கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 162 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1

அவள் தாத்தாவான அந்தக் கிழவனின் பெயர் எனக்குத் தெரியாது. கோகுல்தாளின் பங்களாவில் கிழவன் தோட்ட வேலை செய்துவந்தான். பங்களா வைச் சுற்றி நான்கு புறத்தில் தோட்டம். அதில் ஒரு மூலையில் கிழவனின் குடிசை. குடிசையில் கிழவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. அவனுக்கு ஒரு பெண் மட்டும் இருந்தாள். அவளை நாட்டுப் புறத்தில் ஒருவனுக்குக் கட்டிக்கொடுத் திருந்தார்கள். வருஷத்தில் எப்போதாவது ஒரு தடவை அவள் வந்து தகப்பனைப் பார்த்துப் போவாள். கிழவன் கிட்டத்தட்ட எழுபது பிராயத்தை எட்டிப் பார்த்து விட்டான். உடல் தளர்ந்துவிட்டது. இருபது வருஷமாய் வேலை செய்தவனாயிற்றே என்று கோகுல் தாஸ் வீட்டில் இன்னும் அந்தக் கிழவனை வைத்திருந்தார்கள்.

கிழவனின் வாழ்க்கை நிர்மானுஷ்யமான இடத்தில் இருக்கும் தடாகத்தின் தெளிந்த நீர்போல் சலனமற்றிருந்தது. காற்றடித்தால் நீர்ப்பரப்பில் அலை மோதுவதுபோல் அவன் வாழ்க்கையிலும் சலனத்தை உண்டுபண்ணும் நிகழ்ச்சி ஒன்று ஒரு சமயம் நேர்ந்தது ; அவன் பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று ஒரு நாள் கடிதம் வந்ததும், சுருக்கம் விழுந்து சதை தொங்கிக்கொண் டிருந்த அவன் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. குழி விழுந்து மங்கிப் போயிருந்த அவன் கண்களிலும் ஒரு பிரகாசம் தோன்றியது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. அடுத்த வாரம் வந்த கடிதத்தில், அவன் மகள் ஜுரம் கண்டு இறந்து போய்விட்டாள் என்று அவன் மாப்பிள்ளை எழுதியிருந்தான். யாரோ கடிதத்தைப் படித்துச் செய்தியைத் தெரிவித்தார்கள். கிழவன் இரண்டு கைகளாலும் தலையைக் கெட்டி யாய்ப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டான்.

மூன்று மாசங்கள் சென்றன. தன் மாப்பிள்ளை இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டான் என்று கேள்விப்பட்டுக் கிழவன் கிராமத்துக்குச் சென்றான். தன் பெண்ணின் குழந்தை தாயுடன் இறந்து போகாமல் உயிரோடு இருப்பதைப் பார்த்து, மாற்றாந் தாய் சரியாக வளர்க்கமாட்டாள் என்று பயந்து, தான் வளர்ப்பதாய் அதன் தகப்பனிடம் கூறிக் குழந்தையை எடுத்து வந்துவிட்டான்.

பங்களாவில் பரபரப்பு உண்டாயிற்று. கோகுல் தாஸும் குழந்தையைப் பார்க்க வந்தார்.

“ஆமாஞ் சாமி; எம் பொண்ணுடைய கொயந்தைங்க! இதும் அப்பன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிணான். இனிமே இதை யார் கவனிக்கப் போறாங்க? அதான் நான் வளக்கலாமுன் எடுத் துக்கினு வந்துட்டேன். எனக்குத்தான் இனிமே யார் இருக்காங்க? என் கொயந்தை எனக்கு வெச்சுட்டுப் போன ஆஸ்திங்க இது!” என்றான் கிழவன்.

குழந்தை, தரையில் விரிக்கப்பட்டிருந்த ஒரு கந்தல் துணியின் மேல் படுத்துக்கொண்டு கால்களையும் கைகளையும் மடக்கி மடக்கி உதைத்துக்கொண்டிருந்தது.

கோகுல்தாஸ் சிரித்துக் கொண்டே, “நன்றா யிருக்கிறது! இத்துனூண்டு குழந்தையை வைத்துக் கொண்டு உன்னால் காப்பாற்ற முடியுமா? இதற்குப் பால் யார் புகட்டுவார்கள்? மருந்து யார் கொடுப் பார்கள்? யார் குளிப்பாட்டுவார்கள்? இதெல்லாம் ஒரு பெண்பிள்ளையின் வேலையாச்சே ? உன்னால் முடியுமா, கிழவா? அதுவும் ? இந்த வயசிலே !” என்றார்.

“பால் முனியம்மா போட்டிடுவா. மீதி எல்லாம் நான் பாத்துக்குவேன்” என்றான் கிழவன்.

“ஹும்- பச்சைக் குழந்தை ! இந்த மாதிரித் தாய் இல்லாத குழந்தைகள் பிழைப்பதே கஷ்டம். எவ்வளவோ ஜாக்கிரதையாய்ப் பார்க்கவேண்டும். உன்னால் ஆகுமா?” என்று கோகுல்தாஸ் சந்தேகப் பட்டார்.

கிழவன், குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே, “எல்லாம் சாமி காப்பாத்திடுவாரு, பாருங்க. ஒரு பொம்மனாட்டி மாத்திரம் பிரமாதமா என்ன செஞ்சுடப் போறா?” என்றான்.

கோகுல்தாஸ் தலையைச் சொறிந்துகொண்டு, “குழந்தைக்கு என்ன பேரு?” என்றார்.

கிழவன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்து விட்டு, “என்ன பேரோ, தெரியலீங்களே! அதும் அப்பனைக் கேட்க மறந்துட்டேன், சாமி” என்றான். கோகுல்தாஸுக்கு எனன தோன்றியதோ என்னவோ! வெகு காலத்துக்கு முன் இறந்துபோன தம் பெண்ணின் ஞாபகம் வந்ததுபோல் இருக்கிறது; “சாந்தி என்று கூப்பிடு” என்றார்.

கிழவன் சிரித்துக்கொண்டு, “சாந்தி!” என்றான். அதுவே குழந்தையின் பெயராய்விட்டது.

2

சாந்தி வளரத் தொடங்கினாள். முகம் பார்த்துச் சிரித்தாள். கிழவனுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ‘ளப ளப’ என்று நாக்கினால் சப்தம் செய்து கொண்டு தன் முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு போவான். சாந்தி, ‘ஹி_ஹி” என்று சிரித்துக் கொண்டு தளிர்போன்ற தன் கரத்தை நீட்டி அவன் மூக்கைப் பிடித்துக்கொள்வாள். கிழவன் பொக்கை வாயைத் திறந்து தானும் நகைப்பான்.

சாந்திக்குத் தவழத் தெரிந்ததும் கிழவன் பாடு பெரிய தொல்லையாய் விட்டது. மார்பினால் நகர்ந்து கொண்டே அவள், போகக்கூடாத இடங்களுக் கெல்லாம் போய்ச் செய்யக்கூடாத காரியங்களெல் லாம் செய்யத் தொடங்குவாள். திடீரென்று அடுப்பங்கரைக்கு வந்து அடுப்பிலிருந்த விறகைப் பிடித்து இழுப்பாள். மூலையில் அடுக்கியிருந்த பானைகளிடம் போய் அவைகளைத் தட்டிவிட்டு உடைத்துவிடுவாள்.

ஒரு நாள் இரவு கிழவன் விளக்கேற்றி வைத்து விட்டுக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண் டிருந்தான். சாந்தி அவன் மடியிலிருந்து இறங்கித் தவழ்ந்துகொண்டே விளக்கண்டையில் சென்றாள். விளக்கின் பக்கத்தில் போய், இரண்டு முழங்கால் களையும் வலது உள்ளங்கையையும் பூமியில் ஊன்றிக் கொண்டு இடது கையை உயர்த்தி, காற்றில் ஆடிக் கொண்டே சுடர்விட்டு எரிந்த விளக்கின் திரியைப் பிடிக்க முயன்றாள். கையை விளக்கருகில் கொண்டு போவதற்குள் கீழே ஊன்றியிருந்த வலது கை வலித் தது. இடது கையைக் கீழே ஊன்றி வலதுகையை உயர்த்தி விளக்கருகில் கொண்டு போனாள். அதற்குள் இடது கை வலித்தது. இப்படி நாலுதரம் முயன்ற பின் கடைசியில் சுடரைப் பிடிக்க முடியாமல் ஏமாந்து கோபமடைந்து தரையின்மேல் மார்பைப் பொத்தென்று போட்டுக்கொண்டு விழுந்து அழத் தொடங்கினாள். சந்தடி செய்யாமல் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு விளக்கிலே எங்கே கையை வைத்துவிடப் போகிறாளோ என்று கவனித்துக்கொண் டிருந்த கிழவன், அவளை வாரி எடுத்துத் தோள்மேல் போட்டுக்கொண்டு, “விளக்கு வேணுமா நோக்கு, என் ராசாத்தி !” என்று கொஞ்சி விளையாடித் தேற்றினான்.

சாந்தி, கிழவனைத் தவிர வேறு ஒருவரிடமும் போகாள். அவளைத் தோள்மேல் போட்டுக் கொண்டு தோட்டம் முழுவதும் அவன் சுற்றி அலைவான். அதுவரையில் கிழவன் உள்ள இடமே தெரியாமலிருந்த அந்தத் தோட்டத்தில், சாந்தி வந்த பிறகு கிழவனின் குரல் எங்கும் கேட்டது. பங்க ளாவில் வேலை செய்த முனியம்மா ஒவ்வொரு சமயம் அவனிடம் வந்து கைகளைத் தட்டித் தட்டி, “வா வா” என்று கையை நீட்டிக் குழந்தையை அழைப்பாள். சாந்தி ஒரு நிமிஷம் ஸ்வாரஸ்யத்துடன் அவள் செய்யும் வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தன்னை வரும்படி அழைக்கிறாள் என்று தெரிந்து கொண்டதும் தலையை அசைத்துவிட்டுக் கிழவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோள் பட்டையில் தன் முகத்தைப் புதைத்துக்கொள்வாள். பிடித்து இழுத்தால் கால்கள் விண்விண் என்று உதைக்கும்; அழுகை கிளம்பிவிடும்.

“அடி ராக்ஷஸி!” என்று முணுமுணுப்பாள் முனியம்மா. கிழவன் சிரிப்பான். ஆனால் மனத்திற்குள், குழந்தையை குழந்தையை அவள் ராக்ஷஸி என்று வைதாளே என்று கோபம் கொள்வான்.

சாந்திக்கு நடக்கத் தெரிந்ததும் கிழவனுக்கு ஒரு நிமிஷமும் ஓய்வு கொடுக்காமல் ஆட்டிவைத்தாள். கிழவன் குடிசையினுள் வேலையாக இருக்கையில், தட்டுத்தடுமாறி நடந்துகொண்டு குடிசையை விட்டு வெளிப்பட்டுத் தோட்டத்துக்குள் புகுந்துவிடுவாள். அவளைக் குடிசையில் காணாவிட்டால் கிழவன் மனம் திடுக்கிடும். தோட்டத்தில் எப்போதும் மாடுகள் மேய்ந்து கொண் டிருக்கும். குழந்தையை மாடு முட்டிவிட்டால் என்ன செய்வது? மாடுகளைத் தவிர வேறு அபாயங்களும் தோட்டத்தில் இருந்தன. ஏற்றம் போட்டிருந்த கிணறு சமீபத்தில்தான் இருந்தது. அது தவிர, மருதாணிச் செடியின்மேல் அன்று ஒரு பாம்பைப் பார்த்ததாக முனியம்மா கூறினாள். அந்தப் பயம் வேறு; “சாந்தி ! சாந்தி!” என்று கூப்பிட்டுக்கொண்டு கிழவன் தோட்டத்தில் ஓடுவான். சாந்திக்கு ஓர் அபாயமும் நேர்ந்திராது. மர நிழலில் உட்கார்ந்துகொண்டு தண்ணீர் ஓடும் வாய்க்காலிலிருந்து மண்ணை எடுத்து வாயில்போட்டு ஸ்வாரஸ்யத்துடன் மென்றுகொண்டிருப்பாள் அவள்.

3

ஒரு நாள் கிழவனுக்குச் சந்தோஷம் தலைகால் தெரியாமல் அடித்துவிட்டது. “ஐயையோ! என்னாடி, இந்தக் கிழம் இப்படிக் கலாட்டா பண்ணுது?” என்றாள் முனியம்மா.

கிழவன் சாந்தியைத் தூக்கிக்கொண்டு அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தான். “ஏ முனியம்மா! சாந்தியைப் பாத்தியா? அவளுக்குப் பேசக்கூட வந்திருச்சு!”

“பேச வந்திருச்சா! அதிசயந்தான்! எங்கே? என்ன பேசறா? – பேசடீ பார்க்கலாம், ராக்ஷஸி!”

“தா, இதோ பாரு. ராக்ஷஸின்னு சொல்றியா?- சாந்தி! தாத்தா சொல்லு” என்று கிழவன் சாந்தி யைக் கீழே இறக்கினான்.

சாந்தி அவர்கள் பேச்சைக் கவனியாமல் கீழே குனிந்து மண்ணாங்கட்டியைப் பொறுக்க ஆரம்பித்தாள். கிழவன் அவளைத் தூக்கி நிற்கவைத்துப் பிடித்துக்கொண்டே, “சாந்தி! தாத்தான்னு கூப்பிடு” என்றான்.

சாந்தி சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர் முகங்களை நோக்கினாள். தான் பேசப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாள்.

‘தத்…தத்..தா…!” என்றாள்.

எல்லோரும் ‘ஹோ’ என்று சிரித்தார்கள். கிழவன் பெருமையுடன் குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு, எங்கே திருஷ்டி பட்டுவிடுமோ என்ற பயத்துடன் குடிசைக்குள் போய்விட்டான்.

“ஐயோ அதிசயமே ! இந்தக் கிழவனுக்கு என்ன பைத்தியமா?” என்றாள் முனியம்மா.

ஒரு நாள் முனியம்மாவுடன் அவள் ஐந்து வயசுப் பிள்ளை வந்திருந்தான். அவன் சாந்தியைப் பார்த்ததும், “ஹோஹோ, அம்மணக்கட்டை!” என்று சிரித்தான். கிழவனுக்கு ரோஷம் வந்துவிட்டது. அன்றைக்கே கடைக்குப் போய், தயாராய்த் தைத்து வைத்திருந்த பச்சை நிறமான ‘கவுன்’ ஒன்று சாந்தியின் அளவுக்கு ஏற்றதாய்ப் பார்த்து வாங்கி வந்து அவளுக்குப் போட்டுவிட்டான்.

பச்சை நிறம் சாந்திக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. தாயைப்போல் அவள் சிவப்பாக இருந்த படியால் அவள் இயற்கையழகை அந்தப் பச்சைக் ‘கவுன்’ நன்றாக எடுத்துக் காட்டியது. உருண்டை யான முகத்தைச் சுற்றித் தலைமயிர் சுருள் சுருளாகத் தொங்க, புதிதாக அணிந்துகொண்ட உடையைக் கைகளால் இழுத்து விட்டுக்கொண்டு, சாந்தி தன் மழலைச்சொற்களில், “தா-த்-தா” என்று இரண்டு தாக்களிலும் ஓர் அழுத்து அழுத்திக் கூறினாள்.

கிழவன் ஸ்வர்க்கத்துக்கே போய்விட்டான். அவள் கன்னங்களில் கை வைத்து விரல்களைத் தன் தலையில் வைத்து நெறித்துத் திருஷ்டி கழித்தபின் சாந்தியைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பங்களாவுக்கு வந்தான்.

“என்ன கிழவா? பேத்தி எப்படி இருக்கா ?” என்று கேட்டான் கோகுல்தாஸின் பிள்ளை நாராயண்தாஸ்.

“நல்லாத்தான் சாமி இருக்கா, உங்க புண்ணி யத்துலே. இன்னிக்கித்தான் சடடை வாங்கிப் போட்டேன், சாமி!”

நாராயண்தாஸ் சிரித்துக்கொண்டே சாந்தியின் கன்னத்தை நெருடிவிட்டான். சாந்தி ஒரு சிரிப்புச் சிரித்தாள். நாராயண்தாஸுக்கு அவளிடம் ஒரு விதமான அன்பு ஏற்பட்டிருந்தது. அந்தமாதிரியான கீழ்ச்சாதிக் குடும்பங்களில் அவ்வளவு அழகான குழந்தையை அவன் அதுவரையில் பார்த்ததில்லை. “கவுன் புதுசா வாங்கினியா, கிழவா?”

“ஆமாஞ் சாமி.”

‘இப்படிப் போட்டிருக்கயே! திருப்பின்னா போடணும்? பொத்தான் முதுகுப் பக்கம் வரணுமே, தாத்தா?”

கிழவன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்; “அப்படி யாங்க? தெரியாதுங்க எனக்கு-“

“என்ன விலைக்கு வாங்கினே கவுன்?” என்றான் நாராயண்தாஸ்.

“எட்டரையணா குடுத்தேனுங்க.”

“என்னத்துக்கு இதுக்கு எட்டரையணா? துணி சாயம் போயிடும் போலே இருக்கே?”

கிழவன் குடிசைக்கு வந்ததும், “எட்டரையணா குடுக்கப்படாதா இதுக்கு? தையல்கூலியே நாலணா வாங்கிடுவானே? நாலணாப் பொறாதா இந்தத் துணி?” என்று முணுமுணுத்துக்கொண்டே கவுனைக் கழற்றி நாராயண்தாஸ் சொன்னபடி திருப்பிப் போட்டான்.

4

சாந்திக்கு ஐந்து வயசு நிரம்பியது. ஒரு நாள் காலை. இரவெல்லாம் பெய்த மழை அப்போது தான் ஓய்ந்திருந்தது. மப்பும் மந்தாரமுமாக இருந்த அடிவானத்தைப் பிய்த்துக்கொண்டு கிளம்புவது போல் சூரியன் தன் ஒளிக்கதிர்களை வட்டமான ஆகாய வெளியில் வாரி இறைத்துக்கொண் டிருந் தான். கோகுல்தாஸ் தோட்டத்து மரங்களின் இலைகள் மழையில் நனைந்து சூரிய ஒளியில் ஜிலு ஜிலுவென்று பிரகாசித்தன. தரையில் எங்கே பார்த் தாலும் தண்ணீர் தேங்கியிருந்தது. நனைந்திருந்த புல் தரைகளும், சிலு சிலுவென்று வீசிய காற்றும்,மழை பெய்து ஓய்ந்த அமைதியும் சேர்ந்து மனத்துக்கு ஓர் உத்ஸாகத்தை அளித்தன.

கிழவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். சாந்தி இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். கிழவன் பல் தேய்த்துவிட்டுக் குடிசைக்குள் நுழையப் போன சமயத்தில், “மாமா!” என்று யாரோ கூப் பிடுவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாந்தியின் தகப்பன் எதிரில் வந்து நிற்பதைக் கண்டு, “என்ன, வடிவேலுவா? வா வா, என்ன விசேஷம் ?” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

“கொழந்தை எங்கே? நல்லாருக்குதா ?” என்று கேட்டான் வடிவேலு. அவன் குழந்தையைக் கிழவனிடம் கொடுத்த பிறகு இதுவரையில் மறுபடியும் வந்து பார்க்கவேயில்லை.

“அதோ பார், படுத்திருக்கு” என்றான் கிழவன்.

வடிவேலு தூங்கிக்கொண்டிருந்த சாந்தியைப் பார்த்துவிட்டு, “இதுவா? என்ன இவ்வளவு வளங்திடுச்சே?” என்றான் ஆச்சரியத்துடன்.

கிழவன் கோபத்துடன், “அஞ்சு வயசாகலே? அஞ்சு வருசம் கழிச்சு இப்பத்தான் வறயாக்கும், கொயந்தையைப் பாக்க நீ?” என்றான்.

“அதான் என் சம்சாரம் சொல்லிச்சு, ஒன் கொயந்தை பெரிசா வளந்திருக்குமே; போய்ப் பாரேன்னு. நான் இதுக்குள்ளே எப்படி வளந்து இருக்கும்னு நெனச்சேன் – அவ சொன்னது சரிதான்!”

கிழவன் வாயைத் திறவாமல் அவன் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். “என்ன பேரு வெச்சிருக்கே அதுக்கு ?”

“சாந்தீன்னு!”

“என்ன?”

“சாந்தி!”

“சாந்தியா? அதென்ன பேரு அது? வாயிலியே நொழயல்லியே. நல்ல பேரா வெக்கப் படாது? கறுப்பாயின்னுதான் நாங்க வெச்சோம். அப்படித் தான் இனிமே நாங்க கூப்பிடப் போறோம்.”

கிழவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது; “நீங்களா?-“

“அ ஆம்-என் சம்சாரம் கர்ப்பமா இருக்கா. கூட மாட வேலை செய்ய யாரும் இல்லாமே கஷ்டப்படறா. ‘உன் பொண்ணை அழைச்சுக்கிட்டு வாயேன்’னு சொல்லி யனுப்பினா.”

கிழவனுக்குத் தலை சுற்றியது; “அதெல்லாம் முடியாதப்பா. சாந்தியை நான் யார் கிட்டேயும் அனுப்ப மாட்டேன்” என்றான்.

வடிவேலு கோபத்துடன், “நல்லாருக்கு நியாயம்? என் பொண் எனக்குச் சொந்தமில்லாமே ஒனக்கு என்ன வந்தது? எத்தனை நாள்தான் நீயே வெச்சுக்கிட்டிருப்பே? அதுக்கு வேலையெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கட்டிக் கொடுக்கவாணாம்?” என்றான்.

“அதுக்கு வேலை ஒண்ணும் செய்யத் தெரியாதே!”

“தெரியாப் போனா சொல்லித் தரது; வயசாகலே ?”

கிழவன் பரிதாபமாகத் தலையை அசைத்து, “நான் அவளை அனுப்பமாட்டேன்” என்றான்.

“சும்மாக் கிட வாயை மூடிண்டு! நீ பேசறே!”

இந்த இரைச்சலில் சாந்தி விழித்துக்கொண்டாள். எழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தபோது எதிரில் ஒரு புது மனிதன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு கிழவனிடம் ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் பின்னால் நின்றாள்.

“சாந்தி!”

“தாத்தா!”

“இது யார் தெரியுமா?”

“ஹுகும்.”

“உங்க அப்பா.”

“அப்பாவா? அப்பான்னா?”

“அப்பான்னா- ஹும் – நாயனா!”

“ஏ இங்கே வா” என்று கூப்பிட்டான் வடிவேலு.

சாந்தி அவனை முறைத்துப் பார்த்துவிட்டுத் தலையைப் பலமாக ஆட்டி, “ஹ ஹும்” என்றாள்.

“போ அம்மா அப்பா கிட்டே!” என்றான் கிழவன்.

“வான்னா தலையை ஆட்டறியா?” என்று வடிவேலு எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

குழந்தையின் உடல் நடுங்கியது. கண்கள் திகிலுடன் மிரள மிரள விழித்தன. கிழவனை ஒரு கெஞ்சும் பார்வை பார்த்து, “தாத்தா” என்றாள். கண்களிலிருந்து மளமளவென்று நீர் பெருகியது.

கிழவனின் கண்களிலும் நீர் துளித்தது; “விட்டுடப்பா அவளை. பாவம்! பயப்படுது கொயந்தை; விட்டுடு. அவ என்னை விட்டு யார்கிட்டேயும் போக மாட்டா. எனக்குந்தான் வயசாயிட்டுது. இன்னும் எத்தனை நாள் இருக்கப் போறேன்? நான் இருக்கிற வரையிலும் எங்கிட்டியே இருக்கட்டும். அப்புறம் அப்பனாச்சு பொண்ணாச்சு. நான் இருந்தா பார்க்கப் போறேன்?–” என்றான்.

“இதென்னடி வெக்கக்கேடு?” என்றாள் அங்கு வந்த முனியம்மா; “ஏ கிழவா, பைத்தியமா ஒனக்கு? எத்தனை நாள்தான் நீயே வெச்சுக்கிட்டிருப்பே பொண்ணை, அப்பங்காரனிடம் அனுப்பாமே?” என்று மேலும் கூறினாள்.

கிழவன் பேச முடியாமல் உட்கார்ந்து விட்டான்; தனக்குப் பரிந்து பேசுவார் ஒருவரும் இல்லை. தான் ஒரு கட்சி, உலகம் தனக்கு எதிர்க் கட்சி.

5

காற்றில் இலைகள் அசையும் ஓசை ‘ஹோ’என்று அழுகுரலைப்போல் கிழவன் காதில் ஒலித்தது. விசித்து விசித்து அழுதுகொண்டே சாந்தி தகப்பனுடன் சென்றாள்.

கிழவன் குடிசை வாசலுக்கு வந்து கூரையைக் கையால் பிடித்துக்கொண்டு நின்றான். மரங்களினூடே நுழைந்து பிரகாசித்த சூரிய வெளிச்சம் அவன் தேகத்தின்மேல் வரி வரியாக விழுந்து தோல் ஒட்டிப்போயிருந்த உடலை ஒருவினோதக் காட்சியாகச் செய்தது. கூன் விழுந்திருந்த முதுகில் முதுகெலும்பு சதையைப் பிய்த்துக்கொண்டு வந்து விடுவதுபோல் தூக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் நாராயண்தாஸின் குழந்தைகள் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தன. உலகமே தன்னைப் பார்த்துச் சிரிப்பதாக நினைத்தான் கிழவன்.

பொழுது சென்றது. மகிழ மரத்தடியில் போய்க் கிழவன் உட்கார்ந்தான். மரத்தடியில் கொட்டியிருந்த மணலைப் பார்த்ததும் சாந்தி அதிலே வீடு கட்டி விளையாடும் காட்சி கண்ணெதிரில் தோன்றியது. அங்கிருந்து எழுந்து கிணற்றங்கரைக்குப் போனான் அங்கும் சாந்தியின் ஞாபகம் விடவில்லை. ‘கிணற்றருகில் போகக் கூடாது’ என்று அவன் உத்தரவிட்டிருந்ததால் சாந்தி தூரத்தில் நின்றுகொண்டு கற்களைப் பொறுக்கிக் கிணற்றில் எறிவாள். கல் உள்ளே விழும்போது ‘குபுக்’ என்று சப்தம் உண்டாகும். தலையைச் சாய்த்துக்கொண்டு அதைக் கூர்ந்து கவனிப்பாள்.

கிழவன், முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு உடல் குலுங்க அழுதான். விரல் இடுக்குகள் வழியாய்க் கண்ணீர் தரையில் விழுந்தது. திடீரென்று, “தாத்தா!” என்று யாரோ கூப்பிடுவதுபோல் பிரமை உண்டாயிற்று. சாந்தியின் குரல்! கிழவன் பாய்ந்து எழுந்திருந்து குடிசையை நோக்கி ஓட முயன்றான். தரைக்குமேல் தூக்கிக்கொண்டிருந்த மரத்தின் வேர் தடுக்கிக் கீழே விழுந்தான். விழுமுன், “சாந்தி!-” என்று ஒரு முறை கத்தினான்.

சாந்தியின் பெயர் தோட்டமெங்கும் எதிரொலித்தது. “சாந்தி!”

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *