கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,208 
 

சைக்கிளிலிருந்து இறங்கி அதை உருட்டிக் கொண்டு தமது தகரப் படலை அருகில் வந்த வேதநாயகம் கையைப் படலையில் வைத்துக் கொண்டு, அதைத் திறந்து உள்ளே போக மனம் ஏகாமல் அந்த ஒழுங்கை இருளிலே நின்றவாறு சோர்வுற்ற கண்களால் வீட்டை நோக்கினான். வீட்டுக்கு முன்னால் சடைத்து நிற்கும் மாமரத்தினதும், வீட்டினதும் இருட்டுருவங்கள் மனதைப் போர்த்து அழுத்தின. “அம்மாவுக்கு இதை எப்படிச் சொல்லப் போறன்” என்று யோசித்துத் தயங்கிய அவன் “சொல்லித்தானே ஆக” வேணும் என்ற எண்ணிப் பெருமூச்சு வெளிவர படலையைத் திறந்து உள்ளே போய் சிலிப்பர்களை வீட்டுவாசற்படியில் சத்தமின்றிக் கழட்டிவிட்டான். பின்பு, விறாந்தையில் குந்துச் சுவரோடு ஒட்டிக்கிடந்த ஈஸிச்சேரில் களைப்போடு சாய்ந்தான். கையில் கொண்டு வந்த பார்சலை குந்துச் சுவரின் மேல் வைத்துவிட்டு, சேட்டை லோங்ஸ்க்குள்ளிலிருந்து வெளியில் எடுத்துப் போட்டு, அதன் பொத்தான்களைக் கழட்டி நெஞ்சில் காற்றுப்படும்படி செய்து பிடரிக்குள் ஒரு கையை மடித்து வைத்துக் கொண்டு நிமிர்ந்து கிடந்தான். மனம் அங்கலாய்க்கிறது. உடம்பெங்கும் வியர்வை கசிந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் பஸ்ராண்டில் இருந்து இரண்டு மைல் தூரம் நடந்தே வீட்டுக்கு வந்தான். கால்கள் உளைவெடுக்க அவற்றை ஈஸிச்சேரின் சட்டங்களில் தூக்கிப் போட்டான். காற்றுப்பட்டு உலர்ந்த முகத்தின் வியர்வை மொய்ப்பைச் சேட்டுத் தலைப்பால் துடைத்து விட்டான். அங்கலாய்த்துப் பேதலித்த மனம் விரக்தியுணர்வுகளில் சினத்துக் கொள்கிறது. தாயை அங்கு காணாதது அவனுடைய மனதுக்கு சிறு ஆறுதல். வீட்டுவாசல் வளையில் கட்டித் தூங்கும் “ஹரிக்கேன்” லாம்பின் சிறிய வெளிச்சத்தை நோக்கியவாறு கிடந்தான். அவனுக்கு வெளிச்சம் பார்க்க ஆசையாகவிருக்கிறது.

முற்றத்து மாமரக்கிளையின் இலைகள் மெல்லிய காற்று அசைவுக்கு சிலுசிலுத்து ஓய்ந்து போகின்றன. ஒரு கையால் தன் நெஞ்சுப் பள்ளத்தைத் தடவி விட்டுக் கொண்டான். மூத்த தங்கையைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது, “புனிதம்”! மெதுவாகவே அழைத்தான். அதில் மனச்சோர்வு உள்ளூர்ந்தது. “அண்ணா ! வந்ததிட்டீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் இருந்து புனிதம் அவனை நோக்கி வந்தாள். “கொஞ்சம் தண்ணி கொண்டுவா!” கூறிவிட்டுத் திரும்பிச் செல்லும் அவளையே பார்த்தவாறு கிடந்தான்.

“எங்கையண்ணா போனீங்க? மத்தியானம் சாப்பிட்டீங்களா?” “

“ஓம் சாப்பிட்டன்!”

புனிதம் குசினிக்குள் இருந்து செம்பில் தண்ணீர் கொண்டு திரும்பி வந்தாள். அவனுடைய நெஞ்சின் அலைகளுக்குள்ளே அவள் புரண்டு புரண்டு வருவது போல் அவனுக்கு உள்உணர்வு. அந்தச் செம்பு நிறைந்த தண்ணீரை அவள் கொண்டுவந்து அவனுடைய நெஞ்சில் கொட்டிவிட வேணும் போல் இருக்கிறது.

“இந்தாங்கோ ”

செம்பை புனிதத்திடமிருந்து இருகைகளாலும் வாங்கி நீரைத் தொண்டைக்குள் மளமளவென ஊற்றினான். நெஞ்சின் தகிப்புக் குறைந்தது.

“சரியா களைச்சுப் போனீங்க; எங்கை போனீங்க?”

அவன் அதற்குப் பதில் கூறாமல் நிமிர்ந்து அந்த மங்கல் வெளிச்சத்தில் தெரியும் புனிதத்தின் வாளிப்பு வற்றிய முகத்தை ஊடுருவினான்.

“என்ன அண்ணா ?”

“ஒண்டுமில்லை!” அவன் குனிந்து நிலத்தைப் பார்த்துக்கொண்டான்.

“எங்கை போனனீங்க? அம்மா உங்களையே பார்த்துக் கொண்டு படலையில் இருட்டினாப் பிறகும் குந்திக் கொண்டிருந்தவ!”

“நான் ஒரு சிநேகிதனைச் சந்திக்க நயினாதீவுக்குப் போனனான்!”

அவளுக்கு எப்படி உண்மையைக் கூறமுடியும்?

“அம்மா எங்கை ?”

“இப்பத்தான் மண்ணெண்ணை வாங்கவெண்டு, மணியங் கடைக்குப்போனவ – இந்தா வாறா போல கிடக்கு. ஓ! அம்மாதான்!” .

“செல்வி எங்கை ?”

“அண்ணா ! இஞ்சை இருக்கிறன்!”

அவள் வீட்டக்குள் இருந்து கொண்டு சந்தம் போட்டாள்

“அவள் ஏதோ கதைப்புத்தகம் படிக்கிறாள்” என்றாள் புனிதம்.

“தேவி!”

“அவள் எங்கை போக? றோசம்மாக்கா வீட்டைதான் ராசாத்தியோடை கதைச்சுக் கொண்டிருப்பாள்!”

“ம்” என்றவன், மீண்டும் பிடரிக்குள் கையை வைத்துக்கொண்டு கிடந்து தாயைப் பார்த்தான்.

“தம்பி, வந்துட்டியே, எட்டுமணிக்கு மேலையாச்சு. நான் பயந்து கொண்டி ருந்தனான். இந்தா புனிதம் , மண்ணெண்ணையைக் கொண்டு போ, அண்ணைக்கு ஒரு முட்டை பொரி” –

புனிதம் மண்ணெண்ணெய்ப் போத்தலை எடுத்துக் கொண்டு குசுனிக்குப் போகு மட்டும் பேசாமல் இருந்த தாய் அவனுக்கு அருகில் குந்துச் சுவரோடு அமர்ந்து, மகனின் காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அவன் முகத்தை தவிப்போடு பார்த்தாள்.

“என்ன மோனை அவங்கள் ஓமாமே?” மெதுவாகக் கேட்டாள்

வேதநாயகம் கிடுகு முகட்டைப் பார்த்தவாறு கிடந்தான். இதயம் நசிந்து குழைகிறது. அம்மாவின் தவிப்புக்கு அவன் என்ன செய்வது?

“என்ன தம்பி சொன்னாங்கள்? சரியாமே?”

“என்ன ராசா என்னவாம்?”

“சும்மா என்னைக் கொஞ்சம் நிம்மதியாகக் கிடக்கவிடு” என்று எரிந்து விழ வேண்டும் போல் மனம் சினத்துக் கொண்டாலும் அதைக் கூற அவனுக்கு முடியவில்லை.

“என்னம்மா?”

“என்ன அவங்கள் ஓமாமோ?” அவன் முகட்டில் கண்விட்டுக் கிடந்தான்

“அது சரிவராது போலயிருக்கு! அதை விடுங்க!” தாயின் தொடர்ந்த கேள்விகள் தன் வேதனையைக் கிளறிவிடும் என்ற பயத்தால் அக்கதையை அத்தோடு வெட்டி விடட் பார்த்தான்.

மகன் பதில் கூறிய தொனியின் கடுமையை யுணர்ந்த தாய் மௌனமாக விருந்தாள். வேதநாயகம் இரு கைகளையும் நெஞ்சில் கோர்த்துப் போட்டபடி தலையச்சரித்து, முற்றத்து இருளைப் பார்த்தவாறு இருக்கும் தாயை வெறித்தபடி கிடந்தான்.

வேதநாயகம் கிளறிக்கலில் எடுபட்டு ஒருவருடத்தில் மேசன் வேலை செய்து குடும்பத்தக் காப்பாற்றி வந்த தகப்பன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான். குடும்பத்தலைவர் பொறுப்பு முழுவதும் அவன் தலையில் தானாகவே ஏறிக் கொண்டது. தாயையும் மூன்று பெண் சகோதரங்களையும் பாதுகாப்பது மட்டுமன்றி, அதுகளைக் கரைசேர்ப்பதும் அவன் பொறுப்பு. அவன் கிளறிக்கலில் எடுபட்டு முதலில் கண்டியிலும், பின் கொழும்பிலும் எட்டு வருடங்கள் வேலை பார்த்து விட்டு, யாழ்ப்பாணக் கச்சேரிக்கு மாற்றம் கேட்டு வந்ததே முதற் தங்கை புனிதத்திற்கு ஒரு கலியாணம் செய்து வைக்கத்தான். புனிதத்திற்கு எப்பவோ கலியாணம் செய்து வைத்திருக்கலாம். அவன் கலியாணம் செய்ய விரும்பியிருந்தால், அவனுக்குக் கிடைக்கும் சீதனத்தில் ஒரு பகுதியை புனிதத்திற்கு சீதனமாகக் கொடுத்துக் கலியாணம் கட்டி வைத்திருக்கலாம். அவன் திருமணம் செய்து விட்டால், தாயையும், மற்றச் சகோதரங்களையும் காப்பாற்றுவது யார்? அதனால் அவன் திருமணம் செய்வதில்லை என்று முடிவு எடுத்திருந்தான். அவனுக்கு இப்போது முப்பத்தினாலு வயசு. தாடி மயிரும், நாடி முனையில் நரைத்துப் போச்சு, அவன் யாழ்ப்பாணம் வந்தது முதல் ஒரு வருடமாக புனிதத்திற்கு மாப்பிள்ளை தேடி நாயாக அலைந்தான். வேலை விட்டு வந்து, தேனீரைக் குடித்து விட்டு, சைக்கிளில் ஏறி இதே வேலையாகத் தான் சுற்றி அலைந்தான். எத்தனையோ சம்பந்தங்கள் பேசிப் பேசி பல காரணங்களால் தட்டுப்பட்டுப் போயிற்று. கடைசியாக அச்சுவேலியில் இருக்கும் அவனுடைய நண்பன் சண்முகலிங்கம் இந்தச் சம்பந்தத்தை, தன் சொந்தத் தங்கையின் விஷயம் போல முன்னின்று முயற்சி செய்தான். மாப்பிள்ளை கல்விக் கந்தோரில் பியோனாக வேலை பார்க்கிறான். மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் பெண் பார்க்க வந்தார்கள். இருக்கிற ஒரு பரப்புக் காணியும், அந்த மண்வீடும், ஐயாயிரம் ரூபா நகையும், ஐயாயிரம் பணமும் தருவதாக வேதநாயகம் கூறினான். அதற்கு அவர்கள் சம்மதம் போற்தான் கதைத்துவிட்டுப் போனார்கள். இரண்டு கிழமையாகியும் ஒரு பதிலும் இல்லை. அதன் முற்று அறியவே அவன் இன்று அச்சுவேலிக்குப் போய் வந்தான். ஐயாயிரம் ரூபா பணம் அங்கிங்கு மாறி வீட்டில் வைத்திருந்தான். சீதனம் கூடக் கேட்டால் இன்னும் ஒரு இரண்டாயிரம் கொடுக்கவும் அவன் விருப்பமாக விருந்தான்.

வேதநாயகம் நெடுமூச்சொன்று அவனையறியாது நெஞ்சை உயர்த்தித் தாழ்த்த, தலையைத் திருப்பி, ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கண்ணெறிந்து கிடந்தான்.

“ஏன் தம்பி சீதனம் கூடக் கேட்டவங்களே? தாய் அவனப் பார்க்காது கேட்டாள்.

“ம்”

“சீதனம் கூடக்கேட்டவங்களோ?”

“இல்லை ”

“அப்ப, ஏன் சரிவராது எண்டு சொல்றாய்?”

கொஞ்ச நேரமௌனம் பிறகு; தாழ்ந்த குரலில் சொன்னான்.

“வேறை இடத்தில் கலியாணம் முற்றாக்கிப் போட்டாங்க” இப்பொழுது தாய் மௌனமானாள். அவனும் பேசாமற் கிடந்தான்.

மாமரத்து இலைகள் மீண்டும் காற்றில் சலசலக்கிறது.

“தங்களுக்குச் சம்மதம் போலைத்தான் கதைச்சிட்டுப் போனாங்கள்?” தாய் தன் பாட்டில் ஈனக்குரலில் கூறினாள்.

“அது சரிதான் அம்மா. மாப்பிள்ளையும் என்னைப் போலத்தான். இந்தச் சின்ன வேலை செய்து, இரண்டு தங்கச்சிமாரை தோட்டக்காரங்களுக் கெண்டாலும் கட்டிக் குடுத்திட்டான். இன்னொன்று இருக்கு. அதுக்கு ஐயாயிரம் குடுத்திட்டுத்தான் அவன் கலியாணம் முடிச்சுப் போகவேணும். அதனாலை கூடப் பணங் குடுக்கிற இடத்தில் முற்றாக்கிப் போட்டாங்கள். அவங்கள் பத்தாயிரம் காசாகக் குடுங்கிறாங்களாம். அவங்களிலை பிழையில்லை”

வேதநாயம் தாயைச் சமாதானப்படுத்தவே இதைக் கூறினான்.

“இதுவும் அப்படியாப் போச்சே!”

தாயின் ஏமாற்ற அலைகள் வார்த்தைகளை முற்றாக நனைத்திருந்தன. வேதநாயகம், மூன்று நாட்கள் சவரம் செய்யாது முளைத்து நிற்கும் தாடி மயிர்களை வலது கைவிரல்களால் தடவிக் கொண்டு கிடந்தான்.

தாயின் ஏக்கப் பெருமூச்சுக்காற்று அவனுக்குக் கேட்டது.

“என்ன தலைவிதி இது, நீயும் கிழடுதட்டிப் போறாய்; புனிதத்துக்கும் வயதேறிப் போச்சு, மற்றவளுக்கும் இருபத்தினாலாகுது. தேவிக்கும் இருபத்திரண்டாகுது. ஒருதருக்கும் ஒரு விடிவும் வருகுதில்லையே. கடவுளே! எத்தினை நேத்திக்கடன் வைச்சன் எங்கடை தலைவிதி அப்படி!”.

தாய் மெதுவாக ஈனஸ்வரத்தில் விரக்தியுணர்வுகளைக் கொட்டினாள்.

வேதநாயத்திற்கு எரிச்சலாக இருந்தது.

“என்னம்மா ? தலைவிதி, தலைவிதி எண்டு கொண்டு, எங்கள் நாலு பேருக்கும் ஒரே தலைவிதியை விதிக்கிற கடவுள் யாரம்மா?” என்று கூறியவன், சிறிது நேர யோசனையின் பின் இது தலைவிதி இல்லையம்மா, இது அசிங்கமான சமுதாயம். இந்தச் சமுதாய அமைப்புத்தானம்மா இந்தக் கேவலமான தடைச்சுவர்களைப் போட்டிருக்கு. இந்தச் சுவருகளுக்குள்ளே நாங்கள் முட்டி மோதிச் சாக வேண்டியதுதான். சாகுமட்டும் ஒண்டு செய்யலாம் தாராளமாக பெருமூச்சுக்களை விட்டுக் கொள்ளலாம்” என்று கூறிமுடித்தான். தாய்க்குத் தைரியம் கூற நினைத்தவன், தானே மனம் நொந்து போனான்.

“தேவனே ! இதுகளுக்கு ஒரு விடிவைக்காட்ட மாட்டியா?” தாய் நிமிர்ந்து சுவரில் தொங்கும் யேசுநாதர் படத்தை நோக்கினாள்.

வேதநாயகம், தாயின் மனவேதனைகளைப் பூரணமாக அறிவான். அவனுக்கும் அந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகளில் இருந்து மீளவும் கொஞ்சம் சிரிக்க வேண்டும் போலவும் இருந்தது.

“அம்மா!”

“என்ன மோனே?”

“யேசுநாதரும் ஒரு பிரம்மச்சாரிதான்!” என்று கூறிச்சிரித்தான்.

“சும்மா போடா!”

“நீ சும்மா மனதைப் போட்டுக் குழப்பாதை, எல்லாஞ்சரிவரும், நான் வெண்டுதாறன் நீ பயப்படாதை. இன்னொரு மாதத்தில் தங்கச்சிக்கு கலியாணம் கட்டி வைக்காட்டிப்பார்” என்று கூறித் தாயைத் தைரியப்படுத்திய அவன் மனதை, மீண்டும் ஏனோ சோகம் கவ்விக்கொண்டது. அவன் ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்டு உற்சாகமாகினான்.

“புனிதம்!”

“அண்ணா, இந்தா வாறன்!”

அவள் குசினியில் இருந்து வந்து அவன் முன்னே நின்றாள். வேதநாயகம், குந்துச்சுவரில் வைத்த பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“என்ன இது?”

“ஒரு சீலை உனக்கு!” “ஏன் அண்ணா , காசில்லாதநேரம், என்ன அவசரம்?”.

“நாளைக்கு உனக்கு பிறந்தநாளில்லையா?” புனிதம் பார்சலை வாங்கினாள். அவள் முகத்தில் எதுவித சலனத்தையும் காணவில்லை .

வேதநாயகம் உள்ளே உருகிப் போனான், நாளை அவளுக்கு முப்பத்தோராவது பிறந்த தினம்.

அவளால் எப்படிச் சிரிக்கமுடியும்?

புனிதம் அதை வாங்கிக் கொண்டு திரும்பி நடந்தாள். வேதநாயகம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுடைய கூந்தல் எவ்வளவு நீளமாகவிருந்தது. புனிதம் அறைக்குள் போய் விட்டாள். அவன் மீண்டும் பிடரிக்குள் கையை மடித்து வைத்து, நிமிர்ந்து முகட்டில் கண்களை விட்டுக் கிடந்தான்.

சிறிது நேரத்தில் ஈஸிச்சேரை விட்டு எழுந்தான், தங்கச்சியை ஒருமுறை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்தான். மெதுவாக நடந்து அறைக்குள் போனான். புனிதம் அலுமாரிக் கண்ணாடிக்கு முன்னால் நின்றபடி, அவன் கொடுத்த வேலையைத் தோளில் மடித்துப் போட்டுக் கொண்டு, கண்ணாடிக்குக் கிட்டவாக முகத்தை நீட்டி கண்ணடிப் பள்ளங்களில் விழுந்துள்ள கரிய சுருக்கக் கோடுகளைச் சுட்டுவிரலால் தடவிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ணுற்ற வேதநாயகத்தின் இதயம் நலுங்கிப் போயிற்று.

“புனிதம்!”

அவள் திரும்பி அண்ணனைப் பார்த்தாள்.

“அண்ணை நாளைக்குத் தாடியை வழியுங்கோ!” என்றாள், மௌனமாக நின்ற அவனின் கண்கள் நனைந்து கொள்கின்றன.

அது அவளுக்காக மட்டுமல்ல.

– வீரகேசரி – 1995 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *