சாபத் தீயும் தகர்ந்த சாந்தி மனமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 9,191 
 

முனிவர்கள் வாய் திறந்தால் வரும் சாபமல்ல இது மனிதர்களும் சாபமிடுவார்கள். எப்போது எனில் உயிரின் உருவழிந்து போன நினைவுத் தீ பற்றி ஆவேசம் கொண்டு எரியும் போது மனித மனமென்ன எல்லாமே தகனம் தான் இப்படியொரு தகன விளிம்பு நிலைக்குச் சென்று அனுபவித்த சோகத்தையே விளக்கிச் சொல்லக் கண் திறந்த கரு இப்போது எனக்குள் இருண்டு கிடந்த மேக மூட்டம் விலகி ஒளிச் சூரியனாய் உங்கள் பார்வைக்கு என் சமர்ப்பணம்

இரு தலை முறைக்கு முன்னால் நவீன நாகரீக யுகம் கண்டு மலர்ச்சியு/றாத மிகவும் பின் தங்கிய ஓரு காலப் போக்கில் தான் ஆனந்தனின் கல்யாணம் மிக எளிமையாக நடந்தேறியது பதினான்கு வயதாக இருக்கும் போதே வாழ்க்கையின் பெரும் பொறுப்புகளைக் கட்டிக் காத்துக் கடமையையே கடவுளாக எண்ணும் கர்ம யோக மனப்பாங்கு அவனுக்கு இயல்பாக வந்த பின்னர் சில காலம் கழிந்து அவனின் சுயமான கொந்தளிக்கும் உணர்ச்சி மனதைக் கடிவாளம் போட்டுக் கட்டி நிலை நிறுத்தும் பொருட்டு அவன் செய்து கொண்ட கல்யானம் அது அதுவும் சாகும் தறுவாயில் ஆச்சி அவனிடம் மன்றாடிக் கேட்டுப் பெற்ற வரம் இது

ஆம் மலையேறிவிட்ட இந்தக் காலம் போல் மம்மி டாடி என்று வெள்ளைக்காரன் பாணியில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மறந்து அழைக்கிற திரிபு நிலை போலில்லாமல் அப்பு ஆச்சி என்று பிள்ளைகள் அழைத்த மிகவும் பிற்போக்கான ஒரு சமூக நிலைப்பாடு அப்போது அம்மா அப்பா என்று அழைத்தது கூட அதற்கு அப்புறம் தான் ஆனந்தனின் அப்பு ஐயாத்துரை ஒரு ஏழை கமக்காரன் கமம் செய்வது அப்படியொன்றும் தரங் குறைந்த தொழிலல்ல அதுவும் எவருக்கும் கட்டுப்படாத மிகவும் கெளரவமான தொழில் தானென்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிடிபடுகின்ற வாழ்க்கை ஞானம் ஆனந்தன் மனதில் அது எப்படிப் பட்டதோ? அப்பு இருந்த வரைக்கும் படிப்பொன்றே அவனின் உயிர் மூச்சாக இருந்தது எந்த ஒரு தருணத்திலும் தங்கள் மிக மோசமான ஏழ்மை நிலை குறித்துத் தன் மன வருத்தத்தையோ ஆதங்கத்தையோ மனம் திறந்து வெளிப்படுத்துகிற மாதிரி அவன் அவரோடு முரண்பட்டு நடந்து கொண்டதில்லை மிக இளம் வயதிலேயே அவன் தலையில் பொறுப்புகளைச் சுமத்திவிட்டு அவர் இறந்த போது அவன் கொஞ்சம் இடிந்து தான் போனான் அந்த உணர்வு பூர்வமான சோக இழப்பிலிருந்து அவன் வெளியேறி வரும் போதே ஆச்சியும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு அவரைத் தொடர்ந்து அவளும் போய் விட்டாள் அப்போது அவன் வயது பதினான்கு அவனுக்கு மூத்ததாக இரண்டு அக்காமார் ஒரு தம்பி எல்லோரையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இப்படி அவன் தலை மீது வந்து விடிந்ததே

மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவன் எஸ் எஸ் ஸி வரை மட்டுமே படித்து முடித்து விட்டு வேலக்கு மனுப் போட்டு அதுவும் கிடைத்த பின் அடுத்தபடியாக அக்காமாரின் கல்யாண காரியத்தை ஒரு பெரிய சவாலாக அவன் எதிர் கொள்ள நேர்ந்தது .அந்தக் காலமென்றபடியால் சீர் சீதனம் எதுவுமின்றிச் சொந்தத்துக்குள்ளேயே அவர்களைக் கட்டிக் கொடுத்தபின் தான், தனக்குத் துணையாக ஒரு பெண் வேண்டுமென்ற நினைப்பு அவனுள் பிறந்தது. அதற்கு முதற் காரணம் சாகுந்தறுவாயில் ஆச்சிக்குக் அவன் செய்து கொடுத்த சத்தியம் அவவின் தம்பி மகளான மங்கையை அவன் மணக்க வேண்டுமாம் இன்னொரு காரணம் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் தம்பியைப் பார்ப்பதற்கு ஒரு துணை வேண்டும்

அவனுக்கு நிச்சயிக்கப்பட மங்கை ஏழாலை கிழக்கில் உதித்த சூரியன் அவர்களிருப்பதோ மேற்கில். நடை பயணமாகப் போனால் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகும் அவ்வளவு தூரத்திலிருக்கிறது. எப்போதாவது அபூர்வமாக அங்கு அவன் போய் வந்ததுண்டு அது செம்பூமி அதாவது சிவந்த மண் செம்பாட்டார் என்று அங்கு பிறந்தவர்களைப் பற்றிக் கேலியாகக் கதைப்பார்கள் மஙகையின் அப்பு விதானை வேலை பார்த்த்தவர் ஓய்வு பெற்ற பின் வீட்டிற்கு முன்பாகப் பரந்த அளவில் வளவு இருப்பதால் வாழைத் தோட்டம் செய்து பென்ஷன் வருமானம் போதாததால் வீட்டுச் செலவை ஒருவாறு சமாளிக்க முடிந்தது அவரால் மங்கைக்கு ஒரேயொரு தமையன் மட்டும் தான் பாஸ்கரன் என்று அவன் பெயர். மன்மதன் மாதிரி ஆண்மைக் களை கொண்ட ஒரு கம்பீர புருஷன் அவன். அவனுக்கு வயது இருபதாக இருக்கும் போது ஒரு அரசாங்க உத்தியோகத்தனாக அவன் அந்தஸ்து உயர்ந்தது முதன் முதலாகக் கொழும்பில் வேலை பார்க்கும் ஒரு பெரிய மனிதனாகச் சமூகம் அவனக் கணித்தது

ஆனந்தனைப் பொறுத்தவரை ஊரோடு வேலை பார்க்க நல்ல கிராமத்துச் சூழல்.. எனினும் ஒரு மனக் குறை.. கல்யாணமான பிற்பாடு மங்கை வீட்டில் இருந்து கொண்டு வேலைக்குப் போய் வருவதில் அவன் பல சிரமங்களை எதிர் கொள்ள நேர்ந்தது மல்லாகம் பள்ளிக்கூடத்தில் தான் அவன் ஒரு பயிற்றப்பட்ட கணித ஆசிரியனாக இருந்தான் அவன் ஒரு கணிதப் புலி சின்ன வயதில் யாரோ உறவினரின் தயவால் டவுனிலுள்ள மத்திய கல்லூரியில் தான் அவனின் படிப்புக் கனவு நிறைவேறியது பொறுப்புகள் இல்லாமல் போயிருந்தால் அவன் மேற்படிப்புப் படித்த ஒரு கனவானாகப் பிரகாசிக்க முடிந்திருக்கும். எங்கே விட்டது விதி

மங்கை வீட்டிலிருந்து மல்லாகத்திற்ககு நடை பயணமாகப் போவதென்றால் சரியாக ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகும். அதுவும் வேலைக்குப் போகின்ற அவசரத்தில் மூச்சு வாங்க நடக்க வேண்டும். மங்கையின் வீடு சாதாரண மண் வீடு தான். அதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு முதல் குழந்த பிறந்திருந்த சமயம் ஒரு நாள் அவன் மங்கையிடம் வந்து கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான்
“ நான் ஏழாலை மேற்கிலை காணி பாத்திட்டன் நீ மூச்சுக் காட்டப்படாது’ “ இதற்கு அவள் வாய் திறக்கவில்லை அதற்குப் பதில் சொல்லக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி கொண்ட அனுபவ ஞானம் இல்லாத ஓர் இளம் குருத்து அவள்.. அந்தப் பதினாறு வயதில் அவனின் அவளைப் புரிந்து கொள்ளத் தவறிய முரண்பாடான இத்தகைய நடத்தைக் கோளாறுகளின் முதற் கட்டமாக அப்போது அவளைப் பார்த்து ஆவேசமாக அவன் சொன்னதைக் கேட்டு உள்ளூர அவள் அதிர்ச்சி கொண்டாலும் அதைத் தனது வாழ்வியல் உரிமைக்கான அங்கீகார உண்மைகளை அவனிடம் எடுத்துச் சொல்லி அவனோடு தர்ம யுத்தம் செய்கிற, அளவுக்கு அவள் இன்னும் வளரவில்லையென்பதையே சாட்சி கொண்டு நிலை நிறுத்துவது போல, கைக்குழந்தையோடு மெளன கவசம் பூண்டு அவள் படுத்துக் கிடப்பதைத் தனது அப்போதைய வார்த்தைப் பிரகடனத்துக்கான ஓர் முற்றிப் பழுத்த அங்கீகார வெற்றியாகவே கிரகித்துக் கொண்டு விட்ட மகிழ்ச்சியோடு அவன் வெளியே போனது தோன்றி மறையும் ஒரு கனவு போல் அவள் நெஞ்சில் பதிய மறுத்தது.

அதிலும் அவளுக்கு அவன் இரத்த உரித்தான சொந்த மச்சான் அவனிடமே அவளின் உணர்ச்சிகளுக்கு மாறான அறிவில் சூனியமாகிப் போன ஒரு வெற்றிடம் மனதில் முதல் சுவடு பதித்து அவள் அறியும்படியாகவே இவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் பிரகாசித்துக் கொடி விட்டுப் பறக்கிறதென்றால் அந்நிய புருஷர்களாக வந்து சேர்கின்ற ஆண்கள் பற்றிக் கேட்கவா வேண்டும்

அவர்களுக்கிடையே அப்படியான முரண்பாடுகள் வருவதற்கான முதற் காரணம் அவனுக்கு அவள் வயதளவில் ஒரு குழந்தை மாதிரி இருபது வயது வித்தியாசம் இருவருக்குமிடையில். அவனுக்கு முப்பது வயதாகிற போது தான் அவளை மணம் செய்து கொண்டான் அவளைக் கிழவனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டதாக ஊர் கேலி பேசியது இன்னும் அவள் மனதில் நிற்கிறது அதை மறந்து விட்டு அவன் காலடியே உலகமென்று அவள் இருக்கும் போது தான் அவனுடைய மனம் கொதித்து வெளிப்பட்ட பேச்சு பிளவுபட்ட தொனியில் இவ்வாறு ஒலித்தது

ஏழாலை மேற்கில் பெரிய கல் வீடு கட்டி அவர்கள் குடியேறிய போது அவனுக்கு நடக்கிற கஷ்டம் குறைந்தது என்னவோ. உண்மை தான் ஆனால் அவளுடைய மனதில் கனக்கிற துயரம் தீர்க்க முடியாத ஒரு பிறவிச் சாபமாய் தன்னை வருத்திச் சிலுவை சுமக்க வைத்து விடுமோ என்ற பயத்தில் அவள் தூங்கி விழிக்காத நாட்கள் குறித்து எதுவுமே அறியாதவன் போல அவன் நிலை. அவனுக்குத் தன் தம்பி பற்றிய அதீத கனவு மயக்கம் மட்டும் தான் .அவன் ஓரு படிப்பு மேதையாக வரவேண்டுமென்பதே ஆனந்தனின் நீண்ட நாளைய கனவு. அதற்காகவே தனது வேலை உழைப்பு எல்லாம் என்ற நினைவு மயக்கத்தோடு இருந்த நிலையில் தான் பாஸ்கரனின் சுய விருப்பான கல்யாணத் தேர்வு அவன் கெளரவ நினைப்புக்கே சவால் விடும் ஒரு பெரும் பிரச்சனைச் சூறாவளியாக வந்து அவன் மனதைக் குழப்பிற்று பாஸ்கரனின் அந்தக் காதல் கல்யாணத்தை அவன் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அவனது ஒன்ற விட்ட தங்கை நாயகியின் கல்யாணம் குறித்து அவன் மனதில் ஆழமாக வேரூன்றி விட்ட ஒரு நினைவு விருட்சம் அதன் நிழலில் தானே கற்பனை செய்து இளைப்பாறுகிற சமயத்திலேதான் தன் கல்யாணச் செய்தியை பகிரங்கப்படுத்தி அவர்களுக்குக் குறிப்பாக ஆனந்தனின் காதில் போடுவதற்க்காகப் பாஸ்கரன் ஒரு சமயம் அங்கே வந்திருந்தான் அப்போது அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தை அறையினுள் தொட்டிலில் படுத்திருக்க அதைத் தூங்க வைப்பதற்காக அருகில் அமர்ந்திருந்த மங்கை வாசலில் அவனைக் கண்டவுடன் முகம் மலர்ந்து அவனை வரவேற்பதற்காக அவசரமாக எழுந்து வெளியே வந்தாள்

அன்று ஒரு சனிக்கிழமை என்று ஞாபகம் ஆனந்தனுக்குப் பள்ளி இல்லாததால் அவனும் வீட்டில் தான் இருந்தான்.
“என்ன பாஸ்கரா இந்த நேரத்திலை வந்திருக்கிறாய்? மருமேனைப் பாக்கிற குஷியோ?”என்று கேட்டான் ஆனந்தன்
“நான் வந்தது அதுக்கும் தான். அதோடை இன்னொரு முக்கிய “விடயம். எனக்கு வாற மாதம் கல்யாணத்துக்கு நாள் பாத்திட்டம் அதைச் சொல்லிப் போகத் தான் இப்ப நான் வந்தது”
“ என்ன அதுக்குள்ளை எப்படி, என்னை ஒரு வார்த்தை கூடக் கேளாமல் ஆர் எடுத்த முடிவு இது?”
“மன்னியுங்கோ அத்தான் நான் தின்னவேலியிலை ஒரு பெண்ணைப் பாத்துக் காதலிக்குபடியாச்சு நீண்டகாலமாய் அவவை நான் காதலிச்சுக் கொண்டு வாறன். என்ரை ஒரு சிநேகிதனின் தங்கைச்சி அவ “மங்கைக்குக் கூட இது தெரியாது”
“எனக்கு இதிலை விருப்பமில்லை நாயகிக்கு நான் வாக்குக் குடுத்திட்டன். அவள் எனக்குச் சொந்தத் தங்கைச்சி மாதிரி அவளுக்கு நான் ஆசை காட்டி வாக்குக் குடுத்திட்டன் நீ இப்படி ஏமாற்றினால் பழி என் மீது தானே விழும் அவளைக் கட்டினால் தான் நீ எனக்கு மச்சான் இல்லாட்டால் போ எல்லாத்தையும் நான் அறுத்தெறியிறன் “

இதற்கு மேல் கேட்டுக் கொண்டிருந்தால் வீண் வாய்ச் சண்டை தான் வளரும் என நினைவு கூர்ந்து பாஸ்கரன் முகம் வாடிப் போக எழுந்ததை, ஜீரணிக்க முடியாமல் மங்கைக்குப் பெரும் துக்கம் வந்து நெஞ்சை அடைத்தது இது அவள் மேல் விழுந்த இரண்டாவது அடி முதல் அடி அப்பு ஆச்சியை நிர்க்கதியாய் கை கழுவி விட்டு விட்டு ஏழாலை மேற்குக்கு அவனோடு வந்தது. அது தான் அவையளின்ரை உணர்ச்சிகளோடு விளையாடிய சாதாராண விடயமென்று தூசு தட்டி மறந்து விடலாம். ஆனால் இது புனிதமான கல்யாணம் சம்பந்தப்பட்ட தெய்வீக விடயம். கடவுளோடு மோதிப் பார்க்கிற மாதிரி தானாகவே முடிவு செய்து அண்ணனைக் கேளாமலே இவர் எடுத்த இந்த முடிவுக்குப் பாவம் அண்ணை என்ன செய்யும்? நிச்சயம் இந்தக் கல்யாணம் நடக்கும்.. இதிலை என்ரை தலை தான் உருளப் போகுது. எப்படியாவது நான் உருண்டு தலை தெறிச்சுப் போறன். இவர் தடுத்து நான் போகாவிட்டலும் பாஸ்கரன் செய்யத் தான் போகின்றான் அவனை மலர்கள் தூவி ஆசீர்வதிக்கவிட்டாலும் பரவாயில்லை இவர் மனம் போனபடி அவனைத் திட்டிச் சபிக்காமல் இருக்க வேண்டுமே கடவுளே! அவன் தலையில் இடி விழாமல் நீதான் காப்பாற்ற வேணும்”

இது பற்றி உள்ளம் குமுறி அடிக்கடி அவளோடு சண்டையிட்டு ஆனந்தன் சன்னதமாடினாலும் தன் பிறந்த வீட்டிற்குப் போய் இதைப் பற்றி முறையிட்டுக் கதறியழ முடியாமல் தனக்கு நேர்ந்த அந்தச் சோகம் தன்னுடனேயே கரைந்து நிழலாக வற்றி உயிர் அழிந்து போக வேண்டுமென்பதில் அவள் காட்டி நின்ற தீவிர மெளன விரதம் குறித்து அவளும் இதற்கு உடந்தையோ என்று அவனுக்குச் சந்தேகம் வந்ததில் பாஸ்கரனின் கல்யாணத்தன்று அவனின் கோபம் ஒரு பொங்கி எழும் பிரளய அலையாக ஊர் அறியப் பிரகடனமாகி வெளிச்சத்துக்கு வந்தது.. வீட்டிற்கு முன்னால் இருந்த ஒழுங்கையில் நின்று வாய் குழறிப் பாஸ்கரனைத் தாறுமாறாகத் திட்டித் தீர்த்து மிகவும் உக்கிரத்துடன் ஆவேசம் கொண்டு அவன் போட்ட சத்தத்தினால் மட்டுமல்ல அவன் அப்போது கூறிய கொடூர வார்த்தைகளினாலும் நிலை குலைந்து பரிதவித்து அழுகை குழம்பி வெறித்த நிலையில் உள்ளே ஓடி வந்து பூட்டிய அறையினுள் நிலத்தில் வீழ்ந்து அவள் பெருங் குரலெடுத்துத் தன்னை மறந்து கதறியழுத சத்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாய் கேட்டது

“ இருக்கிறது ஓரேயொரு அண்ணன். அவரின் கல்யாணத்துக் கூட என்னால் போக முடியேலை இவரின் விருப்பங்களை மீறி எதையும் செய்கிற நிலையிலை நான் இல்லையென்பது வேறு விஷயம். அது நான் செய்த பாவக் கணக்காகவே இருந்திட்டுப் போகட்டும். ஆனால் இவர் இப்படியெல்லாம் திட்டிச் சாபம் போடுறதுக்கு ஆளான அண்ணையை நினைச்சால் எனக்கு ஒரே பயமாக இருக்கு. இந்த மங்களகரமான நேரத்திலை போய் மண் வாரிக் கொட்டி இவர் தூற்றுறதாலை அது சாபமாய் அண்ணையைப் பலியெடுத்திடுமோ என்று இப்ப நான் கிடந்து துடிக்கிறன் .கடவுளே! என்ரை அணணையை நீ தான் காப்பாற்ற வேணும்”

அவள் பயந்த மாதிரியே கல்யாணக் களை காட்சி கொண்டு பிரகாசிக்கும் போதே எமனின் பாசக் கயிறுக்குப் பாஸ்கரன் முகம் கொடுக்கும்படியாய் ஒரு விபரீதம் திடீரென்று நேர்ந்தது..க்ல்யாணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. மங்கையின் ஏற்கனவே கழுவாய் சுமந்து கல்லடி பட்டு நொந்து நூலாகி அறுந்து குழம்பி இருள் வெறித்த பார்வைக்கு முன்னால், அவள் பார்த்துக் கொண்டிருக்க வாசலில் கேட்டருகே ஒரு கார் வந்து நிற்பதை ஒரு தினம் அவள் கண்டாள்.. அப்போது கூடவே ஆனந்தனும் இருந்தான். கார்க் கதவு திறந்தவுடன் முதலில் இறங்கிய ஆச்சியைக் கண்டதும் மங்கைக்கு நெஞ்சு பகீரென்றது
“என்னது ஆச்சி ஏன் இந்த இருட்டிய நேரத்திலை இஞ்சை வாறா? அதுவும் அழுது கொண்டு வாறதைப் பார்த்தால் என்னவோ நடந்திருக்க வேணும் போலை எனக்கு நெஞ்சு பட படக்குது, கூட ஆர் பின்னாலை? ஐயோ நடை தள்ளாடி முகம் ஒளியிழந்து அண்ணை என்ன இப்படி வாறார்? பக்கத்திலே அவரைத் தாங்கித் தோளோடு அணைத்துப் பிடித்தபடி கண்ணீர் வழிய வாறது அவரின்ரை புது மனுசியோ?”

அவர்கள் அவசரமாக உள்ளே படியேறி வந்ததும் ஆச்சி பெருங்குரலெடுத்து அழுது கொண்டே சொன்னாள்

“தம்பிக்கு ஒரு கிழமையாய் நல்ல காய்ச்சல். மருந்து எடுத்தும் நிக்கேலை. அடிக்கடி நினைவு தப்பி உன்னைப் பாக்க வேணுமெண்டு அவன் கேட்டதாலை தான் வேறை வழியின்றி இஞ்சை வந்து நிக்கிறம் மருமகன் என்ன சொல்லப் போறாரோ தெரியேலை “

“அதை விடுங்கோ ஆச்சி இப்ப அதே முக்கியம் அண்னன்ரை உயிர் கிடந்து அந்தரிக்குது. .மச்சாள் வாங்கோ. இது என்ன காய்ச்சல் என்று அங்கை சொன்னவை?

மச்சாள் அண்ணனுக்கு ஏற்ற ஜோடி தான் அவரை விட நிறம் மாநிறத்தை.விடக்..குறைவென்றாலும். முகத்திலே வசீகரமான களை தெரிந்தது அவரைப் போல நல்ல எடுப்பான தோற்றம். அவள் முகத்திலே அழுத்தி வைத்திருந்த குங்குமத்தைக் கண்டு அது நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமேயெனத் தனக்குள் பிராத்தனை ஏன் வருகிறது என்று பிடிபடாத மயகத்துடன் அவள் இருக்கும் போது பாஸ்கரனின் புது மனைவிக்குப் பதிலாக ஆச்சி கூறினாள்

“அவையள் மருந்து கொடுத்தும் காய்ச்சல் நிற்கேலையென்றால் எனக்குப் பயமாக இருக்கு ஒரு கிழமையாய் அப்புவோடை நில்லாமல் நான் தம்பி வீட்டிலை நின்று தான் வாறன்”

சரி மச்சாள் நாங்கள் அண்ணையை மானிப்பாய் ஆசுபத்திரிக்குக் கொண்டு போவம்”

அது ஒரு பிரைவேட் ஆசுபத்திரி அந்தக் காலத்து மிஷினரிமார் கட்டியது அதற்கான செலவைத் தான் ஏற்பதாக ஆனந்தன் மிகவும் பெருந்தன்மையுடன் கூறியது அவர்கள் மத்தியில் ஒரு வேத வாக்காக ஒலித்தது. அவனுக்கு அப்போது அவனையறியாமலே மனதை ஈட்டி கொண்டு தாக்குகின்ற ஒரு குற்ற உணர்ச்சியினாலே தான் அவன் நாக்கில் தடம் புரண்டு வந்த அந்த வேத வாக்கு .எல்லாம் நல்லதுக்குத் தான் என்று பட்டது.. எனினும் மனதுக்கு உற்சாகம் வராத புத்தி பேதலித்துப் போன மந்தமான நிலையில் தான் மங்கையின் அந்த நகர்வுகள் ஒரு கனவு போல் நடந்தேறி முடிந்தது. மானிப்பாய் ஆசுபத்திரியில் அவனுக்கு வந்திருப்பது சாதரண காய்ச்சலல்ல அகோரமாய் பற்றியெரியும் நெருப்புக் காய்ச்சல்தானென்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு அதற்கான மருந்துகள் இல்லாமற் போனதால் பாஸ்க்ரனை நல்லபடி குணப்படுத்திக் காப்பாற்ற முடியாமல் போனது யார் செய்த பாவம் ?

மங்கையைப் பொறுத்தவரை அவளின் சாந்தி கொண்ட மனதையே தூக்க்கிப் போட்டு வேரறுத்துத் தீயிட்டுக் கொளுத்துவது போல் அவள் நிலைமை, ஆச்சி அதைவிடப் பரிதாபம். கட்டிய கணவனிருந்தும் மகனை இழந்த பெரும் சோகத்தில் தன்னையே தண்டிக்கிற மாதிரி வெள்ளைச் சேலை கட்டி ஒரு விதவையாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவள் வந்து நின்றதெல்லாம் ஆனந்தனையே மனம் வருந்திக் கழுவாய் சுமக்க வைப்பது போல பாஸ்கரன் இழப்பு தொடர்பான சகல அமங்கல காரியங்களும் அவர்கள் வீட்டிலேயே அரங்கேறி ஜடம் வெறித்து நின்றன

இந்த முற்றிலும் ஜடம் வெறித்த முழு வியாபகமான இருளின் கரிய சுவடுகள் பதிந்த உயிர் விட்ட வெறும் நடைப் பிணமாய் பாஸ்;கரனின் மிகக் கொடூரமான இளம் வயதுச் சாவுக்குப் பின் மங்கை தன்னைத் தன் மனதை இழந்த கோலம் இப்படியிருக்கையில் ஆனந்தனுக்கு மட்டுமே வாழ்க்கை தேவைப்படுவது போல் அவ்வப் போது அவளின் வெறும் நடைப் பிணமாய் சாந்தி மனமே முற்றாகத் தகர்ந்து போன உடற் கூட்டின் ஸ்பரிசத்திலேயே குளிர் காய வீரும்பும் அவனின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு ஈடு கொடுத்து பிள்ளைகள் பெற்றுப் போடுவதற்கு மட்டுமே தன் ஜடம் வெறித்த உடல் உதவுகின்ற அந்த வெட்கக்கேடான நிலையை எண்ணி அவள் தன்னையே நொந்து கொண்டாள் அதனால் வருகின்ற நட்டக் கணக்கும் தன்னையே பலியெடுக்கக் காத்துக் கொண்டிருப்பதாய் அந்த உண்மை அவள் அற்வுக்கு எட்டிப் பிடிபடுகிற போதெல்லாம், அவள் கண் முன்னால் உலகமே இருண்டு போவதாய் உணர்வு தட்டும் உணர்வு வெறித்த அந்த நிலையிலேயே ஆனந்தனின் மனம் திரை மறைந்து போன உடல் வெறிக்குப் பலியாகி அவள் வயிற்றில் அடுக்கடுக்காய் ஆறு குழந்தைகள் வந்து பிறந்தது தனது அதிர்ஷ்டமென்று அவளால் நம்ப முடியவில்லை. மனம் சந்தோஷம் ஒழிந்து தகர்ந்து போன நிலைமையில் அவைகளிற் சில ஆரோக்கியம் குன்றிய மூளை வளர்ச்சி குறைந்த பலவீனமான குழந்தைகளாய் பிறக்க நேர்ந்தது இந்த மண்ணின் பாவமல்ல அதற்கான விதை போட்டு வளர்த்த புண்ணியவானாகக் கண்ணெதிரே நடமாடும் உயிருள்ள ஒரு மனிதன் தான் காரணம் அதுவும் இப்படி விஷ விதை போட்டுத் தன்னைப் பலி எடுக்கத் துணிந்த உயிர் சொந்தமான மச்சான் அந்தப் புனிதமான உறவின் சங்கதிகளே இப்படி உயிர் விட்டுக் காற்றில் பறக்க நேர்ந்த கொடுமையை வயிறெரிந்து நினைக்கும் போது இனி உயிராவது மண்ணாவது எல்லாம் ஜடம் வெறித்த காடு தான். என்று அவள் அழுகை முட்டித் தனக்குள்ளே மெளனமாகப் புலம்பி அழுகிற சப்தம் காற்றோடு கரைந்து போகும் வெறும் நிழலாகக் கடைசி வரை ஆனந்தனின் காதுகளுக்கு எட்டவேயில்லை உயிரை மறந்து நிழல்களையே நம்புகின்ற அவன் புத்திக்கு அது மட்டுமல்ல உயிராய் அங்கு அவள் இருப்பது கூட இரவில் தோன்றி மறையும் வெறும் கனவு போலத் தான் அதுவும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *