சாப விமோசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 191 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோயில் மணி போல் அந்த அறையில் இருந்த சுவர்க்கடிகாரம் இருமுறை அடித்து ஓய்ந்தது. பிற்பகல் மணி இரண்டு என்று அறிந்திருந்தும், அதனை நிச்சயிக்கும் நோக்கில் அந்தக் கடிகாரத்தை ஏறெடுத்துப் பார்த்தான் மதி. “ஆ! வழக்கமாய் இந்த நேரத்தில் அவள் வந்து விடுவாளே? அவளை ஏன் இன்னும் காணவில்லை?” ஏக்கத்தோடு அவன் பார்வை வாசல் பக்கம் சென்றது. வழி மேல் விழி வைத்து அவன் வாசலையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். “நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்? இந்த ஒரு வாரமாக வாரமாக எனக்குள் என்ன ஆகிவிட்டது? நான் ஏன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்? இதைத்தான் விட்ட குறை தொட்ட குறை என்கிறார்களோ?” அதற்கு மேல் அவனால் எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவன் உள்மனம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டது.

‘அவள் வருகிறாள்… வந்து கொண்டே இருக்கிறாள்” என அவன் ஆன்மா குரல் எழுப்பியது. பரிட்சமான ஒருத்தியின் வருகையை அவனின் நாடி நரம்புகளுக்கு அவனது ஆழ்மனம் பறைசாற்றியது. ஆம்! அவன் எதிர்பார்த்தபடியே அவள் வந்துவிட்டாள். வெண்புறா ஒன்று மெல்ல தன் சிறகை விரித்துப் பறந்து வருவதைப்போல் அவள் மெல்ல நடந்து வந்தாள். யாரைக் காண அவன் தவித்துக் கொண்டிருந்தானோ? யாரை எதிர்பார்த்து இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அவளே – அந்தக் கவிதாவே வந்து கொண்டிருந்தாள். கவிதாவின் தரிசனம் அவனுக்குக் கிடைத்தது. ஆனால் அவளை நேருக்கு நேர் பார்க்க அவனால் முடியவில்லை. கண்கள் கூசின. ஒருவித குற்ற உணர்வு அவனைக் கூனிக் குறுகச் செய்தது.

அவன் கண்கள் தானாகவே மூடிக் கொண்டன. அவன் உறங்குபவன் போல் பாசாங்கு செய்தான். அதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? கவிதா அவன் படுக்கையைக் கடந்து செல்வது அவனுக்குத் தெரிந்தது. அவளது காலடி ஓசை மெல்ல மறைந்து காற்றில் கலந்தது. அவள் அவ்விடத்தைக் கடந்து போய்விட்டாள் என்ற தைரியத்தில் கண்களை மீண்டும் திறந்தான் மதி. கவிதாவின் வருகைக்காக ஏங்கித் தவிப்பதும், பின் அவள் வந்துவிட்டாள் என்றால் அவளை நேருக்கு நேர் பார்க்கத் தயங்குவதும் அவனது வாடிக்கையாகிவிட்டது. கவிதாவும் அவனைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது என்பதற்காக அவனைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வதில்லை.

“அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா? நான் இங்கு வந்து ஒரு வாரமாகிறதே. அவள் என்னைக் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லையே? ஒருவேளை அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையோ?”

தன்னையே அவன் சமாதானம் செய்து கொண்டான். இருப்பினும் அந்த மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

“அடப் பைத்தியக்காரா! உன்னை அவளுக்குத் தெரியாமல் இருக்குமா? அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக்கூடிய முகமா இது? உன்னைப் பார்த்த முதல் நாளிலேயே அவள் உதட்டோரத்தில் தவழ்ந்த புன்னகையை நீ கவனித்தாயா? அந்தப் புன்னகைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.”

“அப்படியென்றால்… அப்படியென்றால்… ஆண்டவா! என்னை ஏன் இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாக்கினாய்?” மதியின் மனம் இறைவனிடம் இறைஞ்சியது. மனத்தில் ஒருவித பாரம். தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இது தான் விதியின் விளையாடு என்பதா? அல்லது இறைவன் தனக்குக் கொடுத்த தண்டனை என்பதா?

வேதனையின் விளிம்பில் நின்ற அவன் ‘அம்மா…” என மெல்ல பெருமூச்சுவிட்டான். அவனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மாவைப் பார்த்து மூன்று நாள்களுக்கு மேலாகிறது. அவளைப் பார்த்தாலாவது மனத்திற்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். ”அம்மா… அம்மா…” என அவன் வாய் முணுமுணுத்தது. பாவம் அம்மா! அவள் என்ன தான் செய்வாள்? மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவள். மகனின் வார்த்தையையே வேத வாக்காக எண்ணுபவள். மதியின் பேரில் தான் அவளுக்கு எத்தனை பாசம்? மகன் செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் அதனைத் தட்டிக் கேட்கத் துணியாத பேதை உள்ளம் அந்தப் பெற்ற மனம்.

அவனை அறியாமல் அவன் கண்கள் அந்த அறையைச் சுற்றி வட்டமிட்டன. சிங்கப்பூரில் தலை சிறந்த மருத்துவமனை என்று பெயர் பெற்ற ‘டான் டொக் செங்’ மருத்துவமனை அது. மருந்து வாடை எங்கும் பரவியிருந்தது. எங்கோ ‘ஹோ என்று ஒலித்த ஓலம் காதில் விழுந்தது. நோயால் துடிக்கும் நோயாளிகளின் முணகல் ஒலி ஆஸ்பத்திரி முழுதும் எதிரொலித்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வெண்புறாக்கள் போல் நர்ஸ்கள் அங்கும் இங்கும் நடமாடித் தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தனர். டாக்டர்கள் பம்பரம் போல் சுழன்று தங்கள் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருந்தனர்.

“மிசி….மிசி…”

எனத் தன் பக்கத்துப் படுக்கையிலிருந்த வயதான சீனமாது அமோய் குரல் எழுப்பினாள். “எஸ் கம்மிங்” அதே குரல். கவிதாவுடைய குரல் தான் அது. அவள் தன் பக்கத்துப் படுக்கைக்கு வரப்போகிறாள் என்பதை உணர்ந்த மதி, மீண்டும் தன் கண்களை மூடினான். ஆனால் அவனுடைய உணர்வுகள் விழித்திருந்தன.

“மிசி நான் எப்போ வீட்டுக்குப் போகலாம்?”

“இன்னும் ரெண்டு நாளுல.”

“இதைத்தான் போன வாரமும் சொன்னீங்க.”

“என்ன செய்றது பாட்டி? டாக்டர் நீங்க பூரணமா குணம் ஆகணும் சொல்றாரு.”

“அப்போ எனக்கு இன்னும் வியாதி குணமாகலையா? நான் செத்துடுவேனா?’ கலக்கத்துடன் கேட்டாள் அமோய்.

”சேச்சே! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க குணமாயிட்டீங்க. ஆனா கொஞ்ச நாளுக்கு உங்களை ஒப்சவ் பண்ணணும்னு டாக்டர் சொன்னாரு.”

“எனக்கு ரொம்ப பயமா இருக்குது மிசி. என் பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகளைப் பார்க்காம…” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. நாத் தழுதழுத்தது.

”நோ… நோ… இதுல பயப்பட ஒன்னுமில்லை. யு, ஆர் பெவெக்கிலி ஓகே. டோன் வொரி”

கவிதாவுக்கும் அமோய்க்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் மதி. அமோயின் குரலில் கலக்கம் தெரிந்தது. கவிதா ஏதேதோ ஆறுதல் வார்த்தைகளைக் கூறினாள். விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழுகிறாள் என்பதை மதியால் உணர முடிந்தது. இருவருக்கும் இடையே நடந்த உரையாடலுக்குப் பிறகு அங்கு மௌனம் நிலவியது. கவிதா சென்றுவிட்டாள் என்பதற்கு அடையாளமாக அங்கே நிசப்தம் சூழ்ந்தது. கவிதாவுக்கு எவ்வளவு நல்ல மனசு. இங்கே வந்த இந்தக் கொஞ்ச நாள்களிலேயே அதை அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் அந்த நல்ல இதயத்தை அவன் உடைத்துவிட்டானே? அவன் விழியோரத்தில் கண்ணீர் தேங்கி நின்றது.

கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு வீக்கி விக்கி அழ வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. நினைக்க நினைக்க “சீ என்ன வாழ்க்கை இது? என்ன வேதனை?” என்ற நினைப்பே வளர்ந்து அழுகையை அதிகமாக்கியது. மதிக்குச் சார்ஸ். இருபத்தேழு வயது கூட நிரம்பாத அவனுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் நோய்.

என்னவெல்லாமோ செய்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனித இனத்தின் – சந்திரனில் இறங்கிவிட்டோம் என எக்காளமிடும் விஞ்ஞானிகளின் -கைகளில் பிடிபடாமல் இது நாள்வரை ஒரு மருந்துக்கும் கட்டுப்படாமல் உயிரைப் பலி வாங்கும் பாழும் சார்ஸ். மதிக்கு எல்லாம் வெறுத்துப் போயிற்று. எதைச் சாதிக்க விதி அவனை இப்படி ஓட ஓட விரட்டுகிறது.

“ஒருவேளை கவிதாவுக்கு அவன் செய்த துரோகம் தான் அவனை இப்படி வாட்டுகிறதோ? இதுல துரோகம் என்ன இருக்கிறது? எனக்கு அவளைப் பிடிக்கலை. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்” மறு வினாடி அவன் உள்மனம் ஆறுதல் கூறியது. “டேய் முழுப் பூசணிக்காயைச் சோற்றுல மறைக்காதேடா. பிடிக்கலைனா அப்பவே வேணாம்னு சொல்லியிருப்பீயே. அவள் கூடப் பேசிப் பழகிக் கழுத்தறுத்திருக்க மாட்டே?” என மறுவினாடி அதே மனம் அவனைக் குற்றம் சுமத்தியது.

கவிதா எவ்வளவு இனிமையான பெயர். பெயரைப் போலவே அவளும் பழகுவதற்கு இனிமையானவள். “எஸ். ஐ லைக் ஹ. அதனால் தான் அப்படி ஒரு கண்டிஷன் போட்டேன். அதுக்கு அவ கட்டுப்படலைனா, அதுக்கு நானா பொறுப்பு?” இப்பவும் அவன் பக்கம் நியாயம் இருப்பது போல் அவன் வாதிட்டான். “கேட்பார் பேச்சைக் கேட்டு வீணா அந்தப் பொண்ணு மனசைக் சுக்கு நூறா உடைச்சிட்டீயே?” அவனது மனசாட்சி அவன் மீது குற்றம் சுமத்தியது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சி இன்னும் அவன் மனத்தில் நன்கு பதிந்திருந்தது. ஆறு மாதத்திற்கு முன் நடந்த சம்பவம் அவன் மனக்கண் முன் அரங்கேறியது.

“மதி தரகர் நேற்று போன் பண்ணினாருப்பா. நம்ம முடிவு என்னான்னு கேட்டாரு?”

“நீங்க என்னம்மா சொன்னீங்க?”

“அடுத்த வாரம் சொல்றேன்னு சொன்னேன் மதி”

“அப்படியா?”

“உன் முடிவு என்னப்பா?”

“பொண்ணுவீட்டுக்காரங்க என்ன சொல்றாங்க?”

”தரகர் சொல்றதைப் பார்த்தா அவங்களுக்குப் பூரண சம்மதம்னு தெரியுது”

“நீங்க என்னம்மா நினைக்கிறீங்க?”

“பொண்ணு கண்ணுக்கு இலட்சணமா இருக்கா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா. இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் நீ. உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”

“எனக்குப் பொண்ணைப் பிடிக்கலைம்மா.”

இதை மங்களம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் சற்றுத் தடுமாறிப் போனாள். அவள் குரலில் வியப்பு பிரதிபலித்தது.

“என்ன தம்பி சொல்றே? பொண்ணைப் பிடிக்கலையா? பிடிக்காமலா அவ வேலை இடத்துக்குப் போன் போட்டுப் பேசினே?”

ஆச்சரியத்துடன் மதி தாயாரின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான். இரகசியம் என அவன் நினைத்தது அம்பலத்திற்கு வந்துவிட்டதே என்ற ஆதங்கம். தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிட்டதை என்ணி ஆத்திரம் அடைந்தான். மங்களமே மேலும் பேச்சைத் தொடர்ந்தாள்.

“கவிதா தான் அவ அம்மாகிட்ட சொன்னாளாம். நீ இரண்டு மூனு தடவை அவ வேலை இடத்துக்குப் போன் போட்டுப் பேசினாயாம். இதுல ஒன்னும் தப்பு இல்லை தம்பி. இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம்னு தரகர் கூடச் சொன்னாரு.”

“ஆமாம் அவ கூடப் பேசினேன். பேசினா அவளைப் பிடிச்சிருக்குனு அர்த்தமா? இல்லை அவளைக் கட்டிக்கனும்கிற கட்டாயமா?” கத்தினாள் மதி.

“பொண்ணுக்கு என்னப்பா குறைச்சல்? கண்ணுக்கு இலட்சணமா இருக்கா. கை நிறைய சம்பாதிக்கிறா. ஸ்டாப் நர்ஸா வேலை பார்க்கிறா. அரசாங்க உத்தியோகம். கெளரவமான வேலை. இதுக்கு மேல என்ன வேணும்?

“அதெல்லாம் ஒரு வேலையாம்மா. கண்ட கண்டவங்களையெல்லாம் தொட்டுத் தூக்கிப் பணிவிடை செய்து…சேச்சே. கேட்கவே அருவருப்பா இருக்குது. எனக்கு மனைவியா வரப் போறவ எனக்கு மட்டும் சொந்தமா இருந்தா போதும். மத்தவங்களுக்குச் சேவை செய்யனும்னு அவசியம் இல்லை.”

மங்களம் வாயடைத்துப் போனாள். அந்தப் பேச்சுக்கு அத்துடன் ஒரு முடிவு ஏற்பட்டது. மதியின் மனமாற்றத்திற்கு அவன் நண்பன் கதிரவன் தான் காரணம். மதிவாணனும் கதிரவனும் பால்ய நண்பர்கள். கவிதாவைப் பெண் பார்த்த பிறகு விஷயத்தைக் கதிரவனிடம் சொன்னபோது, கதிரவன் கூறியது இன்னும் அவன் மனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

“மதி உனக்கு என்னப்பா குறைச்சல்? போயும் போயும் நீ ஒரு நர்ஸைத் தானா கட்டிக்கனும்? அதெல்லாம் ஒரு வேலையா? காய்ச்சல் என்ற பேருல நாம் அதை இதைக் காட்ட நர்ஸ்களும் அதைத் தொட்டுத் தடவிச் சேச்சே… சொல்லவே நா கூசுகிறது.”

இதை மட்டும் தானா சொன்னான்? இன்னும் எவ்வளவோ சொல்லி மதியின் மனத்தைக் கெடுத்துவிட்டான். அதன் பிறகு மனத்திற்குப் பிடித்த கவிதா அவனுக்குப் பிடிக்காதவளாகிவிட்டாள்.

மங்களத்திற்கு மதி என்ற மதிவாணன் ஒரே பிள்ளை. கணவனைப் பறி கொடுத்த அவளுக்கு மகன்தான் எல்லாமே. அதனால் அவன் பேச்சுக்கு மறுபேச்சு என்றுமே அவள் சொன்னதில்லை. அப்படி வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டாள். ஆனால் அவளுக்கு என்றுமே தாதிகள் மீது நல்ல மதிப்பும் மதியாதையும் உண்டு. இதற்குக் காரணம் அவள் கணவன் கலைவாணன் நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்ற போது அவள் பலமுறை தாதிகளின் தன்னலமற்ற சேவைகளைக் கண்ணாறக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறாள். நமக்கு அசிங்கமாகத் தோன்றும் பல விஷயங்கள் அவர்கள் அருவருப்பும் கொள்ளாது. பொறுமையுடன் செயல்படுவதைக் கண்டு பூரித்திருக்கிறாள். அத்தகைய புனித தொழிலில் ஈடுபடுபவள் தனக்கு மருமகளாக வரவிருப்பதை எண்ணி மகிழ்ந்திருந்தாள். ஆனால், மதியின் இந்தப் பேச்சின் மூலம் தன் மனக்கோட்டை மண் கோட்டை ஆனதில் அவளுக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.

“பெண்ணைப் பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே. ஏன் வீணாக அவள் வேலையைப் பற்றித் தரக்குறைவாகப் பேச வேண்டும்” எனத் தரகர் பொன்னுசாமி கோபித்துக் கொண்டு மங்களத்திடம் முறையிட்டபோது தான், மதி இந்த வரனைத் தட்டிக்கழிக்கப் பல காரணங்களைக் கூறியது மங்களத்திற்குத் தெரிய வந்தது. தாதிகளைப் பற்றிக் கேவலமாகப் பேசியதை அறிந்து வேதனைப்பட்டாள் மங்களம்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு பல வரன்களைப் பார்த்தும் எதுவும் மதிக்குச் சரி வர அமையவில்லை. கவிதாவின் சாபத்தால் தான் இப்படி நடக்கிறது எனப் பல சந்தர்ப்பங்களில் மங்களம் நினைத்துப் பார்த்தது உண்டு. காலம் யாருக்கும் காத்திருக்காமல் தன் கடமையை செவ்வனே ஆற்றியது. இப்படியே ஆறு மாதங்கள் கடந்து சென்றன. வேலை விஷயமாகப் பெய்சிங் சென்ற மதி இடைவிடாத இருமலுடன் நாடு திரும்பினான். ஆரம்பத்தில் இது சாதாரண இறுமல் என்று எண்ணியிருந்த மதிக்கு மூச்சுவிடக் கஷ்டமாக இருந்தது. மருத்துவரைப் பார்த்துப் பல மருந்து மாத்திரைகளை உண்டான். மங்களமும் தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தைச் செய்து பார்த்துத் தோல்வியைக் கண்டாள். இறுதியில் கடுமையான மூச்சுத் திணறல் நோய் என்ற “முத்திரை குத்தி அவனைப் படுத்த படுக்கையாக்கியது. எந்தத் தொழிலைப் பற்றி அவதூறாகப் பேசினானோ, அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் உதவியின்றி அவனால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளானான்.

டாண்… டாண் என்று மணி ஐந்து முறை ஒலித்தது. சுவர்க்கடிகாரத்தின் அலறல் கேட்டு அவன் தன் சுயநினைவுக்கு வந்தான். மணி ஐந்தாயிற்று. அது நோயாளிகளைத் தரிசிக்கும் நேரமாக இருந்த போதிலும், மருத்துவ ஊழியர்களையும் நோயாளிகளையும் தவிர வேறு யாரையும் அங்கே காண முடியவில்லை. அந்தக் காலமாக இருந்திருந்தால் இந்நேரம் உறவினர்கள், நண்பர்கள் எனக் கூட்டம் அந்த அறையில் நிரம்பி வழிந்திருக்கும். ஆனால் இன்றோ நிலைமையே வேறு. பாழாய்ப் போன சார்ஸ், சாத்தானைப் போல வந்து எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. யாரும் நோயாளியைப் பார்க்கக் கூடாது என்ற நிலைமை. அதனால் அங்கு வெறுமை காணப்பட்டது மதியின் மனத்தைப் போல. சார்ஸ் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கத்தின் அதிரடி நடிவடிக்கை அது. கடுமையான உத்தரவு. அதை மீறி நடக்க யாருக்குத் தான் துணிவு வரும்?

தனிமை அவனை வாட்டியது. அவனைப் பார்க்க யாரும் வரவில்லை. பேச்சுத்துணைக்கு யாரும் இல்லை. அவன் கண்கள் கவிதாவைத் தேடின. இப்பொதெல்லாம் கவிதாவின் நினைப்பே அவன் இதயத்தில் வியாபித்திருந்தது. கவிதாவை அவன் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டான் என்று சொல்வதை விட, அவளை விரும்பத் தொடங்கிவிட்டான் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். தான் மருத்துவமமைனயை விட்டு டிஸ்ஜாச்சானால், தன் மனத்தில் இருப்பதைத் தெரிவிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தான். அதற்கு முன்பாக அம்மா வந்தாள் இதை அவளிடம் சொல்லி அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும் என முடிவு செய்திருந்தான்.

அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சியில் அப்போது கேலிப்படம் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. கேலிப்படம் வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் அதை ரசிக்கும் நிலையில் இல்லை மதி. எரிச்சலுடன் மற்ற ஒளிவலைக்குத் திருப்பினான். அந்த ஒளிவலையில், சார்ஸ் நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவ ஊழியர்களைப் பாராட்டும் வகையில் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றுக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறு காட்சி மதியின் உள்ளத்தை ஈர்த்தது.

 “இவர்கள் சாதாரண வீரர்கள் அல்லர். சார்ஸ் எனும் கொடிய நோயைத் தடுக்கப் போராடும் வீரர்கள். தங்கள் சுக துக்கங்களை மறந்து. ஒவ்வொரு நாளும் இவர்கள் போராடி உயிரைக் காக்கிறார்கள். இவர்களின் தன்னலமற்ற சேவையை எண்ணி ‘மிடிய கோப்’ பெருமிதம் கொள்கிறது. அவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறது. அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி… நன்றி… நன்றி…” என்ற வாசகத்துடன் தொலைக்காட்சிக் கழகத்தினரின் ஏற்பாட்டில் நன்றியுரை நிகழ்ச்சி இடம் பெற்றது. அந்த வாசகமும் அதில் இடம் பெற்ற காட்சியும் மதியின் உள்ளத்தை உருக்கியது. தன்னை அழித்துப் பிறருக்கு. ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியைப் போல. சேவையாற்றும் அவர்களின் கடமையுணர்வைக் கொச்சைப்படுத்திப் பேசியதை எண்ணிக் கலங்கினான்.

உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டபோது தான் ஒரு சிலருக்கு ஞானோதயம் உதயமாகும் என்பார்கள். அதே நிலை தான் மதிவாணனுக்கு ஏற்பட்டது. சந்தனக்காட்டில் நெருப்பு .பிடித்த மாதிரி எண்ணங்களை எதித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்திற்கு இதம் அளிக்கும் மணம் ஒன்றும் இருந்தது. கவிதாவைப் பற்றிய நினைவு தான் அந்த மணம். அவளைப் பற்றிக் கண்ட கனவு தான் அந்த மணத்தின் சுகம். அவனுடைய நினைவுப் பசும் பயிர்களுக்கு கவிதா வித்தாக இருந்தாள். தன் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய அவன் மனம் துடித்தது. ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய அவன் விழைந்தான். ஆனால் ஆண்டவனின் எண்ணமோ….

திடீரென்று மதிக்கு மூச்சு விடச் சிரமமாக இருந்தது. மனபாரத்தின் அழுத்தத்தால் அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. “டாக்டர்… டாக்டர்…” எனக் கத்தினான். குரல்வளையை யாரோ அழுத்திப் பிடிக்கச் சத்தம் வெளிவராமல் தடைப்பட்டது. மூச்சுத் திணறல் வந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது. மதி தன் அருகில் இருந்த மணியை அழுத்தினான். அழைப்பு மணி கேட்டு மின்னல் வேகத்தில் நர்ஸ் உதவிக்கு வந்தாள். அவள் வேறு யாருமல்ல. கவிதாவே தான். அவளைத் தொடர்ந்து டாக்டர்கள் விரைந்து வந்தனர். மதிக்கு ஆக்ஸிஜன், தெரபி முதலியன விரைவிலேயே கொடுக்கப்பட்டன.

என்ன செய்தும் சிறிது நேரத்தில் மதியின் நகக்கணுக்கள் நீலம் பாய்ந்து, அவன் குளிர் ஜூரம் மாதிரி நடுங்க ஆரம்பித்தான். நகக்கணுக்களில் கண்ட நீலம் இப்போது நகம் பூராவும் பரவிவிட்டது. நிலைமையைப் புரிந்து கொண்டாள் கவிதா. மதிக்கு நினைவு தப்பிக் கொஞ்சம் கொஞ்சமாய் மூச்ச அடங்கத் தொடங்கி, நாடித் துடிப்பும் இதயத் துடிப்பும் தேகத்தில் குறைந்து கொண்டே வந்தது. டாக்டர்களுள் ஒருவர் கோரமின் இன்ஜெக்ஷனைச் செலுத்த, மற்றவர் இதயத்தைக் கையால் பிசைந்து கொடுக்க, செயற்கையாய்ச் சுவாசத்தை உண்டு பண்ண முயலும் போதே … சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும் முன்பே… ஆறு மாதத்திற்கு முன்னர் ‘கவிதாவின் சாபத்தால் தான் இப்படி நடக்கிறது’ என்ற மங்களத்தின் நினைப்பை அந்தச் சிகிச்சை உண்மையாக்கிக் கொண்டிருந்தது.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *