(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், வந்து சாப்பிட்டுட்டுப் போங்க’ வார்த்தைகளை வெறுப்பாக்கி அழைத்தாள் மீனா.
‘என்ன மீனா, ஏன் கொஞ்சநாளாவே ஒரு மாதிரியாக இருக்கே, என்ன விஷயம்?’ மீனாவிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்காத குமார், வயிற்றை அரை குறையாக நிரப்பி ஆபிஸுக்குப் புறப்பட்டான்.
மீனாவுக்கு திருமணம் முடிந்து சரியாக இரண்டு வருடம் ஆகியிருந்தது. அவளின் கணவன் குமார் ஒரு கம்பெனியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தான். வேலையில் மாற்றல் நிமித்தமாக நாகப்பட்டினத்திற்கு புதிதாக தனிக் குடித்தனம் வந்திருந்தார்கள்.
தனக்கு மனம்போல மாங்கல்யம் அமைந்துவிட்டதில் மீனாவுக்கு எப்போதுமே மனதிற்குள் பெருமை நிறைந்திருந்தது குமாரின் உயர்ந்த பழக்க வழக்கங்கள். பண்பு, பேசும் திறமை எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.
அவர்களது வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் புயல் வீசத் தொடங்கியது. குமாரின் ஆபிஸில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் ஸ்டெனோவுடன் குமார் நன்றாகப் பழகுவதாக, மீனாவுக்கு கிடைத்த செய்திதான் புயலின் ஆரம்பம்.
குமார் முன்பைவிட இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனது செயலிலும் சிறு மாற்றங்கள் தெரிந்தது. புதிதாக உள்ள ஸ்டெனோவுடன் ஏற்பட்ட பழக்கத்தின் தாக்கம் தான் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது!
நாளாக நாளாக குமாரைப் பற்றி கிசுகிசுக்கள் ஆபிஸ் வட்டாரத்தில் வளர்ந்து, அது மீனாவின் காதுக்கும் எட்டிக் கொண்டிருந்தது.
மீனாவுக்கு செய்தி எட்ட எட்ட கணவனின் மேல் சந்தேகம் வலுப்பெற்று, அதனால் வெளிப்படும் கோபத்தை தினமும் வார்த்தைகளில் கரித்துக் கொண்டிருந்தாள்.
இதற்கு மேலும் மீனாவால் பொறுக்க முடியவில்லை.
‘என்னங்க, நீங்க புதுசா வந்திருக்கிற ஸ்டெனோவுடன் பழக்கம் வெச்சிருக்கீங்களாம். ஊரெல்லாம் பேசிக்கிறாங்க, இங்கே நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டீங்களா?’ சந்தேகத்தை கோபமாக வெடித்தாள்.
‘ஆமா மீனா, நான் அந்தப் பெண் கூட பாசமுறையிலே தான் பழகறேன். வீணா என் மேலே சந்தேகப்படாதே!’ குமார் சொல்லிக் கொண்டிருந்தான்.
‘பொம்பளை கூட பழகறீங்க, எப்படி சந்தேகப்படாம இருக்க முடியும்?’ எதிர் கேள்வி கேட்டாள்.
‘சொல்றேன் கேள். நமக்கு கல்யணம் ஆகிறதுக்கு ரெண்டு வருஷத்து முன்னாடி என் தங்கச்சி விபத்திலே இறந்துட்டாள்னு உனக்கு தெரியுமில்லே, இறந்து போன என் தங்கச்சி மாதிரியே புதுசா வந்திருக்கிற ஸ்டெனோவும் இருக்கிறதுனால, பழசெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து மனசு சுமையாயிடுது. அடி மனசின் சுமைகளை, கவலைகளை போக்கத்தான் நான் அவள் கூட அண்ணன் என்கிற முறையிலே பழகறேன் இப்போ புரிஞ்சிக்கோ!’ குமார் சொல்லி. முடித்தான்.
‘இப்படிப்பட்ட உத்தமமான உங்களையா நான் சந்தேகப்பட்டேன்! என்னை மன்னிச்சிடுங்க’ சொல்லிக் கொண்டே குமாரின் மார்பில் சாய்ந்தாள் மீனா.
இப்போது அவன், அவளது மனதில் முன்பைவிட இன்னும் நிறைவாக இருந்தான்!
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்