சத்தியவேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 5,257 
 
 

எனது அன்புத்தந்தை அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8ஆம் திகதி (29.8.1826 – 08.12.1995) எதிர்நோக்குகின்றது. அதனை நெஞ்சிருத்தி அவரது ‘சத்தியவேகம்’ என்ற சிறுகதையினை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் செய்யும் அத்தனை பணிகளுக்கும் இனிய நன்றிகூறி விடைபெறுகின்றேன். எல்லோரும் தேகசுத்துடன் இருக்க வாழ்த்தி நிற்கின்றேன்.

அன்புடன்
நவஜோதி


‘மற்றவை எக்கேடு கெட்டுப் போனாலும் காரியமில்லை, நாங்கள் மட்டும் ‘நல்லாயிருந்திட்டாப் போதும்’ எண்டு, மற்ற மனிசர் மாஞ்சாதி பற்றி எல்லுப் போலவும் எண்ணாம இந்த நாய் தின்னாக் காசுக்காக கவடு கிழிய ஓடுறாளவ. எல்லாரும் பெரிய வேதக்காறராம், ‘உன்னைப்போல உன்ர அயலட்டையானையும் நேசியெண்டு எங்கட ஆண்டவர் வேதத்தில் சொல்லியிருக்கிறதை, இவே சும்மா படிச்சு, உலக ஒப்பினைக்குப் பாடம் பண்ணுறதுதான். தாங்கள் அதுமாதிரி எப்பனும் நடவாயினம். இவையளாலதான் எங்கட ஊருக்கும் நாசம் வருது’

இந்த ஐஞ்சுபுள்ள தலமுறைக்கும் அயலட்டையில இருக்கிற ஒரு மனுமாஞ்சாதியெண்டாலும் என்னப்பாத்து நெஞ்சுக்கு நேர ‘திரேசி’யெண்டு என்ர நாமங்கூட இழுத்துச் சொன்னதில்லை. இவள் முத்தாரி எண்டவளுக்குக் கண்டறியாத ஒரு புதுப் பணம் வந்து புடிபட்ட நீரேத்தித்தில, என்னப் பிடிச்சுக் ‘கள்ளி’ யெண்டாளாமே? ஏங்கட குடி கோத்திரத்திலயோ எங்கட வங்கிஷத்திலயோ இந்தக் கிலசகெட்ட பழக்கம் இருக்கேல. இவள் என்னப்பாத்து வாய்க்கு றாங்கியா இப்புடிச் சொல்லவோ? கரிநாக்கிச்சி…

இப்ப என்ர கண்ணுக்கு முன்னால, நான் பெத்த என்ர ஆண் குஞ்சு ஊரோட இருந்திருக்குமெண்டால் உவளவயின்ர வாயக் கிழிச்சு உப்புத் தடவியிருப்பன். ஏன்ன செய்வம்? அதையும் அந்தப் போக்கறுந்துபோன கண்கெடுவான், இந்தக் கொடுவாளின்ர கண்ணுக்கு எட்டாம எங்கயோ கொண்டுபோய் விழுத்திப்போட்டான். ஏன்ன மருந்து மாயம் போட்டு, எந்தப் புளுக்கச்சி மயக்கிக்கொண்டு போனாளவையோ? யார் கண்டது?

‘கூங்கீயா குங்கீயா…’

‘கோயா… கோயா பா…பா பா…பா பா…’

‘இப்பதான் கரப்பைத் துறந்து விட்டன். ரண்டு வாய் கொத்தி இந்தக் குஞ்சுகள் பொறுக்கிறதுக்கிடயில … கோதாரியில போவான்ர பிராந்து எங்கினையோ பனைக்கூடலுக்க ஒழிஞ்சிருந்திட்டுப் பறந்து வந்து வட்டம் போடுதே!…

நாலு பெட்டைக் குஞ்சுகளெண்டாலும், இந்தக் கோழிக்குஞ்சுகளைக் கரப்புக்குள்ள அடைச்சு வைச்சிருந்தமாதிரி நல்ல நேர்சீராக- கட்டுமட்டாய் வச்சிருந்து ஒவ்வொருத்தன்ர கையில சீதன பாதனத்தோடதான் கட்டிக் குடுத்தன். பொம்புளப் புள்ளையளெண்டு அதுகளை சிறுமானியப்பட விடேல ஆனா கொண்டுபோனவனவ இப்ப எனக்குத் தொண்டு செய்ய விடுவானவையோ? விடாயினம்!

‘க்கா க்கா கா…கா’

‘சூய்… ஹாய ஹய் இதென்ன சீலம்பாய் கிடக்கெண்டு இஞ்ச வந்து கரையுது இந்தக் காவம்… சூய் … ஹாய்’

‘அக்கினேசு …அதுதான் எனக்கு இப்ப ஆறுதல். கடக்குட்டிக்ணெடு செல்லம் குடுத்தன். அது கடக்குட்டியாக்கும், உரிச்சுப் படைச்சு சரியா அஞ்செழுத்தும் தேப்பன்தான்.ம் புறந்த ஆறாம் மாசத்தில அது தன்ர தேப்பனையும் திண்டுபோட்டுக் கிடக்குது. முழுக்க மனுஷன்ர குணம். ஒரு நிமிடமெண்டாலும் அண்டலிக்க ஏலாது. ஆத்தே பொல்லாத படுகெறுக்கு. புடிச்சிராவி. எப்படியெண்டாலும் அவன்தான் என்ர ஆண் குஞ்சு ம் ம் ‘ஹி ஹி ஹி சிரியாய்ச் சிரிக்கிறேனே இந்தச் சீரழிந்த வாயால.

அது தன்ர மனதுக்குப் பிடிச்சதை விரும்பிக் கலியாணம் செய்துது. அதுக்கு வந்தவர்… அவரை என்ர மருமோனெண்டு சொல்லக்கூடாது. காணாமப்போன என்ர ஆண்குஞ்சைப் பாத்தாப்போல இருக்கு. மிரிச்ச இடத்துப் புல்லும் சாகாது. குடிகிடி சூதுவாது ஒண்டுமில்ல. அப்பிடி ஒரு புறவி. அப்புடி ஒரு பிள்ளையைத்தான் கட்டுவனெண்டு ஒற்றைக் காலிலே நின்றாள். நினைச்சமாதிரிக் கிடைச்சிட்டுது. எல்லாம் இந்த அந்தோனியாரின்ரை சித்தம்தான்.

அவள்தான் என்னைப் பிந்திய காலம் பாப்பாளெண்டு பாத்தா, பொடியனோட என்னம்மொரு சிங்களவன்ர ஊரில கிடந்து சீவிக்குது. போன கோசு தலப்பிள்ளைப் பேறுக்கு வந்தமாதிரி இப்ப இங்கினேயே இருப்பளெண்டால் இத்தறுதியில் உவள் முத்தாரியின்ர வாயச் சிப்பிலி ஆட்டிச் சிங்காரிச்சுப் போடுவாள். உவளவே என்னை உப்பிடி ‘கள்ளி காடி’யெண்டு பேச எப்பனும் விட்டுவையாள்.

‘மெஞ்ஞா… மெஞ்ஞா…’

‘ம்… அறுந்த ஆட்டுக்குட்டி கட்டிப்போட்டாலும் கட்டிலையெண்டு கிடவாதாம். மாரியன், அ… சூய… சூய உஞ்சு, ஊச்சி…’

தான் பட்டினி கிடந்து செத்தாலும் சாவன், எழுந்த மானமா உப்பிடிக் கள்ளி காடியெண்டு ஆரும் சொன்னால் தாங்கிக்கொண்டு இரன். ம்… ங்கா, துப் – இதென்ன இந்த அறுந்த பாக்கு, செருக்குது.

நான் அவளிட்டப் போய் அப்பிடி என்ன சீலம்பாயைக் களவாண்டனோ? இந்த எலும்பில்லாத நாக்கை வளைச்சு என்னைப் பார்த்துக் கள்ளியெண்டிட்டாளே?

நான் இப்ப போய்க் கடற்கரையில வாடி கூடுகிற நேரம் இதைச் சொன்னால். இந்த மானிப்பாயில இருக்கிற பெண்டுகள் எவளெண்டாலும், ‘ஆர் எங்கட திரேசி அக்கையைப் பாத்து இப்புடிச் சொல்ல, முத்தாரிக்கு வாய்க்கு வந்துதோ?’ எண்டு கேட்டு அந்தப் புளுக்கச்சியோட மல்லுக் வந்து விடுவாளவ. ம் ஏன் வீண் கொழுத்தாடு பிடிப்பானெண்டு இந்த வாய எல்லுப்போல அடக்கிக்கொண்டு கிடக்கிறன்.

உவளின்ர பொட்டுக்கேட்ட வெளியில வெளிக்கிட்டு சொன்னனெண்டால், உவள் உங்க தன்ர புரியனுக்குச் சோறும் போட்டுக் கொடுக்காம ஓடிப்போய்க் கழுத்தில கயிறு மாட்டித் தூங்கித்தான் சாவாள். தன்னைப் பற்றி எனக்கொண்டும் தெரியாதெண்டு நினைச்சுக்கொண்டாளாக்கும், பொறுக்கிச்சி.

என்ர மனுஷனும் செத்து, வாற சித்திர வரியப்புறப்போட இப்ப இஞ்சால இருவத்தஞ்சு வரியமாப்போச்சு. முதல்ல இந்த அந்தோனியார், ரண்டாவது ராசாவின்ர பேரால இவள் – இந்தத் திரேசியின்ர வாய் நாணயத்துக்கு – நான் நெஞ்சு தட்டிச் சொல்லுறன் உந்த நாலு பதினெட்டுச் சாதியில், ஆர் எங்கினேக்க கண்டாலும் ‘திரேசி அக்கை எங்கயணை, துலைக்கோ போட்டுவாறாய்’ என்று கேளாமல போகாதுகள். நான் போறவாற தேசாந்திரமெல்லாம் அப்புடிப் பிறத்திச் சனங்கள், துதிக்க இந்தப் பொறுக்கிப் பொட்டை என்னைப் பாத்துக் ‘கள்ளி’யாமடி, புதினம் நடக்கெடி பெண்டுகளே பூனரியாள் வாடியில கண்டியளோ…

இஞ்சால இருவத்தஞ்சு வரியமும் முடியப்போது இம்மட்டுக் காலமா என்ர தலை நெரிஞ்சு, கழுத்து முறிய முறிய இந்தக் கடகத்தைச் சுமந்து, இப்ப தேகம் மெலிஞ்சு கொலு கொலுவாய்ப் போய் நண்டுக் கோதணியம் கிடக்கிறன். காலிலயும் வாய்வு வந்து விழுந்து இப்ப காலும் அசுப்பீரிச்சு நடக்க ஏலாது. இந்தச் சுமையோட இந்தக காலால் நடந்து நாய்படாப்பாடுபட்டு வாயக்கட்டி வயித்தக்கட்டி, இவ்வளவு பெட்டைக்

குஞ்சுகளையும் பெத்துச் சீரா வளர்த்து, அவேய ஆளாக்கி, இப்ப அவை பெத்த பிள்ளையளைக் கண்டு நீரோசை பாத்திட்டன். இந்தச் சிறு மாணியமெலாம் படேக்க, எத்தின நாளா நான் பச்சைத் தண்ணீpயைக் குடிச்சுப்போட்டும் வெறு வயித்தோட சுருண்டு கிடந்திருப்பன். அப்படியிருந்தும் அயலட்டையில- ஆற்ரையன் கடப்படிக்குப் போய் ஒரு உப்புக்கல்லும் கேட்டிருக்க மாட்டன். ஒருவாய் வெத்தில வாங்கிப் போட்டிருப்பேனா எண்டு ஆரெயன் கேட்டுப் பாருங்போ? எங்க எவனெண்டாலும் முன்னுக்கு வந்து சொல்லட்டும் பாப்பம்… ம்கும் எடியே, அப்படிப்பட்ட இந்தத் திரேசியைப் பாத்து உப்பிடிச் சொல்ற உவன் முத்தாரி எண்டவளை இனி எக்கணம் நானும் விடப்படாது. உவளின்ரை கிலுசகேட்டைச் சொன்னாத்தான் கொழுப்பு அடங்குவாள். அப்பதான் கொதிக்கிற என்ர மனமும் ஆறும்.


எங்கட தோமாசரும், மரியாரும் சீர்வம்பு நல்லாயிருக்கெண்டு நேத்து ராத்திரி வெளிக்கிட்டு மேலைக் கடலுக்குப் போச்சுதுகள். மைக்க நாள் வெள்ளாப்பிட்டுப் போச்சு மற்றதுகளின்ர தோணிகளெல்லாம் துறைக்கு வந்து சேர்ந்து வாடியும் கூடி மீனெல்லாம் விலைப்பட்டும் போச்சு. ஆனா அதுகள் ரண்டும் அப்பயும் கரைக்கு வந்து சேரல்ல.

பகார்பத்தி விடிஞ்சு பொழுதும் கிளம்பியிட்டுது. வெள்ளென வந்ததுகள், வெடுக்கு வெடுக்கண்டு அடிக்கிற வாடைக்காத்துப் படறதால பாவங்கள், கரையில உரிஞ்சானோட நிண்டு நனைஞ்ச கோழிக்குஞ்சாட்டம் விறைச்சு நடுங்கின மணியம் அதுகளின்ர நார் நரம்பு என்னத்துக்குக் கூடும்? கரைக்கு வந்ததுகள் குடிக்கிறதுக்கெண்டு சுடச்சுடக் கடுங்கோப்பி வைச்சுக்கொண்டு ஏந்திப் பிடிச்ச மணியம் பெரிய கரிசனையோட வந்தவளவை, அந்தக் கோப்பியை அதுகளுக்கு நேரகாலத்தோட குடுக்காம, ரா முழுதும் கடலடிச்சு வந்த களையோட கரையில நிண்டு வலையும் அடிச்சுப்போட்டு அதுகள் வருமட்டும் ஏன் அதை வைச்சுப் பாத்துக்கொண்டிருக்கிறாளவையோ! அது ஆறிப் பச்சைத் தண்ணியான புறகு ஏன் அதுகள் அதைக்குடிப்பான்? அவளவேக்கு என்ன தெரியும்? அதுகள் கூதலோட உந்தச் சமுத்திரத்துக்கக் கிடந்து எலும்பு முறிய விறைச்சுக் கொடுகொடுத்துக்கொண்டு தோலுரிச்ச சுறாக்ணியம் பூணார எலும்புகள் புறப்பட்டு விறகுதடியாய்க் குறாய்விக்கொண்டு வருகுதுகள். இவளவை என்னடாண்டா அடுப்படிச் சாம்பல்ச் சூட்டில் கிடந்திட்டுவாற கள்ளப்பூனையாட்டம், ரா நாலு சாமமும் கம்பளியால நல்லாக் கால்முட்ட இழுத்து இறுக்கிப் போத்துக்கொண்டு குசாலா நித்திரை கொள்ளுறாளவை. ராவுராவாக் கடல்க் காத்துக் குடிச்சுப்போட்டு வந்ததுகளின்ர கயிட்டத்தைத் தெரிஞ்சிருப்பாளவையே ஆட்டக்காறியள்.

‘கா… கா….’

‘எடி பிஞ்சபார் மறுக்காலும் இந்தக் கோதாரியில போன காகத்தை தலைமயிரை வந்து கிள்ளிக்கொண்டு போகுதே .குய்…குய்…’

கடற்கரைக்கு வந்த ஆக்களெல்லாம் இந்தக் கலாதியில மினைக்கெடேக்கதான், அவன் என்னமொரு ஊரவன், அந்தப் பேரும் வாய்க்குள்ள வரேல்ல ஓ… ஓ ராசதுரை எண்டவன், எந்தநாளும் வாறதுபோல மீன் எடுத்துக்கொண்டு போக வானோட துறைக்கு வந்தான்.

தன்ர கட்டின புரியன் கரைக்கு வந்து வலையடிச்சு அதை மண்ணில விரிச்சுக் காயவிட்டு, பாய் மரத்தையும் அவிட்டுக்கொண்டுபோய் தொழில் தோட்டுப் பாயோட கிடந்து மாரடிச்சு அக்கப்பாடு படுறான். கட்டின புரியன் கடலில் நின்டு கமர்றான். அவனைக் கவனியாம, உவள் முத்தாரிக்கு அந்த நேரத்தில அவன் ராசதுரையின்ர வானடியில என்ன ஆள்பிடி வேலை?

நான் அதைக்கண்டு மனம் பொறுக்காம. ‘எடிய முத்தாரி, அவன் உன்ர புரியன் கடலடிச்சுப்போட்டுக் களையில வந்து நிண்டு வலை பறியோட கிடந்து மாயிறான்ரி. குத்திக் கொண்டந்த அந்தக் கோப்பி எப்பனுங் குண்டுக் கோப்பைக்கைக் கிடந்து ஆறுது. அது சூடாறேவுக்கு முன்னம் அது பாவிக்குக் கொண்டந்து குடுத்துப்போட்டுப்போய் நிண்டு செல்லம் பொழியனடியாத்தை’ எண்டு, ஆக இம்மட்டு வாத்தைதான் வாய் துறந்து சொன்னன். இந்த நாளையில நன்மைக்குக் காலமில்லை. எடி ஆத்தே, அதுக்கு அவவுக்கு வந்த கோள்வம்? அட்டட்டாரே மட்டக்கிளப்பாரே எண்டு நாகம் மாதிரிச் சீறத் தொடங்கிட்டாளடி. இந்த வாயும் சும்மா கிடக்க ஏலாமல் ஏதோ வந்ததைச் சொல்லிப்போட்டுது. பின்ன என்ன? கட்டின புரியனில கரிசனை இல்லாட்டி ஆர்தான் குறை சொல்லாயினம்.


எண அப்பு அவர் என்ர ராசா. முந்தியெல்லாம் அந்தக் காலத்தில கடலடிச்சுப்போட்டுக் கரையில வந்து தோணியைக் கட்டிவிட முன்னம், நான் வெள்ளாப்போட எழும்பி, இஞ்சிக்கிழங்கும் ஒருதுண்டு போட்டுச் சுடவைச்சுக் கொதிக்கக் கொதிக்க ஒரு அச்சாக் கடுங்கோப்பியாக் கொண்டுபோய் வைச்சிருந்து, ‘எப்ப வருவார் எப்ப வருவார்’ எண்டு காத்துக்கொண்டிருப்பன். என்ர ராசா அவர் கரையில ஏறி வரோக்கு முந்தி. நானே தோணியில கொண்டுபோய்க் குடுப்பன்.

முன்னம் ஒருக்கா. அது இண்டைக்கெண்டது போலக் கிடக்கு. ஒருநாள் உவள்தான் என்ர கடக்குட்டி அக்கினேசு வயித்தில பெறுமாதம். எழும்பக் கிழும்ப ஏலாது. கால் கையெல்லாம் இந்தக் கணியம் பூசணிக்காய் வீக்கம். வாத நீர்; வந்து முட்டிப் பிடிச்சதாக்கும், அங்கால இஞ்சால திரும்பிக்கிரும்பி ஆட அசுப்பிரிய ஏலாது. ஒரே முட்டு. என்ன செய்யிறதெண்டு ஒருமாதிரி தக்கி முக்கி திருந்தாதி மணி கேக்க எழும்பிக் குசினிக்க போனன். பலார்பத்தி நல்லா விடிஞ்சு போச்சு, நாரி; வளையக்கிளைய மாட்டனெண்டுட்டுது. அவள் பிறந்த புறகும் வீட்டில காட்டிற றாங்கியாட்டம்தான் வயித்துக்கையும் கிடந்து படாத பாடு படுத்தினவள். ஹி… ஹி… ஹி’ பாடுபடுத்தினவள்தான் ஆனா எனக்கென்னவோ அவளிலதான் பாசம்.

நோக்காடு எழும்பியிட்டுது நாரிய வந்து பூட்டுப்பிடிச்சு அடிவயித்தை நெரிச்சு அடைசி குத்தத் துவங்கிட்டுது. அண்டைக்குக் கோப்பியும் வைக்கேல்ல, கடற்கரைக்கும் போகேலாமமப் போச்சு. போய் அந்தக் கிடைதான். ஏன்னமோ அந்தோனியாரின்ர புண்ணியத்தால ஒரு விக்கினமுமில்லாம, காலம்புற எட்டு மணிக்கெல்லாம். ஏன்ர செல்ல நாச்சியார் வந்து புறந்தா. ஹி ஹி ஹி மனுசனைக் காணாதது எனக்கென்னவொ மனம் சரியில்லை. ஒன்பது பத்து பணிபோல அவர் மனுஷன் வந்து சிரிச்சுக்கொண்டு சாக்குத் தட்டிய நீக்கி, ‘என்னப்பா சுகமே?’ எண்டு என்னப் பாத்துக் கேட்டுப்போட்டு புள்ளயின்ர பட்டுச் சொக்கையில கைவிட்டுத் தடவி எடுத்து, என்ர முகத்தைப் பாத்துக்கொண்டு, ‘த்சொ’ எண்டு கொஞ்சிப்போட்டுப் போனார். எனக்கு எப்பவோ புள்ளச் சுமை றங்கியிட்டுது ஆனா, அவரைக் கண்ட புறகுதான் என்ர மனசில சுமை றங்கிச்சுது. அப்புடியெல்லாம் எங்கட காலத்தில நாங்கள் புரியன் பொஞ்சாதியெண்ட கரிசனையாய் நடந்தம். ஆனா உவள் முத்தாரிக்கு இப்ப ஆரில உந்தக் கரிசனை? இதைச் சொல்லப்போகத்தான் அவள் ஏறிப்பாஞ்சு கொண்டு என்னைப் பாத்துக் ‘கள்ளி’யெண்டு சொல்லியிருக்கிறாள்.


நான் அப்புடி என்ன செய்தனான்? அதையும் சொல்றன்…

‘ஹாய் …ஹாய்… சூய் அறுந்து போவான்ர காகமும் நெடுகக் கரையுது. புள்ள அக்கினேசுதான் கொழும்பால வரப்போறாளாக்கும். சரி, சரி, போ போய் எங்கினயன் கிடந்து கத்து எடியே பேந்தும் பார் … ம்… சூய்; ஹாய் … ஹாய்’

தோமாசரும் மரியாரும் கரைக்கு வரேல்லயெண்டு, நான் அதுகளைப் பாத்துக்கொண்டிருக்க, வான் காரனைக் கண்டிட்டு, அவனுக்கு எல்லாத்தையும் கொட்டிக் குடுத்கத் தெத்தித் தெத்தி ஓடுறாளவை. என்ன கெடுபிடி? தோமாசாராக்கள் வந்தாப்பிறகு கிடக்கிற மீனை ஒருசாவாக் கூறிக் குடுத்தாலென்ன? இம்மட்டுக் காலமா வாடியில, இப்படித்தான் கட்டுப்பாடு இருந்து வருது. கடலில் போனதுகள், அதுகளுக்கு என்ன தீங்கு நடந்தது. அதுகளின்ர கால் கைக்கு ஏதும் விக்கினமோவெண்டு எந்தப் புளுக்கச்சியள் யோசிச்சுப் பாத்தாளவை? ‘மற்றவை எக்கேடு கெட்டுப் போனாலும் காரியமில்லை, நாங்கள் மட்டும் நல்லாயிருந்திட்டாப் போதும்’ எண்டு, மற்ற மனிசர் மாஞ்சாதியப் பற்றி எல்லுப் போலவும் எண்ணாம இந்த நாய் தின்னாக் காசுக்காகக் கவடு கிழிய ஓடுறாளவை. எல்லாரும் பெரிய வேதக்காறராம். ‘உன்னைப்போல உன்ர அயலட்டானையும் நேசியெண்டு எங்கட ஆண்டவர் வேதத்தில சொல்லியிருக்கிறதை, இவே சும்மா படிச்சு, உலக ஒப்பினைக்குப் பாடம் பண்ணுறதுதான். தாங்கள் அதுமாதிரி எப்பனும் நடவாயினம். இவயளாலதான் எங்கட ஊருக்கும் நாசம் வருது.

ஆருக்கு என்ன கெடுமதி செய்தன்? நான் எவயெண்டும் பாராம ஓரவங்கிஷமில்லாம நடக்கிறதால தான், இம்மட்டுப், புள்ளயளைப் பெத்தும் ஆருக்கேனும் பின் செல்லாமல் இருந்து என்ர இந்தப் பொட்டுக் குடிசைக்குள்ள ராசாத்தி மாதிரி சீவி;க்கிறன்.

‘ம்பா… ம்பா…’

‘இதாற்றயடி இந்த மாடு? அவள் எமிலியாளின்ரயாக்கும்? உஞ்சு ஊச்சி’

சங்கதியச் சொல்லிப்போடுவமெண்ட பாத்தா, அவள் ‘கள்ளி’யெண்டு சொன்ன சொல்லாக்கும். அதைச்சொல்லி முடிக்கவும் மனம் வருகுதில்ல. நினைக்க நினைக்க உண்ணாணை பொல்லாத ஆவேசமாகக கிடக்கு.

‘இஞ்சபார் இதுக்குள் இதுகளின்ர கூத்தை? சிக்.. அடி காகம் கரைஞ்ச பிறகால இந்தச் சனி நாய் எங்கினேக்கையோ கிடந்து நாறல் மீனைத் திண்டிட்டு வந்து முன்னால நிக்குது. ம்… புழுத்த நாத்தம். உனக்கு வேறு இடமில்லையா? எங்கதான் போவன் அடி சூய் – போங்கால….

உவள்தான் உவள் முத்தாரி யெண்டவள். அவன் ராசதுரையின்ர வானைத் தேடிப்போற அவசரத்தில ஒரு கூறு மீனை, அப்பிடியே பறியோட தோணியில விட்டிட்டுப் போட்டாள். போனவள் மீனைக் குடுத்துப்போட்டு இந்தப் பறி மீனை எடுத்துக்கொண்டு போ. அதுகூட இல்ல அதை மறந்திட்டுப்போய் அவளவயோட குமுதம் குத்திக் கொண்டிருக்கிறாள். அந்தக் களபுளேக்க ஆர் அதை எடுத்தினமோ எனக்கெப்பிடித் தெரியும்? என்ன மாயமோ அதைக் காணேல்ல நான் புறிஞ்சு எங்கினயோ ஒரு பக்கத்திலபோய் நிண்டிட்டன். அவன் அதை அந்தவுடன் என்னிட்ட ஒரு சொல்லுக்கூடச் சொல்லாம, ‘திரேசி அக்கா தான் அங்கினேக்க நிண்டவ , அவதான் எடுத்திருப்பா?’ எண்டு எலும்பில்லாத நாக்கால, வாய்க்கு வந்தாப்போலச் சொல்லிப்போட்டாளாம். வானடியில போய் அவ என்ன மயக்கத்தில நிண்டவ? அவவுக்கு வந்த நீரேத்தத்தைப் பாரேன். அப்பிடி என்னில சமுசயப்பட்டவள், ‘வாடி நான் அந்தோனியார் கோயிலில் – அவரின்னர சுருவத்தில தொட்டு மெழுகுதிரி கொழுத்திறன். ‘நீ தான் அந்த மீனை எடுத்தனி’ எண்டு வந்து, அவரின்ர மூதாவில் தொட்டுச் சத்தியம் செய்யடி எண்டு ஆள் சொல்லி அனுப்பி விட்டன். அதுக்கும் சம்மதியாளாம். அல்லாட்டி நானெண்டாலும் சத்தியம் செய்யிரன்ரி வாடி’ எண்டன், அப்ப பாருங்கோவன் அவளின்ரை நாயத்தை? அதுக்கும் முன்னிக்காளாம்,

தான் உள்ளாரும் கள்ளாளுமா ஒளிச்சு விளையாடுமாப்போல அவள் என்னையும் நினைச்சிட்டாள். என்னத்துக்கு என்ர வாயத் துறப்பானெண்டு இம்மட்டு நேரமா அடக்கிக் கொண்டு இருந்தனான் இனிமேல்பட்டு இதையும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கவோ?

ஏன் எனக்கென்ன ரகசியம் ஒண்டும் தெரியாதெண்டு நினைச்சிட்டாளே! பிறகும் ஈ மொச்சாப்போல வான் முட்ட விளக்குமாத்து ஈக்கில் கணியம் இந்த அடுக்கில சனம் குவிஞ்சுகொண்டு நிக்கேக்க, கட்டின புருயனுக்கும் மறைச்சு, அப்புடியே முழு மீனையும் பறியையும் ராசதுரையெண்டவனுக்குத் தூக்கி என்ன உருசயில எடுத்துக் குடுத்தவளெண்டு எனக்கென்ன தெரியாதாக்கும்? எனக்கெல்லாம் பாக்கியம் சொன்னவள். உதுதான் சங்கதி. எடியகோதாரி , நீ குடுத்தனி குடன்ரி , அதுக்கு எனக்கென்ன? அதுக்கேன்ரியாத்தை ‘ஒண்டும் தெரியாத கன்னி என்னைப் பிடிச்சாட்டுது சன்னி’ எண்டு விண்ணானம் கொத்துவான்? உப்பிடித்தான் ஒவ்வொருத்தரும் புழையச் செய்துபோட்டு தாங்கள் அம்புடாமல் இருக்கிறதுக்காகச் சும்மா கிடக்கிறவேயின்ர தலையில தூக்கிப்போட்டுத் தப்புறதுக்குப் பாக்கினம். அதெல்லாம் இந்தத் திரேசியிட்ட அவியாது.

எக்கணம் அவள் என்ர அக்கினேசு இந்த நேரத்தில் முன்னால நிண்டாளெண்டால் இத்தறுதியில் உவள் முத்தாரியின்ர வாயப் பண்ணாடையாட்டம் தான் கிழிச்சு வைப்பாள். என்ன செய்யிறது ? அதுதான் எனக்கு ஒரு ஆறுதலெண்டு பாக்க, அதுவும் எங்கினயோ கண்ணுக்கெட்டாத தேசத்தில போய்க் கிடக்குது. எங்கெண்டாலும் அது தன்ர புரியனோட தேனும் பாலுமா சுகமா இருக்குதே! அது எனக்குக் காணும். அதுதானே நான் இந்த அந்தோனியாரிட்ட கேட்ட வரம்.

அதுவும் இப்ப மூண்டு புள்ளக் காறியாப் போட்டுது. ரண்டு பொட்டைக் குஞ்சையும் ஒரு ஆண் கொந்தலையும் அந்தோனியார் அதுக்குக் குடுத்திருக்கிறார். இப்பயும் இந்தக் கோசு தலமுழுக்கு நிண்டு போச்சாம். கடுதாசியும் போன செவ்வாய்க்pழமைதான் வந்திருக்கு. தலைப்புள்ள இப்ப ரண்டு படிக்குது, பொடி பள்ளிக்கூடத்துக்குப் போற வயதாப் போச்சு. குடும்பம் பெருத்த நேரத்தில ஏன் மேலைக்கும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் கிடப்பான்,? இந்தப் புள்ளப் பெத்துக்கு வந்து இஞ்சினேக் ஒரேயடியா ஊரோட இருந்தா எனக்கும் இந்த வயதுபோன நேரத்தில ஆறுதலாகயிருக்கும்;. மற்றவளவேயும் வாய்க்கு றாங்கியாய எனிமேல்பட்டு எழுந்தமானமாக் கதையாளவை. இருக்கிறவன் சரியா இருந்தா சிரைக்கிறவன் செம்மையாச் சிரையானே?

ஏல்லாச் சங்கதியையும் ஒருமிக்க எழுதி ம்… ஆரைக்கொண்டு எழுத …? உந்தப் பொட்டை உங்கினேக்க நிண்டு விளையாடினாள். எங்க அதுக்கிடையில் போட்டாள்?

‘எடிய புள்ள ஜெயமணி’

‘கூ, கூய் ‘

‘டியோய் … இஞ்ச வா ஒரு கடுதாசி எழுது’

எங்க ? ஓயெண்டாள் ஆளைக்காணன். பிராத்தினைக்குப் போட்டாளாக்கும்? சரி, வரட்டுக்கு. வந்தாப் புறகு மருமோனுக்கு ஒரு கடதாசி எழுதிப் போடுவம். அதுவும் நான் பெத்த என்ர புள்ளையாட்டம். நாலு பத்துக் காரியம் தெரிஞ்சவர். நல்லதைக் கேப்பார். அதின்ர தங்கமான குணத்தாலதான் என்ர அக்கினேசும் ஒரு சண்டை சள்ளு இல்லாமச் சந்தோஷமாக் குடும்பம் நடத்துது.

எடிய முத்தாரி இரு இரு. எல்லாத்துக்கும் என்ர அக்கினேசு வரட்டுக்கு, உனக்குச் செப்படி வித்தையள் செய்து காட்டுறன். பொறும். என்னைப் பாத்துக் ‘கள்ளி’யெண்ட உனக்குச் செம்மையாகக் காட்டி வைக்கிறன்.

ம்… என்னையும் அப்புடி நினைச்சிட்டாளே. முத்தாரி எண்டவள் என்னை ஆரெண்டு நினைச்சுக் கொண்டாள்? புளுக்கச்சி. பொறு பொறு, எல்லாத்துக்கும் அவள் புள்ள அக்கினேசு வரட்டுக்கு எல்லாரையும் செக்காட்டி வைக்கிறன்.

அனுப்பியவர்: நவஜோதி ஜோகரட்னம்

– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *