கனடாவில் கை லாண்ட் மெமோரியல் கார்டனில் அப்படி ஒன்றும் சனம் அலை மோதவில்லைத்தான். நூறுபேர்வரை அங்கு கூடியிருந்தார்கள்.
அக்கார்டனில் மைக் ஒன்றின் முன் நின்று கொண்டு தம்மை ஒரு நாட்டுப்பற்றாளர் எனத் தாமாகவே அறிமுகப்ப்டுத்திக் கொண்ட சிவக்கொழுந்தர் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் தம்மைப் பற்றிய பிரலாபமே அதிகம் தொனித்தது. தாம் தமிழரசுக் கட்சியின் அணுக்கத் தொண்டராக இருந்து அக்கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.
தந்தை செல்வாவுக்கும் தமக்கும் இருந்த அன்புத் தொடர்பு பற்றிக் கூறுகையில் அவர் நாத்தழுதழுத்தது. அமரராகிச்… சிவமாகிக் கிடந்த சதாசிவத்தார் பற்றியும் அவர் தமது வழிகாட்டலில் நாட்டுக்கு உழைத்தது பற்றியும் நினைவு கூர்ந்து கொண்டார். அத்துடன் சதாசிவம் கோயில் தர்மகர்த்தாவாக இருந்த செய்தியும் வாசகசாலை செயலாளராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பணியும் அங்கு சிவக்கொழுந்தரால் விண்டுரைக்கப்பட்டன.
அவர் இவ்வாறு நினைவு கூறிய பொழுதெல்லாம் அங்கிருந்த சதாசிவத்தின் பிள்ளைகள் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாய் விம்மிப் பொருமிக் கொண்டிருந்தனர்.
இன்னும் நால்வர் சதாசிவம் ஐயா பற்றி இரங்கல் உரை ஆற்ற இருப்பதால் நான் இச்சிற்றுரையை (40 நிமிடங்களை முழுமையாக விழுங்கிக் கொண்ட சிற்றுரை) நிறைவு செய்கின்றேன்…”எனக் குறிப்பிட்ட போது சபையிடையே சிறு கைதட்டல் கிளம்பி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டதனால் சட்டென அடங்கியது.
சிவக்கொழுந்தர் அதைத் தமக்குக் கிடைத்த பாரட்டாகக் கருதினாரோ என்னமோ அவர் இதழ் கடைசியில் புன்னகை மலர்ந்து சுருங்கியது.
வந்தவர்கள் பொறுமை இழந்திருக்க வேண்டும். கடிகாரத்தைப் பார்ப்பதும் ஒருவரோடு ஒருவர் மிகக் குறைந்த தொனியில் குசுகுசுப்பதுமாய் இருந்தார்கள்.
சதாசிவம் அப்படி யொன்றும் பிரபல்மான மனிதர் இல்லை.
யாழ்ப்பாணத்தில் கட்டுவன் சதாசிவத்தின் பிறந்த இடம். தோட்டம் அவரது சீவனோபாயத்துக்குக் கைகொடுத்தது. மனைவி இரு பிள்ளைகள் என இவரது வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் மிக அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழ்ந்த இவரைப் பற்றி ஊரார் சதாசிவம் மிதிச்ச இடத்தில் புல்லும் சாகாது எனச் சொல்லுவதைத் தவிர வேறொன்றும் பேசுவதற்கு இருக்கவில்லை.
நாட்டில் பிரச்சினை தொடங்கிய போது இவர் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்தன. தொண்னூறுகளிலேயே இவர்கள் இடம் பெயர நேரிட்டது. இடம் பெயர்ந்த இடத்தில் இவரால் தோட்டம் செய்ய முடியவில்லை. காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு ஒருவாறு காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.
பத்தாம் வகுப்பைக் கூட ஒழுங்காக முடிக்காத அவரது மகன் கருணை காய்கறி வியாபாரத்தை இழிவாகக் கருதினான். வெளிநாட்டு மோகம் வேறு அவனை ஆட்டிப்படைத்தது. அவனுக்கு அமைந்த நண்பர்களால் குடி சிகரட் பழக்கங்களும் அவனிடம் ஒட்டிக் கொண்டன. இவற்றால் தமக்கு இருக்கும் நல்ல பெயரை மகன் அழித்து விடுவானோ என்ற பயம் சதாசிவத்துக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. கூட்டிக்கழித்துப் பார்த்ததில் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதே சிறந்த வழி என்ற தீர்மானத்துக்கு அவர் வந்தார். மனைவியின் நகை, வட்டிக்குப் பணம் என்று துடைத்து வழித்து ஒருவாறு கனடாவுக்கு கருணையை அனுப்பி வைத்தார்.
கால ஒட்டத்தில் மகள் ராதாவும் திருமணமாகி கனடாவுக்குப் போய் விட்டாள். மனைவியுடன் தனித்திருந்த போது வெறுமை அவரைப் பற்றிக் கொண்டது. ஆனால் சொந்த மண்னில் வாழ்வது அவருக்கு நிம்மதியைத் தந்தது. காலம் பழைய ஓட்டத்தில் ஓடுவதாக ஓர் எண்ணம் மனதில் குடிகொண்டது. ஆனால் அந்த அமைதி … … …தொடரவில்லை.
மகள் ராதாவுக்குக் குழந்தை பிறந்த போது அவள் தாய் யோகத்தை ஸ்பான்சர் பண்ணிக் கனடாவுக்குக் கூப்பிட்டாள். மகன் கருணைக்கும் கலியானம் நடக்கவே பிரசவத்துக்காய் போன யோகம் கனடாவிலேயே நிரந்தரமாய் தங்கிவிட்டாள். அவளிின் நச்சரிப்பும் பிள்ளைகளின் கட்டாய வேண்டு கோளும் சத்தாசிவத்தையும் கனடாவாசியாகிவிட்டன.
தங்கள் பிள்ளைகள் அன்பு மிகுதியாலோ அல்லது கடமை உணர்வினாலோ தங்களை, கனடாவுக்கு கூப்பிடவில்லை என்ற உண்மையை அங்கு வந்த சிலகாலங்களிலேயே அவர்கள் உணரும் நிலை ஏற்பட்டுவிட்டது.
பெற்றோர்காள் தமது முதுமைக் காலத்தில் பிள்ளைகளிடம் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்? பிள்ளைகள் காட்டும் அன்பு, ஆதரவு,. மதிப்பு… … …பேரப்பிள்ளைகளின் மழலை தழுவிய அன்பு, கலகலப்பு… … … இவை யாவுமே சதாசிவத்துக்கோ அவர் மனைவி யோகத்துக்கோ பிள்ளைகளிடமிருந்து கிடைக்கவில்லை.
அவர்கள் பேரப்பிள்ளைகளைப் பராமரிக்கும் ஆயாக்களாகவும் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப்பணத்தை வாங்கிப் பிள்ளைகளிடம் கொடுத்து விட்டுத் தமது சிற ுதேவைகளுக்கும் பிள்ளைகளிடம் கை ஏந்துபவர்களாகவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். கோயில் குளம் சந்தை என என்றுமே எறும்பு போலச் சுறுசுறுப்பாய் இயங்கி வந்த இருவரும் பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு சிறைவாசத்தையும் அனுபவிக்க நேர்ந்தது.
இவ்வாறு மூச்சுத் திணறி வாழ முடியாது போனதால்தானோ என்னமோ யோகம்மா சிறகு விரித்து இந்த உலகை விட்டுச் சென்று விட்டா. அதன் பின் சதாசிவத்தின் நிலை மேலும் மோசமானது. தன் மனப்பாரத்தை இறக்கி வைக்க ஆதரவாய் இருந்த ஒரே சீவனும் அவரை அம்போ எனத் தவிக்க விட்டுப் போய்விட்டது. இதனால் ஏற்பட்ட மனச் சோர்வு அவர் ஆரோக்கியத்தையும் கொள்ளை கொண்டது. இந்த அவலங்களுக்கிடையே மூன்று வருடங்களை ஒருவாறு ஓட்டிவிட்டார்…இல்லை உந்தித் தள்ளிவிட்டார்…
கடந்த இரண்டு மாதங்களுக்கிடையில் ஐந்து தடவைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சதாசிவத்தார் திரும்பி விட்டார். இந்தக்காலத்தில் தந்தை மீது கொஞ்ச நஞ்சம் வைத்திருந்த பற்றுதலையும் பிள்ளைகள் இழந்திருக்க வேண்டும்.
முந்தினநாள் இரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் அவஸ்தைப் பட்டார். பின்னேரம் மகள் ராதா இரவு உணவாக சூப்பை அவரது கட்டிலுக்கருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு இரவு வேலைக்குச் சென்று விட்டாள். மகன் கருணை நடு இரவு வேலையால் திரும்பியவன் சிறிது நேரம் டி.வி பார்த்து விட்டு படுக்கைக்குப் போய்விட்டான். அவன் மன அந்தரங்கத்தில் தகப்பனின் உடல்நிலை பற்றிய எண்ணம் சிறிதும் தோன்றவில்லை. டி.விச் சத்தத்தோடு சதாசிவத்தின் முனகல் சத்தமும் அடங்கிப் போனது.
காலை ஐந்துமணி… …சதாசிவத்தின் சீவன் அடங்குவதற்குச் சரியாக ஐந்து நிமிடங்கள்தான் இருந்த நேரம்… தூக்குக் கைதிக்குக் கூடக் கடைசியாசை நிறைவேற்ற ிவைக்கப்படும். ஆனால் … … … ″தண்ணி… … தண்ணி… … என்று தாகத்தால் தவித்த சதாசிவத்தின் குரல் மட்டும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தவர் எவரையும் எழுப்பும் வலிமையைப் பெற்றிருக்கவில்லை.
சதாசிவத்தின் மரணம் … …அவரது பிள்ளைகளைப் பொறுத்தவரை ஒருவகையில் நட்டத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அவருக்கு வரும் அரச உதவிப் பணம் நட்டக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் எந்தத் தீங்கிலும் நன்மை உண்டு. இந்தத் தத்துவத்தைப் பிள்ளைகள் உணர்ந்தனர் போலும்… தமது இருப்பைக் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்துக்கு உணர்த்த நல்ல ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்த அவர்கள் முடிவு செய்ததன் வெளிப்பாடுதான் இந்த மரணச் சடங்கும் அதன் ஈடும் எடுப்பும்…
சிவக்கொழுந்தரைப் பின்பற்றி கதிர்வேலு, சிவஞானசுந்தரம், சரவணபவன், ஜோர்ஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்குச் சில மணித் தியாலங்களை விழுங்கிக் கொள்கிறார்கள். அவர்களும் கூட… தங்கள் இருப்பைக் கனடாவாழ் தமிழ்ச் சமூகத்துக்கு உணர்த்துமுகமாக அண்மையில் பேச்சாளர்களாய் மாறியவர்கள்தான். கோயில்கள், பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி மரணச்சடங்குகள் கிடைத்தாலும் இவர்கள் தப்ப விடுவதில்லை.இவர்களுக்குத் தேவை சபையும் மைக்கும் மட்டுமே.
இவர்களால் சதாசிவத்தின் அரசியல் சமூகப் பெருமைகள் மட்டுமன்றி அவரையும் அவரது மனைவியையும், அவரது பிள்ளைகள் எவ்வாறெல்லாம் போற்றிப் பேணினார்கள் என்பதும் விரிவாக இவ்விடத்தில் சிலாகிக்கப்பட்டன.
கிரிகைகள் ஒருவாறு நிறைவேறி பெட்டி காஸ் போறனையில் தள்ளப்பட்ட போது பிள்ளைகளின் கூக்குரல் அந்த இடத்தை ஒருகணம் அதிரச் செய்தது. இந்த நாடகத்தின் அந்தரங்கங்களை உணர்ந்திருந்த சபையோர் சிலர் மட்டுமின்றி விடுதலை பெற்றுச் சிவமாகிவிட்ட சதாசிவத்தின் ஆன்மாவும் வேதனையுடன் சிரித்துக் கொண்டது.