“”என்னங்க, நியூஸ் கேட்டதுலருந்து என்ன நீங்க பேயறைஞ்சா மாதிரி ஆயிட்டீங்க. உங்க மாமா டெத்துக்கு எப்ப போறதுன்னு சொல்லுங்க…” புடவை கொசுவத்தை சரிசெய்தபடியே கேட்டாள் சுதா.
“”அதான் எனக்கும் ஒண்ணும் புரியல சுதா. சாதாரண நாளா இருந்தா கூட பரவாயில்ல. ஒருநாள் வியாபாரம் ஒழிஞ்சு போவட்டும்னு கடைய பூட்டிட்டு கிளம்பிரலாம். ஆறு மாசமா தள்ளிப் போயிட்டே இருக்கிற விஷயம்… இன்னிக்குத்தான் ஒரு முடிவு ஏற்படும்னு நம்பிக்கிட்டிருக்கேன். அந்த சேட்டு வேற ராஜஸ்தான்லருந்து மூணு வாரம் கழிச்சு இன்னிக்குதான் வர்றாரு” நான்கு நாள் தாடியை தேய்த்தவாறே சொன்னான் தியாகு.
“”சரிங்க, அந்த புரோக்கரே பேசி கீசி முடிச்சிட மாட்டாரா?”
“”சரியாப் போச்சு போ. வேற வினையே வேணாம். சொந்த காசுல சூனியம் வெச்சுக்கிற கதைதான். வேற யாருக்காவது கடைய முடிச்சிக் கொடுத்துட்டு அவன் கமிஷன்லயே குளிச்சிடுவான்”
“”இப்ப என்னங்க பண்றது?”
“”வேற வழியில்ல. நீ மட்டும் போயிட்டு வா”
“”என்னங்க, செத்தது உங்க தாய் மாமா. நீங்க இல்லாம நான் மட்டும் போனா நல்லா இருக்குமா?”
“”ச்சே… என்ன சோதனை இது? இதோ வரேன் அதோ வரேன்னு இழுத்தடிச்சிட்டிருந்த அந்த சேட்டு இப்பத்தான் மனசு இறங்கி கடைய விக்க முடிவு பண்ணி தமிழ்நாட்டுக்கு வரான். சரியா இன்னைக்குன்னு பாத்து மாமா தவறிட்டாரே. கிட்டவாயிருந்தாலும் பரவாயில்ல. ஒரு எட்டு பாத்துட்டு ஓடியாந்துரலாம். பாண்டிச்சேரி போக 5 மணி நேரம் ஆகுமே…”
“”சரிங்க, சேட்ட பாத்து பேசிட்டு உடனே கிளம்பி வர முடியாதா?”
“”என்ன சுதா புரியாம பேசுற. அந்தாளு வர்றதே சரியா 11 மணிக்கு. பேரம் படிய எப்படியும் 2 மணி நேரத்துக்கு மேல ஆகுமே கண்டி, குறையாது. சரி, முதல்ல நீ கிளம்பு. 8 மணி வண்டிய பிடிச்சாகணும்”
“”ஏங்க… தியாகு வரலயான்னு உங்களத்தான் எல்லோரும் கேப்பாங்க. நான் என்ன பதில் சொல்றது அவங்களுக்கு…?”
“”ரேட் படிஞ்சதும் வண்டி ஏறிடுறேன். …எப்படியும் 90% வந்துடுவேன். மிச்சம் 10% தான் எப்படி இருக்குமோன்னு ஒரு பதட்டம். கிளம்பு நேரமாச்சு”
சுதாவை பச்சை வண்ண டீலக்ஸில் ஏற்றிவிட்டு நேராக கடைக்குச் சென்றுவிட்டேன். கடையைத் திறந்து உட்கார்ந்திருந்தேனேயன்றி என் நினைவுகள் எல்லாம் மாமாவை சுற்றியே இருந்தது. மாமா சண்முகத்துடனான எனது பிணைப்பில் முதன் முதலில் நினைவுக்கு வருவது 5 வயதில் அப்பாவுக்கு கொள்ளி போடுகையில் நடுங்கிய கையை ஆதரவாக அவர் இறுகப் பற்றியதுதான். அன்றுமுதல் மாமா என்னுடன் இருந்தால் யானை பலம் பொருந்தியவனாக உணர்ந்திருக்கிறேன். அந்த அளவு பக்க பலமாக இருப்பார்.
தந்தை இல்லாத சோகத்தை நான் அறியா வண்ணம் என்னைப் பாசத்தாலும் நேசத்தாலும் பல காலம் நிரப்பியவர் அவர்.
மாயக்கா திருவிழாவுக்கு ஊரார் மெச்சும் வண்ணம் பனைமரம் உயரம் போல தோள்மேல் தூக்கிச் செல்வார். முதன்முறையாக மண் தரையிலிருந்து பெஞ்ச் டிக்கெட்டை சினிமா கொட்டகையில் வாங்கிக் கொடுத்தவர். “”தலைவர் படத்தை செüகரியமா உக்காந்து பார்” என்பார். அவர் எம்.ஜி.ஆரை சிலாகித்து படம் முழுகிலும் கைதட்டி விசிலடித்து இருக்க, நானோ அவரையே கதாநாயகனாக பாவித்து நோட்டமிட்டுக் கொண்டிருப்பேன். அவர் நடை, உடை பாவனைகளை அப்படியே ஈயடிச்சான் காப்பி போல் டிகிரி காப்பி அடித்த நாட்கள் உண்டு.
அவர் தலை மேலே ஊசி சொருகினால் கூட முடியைத் தாண்டி மண்டையை குடைய சற்று நேரம் பிடிக்கும். அந்த அளவிற்கு மாமாவிற்கு நல்ல சுருளான அடர்முடி. எனக்கோ அடர்த்தியில்லாத முடி. அதை எப்படியெல்லாமோ பார்த்து ஏங்கியதுண்டு.
உள்ளே போட்டுக் கொண்டிருக்கும் கலர் பனியன் வெளியே தெரியும்படி முதல் 4 பட்டன்களைப் போடாமல்தான் எப்போதும் திரிவார். நானும் கலர் பனியன் கேட்டு அம்மாவிடம் அடம் பிடித்த அப்படியான ஒருநாளில் என்னை தலை வாரும் ஈருளி கொண்டு “சுரீர் சுரீர்’ என அம்மா அடித்ததும் உண்டு. இப்படியான பூஜை புனஸ்காரங்கள் சமயத்தில் மாமாவின் மீது அம்மாவுக்கு கோபம் வரும் சமயங்களில் எனக்கு கண்டிப்பாக நடக்கும்.
ஏனெனில், மாமா எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து குடி பழகுவார். இதைத் தெரிந்து அம்மாயி அம்மாவிடம் முறை வைக்க, அவரை வைய என்னை சாக்காய் வைத்து கீரை கடையும் மத்து கொண்டு மொத்து மொத்து என அம்மா மொத்திய கணக்கும் அதில் அடங்கும். ஓடிவந்து தடுத்த மாமா தான் இத்துடன் குடியை தொடுவதில்லை என அம்மாவிடம் சத்தியம் செய்துவிட்டார்.
ஆனால், மாமாவால் மறக்கவே முடியாத ஒரு விஷயமாக பீடி இருந்தது. “”அந்த கர்மத்த எப்படியாச்சும் இழுத்து தொலையட்டும் விடு” என அம்மாயியே அம்மாவிடம் சொல்லிவிட்ட காரணத்தினால் அம்மாவும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஒருசமயம் எனக்கு மீசை அரும்பிய காலகட்டத்தில் என் சேக்காளிகள் எனக்கு சிகரெட்டை பழக்கிவிட அதை கைலாசநாதர் கோயிலின் பக்கவாட்டு குட்டிச்சுவரில் வேவுபார்த்து வந்துவிட்ட மாமா, தன் வேட்டிக்கு போட்டிருந்த இடுப்பு பெல்ட்டை கழற்றி சேக்காளிகள் முன்னிலையில் “விளாசு விளாசு’ என விளாசினார். மாமாவைப் பார்த்து வானளவு பயந்த நாள் அது.
“”நீ பீடி இழுக்க… உன் அக்கா மவன் உன்னோட ஒஸ்தியா சிகரெட்டு பிடிச்சான். அதுக்கு ஏன்டா புள்ளய போட்டு இந்த சாத்து சாத்துன. உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. பாரு, வொடம்பெல்லாம் சிவந்து வீங்கி போச்சு” அரம்பினாள் அம்மாயி.
“”ஆமா, அந்த கர்மத்த என்னாலயே விட முடியல. சின்னப்புள்ள பழகிட்டான்னா கதியன்னா?” என கோபமாகக் கத்தினார். சத்தியமாய் மாமா அன்று, அந்தக்கால நம்பியாரைக் காட்டிலும் பெரிய வில்லனாய்தான்
எனக்குத் தெரிந்தார்.
ஆனால், இன்று நினைத்துப் பார்த்தால் என்ன அருமையானதொரு காரியம் செய்துள்ளார். அன்று நண்பர்களுடன் சிகரெட் பழகி பின் அதன் தொடர்போடு பல அருவருப்புகளை பழகியிருந்தால் என் வாழ்க்கைப் பாதையே அல்லவா மாறியிருக்கும்?
அதுமட்டுமல்ல, தன் வேலைகளை ஒதுக்கிவிட்டு என்னை பள்ளி சேர்க்க, கல்லூரி சேர்க்க என அலைந்தது. உன் அக்கா இருக்கும் ஊரில் இருந்தால் நம் குடும்பம் உருப்படாது என மாமாவின் புது மனைவி அங்கலாய்த்து அவரை பிழைக்க வேறு ஊருக்கு கூட்டிப் போனவை எல்லாம் வாழ்க்கைச் சாலையில் விழுந்த சருகுகள்.
தற்போது அதைத் தாண்டி பல மைல் தூரம் வந்தாயிற்று. காலச் சுழற்சியின் வேகத்தில் ஒருவரை ஒருவர் பார்ப்பதே அரிதாகி போனது. ஆனாலும் மாதத்திற்கொருதரமேனும் என்னுடைய தொடர்பு எல்லைக்கு உள்ளே வருவார். அவராகவே பேசுவார். நான் தொடர்பு கொள்ளவில்லை என்றெல்லாம் கோவிக்கவே மாட்டார். பிள்ளைகள் பற்றிய நல விசாரிப்புகள் வாஞ்சையாய் இருக்கும்.
“”உனக்கு வேலைகள் இருக்கும் வைக்கட்டா…” என நம் நேரத்துக்கு அவர் பதறுவார், தொலைபேசி உரையாடலின்போதும்.
புரட்டிப் பார்த்தால், என் வாழ்க்கை புத்தகத்தின் முக்கிய பக்கங்கள் அவரால் வடிவமைக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது, என் திருமணம் உட்பட. அவர் மூலமாக வந்த வரன்தான் சுதா.
பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் எப்படி வெள்ளை காய் கொண்டுதான் பிற காய்களை அடிக்க முடியுமோ, அதுபோல் என் இளமைக்காலம் முழுவதும் மாமாவை கொண்டுதான் அனைத்து விஷயங்களையும் அணுகுவேன்.
அவ்வளவு ஏன்? இரண்டு வீடு பார்த்து எதில் குடிபுகலாம் என யோசித்த சமயம் மாமா யதேச்சையாக ஊருக்கு வந்திருந்தார்.
இரண்டு வீடுகளையும் பார்த்தவர்… “”200 ரூபாய் வாடகை அதிகமானாலும் சற்றே செüகர்யம் குறைந்தாலும் பரவாயில்லை, வீட்டின் அருகாமையிலேயே மாவட்ட நூலகம் இருக்கிறது. உனக்கு பிறகு உன் குழந்தைகளுக்குக் கூட அது பயனளிக்கும்” என்றார், வெறும் பத்தாவதே படித்த மாமா. என் இளவயதில் பார்த்த மாமாவா இது என அதிசயித்த வேளை அது.
என் மரமண்டைக்கு தோன்றாத அனுமானங்களை எல்லாம் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து யோசனைகள் சொல்வதில் மாமா சாணக்கியர்.
அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, பாலகுமாரன்… என எண்ணற்றோர் என்னுள் உலவ தொடங்கியது அதன் பிறகுதான். இடையிடையே அவர் படித்து முடித்த சிறந்த புத்தகங்களை நான் வாசிக்க எனக்கு அனுப்பி வைப்பார். புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்பு, ச. தமிழ்ச்செல்வனின் “வெயிலோடு போய்’ எல்லாம் அப்படி வந்து என் அலமாரியில் இடம் பிடித்தவைதாம்.
அந்த புத்தகங்களில் சில வரிகளை பென்சிலால் அடிக்கோடிட்டிருப்பார். வெறுமனே கதைகளை மட்டும் படிக்காது அதனூடே வாழக்கை நியதிகளை அறிய முற்படுவதும் அதை சூசகமாக எனக்கு உணர்த்துவதுமாகவே நான் உணர்வேன்.
அப்படிப்பட்ட மாமாவின் இறப்பிற்கு போகத்தான் இத்தனை தடங்கல்கள். நினைக்கவே ஆயாசமாக இருந்தது. எப்படிப்பட்ட வாழ்க்கை இது. கண்மூடி கண் திறப்பதற்குள் நம்மை முந்திக் கொண்டு ஓட ஒரு கூட்டமே தயாராக இருக்கிறது. எங்கும் எதிலும் நிதானத்தோடு அணுகவே சந்தர்ப்பம் கொடுக்க இயலாத சூழல். ஒருவர் வாய்ப்பை மற்றொருவர் தட்டிப் பறித்தால் மட்டுமே நன்றாக வாழ்வது சாத்தியம் என்றாகி அல்லவா போயிருக்கிறது. ம்…
பெரிய தொந்தியை சுமக்க முடியாமல் சுமந்து காரிலிருந்து இறங்கினார் அமர் சேட்.
“”வணக்கம் சேட்” என்றேன்.
கூடவே புரோக்கர் மணி. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் அரசியல்வாதி போலவே காட்சியளித்தான். வணக்கம் சொன்னவர் உள்ளே போய் கடையின் மூட்டைகள் அடுக்கியிருந்த இறுதி வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தார். அவர் அடித்திருந்த சென்ட் வாசம் என் மூக்குக்கு தர்மசங்கடத்தை தந்தது. அவரை அமர வைத்த பிளாஸ்டிக் நாற்காலி உடைந்து விடுமோ என நான் அஞ்சும் அளவிற்கு விபரீத எடை.
எடுத்த எடுப்பிலேயே என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொகையைச் சொன்னார். நானும் என் பக்கத்தை சொன்னேன். அவர் சொன்னதற்கும் நான் கேட்டதற்கும் ராட்சஸ ஏணி வைத்தால் கூட எட்டாது போலிருந்தது. நான் மணியிடம் முறைத்தேன் என் நிலையை விளக்கினாயா? இல்லையா? என்று.
“”சேட்டிடம் பேச முடியல சார், எதுவும் எடுபடல” என காதோரம் கிசுகிசுத்தான்.
சரி, கடனை உடனை வாங்கியாவது கடையை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றாலும் அதற்காக கட்டக்கூடிய வட்டித் தொகையே கழுத்தை நெரிக்கும் போலும். அதற்குப்பின் வாழ்வாதாரத்திற்கு தேவையானதைப் பூர்த்தி செய்ய யாரிடம் போய் தலை தாழ்ந்து நிற்பது? சேட்டிடம் பேரம் படியவில்லை. இது சரிப்பட்டு வராது என மனம் கூறியது. அநியாய தொகை… அவ்வளவு பெரிய தொகையைப் புரட்ட முடியாது எனத் தெளிவாக கூறிவிட்டேன். சே… இதற்காகவா இறப்பிற்கு கூட போக முடியாமல் நின்றோம். சேட்டும் மணியும் இந்தியில் பினாத்தியபடியே டாடா சுமோவில் ஏறிக் கொண்டனர்.
கடிகாரத்தைப் பார்த்தேன், சரியாக 12. கடையை மூடிவிட்டு ஓடிய பேருந்தின் படியில் தொற்றிக் கொண்டேன். நின்றபடியேதான் பயணம். வழியெங்கும் வேறு கடையை எங்கே தேடுவது, அலைவது என ஆயிரம் யோசனைகள். இதனூடே மாமாவின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்த்துவிட முடியுமா என்ற கவலையும் தொற்றிக் கொண்டது.
சுதாவிடம் நான் வந்துக் கொண்டிருக்கும் விஷயத்தை காதில் போட்டேன். அவள் ஆர்வத்துடன்,
“”அப்படியா… சீக்கிரம் வாங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல குளிப்பாட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல” என்றாள்.
எனக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. ரன்னிங் கமெண்டரி போல நடப்பவற்றை என்னிடம் அவ்வப்போது அலைபேசியில் ஒப்புவித்துக் கொண்டே இருந்தாள். “”எங்க வந்திருக்கீங்க?” என பத்து நிமிடத்திற்கொருதரம் இடைச்சொருகல் இல்லாமல் இல்லை.
“”அய்யோ… குளிப்பாட்டி துணி மாத்தறாங்க. இன்னுமா வர்றீங்க. தூறல் விழறதால இங்க பறக்குறாங்க”
“”இதோ பஸ் ஸ்டேண்ட் வந்துட்டேன்மா”
“”சே… சரியான கட்ட வண்டியில ஏறித் தொலச்சிருக்கீங்க”
“”பதட்டப்படாத சுதா. ஆயிடுச்சு வந்துடுறேன்”
புயல் வேகத்தில் பறந்து வந்தது ஆட்டோ. சங்கு சக்கர வடிவ அலங்கரிக்கப்பட்ட பாடையில் மாமாவின் உடலை வைத்து, தூக்கும்போது நகராமல் இருக்க கயிறு போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். பார்த்ததும் கதறிவிட்டேன். என்னையும் அறியாமல் கண்கள் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்த வண்ணம் இருந்தது. அவருக்குப் பிடித்தமான ரோஜா மாலையை அவரின் உயிரற்ற உடலுக்குப் போட்டு மரியாதை செலுத்தினேன். பறை மேளம் முழங்க மயானம் வரை சென்றேன். அவருக்கு அவர் மகன் கொள்ளி போடும் வரை பக்கத்தில் இருந்தேன். மனநிறைவாய் இருந்தது.
அலைபேசி அழைத்தது. புரோக்கர்தான் பேசினான். “”நீ கேட்ட தொகைக்கே சேட் உனக்கு கடையை முடிச்சி கொடுக்கறேன்ட்டு சொல்லிட்டாருப்பா”
“”நிஜமாவா சொல்ற?”
“”ஆமாம்பா தியாகு. அவர் மலைபோல நம்பியிருந்த இன்னொரு பார்ட்டி அடிமாட்டு விலைக்கு கேட்டான். அதான் சேட் மனசு மாறி உனக்கே கடைய கொடுக்கறதா ஒத்துக்கிட்டாரு. நாளைக்கு வந்துடுவேல்ல. அக்ரிமெண்ட் போட்டுடலாம். இல்லாட்டா ஊருக்கு போனா திரும்ப வர 5 மாசம் ஆகுமாம்”
“”நாளைக்கு வந்துடுவேன். பாத்துக்கலாம்” தொடர்பைத் துண்டித்தேன்.
அங்கேயே இருந்திருந்தால் வேறு வழியின்றி இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என என் தொகையை நானே ஏற்றி இருக்கக்கூடும். இங்கே வரவேண்டி இருந்ததால் மனம் எதிலும் செல்லாமல் நான் பிடித்த முயலுக்கு இரண்டே கால் என நிற்கும்படி ஆயிற்று. அது இப்போது நல்லதாகிப் போனது.
இறுதியாக மற்றொரு முறை மாமா எனக்கு நல்லதே செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
– பவித்ரா நந்தகுமார் (மார்ச் 2014)