காலையில் பரமசிவம் வேலைக்குக் கிளம்பும்போது, அவனுடைய பெண் வனிதா, கையில் சில பேப்பர்களை எடுத்து வந்து, ‘அப்பா, இதில் நீங்கள் இந்த இடத்தில் ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போங்கள். மற்றதையெல்லாம் காலேஜில் ‘பில் பண்ணிக் கொள்ளுகிறேன். இதைக் கொடுப்பதற்கு இன்றுதான் கடைசி நாள். எனக்கு இது சம்மந்தமாக கொஞ்சம் பணமும் வேண்டும்” எனச் சொல்ல, அவன் கையெழுத்துப் போட வேண்டிய பக்கத்னத மட்டும் எடுத்துக் காட்டினாள். பரமசிவமும் அவள் காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு, வனிதா கேட்ட ஐந்நூறு ரூபாயையும் உடனடியாகக் கொடுத்தான்.
வனிதாவின் தாய் ‘உனக்கு எத்தனை தரம் சொல்வது. எது கேட்கவேண்டுமென்றாலும், அப்பா இரவு வீட்டிற்கு வந்து, சாப்பிட்டு விட்டு, படுக்கப் போகும் முன் கேட்டுக் கொள் என, நீ எப்பவுமே அவர் ஆபீஸ் கிளம்பும் போதுதானே, உனக்கு வேண்டும் என அவரிடம் கையெழுத்தையும், காசையும் கேட்டு வாங்கிக் கொள்கிறாய். எதற்கு இந்தப் பணம்? இப்ப எந்த பரீட்சைக்குப் போகிறாய்? அப்பாவிடம் எதற்கு கையெழுத்து வாங்கினாய்” என்று கேட்டாள்.
“அம்மா, உனக்குச் சொன்னால் புரியாது. எனக்கு வேண்டிய பணத்தை அப்பாவிடம் கேட்கிறேன். அவர் கொடுக்கிறாய். நடுவில் நீ எதற்கு வந்து கேள்வி கேட்கிறாய். எனக்கும் நேரமாகி விட்டது. சாப்பிட என்ன இருக்கு” எனவும் கேட்டுக் கொண்டே, அந்த பேப்பர்களையும் பணத்தையும் தன் கைப் பையில் வைத்துக் கொண்டாள்.
மகளின் பேச்சைக் கேட்டவள் கணவனிடம் “எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம். அவள் எப்ப கேட்டாலும், பணம் கொடுக்கிறீர்கள். எதற்கு கேட்கிறாய் என்று கூடக் கேட்பதில்லை. எந்த பேப்பரிலும் படிக்காமல் கையெழுத்து போடுவதும் சரியில்லை. நான் சொன்னால், என்னைப் படிக்காதவள் என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறீர்கள். இப்பவாவது, எதற்குப் பணம், என்ன விஷயற்கு கையெழுத்து வாங்கினாய் எனக் கேட்டீர்களா?” என வேதனையுடன் சொன்னாள்.
“காமு, நம் பெண்ணை நாம் முதலில் நம்ப வேண்டும். உனக்குத்தான் தெரியுமே, சின்ன வயதிலிருந்தே அவள் தனக்கு என்ன வேண்டும். தான் என்ன படிக்கணும்னு முடிவாகத்தானே தீர்மானம் செய்வாள். அவள் இப்படி புத்திசாலியாகவும், தெளிவாகவும் இருப்பதால், நமக்கு பெருமையல்லவா? இப்ப அவளும் வயது வந்தவள், ஒரு கம்பெனியில் நல்ல பதவியிலும் இருக்கிறாள். படித்தது போதும் என எண்ணாமல், இப்பவும் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள். மற்ற பெண்களைப் போல் என் பெண்ணை நினைக்காதே. அவள் எது செய்தாலும், அது நமக்குப் பெருமைதான் தரும். என் பெண் என்னிடம் எந்தப் பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னாலும், தயங்காது கையெழுத்துப் போடுவேன், எனக்கு என் பெண்ணிடம் அத்தனை நம்பிக்கை” எனச் சொல்லி விட்டு, செல்லமாகத் தன் பெண்ணின் கன்னத்திலும், தட்டிவிட்டு, வேலைக்குச் சென்றான் ….
பரமசிவம் ஒன்றும் பெரிய வேலையில் இல்லை . அவன் போவது அரசு அலுவலகமாக இருந்தாலும், அவன் அரசு ஊழியனல்ல. அவன் அந்த ஊர் பத்திரப் பதிவு அலுவலகத்தில், பத்திரம் பதிய வருபவர்களுக்கு இடைத் தரகராகவும், அவர்களுக்காக சாட்சி கையெழுத்துப் போடுவபனாகவும் தான் இருக்கிறான். அவன் போடும் சாட்சிக் கையெழுத்துக்கும், தரகு வேலைக்கும். அவனுக்கு அன்றாடம் பணம் வந்து வடும். அதனால், மற்றவாகளைப் போல் ஒன்றாம் தேதி தான் சம்பளம், மற்ற நாட்கள் எல்லாம் திண்டாட்டம் என்கிற நிலை இல்லை. ஆரம்பத்தில் இந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வாழ வேண்டி சம்பாத்தியத்திற்கு வேறு வழி இல்லாததால், அதையே செய்துவந்தான். நாளடைவில் அதுவே அவனுடைய மனதிற்கும் பிடித்துப் போய் விட்டது. ஒவ்வோரு நாள், பெற்றவர்களுக்குத் தெரியாமல், நண்பர்களுடன் கூடி வந்து, அவசரமாக, இரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள வருபவர்களுக்கும், அவன் சாட்சி கையெழுத்துப் போடுவான். அந்த நாளில் அவனுக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. குறிப்பாக, முகூர்த்த நாட்களில் அவனுக்கு அதிகமாகவே, இப்படி வருமானமும் வரும்.
அப்படி கிடைக்கும் போதெல்லாம், காமாட்சி அவளிடம் “பெற்றவர்களுக்குத் தெரியாமல், இரகசியமாக திருமணம் செய்து கொள்ள வரும் பெண்ணின் பெற்றவர்கள் எத்தனை வேதனை அடைவார்கள். அவர்கள் தங்களின் பெண் கலியாண விஷயமாக எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள், இப்படி ஒரு பெண் செய்து விட்டால், அந்தக் குடும்பத்தில் எத்தனை கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாம் வரும். பெண்ணைப் பெற்றவர்களைத் துன்புறுத்தும் செய்கைக்கு நீங்களும் ஏன் சாட்சி கையெழுத்துப் போடுகிறீர்கள். இப்படி வரும் பணம் நமக்கு வேண்டாமே! நல்ல விதமான பத்திரங்கள் பதிவுக்கு மட்டுமே நீங்கள் சாட்சியாக இருங்களேன். பெற்றவர்களின் சாபத்தற்கு நாம் ஆளாக வேண்டாம்”
என எத்தனையோ வகையில் சொல்லுவாள். மனைவி சொல்வதை அவன் காதில் போட்டுக் கொள்வதில்லை. இன்று பெண்ணிற்குக் கொடுத்த ஐநூறு ரூபாய்கூட, அப்படி ஒரு திருட்டுக் கலியாணத்திற்குச் சாட்சிக் கையெழுத்துப் போட்டு வந்த பணம்தான். “நாய் விற்ற காக என்றால் குலைக்குமா? இல்லையே! இன்று என் பெண்ணின் தேவைக்கு உதவியாச்சு” எனவும் தனக்குள் நினைத்துக் கொண்டே, தன் வேலையைக் கவனித்தான்.
வானதியும் தன் படிப்பை முடித்துக் கொண்டு, உடனடியாக ஒரு வெளி நாட்டுக் கம்பெனியின் கிளை அலுவலகத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டாள். அவளுக்கும் கணிசமான வருமானமும் வந்தது. ஒரு நாள், வானதி அலுவலகத்திற்குக் கிளம்பும்போது, நல்ல பட்டுப் புடவையும், நிறைய நகைகளையும் எடுத்துப் போட்டுக் கொண்டாள். அம்மா, அவளிடம் “ஏதுக்குடி இன்று இத்தனை நகைகளையும் எடுத்து போட்டுக் கொள்கிறாய்” என்று கேட்க, அவளோ அங்கிருந்த அப்பாவிடம் “பாருப்பா, நான் ஒரு நாள் ஆசையாகப் போட்டுக் கொண்டால் கூட அம்மாவிற்குப் பிடிக்கவில்லை ” எனக் கொஞ்சும் குரலில் சொல்ல, பரம சிவமும் “என்ன காமு, இன்று தான் தை வெள்ளிக்கிழமையே. குழந்தை நன்றாகத்தான் அலங்காரம் பண்ணிக் கொண்டு போகட்டுமே. என்றைக்கிருந்தாலும், அவளுக்குப் போடத்தானே வாங்கி வைத்திருக்கிறோம்!” என மனைவியிடம் சொல்லி விட்டு, பெண்ணிடம் “நீ போட்டுக் கொண்டு போம்மா, அப்படியே அம்மனைப் போல இருக்கு” எனவும் ஆசையோடு வாழ்த்திவிட்டுச் சென்றான்.
பரமசிவமும் அன்று கொஞ்சம் நிதானமாகவே ஆபீசுக்குப் போனான். அவன் போகும் போது அங்கிருந்தவர்கள் அவனைப் பார்த்தவுடன், “வா வா பரமசிவம், உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று ஒரு கயைான ஜோடிக்கு உன்னுடைய சாட்சிக் கையெழுத்துப் போட்டு விடு. நேரம் ஆகிவிட்டது” எனச் சொல்லிக் கொண்டே, அவனிடம் ஒரு பாரத்தில் கடைசி பக்கத்தில் சாட்சி என்கிற இடத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். சிறிது நேரத்தில், அலுவலக பணியாள் ஒருவன் அவரிடம் “இந்தா பரமசிவம், உன் வேலைக்குச் சம்பளம்” என்று, அவனிடம் ஐநூறு ரூபாய் தாளொன்றையும் கையில் திணித்து விட்டுச் சென்றான். பணத்தை வாங்கியவன் அதைப் பையல் வைத்துக் கொண்டு, தன்னிடத்திற்கு சென்றான். எப்போதும் இல்லாமல் அன்று அவனுக்கு புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடியைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியதால், அங்கிருந்தவரிடம் இன்று யாருக்கு திருமணம் பதிவாகியது எனவும் வினவினான். அதற்கு அவர் அங்கு தூரத்தில் வாசலைப் பார்த்து நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காட்டினார்.
பார்த்தவன் ஒரு நிமிஷம் இடி விழுந்ததுபோல் துடித்தான். அவனுடைய நெஞ்சே நின்று விட்டது போல் இருந்தது. அவனுடைய துடிப்பைப் பார்த்தவன் ‘என்ன பரமசிவம்? உடம்பு சரியில்லையா? என்னவோ போல இருக்கிறாய்!’ எனக் கேட்க, அவனுக்குப் பதில் சொல்லாது அங்கிருந்து போய் விட்டான். வழியில் யாருடைய கண்களிலும் அவன் படவில்லை .
வெளியில் வந்தவுடன், எங்கு போவது எனத் தெரியாமல், தவித்தவன், அங்கு தெருக் கோடியில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோவிலைப் பார்த்தான். அந்த நேரத்தில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். சன்னிதி மூடியிருக்கும், ஆனால், கோவில் திறந்து தான் இருக்கும். உள்ளே சென்றவன், அங்கிருந்த தூணின் அடியில் அமர்ந்தான். தன் வேதனை தீருமட்டும் கண்ணீர் விட்டுக் கதறினான்.
நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை? யாரை முழுவதுமாக நம்பி இருந்தேனோ, அந்த மகளே இன்று என்னை ஏமாற்றி விட்டாளே. அவள் இப்படி ஒருவனை விரும்புவது தெரிந்தால், நானே திருமணம் செய்து வைத்திருப்பேனே? எல்லாவற்றையும் அவளே பார்த்து முடித்துக் கொள்வாள், எனக்கு எந்த சிரமத்தையும் என்பெண் கொடுக்க மாட்டாள் என எத்தனை இறுமாப்புடன் தலைநிமிர்ந்து நின்றேனே? |
அப்படி நான் என் கடமைகளை செய்யாமல், அவளிடமே எல்லாப் பொறுப்பையையும் விட்டு வந்ததால், இந்த திருமணத்தையும் அவளே தனியாக முடிவு செய்து கொண்டாளா? எந்த விஷயத்திற்கும் பெற்றவர்கள் வேண்டாமென்றாலும், திருமணத்திற்காகவாவது அந்த ஏமாந்த பெற்றோர்கள் வேண்டாமா? தூண் போல் நாங்கள் இருவரும் இருக்க, யாருமற்ற அனாதையைப் போல, வந்து, பதிவுத் திருமணம் செய்யும் அளவுக்கு அவளுக்கு எங்கள் மீது வெறுப்பா? எங்களுடைய ஏழ்மையைக் கண்டு எங்களால் முடியாது என நினைத்து விட்டாளோ? பலப்பல நினைத்து தனக்குள் அழுதான். பெண்ணின் மீது கோபமோ, வெறுப்போ வரவில்லை. மாறாக தன்னை ஏமாற்றி விட்டாளே என்கிற வேதனைதான் நிறைந்திருந்தது. அதே சமயம் தன்னுடைய மனைவி சொல்லும் வார்த்தைகளும் அவனின் நினைவில் வந்தது.
“உண்மைதான் காமு, நீ சொன்ன மாதிரி நாந்தான் புத்தி கெட்டு அளவுக்கு மீறிய சலுகையையும், செல்லத்தையும் கொடுத்து என் பெண்ணை இன்று இப்படிச் செய்யும் அளவுக்கு வளர்த்து விட்டேன்.” எனவும் தன் மீதே கழிவிரக்கம் அடைந்தாள்.
அப்போது அந்த பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த இரு வயதான பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றார்கள். “என்ன செய்வது, நாம் ஒன்றுக்கு ஆசைப்பட்டா, பகவான் வேறு ஒன்றைத்தான் நமக்குக் கொடுக்கிறான். அந்தப் பெண்ணுக்கு அவந்தான் மாப்பிள்ளை என அன்றே போட்ட முடிச்சு. இன்று கூடி விட்டது. முடிந்ததை அப்படியே விட்டு விடாமல், வீம்புக்காகவும், வைராக்கியத்திற்காகவும் நம் கோபத்தைக் காட்டி, அவர்களைச் சேர வடாமல் தடுத்தால், நமக்கு என்ன கிடைக்கப் போகிறது. ஏற்கெனவே வெட்கப்பட்டாகி விட்டது. துக்கத்தை முழுங்கத்தான் வேண்டும். பழகியவர்களிடையே இருக்க வெட்கப்பட்டால், வேறு கண் காணாத இடத்திற்குப் போகத்தான் வேண்டும். உலகம் ஒன்றும் சின்னதில்லை?” என யாருக்கோ சமாதானமாகச் சொல்லிக் கொண்டு சென்றார்கள்.
அதைக் கேட்டவனுக்கும் ஒரு தெளிவு பிறந்தது. அதற்குள் கோவிலைத் திறக்க குருக்கள் வரவும், பெண்ணின் பெயருக்கு ஓர் அர்ச்சனை செய்துகொண்டு கிளம்பினான். வழியிலேயே ஒரு துணிக்கடையில் ஒரு பட்டுப் புடவையும், சரிகை வேஷ்டியும், துண்டும் வாங்கிக் கொண்டான்.
மதியம் சாப்பாட்டிற்கு வராத கணவனை எதிர்பார்த்துக் காத்திருந்த காமாட்சி, அவன் வந்தவுடன் அவனிடம் “ஏன் இன்று இத்தனை நாழி? கையில் என்ன பெரியதாக எதோ எடுத்து வந்திருக்கிறீர்களே?” எனக் கேட்டவாறு அவனிடமிருந்து பையைத் திறந்தாள். அதில் பட்டுப் புடவை, சரிகை வேட்டி எனப் பார்த்தவளிடம் “உள்ளே வா எல்லாம் சொல்லுகிறேன்” எனச் சொல்லி விட்டு உள்ளே நுழைந்தாள்.
மெதுவாக அவளிடம் “காமு, நீ சொல்வது போல் நான் முட்டாள்தாண்டி. பாசம் கண்ணை மறைத்து விட்டதடி. எனக்கு இனிமேல் எல்லாமே நீதான். இப்ப நீ நான் சொல்வது போல தட்டாது பதில் கேட்காது செய். என்னுடன் வா, நாம் இருவரும் இனி இங்கே இருக்க வேண்டாம். கிளம்புவதற்குத் தேவையான துணிகளை மட்டும் எடுத்துக் கொள்” எனச் சொல்லி விட்டு முகம் கழுவச் சென்றாள்.
வந்தவன், சாமி விளக்கை ஏற்றி வைத்து, அதன் கீழ் புடவை, வேஷ்டி, கோவிலில் அர்ச்சனை செய்து வந்த பூ பிரசாதங்களை வைத்தான். மெதுவாக மனைவியிடம் பத்திரப் பதிவு ஆபீசில் நடந்தவற்றைச் சொல்லவும் அவளுக்கோ கோபம் தாங்கவில்லை.
“ஏங்க, நீங்கள் அங்கேயே அவளை ஓர் அறை அறைந்து, தரதரவென இழுத்துக் கொண்டு வந்து, இங்கு நாலு சாத்து சாத்தவேண்டாமா? எப்படிப் பொறுமையாக இருக்கீங்க? எனக்கு வயிறு எரிகிறதே?” எனக் கதறிக் கொண்டே , பெண்ணுக்குச் சாபம் கொடுக்க வாயைத் திறந்தாள்.
“வேண்டாம் காமு, நம் வாயால் நம் பெண்ணைச் சாபமிடவேண்டாம். என்ன பாவம் யாருக்குச் செய்தோமோ தெரியவில்லை . இன்று நம் ஒரே மகளும் நமக்குத் தெரியாமல் தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்து கொண்டு அதில் பயணம் செய்யவும் துணிந்து விட்டாள்”.
“நான் அடித்து அடித்துச் சொன்னேன் கேட்டீர்களா? பெற்றவர்களுக்குத் தெரியாமல், திருட்டுக் கல்யாணம் பண்ண வருகிற ஜோடிகளுக்குச் சாட்சிக் கையெழுத்துப் போடாதீர்கள் என, எத்தனை பேருடைய வயிற்றேரிச்சலோ நமக்கு இன்று இது வந்திருக்கு. முன்வினை பின்வரும் என்பது பொய்யாகுமா?” என்று புலம்பினாள்.
“காமு, நான் இப்ப எடுத்திருக்கிற முடிவுக்கு நீயும் சம்மதிக்கணும். நம் பெண்தான் நம்மை வேண்டாமென ஒதுக்கி வைத்து வீட்டுத் திருமணம் செய்து கொண்டாள். எல்லாம் நாம் அவளுக்குக் கொடுத்த படிப்பும், சலுகையும், தைரியமும்தான் காரணம். ஆனால், நாம் நம் பெண்ணை வேண்டாமென ஒதுக்க வில்லையே. நம்முடைய கடமையிருக்கு. அதைத் தான் இப்ப நாம் செய்யணும். என்ளதான் தனக்குப் பிடித்தவளைக் கைப்பிடித்தாலும், வாழ்வதற்கு ஒரு வீடு வேண்டாமா? நம் வீடு அவளுக்காகத்தானே. நாம் வாழ்ந்து முடித்துவிட்டோம். இனி அவளுடைய வாழ்க்கைதான் வாழணும். அதனால், நான் தீர்மானித்து விட்டேன், அவள் வருவதற்குள் நாமிருவரும் கிளம்பி இப்பவே, நம் சொந்த ஊருக்குப் போகிறோம். ஏற்கெனவே அங்கு என் அப்பா பார்த்துக் கொண்டிருந்த கோவில் நிர்வாகத்தை கவனிக்க ஆளில்லாமல், நான் அடிக்கடி அங்கு போய் வருகிறேன். இனிமேல் அதுதான் என் நிரந்தரத் தொழில். என் கையெழுத்தால், எத்தனை பெற்றவர்களின் வேதனைக்கு நாள் காரணமானேனோ அந்தப் பாவத்தை எல்லாம் இனி இறைவனின் பணியிலேயே கரைத்து விடவேண்டும். நமக்கென ஊரில் ஒரு வீடும் இருக்கு. தொழிலுக்கு கோவிலும் இருக்கு. பிழைத்துக் கொள்ளலாம்” எனச் சொல்லி விட்டு, கிளம்பவும் தயாரானார்கள்.
போவதற்கு முன், சாமி படத்தின் கீழ் ஒரு கடிதத்தை எழுதி வைத்தான். வீட்டைப் பூட்டிக் கொண்டு, சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு “பெண் வந்தால் நாங்கள் அவசரமாக ஊருக்கு போவதாகச் சொல்லி விடுங்கள்” எனவும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
வழக்கம்போல் வீட்டிற்குத் திரும்பி வந்த வானதி, வீட்டுச் சாவியை வாங்கிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவளின் மனதிலும் ஓர் உறுத்தல். சொல்லத்தெரியாத வேதனை. மௌனமாகவே, அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவள் சிறிது நேரம் சென்றபின், அப்பா அம்மா எங்கே போயிருப்பார்கள் எனத் தெரியாமல், விழித்தாள். அவள் கண்களில் சாமியிடம் இருந்த ஒரு கவர் தெரிந்தது, பிரித்துப் பார்த்தவளுக்கு தன் திருட்டுத்தனம் அப்பாவற்கும் அம்மாவற்கும் தெரிந்து விட்டதெனவும், அதனால் அவர்கள் கோபத்துடன் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்பதாகவும் நினைத்துக் கொண்டாள்.
அப்பாவின் கடிதத்தைப் பார்த்தாள். அவர் சின்னதாகத்தான் எழுதி இருந்தார். “எந்தப் பெண்ணின் மீது அளவில்லாப் பாசத்தையும், நம்பிக்கையையும் வைத்துக் கொண்டிருந்தேனோ, அந்தப் பெண் இன்று என்னை ஏமாற்றி விட்டாள். எத்தனையோ ஜோடிகள் வந்து, செய்து கொள்ளும் திருட்டுக் கலியாணத்திற்கு, சாட்சிக் கையெழுத்துப் போட்ட ஒரு பாவியை, இன்று அவனுடைய பெண்ணின் கலியாணத்திற்கே சாட்சிக் கையெழுத்துப் போடும்படிச் செய்த விதியைச் சொல்வதா? பெற்றவனே சாட்சிக் கையெழுத்துப் போட்ட கொடுமையைச் சொல்லுவதா எனத் தெரியவில்லை. மகளே, என்ன செய்தாலும், உன் மீது வருத்தம் தான் வருகிறதே தவிர, கோபம் வரவில்லை . மனம் கொதிக்கிறது. எல்லாவற்றிற்கும் நம்பிய தகப்பனை, உன் கலியாண விஷயத்தில் எப்படி நம்பாமல் போனாய். நீ கேட்கும் போதெல்லாம், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்ட ஒரு புத்தி கெட்ட அப்பாவையே, உன் திருமணத்திற்கும் சாட்சிக் கையெழுத்து போட வைத்து விட்டாயே அம்மா? எத்தனை நாட்களாக எங்களை இப்படி ஒரு வேதனைத் தீயில் விட நினைத்தாய்? எப்படியானாலும், முடிந்தது முடிந்ததுதான். புதிதாக திருமணமானவர்கள் வீடில்லாமல் கலக்க வேண்டாம். வாழப் போகிற உனக்கு நீ வாழ்ந்த வீட்டையே கொடுத்து விட்டுப் போகிறேன். வாழ்ந்து முடிந்த எங்களைப் பற்றி இனி நீ நினைக்க வேண்டாம். சாபமிட இந்த அப்பா, அம்மாவால் முடியாதம்மா! அதனால் உன் பெயரில் இன்று அர்ச்சனை செய்த பிரசாதத்தையும், இந்த ஏழைப் பெற்றவர்களின் ஆசியாக உனக்குப் புடவையும், உன்னவருக்கு வேஷ்டியும் வைத்திருக்கிறேன். இன்று நாங்கள் பட்ட வேதனை, எந்தக் காலக்கிலும், நீ படும்படி உன் குழந்தைகள் உன்னை ஏமாற்றாமல் இருக்க வேண்டு மென அந்த அகிலமெங்கும் பரந்து நிற்கும் பரம் பொருளை வேண்டிக் கொள்கிறோம். எங்களின் ஆசிகள். சாட்சிக் கையெழுத்து பரமசிவம்”.
என எழுதியிருந்தது. கடிதத்தைப் படித்தவளின் கர்வம் ஒரே நொடியில் மறைந்தது. படித்தவள் என்கிற கர்வத்தால் எத்தனை சுயநலமாக என்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கா இத்தனை அன்பான அப்பா, அம்மா என நினைத்து, ‘அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் நான் செய்தது மன்னிக்க முடியாத தப்புத்தான்” எனக் கதறினாள். அவளை மணந்தவன், மெதுவாக உள்ளே வந்தான்.
– செப்டம்பர் 2018
Ok appreciate you.
Spelling mistake lots
Thanks for your feedback, we have fixed it now.