சாதித் தடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 253 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஒரு சோம்பேறி ) ஒரு நாளில் பாதிக்கு மேல் தூக்கத்தில் போய்விடும்; ஆனாலும் அவன் உடம்பில் ஒரு விரகாசம் ; முகத்தில் ஒரு ஜோதி ! ‘மூதேவி பிடித்தவன்’ என்று சோம்பேறி மனிதனை நாம் சொல்கிறோம். அவனை அப்படிச் சொல்லக் கூடாது. நல்ல லக்ஷ்மீகரம் அவனுடைய இரண்டு கண்களின் கடையிலே வீசிய ஒளியில் விளங்கியது. இந்த ஆச்சரிய ளங்குமரனைப்பற்றி யாருக்கு என்ன தெரியும்? 

எப்படியோ கொல்லிமலையின் உச்சிக்குச் சிரமம் இல்லாமல் ஏறிச் செல்கிறான் ; அவனைச் சோம்பேறி என்று எப்படிச் சொல்வது? அவன் தூங்கி எழுந்தால் அவன் கண்களில் கலக்கம், சோர்வு இருக்க வேண்டுமே? அப்பொழுதுதான் சாணையிடப்பட்ட மணிபோல அவ்விரு விழிகளும் பிரகாசிக்கும். அவனுடைய விரிந்த மார்பில் ஒரு சிறந்த வீரனுடைய அம்சம் இருந்தது; திரண்ட தோள்களில் வெற்றியின் முத்திரை மறைந்திருந்தது. அவன் யார்? 

இங்கே எதற்காசு வந்தான்? அவனுடைய ஊர் எது?” தாய் தகப்பனார் யார்? – ஒன்றும் தெரியாது. என்ன அழகு ! என்ன தேகக் கட்டு ! ஏன் அவன் தன் பழைய கதையை மர்மமாக வைத்திருக்கிறான்? 

அவன் பேச்சுக்கும் வில்லின் நாணொலிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும். “நீ சிங்கத்தைப் பார்த்து இருக்கிறாயா?” என்று பக்கத்து வீட்டு முத்து கேட்கும் போது, “ஆஹா ! பார்த்திருக்கிறேன்; புலியைப் பார்த்து இருக்கிறேன் ; மலையாள தேசத்துக் காடு முழுவதும் சுற்றி இருக்கிறேன்” என்று அவன் கூறும் தொனியில் உள்ள ஆண்மையை யார் அளவிடவல்லார் ! 

“எல்லாம் சரி ! ஏன் இப்படித் தூங்கித் தூங்கிக் காலத்தைக் கழிக்கிறாய்?” என்று முத்து கேட்பான். 

”இந்த ஊருக்கு வந்த பிறகு உண்டான வியாதி. என்னையே மறந்து தூங்குகிறேன்’ என்று சொல்லிப் பெருமூச்சு விடும்போது அவனுடைய கண்களில் ஆழ்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு மின்னற் பார்வை தோன்றும். அவனுக்கு இடம் கொடுத்த பிச்சாண்டிக் கவுண்டன் தன்னுடைய வீட்டில் ஒரு தெய்வம் வளர்வதாகவே எண்ணினான். பிச்சாண்டிக்குப் பிள்ளை குட்டி இல்லை. அவன்தான் பிள்ளை – இல்லை ; தெய்வத்தின் கிருபையால் கந்தர்வலோகத்திலிருந்து கிடைத்த மாணிக்கம் அவனைக் கவுண்டன் ‘தம்பி’ என்று கூப்பிட்டான் ; ஊராருக்கு அவன் செல்லத்தம்பி. செல்லத்தம்பியின் குணங்கள் எல்லோரையும் கவர்ந்தன. அவனது சோம்பலை ஒருவரும் பாராட்டுவதில்லை. மரத்தின் தழைச்செறிவுக்குள் மறைந்திருக்கும் புல்லுருவியைப் போல அது மறைந்து இருந்தது. அவன் சோம்பேறிதான்; தூங்கு மூஞ்சிதான் : ஆனாலும் அவனே அவ்வூராருக்கு ஒரு கந்தர்வன் குழந்தைகள்,பெண்கள், கிழவர்கள் யாவருக்கும் அவனைக் கண்டால் ஒரு சந்தோஷம். 

செல்லத்தம்பி தன்னுடைய இருபதாவது வயசில் கவுண்டனூருக்கு வந்தான். வந்து இரண்டு வருஷங்கள் ஆயின. அவன் என்ன சாதி? யார்? இன்னும் ஒன்றும் தெரியவில்லை. அவன் முகம் ஒரு பெரிய குடும்பத்தில் கௌரவமாக வாழ்ந்த வாழ்க்கையின் சின்னத்தை வெளி யிட்டது. பிச்சாண்டிக்கு அவன்மேல் உண்டான பிரேமை அளவு கடந்தது. “நீ யாரப்பா? எந்த ஊர்?” என்று அவன் செல்லத்தம்பியை இரண்டு முறை கேட்டதோடு சரி. 

செல்லத்தம்பி, “அதெல்லாம் மறந்துவிட வேணும். கேட்டால் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நான் ஓர் அநாதை. உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் இங்கே இருக்கிறேன். என்னாலான வேலையைச் செய்கிறேன் – இல்லையென்றால் நான் போய் விடுகிறேன்” என்று அவன் சொன்ன பதில் பிச்சாண்டியைக் கலக்கியது : கண்ணில் நீர்த்துளியை உண்டாக்கி விட்டது. ‘அவன் மனத்திலுள்ள கஷ்டத்தை யார் அறிவார்கள்! என்ன கஷ்டமோ ! பெற்றவர்கள் என்ன கொடுமைக்கு ஆளாக்கினார்களோ! அல்லது, தாய் தகப்பன்மாரை இழந்து விட்டானோ! எப்படியிருந்தால் என்ன? சுவாமி கொடுத்த வரம். இவன் நமக்குப் பிள்ளை; உயிர், இனிமேல் இவனை விடக். கூடாது’ என்று கவுண்டன் நிச்சயித்துக் கொண்டான். 

“தம்பி,உன் இஷ்டம்போல் இரு; எனக்கு இருக்கிற ஆடுமாடுகள் நாலு குடும்பத்தைக் காப்பாற்றும். இந்த வீடு உன் சொந்த வீடு. உன்னைப் பிரிந்திருக்க முடியாது என்று என் மனசு சொல்கிறது. தம்பி, நான் சொல்கிறது தெரிகிறதா?” என்று அன்பொழுகும் குரலில் பிச்சாண்டி பேசினான். 

“அப்படியே இருக்கிறேன்” என்று வாக்குறுதி தந்தான் அவன். அதுமுதல் ‘தம்பி’க்கு ஒரு குறையும் வராமல் பிச்சாண்டியும் அவன் மனைவி குப்பாயியும் பார்த்துக் கொண்டார்கள். 

“யாரோ மகாராசா மாதிரியல்லவா இருக்கிறான்? அவன் முகத்திலே பால் வடிகிறதே! என்ன அழகு ! அவன் என்ன சாதி? எந்த ஊர்?” என்று கேட்டாள் குப்பாயி. 

“மகாராசாவா! தேவலோகத்திலிருந்து வந்தவன் என்று சொல்லு. அவன் முகத்தைப் பார்த்தாலே பசி போய் விடுகிறது. அவன் ஆராயிருந்தால் நமக்கென்ன? இப்பொழுது நம்முடைய ‘தம்பி’; நமது வீட்டுக்குத் தெய்வம்; நமக்குக் கண்மணி. முத்து எங்கே பிறந்தால் என்ன? தாமரை எங்கே முளைத்தால் என்ன ?” 

பிச்சாண்டி கொஞ்சம் படித்தவன்; பேசத் தெரிந்தவன் அவனுடைய பேச்சிலே படிப்பின் மெருகு இருக்கும். ஆனால் அவனுடைய உள்ளத்திலிருந்து வெளிப்படும் அன்பு மாத்திரம் அவன் பிறவியோடு வந்தது. குப்பாயியின் உள்ளம் பளிங்கு போன்றது. அதில் அன்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏதாவது மாசு படிந்தால் ஊதின மாத்திரத்தில் போய்விடும். 

செல்லத் தம்பியோடே வம்பளப்பதில் யாருக்கும் பிரியம் உண்டு. அவன் சொல்லும் தேசாந்தரக் கதைகளைக் கேட்பதில் ஊரிலுள்ள நரைத் தலையர்களுக்கு எல்லையற்ற ஆசை. அவனைப் பார்ப்பதிலேயே இளம் பெண்களுக்கு ஓர் ஆனந்தம்; காளிக்கோ பரமானந்தம். பிச்சாண்டியின் தங்கை மகள் காளி. பெயர்தான் காளி; அவள் அரச குலத்தில் பிறந்திருந்தால் அவளுக்கு நல்ல பெயராக வைத்திருப்பார்கள் : மாதவி,மல்லிகாவென்று சொல்லலாம் நல்ல தமிழ்ப் பெயராலே நன்முல்லை, வள்ளி யென்றும் சொல்லலாம். மலரின் மென்மையும் வள்ளிக் கொடியின் துவட்சியும் அவளுக்கு இருந்தன. காளியென்ற பெயர் அவளுக்கு எப்படிப் பொருந்தும்? 

காளியின் கண்கள் விஷத்துளியை விட்டமைக்கூண்டல்ல; நீலமணியைப் பதித்த முத்து அல்ல; பவளக்கொடி ஓடும் பாற் கடலல்ல; இவையெல்லாம் பழைய உவமைகள், செல்லத் தம்பியின் விழிகளிலே செருகும் வேலென்றோ, அவன் உள்ளத்தைக் குளிர்விக்கும் மருந்தென்றோ சொல் லுங்கள். உண்மை இதுதான்; அந்த அதிசய இளங்குமரன் எல்லோரையும் கவர்ந்து இழுத்தான். ஆனால் காளியின் இரண்டு விழிக்கடையிலே அவன் உள்ளம் மயங்கி அடிமைப் பட்டுக் கிடந்தது. 

“இந்த இரண்டு கண்களல்லவா நம்மைச் செல்லத் தம்பி ஆக்கின!” என்று அவன் தனிமையிலே எண்ண மிடுவான். அவன் ஓர் ஊர்சுற்றி; காடு சுற்றி; மலை சுற்றி. இப்பொழுது கவுண்டனூரில் காளியின் விழிக் கடையில் அவன் உள்ளமாகிய நங்கூரம் சிக்கிக் கொண்டது. கப்பல் மேலே போகவில்லை. 

‘அவன் யார்? அவன் ஊர் எது? சாதி என்ன?’- இந்த எண்ணங்கள் காளிக்குத் தோன்றுவதுண்டு. “யாராக இருந்தால் என்ன?இப்போது நம் மாமன் மகன்” என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொள்வாள். மாமன் மகன் என்பதை நாலைந்து முறை சொல்வாள். அப்படிச் சொல்லும்போது அவளுடைய உள்ளங்காலில் இருந்து உச்சந் தலை வரையில் மின்சாரம் போன்ற உணர்ச்சி பாயும்; மயிர்க் கூச்செறியும். அதுதான் காதலோ! 

“தம்பி; நீ கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? என்ன சாதியென்று சொல்ல மாட்டாயா?” என்று ஒரு நாள் பிச்சாண்டி கேட்டான். 

அவன் ஆச்சரியப் பார்வையோடு கவுண்டனைப் பார்த்துச் சிரித்தான்; “கல்யாணமா? இந்த அநாதைக்கு யார் பெண் தருவார்கள்?” என்று கேட்டான். 

‘‘அநாதையா? அப்படி இன்னொரு முறை சொல்லாதே தம்பி; அப்படிச் சொன்னா ல் என் இருதயத்தில் வாள் எறிந்தது போல் இருக்கிறது. நீ இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்.நானும் குப்பாயியும் உனக்குச் சொந்தமல்லவா? இந்த ஊர்க்காரனாகப் போன பிறகு நீ எப்படி அநாதையாவாய்? அப்படிச் சொல்லாதே தம்பி! அவன் சொல்லிய வார்த்தைகளில் அவனுடைய உள்ளத்தின் நைவு வெளிப்பட்டது. 

“அப்படியானால் நான் உங்கள் சாதிதானே? எனக்கு என்று வேறு சாதி ஏது?” என்று கேட்டான் செல்லத்தம்பி.

கவுண்டன் வகை தெரியாமல் விழித்தான். கவுண்டர் களுடைய சாதிக் கட்டுப்பாடு மிகவும் கடுமை. தம்பி தன் வீட்டில் சாப்பிடலாம்; இருக்கலாம்; எல்லாவற்றிலும் அவன் பிச்சாண்டியின் பிள்ளை. கல்யாணமென்றால் அவன் என்ன சாதி?’ என்ற கேள்வி! ‘அட பாழும் மனசுக்குள் சாதியே!’ என்று கவுண்டன்; ‘இவன் முகத்தில் ராஜகளை இருக்கிறது. இவனிடம் ஊராருக்கெல்லாம் பிரியம். இவனைக் கட்டிக் கொள்வதில் பெண்களுக்கு அளவிறந்த விருப்பம் ஆனால் நடுவிலே சாதி என்று ஒரு வேலி! கேடுகெட்ட சாதி!’ என்று பல்லைக் கடித்தான். 

அந்தச் சாதி விஷயந்தான் பெரிய முட்டுக் கட்டையாக நின்றது. உள்ளங்கள் கரைந்து ஒன்றாகின்றன; அழகும் அறிவும் சேர்வதற்குச் சித்தமாகின்றன; யாருக்கும் அதனால் பெரிய நன்மையே உண்டாகின்றது. ஆனால் இவ்வளவு நல்ல எண்ணங்களிலும் சாதி புகுந்து விஷமாக்கி விடுகிறது. பாழும் சாதி! 

‘சாதி தெரியாவிட்டால் கல்யாணம் இந்த இனத்தில் பண்ணுவது கஷ்டம். இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? நம் சாதியென்று தெரிந்தால் காளியைக் கட்டிக் கொடுத்து விடலாமே!’ என்று நினைந்து நினைந்து ஏங்கினான் பிச்சாண்டி. 

‘’காளியைச் செல்லத் தம்பிக்குக் கட்டிக் கொடுக்க நினைக்கிறார்களாம். அவன் என்ன சாதியென்று தெரிய வில்லையாம். அதனால் தயங்குகிறார்கள்” என்ற பேச்சு ஊரில் எழுந்தது. 

காளி உருக்குகிறாள். சாதிக்கு ஆயிரம் சாபம் தருகிறாள். அவளுடைய தகப்பன் முருகனுக்கு வழி ஒன்றும் தெரிய வில்லை. தாய் மாறக்காள் ஒரே பிடிவாதமாகச் சாதியைப் பிடித்துக் கொண்டு தடுக்கிறாள். ஊரில் உள்ளவர்களுக்கு அந்தரங்கத்தில் ஏதோ ஒன்று இப்படிச் செய்தால் நல்லது என்று சொல்கிறது; ஆனால் அதை வெளியிலே சொல்லத் தைரியமில்லை. சாதியென்னும் பூதம் அவர்களைப் பயமுறுத்துகிறது. 

பிச்சாண்டி, ”என் கண்ணுக்குக் கண்ணாலம் பண்ணி விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்’ என்று துணிந்து விட்டான். சாதியை விட்டுத் தள்ளி விடட்டும், அதனால் ஒன்றும் நஷ்டமில்லை” என்ற தைரியம் பிறந்தது. குப்பாயிக்கு ஒன்றும் தோன்றவில்லை. யாராவது அதிகமாகச் சாதியைப் பற்றிச் சொல்லிப் பயமுறுத்தினால் சிறிது அஞ்சுவாள். பிச்சாண்டி தன் தீர்மானத்தையும் சாதிக் கொடுமையையும் பற்றிப் பேசினால் அந்த எண்ணம் உடனே போய் விடும்; அவன் கருத்தின் வழியே செல்லத் தொடங்குவாள். அவள் மனம் ஓர் ஓடம். பிச்சாண்டியின் மனமாகிய ஆறு போகும் வழியே அது ஓடும். நடுவிலே ஏதாவது தடுத்தால் சிறிது நேரம் கரையருகில் தங்கும். அடுத்த கணம் அடிக்கும் காற்றினால் மறுபடியும் அந்த ஆற்றின் வேகத்தில் கலந்து விடும். 

காளியின் தகப்பனும் அந்தத் தீர்மானத்துக்கு வந்து விட்டான் மாறக்காளும் மனம் பொருந்தி விட்டாள். இனிமேல் கல்யாணம் நிறைவேறுவது நிச்சயம். 

இந்தச் சமாசாரம் ஊருக்குள் பரவியது. அப்புறம் ஊர் முழுவதுமே மாறி விட்டது. முன் போலச் செல்லத் தம்பியின் கதைகளுக்குக் கிராக்கியில்லை. காளியைக் கண்டு பெண்கள் பேசுவதில்லை. பிச்சாண்டியும் முருகனும் ஊராரால் சாதியை விட்டு நீக்கப்படப் போகிறார்கள். போன வாரம் ஊரினர் யாவரும் செல்லத் தம்பியின் வீரக் கதைகளிலும் வசீகரத் தோற்றத்திலும் தேனில் விழுந்த வண்டுகள் போல் மயங்கி விழுந்தார்கள். இந்த வாரம் ஒரு பூதரும் அவனை அணுக வில்லை. அவனிடம் கதைக்குப் பஞ்சம் ண்டாகி விட்டதா? அ வனுடைய முக வசீகரம் ஏதாவது குன்றி விட்டதா? ஒன்றும் இல்லை. காளியைக் கட்டிக் கொள்ளப் போகிறோமென்ற நினைவினால் உள்ளக் கடலில் அலை ‘மோதி எழுந்த மகிழ்ச்சியாகிய நுரைகளின் ஒளி, அந்த முகத்தில் வீசி அதற்குப் பின்னும் ஒரு காந்தியை அளித்தது. பின் ஏன் இந்தப் பகிஷ்காரம்? சாதியின் மாயை! சாதியாகிய அந்தகாரம் ஊராருக்கு அந்த ஜோதியை மறைத்து விட்டது. 

கல்யாணம் நடந்தது. உறவினர்கள் வரவில்லை. ஆனாலும் செல்லத் தம்பிக்கும் காளிக்கும் அது பெருங் குறையாகத் தோன்றவில்லை. இரண்டு உலகம் நிறைய இருந்த ஜனங்கள் உள்ள நிறைவோடு கலந்து உத்சவம் கொண்டாடினால் அவர்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கும்? அத்தனை சந்தோஷத்தை அவர்கள் அடைந்தார்கள். சாதி முள்ளால் சூழ்ந்த அந்த ஊராகிய கள்ளிப் புதரில் தோன்றிய மலரிலே, எங்கோ சுற்றி அலைந்த வண்டொன்று வந்து சேர்ந்தது போலக் காளியோடு செல்லத்தம்பி இணைக்கப் பட்டான். 

கல்யாணம் நடந்த மறுநாள் செல்லத்தம்பியின் முகத்தில் ஒருவகை வாட்டம் உண்டாயிற்று. அதைப் பிச்சாண்டி கவனித்தான். “தம்பி, ஏன் இப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டான் தம்பியின் மேல் சக் காற்றுப் பட்டாலும் உள்ளம் நடுங்கும் பிச்சாண்டி,அவன் முகமதியில் படர்ந்த கவலை மேகத்தை அறிந்து பொறுத்திருப்பானா? 
“ஒன்றும் இல்லை. உங்களுக்கெல்லாம் என்னால் பெரிய கஷ்டம் உண்டாகி விட்டதே! என்னால் நீங்கள் அரிஜனங்களைப் போலச் சாதியிலிருந்து ஒதுக்கப் பட்டீர்களே!” என்று கவலையோடு தம்பி பதில் அளித்தான். “தம்பி, இதுதானா? இந்தப் பயல்கள் கிடக்கிறார்கள். இந்தச் சாதியிலே நம்மைச் சேர்க்கா விட்டால் நமக்கு உயிரே போய் விடுமா? உன்னைக் காட்டிலும் சாதியா பெரிது?” என்று பிச்சாண்டி அவன் தலை மயிரைக் கோதிக் கொண்டு சொன்னான். 

நாவிதன், வண்ணான் முதலிய தொழிலாளர்கள் இந்த இரண்டு வீட்டுக்கும் போவதில்லை. உள்ளூர்ச் செட்டி கூடச் சாமான் தருவதில்லை. பத்து மைல் தூரத்திலுள்ள ஊருக்குப் போய் வேண்டியவற்றை வாங்கி வரவேண்டி யிருந்தது. 


கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆயிற்று. ஒரு நாள் செல்லத்தம்பி பிச்சாண்டியைப் பார்த்து, “நான் இந்த ஊரை விட்டு ஒரு வாரம் வெளியிலே போய் வர வேண்டும்’ என்றான். அந்த வார்த்தை இடி விழுந்தது போலக் கவுண்டன் காதில் விழுந்தது. ”ஐயோ! உன்னைப் பிரிந்து ஒரு நிமிஷங்கூட என்னால் இருக்க முடியாது” என்று கூவினான். 

செல்லத்தம்பியினிடம் ஈடுபட்ட கவுண்டன் அவன் அந்த ஊரை விட்டுப் போகாமல் தன்னுடைய குடும்பத்தில் ஒருவனாகி விட வேண்டுமென்பதற்காகவே அவனுக்குக் கால்கட்டுப் போட நினைத்தான்; சாதியை எதிர்த்து நின்று தன் எண்ணத்துக்கு நிறைவேற்றிக் கொண்டான்ற அவன் எண்ணத்துக்கு மாறாகச் செல்லத்தம்பி ஊரைவிட்டு போக வேண்டு மென்றால்-? 

“நான் போய்த் திரும்பி வர மாட்டேனென்று எண்ண வேண்டாம். ஒரே வாரத்தில் வந்து விடுகிறேன். காளி யிடம்சொன்னால் மிகவும் கஷ்டப்படுவாள். நீங்கள் சொல்லித் தேற்றுங்கள். நான் வந்து விடுகிறேன்.” 

“தம்பி, உன் வார்த்தையை எப்படி நம்புவேன்! உன்னை நம்பி நாங்கள் ஐந்து பேர் ஜீவிக்கிறோம். காளி உன்னைப் பிரிந்து எப்படி இருப்பாள்!” என்று அழாக் குறையாகச் சொன்னான் கவுண்டன். 

“என்ன பைத்தியம் மாதிரிப்பேசுகிறீர்களே? என்னோடு இவ்வளவு நாள் பழகியும் என் சுபாவம் தெரிய வில்லையே சாமி மேல் ஆணையாக நான் ஒரு வாரத்தில் வந்து விடுவேன். இப்படிச் சொல்லும் போது அவன் கண்களில் துணிவும் வீரமும் விளங்கின. 

‘தம்பி,ஆணையிடாதே தம்பி! உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. உன்னைப் பிரிவதற்கு மனசு கேட்க வில்லையே!” 

“நீங்கள் நான் சொல்லுவதை நம்புங்கள். நம் எல்லோருக்கும் சௌக்கியம் உண்டாக வேணுமென் றிருந்தால் எனக்கு உத்தரவு கொடுங்கள். 

அதற்கு மேல் என்ன சொல்வது! தம்பி புறப்பட்டு விட்டான்! 


ஒரு வாரம் நூறு யுகம் போல் இருந்தது. எல்லோரும் ஜீவப் பிரேதங்கள் ஆகி விட்டார்கள். காளி யந்திரத்தைப் போல மாறிவிட்டாள். அவள் கண்களில் ஒளி இல்லை; முகத்தில் சோபை இல்லை. 

“வழியிலே போகிறவனை நம்பி உறவினர்களைக் கை விட்டால் தெய்வம் அப்படித்தான் தண்டிக்கும்” என்று சில பாவிகள் நாக்கில் நாம்பில்லாமல் சொன்னார்கள். 

எட்டாவது நாள் ! வந்து விட்டான்! நிஜமா? ஆம்! உண்மை,முக்காலும் உண்மை! செல்லத்தம்பி வந்து விட்டான்! அவன் மட்டுமா ? அவனோடு வேறு இரண்டு பேர், வண்டிகள் ; ‘தம்பி வந்தாயா?” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் பிச்சாண்டி துக்கம் நெஞ்சை அடைத்தது. பேச முடியவில்லை. அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்ட காட்சி எந்தக் கல் மனத்தையும் கரைத்து விடும். “காளி எப்படி இருக்கிறாள்?’ என்று முதலிற் கேட்டான். அவள் ஒரு மூலையில் விம்மிவிம்மி அழுங்குரல் அவன் காதிற் பட்டது; அது அவன் கண்களிலும் நீர்த் துளிகளை உண்டாக்கிற்று; அவன் வேறு புறமாகத் திரும்பிக் கண்ணைத் துடைத்துக் கொண்டான். 

”சரி. போனதை மறந்து விடுங்கள். இந்த இடத்தில் இனி ஒரு க்ஷணமும் இருக்க வேண்டாம். நான் கிழவன் பாளையம் மிட்டாதார் பிள்ளை. அசல் கொங்கு வேளாளக் கவுண்டன். என்னால் உங்களுடைய சாதி கெட்டுப் போக வில்லை. இதை இன்று இந்த ஊரஈநீர் எல்லோரும் அறியட்டும். 

அவனுடைய பேச்சு ஒரு பெரிய அரசன் முடி புனைந்த நாளில் குடிகளுக்கு வெளியிடும் அபயச் செய்தி போல் இருந்தது. 

எல்லோரும் ஆச்சரியக் கடலில் மூழ்கினர். அவன் ஒரு மிட்டாதார் பிள்ளையா ! ஆனால் என்ன? அவன் அவர்களுக்குப் பழைய செல்லத்தம்பிதான். அவர்கள் இடையே இருந்த அன்புக் கயிற்றில் இன்னும் இரண்டு முறுக்கு அதிகமாயின. 


 
செல்லத்தம்பி கிழவன்பாளையம் மிட்டாதாரின் செல்வப் புதல்வன் ; குமாரசாமி என்பது அவன் பெயர். தன்னுடைய மனத்துக்குப் பிடிக்காத பெண் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனென்று கோபித்துக் கொண்டு ஊரைவிட்டுப் புறப்பட்டு விட்டான். அவன் போன பிறகு அவன் தகப்பனாராகிய மிட்டாதாருக்கு அவனுடைய அருமை தெரிந்தது. இராத் தூக்கத்தை இழந்தார். ஊர்களுக்கெல்லாம் சொல்லிவிட்டார். தம் மகன் திரும்பி வந்தால் போதும் என்ற நினைவில் அவர் உடல் மெலிந்து போயிற்று. 

குமாரசாமி ஊர் சுற்றி வருகையில் கவுண்டனூரில் காளியின் கண்களில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டான். கல்யாணம் ஆயிற்று. சாதித் தடையினால் உண்டான கொடுமை அவனால் பொறுக்க முடியவில்லை. ‘சொந்த ஊருக்குப் போய்த் தகப்பனாரைப் பார்ப்பது, அவர் கோபத்தோடு இருந்தால் வந்து விடுவது, இல்லாவிட்டால் பிரயாண விவரங்களைச் சொல்லி அவர் உத்தரவு பெற்று எல்லோரையும் கூட்டிக்கொண்டு கிழவன்பாளையத்துக்கே போய் விடுவது’ என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டான். இறந்தவர் பிழைத்தால் மறுபடியும் செத்துப் போவென்றா சொல்வார்கள்? குமாரசாமியைக் கண்டால் மிட்டாதார் கோபித்தா துரத்துவார்? 

”என்னப்பா? எங்களை இப்படித் தவிக்க விட்டுப் போய் விட்டாயே!” என்று சொல்லிக் கதறினார் அவர். ‘’ நீங்கள் நாலு வருஷம் என்னைப் பிரிந்து வாழ்கிறீர்கள். ஒரு நாள்கூடப் பிரிய முடியாத புதிய தாய் தந்தையரையும் மனைவியையும் நான் இப்போது பெற்று இருக்கிறேன். அவர்களையும் கூட்டிக்கொண்டு இங்கே வர உங்கள் சம்மதம் தெரிய வேண்டும்” என்று சொல்லித் தன் சமாசாரத்தை மெல்ல விரித்துக் கூறினான். 

“உன் சித்தப்படி செய்; இனிமேல் என்னை விட்டு போகாமல் இருப்பதாகச் சத்தியம் செய்தால் உன்னை விடுவேன்” என்று அழுதார் மிட்டாதார். தம்முடைய சொந்தப் பிள்ளையல்லவா? 


செல்லத்தம்பி பழைய குமாரசாமியாகிக் கிழவன் ளையத்திற்குத் தன் புதிய உறவினர்களோடு வந்து விட்டான். காளிக்கு இப்போது தேவானை என்ற பெயர் அவளுடைய மாமனாரால் கொடுக்கப் பட்டது. அவள் பட்டிக்காட்டில் இருந்தபோது அந்த ஊருக்குப் பெருமை அளித்தாள்; கிழவன்பாளையத்து மிட்டாதார் மருமகள் ஆனபோது அந்தக் குடும்பத்திற்கும் பெருமை உண்டாக் கினாள். மாணிக்கத்தைத் தனியே வைத்தால் சிறிது சோபை தரும்; தங்கத்திலே புதைத்தால் பின்னும் அதிக மாகச் சோபை தரும். காளியும் அப்படித்தான். அவள் ராணியாகப் போகும் அதிருஷ்டமிருந்தால் அந்த. ராஜ்யத்துக்குக்கூட பெருமை அளிப்பாள்.

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *