கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 6,130 
 
 

அடுப்பில் குழம்பு கொதித்து கொண்டிருந்தது..ஓருபுறம் உலை வைத்தபடியே..வாழைக்காயை அரிந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி…இன்னும் வடைக்கு ஊற போட்டதை அரைக்க வேண்டும்..

சரஸூ ஆச்சா….சீக்கிரம் இலை போடணும்..நேரமாகுது..என்ற மாமியார் தனம்மாள் …கனத்த சரீரத்தை தூக்கி நடந்தபடி குரல் கொடுத்தாள்

“இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடியாகிடும் அத்தே…”

சர்க்கரை பொங்கலுக்கு வெல்லம் இடிக்க வேண்டும். பாயசத்திற்கு பாலை காய்ச்சணும்..தலைக்கு மேலே வேலை இருந்தது சரஸூவிற்கு…நெற்றியில் ஆறாக பெருகிய வியர்வையை தன் புடவை தலைப்பால் ஒற்றிபடி வேலையை தொடர்ந்தாள்..ஆயாயமாக இருந்தது சரஸூவிற்கு.

விடியலில் நான்கு மணிக்கு எழுந்து குளித்து மொழுகி சமையறைக்குள் நுழைந்தும் மணி பதினொன்றாகிறது இன்னமும் முடிந்த பாடில்லை….நிதப்படி பத்து பதினைந்து பேர்க்கு சமைக்கணும்..இந்த வீட்டிற்கு மூத்த மருமகளாக வந்த பொழுதிலிருந்து ஒயாது செய்து கொண்டிருக்கிறாள். தற்போது அனைத்துமே பழகி விட்டது…

காலையில் குடித்த ஒரு வாய் காபியோடு சரி…மயக்கமாக இருந்தது சரஸூவிற்கு ..ஒரு வாய் காபி குடித்தால் தேவலாம் போல…தலை விண் விண் என கனத்தது….மீதமிருக்கும் வேலையை நினைத்து ஆயாசமாக எண்ணெயில் வடையை தட்டி போட்டாள்…

திடீரென பின்னாலிருந்து யாரோ மெதுவாக வரும் ஓசை…சட்டென திரும்பினாள் அங்கே கையில் டம்ளருடன் அவள் கணவன் கிருஷ்ணன்..

“இங்கே என்ன பண்றீங்க…”

இந்தா இந்த காபியை குடி..எவ்வளவு வேலை சோர்வா இருக்கே பாரு என்று காபியை நீட்டினான்..

அச்சோ ..யாராவது பாக்க போறாங்க போங்க..வடை வேற போட்ருக்கேன்.. எடுக்கலைன்னா தீஞ்சிரும்..அத்தை வர்ற நேரம் கிளம்புங்க…கூட்டு குடும்ப சங்கடங்கள்..மனைவிக்கு குடை பிடிக்கிறான் என்ற கிண்டல்கள் தரும் பயங்கள்….

ஹூக்கும்..நீ காப்பியை குடி..நான் எடுக்கறேன் வடையை என ஜல்லி கரண்டியை வாங்கி காபியை கையில் திணித்தான்…

அன்புடன் கிருஷ்ணனை நோக்கியபடி காபியை குடித்தாள்…டக்கென வயிறும் மனதும் குளிர்ந்து போனது…

மனதில் உற்சாகத்துடன் வேலையை முடித்துவிட்டாள் சீக்கரமாக..

சரஸூ இலையை போட்டுறலாமா..என்ற மாமியாரிடம்..

சரிங்கத்தே ..முடிஞ்சுருச்சி ..போட்டுறலாம்…பூஜையை ஆரம்பிக்கலாம் என்றாள் சமையலறையை சுத்தம் செய்தபடி…

பூஜை முடிந்ததும் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதலில் இலை போடுவது குடும்ப வழக்கம்

“சரஸூ அந்த சக்கரை பொங்கலை எடுத்துட்டு வந்துரு..கூடவே வடை சம்புடத்தையும்…”

எல்லாருக்கும் இலையில் பதார்த்தங்களை பரிமாறினாள்…

கிருஷ்ணணுக்கு வாழைக்காய் போடு..சரவணணுக்கு அவரைக்காய் வை…என மாமியார் மேற்பார்வையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள்…

சாப்பாட்டை வாயில் வைத்த கிருஷ்ணன்.. உப்புமில்ல உரப்புமில்ல….என்னத்த சமைக்குற நீ..வரவர உனக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்லை..செய்யுற வேலையை ஒழுங்கா செய்ய தெரியல…சே…என எல்லார் முன்பும் கத்தினான்…

கண்ணில் எட்டி பார்த்த நீரை அடக்கியபடி…கவனமா தான்ங்க செய்தேன்….என்றாள் சரஸூ

ஏண்டா…நல்லா தானே இருக்கு..என்ற அப்பாவை ..நீங்க சும்மாருங்க ப்பா…உங்களுக்கு ஒண்ணும் தெரியாது என்று தந்தையை அடக்கினான்..

சரிடா …நாளையிலிருந்து நான் கூடவே இருந்து கத்து தர்றேன்….உனக்கு பிடிச்சா மாதிரி செஞ்சி தர்றேன்…இப்ப சாப்பிடுடா..என்ற அம்மாவை..

அம்மா என்ன இருந்தாலும் உன் கைமணம் போல வருமா…இவ செய்யுற எதையுமே வாயில வைக்கவே முடியலை…நீங்க எல்லாரும் செல்லம் கொடுத்தே அவளை கெடுத்து வைச்சிருக்கீங்க…அதனால தான் அவ இஷ்டபடி செய்யுறா..என கோபமாக எழுந்தான்…

கை கழுவியவுடன்…சரஸூவை தரதரவென இழுத்து அமரவைத்து…நீயே தின்னு பாரு..அப்ப தான் தெரியும் எங்க கஷ்டம்.. முழுசையும் தின்னு பாரு… என பதார்த்தங்களை அள்ளி வைத்தான்…

இந்த சின்ன விஷயத்திற்கு ஏண்டா இப்படி கத்துற…என அனைவரும் கிருஷ்ணனை சமாதானபடுத்தினர்..

கோபமாக உள்ளே போய்விட்டான் கிருஷ்ணன்..

சரஸூ கண்ணீரை அடக்கியபடி சாப்பிட தொடங்கினாள்..அவமானம் பிடுங்கி தின்றது…

நீ சாப்பிடு சரஸூ …அவன் கெடக்கான் என சமாதானபடுத்தினர் குடும்பத்தார்..

எல்லாரும் சாப்பிட்டு மொழுகி துடைத்து சோர்வாக அறையினுள் நுழைந்தாள் சரஸூ…திரும்பி படுத்திருந்த கணவனிடம் எதுவும் பேசாமல்… துணிகளை மடிக்க தொடங்கினாள்…

சத்தம் கேட்டு திரும்பிய கிருஷ்ணன் சரஸூ…என அழைத்தான்…

அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் மடை திறந்தது போல கொட்டியது…

இப்ப எதுக்கு அழற…

சமையல் நல்லாயில்லன்னா நீங்க என்கிட்ட தனியா சொல்லியிருக்கலாம்ல..நாலு பேருக்கு முன்னாடி இப்படியா பேசுவீங்க…என்றாள் முந்தானையால் முகம் துடைத்தபடி..

சீ..அசடு…பூஜை முடியும் போதே உனக்கு மயக்கம் தள்ளுது…நானும் பாக்குறேன்..எவ்ளோ பதார்த்தங்களை சமைச்சாலும் ஆம்பிளைங்க கொழந்தைங்க சாப்பிட்டதும் மிஞ்சும் மீதி தான் பெண்களுக்குன்னு ஏதாவது சட்டம் இருக்கா? நீ செய்யற பல பதார்த்தங்களை நீ சாப்பிட்டதேயில்லை தெரியுமா…அதுக்கு தான் அப்படி கத்தினேன்…

உங்கம்மா சமையல் மாதிரி இல்லைன்னு அசிங்கபடுத்திட்டீங்களே…வாயில வைக்க முடியலைன்னு சொல்லிடீங்க..மனசு துடிச்சு போச்சு தெரியுமா?

இங்க பாரு..பைத்தியம் மாதிரி அழாத..நீ நெதமும் படுற கஷ்டத்தை பார்த்துகிட்டு தான் இருக்கேன்…இனி பாரு எங்க அம்மா கூடமாட சமையலில் பொறுப்பெடுத்துப்பாங்க. உன் வேலை பளு பாதியாக குறையும்…

நீயும்..எவ்ளோ நாள் தான் இந்த குடும்பத்துக்கு உழைச்சி ஓடா தேய்வ..கொஞ்சம் ஓய்வெடு…என்ற கணவனின் தோளில் முகம் புகைத்தாள் சரஸ்வதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *