சந்திரவதனா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 6,241 
 
 

சியாமளாவுக்கு இது ஒரு வித்தியாசமான புதிய தலைவலி. அவளுக்கு இதை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. கணவனிடம் சொன்னால் அவன் இதை பெரிது படுத்தி சுதர்சன் சாரிடம் பெரிதாக சண்டைக்குப் போவான். அசிங்கமாகி பெரிய தகராறில் சென்று முடியும்.

விஷயம் இதுதான்…

சியாமளா தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் அந்தப் பிரபல தனியார் நர்சரி பள்ளியில் க்ளாஸ் டீச்சர். கடந்த ஒரு வருடமாக நல்லாத்தான் இருந்தது. ஆனால் இந்தப் பள்ளியின் நிர்வாகியாக சுதர்சன் புதிதாகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் அவர் மூலமாக ஆரம்பித்தது அவளுக்கு பாலியல் தொந்திரவு.

சுதர்சனுக்கு முன்பு அவரது மனைவி சந்திரவதனா நிர்வாகியாக இருந்தாள். அவள் முகம் பார்த்துதான் சியாமளா பள்ளியில் சேர்ந்தாள். மிகவும் கெட்டிக்காரி. துணிந்து முடிவு எடுப்பவள். பள்ளியில் அனைவரையும் சமமாகப் பாவித்து மிகுந்த மரியாதை கொடுப்பாள். அப்போதுதான் துபாயில் வேலை பார்த்து வந்த அவள் கணவர் சுதர்சன் வாலன்டரி ரிடையர்ட்மென்ட் வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பி வந்தார். உடனே பள்ளியின் நிர்வாகியாக பதவியில் அமர்ந்து விட்டார்.

தினசரி சியாமளாவிடம் வழியலானார். தினமும் பள்ளிக்கு வந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு, அடிக்கடி சியாமளாவை கூப்பிட்டனுப்பி உப்புச் சப்பில்லாமல் பேசுவார். இப்படிப் பேசுவதில்தான் ஆரம்பித்தது அவரது பாலியல் தொந்திரவு.

அப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, டேபிளின் மீது இருக்கும் வெள்ளைத் தாளை எடுத்து பேனாவால் ஆட்டின் வரைந்து ஒரு அம்புக்குறி போடுவார். கணவர் அன்பாக இருக்கிறாரா? பணம் ஏதாவது வேண்டுமா? உனக்கு இந்தப் புடவை ரொம்ப அம்சம்….என்ன சோப் போடுகிறாய்? என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்.

போகப் போக அவளிடம் ஜொள்ளு விட்டதோடு மட்டும் நில்லாமல், அவளைக் கண்டதும் உருகுவதைப் போல் நடிப்பது, ரசனையுடன் காதல் கடிதங்கள் எழுதிக் கொடுப்பது, கவிதை எழுதிக் கொடுப்பது, அவைகளில் அவள் உடலழகை வர்ணிப்பது என்று ஆண்திமிர் அட்டூழியங்களை ஆரம்பித்துவிட்டார்.

இத்தனைக்கும் அவர் ஐம்பத்தைந்து வயது பெரியவர். இரண்டு மகள்களும் ஒரு மகனும் கல்லூரியில் படிக்கின்றனர். பள்ளியின் நிர்வாகி தனக்கு அப்பா மாதிரி இருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டியவர் இப்படி இருக்கிறாரே ! இவரை எப்படி சமாளிப்பது என்று சியாமளா குழம்பினாள்.

அவள் பணத்துக்காக ஒன்றும் இந்த வேலைக்கு வரவில்லை. வேலையை விட்டு விடலாம்தான்…. ஆனால் தினமும் தன்னிடம் காட்டப்படும் கள்ளம் கபடமில்லாத இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் சிரிப்பும், பாசமும், சியாமி மிஸ், சியாமி மிஸ் என்று உரிமையுடன் அதுகள் தன்னிடம் ஈஷிக் கொள்ளும் வாஞ்சையும்…..கேவலம் சுதர்சன் சாரின் அசிங்கமான நடத்தையால் அவைகளை தான் இழக்க வேண்டுமா என்ன? குறைந்தபட்சம் தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரையிலாவது இந்தக் குழந்தைகளை என் குழந்தைகளாக பாவித்து பாசம் காட்ட வேண்டும். எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த அதிர்ஷ்டம்?

யோசித்தாள்… விதியை நொந்துகொண்டு சும்மா இருப்பதைவிட இவனுக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அன்று திங்கட்கிழமை. அசெம்ளி பிரேயர் முடிந்தவுடன் குழந்தைகள் தத்தம் வகுப்பிற்கு சென்றன. பத்து மணிக்கு முதல் பிரியட் முடிந்ததும் ப்யூன் வந்து “சுதர்சன் சார் உங்களைக் கூப்பிடுதாக” என்றான்.

‘ஓ காட் இன்னிக்கி எப்படியான தொந்திரவு இருக்குமோ !’ சியாமளி எரிச்சலுடன் சுதர்சனின் தனியறைக்கு சென்றாள்.

“வா…சியாமளி ப்ளீஸ் சிட். டார்லிங் உனக்காக இன்னிக்கி ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது.”

குனிந்து டேபிள் டிராயரைத் திறந்து ஒரு பெரிய நகைப் பெட்டியை எடுத்துத் திறந்தார். உள்ளே ஒரு அழகான வைர மாலை மின்னியது.

“துபாய்ல வாங்கியது. இங்க வந்ததும் உன்னைப் பார்த்ததும் இந்த மாலை உனக்குத்தான் பொருத்தம்னு தோணிச்சு சியாமளி. இது உனக்கு என்னுடைய காதல் பரிசு.”

சியாமளா புன்னகைத்தாள். பதில் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

“சியாமளி டார்லிங், நாளைக்கு வரும்போது இந்த மாலையை அணிந்துகொண்டு வரணும்….இது உன் காதலனோட உத்திரவு.”

“கண்டிப்பா சார்…”

“என்னை சார்னு கூப்பிடாத. கால் மி சுதர்ஷ்.” வழிந்தார்.

மதியம் ஸ்கூல் விட்டதும் சியாமளா நேராக தன் வீட்டிற்கு வந்தாள். சுதர்சன் கொடுத்த நகைப்பெட்டி, அவர் தனக்கு எழுதிய காதல் கடிதங்கள், கவிதைகள் அனைத்தையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் பத்திரமாக எடுத்து வைத்து, ஆட்டோ ஒன்றைப் பிடித்து கிளம்பினாள்.

அந்தப் பெரிய பங்களா டைப் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இறங்கிக்கொண்டு காலிங்பெல் அடித்தாள்.

வீட்டைத் திறந்த வேலைக்காரி வடிவு, “வாங்கம்மா செளக்கியமா இருக்கியளா? உக்காருங்க அம்மா மாடில இருக்காவ. வரச் சொல்லுதேன்.”

மாடியேறிச் சென்றாள்.

அடுத்த சில நிமிடங்களில் படிகளில் இறங்கி வந்தாள் சந்திரவதனா.

சியாமளாவைப் பார்த்து புன்னகைத்து “வாங்க, வாங்க என்ன விசேஷம் நம்ம வீட்டுக்கு திடீர்னு வந்திருக்கீங்க?” என்றாள்.

“மேடம்…நான் நம்முடைய கல்வி நிறுவனத்தின் மீதும், உங்க மீதும் மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நான் உங்களைப் பார்த்துதான் நம் ஸ்கூலில் சேர்ந்தேன். ஆனா உங்க ஹஸ்பன்ட் வந்தப்புறம் அவரால எனக்கு பாலியல் தொந்திரவு தாங்கல…..பாருங்க இன்னிக்கி அவர் இந்த வைர மாலையை எனக்கு காதல் பரிசா குடுத்தாரு, இந்த பேப்பர்கள் அனைத்தும் அவர் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள், கவிதைகள்…..ஐயாம் வெரி மச் டிஸ்டர்ப்ட். என் ஹஸ்பெண்ட்டிடம் இதைச் சொன்னால் ரத்தக் களரியில்தான் போய் முடியும். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை மேடம்.”

சந்திரவதனா அதிர்ந்தாள். பிறகு அமைதியாக அந்த நகைப்பெட்டியை வாங்கி பிரித்துப் பார்த்தாள். அந்தக் காதல் கடிதங்களை மேலோட்டமாக படித்தாள்.

பின்பு நிதானமாக, “என்னிடம் மட்டும் இதைச் சொன்னதற்கு மிக்க நன்றி சியாமளா. இன்பாக்ட் இந்த வைரமாலை என் அப்பா எனக்கு வாங்கி கொடுத்தது. நான்தான் இது பீரோவில இருக்க வேண்டாம், பாங்க் லாக்கர்ல வைக்கச்சொல்லி அவரிடம் இன்று காலை கொடுத்து அனுப்பினேன். இந்த நிமிஷத்திலிருந்து அவரை நான் எதற்கும் நம்பத் தயாராக இல்லை.”

“………………”

“நீங்க இனிமே நிம்மதியா நம்ம ஸ்கூலுக்கு போகலாம். இந்த விஷயத்தை பெரிது படுத்தி, எங்கள் குடும்பத்தை அசிங்கப் படுத்தாமல் விட்டு வைத்ததற்கும், உங்கள் கணவரிடம் சொல்லி அடிதடியில் முடியாமல் பார்த்துக் கொண்டதற்கும்…..உங்களின் உயரிய பண்பிற்கு நான் தலை வணங்குகுகிறேன் சியாமளா.”

கையெடுத்துக் கும்பிட்டாள்.

மறுநாள் சியாமளா ஸ்கூலுக்குப் போனபோது சந்திரவதனா மறுபடியும் தன்னை பள்ளி நிர்வாகியாக பிரகடனப்படுத்திக் கொண்டாள்.

இரண்டு மாதங்கள் நிம்மதியாகச் சென்றன. அன்று சுதர்சன் சாருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டதாக பள்ளியில் பேசிக் கொண்டார்கள். சியாமளா அது பற்றி எதையும் தெரிந்துகொள்ள ஆசைப்படவில்லை. அமைதியாக இருந்து விட்டாள்.

ஆறு மதங்கள் சென்றன. சியாமளா உண்டாகியிருந்தாள். முதல் பிரசவம் என்பதால் எட்டாவது மாதம் அவளுக்கு வளைகாப்பு நிச்சயம் செய்தார்கள். அதற்காக பத்திரிக்கை கொடுத்து நேரில் அழைக்க சியாமளாவும் அவள் கணவரும் அந்த ஞாயிறு சந்திரவதனா வீட்டிற்கு சென்றனர்.

சந்திரவதனா அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்று அமர வைத்தாள். சுதர்சன் சார் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். வீட்டினுள் அதிலேயே பயணித்தார். ‘பாவம் ஆக்ஸிடென்ட் ஆனதால் மனிதர் கஷ்டப் படுகிறார்’ என்று சியாமளா நினைத்துக் கொண்டாள். அவள் கணவர் சுதர்சன் சாருடன் வரவேற்பறையில் பேசிக் கொண்டிருந்தார்.

சமையலறையில் இருந்த சந்திரவதனாவிடம் சென்ற சியாமளா, “மேடம் சாருக்கு ஆக்ஸிடென்ட் ஆனது பற்றி கேள்விப் பட்டேன். ஆனா இப்படி நிரந்தரமாக வீல் சேரில் அமர வேண்டியிருக்கும் என்பதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது” என்றாள்.

காயத்ரி மெதுவாக, “ஆமாம். ஆனா அவர் திருந்தாம பண்ண தொடர் தப்புகளுக்கு இந்த மாதிரி கஷ்டங்களை அவர் அனுபவிக்கிறது நியாயம்தான். துபாய்ல அவர் ஒரு பெண்ணிடம் மைல்டா மிஸ்பிஹேவ்

பண்ணதுக்கு கம்பெனிய விட்டே துரத்தி விட்டாங்க, உன்னிடம் ஜொள்ளு விட்டாரேன்னு நான் மறுபடியும் ஸ்கூலுக்கு வந்து உட்கார்ந்தேன். இங்க என்னடான்னா வீட்ல வேலைக்காரி வடிவுடன் அவர் உல்லாசமாக இருந்ததை நான் கண்டுபிடிச்சு அவளை வேலையை விட்டுத் துரத்தினேன்.

“………………..! ?”

“இவர் நாய் வால். என் குழந்தைகளுக்கு அப்பா முக்கியம். அவர்களுக்கு நல்லபடியா திருமணமாவதற்கு, கணவர்ங்கிற இவருடைய ஸ்தானம் எனக்கு மிக முக்கியம். அதுக்கு ஒரேவழி உயிருடன் இவரை முடக்கி வைக்கிறதுதான் சியாமளி. அதுனால…”

“அதுனால..?”

“முழங்காலுக்கு கீழ இவர் காலை ஆள் வச்சு உடச்சது நான்தான்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *