சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 11,329 
 
 

சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள்.

மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு பார்ப்பாள். எப்படித்தான் இந்தக் குழந்தைகள் ஒரே நாளில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கின்றனவோ? என்று ஆச்சரியப்படுவாள். அவள் மகன் பிரபு ஆறாவது படிக்கும்போது தன் தந்தையின் பெரிய சைக்கிளை எந்தவிதச் சிரமமுமின்றி ஓட்டினான். சந்தான லெட்சுமியின் அண்ணன் சிறுவயதில் அவளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்தபோது, அடிபட்டுக் கொண்டாள். அன்றிலிருந்து அவள் சைக்கிளைத் தொடவே இல்லை.

திருமணம் முடிந்து வேலைக்கு வந்த பிறகுதான் வாகனம் ஓட்டுவதன் அவசியத்தை உணர்ந்தாள். சக ஆசிரியைகள் அனைவரும் இரு சக்கர வாகனம் வைத்திருந்தனர். அவர்களிடம் தனக்கு “சைக்கிள் ஓட்டத் தெரியாது’ என்று கூற அவமானமாக இருந்தது. சில சமயம் பள்ளிக்குத் தாமதமாக வந்து தலைமை ஆசிரியையிடம் கைகட்டி நிற்கும்போது “சே ஒரு சைக்கிளாவது ஓட்டக் கற்றிருக்கலாம்’ என நினைத்துக் கொள்வாள்.

அவளுடன் பணிபுரிந்த ஆசிரியைகளுள் ஒருவர், “”சைக்கிள் ஓட்டப் பழகாமலேயே டி.வி.எஸ். எக்செல் ஓட்டலாம்” என்று கூறவே அதையும் முயற்சி செய்து பார்த்தாள்.

அப்படியே வண்டி ஒரு பக்கமாக சாய்ந்து அவளையும் கீழே தள்ளியது. நல்லவேளையாக அதிகம் அடிபடவில்லை.

உடன் பணிபுரியும் உடற் கல்வி ஆசிரியர் மணிவண்ணன் முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகுமாறு கூறி, தன் மனைவியின் சைக்கிளை அவள் வீட்டில் கொண்டு வந்து கொடுத்தார். மற்ற சைக்கிள்கள் போல் இல்லாமல் அது நீல நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு “ராணி’ என்று எழுதப்பட்டு இருந்தது. தன் கணவனுக்குத் தெரியாமல் காம்பெüண்ட் சுவரை ஒட்டிய வீட்டின் சந்துப் பகுதியில் சைக்கிளை நிறுத்தினாள்.

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணவன் சங்கரலிங்கத்திடம், “”ஏங்க… நான் சைக்கிள் கத்துக்கிடட்டுமா?” என்றாள்.

“”கெரகம் புடிச்ச கொக்குதேன் கெளுத்தி மீன் முழுங்குமாம். எலேய்… உங்க ஆயிக்கு கெரகம் சரியில்ல… அதான் இந்த வயசுல சைக்கிள் ஓட்டக் கிளம்புறா” என்று தன் மகன் பிரபுவிடம் கூறினான் சங்கரலிங்கம்.

இருந்தாலும் சந்தான லெட்சுமிக்கு ஆசை விடவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் தெருவில் நடமாட்டம் குறைந்த பின் சைக்கிளை வெளியே கொண்டு வந்து வைத்து, “”டேய் பிரபு… ப்ளீஸ்டா… கொஞ்சம் ஹெல்ப் பண்றா… அம்மா சைக்கிளைப் பிடிச்சிக்கடா ” என்று பிரபுவை அழைத்தாள்.

பிரபு சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பெடலை மிதிக்குமாறு கூறினான். பாலன்ஸ் தவறி பிரபுவின் மேலேயே சாய்ந்து சைக்கிளைப் போட்டுக் கொண்டு “தடால்’ என்று சரிந்து விழுந்தாள். அன்றிலிருந்து சைக்கிளை வெளியே எடுத்தாலே பிரபுவும் ஓடினான். காலை உந்தி உந்தி சைக்கிளில் ஏறிக் கொள்ளவே ஒரு வாரம் பிடித்தது.

தெரிந்தவர்கள் பலர், “உனக்கு இதெல்லாம் இந்த வயசுல தேவையா?’ என்று கேட்டனர்.

இவள் பயிற்சி செய்வதைப் பார்த்த முதியவர் ஒருவர், “சைக்கிளும், குதிரை மாதிரிதான்மா! தன் மேல ஏற வர்றவனை முதல்ல கீழ தள்ளத்தான் பாக்கும்! பழகீட்டா குதிரை மாதிரியே இறங்கவே மனசு வராது. நாமளா இறங்கினாத்தான் உண்டு! விடாம முயற்சி செய்து வாங்க!’ என்றார்.

இத்தனை பேரில் இவர் ஒருவர் மட்டுமே நம்பிக்கையளிக்கும் விதமாகப் பேசினார். சங்கரலிங்கம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஒன்று, செய்தி சேனல்கள் பார்ப்பான் அல்லது மடிக் கணினியில் வேலை ஏதாவது செய்து கொண்டிருப்பான். இவளை சட்டை செய்யவே மாட்டான். இதனால் அவனுக்குத் தெரியாமல் தினம் தினம் முயற்சி செய்து ஒரு வழியாக இன்று சைக்கிளை ஓட்டிவிட்டாள். அதே சந்தோஷத்தோடு உள்ளே வந்து, “என்னங்க! ஒரு நிமிஷம் வாசலுக்கு வாங்களேன்! நானே தனியா இன்னிக்கு சைக்கிள் ஓட்டிட்டேங்க!’ என்றாள் ஒரு குழந்தைபோல.

“ஆமா! எல்லா டி.வி.காரனையும் கூப்ட்டு “”சந்தான லெட்சுமி சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டா!’னு உன் படத்தப் போட்டு ஃபிளாஷ் நியூஸ் போட்ரலாமா!’ என்றான் நக்கலாக.

“யார் சைக்கிள எடுத்துக்கிட்டு திரியறவ! மணல் லாரி அங்கிட்டும் இங்கிட்டும் தாறுமாறா ஓடிக்கிட்டிருக்கு! எங்கிட்டாச்சும் அடிபட்டு வந்து நின்னா, நேர அப்பன் ஊட்டுக்கு கௌம்ப வேண்டியதுதான்!’ என்றான் சங்கரலிங்கம் தன் பெரிய மீசையை உருவியபடியே.

உற்சாகமெல்லாம் வடிந்து போனது சந்தான லெட்சுமிக்கு. வீட்டு வாசல் மெயின் ரோடாக இருந்ததாலும், மணல் லாரிகள் அதிகம் சென்றதாலும் வீட்டின் புழக்கடைப் பக்கமிருந்த பிள்ளையார் கோவில் தெரு, முத்தையா ஆசாரி வீதி, மேல வீதி என்று ஒவ்வொரு தெருவிலும் தட்டுத் தடுமாறி சைக்கிள் ஓட்டிப் பழகினாள். இருந்தாலும் இரு சக்கர மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டுவது பெரும் சவாலாக இருந்தது. எதிரே கனரக வாகனங்கள் வந்தால் அப்படியே பிரேக் பிடித்து நின்று விடுவாள். இன்னமும் வளைவுகளில் சரியாகத் திருப்பி ஓட்டத் தெரியவில்லை. மேலும் இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது பெரும் சிரமமாக இருந்தது. சைக்கிள் ஓட்டும்பொழுது எல்லோரும் தன்னையே பார்ப்பதுபோல் வெட்கமாக இருந்தது அவளுக்கு.

ஓரளவு நன்கு ஓட்டத் தெரிந்ததும் தை அமாவாசை அன்று சைக்கிளை ஓட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்றாள். தட்டுத் தடுமாறி ஓட்டி வந்ததைக் கண்டு மாணவர்கள் கேலி செய்தனர். சக ஆசிரியைகள் “களுக்’ என நமுட்டு சிரிப்பு சிரித்தனர். மணிவண்ணன் சார் மட்டும், “சூப்பர்! டீச்சர்! விடாம இன்னும் ஒரு மாசம் சைக்கிள்லயே ஸ்கூலுக்கு வாங்க! என் ஒய்ஃபை விட்டு உங்களுக்கு “எக்செல்’ ஓட்டக் கத்துத் தரச் சொல்றேன்! அடுத்த மாசம் “எக்செல்’ ஓட்டிடலாம்!’ என்றார்.

இப்படி கணவனுக்குத் தெரியாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது த்ரில்லிங்கான அனுபவமாகவும், பெரும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. ஒருநாள் கோவில் வாசலில் நிறுத்தி விட்டுச்சென்ற சைக்கிள், திரும்பி வந்து பார்த்தபொழுது காணாமல் போயிருந்தது. கைப்பையில் வண்டி சாவியைத் தேடினாள். அப்பொழுதுதான் சைக்கிளைப் பூட்டிவிட்டு சாவியை எடுக்க மறந்ததை உணர்ந்தாள். சந்தான லெட்சுமி அதிர்ந்து போனாள். அழுகை சட்டென்று பீறிட்டுக் கிளம்பியது. அருகில் இருப்பவர்களிடம் கேட்க அவமானமாக இருந்தது. நடந்தே வீட்டுக்கு வந்தாள்.

மணிவண்ணன் சாருக்கு என்ன பதில் சொல்வது? வேறு புது சைக்கிள் வாங்கலாம் என்றால் கணவனுக்குத் தெரியாமல் வாங்க முடியாது! மேலும் கணவன் செய்யாதே! என்று கூறிய செயலைச் செய்ததே பெரும் தவறு! என்பதை இப்பொழுதுதான் உணர்ந்தாள்.

அன்று முழுவதும் கலங்கிய கண்களுடன் மிகவும் சோர்வாக இருந்தாள். “ஏன்? சைக்கிள் வாங்கித் தரலன்னு கோவமாக்கும்?’ என்றான் சங்கரலிங்கம். கணவனிடம் சைக்கிள் தொலைந்ததைக் கூறலாமா? வேண்டாமா? இல்லை! மணிவண்ணன் சாரிடம் கூறுவோமா? கூறினால் என்ன நினைப்பார்? புது சைக்கிள் கணவனுக்குத் தெரியாமல் எப்படி வாங்குவது? என்று அவள் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் மகன் பிரபு ஓடி வந்து, “மம்மி! நாளைக்கு ஒன் பர்த்டேவாம்! அப்பா பர்த்டே சாரி எடுக்க கடைக்குப் போக ஒன்னத் தயாரா இருக்க சொன்னாங்க!’ என்றான்.

“ஆமா! அது ஒண்ணுதான் இப்பக் கொறச்சல்! எனக்கு சாரியும் வேணாம்! ஒரு மண்ணும் வேணாம்! நா எங்கயும் வரலைன்னு உங்கப்பாகிட்டப் போய் சொல்லு!’ என்றாள் கலங்கிய விழிகளுடன். அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தாள்.

மறுநாள் காலை இன்று எப்படியாவது மணிவண்ணன் சாரிடமே கூறிவிடலாம் என்று நினைக்கையில், அவரிடம் இருந்தே அவள் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. சந்தான லெட்சுமி நடுநடுங்கிப் போனாள். தான் சைக்கிளைத் தொலைத்த விஷயம் அவருக்குத் தெரியுமோ?

அதற்குள் மகன் ஓடிவந்து இடுப்பைக் கட்டிக்கொண்டு, “ஹாப்பி பர்த்டே மம்மி!’ என்றான்.

“விட்டுத் தொல!’ என்று அவன் கையை எடுத்துவிட்டு, “”ஹலோ சார்! குட்மார்னிங் சார்! ஒரு தப்பு நடந்து போச்சு சார்!” என்றாள் தழுதழுத்த குரலில்.

“ஐயோ! மேடம்! நான்தான் சாரி சொல்லணும். சைக்கிளத் தேடுறீங்களா? பயந்துட்டீங்களா? எம் பையன்தான் நேத்து சைக்கிள எடுத்துட்டு வந்திட்டான்! உங்ககிட்ட அவுங்கம்மா சைக்கிளக் குடுத்த விஷயத்த அவங்கிட்ட சொல்லல! ரொம்ப நாளா அம்மா சைக்கிள் எங்க? எங்க?னு கேட்டுக்கிட்டே இருந்தான். நான்தான் சும்மா வெளயாட்டுக்குத் தொலஞ்சு போச்சுடான்னு சொன்னேன். நேத்துக் கோயில் வாசல்ல பார்த்ததும் அவுங்கம்மா சைக்கிள்தான் அதுன்னு தெரிஞ்சு போச்சு. காணாமப் போன சைக்கிள் திரும்பக் கெடச்சிடுச்சினு சந்தோஷமா எடுத்திட்டு வந்திட்டான். நான்தான் நேத்தே உங்களுக்கு ஃபோன் பண்ணியிருக்கணும்! சாரி டீச்சர்! ரொம்ப டென்ஷனா இருப்பீங்க!’ என்றார் மணிவண்ணன்.

சந்தானலெட்சுமி கண்கள் கலங்கிய நிலையிலும் சிரித்தாள். “மம்மி! வாசல்ல வந்து பாரேன்! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!’ என்று மகன் அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டே வாசலுக்கு ஓடினான்.

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

வாசலில் ஒரு புது லேடீஸ் சைக்கிள் சந்தனம், குங்குமம் தடவி பூமாலை சார்த்தப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. “ஏ! களுத! நேத்தியிலிருந்து சைக்கிளுக்குத்தான மூஞ்சியத் தூக்கி வெச்சுகிட்டு அளுதுகிட்டு நின்னவ! இதுக்குத்தான கடெக்கி வாராம நின்னவ! இந்த வருசப் பொறந்த நாள் பரிசு! இந்தா எடுத்துக்க! ஆனா சாக்ரதெயா ஓட்டு!’ என்றான் சங்கரலிங்கம்.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *