முகவுரை
தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் இடம்பெறும் நிகழ்ச்சியாக வளர்ந்தது. அங்கெல்லாம் கோயில் பூசைகளில் நட்டுவ மேளத்தைக் கண்ட மக்கள், தேவதாசிகள் ஆட்டத்திற்குச் சிறிய அளவிலான மேளம் (மிருதங்கம்) பாவிக்கப்படுவதனைக் கண்டு அதனை (சின்னமேளம்) என அழைக்க முற்பட்டு நாளடைவில் அம்மேளம் பாவிக்கும் நாட்டியக் கலையையே சதிராட்டம் அல்லது ‘சின்னமேளம்’ என்ற பெயர் கொண்டு அழைக்கும் மரபு தோன்றியது எனக் கலாநிதி பத்மா சுப்பிரமணியம் போன்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
***
எழு தசாப்தங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வீர மஹா காளி அம்மன் கோவிலில் பல நாட்கள் நடக்கும் திருவிழாக்களை உபயக்காரர்கள், தமது அந்தஸ்தை சமூகத்துக்கு காட்ட போட்டிப்போட்டுக் கொண்டு நடத்துவார்கள். கோவிலுக்கு முன் சிகரம் கட்டி, மின் விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டாடுவார்கள் . ஆனைப்பந்தியடி ஓவர்சியர் பூபாலசிங்கத்தின் பூந்தொட்டி திருவிழா பிரபல்யமானது . அவர் தன் திருவிழாவின் போது தமிழ் நாட்டிலிருந்து ராஜமாணிக்கம் பிள்ளை போன்ற நாதஸ்வர வித்துவான்ககளும் நாட்டியக்காரிகளையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்துவார்.
யாழ்ப்பாணத்தில் செட்டிமார்கள் கட்டிய கோயில்களில் இறைவனுக்கு ஆடற்கிரியை வழங்குவதற்காக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்டவர்கள் தமிழகத்து ஆடல் மங்கையர்கள். இவர்களைப் போல் இலங்கையிலும் ஆடல் மங்கையர்கள் இருந்துள்ளார்கள். இவ் ஆடல் மங்கையரின் ஆடல்களே ‘சின்னமேளம்’ என்று அழைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சின்னமேளம் என்பது மிருதங்கத்தினைக் குறித்துப் பின்னர் இவ்வாத்தியத்துடன் ஆற்றுகையை நிகழ்த்தும் குழுவினரையே குறிப்பிட்டது இதனால் இந்நடனத்தை ஆடும் பெண்களை சின்னமேளக்காரி அல்லது சதிராட்டக்காரி என்று அழைக்கும் மரபு யாழ்ப்பாணத்தில் பெருவழக்காக நிலவியது.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது மிகக்குறைவு. இக் காலத்தில் சைக்கிளில் அல்லது டூ வீலரில் அவர்களைக் காணும் வாய்ப்புண்டு . அக்கால இளைஞர்களுக்கு மிகவும் குறைவாக இருந்தமையால் அழகும் கவர்ச்சியும் மிக்க சதிராட்டத்தில் ஆடல் மகளிரைக் காண்பது இளைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே எல்லாத் தடைகளையும் தாண்டி ஆடல்களை முண்டியடித்துக்கொண்டு வந்து இளைஞர்கள் பார்ப்பதில் வியப்பேதுமில்லை.
அன்றைய காலத்தில் சுவாமி வீதியுலா வரும்போது ஆடல்மகளிர் சுவாமிக்கு முன்பாக நடனமாடிக்கொண்டு சென்றதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு சுவாமிக்கு முன்பாக புனிதமாகத் தெய்வீக மணங்கமழ சின்னமேள ஆடல் நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன இன்றும் தமிழ் நாட்டில் இந்த வழமையாக நடந்து வருகிறது. இலங்கையின் சிங்களப் பகுதியில் பெரஹரா ஊர்வலத்தில் இதே மாதிரி கண்டிய நடனக்காரர்கள் ஆடுவதைக் காணலாம்.
இந்துக்கோயில் திருவிழாக்களில் “விருந்திற்கு பாயாசம் போல ஒவ்வொரு கோயில் நிகழ்ச்சிகளிலும் சின்னமேள ஆடல் சிறப்பான நிகழ்வாக இறுதியில் இடம்பெறும் இருபதாம் நூற்றாண்டு வரை சதிர்ஆட்டம், தாசியாட்டம், தேவரடியார் ஆட்டம் எனப் பெயர் பெற்று விளங்கிது . அதைப் பார்க்கக் கூட்டத்துக்கு குறைவில்லை.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பணவசதி படைத்தவர்கள் சிலர் சின்னமேளக் குழுக்கள் (செற்றுக்களை) உருவாக்கினர். இவர்கள் தென் இந்தியாவிலிருந்து தரகர்கள் மூலம் தொடர்புகொண்டு ஆடல் மகளிரை வரவழைத்தனர். இச் செற்றுகளில குறிப்பிட வேண்டிய செற் புத்தூர் மார்க்கமுண்டு செற், கொக்குவில் சின்னத்துரை செற், நீர்வேலி வைத்திலிங்கம் செற், இணுவில் சரவணமுத்து செற், அளவெட்டி ஐயாத்துரைசெற், வண்ணார்பண்ணை இராமசாமி சுதுமலை மணியம் செற் போன்றவை யாகும்
இந்த குழுக்களில் சதிராட்டம் ஆடியவர்களில் சரசு, விசாலினி , விஜயா, மல்லிகா, அம்பிகா, ஈஸ்வரி சகோதரிகள், இராமலட்சுமி போன்றவர்கள். இவர்களை விட சதிராட்டக்காரி சந்திரா என்ற சந்திரவதனிவுக்கு ஏராளமான ரசிகர்கள்.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மூன்று செற் சின்ன மேளங்கள் போட்டிக்கு இருந்தன. ஒன்று பாம்பு – மயில் நடனம் ஆடுவதில் பிரபல்யமான நாட்டியக்காரி விஜயா, ரேக்கொர்ட் டான்சுக்கு பெயர் பெற்றவள். அவளது வளைந்து ஆடும் முகாரி ராகத்தில் மயங்காதவர்கள் இல்லை. அடுத்தது கவர்ச்சியாக முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து, இளைஞர்களின் பலரின் வாயைத் திறந்தபடி ஆட வைத்த பாலசுந்தரி. கனவிலும் பலரை வாய்விட்டு சுந்தரி… சுந்தரி… என்று புலம்ப வைத்த பாலசுந்தரி. இந்த இருவரையும்விட தன் கவர்ச்சியான கல்வெட்டால் இளமை ததும்ப நெளித்து வளைந்து சந்திரவதனிவின் ஆட்டத்தைப் பார்க்கவும் – அவளது பார்வை தம்மேல் விழாதா என்று ஏங்கி அதற்காகவே முன்வரிசையில் இடம் பிடிக்க முண்டி அடித்துக் கொண்டு பலத்த போட்டிப்போட்டு மெல்லிய சேர்ட்டோடு கழுத்தில் தங்கச் சங்கிலி மிணுங்க முன் வரிசையில் இருந்த மைனர்களில் முத்திரை பதித்தவர் சிலர். அதில் முக்கிய புள்ளி மைனர் பாலா என்ற பாலசிங்கம்
ஓவர்சியர் பூபாலசிங்கத்தின் ஒரே மகன் . பாலாவின் தரிசனம் இல்லாத சந்திரவதனிவின் சதிராட்டடம் இல்லை. அத்தர் வாசனை வீசினால் மைனர் பாலா தரிசனம் தந்திருக்கிறான் என்பதற்கு எடுத்துக்காட்டு. மைனர் பாலாவின் முகத்தில் உள்ள அடர்த்தியான கிருதா மீசைஅவனின் ஆண்மைக்கும் முரட்டுக் குணத்துக்கும் எடுத்துக் காட்டு.
தன் தங்கப் பல் செட்டை சந்திரவதனிவுக்கு அடிக்கடி இளித்துக் காட்டியபடி பாலா இருப்பான். தனது விரல்களில் இருந்த வைர மோதிரம் சந்திரவதனிவுக்கு தெரியும் விதத்தில் காட்டி கைகளை அசைத்து நாட்டியத்தை இரசிப்பான்.
மைனர் பாலா திருமணம் செய்தது மாமன் மகள் சாவித்திரியை. அவள் சாவித்திரி போல் கற்புக்கரசி. தன் கணவன் பாலாவின் மன்மத லீலைகள் தெரிந்திருந்தும் பேசாமல் குடும்ப ஒற்றுமைக்காக அடங்கிப் போனாள்.
சந்திராவின் நாட்டியம் முடிந்தவுடன் தனது புதிய ஒஸ்டீன் கேம்பிரிட்ஜ் வாகனத்தில் பவுத்திரமாகச் சந்திராவை அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு பாலாவுக்கு . சந்திராவின் மனேஜராக இருந்த பாட்டுக்கார சோமு காரணத் தோடு அனுமதி கொடுத்தான். சோமு பாலாவோடு ஒன்றாகப் படித்தவன், அதனால் பாலா கேட்ட எதையும் மறுக்காமல் செய்யக் கூடியவன். பாலாவும் தன கண் வைத்த பெண்ணை அடையாமல்
யாழ்ப்பாணத்துக்கு சந்திரவதனியை அறிமுகப்படுத்தியவர் வண்ணார்பண்ணை சேகுவன் செட்டியார் இரு தடவை கொழும்பு – ஆடி வேல் திருவிழாவிலும் அவளை ஆட வைத்தார். ஒரு சிங்களப் படத்தில் நடிக்க சந்திரவதனிவக்கு அழைப்பு வந்தும் செட்டியார் அனுமதி கொடுக்கவில்லை.
சின்ன மேளம் சந்திரவதனிக்கு இவ்வளவு அழகு இருந்தும் ஏன் இவள் சினிமாவில் நடிக்கத் தமிழ்நாட்டுக்குப் போகவில்லை என்பது பல இரசிகர்களுக்கு புதிராகயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவளது அறுபது வயது தாய் சிந்தாமணியேயாகும். சிந்தாமாணிக்குக் கேரள தொடர்பு இருந்தது. திருவனந்தபுரத்தில் நாட்டியம் பழகிய சிந்தாமணி, நாயர் சாதியைச் சேர்ந்தவள். கேரளாவுக்கு வணிகம் நிமித்தம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாகராஜனுக்கு அறிமுகமாகி, அவனின் பேச்சிலும், சிரிப்பிலும், தோற்றத்திலும் மையல் கொண்டுஅவனை மணந்து யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்தவள். நாகராஜனுக்கு, நாகத்தின் விஷம் கொண்ட மனசு. அவனுக்குக் காணிநிலங்கள் இருந்தும் சொகுசான வாழ்வை விரும்பும் பேர்வழி. வணிக நோக்கமுள்ள அவன் சிந்தாமணியின் சதிர் ஆட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தினான். சிந்தாமணியின் நிறத்திலும் சிரிப்பிலும் மயங்கியவர்கள், நாகராஜன் கொடுத்து வைத்தவன் என்று வைத்தெரிச்சல் பட்டார்கள்.
சிந்தாமணிக்குச் சந்திரவதனி தாயைப் போல் பிறந்தது நாகராஜன் குடும்பத்துக்கு ஒரு அதிஷ்டம் என்றே சொல்லாம். சந்திரவதனி பிறக்கும் போது ஏழாம் இடத்தில் சந்திரன் உச்சம் பெற்று இருந்ததால் அழகுக்குக் குறைவில்லை என்று சாத்திரியார் சொன்னது உண்மையாகும் என்று சிந்தாமணி எதிர்பார்க்கவில்லை. அவளை கேரளாவில் நாயர் குடும்பத்தில் மணமுடித்து வைக்கவே அவள் விரும்பினாள். நாகராஜனின் நோக்கம் வேறாக இருந்தது. அவனின் நண்பன் மைனர் பாலாவின் ஆசைநாயகியாக தன மகள் சந்திரவதனியை வைத்து, மைனர் பாலாவிடம் பணம் சம்பாதிப்பதே அவன் திட்டம். அவனுக்குத் துணை போனான் பாட்டுக்கார சோமு .
சந்திரவதனியோடு ஒன்றாகப் படித்தவள் அவளின் உற்றான்மை சினேகிதி அமுதா அந்தனிபிள்ளை . அமுதாவின் தந்தை அந்தனிபிள்ளை . அச்சுவேலியில் சிறந்த ஆயுர்வேத வைத்தியர்.
தனக்கு சதிராட சிறிதளவும் விருப்பம் இல்லை. தன் பெற்றோரின் கட்டாயத்தினால் தனக்கு பலர் முன் பாந்துக்காக ஆட வெண்டி இருக்கிறது என்று அமுதாவுக்குச் சொல்லி சந்திரவதனி கண்ணீர் விட்டு குறைபட்டாள்.
“சந்திரா எனக்குத் தெரியும் உன் அப்பாவும் அம்மாவும் உன்னை மைனர் பாலாவின் ஆசைநாயகியாக்கி பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள் என்று. இதிலிருந்து நீ எப்படியாவது தப்ப வேண்டும் ”
“ அமுதா நான் நாட்டியம் ஆடும்போது பலர் எனக்குக் கண் அடித்து, பல் இளித்து, பார்க்கும் பார்வை, அவர்களின் உள் நோக்கம் எனக்குத் தெரியும். நான் ஒரு விலைமாது என்பது அவர்கள் எண்ணம். கோவிலில் நான் ஆடுவது இறைவனுக்கு, அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்குப் புரிவதில்லை ஒரு நாள் அந்த மைனர் பாலா நிகழ்ச்சி முடிந்து தன் வாகனத்தில் என்னை என் வீட்டுக்குக் கூட்டி செல்லும் போது காரை தனி இடத்தில் நிறுத்தி என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க முயற்சித்தான். அவன் நோக்கம் ஏற்கனவே எனக்குப் புரிந்ததால் , நான் எப்போதும் என் தற் பாதுகாப்புக்கு ஒரு சிறு போத்தலில் அசிட் எடுத்துச் செல்வேன். என்னைத் தொட்டால் அச்சிட்டை அவன் முகத்தில் வீசுவேனென்று பயமுறுத்தி அன்று தப்பித்துக் கொண்டேன். அவன் என் மேல் நிட்சயம் ஒரு நாள் என்னை வஞ்சம் தீர்ப்பான் அமுதா “ கவலையொடு சந்திரா சொன்னாள்.
“உன் பிரச்சனை தீர ஒரு வழி உண்டு சந்திரா” அமுதா சொன்னாள்.
“என்ன வழி சொல்லு அமுதா. நீ சொன்னபடி செய்கிறேன் ”
“உன்னை அந்தோனியார் கோவில் ஜோசப் பாதிரியாரிடம் கூட்டிச் செல்கிறேன் . அவரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் உன் பிரச்சனையை அவருக்கு எடுத்துச் சொல். அவர் உனக்கு வழிகாட்டுவார்” அமுதா சொன்னாள்.
“அது நல்ல யோசனை அமுதா” என்றாள் சந்திரா..
சந்திரவதனிவை ஜோசப் பாதிரியாரிடம் அமுதா ஒரு நாள் அழைத்துச் சென்றாள்.
***
அன்று நடக்க இருக்கும் ஒரு கோவில் திருவிழாவில் சந்திரவதனி சதிராட மைனர் பாலா பாட்டுக்கார சோமுவின் உதவியோடு ஒழுங்கு செய்திருந்தான் . அதற்கான பெரும் தொகை பணத்தை சந்திரவதனிவின் தாய் சிந்தாமணிக்கு மைனர் பாலா . கொடுத்திருந்தான். சதிராட்ட நிகழ்ச்சி முடிந்ததும் சந்திரவதனிவை தன் சொந்தமான காரை நகர் விருந்தினர் விடுதிக்குக் கடத்திச் சென்று அவளை தன் ஆசை தீர அனுபவிப்பதே அவன் திட்டம்
சந்திரவதனிவை சதிராட தன் காரில் ஏற்றிச் செல்ல சோமுவோடு அவள் வீட்டுக்குப் பாலா போன பொது சந்திரவதனிவின் வீட்டில் ஒரே ஒப்பாரி சத்தம் கேட்டது,
பாலாவை சிந்தாமணி கண்டதும்
“ ஐயோ தம்பி பாலா. சந்திரா எங்களை எல்லோரையும் ஏமாற்றி விட்டுப் போய் விட்டாள்” என்று கதறி அழுதாள் சிந்தாமணி தன் கணவனோடு சேர்ந்து.
“என்ன நடந்தது சந்திராவுக்கு சிந்தாமணி”
சோமு கேட்டான்.
“ அவள் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு எங்களை விட்டுப் போய் விட்டாள். இந்த கடிதத்தை வாசி அப்ப உமக்குத் தெரியும் அவளுக்கு என்ன நடந்தது என்று .” சிந்தாமணி சொன்னாள்
சோமு கடிதத்தை வாங்கி, பாலாவுக்கு கேட்கும் படி வாசித்தான் .
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான் இனி பலர் முன் சதிராட் மாட்டேன். இந்துக் கோவிலில் மட்டுமே சதிராட்டம். கத்தோலிக்க சேர்ச்சிலும் முஸ்லீம் மசூதியிலும் இந்த ஆட்டம் இல்லை. இது பணம் உள்ளவர்கள் தங்கள் மன திருப்பதிக்கு இறைவன் பேரில் உருவாக்கியது . இந்தியாவில் நடனமாடும் பெண்களைக் கோவிலுக்கு விற்று விடுவார்கள். என்னால் இனியும் கோவிலில் நடனம் ஆட முடியாது நான் மதம் மாறி கன்னியாஸ்த்திரியாக மாற முடிவெடுத்து விட்டேன் . நான் தேற்கே உள்ள ஒரு கன்னியாஸ்த்திரி மடத்துக்குப் பயிற்சிக்குப் போகிறேன் . என்னை இனி ஒருவரும் தேடவேண்டாம்.
இப்படிக்கு
திரேசா (சந்திரவதனி)