச் செடியும் பின்னி வேலி போட்டிருந்தான். கருவேல முள் வெட்டி இடைவெளிகளில் அடைத்திருந்தனர். முள்ளை விலக்கி உள்ளே நுழைந்தான். அரளிச் செடியில் காய்கள் தூக்கணாங் குருவிக்கூடாய் காய்த்துத் தொங்கின. நேற்று இதே இடத்தில் பவுனு ஆசாரியோடு பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது.

அப்போது இன்னும் மங்கலான காலைப் பொழுது. இதே போல முள்ளை விலக்கி நுழைந்தபோது, அரளிக் காய் களைப் பிடுங்கிக்கொண்டு இருந்தார் ஆசாரி.

”என்னா பவுனுண்ணே, நீங்க இப்படி இந்த நேரத்துல..?” பதற்றத்தில் இவனுக்கு பேச்சு கோர்க்கவில்லை. அவர் எந்தப் பதற்றமுமில்லாமல் பிடுங்கிய காய்களை எண்ணிக்கொண்டு இருந்தார். ”ஒண்ணுமில்லை… மருந்துக்கு!” என்றார்.

”மருந்துக்கா..?”

”ம்… வகுத்த வலிக்கி!”

”என்னா வெளாடுறீகளா..?” – சத்தம் போட்டான். பவுனு, நல்ல சம்சாரிஒழுக் கமான தொழில்காரர். வீடுதான் கோண மாணலாகிப் போனது. யாரையும் அவ ரால் தட்டிக்கேட்க முடியவில்லை. குடிப்பழக்கம் அவரைக் குற்றவாளியாக்கி இருந்தது. மகனே, ‘போடா குடிகாரா’என்று பேசுமளவுக்கு இறங்கிப் போயிருந்தார்.

”பெத்த பிள்ளைக பேசினப்பஒண்ணுந் தெரியலை கடக்கார்ரே. வீட்டுக்கு வந்த மருமக்கமார்கிட்டயும் நல்ல பேர் கெடைக்கலை. பேர்கூட வேணாம்…” – சொல்லும்போதே தொண்டை கம்மியது. ”ஏச்சுப் பேச்சு ஜாஸ்தியாயிருச்சு. இன்னிமே நம்ம வாழ்றதுல அர்த்தமில்ல!”

அரளிக் காயைத் தட்டிவிட்டு, அவரை சைக்கிளில் அழைத்துவந்து, மதியம் வரை கடையில் உக்காரவைத்தான். மகனை அழைத்து எச்சரித்து அனுப்பினான்.

”சாகணும்னு கௌம்பினவங்களத் தடுக்க முடியாது தம்பி. வெட்டியா பெத்த தகப்பன எழந்துராத!”

”பாத்துக்கிறேண்ணா… எல்லாத்துக்கும் விதின்னு ஒண்ணு இருக்குதுண்ணே!” என்று பதில் சொல்லி அழைத்துப் போனான். சரி என்றானா, தப்பு என சொன்னானா?!

மறுபடியும் கடைக்கு வர, ஏவாரம் சூடுபிடித்தது. 11 மணிக்கெல்லாம் பால் தீர்ந்துபோனது.

”பாக்கெட் பால் வாங்கி அடிங்கோய்..!” – எலெக்ட்ரீசியன் கணேசன் யோசனை சொன்னான்.

”வாங்கிட்டு வர்றியா..?”

”இதுக்குத்தே நான் வாய் தெறக்கறதே கெடையாது” – சிணுங்கிக்கொண்டே வாங்கி வந்தான்.

அவனிடம் தனது குழப்பதை இவன் சொன்னான்.

”தெய்வத்தச் செமக்கறதுக்கு யோசிக்கக் கூடாதுண்ணே!”

அவனது பேச்சு இவனுக்குப் பிடித்திருந்தது. சரியோ, தப்போ, உறுதியாய் நிற்கிற மனம் வேண்டி இருக்கிறது. இது ஏன் தனக்கு வாய்க்காமல் போனது. பால் காய்ந்ததும் அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தான்.

”சொன்னாக் கேள்றா. வெட்டியா குடும்பத்துல கொழப்படி பண்ணாத” என்றபடி காங்கிரீட் போடும் வெள்ளையனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான் அம்மாவாசி. தலையை குலுக்கிக்கொண்டு வந்த வெள்ளையன் பொத்தென பெஞ்ச்சில் உட்கார்ந்தான்.தண்ணி போலிருக்கிறது.

”மச்சினா… விட்ரு மச்சினா. தயவுசெஞ்சு இதுல நீ வராத!” – கை நீட்டிப் பேசினான்.

”ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போடுண்ணே” என்ற அம்மாவாசி, ”நான் வராம, ரோட்ல போறவனா வருவா!” என்றான்.

”அவென்ட்டப் போயிச் சொல்லு. என்னிய என்னியவே சொல் லுவ!” – கணேசன் பாய்லரை ஒட்டி உட்கார்ந்தபடி டீ குடித்துக் கொண்டு இருந்தான். அவர்கள் பேச்சு புரியாமலிருந்தது.

”அவன் எப்பிடிறா மாப்ள சொல்றது!”

”யேன்… ஓந் தம்பிதான அவெ?”

”தம்பிதாண்டா… தம்பிதே. அதுக்காக ஒருத்தனப் போயி, ‘நீ கோயிலுக்கு மால போடாத’ன்னா சொல்ல முடியும்?”

டீ வந்தது. ”மொதல்ல இதக் குடிரா. போத தெளியட்டும்!” – கையில் திணித்தான்.

”ய்யே, என்னாப்பா பெரச்சன?” – கணேசன் காலித் தம்ளரை தந்துவிட்டுக் கேட்டான். இருவர் காதிலும் ஏறவில்லை.

”ஒந்தம்பிக்கு இதே பொழப்பாப் போச்சு. இப்பத்தான காதுகுத்து வெச்சான். வெச்சானா… சித்திரைக்கு வீரவாண்டில அந்தப் பிள்ளை தீ சட்டி எடுத்துச்சு. எடுத்துச்சா… அப்புறம் காளியம்மனுக்கு பால் கொடம். இன்னிக்கி சவரி மல. ஒண்ணொண்ணுக்கும் செய்யிறதுக்கு இங்க என்னா காரா ஓடுது? அவன ஒழுக்கமா வேலக்கிப் போகச் சொல்லு மச்சினா!”

இப்போது வழக்கு புரிந்துபோனது கணேசனுக்கு.

”என்னா பொம்பளப் புள்ளைய வீட்டுக்கு அனுப்பிச்சு விட்டானாக்கும்?”

”ஆமா கணேசா. மலைக்கிப் போறாராம்… சட்டவேட்டி எடுக்கக் காசு வேணுமாம். இனி கோயிலுக்குக் கௌம்புறப்ப ஒருக்க வரு வார்ல!”

”பெரிய கிரிம்னலா இருப்பாம் போல ஒந்தங்கச்சி புருச!”

”நான் யாரு தெரிம்ல? டபுள் கிரிம்னலு. அதேன் நைட்டே முடிவு பண்ணிட்டே. நானும் நாளக்கி மால போடப் போறே. நிய்யுஞ் செய்யவேணா, நானுஞ் செய்ய வேணா!”

கணேசனுக்கு கண்ணு முழி பிதுங்கியபோது, இவனுக்கு சிரிப்பு வந்தது.

”வேணாண்டா வெள்ளையா. வீம்புக்குத் தெய்வத்தோட வெளாயாடக் கூடாது” சொல்லிக்கொண்டே வெள்ளையனின் பின்னே ஓடினான் அம்மாவாசி.

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு கடை திறக்கவே சள்ளையாக இருந்தது. மாலை போடாவிட்டால், ஆயிரம் கேள்வி வரும். பதில் சொல்லிக்கலாம்.

‘கட்சிக்கார்ராக்கும்!’ எனக் கிண்டலடிப்பார்கள்.

‘காசு சேந்துருச்சுன்னு கடவுள விட்ற யாக்கும்?’

ஒட்டுதல் இல்லாத செயலை ஏவாரத் துக்காகச் செய்வதுகூட தெய்வ நிந்தனை தானே! யார்ட்ட சொல்ல முடியும்?

”நமக்குப் பொழப்பு கடதாங்க!” – மனைவி நாசுக்காகச் சொன்னாள்.

”டவுன்ல எல்லாம் மால போட்டுத்தே கட நடத்துறாங்களா?”

”அது டவுனு!”

வீட்டிலிருந்தாலும் சிக்கல்தான். கடைக்கு வந்தான். மாலை நேரத்துக்கான பால் கேனில் இருந்தது. பட்டறையை விரித்து ஸ்டவ்வில் எண்ணெய் சரிபார்த்து, பாலை எடை போட்டான். சட்டியை அடுப்பில் ஏற்றிவைத்து தீ மூட்டினான்.

கிண்ணத்தில் சீனி குறைச்சலாக இருந்தது. பல சரக்கு கடைக்குப் போய் வர ஆள் தேடியபோது பவுனாசாரி வந்தார்.

”வணக்கம் சாமீ..!” – என்று கையெடுத்துக் கும்பிட்டவர், ”எதாச்சும் ஒரு பிடிமானம் வேணுமில்லை கடக்கார்ரே!” என்றபடி பெஞ்ச்சில் உட்கார்ந்தார்.

பவுனாசாரி நெற்றியில் சந்தனக் குழம்பு வரிவரியாய் தீட்டி, நடுவில் குங்குமப் பொட்டு பளீரென மின்னியது!

– 17th டிசம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *