(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
தபால்! என்ற குரலைக் கேட்ட தும் தன் அறையில் ஏதோ படித்துக்கொண்டிருந்த மதுரம் வாசலுக்கு ஓடிச் சென்று தபால் காரனிடமிருந்து இரண்டு கவர்களையும் ஒரு பத்திரிகையையும் வாங்கிக் கொண்டாள். ஒரு கவரில் தன் கணவரின் கையெழுத்தில் தன் பெயரைக் கண்டதும் அவள் மனதில் பல உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. கடிதத்தைத் தன் தலைப்பில் மறைத்து க் கொண்டு, தகப்பனாரின் அறைக்குள் நுழைந்தாள். சுந்தரமய்யர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். மேஜையின் மேல் அவருக்கு வந்திருந்த கடிதத்தையும், பத்திரிகையையும் வைத்துவிட்டு மதுரம் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். இரு முறைகள் அந்தக் கவரைத் திருப்பிப் பார்த்துவிட்டு அதைப் பிரித்தாள். கடிதத்தில் மாமியா ருடைய கையெழுத்தைப் பார்த்த தும் அவளுக்குச் சற்று ஏமாற்ற மாய் இருந்தது. ஆனாலும் அவசர மாகப் படித்து முடித்தாள். அவள் கணவருக்கு மிகவும் ஜுர மாக இருப்பதாகவும் அவளைப் பார்க்க அவர் ஆசைப் படுவதாக வும் அவள் மாமியார் எழுதி யிருந்தாள். குழம்பிய மனதுடன் மதுரம் அப்படியே நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். அவளுக் குப் பழைய சம்பவங்கள் ஒன் றன்பின் ஒன்றாய் மனதில் எழுந்தன.
2
அவளுக்குக் கல்யாணமான பொழுது பதினான்கு வயது. அருமையாகப் பிறந்த பெண்ணானதால் கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. நான்கு நாட்களும் ஒரு குதூகல உற்சவமாய்க் கழிந்தன. எல்லாக் கொம்மாளங்களைவிட அவளுக்கு, தான் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த பொழுது அவரைக் கடைக் கண்ணால் பார்த்ததும், அவருடைய கண்களை அவைகள் இரண்டு மூன்று முறைகள் சந்தித்ததும் பளிச்சென்று மின் வெட்டைப் போல ஞாபகத்தில் பாய்ந்தன.
அவளுடைய புக்ககத்தோர் எளியவர்கள் தான், மேலும் அவளுடைய தந்தையும் பெரிய சம்சாரி. ஆனால் ஸ்ரீனிவாஸன் நல்ல அழகும் அறிவும் பொருந்தியவன். சுந்தரமையர் கோரி யிருந்த வரனும் அத்தகைய வரன்தான். ஏனெனில் ஏழை மாப்பிள்ளையை வீட்டுடன் வைத்துக்கொண்டிருக்கலாம், பெண்ணையும் விட்டுப் பிரியவேண்டாம் என்று அவர் கருதினார்.
ஸ்ரீனிவாஸன் பீ.ஏ. பட்டம் பெற்று சட்ட கலாசாலையில் எப். எல். பரீட்சை தேறியிருந்தான். ஆனால் மேற்கொண்டு பரீட்சைக்குப் படிக்கப் பணமில்லை. அந்த நிலையில் அவன் வரன்களை ஆராய்ந்துகொண்டிருந்த சுந்தரமையர் கண்களில் தென்பட்டான். அவர் அவனுடைய மேல் படிப்பையும், அதற்குப் பிறகு அவன் பிராக்டிஸ் தொடங்குவதற்குரிய சௌகரியங்களையும் தாமே செய்து கொடுப்பதாகச் சொல்லித் தம் பெண்ணையும் கல்யாணம் செய்வித்தார்.
ஐந்தாம் நாளன்று ஸ்ரீனிவாஸனும் அவன் குடும்பத்தார்களும் ஊருக்குப் புறப்பட்டபொழுது ஏன் உடனே போகவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. விடுமுறை கழித்துக் கலா சாலை சேர்ந்து தன் தகப்பனார் வீட்டிலேயே வாசிப்பார் என்று அவளுக்குத் தெரியும். அன்று அவர் எப்படியோ அவளை அரை நிமிஷம் தனியாகக் காணச் சமாளித்து, எவ்வளவு அன்புடன் தாம் போய்விட்டுச் சீக்கிரத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார்!
பிறகு அவர் பி.எல். பரீட்சை தேறிவிட்டு ஒரு வருஷம் அப்ரெண்டிஸாகவும் இருந்தார். அந்த இரண்டு வருஷங்களில் மதுரமும் எஸ்.எஸ்.எல்.ஸி. தேறிவிட்டாள். அவ்விரு வருஷங்களும் ஓர் ஆனந்தக் கனவாய்க் கழிந்துவிட்டன. சாயங் காலந்தோறும் அவள் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்ததும் தன்னை நேர்த்தியாய்ச் சிங்காரித்துக் கொண்டு, அவருடன் வெளியே செல்லத் தயாராய் இருப்பாள். அவர் வீட்டிற்கு வந்து டிபன் சாப்பிட்டதும், இருவருமாய் எங்கேயாவது உலாவிவிட்டு, அஸ்தமித்த பிறகு தான் வீட்டிற்கு வருவார்கள்.
ஒரு வருஷம் அப்ரெண்டிஸ் வேலை முடிந்தபின், ஸ்ரீனிவாஸனுக்கு மேலும் மாமனார் வீட்டில் தங்கப் பிடிக்கவில்லை. ஆறுமாதங்களாய்த் தன் மாமியார் தன்னைக் கொஞ்சம் அவமதித்ததை அவன் கவனித்து வந்தான். அதுவுமல்லாமல் அவனுடைய உறவினர்கள் எவராவது அவனைப் பார்க்கவந்தால், அவர்கள் தகுந்த மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பதை அவன் உணர்ந்தான். இதை அவன் ஜாடையாக மதுரத்திடம் சொன்னான்.
ஆகவே அப்ரெண்டிஸ் வேலை முடிந்த பிறகு அவன் மெதுவாக மதுரத்திடம் தனிக் குடித்தனம் செய்வதைப் பற்றிப் பிரஸ்தாபித்தான்.
“நாம் இங்கேயே இருந்தால் ஒரு கவலையுமில்லாமல் இருக்கலாமே,” என்றாள் அவள்.
“அப்படி இல்லை. இப்போது நாம் பேசுவது, போய் வருவது எல்லாவற்றையுமே மற்றவர்கள் முகம் பார்த்துச் செய்யவேண்டியிருக்கிறது. நம் வீடு என்று இருந்தால் நாம் நம் இஷ்டப்படி இருக்கலாம் இல்லையா?” என்றான்.
“ஆனால் அப்பா என்னை விட்டு விட்டு இருக்கமாட்டாரே!”
“வேறு ஊருக்கா போகிறோம்? இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இங்கு வந்துவிட்டால் போகிறது,” என்று சொல்லி, அவன் அவளை ஒரு வழியாய்த் தன் இஷ்டத்திற்கு இணங்கும் படிச் செய்தான்.
சுந்தரமையரும் சங்கரியம்மாளும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாப்பிள்ளையும் பெண்ணும் தங்களுக்குத் தனிக் குடித்தனம் செய்ய ஆசையாக இருப்பதாய்ப் பிடிவாதம் பிடித்தனர்.
சங்கரியம்மாள் ” இது சம்பந்திகளின் தூண்டுதலாக இருக்க வேண்டும்” என்று அவர்களை வரம்பின்றி சினேகிதர்களிடமும் வேலைக்காரர்களிடமும் திட்டினாள்.
இதற்கு நடுவில் ஸ்ரீனிவாஸன் தஞ்சாவூரிலிருந்த தன் பெற்றோர்களின் வீட்டிற்குத் தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு ஒரு முறை சென்று வந்தான். மதுரத்தைப் பட்டணத்திலேயே விட் டுச் சென்றால், – தான் திரும்பி வருவதற்குள் அவள் தாயார் அவள் மனதை மாற்றிவிடுவாளோ என்று அவனுக்குப் பயம். மாமியார் மாமனாருடன் பழகியதில் மதுரத்திற்கு அவர்களை மிகவும் பிடித்துவிட்டது.
கடைசியில் விதமாக மதுரமும் அவள் கணவனும் ஒரு சிறிய வீட்டில் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தனர். வீட்டின் வாசலில் “ஸ்ரீனிவாஸன் பி.ஏ., பி.எல்., என்ற இனாமல் போர்டு தொங்கிற்று. சுந்தரமையர் தன் பெண்ணின் பொருட்டு விதவிதமான அழகான சாமான்கள் வாங்கி வீட்டை நிரப்பினார்.
ஆனால் பிராக்டிஸ் ஆரம்பித்தவுடன் வரும்படி வருகிறதா? பணத்திற்குச் சுந்தரமையர் கையைத்தான் அவர்கள் எதிர் பார்க்க வேண்டியிருந்தது. சங்கரியம்மாள் முதலில் அவர்களுக்குப் பணம் உதவக்கூடாது என்றாள். ஆனாலும் தன் பெண் தானே? ஆகவே அவளுடைய மனது பிறகு இளகிவிட்டது.
பிராக்டிஸ் ஆரம்பித்து ஆறு மாதங்கள் கழிந்தன. ஸ்ரீனிவாஸனுக்கு வரும்படி மாதம நாற்பது, ஐம்பது ரூபாய்களுக்கு மேல் கிடைக்கவில்லை. அவர்கள் தனி வீட்டில் இருக்க ஆரம்பித்தபின் அவனுடைய தாயார் தகப்பனார், சகோதர சகோதரிகள் யாராவது அங்கு வந்துபோய்க் கொண்டிருந்தனர். எப்பொழுது பிள்ளை நன்றாகச சம்பாதிப்பான், தாங்களும் அவனிடம் போய் இருக்கலாம் என்று அவனுடைய பெற்றோர்கள் கனவு கண்டு கொண்டிருந்தனர்.
முதலில் மதுரத்திற்கு அவர்கள் வந்துபோவது சகஜமாக இருந்தது. ஆனால் தாயின் போதனை ஏற ஏற, அவளுக்கு அவர்களுடைய வருகை பிடிக்கவில்லை. சிற்சில சமயங்களில் அவர்கள் ஏழை என்பதை ஸ்ரீனிவாஸனிடம் அவள் ஜாடையாய்ச் சுட்டிக் காட்டினாள். நாளாக ஆக அவளுக்கு இந்தக் குணம் வளர்ந்துகொண்டே வந்தது. தன் தகப்பனார் கணக்கில்லாமல் பணத்தைக் கொடுத்துத் தங்கள் குடும்பத்தை நடத்தியபொழுது, இவர்கள் வேறு தண்டச் சோற்றுக்கு வரவேண்டுமா, என்று அவள் எண்ணிக் கொள்வாள். அவர்கள் யாராவது வந்தால் தனக்குச் சுரம் என்று போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துவிடுவாள். இல்லாவிட்டால் பிறந்தகத்திற்குப் போய்விடுவாள். சமைத்துப் போட்டால் அவர்களுக்கு ஜீரக ரஸமும் சாதமும்தான்.
“இப்படிச்செய்கிறாயே. மதுரம்?” என்று ஸ்ரீனிவாஸன் கேட்டுவிட்டால் வீட்டில் ரகளை தான்.
”ஆமாம், நமக்கு வரும் ஐம்பது ரூபாயில் வேறு என்ன சாதம் சாப்பிடமுடியும்னு நினைக்கிறீர்கள்? இந்த மட்டும் அப்பா கொடுக்கிறாரோ, குடும்பம் கௌரவமாக நடக்கிறதோ” என்று அவள் சொல்லுவாள்.
கொஞ்சநாள் இந்தச் சூடான சொற்களை ஸ்ரீனிவாஸன் பொறுமையாகவே ஏற்றுக் கொண்டு வந்தான். ஆனால் ஒரு எவ்வளவு நாட்கள் புருஷன் தான் பொறுக்கமுடியும்.
ஒருநாள் அவன் தங்கை கமலா செங்கற்பட்டிலிருந்து அவனைப் பார்க்கவந்தாள். அவள் மறு நாள் காலையிலேயே புறப்பட்டுப் போவதாக இருந்ததால், மதுரத்தை அன்று சாயங்காலம் ஸினிமாவிற்குப் போகலாமா என்று அவள் கேட்டாள். அந்த சமயத்தில் ஸ்ரீனிவாஸனும் அங்கு வந்து சேர்ந்தான்.
“சினிமா போவதென்றால் ரூபாய் வேண்டாமா? அது யார் கையில் இப்பொழுது துள்ளுகிறது?” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து போய் விட்டாள் மதுரம்.
கமலாவிற்கு முகம் சுண்டி விட்டது. ஸ்ரீனிவாஸனும் ரோஸத்துடன் குமுறினான். ஆயினும் மறுநாள் தன தங்கை ஊருக்குப் போகும்வரை அவன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தான்.
மறுநாள் அவளை ரயிலேற்றி விட்டு ஸ்ரீனிவாஸன் வீட்டிற்கு வந்தான். அவன் பின்னாடி யே வாசற் கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்து மதுரம் மாடிக்குச் செல்லப்போவதை அறிந்ததும் அவளை அவன் கூப்பிட்டான். அவள் சிரித்துக் கொண்டே அவனருகில் வந்து அமர்ந்தாள்.
“ஏன் மதுரம் நேற்று கமலாவின் எதிரில் அப்படிப் பேசினாய்?” என்று அவளை வினவினான்,
“நான் உள்ளதைத்தானே சொன்னேன்!”
“என்னை அவளெதிரில் அப்படித்தானா அவமானப் படுத்த வேணும்?”
“என்ன அவமானம்? அவர்கள் உங்கள் மனிதர்கள் தானே?”
“கொஞ்ச நாளாகவே இப்படி நடத்து கொள்கிறாய். இனி மேல் என்னால் இதைம் பொறுக்க முடியாது. உனக்கு என்னுடன் இருக்க இஷ்டமில்லாவிட்டால் உன் தகப்பனாரிடம் போய்விடு.”
“நீங்கள் எப்படிக் காலக்ஷேபம் செய்யப் போவதாக உத்தேசம்? நான் இங்கில்லா விட்டால் அப்பா ரூபாய் கொடுக்கமாட்டார்.”
“எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன். என்னைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்.”
உடனே மதுரத்திற்கு ரோஸம் வந்துவிட்டது. ஒரு வண்டி கூப்பிட்டுத் தன் சாமான்களைத் தூக்கிக்கொண்டு தன் தகப்பனார் வீட்டிற்கு அன்று சாயந்திரமே சென்றுவிட்டாள். நான்கு நாட்கள் கழிந்தால் அவள் தானே திரும்பி வந்துவிடுவாள் என்று ஸ்ரீனிவாஸன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் வரவில்லை. ஒன்றரை மாதம் வீட்டிலே தங்கியிருந்து பார்த்தான். அவனுக்குச் செலவு கட்டிவரவில்லை. மதுரமும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆகவே அவன் தன் மாமனார் வாங்கிப் போட்டிருந்த சாமான்களை எல்லாம் ஒரு வண்டியிலேற்றி அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டு விளம்பர போர்டைக் கழற்றிக்கொண்டு தஞ்சாவூருக்குச் சென்று விட்டான். மதுரததிற்குப் பச்சாத்தாபம் பிறந்து, தானே திரும்பிவரும் வரையில் தான் அவளுக்காகக் காத்திருப்பதென்று நிச்சயம் செய்து, அவளைப் பார்க்காமலேயே சென்று விட்டான்.
ஒரு வருஷத்திற்குப் பிறகு அவனுக்கு அங்கே நன்றாகப் பிராக்டிஸ கிடைத்தது என்று சந்திரமையர் கேள்விப்பட்டார்.
தகப்பனார் வீட்டிற்கு வந்த மதுரமோ நாளாக ஆகத் தன் தவறைத் தானே உணரலானாள், ஆனாலும் அவர் முதலில் தன்னைக் கூப்பிடட்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று. கொஞ்சம் நாளில் அவளுக்கு அந்த வைராக்கியமும் போய்விட்டது. தானே போனால் என்ன குற்றம் என்று தோன்றிற்று. தாயாரிடம் சொல்லப் பயந்து கொண்டு இரண்டு நாட்கள் சும்மா இருந்தாள். மூன்றாம் நாள் சங்கரியம்மாளும் சுந்தரமையரும் ஏதோ பேசிக்கொண்டிருந்த பொழுது, அங்கே போய்த் தான் மறுநாள் கணவன் வீடு செல்வதாகச் சொன்னாள்.
“போடீ போ! உனக்கிருக்கும் சொத்திற்கு அவன் தானே உன் காலில் வந்து விழுவான்; அவனிடம் நீ போக வேண்டாம்!” என்று அவர்கள் போதனை செய்தார்கள். அவள் அதற்குமேலும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பிக்கவே, சுந்தரமையர் கண்டிப்பாக அவள் அங்கு போகக் கூடாது என்று சொல்லி விட்டார். அதற்கு மேல் அவளுக்குப் பிடிவாதம் பிடிக்கத் தைரியம் எழவில்லை.
இச் சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்கெல்லாம், ஸ்ரீனிவாஸன் தஞ்சாவூருக்குச் சென்று விட்டான் என்ற சமாசாரத்துடன், சுந்தரமையர் அவனுக்கு வாங்கிக் கொடுத்த சாமான்கள் வந்து சேர்ந்தன.
இப்பொழுது மதுரம் தன் புருஷனின் வீட்டிலிருந்து வந்து ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. தன்னை அவரிடம் கொண்டு விடுமாறு தன் தாயாரைப் பலமுறை கெஞ்சினாள்.ஆனால் அவளுடைய வேண்டுகோள்கள் சங்கரியம்மாளிடம் பலிக்கவில்லை.
3
இந் நிலையில் தன் கணவருக்கு உடம்பு சரியாக இல்லை என்ற கடிதம் வரவே மதுரம் குழம்பிப் போய்விட்டாள். தாயாரிடம் கடிதத்தைக் காண்பித்தால், அவள் அதிலிருந்த செய்தியை நம்பமாட்டாள் என்று அவளுக்குத் தெரியும். சற்று நேரம் யோசித்தாள். வேறு வழி தெரியாமல் கடிதத்தை எடுத்துக் கொண்டு தாயாரையே தேடிச் சென்றாள்.
சங்கரியம்மாள் தோட்டத்தில் மேல்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். மதுரத்தைப் பார்த்ததும் “எனனடி கையில் கடுதாசு” என்று வினவினாள். மதுரம் அவளிடம் கடிதத்தைக் கொடுத்தாள். அதைப் படிக்கையிலேயே சங்கரியம்மாளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“பேஷ், இப்படித் தந்திரம் செய்ய ஆரம்பிச்சுட்டாளா? அவனுக்குத் தானே வந்து உன்னைக் கூப்பிடத் துப்பில்லையாக்கும்?” என்று வைதுகொண்டே கடிதத்தை எடுத்துக் கொண்டு கணவரின் அறைக்குச் சென்று, அதை அவரிடம் காட்டினாள்.
அவர் அதைப் பார்த்துவிட்டு “இப்போ பணம் முடையாக்கும். இந்தப் பக்கம் வரட்டும் சொல்லறேன்” என்று கூறினார்.
அறையின் வெளியிலிருந்து இவைகளை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மதுரத்திற்குக் கோபம் பொங்கிற்று. பேசாமல் தன் அறைக்குச் சென்று அழுது கொண்டே படுத்து விட்டாள். பிறகு பத்து நாட்கள் அழுது புரண்டு சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்துப் பார்த்தாள். ஆனால் பெண்ணின் பிடிவாதம் பணத்தின் செருக்கின் முன் தோல்வி அடைந்தது.
4
கடிதம் கிடைத்த பதினொன்றாம் நாள் காலை, சுந்தரமையரின் வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. அதிலிருந்து ஸ்ரீனிவாஸன் கறுத்து, இளைத்துப் பார்க்கவே ஜூரக்காரன் என்று விளங்கும்படி, இறங்கினான். உள்ளே ஆபீஸ் கட்டுகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த சுந்தரமையர் வண்டிச் சப்தம் கேட்டு வாசலுக்கு வந்தார். மாப்பிள்ளையைப் பார்த்ததும் பல மாதங்களாய் அவர் அடக்கி வைத்திருத்த கோபம் மடைதிறந்து வெகு வேகமாய்ப் பாய்ந்தது.
“என்னடா! பணமில்லாது போகவே இங்கு வந்து விட்டாயா? மூஞ்சியைப் பார்த்தாலே தெரியறதே”, என்று வரம்பு கடந்து இரைய ஆரம்பித் தார். அதற்குள் சங்கரியம்மாளும் வாசலுக்கு வந்து சேர்ந்தாள்.
“நான் மதுரத்தை ஒரு முறை பார்த்துவிட்டுப் போய்விடுகிறேன். நான் இங்கிருக்கவோ பணம் கேட்கவோ வரவில்லை,” என்று நிதானத்தை இழக்காமலே ஸ்ரீனிவாஸன் மொழிந்தான்.
“என் வீட்டு வாசற்படியை நீ மிதிக்கக்கூடாது” என்று கர்ஜித்தார் சுந்தரமையர். அப் பொழுது தான் ஸ்னான அறையிலிருந்து வெளி வந்த மதுரம் வாசலில் இரைச்சலைக் கேட்டு அங்கு ஒடிவந்தாள். ஆனால் உடனே அவளுடைய தாயார் அவளை இழுத்துச் சென்று ஓர் அறையில் போட்டுப் பூட்டி விட்டாள்.
ஸ்ரீனிவாஸன் அதற்கு மேலும் அங்கு நிற்க இஷ்டப்படாமல் தான் வந்த வண்டியிலேயே திரும்பிவிட்டான். எல்லோரெதிரிலும் அவமானப்படுத்தப்பட்டது அவன் மனதைப் புண்ணில் இட்ட கோல் போலக் குத்திற்று.
ஊருக்குச் சென்றதும் பிரயாணக் களைப்பும் ஏக்கமும் வியாதியுடன் சேர்த்து அவனை வாட்ட, அவன் ஒரே படுக்கையாகப் படுத்துவிட்டான். அவனுடைய தாயாருக்கோ தான் இப்படிப் பணத்திற்கு ஆசைப்பட்டு சுந்தரமையர் வீட்டில் போய்ச் சம்பந்தம் செய்தோமே என்ற வருத்தம் நெஞ்சைப் பிளந்தது.
ஒரு வாரம் மெள்ள மெள்ளக் கழிந்தது. ஸ்ரீனிவாஸனின் நிலை மேலும் மேலும் மோசமாயிற்று. டாக்டர்களும் கை விட்டுவிட்டனர்.
எட்டாம் நாள் காலை அவனுக்கு மதுரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. தான் செய்த தப்புகளுக்கெல்லாம் அவனை மன்னிப்புக் கேட்டு விட்டு, தான் எப்படி யாவது அவனிடம் வெகு சீக்கிரம் வந்து சேர்ந்து விடுவதாகவும் அவள் எழுதியிருந்தாள்.
கடிதத்தை அவன் நான்கு முறைகள் திருப்பிப் திருப்பிப் படித்தான். பிறகு அதைத் தன் தலையணையின் அடியில் வைத்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டான். அன்று சாயந்திரமே அவனுடைய ஆத்மா பணப் பேய் விட்டு பிடித்த உலகை அகன்றது.
– மங்கை, ஜூலை 1947.