(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தக் கல்யாண மண்டபத்தின் கூடத்தில் ஒரு மேடையில் அருணும் அனுபமாவும் கைகோர்த்து நின்றிருந்தனர், கழுத்திலே மாலைகள் ஒளிர, மேடையெங்கும் சிதறிய ரோஜாப் பூக்கள் வருபவர்களுக்கு இவர்கள் நாளை புதியதாய்த் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் புது மணமக்கள் என்று கட்டியங் கூறிக்கொண்டிருந்தன, ஒரு பெரிய வரிசை மணமக்களுக்கு அவர்களின் அன்பளிப்பை வழங்க காத்துக் கொண்டிருந்தது, அவ்வப்போது அங்கு வந்து எட்டிப்பார்த்துவிட்டு உணவு உபசரிப்புக்காக உணவுக் கூடத்திற்கு சென்று எல்லாரையும் உபசரித்துவிட்டு சத்திரத்தில் உள்ள அனைவரையும் புன்னகையோடு உபசரித்துக் கொண்டிருந்தார் மணப்பெண் அனுபமாவின் தந்தை கணேசன், அவர் காதில் ஒரு சிறுவன் மாமா உங்களை சம்பந்தியம்மா கூப்பிடச் சொன்னாங்க அவங்களோட அறையிலே இருக்காங்க என்றான், பகீர் என்றது கணேசனுக்கு ஏனோ அந்த அம்மா கூப்பிட்டாலே குலை நடுங்குகிறது .
ஒவ்வொரு முறை அவரை அந்த சம்பந்தி அம்மா அழைக்கும்போதும் குறைந்த பக்ஷம் பத்தாயிரம் ரூபாய்க்கு செலவு வைப்பாள், பெண் பார்த்து சம்பந்தம் பேசி முடித்து இதோ இப்போது திருமணம் நடக்க வரவேற்பு நடந்துகொண்டிருக்கும் இந்த நிமிஷம் வரை சரி என்ன சொல்கிறாள் அந்த அம்மா என்று பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் பலி ஆடு போன்று சம்பந்தி அம்மாவின் அறையை நோக்கி நடந்தார் கணேசன்.
சம்பந்தி அம்மாவின் அறையிலே சம்பந்தி அம்மா கணேசனிடம் ஏற்பாடெல்லாம் கன ஜோரா செஞ்சிருக்கீங்க என்றாள்.
கணேசனுக்கு அடி வயிற்றில் சிலீரென்றது. எதற்கு அடி போடுகிறாள் இந்தப் பெண்மணி என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்து ஏதோ என்னாலானது என்றார் அடக்கத்துடன்.
அடுத்து சம்பந்தி அம்மா அஸ்திரம் தொடுத்தாள் நாளைக்கு காத்தாலே உங்க பொண்ணு எங்க வீட்டு மருமக அப்புறம் உங்களுக்கு பொறுப்பு கழிஞ்சுடும் என்றாள் ஏன் அப்பிடி சொல்றீங்க எப்பவுமே என் பொண்ணுதானே அவ உங்க வீட்டுக்கு மருமகளா ஆய்ட்டாலும் என்றார் கணேசன்.
அதுக்குதான் சொல்றேன் நான் உங்க கிட்ட பேசும்போது லிஸ்டுலெ ஒண்ணு விட்டுப் போச்சு அதான் மாப்பிள்ளையும் ஆசைப்படறான். அதுனாலே ஒரு வைரத்தோடு போட்டுடுங்கோ என்றாள்.
சம்பந்தி இப்போ எங்க போயி நானு வாங்கறது என்று தடுமாறினார் கணேசன்,, என்ன பெரிய விஷ்யம் காரெடுத்டுண்டு போனா பத்தே நிமிஷம் பக்கத்திலே தானே இருக்கு ஜீ ஆர் தங்க மாளிகை என்றாள் சம்பந்தி அம்மா பாவம் டீ அந்த மனுஷன் என்றார் சம்பந்தியின் கணவர் எல்லாம் எனக்குத்தெரியும் நீங்க சும்மா இருங்க என்று அவர் வாயை அடைத்தாள் சம்பந்தி அம்மா.
தலையை மட்டும் ஆட்டிவிட்டு வெளியே வந்தகணேசனுக்கு வியர்த்தது, அப்படியே தன் அறைக்கு வந்தவர் மயங்கிச் சாய்ந்தார் சம்பந்தி வீட்டாருக்கு செய்தி போனது சம்பந்தி அம்மா வரும்போது டாக்டர் கணேசனின் மனைவி அலமேலுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் . இப்போ கணேசன் சார் இருக்கிற நிலைமை ரொம்ப சீரியஸ் உடனடியா அவரை ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ என்றார்.
கணேசனின் மனைவி அலமேலு நாளைக்கு காத்தாலே அவர் பொண்ணை தாரை வாத்துக் கொடுக்கணுமே, தெய்வமே நான் என்ன செய்யப் போறேன்,இப்பிடி இவரை வெச்சிண்டு என்று பதறினாள்.
அலமேலுவையும் சம்பந்தி அம்மாவையும் தனியாக அழைத்து அவருக்கு கவலை வரா மாதிரியோ அதிர்ச்சி தரா மாதிரியோ எந்த செய்தியும் இனிமே அவர்கிட்ட சொல்லக் கூடாது ஜாக்கிரதையா பாத்துக்கோங்க, கல்யாணம் முடிந்த கையோடு அவரை அட்மிட் பண்ணுங்க நான் இப்போ ஸ்ட்ராங்கா ஒரு இஞ்சக்ஷன் போட்டுருக்கேன் நான் வரேன் என்று கிளம்பினார் டாக்டர் சுந்தரேசன்.
சம்பந்தி அம்மாவும் அவரின் அடிப்பொடியாகிய அவளுடைய கணவனும் அப்படியே ஒதுங்கி அவர்களின் அறைக்கு நடந்தனர்.
சம்பந்தி அம்மாளின் அறையில் அந்த சம்பந்தி அம்மா பதறிக்கொண்டிருந்தாள் என்னங்க இது இப்பிடி ஆயிப்போச்சு நாளைக்கு எப்பிடிக் கல்யாணம் நடக்கும் நாம்வேற நிறைய பெரிய மனிதர்களைஎல்லாம் அழைச்சிருக்கோம் கல்யாணத்துக்கு இப்போ என்ன செய்யிறது என்று பதறினாள்.
தன்னுடைய உறவுக்காரர்களில் அந்தரங்கமான சிலரை அழைத்து யோசனை கேட்டாள் சம்பந்தி அம்மா. இதோ பாரு இந்த நேரத்திலே சுமுகமா கல்யாணம் நடத்தற வழியைப் பாரு அவர்களும் சேர்ந்து கவலைப்பட்டு சம்பந்தி அம்மாளின் கவலையை அதிகப்படுத்தினர்.
சம்பந்தி அம்மா ஒரு முடிவுக்கு வந்தவளாய் கணேசனின் மனைவி அலமேலுவிடம் வந்து ஒண்ணும் கவலைப்படாதீங்கோ அவருக்கு ஒண்ணும் ஆகாது டாக்டர் பாத்திருக்கார் இஞ்சக்க்ஷனெல்லாம் போட்டிருக்காரே எல்லாம் சரியாயிடும். அவரைக் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்கோ எனக்கு எதுவுமே வேணாம் நீங்க உங்க பொண்ணுக்கு எது செய்யலேன்னாலும் பரவாயில்லே. இந்த மனுஷன் நல்லபடியா எழுந்து பொண்ணை தாரை வாத்து குடுத்தா அது போதும்.
நாளைக்கு நிறைய பேரு வரப்போறா அவா முன்னாடி கல்யாணம் சரியா நடக்கணுமே . இல்லேன்னா ரொம்ப அசிங்கமாயிடும் என்று சொல்லிவிட்டு அவரை பாத்துக்கோங்க ஏதாவது உதவி வேணும்னா கேளுங்கோ நாங்க எல்லாம் இருக்கோம் என்றாள் சம்பந்தி அம்மா கரிசனத்துடன்.
மறு நாள் காலையில் எழுந்து மிகவும் தளர்வாக மணையில் உட்கார்ந்து கணேசன் எல்லாவற்றையும் செய்தார் நாற்காலியில் உட்கார்ந்து பொண்ணை மடியிலே உட்காரவைத்து தாரை வார்த்துக்கொடுத்தார் அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.
சம்பந்தி அம்மாள் அவரிடம் வந்து எப்பிடியோ நல்லபடியா கல்யாணம் செஞ்சு முடிச்சிடீங்க என்ன பண்றது எல்லாத்தையும் நாங்க அட்ஜஸ் பண்ணிடுதான் போகணும் நாம நெனைச்சது எல்லாம் நடக்கணும்னு எதிர் பார்த்தா முடியுமா என்றாள் அங்கலாய்ப்புடன் . சம்பந்தி விருந்து முடிந்து பெண்ணையும் அவர்கள் வீட்டிற்கு கொண்டு போய் விட்டு விட்ட கையோடு அப்படியே காரைத் திருப்பி டாக்டர் சுந்தரேசன் வீட்டுக்குப் போய் உள்ளே நுழைந்தார் கணேசன்.
சுந்தரேசனின் கையைப் பிடித்துகொண்டு கண்களில் நீருடன் ஜமாய்ச்சுட்ட சுந்தரேசா நீ டாக்டர் மாதிரியே நடிச்சு பின்னிட்ட எப்பிடியோ நாந்தான் உனக்கு நன்றி சொல்லணும் என்றார் கணேசன்.அது சரி ஆனா என்னை இப்பிடி டாக்டரா நடிக்க வெச்சு கல்யாண சாப்பாடு கூட சாப்பிட விடாமல் பண்ணிட்டீங்களே கணேசன் என்றார் திடீர் டாக்டர் சுந்தரேசன்.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.