சமரச விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2024
பார்வையிட்டோர்: 186 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் காட்சியின் நினைவில் ஒன்றிப் போனான் ராமசாமி. தனது மனதை அரித்துக் கொண்டிருந்த கவலைகளை யெல்லாம் மறந்து விட்ட நேரம் அது. 

ஆறு வயதுகூட நிரம்பாத மகன் வெள்ளாட்டுக்கு அக்கறை யுடன் அகத்திக் கொழையை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் ஊட்டுகிறான். வெள்ளாடும் தனது காதுகளை ஆட்டிக் கொண்டு, ஒவ்வொன்றாக வாங்கி ‘நறுக் நறுக்’ கென்ற ஓசையுடன் இன்ப மாய் புசிக்கிறது. 

பூமிக்கு அறிமுகமாகி பத்து நாட்கள் கூட ஆகாத இளங் குட்டிகளும் தாயுடன் போட்டி போட ஆசைப்பட்டு சின்ன வனின் மேல் பிஞ்சுக் கால்களை போட்டு எட்டிப் பிடிக்க முயல் கின்றன. அவன் அதனுடன் விளையாடுகிறான். ஆட்டின் மீதும் அதன் குட்டிகள் மீதும் அந்தச் சின்னப் பையன் வைத் திருக்கும் பிரியத்தையும், ஆசையையும் பார்க்கும்போது தகப் பனுக்கு மனசெல்லாம் பூரித்துப் போகிறது. 

எட்டு வயசிருக்கும் மகள் நாராயணிக்கு. அவளுக்கு இந்த வெள்ளாடு பிடிக்காது. ‘எனக்கு எருமெ மாடுதான்’னு பெருமைப்பட்டுக் கொள்வாள். அவளுக்கு அந்த எருமையின் மீது அப்படியோர் பற்றுதல்; ஓட்டுதல். 

எருமை இப்போது சினை வயிறு உப்பியிருந்தது. அடுத்த மாதம் ஈன்றுவிடும். ரெங்கம்மா புல்லுக்கட்டை கொண்டு வந்து போட்டவுடன் – அதிலிருந்து புல்லையள்ளி சிந்திச்சிதறி இழுத்தவாறு, நாராயணிதான் மாட்டுக்கு காடியில் போடு வாள். தண்ணீர் வைக்கிற சட்டியை தூக்க முடியாமல் ‘முக்கி’த் தூக்கிக் கொண்டு அவள்தான் எருமையின் முன் வைப்பாள். அதுவும் நாராயணியை பார்க்கும் போது வித்தி யாசமான கனிவான உணர்வைக் காட்டும் 

ராமசாமியின் மனம் இந்த மென்மையான சிந்தனைகளின் இனிமையான தழுவலின் சுகத்தில் மயங்கியது கவலைகள் ஒதுங் கியிருந்தன. 

எருமை மாட்டை கர்ப்ப ஊசி போடுவதற்காக சில மாதங் களுக்குமுன் அண்மையிலுள்ள கிராம மிருக வைத்தியசாலைக்கு ஓட்ட முனைந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் விளையாட்டுக் காகச் சொன்னார் ; 

”நாராயணி, உங்க அய்யா மாட்டை விக்கிறதுக்காகத் தான் கொண்டு போறார். இனிமே இது உன் மாடு இல்லை”. 

அதை நம்பி அழுது புலம்பியது. மாட்டை ஓட்ட விடாமல் தம் காலைக் கட்டிக் கொண்டது…ரெங்கம்மா ஆத்திரத்தில் முதுகில் சாத்திய அடிகளை பொருட்படுத்தாமல் மாட்டுக்காக அழுது கத்தியது – அப்புறம் அவளையும் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனது… 

எல்லாமே அவனது நினைவுக்கு வந்தது. 

‘இந்த புள்ளைக்கு மாட்டுமேல எத்தனை பாசம்!’ ஆச்சர்யத்தில் நெஞ்சு வியந்து…கனிந்து – சந்தோஷித்தது. 

அப்போது- 

ரெங்கம்மா அலையக்குலைய ஓடி வந்தாள். அவள் அதிர்ச்சி அடைந்திருக்கிறாள் என்பதை அவளது தேகப் பதற்றம் காட்டியது. 

இந்தக் கொடுமை உலகத்துலே உ ண்டா? கேட்டீயளா இந்த அக்கிரமத்தை…?” என்று கதறிக்கொண்டே வந்தாள். 

“என்ன?” என்பது போல நிமிர்ந்தான் ராமசாமி. அவளது திகிலூட்டும் வருகையைக் கண்டு ஆடுகூட பயந்து இரை வாங்க மறந்து அவளை நிமிர்ந்து பார்த்தது. 

‘உங்க அண்ணன் கேஸ் குடுக்க போயிருக்காராம்…” என்றாள். ராமசாமிக்கு கன்னத்தில் தேள் கொட்டியது போலிருந்தது மனம் அதிர்ந்து, நடுங்கி, குலுங்கி…

அவள் மேலும் இடைவிடாமல் புலம்பினாள். அங்கலாய்த்தாள். 

ராமசாமி குழம்பித்தவித்தான். சிந்தனைகள் ஆடி மாதக் காற்றுபோல கட்டற்றுப் பாய்ந்தோடின. 

ராமசாமிக்கும் அவனது அண்ணனுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். சில சமயம் குடும்பத்துச் சண்டையாக இருக்கும். பெரும்பாலும் கிணற்று இறவையைப் பங்கீடு செய்யும் சண்டை தான் அடிக்கடி நடக்கும். 

ஒரே கிணறு. பம்ப் ஷெட் இணைக்கப்பட்டிருந்தது. அரை ஏக்கர், முக்கால் ஏக்கராக… மொத்தம் ஐந்து ஏக்கர் நிலத் துக்கு அந்த கிணறு பாத்தியப்படும். அந்த ஐந்து ஏக்கர் ஏழு பர் கையிலிருந்தது. அதில் ராமசாமிக்கு அரை ஏக்கர். அண்ணனுக்கும் அதே அளவு, 

முறைபோட்டு ஒழுங்காக தண்ணீர் பாய்ச்சுவார்கள். மழை பெய்தாலோ.. அல்லது யாருக்காவது தற்காலிகமாக நீர் தேவையில்லாமல் போனாலோ… முறை குழம்பிப்போகும். அந்தக் குழப்பம் ஒரு சண்டையில் தான் ஓயும். 

அந்தச் சண்டைகளில் குடும்பப் பகையின் வெம்மையும் இணைவதனாலோ, என்னவோ, பெரும்பாலும் ராமசாமிக்கும், அவனது அண்ணனுக்கும் இடையில்தான் அடிக்கடி நிகழும். சில சமயம் கைகலப்புவுரைக்கும் கூட போய் விடும். 

அதேபோல் தான் இன்று காலையிலும் நிகழ்ந்து விட்டது. நேற்று சாயங்காலம் புஞ்சைப் பக்கம் போயிருந்தான். சோளப் பயிர் இளமையின் அழகுடனும் செழிப்புடனும் தோகை நீண்டு அடர்ந்திருந்தாலும், அந்த மாலை நேரத்திலும் வாடிக் கிடந்த கொடுமையைக் கண்டான். பிள்ளையின் பசித்த முகத்தைத் தாங்காத தாயைப் போல அவனது நெஞ்சமும் தவித்தது. 

காலையில்…நாராயணியைக் கூப்பிட்டான். 

“என்னப்பா….”

“பெரியப்பாகிட்டே போய்… கெணத்துச் சாவியை வாங்கிட்டுவா… தண்ணி பாச்சணும்…” 

…வீட்டிற்குள்ளிருந்து ரெங்கம்மா குறுக்கிட்டாள். 

“அவரு கம்புக்கு இறைக்கணும்னாரே…” 

“அவருக்கு நேத்தே பாய்ஞ்சு போச்சு. பாத்துட்டேன்.” 

“ஆனா அவருக்கு காலை பத்து மணி வரைக்கு ‘முறை’யிருக்கே?” 

”தெரியாதா எனக்கு? நீ சும்மா கிடையேன். பாய்ச்சல் முடிஞ்சு போச்சுன்னா அவருக்கு எதுக்கு சாவி? நாராயிணி, நீ போம்மா” 

போனாள், வந்தாள். 

“என்னம்மா?” 

“அவரு சாவியை பத்து மணிக்குத்தான் தருவாராம்.” 

“தண்ணிதான் பாஞ்சு போச்சே, வாடிகிடக்குற சோளப் பயித்துக்கு தண்ணியை விடலாம்னா… பெரிசா சட்டம் பேசுகிறாரோ? எல்லாம் சட்டப்படியே தான் நடப்பாரோ? மிச்சம் கிடக்குற தண்ணியை என்ன செய்யப் போறாராம் வாயிலே அள்ளியா ஊத்திக்குவாராம்? அண்ணந் தம்பியாம் பெரிய மயிரு.” 

வாடிக்கிடந்த சோளப் பயிர் நெஞ்சுக்குள் நெருப்பை ஜூவாலைவிடச் செய்து கொண்டிருந்தது. எரிச்சலுடன் வார்த்தைப் பொறிகள் மனதையும் மீறி பறந்தன. 

“மயிரு மட்டைன்னு வாய் நீண்டா நாக்கை ஒட்ட நறுக்கிப் போடுவேன், ஜாக்கிரதை,” என்ற அண்ணனின் குரலைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான் ராமசாமி. இப்படி வந்து நிற்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் சமாளிக்க முயன்றான். 

“சும்மா கெடக்குற தண்ணியை பாச்சுனா என்னவாம்?” 

“தாலியத்தவா ஒருத்தி சும்மாயிருந்தா, எவனாவது போய் இழுக்க முடியுமா?”

“பெரியமனுசன் பெரியமனுஷன் கணக்கா பேசணும். சின்னத்தனமா பேசுனா சரிப்படாது.” 

“ஏலே…படுவா…தோலை உரிச்சுப்போடுவேன், தோலை ராஸ்கல், சின்னத்தனம்னா சொல்றே” என்று கோபாவேசாமாகக் கூறிய அண்ணன் ஒரு கெட்ட வார்த்தையுடன் முடித்தார். 

“வார்த்தை ஒழுங்கா பேசனும் இல்லேன்னா சரிப்பட்டு வராது. ஆமா, சொல்லிப் போட்டேன்.” 

“இல்லேன்னா மயிரைப்பிடுங்கிடுவியோ…” 

வார்த்தைகள் தடித்தன. கை கலப்பு வந்தது. மனைவி ரெங்கம்மாள் ஓடி வந்தாள். அலறினாள் கூட்டம் கூடி வந்தது. கைகலப்பு நின்றது. நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் வாய்கள் ஓயவில்லை. ரெங்கம்மா பழைய சங்கதிகளை யெல்லாம் இழுத்து வசைபாட ஆரம்பித்தாள். மறுபடியும் கை கலப்பு, கூட்டத்தின் குறுக்கீடு. பிரச்னை தீராமலேயே சண்டை ஓய்ந்தது. 

இந்தச் சண்டை ஒன்றும் அதிசய நிகழ்ச்சியல்ல. ஊருக்குப் பழகிப் போன விஷயம் தான். சண்ட போட்ட ஒரு மாதம்.மனதை விறைத்துக்கொண்டு, முகத்தை திருப்பிக் கொண்டு நாட்கள் ஓடும். பிறகு ஏதோ ஒரு ‘நல்லது பொல் லது,வந்தால் பகை வெம்மை குளிர்ந்து உறவுதுளிர்க்கும். 

“அஞ்சு வயசு வரைக்கும் தான் அண்ணன் தம்பி; பத்து வயசுக்கு மேலே பங்காளின் னு சும்மாவா, சொன்னாக…? அண்ணன் தம்பிக்குள்னே இதெல்லாம் சகஜம்தான் அடிச்சுக் கிடுவாங்க கூடிக்கிடுவாங்க” என்று சாதாரணமாகப் பேசிக் கொள்வார்கள் ஊரார்.. 

அந்த அளவுக்கு பழக்கமாகிப் போன சண்டை இந்தத் தடவை மட்டும் இந்த அளவுக்கு வளர்வதேன்? ராமசாமியின் நெஞ்சம் பதறியது. 

”கேஸ்” என்ற வார்த்தை அவனது நினைவில் ஒரு சர்ப்ப மாக ஒலித்தது ‘கேஸ் கோர்ட்’ என்று வரட்டுக் கௌரவத்திலான பிடிவாதத்தில் அலைந்து சீரழிந்த எத்தனையோ பேர் குடும்பங்களின் கதைகள் அவனது நினைவில் ஓடி நெஞ்சைக் குலுக்கின. 

40 ஏக்கர் 60 ஏக்கர் என்று நிலம் வைத்திருந்த பெரிய பெரிய குடும்பங்களெல்லாம் கோர்ட் படிகளை சமாதிகளாக்கிக் கொண்ட கதைகள் அவனை அதிகமாக மிரள வைத்தது. 

அற்பக் காரணங்களாக கோர்ட்டுக்குப்போய் படிப்படியாக பெரிய பெரிய விவகாரமாக விசுவரூபமாகி வாழ்க்கையையே விழுங்கிவிடும் என்ற அனுபவம் ராமசாமியை கதி கலங்கச் செய்தது, 

“இப்ப என்ன செய்றது?” 

இந்தக் கேள்வி அவனது நினைவின்முன்னே மறித்து நின்றது, 

“இப்ப என்ன செய்யப் போறீக…?” புயலோய்ந்த அமைதியுடன் அங்கலாய்ப்பை நிறுத்திவிட்டுக் கேட்டாள். 

”என்னன்னு ஒண்ணுமே புரியல்லே. நாமே என்ன செய்றது? நாலெழுத்து படிச்சதுல்லே. மண்ணுலே புரண்டோம். வேர்வையைச் சிந்துறோம். வெளைஞ்சதுலே விதை முதல் கூட இல்லாமெ இழந்துபோறோம். வெந்ததைத் திங்கிறோம். நமக்கு இதைபத்தியெல்லாம் என்ன தெரியும்…?” 

அவனது குரல் விரக்தியில் கம்மியது. பீதியால் திகிலடைந்த அவன் நெஞ்சை வேதனை வாட்டியது. அவனைச் சுற்றி ஒரே இருட்டு. வாழ்க்கை முழுவதும் இருட்டு. எதிர்காலமே இருட்டு. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல எங்குமே இருட்டு. இப்ப என்ன செய்றது? 

“யாரையாச்சும் பெரியாள்களைப் போய் பார்த்து. விவரத்தைச் சொல்லுங்களேன்…” 

”சரி… எது செய்றதுன்னாலும் பணம் வேணுமே.வருமான மில்லாத இந்த நேரத்துலே பணத்துக்கு எங்கே போறது?” 

“எதுக்கும் ஒரு முடிவு இல்லாமெப்போயிடாது, தீயெ வைச்ச சாமி தண்ணியெக் காட்டாமலா போயிடும்?” 

வாழ்க்கையின் மீது அவன் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை அவனையும் பற்ற முயன்றது. பெருமூச்சு விட்டபடி வெளியேறினான். 

நடுத்தெருவுக்கு வந்தான். அங்கு டீக்கடையில் இரண்டு மடிப்புக் கலையாத காக்கி உடுப்புகள்’ விடைத்து நின்றன. ராமசாமிக்கு பகீரென்றது. தேகம் முழுவதும் பனிக்குள் புதைந்துபோன ைப்போன்ற ஒரு நடுக்கம். மனதில் ஜில் விட்டது. 

அந்தப் போலீஸார் இருவரும் உல்லாசப் பேர்வழிகள். இளைஞர்கள். டெரிகாட்டன் காக்கிகளும், மினுமினுத்த பூட்ஸ் களும், கருப்புக் கண்ணாடியும் அடர்ந்து கனத்த மீசையுமாக 

பெரிய ஆபிஸர்’ போன்ற கம்பீரத் தோற்றத்துடன் நின்றனர். வேடிக்கை பார்க்க வந்த சிறுவர் கும்பல் வியப்புடன் நிமிர்ந்து நின்றன. 

போலீஸாருடன் ரூஸ்வெல்ட் பேசிக்கொண்டிருந்தான். அவன் ஒருவிதமான கேரக்டர். அவனுக்கென்று தொழில் கிடையாது. வாழ்க்கையில் எந்தவிதமான குறிக்கோளுமில்லா தவனைப்போல தினத்துக்கொரு விதமாக பேசித்திரிவான். அவன் பெரிய பண்ணையின் விவசாய நிர்வாகியாக இருக்கிறான். 

அதனால் “ரூஸ்வெல்ட் பேச்சுக்கு போலீஸ் ஸ்டேஷன்லே நல்ல மரியாதை உண்டு” என்று ஊரில் பரவலான பேச்சு. 

ரூஸ்வெல்ட் இளவயசிலிருந்தே பெரிய பெண்லோலன்; நல்ல குடிகாரன்; சிவந்த உடம்பு; கம்பீரமான நிமிர்ந்த தோற்றம்; மீசை இல்லாமல் சுத்தமான முகம்; வெளிப்பார் பார்வைக்கு சர்வயோக்யன் போலத் தோன்றுவான். ஆனால் எல்லாக் கயவாளித் தனத்திற்கும் சொந்தக்காரன். 

ராமசாமி முடிவுக்கு வந்து விட்டான். மனதில் ஒரு தெளிவான ஒளிர்வு. ‘ரூஸ்வெல்ட்டை பிடிச்சிக்கிட வேண்டியது தான்!’ 

போலீஸார் ரூஸ்வெல்ட்டுடன் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். 

“இங்க, ராமசாமிங்கிறது யாரு?” 

“என்ன, கேஸ் வந்துடுச்சா?” 

“ஆமா, அவுக அண்ணன் ‘கச்சேரி’யிலே வந்து ப்ராது குடுத்துருக்கார்” 

“எஸ்.ஐ.எப்படியிருக்காரு? சௌரியமாயிருக்காரா?” 

“அவரு உம்மைப் பாக்கனும்னாரே” 

“அப்படியா?” என்றவன் ஏதோ நகைச்சுவையை கேட்ட வனைப்போல காரணமின்றி சிரித்தான். சிரிப்பு வான்கோழியின் கொக்கரிப்பைப் போல நாராசமாக இருந்தது. சிரித்து முடிக்கும்போது இப்படிக் கூறினான்: 

“இன்னிக்கு எஸ்.ஐ.க்கு நல்ல வேட்டைதான்” 

ராமசாமி, சிரமப்பட்டு தைர்யத்தை வரவழைத்து கொண்டு அவர்கள் முன் வந்து நின்றான். 

“நீருதான் ராமசாமிங்கிறதா?” 

“ஆமா எசமா” 

“உம்மை கச்சேரிக்கு வரச் சொன்னாரு எஸ்.ஐ.” 

ராமசாமி, இவர்கள் தான் நீதிபதி என்பதைப்போல எண்ணிக் கொண்டு முறையிட்டான். சம்பவத்தை ஆதியோடந்தமாக விவரித்தான். தான் அநீதிக்குள்ளாக்கப் பட்டிருக்கும் அவலத்தை இரக்கமேற்படும்படி எடுத்துரைத்தான். அவர்களும் தம்மை வக்கீலாக பாவித்துக் கொண்டு குறுக்குக் கேள்விகளை வீசினர். மிரட்டினர். 

ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு. 

“சார், நீங்க ரெண்டு பேரும் போங்க. நானும் ராமசாமியும் வர்ரதாக எஸ்.ஐ. கிட்டே போய் சொல்லுங்க” 

‘சரி’ என்றனர். ரூஸ்வெல்ட் இட்லி காபி வாங்கித்தந்தான். சிகரெட் பாக்கட்டை வாங்கித்தந்தான். ஊதித்தள்ளியவாறு, சைக்கிளைத் தள்ளினர். 

ராமசாமியின் பக்கம் திரும்பினான் ரூஸ்வெல்ட். அவனது சிவந்த சிறு கண்களைப் பார்த்த ராமசாமி மிரட்சிக்குள்ளா யினான், 

”என்ன செய்யணுங்கிறே?” 

“ஏதோ நீமனசு வச்சு என்ன செஞ்சாலும் சரிதான்” 

“அதுக்கில்லேயா….கேஸ் போட்டா எப்.ஐ.ஆர். கிழிக்கட்டும். கோர்ட்டுக்குப் போங்க. ஜாமீன் எடுத்து கேஸை நடத்த வேண்டியதுதான். நல்ல வக்கீல் ஒருத்தர் எனக்குப் பழக்கம் அவரை வேணும்னா உனக்கு ஏற்பாடு பண்ணித் தாரேன். அவரு கெட்டிக்காரர்தான்.” 

“அதெல்லாம் எதுக்கு…?” என்று அச்சத்துடன், தயக்கத்துடன் இழுத்தான். ரூஸ்வெல்ட் கண்களில் ஒரு மலர்ச்சியின் ”ஒளிச்சிதறல்!’ 

“வேறென்ன செய்யலாம்?” 

“கேஸ் இல்லாமச் செஞ்சா நல்லதே. நீ நினைச்சா அப்படிச் செஞ்சுடலாம்” 

ரூஸ்வெல்ட் உதட்டில் ஒரு மலர்ச்சி; நகையின் மின்னல்; தன்னை நெருங்கி வரும் மீனைப் பார்க்கும் கொக்கின் ஆனந்தப் பார்வை. 

“கொஞ்சம் பணமாகுமே” 

ராமசாமியின் முகத்தில் நிச்சயமாகிப் போன தாக்குதலை எதிர்நோக்கும் கைதியின் சோகமும் அபலைத்தனமும் ததும்பியது 

“எம்புட்டு செலவாகும்?'” 

ரூஸ்வெலட் எஸ் ஐ.யை கடுமையாக விமர்சித்தான். ‘பணந்தின்னி’ என்று திட்டினான். இவனுடைய மனக் கொதிப்பை அவன் வழியாக மிகைப்படுத்தி வெளியிட்டான். இறுதியில் ஒரு முடிவுடன் கச்சேரிக்கு செல்ல ஆயத்தமாயினர். 

‘பணத்துக்கு என்ன செய்வது?’ இந்தக் கேள்வி ராமசாமி நெஞ்சில் பாறையாக கனத்தது. அவனைச் சுற்றிலும் இருட்டு. 

கண்ணைக் கட்டி வனத்தில் விட்டது போல கனத்த இருட்டு. இருட்டுக்குள் எண்ணங்கள் தடுமாறின. 

‘கச்சேரி’ போய்ச் சேர்ந்தனர். ஆறுமைல் தூரத்திற்கு ஸ்வெல்ட்டை பின்னால் வைத்து சைக்கிள் மிதித்த களைப்பு, ராமசாமியின் உடம்பை வதைத்தது. அண்ணன் கச்சேரியினுள் இருந்தார். 

எஸ்.ஐ. மேஜை ஓரத்தில் நிமிர்ந்து நின்றார். உயர்ந்து கனத்த தோற்றம். தொந்தி வயிற்றை இறுக்க முடியாமல் பெல்ட் திணறியது. 

விசாரித்தார், சட்ட நுணுக்கமான விசாரணை. கதர் சால்வை போர்த்தியவாறு பொக்கை வாய் சிரிப்புடன் ‘மகாத்மா’ கண்ணாடிச் சட்டத்தினுள் சிறைப்பட்டு சுவரில் தொங்கினார். 

எஸ்.ஐ. விசாரித்தார். ராமசாமியையும், அண்ணனையும் விசாரித்தார், கிராமப்புறத்து சிறுவிவசாயிகளின் கஷ்டங்கள் துயரங்கள் சண்டைகள் வெளிவந்தன. இறவைப் பங்கீடு, கரண்ட். தட்டுப்பாடு, மழையின்மை, இவைகளால் அதில் வரும் குழப்பம், அற்ப நிலத்தில் உயிர் தொங்கும் அவல வாழ்க்கையின் காரணமாக அதில் வரும் சண்டைகள் எல்லா வற்றையும் இருவரும் மாறி மாறி கூறினர். 

எஸ். ஐ. இருவரையும் மிரட்டினார். அண்ணன் தம்பி உறவின் உன்னதத்தை விளக்கினார். சமரச உணர்வை உருவாக்க எத்தனித்தார். இருவருக்குமே நாலைந்து அடிகள் விழுந்தன. கணக்கில்லாத வசைகள் நெஞ்சில் தீயாக விழுந்தன. 

வெளியேற்றப்பட்டனர். 

ரூஸ்வெல்ட் உள்ளே போனான். எஸ். ஐ.யுடன் சற்று நேரம் கிசுகிசுத்துவிட்டு வெளியே வந்தான். 

“போய்ட்டு மூணு நாள் கழிச்சு வருவோம்” என்று ராமசாமியை அழைத்துக் கொண்டு ரூஸ்வெல்ட் கிளம்பினான். 

அண்ணனை மறுபடியும் எஸ்.ஐ. அழைத்தார். மேலும் சூடான விசாரணை. மானக்கேடான வசவுகள். தாராளமான அடிகள் ‘கேஸ் என்னாலும் சரி, ஆளைவிட்டால் போதும்’ என்ற உணர்வு அவரைக் கவ்வியது. 

“என்னய்யா ரெண்டு பேரும் ‘ராசி’ பண்ணிக்கிறீகளா, இல்லே கோர்ட்லே போய் சீரழியப் போறீகளா?” என்று எஸ்.ஐ. கேட்டார். குரலின் கரகரப்பில் மிரட்டல் பளிச்சிட்டது. 

‘உங்க மனம் போல செய்யுங்க எசமான்” 

மூன்றாம் நாள் ரூஸ்வெல்ட்டுடன் மேற்கொண்டு இருவர் எல்லாருக்கும் ராமசாமிதான் சாப்பாட்டுச் செலவு. ஐநூறு ரூபாயை ரூஸ்வெல்ட் வாங்கிக் கொண்டு போனான், எஸ். ஐ. யைத் தனியாகப் பார்க்க. 

சற்று நேரத்தில் சமரசப்ப திரம் எழுதி முடிக்கப்பட்டது. கையொப்பம் முடிந்தது. வெளியே வந்தபோது காக்கி உடுப்புக்கள் சூழ்ந்தன. மொய்த்தன. பேராசையுடன் பாய்ந்தன. 

ரூஸ்வெல்ட் ராமசாமியிடம் கூறினான். 

“நல்லவேளை இத்தோட முடிஞ்சது. கொஞ்ச பணம் செலவாயிட்டாலும் இவ்வளவோட முடிஞ்சு போச்சு. கோர்ட்டுக்குப் போயிருந்தால் என்னாகும்? குடியே நொறுங்கிப் போகும்” 

எல்லோரும் பிரிந்தனர். ராமசாமி தனியனானான். இந்தச் சம்பவம் அவனை குழப்பி, திகைக்க வைத்து விட்டதே! எவ்வளவு பயமுறுத்தி விட்டது! 

நேற்று மாட்டு வியாபாரி பணத்தை கொடுத்துவிட்டு எருமை மாட்டை யிழுத்தபோது நாராயணி அழுத அழுகை அதை இழுக்கும்போது இவனுக்கேற்பட்ட வேதனையின் சோகத்தை பல மடங்காக பெருக்கியதை நினைத்துப் பார்த்தான். 

கச்சேரியை ஏறிட்டுப் பார்த்தான். ஏழைகளின் ரத்தத்தை பூசிக்கொண்டது போல பயங்கரமாகத் தோன்றியது. 

ராமசாமியின் நெஞ்சில் என்னென்னவோ நினைவுகள் மோதின. வேதனை, துயரம், சோகம், அவலம், கோபம் எல்லாமே முண்டி மோதின. இறுதியில் ஒரு வார்த்தை பீறிட்டது. 

“அட குடிகெடித்த பாவிகளா.” 

சமரசத்தின் விலையாக வழங்கப்பட்ட எருமையின் இழப்பையும், அதனால் துடித்துப் போன நாராயணியின் அழுகையையும் எண்ணியவாறு சோகத்துடன் ஊரை நோக்கி நடந்தான்.

– மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

– மானுடம் வெல்லும் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1981, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, இரமநாதபுரம் மாவட்டம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *