சமயம் பார்த்து அடிக்கணும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 10,928 
 

“ இன்னைக்கு….ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!…நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி, தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?…சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து…. இளங்கறியா வாங்கிட்டு வந்திடுங்க!…அப்பத் தான் நான் என் வேலையை சீக்கிரம் முடிக்க முடியும்!….”

“ சரிடி!…இதோ சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்திடறேன்!…” என்று கிளம்பினார் ரத்தினம்.

கறிக்கடை வேலுவுக்கு ஆபிசர் ரத்தினத்தைக் கண்டால் ரொம்ப மரியாதை! ஞாயிற்றுக் கிழமையானா அவரே வருவார் என்று வேலுவுக்கு முன்பே தெரியும்! அதனால் அவருக்கு வேண்டியதை ஏற்கனவே ஒரு பக்கம் தயாராக எடுத்து வைத்திருந்தார். அவர் தலையைத் பார்த்தவுடன் உடனே எடுத்து வெட்டிக் கொடுத்து விட்டார்.

கோமதியின் கைப் பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை! ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் வீட்டில் எல்லா வேலைகளும் காலை நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும்.

காலை ஒன்பது மணிக்கு டைனிங் டேபிளில் ரத்தினத்திற்கும், அவர்களின் ஆசை மகள் ரஞ்சிதாவுக்கும் தட்டுக்களை எடுத்து வைத்து, அதில் நாலு இட்லி வைத்து இரண்டு கரண்டி சிக்கன் குழம்பை கறியோடு போட்டு, அருகில் ஒரு சிறிய தட்டில் சிக்கன் வறுவலையும் ஆவி பறக்க எடுத்து வைத்து விடுவாள்.

அடேயப்பா!…..அந்த இட்லிக்கும், அந்த சிக்கன் குழம்புக்கும் இருக்கும் டேஸ்ட்….சொல்ல வார்த்தைகள் இல்லை!

ஒரு பிடி பிடித்து விட்டுத் தான், அப்பாவும் மகளும் டைனிங் டேபிளில் இருந்து எழுவார்கள்!

ரத்தினத்திற்கு மகள் ரஞ்சிதா என்றால் உயிர்! அவளுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் செய்வார்.

மகளை பக்கத்தில் உட்கார வைத்துத் தான் சாப்பிடுவார். ஞாயிற்றுக் கிழமை அவர்கள் வீட்டில் என்றும் அசைவ உணவு தான்! ரஞ்சிதாவுக்கு எது எது பிடிக்கும் என்பது ரத்தினத்திற்கு அத்துபடி. தன் தட்டில் அவளுக்குப் பிடித்த பீஸ் எது விழுந்தாலும் அடுத்த நொடி அது பக்கத்து தட்டிற்குப் போய் விடும்!

ரஞ்சிதாவும் சிரித்துக்கொண்டே சாப்பிடுவாள். அப்பாவுக்கு தன் மேல் உள்ள பிரியம் அவளுக்குத் தெரியும்.

தனக்கு யாராவது தொல்லை கொடுத்தால் கூட அதை அவள் அப்பாவிடம் சொல்ல மாட்டாள். அவருக்கு வரும் கோபத்தில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்!

இரண்டு மணிக்கு மீண்டும் அதே டைனிங் டேபிளில் அவர்கள் இருவரும் வந்து உட்கார்வார்கள். ரஞ்சிதாவுக்குப் பிடித்த சிக்கன் பிரைட் ரைஸ் ஒரு தட்டிலும் சிக்கன் 65 ஒரு தட்டிலும் இருவருக்கும் தனித் தனியாக சுடச் சுட இருக்கும்!

எங்கிருந்து தான் இவ்வளவு சுவையாகச் செய்ய இந்த கோமதி கற்றுக் கொண்டாளோ?

டி.வி. யில் அவள் பார்ப்பது செப் தாமுவின் சமையல் நிகழ்ச்சிகள் மட்டுமே!

“ஏண்டி!….உனக்குத் தான் இவ்வளவு பக்குவமா சமையல் செய்ய வருதே…அதற்கப்புறம் எதற்கடி இந்த சமையல் நிகழ்ச்சிகளை இப்படி விடாமல் பார்க்கிறே?…”

“ உங்களுக்கு சமையலைப் பற்றி என்ன தெரியும்?…அது ஒரு கலை…அதில் ஆயிரம் நுணுக்கங்கள் இருக்கு…..உன்னிப்பா கவனித்தா…புதுசு புதுசா நிறைய விஷயங்கள் கிடைக்கும்!…அதையும் நம் சமையலில் சேர்த்தா…இன்னும் ருசி கூடுமுங்க!…..”

“ போதும்!….போதும் இந்த சமையலே!….நம்ம ரஞ்சிதா காலையில் குழம்பு கறியும், வறுவலும் ஒரு பிடி பிடிச்சிடறா……மத்தியானம் சிக்கன் நூடில்ஸூம், சிக்கன் 65 யும் அவளுக்காக பார்த்துப் பார்த்து செய்யறே!….அதனாலே அவ இப்ப சாப்பாடே ஒழுங்காச் சாப்பிடறதில்லே!…சிக்கனிலையே வயிற்றை நிரப்பி விடறா …இன்னும் நீ ருசியை அதிகப் படுத்தினா…அப்புறம் சொல்லவே வேண்டாம்….இப்ப எல்லாம் பத்திரிகைகளில் சிக்கனைப் பற்றி தாறு மாறா செய்தி வருது… இவ வயசுக்கு இன்னும் இவ பெருத்தா நல்லா இருக்காது!….”

“நீங்களே கண்ணு வைக்காதிங்க!….ஒரே பொண்ணு……ஆசை ஆசையா வளர்க்கிறோம்!…”

அன்று மத்தியானம் டைனிங் டேபிளில் ரஞ்சிதாவுக்காக வைத்த சிக்கன் நூடில்ஸூம் சிக்கன் 65 ம் தொடாம அப்படியே இருந்தது!

கோமதிக்கு ஆச்சரியமாக இருந்தது. காலையில் கூட ரஞ்சிதா இட்லிக்கு பிரிட்ஜில் இருந்து எடுத்து நேற்றைய சாம்பாரை தொட்டுக் கொண்டு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது!

காலையில் வயிறு சரியில்லை போலிருக்கிறது என்று யதார்த்தமாக கோமதி இருந்து விட்டாள்!

ரஞ்சிதாவுக்கு என்ன வந்து விட்டது? சிக்கன் நூடில்ஸூம், சிக்கன் 65 ம் அவளுக்கு உசுரு. ஒரு ஞாயிற்று கிழமை சமைக்கா விட்டால் கூட எல்லோரையும் உயிரை எடுத்து விடுவாள்!

கோமதிக்கு ஒரே பதற்றம்!

“ என்ன கண்ணு!……ஏன் சமையல் பிடிக்கலையா?…..”

ரஞ்சிதா சிரித்தாள்.

“உன் சமையலை யாரம்மா குறை சொல்ல முடியும்?…”

“ பின் ஏன் நீ இன்று சிக்கனை கையில் தொடவே இல்லே?….”

“ போன வாரம் நாம நம்ம குல தெய்வம் கோயிலுக்குப் போனோம் இல்லையா?.”

“ ஆமா….அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?..”

“ நீ அங்கு சொன்னாயல்லவா?…நம்ம குல தெய்வம் ரொம்ப சக்தி வாய்ந்த சாமி…நாம நமக்குப் பிரியமானது ஒன்றை விட்டு விட்டு, நமக்குத் தேவையான ஒன்றைக் கேட்டால் நம்ம குல தெய்வம் நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று ……. நினைவு இருக்கா? நான் நம்ம குல தெய்வத்திடம் எனக்குப் பிரியமான சிக்கனை விட்டு விட்டு…எனக்குத் தேவையான ஒன்றை தரும்படி வேண்டிக் கொண்டேன்!….இனி மேல் நான் சிக்கன் சாப்பிட மாட்டேன்!..”

“ அடியே….அது ரொம்ப கஷ்டமடி….அப்படி உனக்கு என்ன வேண்டுமென்று சொல்லு……உங்க அப்பாகிட்டே சொன்னா அது எங்கிருந்தாலும் கொண்டு வந்து கொடுத்து விடுவார் …..”

“போம்மா…உன்னாலேயோ..அப்பாவாலேயோ வாங்கித் தரக் கூடிய சாமானா இருந்தா நான் ஏன் நம்ம குல தெய்வத்திடம் போய் வேண்டுதல் வைப்பேன்?”….

“ அப்படி உனக்கு என்னடி வேண்டும்?…”

“ அதை இப்ப சொல்லமுடியாது! என் வேண்டுதல் பலித்த பிறகு சொல்கிறேன்!,,,” என்று சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

‘வயசு பதின்நான்கு முடிந்து விட்டது. இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் கோமதி.!

விளையாட்டைப் போல் நான்கு வாரங்கள் ஓடி விட்டன. ரஞ்சிதா சிக்கனைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை!

ரத்தினத்திற்கு அது ரொம்ப வித்தியாசமாப் பட்டது! அருமை மகள் தங்களிடம் எதையோ மறைக்கிறாள் என்பது மட்டும் நிச்சயமாகப் புரிந்தது! அவளுக்கு எது தேவை என்றாலும் அடம் பிடித்து அடுத்த நிமிஷமே வாங்கி விடும் சுபாவம் அவளுடையது! அப்படிப் பட்டவள் தன்னிடம் கூட மறைத்து விட்டு ஆண்டவனிடம் வேண்டுகிறாள் என்றால் ஏதாவது ஒரு முக்கியமான விஷயமாகத் தான் இருக்கும்! வயசுக்கு வந்த பெண் அவள்! நம்மிடம் சொல்லக் கூடாத விஷயமாக இருக்குமோ?..இந்த டீன்ஏஜில் தான் அவர்கள் உணர்வுகளை புரிந்து செயல் பட வேண்டியது நம் போன்ற பெற்றோர் கடமை!….ரத்தினம் ரஞ்சிதாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், அவளை அறியாமல் உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.

அன்று ரஞ்சிதாவின் நெருங்கிய தோழி கோகிலா வீட்டிற்கு வந்திருந்தாள். கோகிலாவுக்கும் பதின்நான்கு வயசு தான் ஆகிறது. அவளுக்கு வயசுக்கு மீறிய வளர்ச்சி.

பார்க்க லட்சணமாக இருப்பாள். இருவரும் இந்த வருடம் ‘டென்த் ஸ்டேண்ட்டு’ ஒரே ஸ்கூலில் படிக்கிறார்கள் வகுப்பு மட்டும் வேறு வேறு.

இருவரும் நெருங்கிய தோழிகள்! எப்பொழுதும் மனம் விட்டு பேசிக் கொள்வார்கள்!

கோகிலா வந்தவுடன் இருவரும் ரஞ்சிதாவின் ரூம் கதவைச் சாத்திக் கொண்டு ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ கோகிலா!….. எனக்கு வர வர ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கலையடி!…..”

“ ஏண்டி?..”

“உனக்குத் தெரியாதா?…வர வர அவர் தொந்தரவு தாங்க முடியலடி!….”

“ என்னடி பண்ணறது….இதை எல்லாம் எப்படி வெளியில் சொல்லறது?..அவர் ரொம்ப புத்திசாலி…நாம ஏதாவது சொன்னா பிரச்னையை நம்ம மேலேயே திருப்பி விட்டாலும் விட்டு விடுவார்…அது தான் என்ன செய்யறது என்று எனக்கும் தெரிய வில்லை!…”

“அது தான் எனக்கும் பயமா இருக்கு…எதையாவது சாக்கு வைத்து என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசுகிறார்…நேற்று என்னை பிராக்டிகல் கிளாசில் எதையோ தப்பா செய்து விட்டேன். என்று சொல்லி அதைப் போய் சரி செய்திட்டு வா..என்று என்னை ‘லேப்’ பிற்குத் போகச் சொன்னார். நான் ‘லேப்’பிற்குப் போனேன். அவரும் பின்னாலயே வந்து நெருக்கமா உரசிப் கொண்டே, என் கைகளைப் பிடித்து ஏதோ சொல்லிக் கொடுப்பது போல் பாவனை காட்டினார். நான் முறைத்துப் பார்த்தேன்.

உடனே அவர் “உனக்கெல்லாம் எத்தனை தடவை சொல்லிக் கொடுக்கிறது? படிப்பில் கவனம் இருந்தால் தானே?…” என்று சயின்ஸ் பாடத்தில் எதையோ கேட்கத் தொடங்கி விட்டார். நான் பேசாமல் ‘லேப்’பில் இருந்து வெளியில் வந்து விட்டேன்…குட் டச்’சுக்கும் ‘பேட் டச்’ சுக்கும் கூட நமக்கு வித்தியாசம் தெரியாதாடி?….”

“ஆமாண்டி….. அந்த சயின்ஸ் மாஸ்டர் எமகாதகனடி! லட்சணமா இருக்கிற எல்லாப் பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வதாச் சொல்லறாங்க! நீ எதாவது சொல்லப் போக அவர் நீ தான் அதற்கு அலைவது போல் கதையைத் திருப்பி விட்டாலும் விட்டு விடுவான்!.. அப்பாவி மாதிரி மற்ற டீச்சர்களிடம் எல்லாம் நடித்துக் கொண்டு பெண்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறான். அதனால்…அவன் சொல்வதை மற்றவர்கள் நம்பினால் நாம் என்ன செய்வது?….”

“ ஆமாண்டி இது விஷயத்தில் நல்லா யோசித்து தான் நாம எதையும் செய்ய வேண்டும்….கூட படிக்கிற பசங்களா இருந்தா போகிற போக்கில் நாமே சமாளித்து விடலாம்…நம்ம மாதிரி பொண்ணுக இந்த மாதிரி ஆசிரியர்களிடம் சிக்கிக் கொண்டால் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பல இடங்களில் அசிங்கப் பட்டு விடுகிறார்கள்!……அதுமட்டுமில்லையடி! வேண்டுமென்றே என் சயின்ஸ் பேப்பரில் மார்க்குகளைக் குறைத்துப் போடுகிறார்…அதை எல்லாம் கூட நான் பொறுத்துக் கொண்டேன்….ஆனா …இப்ப .என்னை மற்றவர்கள் முன் கேவலமாப் பேசி என்னை அவமானப் படுத்தும் முயற்சியில் ஈடு படுகிறார்,,,”

“ரஞ்சிதா!…இந்த புனிதமான ஆசிரியர் பணிக்கு வந்தவங்க புத்தி ஏன் இப்படி மட்டமா இருக்கு?”

“ நேற்று நடந்ததை மட்டும் நான் எங்கப்பாவிடம் சொன்னா பெரிய பிரச்னை ஆகி விடும்.. அவர் ரொம்பக் கோபக்காரர் என்பது தான் உனக்குத் தெரியுமே?….”

“ அப்படி என்ன தான் நடந்தது?..”

“ நேற்று சயின்ஸ் வகுப்பு….ஆபிஸ் சர்க்குலரை ஆசிரியரிடம் கொடுக்க ஒரு அட்டெண்டர் எங்க வகுப்பறைக்கு வந்தான். அவனுக்கு இருபது வயசிருக்கும், நான் கிளாஸ் ரூமில் முன் வரிசையில் உட்கார்ந்திருப்பது தான் உனக்குத் தெரியுமே! அவன் வகுப்பறையிலிருந்து வெளியே போகும் பொழுது, என் பென்சில் தவறி கீழே விழுந்து உருண்டு போனது. அதை பார்த்த அந்த அட்டெண்டர் கீழே கிடந்த அந்தப் பென்சிலை எடுத்து என்னிடம் கொடுத்தான்.

நான் அதை வாங்கிக் கொண்டு “தேங்ஸ்!” என்று சொன்னேன்! உடனே நம்ம சயின்ஸ் மாஸ்டர் “ஒரு வயசு பையன் போனால் கூட விட மாட்டீங்களே!…வயசுக்கு வந்திட்டா எதற்குத் தான் இப்படி அலையறீங்களோ!..” என்று சொன்னார்.

சிலர் சிரித்து விட்டார்கள்! எனக்கு உயிரே போய் விட்டது! இதை மட்டும் எங்கப்பாவிடம் நான் வந்து சொன்னால் நம்ம ஸ்கூலுக்கு ஒரு நாள் லீவு விட வேண்டி வந்திருக்கும்…எங்க அப்பா குணம் தான் உனக்கும் தெரியுமே!.”

“ அந்தக் காலத்தில் ஆசிரியரை குரு என்று சொல்லுவாங்க….. குருகுலத்தில் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பவர்களே குரு தான்! அதனால்தான் மாதா, பிதா குரு தெய்வம் என்று சொன்னாங்க!

இந்தக் காலத்தில்..ஆசிரியர் வேலை படிப்புக்கும் லஞ்சம்….வேலைக்கு வருவதற்கும் லஞ்சம்…அதனால் தான் அந்த புனிதமான பதவிக்கு பல கழிசடைகளும் பொறுக்கிகளும்……..வந்திடறங்க!…நல்ல மாணவர்கள் தான் ஒரு நாட்டின் எதிர் காலம்…. என்பதை உணர்ந்து அரசு ஆசிரியர் பணிக்குத் ஆட்கள் தேர்வு செய்யும் பொழுது போதுமான அக்கறை காட்டுவதில்லை! அதன் விளைவு தான், இது! பத்திரிகைகளில் சிறுமிகளைப் பற்றிய பாலியல் பலாத்கார செய்தி வந்தால் அதில் கூடவே ஆசிரியர்கள் பெயர்களும் சேர்ந்தே வருது! அரசாங்கம் தான் இதை எல்லாம் புரிந்து, ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆசிரியர் பணிக்கு ஆள் எடுக்க வேண்டும்! இதை எல்லாம் யோசித்து, யோசித்து எனக்கும் கவலை அதிகமாகி விட்டது!…”

“ நீ ரொம்ப கவலைப் படாதே! எங்க குல தெய்வத்திடம் நம் பிரச்னையை தீர்த்து வைக்கும் படி நான் வேண்டியிருக்கிறேன்!…எங்க குல தெய்வம் ரொம்ப சக்தி வாயந்தது… நம்பிக்கையா இரு….நம் பிரச்னையும் சீக்கிரம் தீர்ந்து போய் விடும்!..”

அதற்குள் கதவை யாரோ விடாமல் தட தட வென்று தட்டினார்கள்! எழுந்து போய் கதவைத் திறந்தாள் ரஞ்சிதா.

வெளியே ரஞ்சிதாவின் அப்பா நின்று கொண்டிருந்தார்.

“ அப்பா!…வந்து ….வந்து….”

“என்னம்மா…வந்து போயி!….நீங்க பேசதறதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்!….நீ உங்கப்பாவைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது இவ்வளவு தானா?….நான் அநியாயத்தைக் கண்டு பொறுக்காத முரடன் தான்!…ஆனால் சிந்திக்கத் தெரியாதவனல்ல!…நீங்க பேசியதைக் கேட்ட பொழுது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது…இந்தக் காலத்துக் குழந்தைகள்

வயசுக்கு மீறி சிந்திக்கிறீங்க………எங்க காலம் மாதிரி இல்லே! உங்களுக்கு அறிவு அதிகம்! நீங்க பேசறதிலிருந்தே அதைப் புரிந்து கொண்டேன்!

ஆனா நீ தான் உங்க அப்பாவை இன்னும் சரியாப் புரிந்து கொள்ள வில்லை கண்ணு!…நீ வயசு வந்த பொண்ணு… உன்னைப் பற்றி தேவையில்லாமே மற்றவர்கள் பேசும்படியா இந்த அப்பா செயல் படுவார்?….தப்படா கண்ணு! அம்மாவா இருந்தாக் கூட மனசு கேட்காம யாரிடமாவது புலம்பி விடுவா…..அப்பா அப்படி அல்ல!…… இன்னும் ஒரு படி மேலே போய் சிந்திப்பார்! வயசு வந்த தன் பெண் பேரில் எந்த அவ பெயரும் வந்திடக் கூடாது!… சமுதாயத்தில் தன் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா யாரும் பேசி விடக் கூடாது என்பதிலும் ரொம்ப கவனமா இருந்து செயல் படுவாங்க!…அதனால் தான் அப்பானா பல பெண் குழந்தைகளுக்கு கொஞ்சம் முரடா தெரியுது! அப்பாவுக்கு வெளிப்படையா பாசத்தைக் காட்டத் தெரியாது!… அதனால் பாசம் இல்லாதவன் என்று நினைத்துக் கொள்கிறாங்க!….அவர்கள் பாசத்தில் பெண் குழந்தைகளின் மானத்தையும், கௌரவத்தையும் சேர்த்துப் புதைத்து வச்சிருக்காங்க!…….அம்மா பாசத்திற்காக உயிரையே விடுவா….ஆனா அப்பா தன் உயிரை விட்டாவது தன் பெண்ணோட மானத்தையும், குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றுவார். அதற்கு பங்கம் வரும் பொழுது சில அப்பாக்கள் ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொள்வாங்க!….வயசு பொண்ணுங்க அப்பாவைப் புரிந்து கொண்டு, தங்களுடைய ஆசையையும் எண்ணத்தையும் தாராளமா தங்களைப் பெற்ற அப்பாவிடம் முதலில் சொல்ல வேண்டும்!….எந்த அப்பாவும் தன்னோட பெண்ணின் நியாயமான ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டாங்க!.பருவத்தில் நீங்க சந்திக்கும் கஷ்டமான எந்த பிரச்னையா இருந்தாலும் அப்பாவிடம் நீங்க கலந்து பேசிட்டா அதுவே உங்களுக்கு யானை பலம்!..

காலம் ரொம்ப கெட்டுப் போச்சு! ..ஸ்கூலுக்குப் போகும் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு இப்படி எல்லாம் கூட தொல்லைகள் இருக்கும் என்று இன்று எத்தனை தாய்மார்களுக்குத் தெரியும்? பொண் குழந்தைகள் இது மாதிரி விஷயங்களை முதலிலே பெத்த அம்மா கிட்டத் தான் முதலில் சொல்ல வேண்டும்…..அவங்க வயசுக்கு இது மாதிரி விஷயங்களில் நிறைய அனுபவப் பட்டிருப்பாங்க!….அதை .எப்படி டீல் பண்ண வேண்டும் என்று அவங்களுக்கும் தெரியும்…பிரச்னை பெரிசாக இருந்து அவர்களால் தீர்க்க முடியாதென்று தோன்றினால், தேவையானதை மட்டும் குடும்பப் பெண்கள் வீட்டு

7

ஆண்களிடம் கொண்டு போவாங்க!..நல்ல வேளை என் காதில் இப்ப விஷயம் விழுந்து விட்டது!………இனி நீங்க உங்க கவலையை மறந்து சந்தோஷமா

இருங்க!…இன்னும் நாலே நாட்களில் உங்கள் பிரச்னை எல்லாம் தீர்ந்து போயிடும்…….நீங்க நிம்மதியா ஸ்கூலுக்குப் போங்க!…நான் பார்த்துக் கொள்கிறேன்!…”

“ எப்படியப்பா…அவ்வளவு உறுதியாச் சொல்லறே?…”

“ இன்னும் ஒரு வாரம் பொறுத்து வந்து கேள்!..சொல்கிறேன்!…” என்று சிரித்துக் கொண்டே போய் விட்டார்!

அடுத்த வாரம்.

சயின்ஸ் மாஸ்டர் யாரிடமும் மூச்சு விடாம தன் ஆசிரியர் வேலையை ரிசைன் செய்து விட்டு, வேறு எங்கோ தொழிற்சாலை வேலைக்கு அலைந்து கொண்டிருப்பதாக கேள்வி!

ஞாயிற்றுக் கிழமை.

காலை டிபன் வேளை. டைனிங் டேபிளில் ரஞ்சிதாவுக்குப் பிடித்தவைகளை வழக்கம் போல் அவள் தட்டில் எடுத்து போட்டுக் கொண்டே இருந்தார் ரத்தினம்.

“ அப்பா!…. நீங்க சொல்ல விட்டால் நான் எதையும் சாப்பிட மாட்டேன்!….” என்று தட்டை தள்ளி விட்டு சிணுங்கினாள் ரஞ்சிதா.

“ எதைச் சொல்ல வேண்டும்?…”

“ நீங்க எங்க ஸ்கூல் பக்கம் கூட வரலே!…எப்படி இந்த மாறுதல்?..”

“ அதுவா?…. என் பிரண்ட் ராஜா ராமன் I.P.S. தான் நம்ம மாவட்ட எஸ்.பி. அவன் ஒரு டெரர்…அவன் ராமநாதபுரத்தில் எஸ்.பி. ஆக இருந்த பொழுது தான் நாலு என்கௌண்டர் நடந்து பெரிய பரபரப்பு ஏற்பட்டது…. ஏதோ காரணம் சொல்லி உங்க சயின்ஸ் மாஸ்டரைக் கூப்பிட்டு விசாரணை செய்தானாம்! அவன் விசாரணை ‘ஒரு மாதிரி’ இருக்கும்!..எப்படியோ உங்க பிரச்னை தீர்ந்து போச்சு!…இனி பேசாம…..அவரவர் வேலையைப் பாருங்க!..” என்றார் ரத்தினம் சிரித்துக் கொண்டே!

– பாக்யா ஏப்ரல் 21-27 2017 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *