சந்திப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 3,159 
 
 

(1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடியும் வேளை. எனது மனைவி புவனேசுவரி பதகளிப்போடு என் முதுகில் தட்டி, “இஞ்சருங்கோ, எழும்புங்கோ,” என்றாள். காலம் கெட்ட காலத்தில், நேரம்கெட்ட நேரத்தில் தனிமையும் முதுமையுமாக இருக்கும் எங்களின் அமைதியை அந்தக் காரின் வருகை பெரிதும் குழப்பியது.

துடித்துப் பதைத்து எழுந்த நான் அறையிலிருந்து வெளிப்பட்ட வேகத்தில் எனது தலை சுவரில் மோதிக் கொண்டது. “பார்த்துப் போங்கோ” என்ற புவனேசின் நடுக்கக் குரல் எரிச்சல் மூட்ட, “சீ! சும்மா இரும்” என்று அதட்டி விட்டு, மோதலால் ஏற்பட்ட நோவையும் தாங்கிக் கொண்டு, படலைத் திறப்பை எடுத்துச் சென்று படலை யைத் திறந்தேன்.

கார்க் கதவைத் திறந்த வண்ணம் முதிய பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் காரிலிருந்து இறங்கினர்; வணக்கம் சொன்னார்கள். நானும் “வணக்கம்” சொல்லி விட்டு அவர்களை உற்று நோக்கினேன். மங்கல் இருட்டும் அதனோடு ஒத்துழைக்க முடியாத எனது வெள்ளெழுத்துக் கண்களும் அவர்கள் மீது கேள்விக் கொளுக்கியாய்த் தொற்றி நின்றன. விடை காணமுடியாத தடுமாற்றம்.

காரிலிருந்து இறங்கியவர்கள் எவ்வித தயக்க முமின்றிப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே வந்தா ர்கள். நான் அவர்களைத் தொடர்ந்தேன். “வாருங்கோ, இருங்கோ” என்று சொல்ல முன்பே விறாந்தையிலிருந்த கதிரைகளில் அமர்ந்தார்கள்.

புவனேசும் வெளியில் வந்து என் அருகிலே நின்றபடி, அவர்களை நோட்டமிட்டாள். ஆர் என்று அறிந்து கொள்ள முயன்ற முயற்சி தோற்றுவிட, “நீங்கள்…?” என்ற கேள்வி எங்கள் இருவரதும் வாய்களிலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டது.

“உங்களுக்கு எங்களைத் தெரிந்திருக்க நியாய மில்லை. நாங்கள் கொக்குவில் ஐயாவின்ர அக்கா வீட்டில வாடகைக்கு இருக்கிறம். இவர் என்ரை மகன். கொக்குவில் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிறார்.” என்ற முதிய பெண்ணின் சுய அறிமுகம் எனக்கோ, புவனேஸ்வரிக்கோ, உற்சாக த்தை விளைவிக்கவில்லை . மாறாகச் சலிப்பும், எரிச்சலும் கோபமுந்தான் எழுந்தன.

“அக்கா, அவவுக்கு என்னவாம்?” எனது சொற்களின் வெப்பம் அவர்களுக்குப் புரிந்திருக்கவேண்டும்.

“உங்களுடைய அக்கா எல்லாம் சொன்னா. இருபது வருசத்திற்கு மேலாய் நீங்கள் ஒருவர் முகத்திலை மற்றவர் முழிக்கிறதில்லை எண்டும் எங்களுக்குத் தெரியும்” என்று ஆசிரியர் பேச்சைத் தொடங்கினார்.

“இன்னும் எத்தினை நாளைக்கு இப்படி இருக்கப் போறியள்? சொல்லுங்கோ” இது அவர் தாய்.

“சாகும் வரையில… இது அவவுக்குத் தெரிந்தது தானே?” என்ற பொழுது, எனது குரலில் வெறுப்பும் கோபமும் கொப்பளித்தன.

“என்னையும் என்ர பிள்ளையளையும் நாயிலும் கேவலமாய் நடத்தி, வீட்டைவிட்டு ஓட்டிக் கலைச்சவ, இப்ப சமாதானப் பேச்சுக்கு உங்களை அனுப்பி வைச்ச வவோ?” என்று புவனேஸ் வெடித்தாள்.

இப்படியெல்லாம் நாங்கள் பேசுவோம் என்று எதிர்பார்த்து, அவற்றுக்கெல்லாம் சமாதானம் சொல்லத் தயாராக அந்தத் தாயும் மகனும் வந்திருக்கிறார்கள் என்பதைச் சலனமற்ற அவர்களின் முகங்கள் துலாம் பரப்படுத்தின.

எனக்குப் பழைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அலைய லையாய் நினைவுக் கடலில் முட்டி மோதத் தொடங்கியது.

அப்பு இறக்கும் போது எனக்கு வயசு பதினைந்து; அக்காவுக்குப் பதினெட்டு.

ஆச்சி தனது சீதனத் தோட்டத்திலும் வயலிலும் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து என்னையும் அக்காவையும் வளர்த்து ஆளாக்கினா.

நான் எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்து எழுதுவினைஞன் ஆனேன். அந்தக் கால வழக்கப்படி (பதினைந்து வயதில்) பெரிய பிள்ளையானதிலிருந்து வீட்டுக்குள் அக்கா அடைகிடந்தாள்.

நான் கடினமாய் உழைத்து, ‘ஓவர்டைம்’, அது இது என்று பாடுபட்டு, என்னையே பொறுப்பாக்கிக் கடன்பட்டுச் சீதனப்பாதனத்துடன் அக்காவின் இருபத்தாறு வயதில் அவவுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.

காலம் ஓடுகிறது. அக்காவின் சீதனக்கடன் ஒரு படியாய் அடைக்கப்பட்டு நான் தலைநிமிர்வதற்கிடையில் எனக்கு முப்பது வயதை எட்டுகிறது. மச்சாள் என்ற உறவு முறையாலும், வறியவர் என்ற அனுதாபத்தாலும் வெறுங்காணி ஒன்றோடு புவனேஸ்வரியையும் கைப்பிடித்தேன்.

புவனேஸ்வரிக்கு அப்பா, அம்மா சிறுவயதிலேயே இறந்துபோனார்கள். தனிக்கட்டை. நான் வெளியிடங்களிலே கடமையாற்றியதால் புவனேஸ்வரியை அக்கா வீட்டில் – நான் சீதனமாகக் கொடுத்த வீட்டில்- அக்காவோடு தங்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தத் தேவை உண்டானது.

மாதம் மாதம் நான் அனுப்பி வைத்த பணத்தில் புவனேஸ்வரி செட்டுமட்டாகச் செலவு செய்து, பெருகி வந்த பிள்ளைச் செல்வங்களையும்- இரண்டு பெண், ஒரு ஆண் – வளர்த்து வருவது ஏனோ அக்காவுக்கும் அவவின் கணவருக்கும் பிடிக்கவில்லை .

அவர்களுக்கும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளு க்கு எங்கள் பிள்ளைகள் எடுபிடி ஆட்கள். புவனேஸ் தனிச் சமையல், தனிச் செலவு செய்து வந்தாலும், அவளும் பிள்ளைகளும் தங்கள் தலையிலே ஏறி இருப்பது போலவும், இவர்கள் பெருஞ்சுமை போலவும் அவர்கள் கருதினார்கள்.

அந்த உணர்ச்சி பேச்சாகி, ஏச்சாகி என் மனைவி மக்களுக்கு அக்காவின் வீடு நரகமாகியது.

ஒரு நாள் அக்காவின் மகனுக்கும் என் மகனுக்கும் இடையே முளைத்த சிறுசண்டை, பெரும் புயலாகி அக்காவும் அத்தானும் நாக்கில் நரம்பில்லாமல் ஏசி, ‘வீட்டை விட்டு வெளிக்கிடு’ என்று புவனேசைப் பிடரியில் பிடித்துத் தள்ள…

அதன் பிறகு….. இருபது வருடங்கள்…நானும் யாழ்ப்பாணம் வந்து…

வாடகை வீட்டிலிருந்து…காலப்போக்கில்…புவனேசின் காணியில் வீடு கட்டி… நிம்மதியாய் இருக்கிறோம். இன்று அக்காவின் சமாதானத் தூது…ஏன்?

அத்தான் நிறைகுடி காரணமாக ஈரல் பழுதுபட்டு, ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். அக்காவோ அவவின் மக்களோ எங்களுக்கு அறிவிக்கவில்லை. நாங்களும் போகவில்லை.

அக்காவின் முதல் மகன் ஸ்ரீரங்கன் படிப்பை இடையில் குழப்பிவிட்டு, தாயின் நகைநட்டை விற்று, காணியை ஈடுவைத்து வெளிநாடு போனவன் போனதுதான். அவனைப் பற்றிப் பிறகு எதுவும் தெரியாமல் அக்கா வேதனையில் மூழ்கியிருந்ததாய்க் கேள்விப்பட்ட பொழுது, “இது அவவுக்கு வேணும்” என்று குரூரமாக நினைத்துத் திருப்திப்பட்டது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

அவனுக்கு ஒரே தங்கை சுமதி. அவள் தன்னிஷ் டத்துக்கு எவன் ஒருவனோடு கூடி ஓடிவிட்டதாகக் கேள்வி. அக்கா அவமானத்தால் கூம்பிப்போய்ப் பல மாதங்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருந்தா என்றும் கேள்விப்பட்டோம்.

மூன்றாவதும் கடைசியுமான மகன் போராளி இயக்கம் ஒன்றிலே இணைந்து ‘மாவீரன்’ ஆகிட்டான்.

இரண்டு வீடுகளும், கணவனின் இறப்பால் கிடைக் கும் விதவைப் பென்சனும், அறுபத்தைந்து வயதின் முதுமையும் நோய் நொடியுமாக அக்கா அவலப்படுவதாக வும், தனது அந்திய காலத்தில் தம்பி குடும்பத்தைக் காண விரும்புவதாகவும் வந்தவார்கள் சொன்னார்கள்.

வீடு வாசல்களைப் பூட்டிவிட்டுத் தங்களோடு காரில் வரும்படி வற்புறுத்தினார்கள்.

நான் புவனேசைப் பார்த்தேன். புவனேஸ் என் பார்வையின் பொருளை உணர்ந்துகொண்டாள்.

ஆனால்….

எந்தத் தீர்மானத்திற்கும் வரமுடியாமையால், மௌனம் சாதித்தாள். அக்காவின் மீது வன்மம் குறையாத தனாலோ, அந்த மௌனம்?

இருபது வருடங்களாய் என் உள்ளத்தினுள்ளே பல வந்தமாய நான் புதைத்து, வெறுப்பு என்ற களிமண்ணால் பூசி மறைத்திருந்த சகோதர பாசம் வெளிப்படமுயன்று தோற்றதா, வென்றதா? என்னால் சொல்லமுடியவில்லை.

“வீடு வாசலை அப்படி அப்படியே விட்டு விட்டு வர ஏலுமோ? கொஞ்சம் அயந்திட்டால் பக்கத்து வீட்டுப் பரிகலங்கள் சுற்றாடலிலை ஒண்டும் இல்லாமல் அள்ளிக் கொண்டு போயிடும் ஆரையாவது வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒழுங்கு பண்ணிட்டுப் பின்னேரம் போல வாறம். நீங்கள் போய் வாருங்கோ என்று சொல்லி வந்தவர் களுக்குத் தேநீரும் வழங்கி ஒருவாறு அனுப்பி வைத்தோம்.

“உங்கடை அக்கா படுத்த படுக்கைதான். என்ர மேள்தான் அவவைப் பார்த்து வேண்டியதைச் செய்யிறா. உரிமைக்காரர் நீங்கள். ஊருலகம் உங்களைத் தூற்றாமல் நடந்து கொள்ளுங்கோ. வேறை என்னத்தைக் சொல்ல? நாங்கள் வாறம்” இவை வந்த பெண்ணின் கடைசி வார்த்தைகள். இது தாயும் மகனும் போய்விட்டார்கள்.

அவர்கள் போனதும் புவனேஸ் “அக்காவுக்கு இப்பதான் ஞானம் பிறந்திருக்கு. புரிசனும் செத்துப்போய்ப் பிள்ளைகளும் பக்கத்திலை இல்லை எண்ட நிலையில்தான் இறங்கி வந்திருக்கிறா. இதையெல்லாம் அப்ப யோசித் திருக்க வேணும்” என்றாள். அவளின் மனக்குமுறல் சொற்களின் படபடப்பில் எதிரொலித்தது.

“இஞ்ச பாரும் அப்பா, அக்காவின்ரை நிலையிலதான் நாங்களும் இருக்கிறம். எங்கடை பொம்பிளைப் பிள்ளையள் புருசன் மாரோடை கனடாவிலை. எட்டிலை இடையிலை கடிதம் போட்டால் உண்டு, ஒண்டே ஒண்டெண்டிருந்த பொடியனும்….” அப்பாற் சொல்லமுடியாது விம்மலும் பொருமலும் என்னைத் தடுத்தன.

புவனேசுக்கு அது போதியதாயிருந்தது. “என்ர பிள்ளை குண்டுச் சிதறல் தாக்கித் துண்டு துண்டாய்க் கூட்டி அள்ள வைச்சிட்டுப் போயிட்டானே.” என்று கதறி அழத் தொடங்கிவிட்டாள்.

– சில நிமிசங்கள், சொல் கடந்த சோகத்தில் சில யுகங்களாய்க் கழிந்துபோயின.

“சரி! இனி உதை நினைச்சு ஆகப் போறதொண்டு மில்லை. அழுகையை நிறுத்திப் போட்டுச் சொல்லும். அக்கா வீட்டை போறதோ இல்லையோ?” புவனேஸ் முந்தானை யால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.

“அந்த மனிசி சொன்ன மாதிரி ஊர் உலகத்துக்குப் பயந்தாவது போகத்தானே வேணும்?”

நான் அதிர்ந்து போனேன். அங்க சாங்க உபாங்க ங்கள் எல்லாம் சிற்பசாத்திரப் பிரமாணங்களில் அணுவளவுந் தவறாது கைதேர்ந்த சிற்பி உருவாக்கிய அம்மன் சிலை போலக் கட்டுடலும் கட்டழகுமாய் விளங்கிய அக்காவா இது?

அறுபத்தைந்து வயதிலே தொண்ணூறு வயதாய் விட்ட படுகிழம் ஒன்றல்லவா என் முன் காட்சி தருகிறது! மூச்சுப்பிடித்து ஊதிவிட்ட பலூன் போல உப்பிப் பருத்து, பற்கள் விழுந்து, மேலுதடும் நாடியும் பேதமின்றிச் சங்கம மாகிவிட்ட வாயுடன், மருந்துக்குக் கூடக் கறுப்புக் காணாத வெள்ளை வெளேரென்று நாலைந்து மயிர்கள் கொண்ட மலட்டுத்தரைத் தலையுடன், இருந்த இடம் கறையான் அரிக்க, அத்துவானக் கிறக்கத்தில், நான் ‘அக்கா! அக்கா!’ எனப் பல தடவைகள் அழைத்தும் கேட்காத பீரங்கிச் செவிடாய் அமர்ந்திருக்கும் இதுவா என் அக்கா?

என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. தனிமையும் இழப்புக்களும், பற்றிப் படரக் கொழுகொம் பற்ற அநாதைத்தனமும் சேர்ந்து அக்காவை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டதை என்ன என்பேன்?

நான் அக்காவை உலுக்கி உணர்வு பெறச் செய்து, நானும் புவனேசும் வந்திருப்பதை அறியவைத்தேன்.

அக்கா தனது புசுபுசுப் பஞ்சுக் கையால் என் முகத் தைத் தடவியபொழுது, எனது அறுபத்திரண்டு வயது மறைந்து போய், ஐந்து வயதுக் குழந்தையாய் மாறி அக்காவின் மடியிலே சாய்ந்து குமுறிக் குமுறி அழுதேன். புவனேசையும் அந்த அழுகை தொற்றிக் கொள்ள அவளும் அழுதாள்.

அக்காவில் எவ்வித சலனமும் இல்லை . அவவால் அழவும் முடியாது, சிரிக்கவும் முடியாது. ஆனால் அவவின் உள்ளத்தின் உள்ளே பாசக்கடல் பொங்கி அலை எறிவதை அந்தத் தடவல் எனக்கு உணர்த்தியது. அவ சொன்னா. “என்னாலை இங்கை தனிய இருக்க முடியாது. என்னை உன்ர வீட்டை கூட்டிக் கொண்டு போ.”

– சஞ்சீவி (9.10.1999), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *