ஞாயிற்றுக் கிழமை. காலை நேரம் . வழக்கறிஞர் வாசு, தமது வீட்டிலேயே இருந்த அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அவர் கேஸ் கட்டைப் புரட்டிக் கொண்டிருந்த போது அவருடைய மகன் கட்டிளங்காளை ராம்குமார் அறைக்குள் வந்தான். அவருக்கு எதிராக உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.
‘என்னப்பா டச் விடக் கூடாதுன்னு பழைய கேஸ் எல்லாம் புரட்டிப் பாரத்துக்கறீங்களா?‘
அவருடைய அருமைப் புதல்வன் அவரைச் சீண்டினான். அவர் முறைத்தார்.
‘என்ன வேணும் உனக்கு எதுக்கு என் வாயை கிளறிப் பார்க்கறே’ என்றார் வாசு.
‘சும்மா கிண்டல் பண்ணா கோபம் பொத்துகிட்டு வருது’ என்ற ராம்குமார், அப்பாவின் நாற்காலிக்கு மேல் சுவரில் இருந்த தாத்தா சக்ரபாணியின் படத்தைப் பார்த்தான்.
‘அப்பா, ஒங்க அப்பா, என்னோட தாத்தா, அவர் சேர்த்து வைத்த சொத்து இந்த வீடு எல்லாம் பாட்டி பேர்ல எழுதி வெச்சிருக்காரா?‘
‘ஆமா அதுக்கு என்ன?‘ என்றார் வாசு.
‘அதனால தான் தாத்தாவுக்கு உங்களையும் சேர்த்து ரெண்டு பிள்ளைங்க ஒரு மாப்பிள்ளை இருந்தும் இருபத்து மூணு வருசமா அவரைக் கண்டுபிடிக்காமல் இருக்கீங்க..? இத்தனைக்கும் நீங்க வக்கீல்… சித்தப்பா அரசு அதிகாரி, அத்தை கணவர் ஒரு பிசினஸ் மேக்னட்…‘
‘உனக்கு ஐந்து வயசாகும் போது புத்தர், சித்தார்த்தனாக இருந்த போது நடு ராத்திரில மனைவியையும் மகனையும் விட்டுட்டு போனா மாதிரி தாத்தா வீட்டை விட்டு சொல்லாம கொள்ளாம போய்ட்டாரு. நாங்களும் காவல் துறையில புகார் கொடுத்தோம் துப்பு கிடைக்கல ரெண்டு மூணு பேப்பர்ல வந்திடுங்க ன்னு விளம்பரம் போட்டோம் அவர் வரவே இல்ல . நாங்க என்ன செய்ய முடியும்’ என்று நிறுத்தினார்.
‘அதுக்கு அப்புறம் அவங்க அவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டிங்க அதானே’ என்றான் ராம்குமார்.
வாசு எழுந்து நின்றார். ‘என்னப்பா கோபத்துல என்னை அடிச்சிடுவிங்களா சின்ன பையனா இருந்தப்பவே என்னை அடிச்சது இல்லையே’ என்றான் ராம்குமார் .
‘சரி . நீ படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போகாமல் ஒங்க அம்மா பேர்ல ரோகிணி டிடெக்ட்டிவ் சர்வீஸ் ன்னு ஆரம்பிச்சு என் பெயர்ப் பலகை கீழே போர்டு வெச்சு இருக்கியே… உனக்கு ஏதாவது போணி ஆச்சா..?‘ வாசு கேட்டார்.
‘டிடெக்ட்டிவ் ஸ்டார்ட் அப்ன்னு ஆரம்பிச்சேன். ரெண்டு மாசம் தானே ஆவுது’
‘சரி கண்ணா உனக்கு முதல் ஆர்டரா நான் கொடுக்கறேன். தாத்தா என்ன ஆனார்ன்னு கண்டுபிடி பார்ப்போம் நான் ஒரு இலட்சம் ரூபாய் தரேன். நாங்களும் அவர் இருக்காரா போய்ட்டாரன்னு தெரியாம அவர் போட்டோவுக்கு மாலை போடாம சடங்கு பண்ணாம அவர் எங்கேயோ சௌக்கியமா இருக்கார்னு நெனச்சு காலத்தை ஓட்டிக்கிட்டு வரோம். அதுக்கு நீ ஒரு முடிவு சொல்லு. சீரியசா தான் சொல்றேன்.‘
‘தாங்க்ஸ்ப்பா இதுக்கு நான் உடன்படறேன். சரி வாங்க அம்மா டிபன் சாப்பிட கூப்பிட்டாங்க.. சாப்பிட்டு தெம்பா வேலையை வந்து பாருங்க வாங்க’ என்றான். இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.
அன்று மதியம். ராம்குமார் ஊரிலிருந்து வந்திருந்த தன்னுடைய நண்பன் சுரேஷ் குமார் வீட்டுக்குச் சென்றான். அவனை வரவேற்ற சுரேஷ் குமார், மாடியறைக்கு அழைத்துச் சென்றான். அறைக்கு வெளியே இருந்த இடத்தில் நண்பனுடைய தங்கை இளைஞி சுகன்யா, தரையில் அமர்ந்து பழைய செய்தித் தாட்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அறைக்குள் சென்று நாற்காலிகளில் இரண்டு இளைஞர்களும் அமர்ந்தனர்.
‘என்ன மச்சி ஒங்க தங்கச்சி ஐஏஎஸ் ஆஸ்பிரண்ட்டா?‘
கேட்டான் ராம்குமார். ‘ஏன்யா கேட்கற?‘ என்றான் சுரேஷ் குமார்.
‘இல்ல பழைய செய்திக் கதம்பம் பேப்பர் எல்லாம் வெச்சு கிளிப்பிங் வெட்டிகிட்டு இருக்காங்களே…‘
‘அதை கேட்கறியா… எங்க அப்பாவுக்கும் அவளுக்கும் செய்திக் கதம்பம் பேப்பர்ல வர்ற சர்க்கரைப் புலவர் கட்டுரைகள் பிடிக்கும். அவளுக்கு பிக்சன் எல்லாம் பிடிக்கறது இல்ல அவர் எழுதற இன்வெஸ்டிகேட்டிவ் ஆர்ட்டிக்கிள் தான் பிடிச்சு இருக்கு. அவரை மாதிரி அநியாயத்தை தட்டி கேட்டு எழுதற ஜனர்னலிஸ்டா ஆகணும்னு சொல்லிகிட்டு இருக்கா. இவளை இப்படி ஆக்கி வெச்சுட்டாரு ன்னு எங்க அம்மாவும் தாத்தாவும் அப்பாவை கரிச்சு கொட்டிகிட்டு இருப்பாங்க.. இருபத்து மூணு வருசமா சர்க்கரைப் புலவர் அந்த பத்திரிகையில எழுதிகிட்டு வராருன்னு அப்பா சொல்வாரு. அவர் முகத்தை அந்த பத்திரிகை வெளியிட்டது இல்ல. இந்த சோசியல் மீடியா யுகத்துல அவர் சோசியல் மீடியால இல்லைன்னு சொல்றாங்க..‘ என்றான் சுரேஷ் குமார். இருபத்து மூணு வருசம்..சக்ரபாணி.. சர்க்கரைப் புலவர்… ராம்குமாரின் மூளையில் ஏதோ பொறி தட்டியது. சுரேஷ் குமாரின் தங்கை சுகன்யா, தட்டில் தேநீர்க் கோப்பைகளுடன் அறைக்குள் வந்தாள். ராம்குமாரைப் பார்த்து புன்னகை பூத்தாள். ராம்குமார் தேநீர் பருகி விட்டு சிறது நேரம் நண்பனிடம் உரையாடி விட்டு விடை பெற்றான்.
செய்திக் கதம்பம் பத்திரிகையில் பணிபுரிந்த, மற்றொரு நண்பன் ராஜூவின் அண்ணன் முத்துவின் வீட்டுக்குச் சென்றான். அவரிடம் பேச்சு கொடுத்து சர்க்கரைப் புலவர் யார் என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தான். ஆசிரியரைத் தவிர வேறு யாருக்கும் அவரைத் தெரியாது என்று முத்து சொல்லி விட்டார். அதன் பின்னர், ராம்குமார், செய்திக் கதம்பம் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றான்.
மாலை நேரம். ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி வந்தான். வீட்டுக்கு வெளியே இருந்த புல்வெளியில் அவனுடைய அம்மா, அப்பா, பாட்டி ஆகியோர் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ராம்குமார் அவர்கள் அருகில் வந்தான்.
‘அப்பா வாக்கு தவறாம எனக்கு ஒரு இலட்சம் ஜி பே செய்யணும் நீங்க’ என்றான் ராம்குமார் .
கண்களில் ஆர்வம் பொங்க ‘என்னப்பா தாத்தாவை பார்த்துட்டியா’ என்றார் வாசு.
ராம்குமார் பேசினான் ‘அவரை கூடிய சீக்கிரம் நெருங்கிடுவேன். தாத்தா, தனியார் கம்பெனில வேலை செய்யும் போதே போலீஸ் இன்பார்மரா இருந்தாருன்னு பாட்டி சொல்லி இருக்காங்க.. அவர் அட்டூழியங்கள பத்தி அவருக்கு கிடைச்ச தகவல் எல்லாம் வெச்சு சர்க்கரைப் புலவர் ன்ற பேர்ல நாளிதழ்ல எழுத ஆரம்பிச்சாரு. அந்த எடிட்டர் முழுசா சப்போர்ட் பண்ணாரு. இன்னிக்கு விசில் ப்ளோயர்ன்னு சொல்றாங்களே அதை தாத்தா எப்பவோ பண்ணி இருக்காரு. பல பெரிய புள்ளிங்களைப் பத்தி எழுதறதுனால அவங்களால ஒங்க யாருக்கும் தொந்தரவு வந்திட கூடாது ன்னு ஒங்கள விட்டுப் பிரிஞ்சு விலகி இத்தனை வருசமா வேற விதமான வாழ்க்கைக்குள் போய்ட்டாரு… இதுல மிகப்பெரிய ஆச்சர்யம் என்ன்னா யாரும் அவரை கோர்ட்டுக்கு இழுத்தாங்க ன்றது இல்ல… அதான் ஹைலைட்.. நம்ம அன்பு பாசத்தை தவிர்த்து விட்டார் னாலும் பேரப் பசங்களோட அன்பை அனுபவிக்கா விட்டாலும் சமூகத்தில் நடக்கிற முறைகேடுகளைப் பத்தி வெளிச்சம் போட்டு காட்டி அவரோட வாழ்க்கையை அர்த்தம் உள்ளாக்கி கிட்டாருன்னு தான் சொல்லணும் ‘ என்று நிறுத்தினான்.
திறந்து இருந்த வாசல் கேட் வழியாக ஆட்டோ ஓட்டுநர், ராம்குமாரின் அருகில் வந்தார். ‘சாரி சார்..மறந்துட்டேன்’ என்று பர்சிலிருந்து பணத்தை எடுத்தான். நரைத்த தலைமுடியும் முகத்தில் வெள்ளைத் தாடியும் கொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் சைகை காட்டி வாங்க மறுத்து ‘சபாஷ் பேராண்டி’ என்று அவனுடைய தோளைத் தட்டினார். ‘அப்பா நீங்களா’ என்று எழுந்து நின்றார் வாசு. ராம்குமாரின் பாட்டி தன்னுடைய கைத்தடியை வாசுவிடம் நீட்டினார்.
‘இவர்ல்லாம் ஒரு குடும்பத் தலைவனா வாசு… இதால ஒரு விளாசு விளாசு ஒங்க அப்பாவை… இருபத்து மூணு வருசமா என்னையும் ஒங்களையும் தவிக்க விட்டு வெச்சதுக்கு பாவம் பார்க்காதே விளாசு’ என்றார் ராம்குமாரின் பாட்டி. ‘அய்யிய்யோ’ என்று வாசலை நோக்கி ஓட முற்பட்டார் ராம்குமாரின் தாத்தா. ராம்குமார் அன்புடன் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தான்.
குறிப்பு – சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.