கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2024
பார்வையிட்டோர்: 1,043 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓடிக்கொண்டிருந்த ரெயில் வண்டியின் ஜன்னலில் தலையைச் சாய்த்து, சிந்தனையில் மூழ்கியிருந்தான், அந்தச் சிறுவன். ரெயிலின் வேகத்தைக் காட்டிலும் அவன் மனம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. எவ்வளவு சீக்கிரமாக, முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக, எத்தனை எட்டச் செல்ல முடியுமோ, அத்தனை எட்டச் சென்றுவிடத் துடித்துக் கொண்டிருந்தது, அந்த இள உள்ளம். 

இத்தகைய நீண்ட ரெயில் பிரயாணம் அவனுக்குப் புதிய அனுபவந்தான். வழி நெடுகக் கண்ணைக் கவரும் காவேரிப் படுகைக் காட்சிகள், ஊர்கள், வாய்க்கால்கள், பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள்; அவற்றையெல்லாம் ஆவலுடன் பார்த்து ஆனந்தப்பட வேண்டிய வயதினன் அவன். வேருெரு சமயமாக இருந்தால், அவற்றைக் கண்டு களித்திருப்பானோ, என்னவோ? ஆனால், இப்பொழுது அவன் மனம் அவற்றில் லயிக்கவில்லை. சென்ற காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் வருங்காலத் துக்குமாகக் ‘ கிளித்தட்டு ‘ விளையாடிக்கொண்டிருந்தது அது. 

“இந்நேரம் அம்மா நான் எழுதி வைத்திருந்த கடிதத்தைப் பார்த்திருப்பாள். அதில் கோணல் மாண லாக, எனக்குத் தெரிந்த பாஷையில், அவசரம் அவசர மாகக் கிறுக்கி வைத்திருந்ததை அவள்புரிந்துகொண்டிருப் பாளோ, என்னவோ ? அதன் அடக்கத்தைச் சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டாலும், ‘நான் சாக ஓடவில்லை ; வாழத்தான் ஓடுகிறேன். அதிலும எங்கள் இருவரின் மன நிம்மதிக்காகத்தான் ஓடுகிறேன்’ என்பதை அவள் புரிந்துகொண்டிருந்தால் போதும். ஆனால் அவள், புரிந்துகொள்ளாவிட்டாலும், அவர் அவளுக்கு அதைப் புரிய வைத்திருப்பார். என்னைப் பிரிந்த அதிர்ச்சி அவளுக்குப் பெரிதாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், அவர் அவளைத் தேற்றியிருப்பார். “அம்மா! அம்மா! உன்னைப் பிரிய எனக்கு மாத்திரம் திடம் இருந்ததென்றா நினைக்கிறாய்? ஆனால் உன் வாழ்வில் சலனத்துக்குக் காரணமான நானே அதில் சஞ்சலத்தை ஊட்டுவதற்கும் காரணமாக இருந்தேனென்றால்? அதை என்னால் பொறுக்க முடியவில்லை, அம்மா; அதுதான் கிளம்பி விட்டேன். நான், எங்காவது, எப்படியாவது பிழைத் திருப்பேன். இந்தச் சலனமும் சஞ்சலமும் காலவேகத்தில் கரைந்ததும் உன்னிடம் வருவேன்……” 

பதின்மூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்த ஓர் சிறுவனின் உள்ளம், இவ்வளவு கோவையாக, இத்தனை அழகான வார்த்தைகளிட்டு ஒரு விஷயத்தைச் சிந்தித் திருக்க முடியாது. ஆனால், அப்பொழுது அவன் சிந்தனையில் ஓடிய நினைவின் கருத்து இதுதான்.


அப்பொழுது மாலை ஐந்து மணி இருக்கும். ரெயில் ஏதோ ஒரு நிலையத்தில் வந்து நின்றது. அது இஞ்சி னுக்குத் தண்ணீர் சேகரித்துக்கொள்ளும் இடம்போலும்? பிரயாணிகள் கீழே இறங்கி, சிற்றுண்டிகளோ, குடிநீரோ, வாங்கிவரச் சென்றனர். அவனுக்குப் பசித்தது. அன்று காலை, வெறும் காபி கொஞ்சம் குடித்திருந்தான். அவ்வ ளவுதான். பிறகு தண்ணீர்கூட அருந்தவில்லை. கையில் காசிருந்தால் அவனும் ஏதாவது வாங்கிச் சாப்பிட்டிருப் பான். ஆனால் இப்பொழுது அவனிடம் அவன் தான் இருந்தான். கீழே இறங்கி எதிரே இருந்த பிளாட் பாரத்துக் குழாயில் முகத்தைக் கழுவிக்கொண்டு இரண்டு கைகளாலும் தண்ணீரை ஏந்திக் குடித்துவிட்டுத் தன் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான். 

யாரோ ஒரு கிழவர் அங்கே அதே வண்டி பில்ஏறினார். பையனுக்கு எதிராக இருந்த பெஞ்சியில் வந்து அமர்ந்தார். அவரைப் பார்த்தபோது, அவனுக்குத் தன் தாத்தாவின் நினைவு வந்தது. ஐயோ ! அந்தச் சலனம் நிகழ்ந்த அன்று அவர் அவனை நோக்கிக் கூறிய சொற்கள் – ‘பிறக்கு முன்பே அப்பன் உயிருக்கு உலை மூட்டிவிட்டாய். இப்போது பெற்றவளையும் உயிரோடு பறிகொடுத்து விட்டாயேடா ; அட அதிருஷ்டம் கெட்ட பயலே!’

ஏன் அவர் அப்படிச் சொன்னார் என்பது அப்போது அவனுக்கு விளங்கவில்லை. அது ஒரு சாதாரணச் சம்பவம் போலத்தான் அவனுக்குக் தோற்றிற்று. போகப் போக அல்லவா, அதன் உண்மைச் சொரூபம் அவன் சிறு உள்ளத்தில் உருவாக்கப்பட்டது? அப்போதுங்கூட, அவன் வரையில் அம்மா செய்தது சரி என்றுதான் பட்டது. ஆனால் எதற்காக அது நிகழ்ந்ததோ, அதற்குத் தான் ஒரு தடை என்பதைத் தொடர்ந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் சுட்டிக்காட்டிய போது, தாத்தாவின் வார்த் தைகளின் அர்த்தத்தை அவன் உணர்ந்துகொண்டு விட்டான். பிறகு, அவனால் அங்கே இருக்க முடிய வில்லை ; கிளம்பிவிட்டான். 


“எந்த ஊருக்குப் போகிறாய் தம்பி ?” எதிரே உட்கார்ந்திருந்த கிழவர்தாம் அவனை நோக்கி இப்படிக் கேட்டார். 

எந்த ஊரைச் சொல்வதென்பது அவனுக்குக் தெரிய வில்லை. எங்கே போகிறோம் என்பது தெரிந்திருந்தால் அல்லவா. சொல்லுவான்? இருந்தாலும் குருட்டாம் போக்கில், “பட்டணத்துக்கு” என்றான். 

“தனியாகவா போகிறாய்? எங்கேயிருந்து வருகிறாய்?”

“பாலக்கரையிலிருந்து.”

“திருச்சியிலிருந்தா?” 

“ஆமாம்.'” 

“அதற்கு இந்த வழியாக வருவானேன்? இது ஈரோடுக்குப் போகிற வண்டியல்லவா, தம்பி?” 

அவன் ஒரு கணம் விழித்தான். ஆயினும், உடனே சமாளித்துக்கொண்டு ‘பெரிய ரெயிலில் போனதே இல்லை; அதுதான’ என்று இழுத்தான். 

அவர் முகத்தில் சந்தேக ரேகைகள் தோன்றின; எனவே மீண்டும். “பட்டணத்திலே யார் இருக்கிறார்கள் தம்பி, உனக்கு?” என்று கேட்டார். 

ஏண்டா இவரிடம் பேச்சுக்கொடுத்தோம் என்று இருந்தது. அவன் பொய் சொல்லிப் பழக்கப்பட்டவன் அல்ல ; ஆகவே, இப்படித் தொடர்ந்து வந்த கேள்வி களுக்குக் கோவையாய்ப் பதில் அளிக்கத் திண றினான். அந்தத் திணறலுக்கிடையே வேறொரு சோதனையும் ஏற்பட்டது. டிக்கட் டிக்கட் என்று யமகிங்கரன் போல டிக்கட்டுப் பரிசோதகன் ஒருவன் வந்து நின்றான். 

ஓஹோ! டிக்கட்டு என்று ஒன்று வாங்க வேண்டுமே! அது இப்போதுதான் அவனுக்குப்பட்டது. கிழவர் டிக்கட்டைக் காட்டிவிட்டார், “எங்கே தம்பி, உன் டிக்கட்டு?” என்று விரட்டினான் பரிசோதகன். 

“டிக்கட்டு இல்லை” கிணற்றினுள்ளிருந்து வரும் குரலைப்போல இருந்தது அவன் பதில். 

“எங்கே போகிறாய்?” 

“எங்கேயாவது.” 

“எங்கேயாவதா? உங்கள் தாத்தா வீட்டு வண்டியின்னு நெனச்சுக்கிட்டியோ?” 

“ஸார்!” அவன் குரல் பரிதாபகரமாக இருந்தது; கண்களிலே நீர் பொங்கிற்று.

“ஸாராவது, மோராவது? ராஜாமாதிரி ஜன்னலோரம் வந்து குந்திக்கிட்டான்; எளுந்திருடா.” 

அவன் எழுந்து நின்றான்.

“இப்படியே நில்லு ; இந்த வண்டியை முடிச்சிக்கிட்டு வந்திடறேன்.” பரிசோதகன் அடுத்த பகுதிக்குச் சென்றான். 

“வீட்டிலே கோபித்துக்கொண்டு வந்து விட்டாயா தம்பி?” என்று சந்தேகமில்லாது கேட்டார், அந்தக் கிழவர். 

“கோபம் இல்லை; சொல்லாமல் வந்துவிட்டேன்.” 

“ஏன்?” 

“ஏன்?” என்று அவனும் தன்னையே கேட்டுக் கொண்டான். ‘அதைச் சொல்லலாமா? சொல்லுவதா?’ என்பதுதான் அந்த அகக்கேள்வியின் அர்த்தம்போலும்! அதைச் சொன்னால் நிச்சயமாக அவர் தன் நிலைக்கு இரங்குவார். ஆனால், அவன் அம்மாவைப்பற்றி என்ன நினைப்பார்? அவன் தீர்மானம் செய்துவிட்டான், அதைச் சொல்லுவதில்லை என்று. எனவே, “அது என் சொந்த விஷயம்” என்று அந்தப் பெரியவருக்குப் பதில் அளித்தான். 

அவர் கேலியாக நகைத்தார்; “சொந்த விஷயமாமே: பெரிய ஆளாக இருக்கிறாயே, தம்பி! நீ சும்மா சொல்லு, பயப்படாதே. நான் அவருக்கு ஈரோடு வரையிலுள்ள சார்ஜுகொடுத்து அனுப்பிவிடுகிறேன்” அந்த நிலையில், அது அவனுக்கு எதிர்பாராத ஒரு பேருதவிதான். இருந்தாலும், அந்த அற்பக் காசுக்காகத் தன் குடும்ப ரகசியத்தை வெளியிட்டுவிடுவதா? அல்லது, அவரிடம் பொய் சொல்லி ஏமாற்றுவதா? இரண்டையும் அவன் விரும்பவில்லை. அந்த ரகசியம் அவனுள்ளே புதைந்து, அவனுள்ளே மடிய வேண்டியது. அதைச் சொல்ல அவன் வாய்க்குத் திறன் இல்லை; மனத்துக்குத் திடம் இல்லை. ஏனெனில், அவனுக்கு அது சாதாரணமான நியாயமான நிகழ்ச்சிதான். என்றாலும் உலக்கு ஓர் அசாதாரண நிகழ்ச்சி. 


ஆம்; அது தன்னிலிருந்துதான் ஆரம்பித்தது. என்றே அவன் நினைத்தான். மேற் பார்வைக்கு எல்லோருக்கும் அது அப்படியே தோன்றினாலும், ஆய்ந்து பார்த் தால், அவன் தாத்தாதான் அதன் அஸ்திவாரம் என்பது தெரியவரும். 

அவனுடைய அம்மா ஜானகி, திருச்சி ஸெயிண்ட் ஜோஸப் கல்லூரி பேராசியராக இருந்த சதாசிவத்திற்கா ஒரே பெண். அவளுக்குப் பதினொரு வயதாக இருக்கையில் சதாசிவத்தின் மனைவி இறந்து போனாள். அவருக்கு அப்பொழுது நாற்பது வயதுகூட ஆகவில்லை. எனவே, எல்லோரையும் போல அவர், ருக்மிணியை மறு மணம் செய்துகொண்டார். அந்த மறுமணந்தான் காரணமோ என்னவோ, மற்றப் பெற்றோர் தம் குழந்தைகளை வளர்ப்பது போன்று அவர் தம் மகளை வளர்க்கவில்லை. செல்லம் கொடுத்துக் கெடுத்தார் என்றும் சொல்லுவதற்கில்லை. ஏதோ ஒரு தப்பைச் செய்துவிட்டு அதற்கு வேறொரு விதத்தில் பரிகாரம் தேடுவதுபோல, அவளுடைய கோரிக்கைகளுக்கெல்லாம் இணங்கி வந்தார். அவளும் அப்படி ஒன்றும் பெரும் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து விட்வில்லை. மெட்றிகுலேஷன் படித்து முடிந்ததும், ஆசிரியப் பயிற்சி பெற விரும்பினாள். அவர் அவளுக்கு உரிய காலத்தில் திருமணத்தை முடித்துவிட எண்ணியிருந்தார். 

இருவரும் சமரசமாகவே இதைத் தீர்த்துக்கொண்டனர். அவர் அவள் விருப்பத்துக்கு இணங்கினார் ; அவளும் அவர் கோரியபடி மணம் செய்துகொள்ள இசைந்தாள். ஜானகி பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்துக்கொண்டே ரங்கநாதனின் மனைவியும் ஆனாள். அவனுக்குத் திருச்சிப் நகரசபையில் வேலை. எல்லாம் சௌகரியமாகவே போயிற்று. ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். 

ஆனால், சலனம் எங்கே எப்பொழுது எப்படி ஏற்படு மென்று யார் கண்டார்கள்? அது, சதாசிவத்தின் நிறைவேறிய கோரிக்கையிலிருந்து அவள் வாழ்வில் புகுந்தது. கல்யாணமான ஒரு மாதத்துக்கெல்லாம் ரங்கநாதனுக்கு மாலைதோறும் ஜுரம் வரலாயிற்று. டாக்டரிடம் காட்டியபொழுது க்ஷயரோகத்தின் சின்னம் லேசாகத் தென்படுவதாகவும், பூரண ஓய்வுகொடுத்து இருந்தால், எளிதாகப் போக்கிவிடலாம் என்றும் அறிவித்தார். ரங்கநாதன் வேலையைவிட்டு விட்டு, மாமனார் வீட்டிலே தங்கி உடம்பைப் பார்த்துக்கொண்டான். ஆனால் மனத்தை பார்த்துக்கொள்ள முடியவில்லை. ஜானகி மூன்று மாதக் கர்ப்பிணியாக ஆனபோது, அவன் நோயும் அவள் வயிற்றைப் போலவே வளர்ந்துவிட்டது. 

தப்பை அவன் உணர்ந்தான்; அவள் உணர்ந்தாள்; எல்லோரும் உணர்ந்தார்கள்; ஆயினும் என்ன செய்வது? இன்னும் ஓர் ஐந்தாறு மாதங்கள் பணத்தைப் பணம் என்று பாராமல் செலவழித்துப் பார்த்தார்கள். நோய் குறைவதாகக் காணோம். கடைசி நம்பிக்கையாக ரங்கநாதனை அழைத்துக்கொண்டு மதனப் பள்ளிக்கு ஓடினார், சதாசிவம். ஜானகி போகக் கூடவில்லை; அவள் நிறை மாதச் சூலியாக இருந்தாள். அவள் பிரசவத்தைக் கவனிக்க, சித்தி ருக்மிணியும் ஊரிலே தங்க வேண்டிய தாயிற்று. 

மதனப்பள்ளிக்குப் போன பிறகு, ரங்கநாதனுக்கு உடம்பு கொஞ்சம் குணம் கண்டது. ஊரிலிருந்து, அவனுக்கு ஆண்குழந்தை பிறந்த நல்ல செய்தியும் வந்தது. எல்லாம் சேர்ந்து அவனைப் படிப்படியாகத் தேற்றின. மூன்று ஆண்டுகள் கணவனும் மனைவியும் சந்திக்காது நாட்களை ஓட்டினர். 

ஆயினும், எத்தனை நாட்கள்தாம் அப்படி விலகி இருக்க முடியும்? அவள் கணவனைக் காணத் துடித்தாள். அவன் அவளையும் குழந்தையையும் பார்க்க விழைந்தான். டாக்டரின் எச்சரிப்பு இருக்கத்தான் இருந்தது. இருந்தாலும் இந்த ஏக்கத்தை அவர்களால் சகிக்க இயலவேயில்லை. அவள் சோக நிலை சதாசிவத்தையும் கரைத்தது. ‘அவன்தான் இப்பொழுது நோயின். பிடியிலிருந்து விடுபட்டுவிட்டானே போய்ப் பார்த்து விட்டு வருவதால் என்ன கெடுதல் ஏற்பட்டுவிடப் போகிறது?’ என்று ஒரு தடவை, ஜானகியை மதனப் பள்ளிக்குக் கூட்டிச் சென்றார். ஆனால்— 

அது வெறும் சந்திப்பாக இருக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகள் பட்ட சிரமமெல்லாம் வீணாயிற்று. ஜானகி வந்து திரும்பிய ஒரு மாதத்துக்கெல்லாம், ரங்கநாதன் உடல் நிலை முன்னிலும் கேவலமாகி விட்டது. ஊருக்குக் கொண்டுபோய் விடுமாறு டாக்டர்கள் கூறி விட்டனர். 

பிறகு அவன் மீளவேயில்லை. பின்னும் கொஞ்ச காலத்தில் எல்லோரையும் தவிக்க விட்டு விட்டு கண்களை மூடினான். 

அவன் மறைவு எல்லோரையுமே தாக்கிற்று. ஆனால் சதாசிவத்தைத் தாக்கிய அளவு எவரையும் தாக்கியிராது. உரிய காலத்தில் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்று அவர் கட்டாயப் படுத்திச் சேர்த்துவைத்த தாம்பத்தியம் என்ன ஆயிற்று? சேர்ந்து நான்கு மாதங்களாவது அவள் இன்பமாக இருந்தாளா? எதற்காக அவர்கள் இணைக்கப்பட்டார்களோ, அதுவே அவர்கள் பிரிவுக்குக் காரணமாகிவிட்டது.

சதாசிவம் இத்தனை தூரம் உணர்ச்சியும் வருத்தமும் அடைந்திருக்கமாட்டார். ஆனால், வீட்டில் ஜானகியை விடக் கொஞ்சம் வயதே மூத்தவளான அவருடைய இளமனைவி ருக்மிணி இருந்தாள். அவள் போக பாக்கியங்களை விரும்பினாள். கடமை என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அவள் குறைகளை அவர் நிறைவேற்றத்தான் வேண்டியிருந்தது. தமது பிடிவாதத்துக்குப் பலியாகி வாழ்விழந்து நிற்கும் மகளின்முன் தாம் களிப்பாக வாழ வேண்டியிருந்ததே ! அதைத்தான் அவரால் பொறுக்க முடியவில்லை. 

அதை அவள் ஓரளவாவது உணராதிருக்க வேண்டு மென்று, அவர் ஜானகிக்கு உள்ளூர்ப் பள்ளி ஒன்றில் ஆசிரியை வேலை தேடிக் கொடுத்து, அவள் மனத்தை அதில் ஈடுபடச் செய்தார். ஆயினும், பருவச் சூட்டில் கொதித்து வெளிவரும் நீராவியை மூடி போட்டு அடைத்துவிட முடியமா? அதோடு சோதனை வேறொரு விதத்திலும் சதாசிவத்தை விரட்டி வந்தது. 

அவருடைய மைத்துனன், இனையதாரத்தின் தம்பி அழகிய வாலிபனை பசுபதி, ஜானகி வேலையாயிருந்த அதே பள்ளியில் ஒரு வேலையேற்றுத் திருச்சிக்கு வந்து சேர்ந்தான். அக்காள் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். ஜானகியும் அவனும் பள்ளிக்குப் போனார்கள். ஒன்றாகவே திரும்பினார்கள். வீட்டிலும் ஒன்றாகவே பழகினார்கள். சதாசிவம் இந்த ஒற்றுமையில் சட்டென்று விகற்பத்தைக் கண்டுவிடவில்லை. ஆனால் அவர் அதை விரும்பவில்லை. தடுத்து நிறுத்தவும் மனம் முன்வர மறுத்தது. 

நாலைந்து ஆண்டுகள் இப்படியே சென்றுவிட்டன. ஜானகியின் மகன் கோபு வளர்ந்து விட்டான். புத்திசாலியாக இருந்தான். எல்லா வகுப்புக்களிலும் முதலில் தேறி வந்தான். அவனுடைய வளர்ச்சியில் அவள் பெருமையே அடைந்தாள். இருந்தாலும் புத்திசாலிப் பிள்ளை ஒருவனே, ஓர் இளம் பெண்ணின் வாழ்வை முழுவதும் களிப்பாக வைத்துவிட முடியாதே ! எனவே, அவள் உள்ளத்தில் இட்டு நிரப்பாத அந்தக் குறை இருந்து கொண்டுதான் இருந்தது. 

அந்த நிலையில் அவளுக்குப் பசுபதியிடம் கவர்ச்சி ஏற்பட்டது வியப்பே அல்ல ; அவனையுந்தான் சும்மா சொல்லிவிட முடியுமா? அந்த வயதில், அப்படி ஒரு யுவதியுடன், நான்கு ஆண்டுகள் கண்ணியமாகப் பழகி வந்தான் என்றால், அவனை ஓர் உத்தமோத்தமன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த இள உள்ளங்கள் இரண்டும் தவியாய்த் தவித்தன. வாய்விட்டுச் சொல்ல வாய்விட்டுக் கேட்க அஞ்சித் தத்தளித்தன. அதை அவளும் உணர்ந்திருந்தாள்;  அவனும் உணர்ந்தே இருந்தான். 

ஜானகிதான் வாழ்க்கை மூளியானவள். ஆனால் பசுபதிக்கு வாழ்க்கையே இனிமேல் தானே? அவனுக்கு கல்யாணம் வந்தது ருக்மிணிபிடம் ஜாதகம் கேட்டனர் சிலர். அவனிடம் அதுபற்றி பேசிய பொழுது, “எனக்குக் கல்யாணமே வேண்டாம், அக்கா!” என்றான். 

“என்னடா தம்பி, அதிசயமாகப் பேசறியே?” என்றாள் அவள் 

பசுபதிக்குத் தன் மனநிலையை வெளியிட அதுதான் நல்ல தருணமென்று தோன்றிற்று வெளியிட்டு விட்டான்.

ருக்மிணி ஒரு கணம் திடுக்கிட்டாள். இருந்தாலும் பெண்ணுள்ளந்தானே அவளுக்கும் இருந்தது? “சில நாள் ஊர் சிரிக்கும்… சிரித்தால் சிரித்துவிட்டுப் போகட்டும். இப்படியாவது அந்தப் பெண்ணின் கஷ்டம் விடியுமானால்?”

“ஆனால் தம்பி, அவள் மனசு எப்படி இருக்குமோ?” 

“அதை என்னைக்காட்டிலும் நீ நன்றாக உணர்ந்திருப்பாயே, அக்கா!” 

ருக்மிணி, பிறகு அதைப்பற்றி அவனிடம் வாதாட வில்லை. அன்றிரவே கணவரிடம் பேசினாள்: “ஊர் வாயைக் கவனியாது அவர்களை இணைத்துவிட வேண்டும்” என்று வற்புறுத்தினாள். 

“அப்படியா ?” என்றார் சதாசிவம், சலனமற்றவர் போல. ஆனால் அவர் உள்ளம் அந்தச் சமயம் கொந்தளித்த கொந்தளிப்பு அவரை அறியாமல் வெளிவரத் தான் வந்தது. “அப்படிச் செய்து கொள்ளும்படி ஏதாவது…?” 

“இருந்தால்கூட அதிசயம் இல்லை.” 

“ஜானகியைக் கேட்டியா?” 

“கேட்பானேன்?” 

ஆனால் அவர், அவனையும் அவளையும் கூப்பிட்டுக் கேட்டே விட்டார். “அப்படி நிர்ப்பந்தம் இருந்தால், செய்துவிட வேண்டியதுதான்; வேறு என்ன செய்வது?” 

“இல்லாவிட்டால்?” என்றாள் ஜானகி. அந்த ஒரு வார்த்தையில் அவள் உள்ளம் வெளிவந்துவிட்டது.  

சதாசிவத்தின் வாய் அடைத்துப் போயிற்று. “சரி, ஒரு நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்து விடுகிறேன் ” என்றார். 

“இப்பொழுது வேண்டாம்; இன்னும் ஓராண்டு போகட்டும்” என்றான் பசுபதி. 

ஜானகி உட்பட எல்லோரும் திடுக்கிட்டனர். 

“ஏண்டா, அப்பா ?” என்று கேட்டாள் ருக்மிணி.

“அத்தான் மனசிலே இருக்கிற சந்தேகம் நீங்க வேண்டும்; எங்கள் நேர்மையை அவர் உணரவேண்டும்.”

சதாசிவத்தின் மனத்தைச் சம்மட்டி கொண்டு அடித்தன அவன் வார்த்தைகள். 

மறு வாரமே, அவர் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார். உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அவர்கள் இருவரும் மாத்திரம் சென்று அந்தத் தெய்வீக ரிஜிஸ்திரார் முன் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து திரும்பினர். 


விரும்பியவர் போற்றினர்; விரும்பாதவர் தூற்றினர். ஆனால்.. எல்லோரும் ஒருமுகமாகப் பசுபதியின் தீரத்தையும், நேர்மையையும் வியக்காமல் இருக்கவில்லை. எத்தனையோ வாலிபர்கள் இளம் பெண்களை ஏமாற்றிக் கெடுத்துப் பிறகு கையை விரித்துவிடும் இந்நாளில், ஒரு விதவையை, அதிலும் குழந்தை உடையவளை, நேர்மையாக எல்லோர் சம்மதமும் பெற்று மணந்த அவன இன்றை இளைஞர் சமூகத்திற்கே ஒரு வழிகாட்டி என்று நண்பர்கள் பாராட்டினார்கள். 

ஜானகிகூட அவனை ஒரு லட்சிய புருஷனாகவே கருதினாள். தன் வாழ்க்கைக் குறையைத் தீர்க்க வந்த தெய்வம் என்று வழிபடத்தான் அவள் தீர்மானித்துக் கொண்டாள். ஆனால் –

கண் மூடியிட்ட குதிரையைப்போல அவள் நோக்கு இந்த நிகழ்ச்சிகளின்போது ஒன்றிலே லயித்திருந்தது. தன்னை வாழ்விழந்த பெண் என்று மாத்திரம் கருதினாளே அன்றித் தான் ஒரு தாய் என்பதை அவள் மறந்து விட்டாள். ஆனால், அதை உடனே உணர்த்தினான், கோபு. அவள் சலனத்தில் சஞ்சலம் புகுந்தது இங்கே தான்.

அவர்கள் கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை; கோபுவுக்குப் பள்ளிக் கூடம் இல்லை. வீட்டில் இருந்தான், தானும் வருவதாகச் சென்னான். அவனைப் போகவிட்டிருக்கலாம். ஆனால் ஏனோ சதாசிவம் கட்டிப் பிடித்துக்கொண்டார். அவன் அழவில்லை; சிணுங்கினான்; அவ்வளவுதான். அவர்கள் கிளம்பிச்சென்றபோது அவரை அறியாமாலே அவ்வார்த்தைகள் வெளிவந்துவிட்டன. “பிறக்கும் முன்பே அப்பன் உயிருக்கு உலை மூட்டிவிட்டாய். இப்போது பெற்றவளையும் உயிரோடு பறிகொடுத்து விட்டாயேடா, அட அதிருஷ்டம் கெட்டபயலே!”

அது அந்தச் சிறுவன் உள்ளத்தில் மாத்திரமா விழுந்தது? வாயிலைத் தாண்டிக்கொண்டிருந்த ஜானகியின் உள்ளத்திலும் பாய்ந்து எதிரொலித்தது. தன் நிறைந்துவிட்டதாக ஏற்பட்ட இன்ப மிதப்பு அக்கணமே ஆட்டம் கண்டுவிட்டது. 

இருந்தாலும் முறைப்படி எல்லாம் நடந்தன. அவள் அவன் மனைவியானாள். ஆனால், பெயரளவில் தான் எதிர் பார்த்த வாழ்க்கை இன்பம் பசுபதிக்குக் கிட்டவில்லை. 

ஏன் ? 

‘ஏன்?’ என்பது ஆண்பிள்ளையாகிய அவனுக்குப் புரியவில்லை. இன்னும் இவளுக்கு என்ன குறை இருக்கிறது? ஏன் இந்தச்சோகம் சதா சர்வ காலமும்? அதை அவனால் கேட்காதிருக்க முடியவில்லை; கேட்டுவிட்டான். 

அவள் தேம்பினாள்; “நான் தவறு செய்து விட்டேன்” என்றாள்.

“இனிமேல் இப்படிச் சஞ்சலம் அடைவது மதியீனம், ஜானகி! ஊர்வாய்க்குப் பயந்து உற்சாகத்தை இழக்காதே.” 

“ஊர்வாய் அல்ல.” 

“பின்?”

அவள், அருகில் உறங்கிக்கொண்டிருந்த கோபுவைக் காட்டி, “இவனை நான் மறந்துவிட்டேனே!” என்றாள். அவளால் மேலே பேசமுடியவில்லை. அவன் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். 

பசுபதி அவளைத் தேற்றினான்: “அவன் என் மகன், ஜானகி!” என்றான் 

இருந்தாலும், அவள் சஞ்சலம் என்னவோ மாறி விட்ட தோற்றம் ஏற்படவில்லை 

அன்று சென்றது. மறுநாளும் அப்படியே. தினம் தினம் அதுவேதான்.

முதல்நாள் கோபு தூங்கிக்கொண்டிருந்தான். மறு நாள் அவன் நன்றாகத் தூங்குமுன்பே இந்த நாடகம் ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அவனுடைய சிறு உள்ளத்தில் சலனத்தைத் தோற்றுவித்திருந்தார் தாத்தா. அதை அவன் பள்ளி நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் கிளறிவிட்டனர். இனிமேல் அவன் அவளிடம் அம்மா உறவு கொண்டாட லாயக்கற்றவன் என்று அதைத் தாயும் உறுதிப்படுத்திய போது…? 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறவே, அவன் மனம் சுழலலாயிற்று. தாயின் வாழ்க்கைக்கு இனி, தான் ஒரு தடை என்ற தோற்றம் அவனிடம் ஆழப் பதிந்துவிட்டது. முன்னாள் இரவு முழுவதும் அவன் கண்ணை மூடிக் கொண்டு ஆலோசித்தான். கடைசியில் அவன் கண்ட முடிவுதான் காலையில் செயலாயிற்று. 

காபி சாப்பிட்டானதும், படிக்கும் அறைக்கு வந்தான். பள்ளி நோட்டிலிருந்து தான் ஒன்றைக் கிழித்து அவசரம் அவசரமாகச் சிலவரிகளைக் கிறுக்கினான். “என்னை ஒருத்தரும் கோவிச்சுக்கலை ; ஆனா, எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை. ஓடிப்போறேன். ஆனா, நிச்சயமாகத் திரும்பி வந்துடுவேன். என்னைத் தேடா தேங்கோ.” 

கடிதத்தை மடித்து மேஜையின்மீது வைத்தான். பாலக்கரை ஸ்டேஷனை நோக்கி நடையைக் கட்டினான். சிறிது நேரத்தில் ரெயில் ஒன்று வந்தது; ஏறி அமர்ந்து கொண்டான். 

ரெயில் நகர்ந்த பிறகுதான் அவனுக்குச் சரியாக மூச்சு வந்தது. “அப்பா! இனிமே ஒருத்தரும் என்னைப் பார்த்து ‘எண்டா உங்கம்மா…’ ன்னு கேக்கமாட்டா” என்று சாந்தி அடைந்தான் அந்தச் சிறுவன். 

ஆனால், எங்கேயோ வழியோடு வந்த இந்தக் கிழவர்? இவர்தாம் போகட்டும். வரப்போகும் அந்தப் பரிசோதகக் கடன்காரன் – அவன் கேட்பானே ‘ஏன் ஓடி வந்தாய்?’ என்று! அதைச் சொன்னால்தானே, அவன் மனம் கொஞ்சமாவது இரங்கும்? 

‘சொல்லுவதா ? சொல்லிவிடுவதா? எதைத் தாங்க மாட்டாது ஓடிவந்தேனோ, அதை தானே சொல்லுவதா? முடியாது; முடியாது.’ 


ரெயில் மீண்டும் ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றது. பெரிய ஸ்டேஷனாக இருந்தது. ‘ஈரோடு ஈரோடு’ என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் வண்டியை விட்டு இறங்கினர். 

“தம்பி, எங்கிட்டேதான் சொல்லலை ; அவருகிட்டே யாவது உள்ளதைச் சொல்லிவிடு. இல்லாவிட்டால் தாணாவுக்குக் கூட்டிண்டு போயிடப் போறாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றார் கிழவர். 

டிக்கட்டுப் பரிசோதகன் வந்தான். “இறங்கு தம்பி” என்று அவனைக் கையைப்பிடித்து அழைத்துச் சென்றான். அவன் சலனமின்றி அவனைப் பின்பற்றினான். அவன் வாய் இறுக மூடியிருந்தது. அது திறக்காது; இனி எந்த நிலையிலும் திறக்காது.

– கலைமகள் பத்திரிகையில் எழுதியது. சலனம் என்ற தலைப்பில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முறையில் சில கதைகள்.

– சலனம் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, புதுமைப் பிரசுரம், பெண்ணாடம், தெ.ஆ.மாவட்டம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *