சபரிநாதனின் கொக்கரிப்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 5,789 
 
 

(இதற்கு முந்தைய ‘காந்திமதியின் சீற்றம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

பத்துமணி ஆனதும் கிளம்பலாம் என்ற எண்ணத்தில் ஜன்னல் வழியாக தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார். பஞ்சாயத்துக் கூட்டம் பத்துமணிக்கு என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒன்பது மணிக்கே அரச மரத்தின் கீழ் கூட்டம் திரண்டு கிடந்தது. எல்லோரும் எல்லோரையும் சந்தேகப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுப்பையாவும் பொழுது விடிந்ததும் பெருமாள் கோயிலுக்குப் போய்விட்டு சீக்கிரமகாவே அரச மரத்தடிக்கு வந்து சேர்ந்து விட்டான். சபரிநாதன் கூட்டத்திற்கு வருகிற அறிகுறி தெரிகிறதா என்று சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான். ராஜலக்ஷ்மி மட்டும்தான் தயங்கித் தயங்கி வந்து கொண்டிருந்தாள்.

யாரும் அறியாமல் அவளும் சுப்பையாவும் ஒரு ரகசியப் பார்வை பார்த்துக் கொண்டனர். சரியாக ஒன்பதரை மணிக்கு காந்திமதி அவளுடைய அப்பாவுடன் வீட்டில் இருந்து தீக்குளியில் இறங்கப் போகிற மாதிரியான பக்தி போதையுடன் கிளம்பி ஓடுகிற வேகத்தில் நடக்கத் தொடங்கினாள். திறந்து கிடந்த சபரிநாதனின் வீட்டை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டே அவள் நடந்து போனதை சபரிநாதன் ஜன்னல் வழியாக இரையை கவனிக்கும் வனவிலங்குபோல் பார்த்துக்கொண்டிர்ந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தெருவில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி விட்டது. சபரிநாதன் மெதுவாக வாசலுக்கு நகர்ந்துபோய் தெருவை எச்சரிக்கை உணர்வுடன் கவனித்தார். தெருவே காலியாகத்தான் கிடந்தது. யாருடைய வீட்டிற்குள்ளேயும் கூட நடமாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. எவர் கண்ணிலும் தான் படப்போவதில்லை என்பது அவருக்கு நிச்சயமானது. வீட்டுக்கதவை வெறுமே சாத்தினார். விடு விடுவென்று தெருவில் இறங்கி திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே படித்துறைய நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார். பின் படித்துறையை ஒட்டிய அடர்ந்த மரங்களின் நடுவே பதைபதைப்புடன் ஓடினார்.

அந்த நேரம் பார்த்து அவரை அடையாளம் கண்டுகொண்ட ஒரு காக்கை விடாமல் கத்தியவாறு அவரின் தலைக்குமேல் சுற்றி சுற்றிப் பறந்து சபரிநாதனின் கோபத்தை அதிகமாக்கியது. தலையில் துண்டைப் போட்டுக்கொண்டபடி நடையை வேகமாக எட்டிப் போட்டார்,

ரொம்ப தூரம் நடந்த பிறகு பெரிய பெரிய மரங்களுக்கு அப்பால், அரச மரத்தடியும் கூடிக்கிடந்த ஊர் ஜனமும் சபரிநாதனின் பார்வையில் பட்டது. இனி அவர் நிமிர்ந்த வாக்கிலேயே நடந்து கொண்டிருக்க முடியாது. அவர் யாருடைய கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. அதனால் நன்றாகக் குனிந்து தலையில் துண்டுடன் விரைந்தார்.

பஞ்சாயத்துத் தலைவர் மாத்திரம் இன்னும் கூட்டத்திற்கு வந்தபாடில்லை. அதனால் அரச மரத்தடியில் பேச்சும் சப்தமுமாக இருந்தது. சபரிநாதன் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருந்தார். கல்லும் மண்ணும் காய்ந்த குச்சிகளும் அவருடைய பாதங்களையும் முழங்கால்களையும் பதம் பார்த்தன. சட்டென அரச மரத்தடியில் பேச்சுச் சப்தங்கள் அடங்கிப்போனது. சபரிநாதன் லேசாக தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தார். தலைவரும் துணைத் தலைவரும் வந்து உட்கார்ந்திருந்தார்கள். பெரிய தாழம்பூ புதரின் பின்னால் பதுங்கிக்கொண்டு கூட்டத்தை உற்று நோக்கினார். வெயில் உக்கிரமாகத் தகித்தது. மூச்சு வாங்கியது. வியர்வையில் உடம்பு தெப்பமாகி இருந்தது.

பஞ்சாயத்து தலைவரின் குரல் கணீரென்று கேட்டது. சில சம்பிரதாயமான வார்த்தைகளைப் பேசிவிட்டு “சபரிநாதன் அண்ணாச்சி வரலையா?” என்று தலைவர் கேட்பதும், அதற்கு ராஜலக்ஷ்மி “ஒடம்பு சரியில்லை அவங்களுக்கு” என்று பதில் சொல்வதும் சபரிநாதனின் காதுகளில் விழுந்தது.

“சுப்பையா தம்பி…” பஞ்சாயத்துத் தலைவர் குரலை உயர்த்திக் கூப்பிட்டார். தன்னையே கூப்பிட்ட மாதிரி சபரிநாதன் அவருடைய பெரிய மண்டையை உயர்த்திப் பார்த்தார். சுப்பையா எழுந்து நின்று கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்துவிட்டு பின்பு நிதானமாக “கோட்டைசாமி மக காந்திமதி” என்று கூப்பிட்டார்.

கூட்டம் இதை எதிர்பார்க்காததால் காந்திமதி எழுந்து நின்றதும் திகைத்து விட்டது. சுப்பையாவும் திகைத்துப்போய் காந்திமதியைப் பார்த்தான். அவளைப் பார்த்ததும் சபரிநாதன் அநியாயத்துக்கு குழம்பிப் போனார். உண்மையை தெரியப்படுத்தப் போவது சுப்பையாவாக இருக்க முடியாதென்று நிச்சயமாகத் தெரிந்தது அவருக்கு. அப்படியானால் கடைசியில் நிஜத்தை வெளியிடப்போவது இந்த அறுதலி சிறுக்கியா என்ற எண்ணம் தோன்றிய மாத்திரத்தில் சபரிநாதனின் கண்கள் ரத்தச் சிவப்பாகின. கோபத்தை தாங்க முடியாமல் அவருடைய பெரிய மண்டை யானையின் மண்டையைப் போல அப்படியும் இப்படியுமாய் ஆடியது. மேட்டு விழிகள் உயர்ந்து நின்றது. மற்றொரு வன்முறையைப் பாய்ச்ச அவரின் உடம்பில் இருந்து ஒருவித அனல் வீச்சு கனலாகக் கனன்று கொண்டிருந்தது.

பஞ்சாயத்து விசாரணையை நேரிடையாகவே தொடங்கி விட்டது. ஊர் சட்டத்திற்கு ஏற்ப முப்பிடாதி அம்மன் பெயரில் சூடம் அணைத்து, தான் சொல்லப் போவதெல்லாம் உண்மையென்று சத்தியம் பண்ணிவிட்டு காந்திமதி சுருக்கமாக வாக்குமூலம் கொடுத்தாள்….

“அன்னிக்கி நட்ட நடு ராத்திர்யில வீட்டுக்குள்ள ரொம்பப் புழுங்கி புழுங்கி ஒரே வேக்காடா இருந்திச்சி. கொஞ்சநேரம் வெளித்திண்ணையில காத்தோட்டமா படுத்துக் கெடந்து வந்துட்டு உள்ளார வந்து படுக்கலாம்னு வாசல் கதவைத் தெறந்தேன். கதவைத் தெறன்தவ அப்படியே மலைச்சிப் போய் நின்னுட்டேன். சபரிநாத அண்ணாச்சி சுப்பையா அண்ணன் பைக்குக்கு பக்கத்ல நின்னுட்டு இருந்தாங்க… இந்த நேரத்ல இங்கன எதுக்கு நிக்குறாங்கன்னு எனக்கு ஒருமாதிரியா சந்தேகம் வந்திருச்சி. நல்லா ஒளிஞ்சி நின்னுக்கிட்டுப் பாத்தேன் சபரிநாத அண்ணாச்சி திடுதிப்புன்னு பைக்குல தீயை வச்சிட்டு வீட்டுக்குள்ள ஓடியே போயிட்டாங்க… நான் நடுங்கிப் போயிட்டேன் நடுங்கி. நானும் சத்தமில்லாம வீட்டுக்குள்ள போயி கண்ணை மூடிப் படுத்துக்கிட்டேன்…”

“இதை நீ ஒங்க வீட்ல யார்கிட்டேயும் சொல்லலையா?”

“சொல்லலை”

“இவ்வளவு பெரிய விசயத்தை எதனால நீ வீட்ல சொல்லலை?”

“எங்க வீட்ல யார்கிட்ட சொன்னாலும் அடுத்த நிமிசமே அது ஊர்பூரா பரவிடும்… அந்தப் பயத்லதான் சொல்லலை.”

“பரவினா என்ன நெசத்தைத்தானே சொல்றே?”

“நெசத்தைதான் சொல்றேன். இருந்தாலும் நான் பாத்ததுக்கு வேற சாட்சியமே கிடையாதே? அதனால நிரூபிக்க முடியாம போய் எனக்கு வில்லங்கம் எதுவும் வந்திட்டா?”

“பெறவு எந்த தைரியத்ல இத்தனை நாள் கழிச்சி திடீர்ன்னு சொல்றதுன்னு முடிவு செஞ்ச?”

“சாட்சி இல்லாட்டியும் போவுது. மனசாட்சி இருக்கே எனக்கு? அதான் தைரியமா சொல்லலாம்னு முடிவு செஞ்சேன்… பொய் பேசலை நான்… சபரிநாதன் அண்ணாச்சிதான் தீ வச்சாங்க.”

“நாளைக்கி போலீஸ்ல கேட்டா பயப்படாம இதைச் சொல்லுவியா?”

“தாராளமா சொல்றேன்…”

கூட்டம் மூச்சுவிட மறந்துபோய் காந்திமதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த உண்மையை யாருமே எதிர் பாராததால் திகைப்பில் உறைந்து போயிருந்தார்கள். ராஜலக்ஷ்மி கண்களை மூடியவாறு ஒருவித விம்மலுடன் இருந்தாள். நேராக ஓடிப்போய் பெருமாள் சந்நதியில் விழவேண்டும் போல இருந்தது. சுப்பையா திருப்தியை முகத்தில் காட்டிக்கொண்டு விடாமல் கவனமாக நின்று கொண்டிருந்தான். அவனுடைய பங்கோ, ராஜலக்ஷ்மியின் பங்கோ இல்லாமலேயே வேறொரு திசையில் இருந்து உண்மை மிக எளிதாக தெரியப் படுத்தப்பட்டு விட்டது.

ஏற்கனவே அளவு கடந்த மனவேகத்தில் இருந்த சபரிநாதன் இந்தத் திசை மாற்றத்தில் இன்னும் பலத்த புயல் வேகத்திற்கு ஆளாகி பயங்கரமாக கொந்தளிப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. அப்படியே அவர் கொந்தளித்தாலும்கூட அது காந்திமதியை நோக்கித்தான் திரும்பும். சுப்பையாவுக்கோ ராஜலக்ஷ்மிக்கோ இதில் அபாயம் இல்லை. இருந்தாலும்கூட இப்போது இருக்கிற சூழ்நிலையில் சபரிநாதன் காந்திமதியின் மேலும் நேரிடையான தாக்குதல் எதையும் காட்டிவிட முடியாது.

சிக்கல்கள் களைந்துவிட்ட புத்துணர்வுடன் சுப்பையா ராஜலக்ஷ்மியைப் பார்த்தான். கூட்டத்தினரின் மொத்தப் பார்வையும் ராஜலக்ஷ்மியின் மேலேயே பதிந்திருந்ததால் சுப்பையா அவளைப் பார்த்த பார்வையின் தனித்தன்மையை யாரும் கவனிக்கவில்லை. ஆனால் காந்திமதிக்கு மட்டும் சுப்பையாவின் பார்வையின் பொருள் புரிந்து ஒருநிமிஷம் அவளைப் பொரும வைத்தது. வேறு வழியில்லாமல் காந்திமதி மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

தொடர்ந்து பஞ்சாயத்துக்காரர்களும் வேறுசில பெரியவர்களும் காந்திமதியை மாற்றி மாற்றி குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தபோது சபரிநாதன் தாழம்பூப் புதரிலிருந்து கிளம்பிவிடத் தயாராகிவிட்டார். இனிமேல் தான் தப்பமுடியாது என்கிற உண்மை அவருடைய நீர்த்துப் போயிருந்த மனநிலைக்கும் புரிந்தது. கடைசியில் அவருக்கு எமன் இந்த அறுதலி நாய்! ஒரு காலத்தில் எந்த நிமிஷமும் அவருக்கு முந்தானை விரிக்கத் தயாராக இருந்த சிறுக்கி மகள்தான் இப்போது முந்தானையை அவருக்கு எதிராக இழுத்துச் செருகியிருக்கிறாள்! கொடுமை!!

இனியும் தாமதம் செய்யக்கூடாது. ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். எப்படியும் இன்னும் அரைமணியில் அவரைக் கூப்பிட வீட்டுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். யோசித்துப் பார்க்கத் தெரியாமல் சபரிநாதன் தப்புப் பண்ணிவிட்டார். சிங்கம்போல ஊர்க்கூட்டத்திற்கு அவரும் போயிருக்க வேண்டும். இத்தனை நாள் கழித்து ஏதோவொரு உள்நோக்கத்தோடு காந்திமதி தன்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறாள் என்று துண்டைப் போட்டு தாண்டியிருக்க வேண்டும். அநியாயமாக அந்த வாய்ப்பை இழந்துவிட்டார். ஊரைவிட்டே ஓட்டம் பிடிப்பதைத் தவிர, இனி எதுவும் செய்யமுடியாது அவரால்…

வேட்டியை டப்பாக்கட்டு கட்டிக்கொண்டு மரங்கள் அடர்ந்த அதே பகுதியின் வழியாகவே சபரிநாதன் திரும்பி வேகமாக ஓடினார். பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஓடினார். உடம்பைவிட அவரின் மனம் பயங்கர வேகத்தில் பாய்ந்தோடியது. சிலநிமிடங்களில் அவருடைய தெருவை அடைந்துவிட்டார். தெரு இன்னமும் உயிரற்றுப்போய்க் கிடந்தது. இந்தத் தெருவையும், வீட்டையும், ஊர்க்காரர்களின் கண் பார்வையை விட்டும் ஓடிப்போய் விடுவதுதான் உத்தமம்.

தான் ஒரு குற்றவாளியாக யார் முன்னால் நிற்பதும் முடியவே முடியாத காரியம். பூர்வீக வீட்டையும் உருண்டு விளையாடி உருவான தெருவையும் சபரிநாதன் ஏக்கத்துடன் பார்த்தார். ஒருவிதமான அச்சுறுத்தல் போல சுப்பையாவின் புதிய மோட்டார் பைக் அங்கு நின்று கொண்டிருந்தது. எரிந்துபோன பழைய பைக்கும் பக்கத்தில் நின்றது. இதற்கு நெருப்பு வைக்கப்போய்தானே அவர் குற்றவாளியாக நேர்ந்தது…? ஊருக்கும் தண்டனைக்கும் அவமானத்துக்கும் பயந்துதானே கண்மறைவாக ஓடித்தொலைய வேண்டிய கட்டாயம்? சுப்பையாவின் புதிய மோட்டார் பைக்கின்மேல் காறித்துப்பினார். எட்டி அதை ஒரு உதை உதைத்தார். இது போதவில்லை அவருக்கு.

ஓடிப் போய்விடும் முன், இன்னொரு குற்றத்தையும் செய்துவிட அவரின் மனம் பரபரத்தது. சிவந்த மேட்டு விழிகளால் புதிய மோட்டார் பைக்கைப் பார்த்தார். அவருடைய உணர்வுகள் கொக்கரித்தன. சூழ்நிலை அவரின் அடுத்த குற்றத்திற்கு துணையாக இருந்தது. விரைந்துபோய் வீட்டுக் கதவை காலால் உதைத்துத் திறந்தார். உதைக்கப்பட்ட வேகத்தில் கதவு சுவரில் மோதி ஓசையுடன் ஆடியது.

மிகுந்த உக்ரத்துடன் ஊஞ்சலையும் ஒருகையால் பற்றிக் குலுக்கித் தள்ளினார். அதே வேகத்தில் திரும்பி புதிய மோட்டார் பைக்கை நோக்கி கையில் ஒரு தீப்பெட்டியுடன் நெருங்கினார். அப்போது வெகுதூரத்தில் ஏழெட்டுப் பேர் அவருடைய வீட்டை நோக்கி கிளம்பி வந்து கொண்டிருந்தனர். சபரிநாதன் பெட்ரோல் பங்கின் மூடியைக் கழற்றி வீசி எறிந்தார். சிலநொடிகள் பைக்கை வெறியுடன் வெறித்துப் பார்த்துவிட்டு அதற்கும் தீ வைத்தார். அடுத்த கணம் குபீரென்று செந்தீ உயர்ந்து எரிந்தது.

வன்ம களிப்பு பொங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தார். நெருப்பைப் பார்த்துவிட்ட தூரத்து மனிதர்கள் வேகமாக ஓடிவர ஆரம்பித்து பெரும் கூச்சலும் போட ஆரம்பித்தார்கள். வேட்டியை தூக்கி மடித்துக்கட்டிய சபரிநாதன் அவரின் வீட்டிற்குள் பாய்ந்தோடி கதவைப் படாரென்று சாத்தி தாளிட்டுக் கொண்டார்…

Print Friendly, PDF & Email

1 thought on “சபரிநாதனின் கொக்கரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *