சமுதாயக் கருணை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,831 
 

(1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது நடந்த காலம் சில வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். இப்போது மறதி அதிகமாக இருக்கிறது. திகதி நாள்களைப் பொறுத்த வரையில் இன்னும் அதிகமாகவே.

பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் யாழ் வைத்தியசாலையின் வாசலில் வந்து கொண்டிருக்கிறார். அவசர அவசரமாக உள்ளே நுழைந்த நான் அவரைக் கண்டு புன்னகை பூக்கிறேன்.

‘ஹலோ மிஸஸ் ராம். எப்படி? இப்பதான் அவரைப் பார்த்திட்டு வாறன். பயப்படாதேங்கோ. எல்லாம் சரிவரும். ம்… ம்… அந்தக் காலத்திலை ‘சம்பியன் கப்’ எல்லாம் அவரது தானே’.

என்னைப் பற்றி யாரும் அநுதாபப் படுவதை நான் விரும்புவதில்லை. என் முகத்தைக் கூடப் பரிதாபமாக வைத்துக் கொள்வதில்லை. இவ்வார்த்தைகள் எங்கே என் பலவீனமான நரம்பொன்றைச் சுண்டிக் கண்ணில் நீரை வருவித்தோ அல்லது சுயபச்சாத் தாபம் கொள்ள வைதத்தோ தைரியத்தைக் கெடுத்து விடுமோ என்பதுதான்.

தாங்க்யூ சேர். என்ன இந்தப் பக்கம்?’

‘எங்கள் பழைய மாணவன் ஒருவனுக்கு இரத்தம் வேண்டியிருப்பதாக

அவன் மனைவி வந்து கேட்டுக் கொண்டா. அது தான் இரத்தம் மெத்தி குழப்படி செய்கிற இவங்களைக் கூட்டி வந்தன்’ அந்த மாணவரைப் பார்த்து விஷமமாகக் கண்சிமிட்டுகிறார்.

சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்க்கின்றேன்.

உயர் தர வகுப்பு மாணவர் நால்வர் சேவை செய்த மகிழ்ச்சி தாண்டவமாட வணக்கம்’ தெரிவிக்கின்றனர்.

எத்தனை உற்சாகம், கம்பீரம், இலட்சிய நோக்கு!

துளசியின் முகத்தில் என் பார்வை அறிமுகப் புன்னகையோடு நிலைத்தது.

விஞ்ஞான மன்றத்தின் தலைவன் அவன். ‘சமய உண்மைகள் விஞ்ஞான ரீதியாக விளக்கம் பெறுகின்றன’ என்ற உரை ஒன்றின் போது என்னைக் கேள்விகளால் திணறடித்தவன் அவன்.

‘உமது இரத்தம் விதியை வெல்லுமோ எண்டு பார்ப்பம்.’ பகிடி விட்டதும் இருதய சுத்தமான சிரிப்பொன்றை அவிழ்த்து விட்டார் அதிபர். முதலில் நான் ஜெகனைக் கவனிக்கவில்லை. அவன் முன்னே வந்து-

வீட்டிலை சுகமாக இருக்கினமோ அன்ரி? மாதக் கடைசியில் வருவனென்று சொல்லுங்கோ. அங்கிளைப் பார்த்தனான், பாவம்’ அதிபரின் கவனம் வேறெங்கோ திரும்ப அவன் கிட்ட வந்து ‘அம்மாட்டைச் சொல்லாதையுங்கோ அன்ரி’.

பார்வையால் அவளைச் சமாதானப் படுத்தினாலும் அயலிலே வசிக்கும் அந்த அம்மாவின் நிலை கண்முன் விரிகிறது. கணவனை இழந்த அவள் மூன்று பிள்ளைகளோடு சொற்ப பென்சனில் மல்லுக்கட்டிக் கொண்டே மூத்த மகனை நன்றாகப் படிப்பித்து விட்டால், இளையதுகளைப் பார்ப்பான் என்ற கருத்தோடு….. சக்திக்கு மீறிய ஆசை…… எனினும் தனியார் பாடசாலையில் விட்டு, வெளியில் யார் வீட்டிலோ தங்கவைத்து, மற்றதுகள் அரைப்பட்டினி கிடக்க…. இவருக்கு முட்டை மாவும் பொரிவிளாங்காயும் அனுப்பிக் கஷ்டம் தெரியாமல் இவரைப் படிக்க வைக்க, இவர் இங்கை இரத்த தானம் செய்கிறார் இரத்ததானம் – என என் மனம் அடித்துக் கொண்டது.

***

‘இராசாத்தியக்கா’.

கட்டிலருகே பாத்திரங்களை கூடையில் அடுக்கும் போது கேட்டது குரல்.

றெஜினா! பார்த்து ஆறேழு வருடம் இருக்குமோ…. அடட ஆஸ்பத்திரி என்றும் பாராமல் அலட்டப் போகுது. அது வாய் திறந்தால் மூடத் தெரியாத ரகம்.

முகத்தை மலரவைத்த வரவேற்பு.

‘நீங்கள் நடைபாதையால் வரக்கை கண்டிட்டு ஓடி வந்தனான். ஐயையோ அண்ணைக்கு என்ன….?’

அவள் கணவன் ஞானச்சந்திரனுக்கு வாயாலும் வயிற்றாலும் இரத்தம், இரத்தமாகப் போகுதாம். பைந்த் பைந்தாக இரத்தம் ஏற்றுகிறார்களாம். இப்ப தன்னிடம் பணம் இல்லாமையால் அந்த அதிபர் இப்படி உதவிகள் செய்பவரென அறிந்து கெஞ்சி இரத்தம் பெறப்பட்டுள்ளதாம்.

‘சந்திரனுக்கா….? சந்திரனுக்க….?’ அந்தரப் படும் உள்ளத்தோடு அவனைப் பார்க்க விரைகிறேன்.

ஒருவரின் தாங்கலில் கட்டிலில் இருந்தபடி என்னைக் கண்ட மகிழ்ச்சி கன்னத்து நரம்புகளில் படர மேலிமை தடித்து அரை மயக்கம் காட்ட, வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்ல முடியாத தவிப்பால், உறைகட்டியும் செந்நீருமாக இரத்தம் கொட்டுகிறது. ஒரு தடவை முடிந்து ஆகவாசப் படுவதற்கிடையில் அடுத்த பாட்டம் பயத்தில் என்னுள் விறைத்து வருகிறது.

கண்கள் என்னையே பார்த்து எதையோ சொல்ல விழைகின்றன. முன்பு எத்தனை ஆத்மார்த்தங்கள் வெளிவந்துள்ளன. தலையிற் தடவியும், தோளிற் தட்டியும் ஆறுதற் படுத்துகிறேன்.

‘தம்பி, நீர் குழந்தைகளுக்காகவேனும் வாழ வேண்டும். தைரியத்தை இழக்கக் கூடாது. நிலைகுலைந்து போகக் கூடாது. டாக்டர் சிவகுமார் கைதொட்டது சிதையாது. நம்பிக்கை தான் சுகத்தைக் கொடுக்கும்’ என் ஆசிரியத் தனம் கருணையோடு வழிகிறது.

‘சொல்லுங்கோ அக்கா சொல்லுங்கோ… உதுதான்….”

ரெஜினாவின் பிரசங்கம் முடியுமுன்னரே வேதனைச் சூழல் ஏற்படுத்திய தாக்கம் என்னுள் கனன்று சீறுகிறது.

ஆஸ்பத்திரியிலாயினும் உமது தொண தொணப்பை நிறுத்தும்’ சந்திரன் ஒரு வெறுப்புப் பார்வையை அவள் மீது வீசுகிறான்.

அந்த அசட்டு றெஜினாவுக்காக எனது துடுக்கான நாக்கைச் சபிக்கிறேன்.

புதிய இரத்தப் பை வருகின்றது. டாக்டரும் ஊசி மருந்து செலுத்த வருகிறார்.

‘மாணவர்கள் கள்ளங்கபட மற்ற இருதய சுத்தத்தோடு கொடுத்த இரத்தம் இது. இதனை வெளியே போகவிடாது காப்பாற்றுவது உமது நம்பிக்கையில் தான் தங்கியிருக்கின்றது. வெளியேறுகிறேன்.

***

அவர்கள் இரு வருடம் எமது அயல் வீட்டில் வசித்த புதுமணத் தம்பதிகள். மத வேறுபாட்டால் காதற் திருமணத்துக்குப் பெரியோராசி கிடைக்கவில்லை. சந்திரன் புன்முறுவல் தவழும் குழந்தை முகம். எடுப்பார் கைப் பிள்ளைபோல முரண்டத் தெரியாதவன், சாந்தத்தின் உருவம், பொறுக்கியெடுத்த வார்த்தைகள்.

றெஜினா இயல்பில் நல்லவள். உற்சாகம். வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு,வலும் சுறுசுறுப்பு, பட்டணத்தில் பிறந்து, வளர்ந்து, பிரபல கல்லூரியில் படித்தும் மூச்சுவிடாமற் கதைப்பதில் வல்லவள். தனக்காகக் குடும்பத்தைப் பிரிந்து வந்தவள் என்பதால் அவள் மீது தேவதா விசுவாசம். ஆனால் அவளோடு அரை மணி நேரம் இருந்தாலே எனக்குத் தலைவலி வந்துவிடும்.

இவளது கரிசனையும், மூச்சு விடாமல் பேசும் மும்மொழிச் சரளமும் துருவங்களின் ஆகர்ஷிப்பாக வீட்டைப் பகைத்துத் தனிக் குடித்தனம் போடவைத்தது.

புதுமை யோகம் முடிந்ததும் கோப்பியைக் குடிச்சிட்டு பாத்றூம் போங்களேன். உதில் இருக்காதையுங்கோ ஜன்னல் காற்று வீகது. அவன் எது செய்தாலும் நடந்தாலும், இருந்தாலும் தலையீடு அவனது நலனை நாடும் அன்புத் தொல்லை, அவனுக்குத் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதான நச்சரிப்பாகிறது.

அலுவலகத்தால் வந்தால் அன்று குழந்தை எத்தனை தரம் ஒன்றுக்குப் போனது என்பது தொடக்கம் பிபிசியில் தாசிசியஸ் என்னென்ன சொன்னார் என்பது வரை.

ஆசாரங்கள் நிறைந்த வீட்டிலே வாழ்ந்து பழகியவனுக்கு முகங்கூடக் கழுவாது கோப்பி போட்டுத் தருதல், இரவுடுப்புடனே பகலிலும் பயிலுதல், புனிதமான நாட்களிலே குளிக்காது சமைத்தல், கால் கழுவாது வீட்டுக்குள் நுழைதல், ‘தூரம்’ பாராது வீடெல்லாம் புழங்குவது ஆகியன சிறு அருவருப்பையும் தருகிறது.

சொன்னால் கேட்டுக் கொள்வாள். றெஜினா. அனுசரித்துப் போவாள். ஆனால் அவன் தன்னுள்ளத்தை வெளியே காட்டாது உள்ளேயே மறுகுவான்.

அவர்களது பழக்க வழக்கங்கள் முரண்படத் தொடங்கிய போது அம்பிகாவதி அமராவதி காதற் கோப்பிசம் ஆட்டங் காணத் தொடங்கியது. அப்போதெல்லாம் இராசாத்தியக்காவின் ஆசிரியம் தேவைப்பட்டது.

நேரத்தைக் கடத்த எங்காவது சென்றாலோ, அலுவலக நண்பர் வீடுகளுக்குச் சென்று தேடி மறுநாள் ஆபிஸில் கேலி செய்யும் அவமானமும்.

‘அப்பா’ என்று கேற்றுக்கு ஓடிவரும் பிள்ளையைத் தூக்கக் கூட கிருமிகள் ஓட்டும். உடைமாற்றி வந்தாலோ தூக்கக் கூடாது. குடித்த பால் சத்தியெடுக்கும், தூக்கி விளையாடினால் செல்லங் கொடுத்தாப் பழுதாகும். களைச்சு வந்தனீங்கள் அவன் ஏறி உழக்க ஏன் கஷ்டப் படுவான். குழந்தையையும் ஒட்ட விடாள். இருவருடத்தில் வாழ்வின் பிடிப்புக் குன்றத் தொடங்கியது.

உள்ளடக்கி வைத்து வைத்துத் தான் ஆழ்கடலில் இருந்து எரிமலை வெடித்துச் சிதறுகிறதோ?

***

மாலை நேரம் கோட்டையில் இருந்து ஷெல்கள் பெரியகடைப் பக்கம் விழுந்து வெடிக்கின்றன. மலாயன் கபே பக்கம் தாக்குதலாம். மக்கள் கூட்டம் ஆஸ்பத்திரிக்குள் நெரிகிறது. ஆறரை மணிவரை திகைப்பு ஓய்ந்து போகவே ஓடிப்போகின்றேன். பஸ் நிலையத்தில் உயிருடன் ஒரு பொருள் தானும் நடமாட்டம் இல்லை. சுவருடன் ஒண்டி ஒண்டி ‘துணிவுள்ள ஒரு மினிபஸ்தானும் வராதா?’ எனப் பயத்துடன் அரைமணி நேரம் நிற்க, சினைப்பர்கள் தலைக்கு மேலே வெடிக்க ஆரம்பித்து விட்டன.

இனியும் நிற்பது ஆபத்து. திரும்பவும் வைத்தியசாலைக்குள் பதுங்கிப் பதுங்கி நுழைகிறேன். காலநிலைக்கேற்ப வைத்தியசாலைச் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. வாட்டுக்குள் சென்று நிலைமையைச் சொல்லி வெளி நோயாளர் பகுதி வாங்கில் தங்குவதற்கு வரவும், றெஜினாவும் வந்தாள்.

‘எப்படி இருக்கிறது சந்திரனுக்கு?’

ஆண்டவனேயென்று ஒரு மணிக்குப் பிறகு சத்தியெடுக்கேல்லை. ராப் பொழுது தாண்டி விட்டால் அவ்வளவு பயம் இல்லை என்று டாக்டர் சொன்னார்’.

எவ்வளவு இரத்தம் இப்படியேயா மூன்று நாளும்? எவ்வளவு’ வினாவல்ல அது ஆச்சரியத் தேற்றம்.

‘இராசாத்தியக்கா கேளுங்கோவன், மறந்து போனியளே. நான் அவரை அவளிட்டை இருந்து பிரிச்சுக் கொண்டு போனனான்’.

***

மறக்கக் கூடிய சம்பவமா அது?

ஒரு நாள் அவன் பிந்தி வந்தான். ‘எங்கெல்லாம் தேடினேன், எங்கை போனீங்கள்?’

ஆத்திரப் பட்டான் அவன். ஆனாலும் ஒரு பாடம் படிப்பிக்க வேணும். ‘அண்ணன் வீட்டுக்குப் போனன்’ நிதானமான விடை.

திகைத்தான், வாயெழவில்லை. எப்பதொடக்கம் எனக் கேட்கவில்லை, திகைப்படங்கியதும்,

‘நான் மறிக்கமாட்டன், பாவம்! கொண்டாடட்டும். நான் மட்டும் போகமாட்டன். என்னை எவ்வளவு தூற்றிக் கட்டியவை’ தன்னோடு சொல்லிக் கொண்டாள். அவர்களைப் பற்றி அவள் கேட்கவில்லை. அவனுக்குப் பிடிக்காதோ? எப்படியும் ஒரே தசைதானே.

இத் திரையின் பின்னால் நண்பர்கள் வழக்கமாகக் கடதாசி விளையாடும் ஒரு இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி வீட்டுக்கு இவனும் போவான். அவர் நல்ல முஸ்பாத்திப் பேர்வழி. அவருடைய பகிடிகள் அதைச் சொல்லும் அழகு வெடிச்சிரிப்பு சுங்கான் பிடிப்பு எல்லாமே இவனுக்கு மருந்தாய் அமைந்தன. வங்கியில் வேலை செய்யும் அவரது மகளும் குடும்பமும் அங்கே இருந்தாலும் இவர்களோடு கலந்து கொள்வதில்லை.

றெஜினாவுக்கு அந்த அண்ணன் மீது சந்தேகம். புத்திமதி சொல்லித் தன்னையும் பிள்ளையையும் பிரித்து விடுவார்களோ! அவர் போக்கும் சரியில்லை. அவள் பாத்துத்தான் சிந்திப்பாள். நான் இயன்றளவு புத்திமதி சொல்லுவேன்.

ஒரு நாள் தன்னைத் திரும்பியே பாராது சென்ற அண்ணன் மகளைக் கண்டு, ‘சித்தப்பா நல்லவர், சித்திதான் கூடாமற் போய்விட்டாவோ அந்தப் பிள்ளை புரியாது தயங்கி நிற்கவே-

சித்தப்பாவோடு பதினொரு மணிவரை என்ன அலட்டுறனீங்கள்? நானும் பிள்ளையும் சாப்பிடாமல் காத்திருப்பம் என்று தெரியாதே’

‘உங்களுக்கென்ன விசரா. நீங்கள் ஓராள் காணுமென்று தானே எங்களை விட்டுட்டு வந்தவர். பிறகேன் அங்கை வாறார்.’ அட்வான்ஸ் லெவலின் துடுக்கான பேச்சு.

அன்று இராசாத்தியக்காவுக்கு சரியான தலையிடி.

மறுநாள் துப்பறியும் வேலை தொடங்கியது. அன்றும் தலையிடி தான். அடுத்த நாள் றெஜினா சிறிய தாய்க்குச் சுகமில்லை என்று கொழும்புக்குப் பறந்தாள். இரு நாளில் திரும்பி வந்தாள் சொன்னாள். ஆச்சரியமான ஆச்சரியம் எனக்கு. இவ்வளவு கெட்டித்தனமா?’ ஓடியோடி ஏதேதோ ஆயத்தங்கள் செய்கிறாள்.

அடுத்த நாள் அலுவலாக வங்கிக்குப் போன போது சந்திரன் மிகச் சிந்தனையோடு காணப் பட்டான். என்னைக் கண்டதும் எழுந்து வந்தான். வழக்கம் போல ஏதாவது ஆத்மார்த்த நெருடலோ?

திடீரென்று பதவியுயர்வோடு கிளிநொச்சிக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. பட்டண வாழ்வுக்குப் பழகிப்போன றெஜினாவை எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. சொல்லக் கூடப் பயமாக இருக்கிறது. ஒரு நச்சரிப்பாக இருக்கப் போகுது. ‘அட்வைஸ் பண்ணி வையுங்கோக்கா’.

மௌனமாக வரவேற்ற மனைவியைக் கண்டு எனக்கு நன்றி சொல்லியிருப்பான் பாவம்.

***

இராசாத்தியக்கா கேட்டகிறியளே, பிரிச்சுக் கொண்டு போனனா… சிறிது காலம் நல்லாய்த்தான் இருந்தார். அங்கை பொழுது போகிறது கஷ்டந்தானே. உள்ளது கொஞ்சம். அதற்குள் நல்லவன்களை எப்படித் தேடுவது? கெட்ட சகவாசம் சேர்ந்து கொண்டது, ஒரே குடிகுடீ… சரியாச் சாப்பிடவும் மாட்டார். மச்ச மாமிசம் அவ்வளவு விருப்பமில்லை தெரியும். ஆருதக்கறி ஈடுகொடுக்குமே…. ஈரல் கரைஞ்சு போச்சாம். இது இரண்டாவது தடவை…’

திடீரென இவ்வளவு நாளும் எனது அனுதாபத்திற்குரியவனான சந்திரன் எழுந்து செல்கிறான். அங்கே றெஜினா வந்து குந்துகிறாள். நடுநிசி 12 மணி.

தொழிலாளி ஒருவர் ஓடிவருகிறார். ’17-ம் கட்டில்காரர் யாரும் நிக்கிறீர்களா?’ றெஜினா அவசர அவசரமாக எழுகிறாள்.

சத்தியெடுக்குது. நேர்ஸ் டாக்டரிடம் போய்விட்டார். ஆள் மயங்கிப் போச்சு… கெதியா ஓடிவாங்கோ….’

றெஜினா அலக்கப் பிலக்க ஓடுகிறாள்.

வாழத் தெரியாத மடையன். அவளது ஆக்கிரமிக்கும் அன்பு, சலிப்பையும் தொல்லையையும் கொடுத்தாலும், நல்ல உயர் பதவி, இரு விவேகமுள்ள பிள்ளைகள், இவற்றிற்கிடையில் தான் ஒரு சமுதாய மனிதன் என்பதை மறந்து விட்டானோ? சமுதாயத்தை உறுஞ்சும் சுயநலமியா? எத்தனை பேர் கஷ்டப் பட்டுத் தேடிய இரத்தத்தை இவனைப் போன்றோர் உறிஞ்சிக் கொண்டு…வாழப் பாடுபடும் இளைஞர்களுக்குச் செலுத்தப் படும் வாய்ப்பினையும் பறித்துக் கொண்டு வாழத் தெரியாத குடிகாரர்களுக்கு, தான் சாகக் குடிப்பவர்களுக்கு இந்தச் சமுதாயக் கருணை தேவை தானா?

– இதழ் 225 நவ-டிச 1989, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *