(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சண்டைகளில் பல வகைகள் உண்டு. ஆனால் குடும்ப சண்டைகள் ஒன்றும் பெறாத விசயங்களுக்காக நடக்கும். பரவலாக பொழுது போகாத வெட்டிக் கூட்டம் ஒன்று எல்லா ஊர்களிலும் உண்டு. அவை இந்த சண்டைகளுக்கான ஆடியன்ஸ்.
வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளை வானொலி ஒலிச்சித்திரமாக சன்னலருகில் நின்று கேட்கும் அந்த கூட்டம். சண்டை முற்றி தெருவுக்கு வரும்போது அது தொலைக்காட்சி தொடராகி விடும். பெரியசாமி, சின்னச்சாமி சண்டை ஒரு மெகா சீரியல். இதற்கு இரட்டை இயக்குனர்களாக செயல்படுவார்கள் அவர்களின் மனைவிமார்கள். தெரு கூட்ட சுவாரஸ்யம் கெட்டுப் போகதபடி டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறும்படி அவர்கள் இரு சாமிகளுக்கும் காரணம் அமைத்துக் கொடுப்பார்கள்.
பெரியசாமியும் சின்னசாமியும் சண்டை போட்டுக் கொள்வது மாதத்தில் இரு முறையாவது நடக்கும். மப்பேடு கிராமத்து மக்கள் அப்படி ஒரு சண்டை நடந்தால், ஊரிலுள்ள அத்தனை வீடுகளிலிருந்தும், ஊர் மக்கள் போட்டது போட்டபடி வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி என்ன விசேசம் அவர்கள் சண்டையில்..
ஊர் விசயங்களிலிருந்து உலக விசயங்கள் வரை மாட்டி கொண்டு சீரழியும் அவர்களது சண்டையில்.. ஒபாமாவும் கிளீண்டனும் சிக்கி சீரழிவார்கள். பின் லேடன் புழக்கடைக்கு ஓடுவார். சதாம் உசேன் சர்ச்சுக்குள் பதுங்குவார்.
“ஏலே நான் பெரியவண்டா சொல்லிப் போடறத மருவாதயாக் கேளு..”
“கொஞ்சம் போல சுருட்டை முடியும் முன் வழுக்கையும் இருந்தா நீ என்னா அமெரிக்காவோட ஓபாமாவா.. நீ சொன்னா கேட்டுக்கறதுக்கு “
“நீ என்னா சதாம் உசேனா யார் சொன்னாலும் கேக்க மாட்டேங்கறதுக்கு “
“ஒன் பேச்சை உன் பொண்டாட்டியே கேக்க மாட்டேங்குறா இதில நான் கேக்கணுமா..”
“ஏய் பேச்சு என் வரையிலும் இருக்கட்டும்.. என் வீட்டை இழுக்காதே”
“என் மதனியைப் பத்தி நான் பேசாம எவன் பேசுவான்“
கடைசியில் விசயம் அற்பம் பெறாததாக இருக்கும். கோழிக் குழம்பு வைத்தது.. தனக்குத் தரவில்லை என்று சண்டை.. ரெண்டாம் ஆட்டம் சினிமா போன போது தன் மனைவிக்கு மட்டும் கலர் வாங்கிக் கொடுத்தது என்று சண்டை..
மறுநாள் பலசரக்கு கடையில் கல்லாவில் பெரியசாமி உட்கார்ந்திருக்க சின்ன சாமி பவ்யமாக அருகில் நிற்பார்.
“அண்ணே பெருமத்தூர் சந்தையில் மொளகா மலிவா விக்காம்.. ரெண்டு மூடை வாங்கிப் போட்டா, வெலை ஏறிச்சுன்னா நாலு காசு பாக்கலாம் “
“அப்படியா சொல்ற.. சரி ஆட்டோவ எடுத்துக்கிட்டு மூப்பனை சேர்த்துகிட்டு போய் வந்துரு.. இங்கித்து வெல தெரியுமுல்ல”
மளிகை வாங்க வரும் கூட்டம் வாயைப் பொளந்து பார்க்கும். நேற்று சண்டையில் இன்று பாகம் பிரித்து இரண்டு கடையாக ஆகியிருக்கும் என்கிற அவர்களது கனவு பிய்ந்து போகும்.
பொன்னாத்தா மதியம் சாப்பாடு எடுத்து வரும்போது ஆதரவாக இரண்டு பேரும் இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொள்வார்கள். பித்தளை தூக்கில் கையை விட்டு பிசைந்து உருண்டைகளாய் எடுத்து கொடுக்கும் போது அண்ணன் சாப்பிடட்டும் என்று தம்பியும், தம்பி சாப்பிடட்டும் என்று அண்ணனும் வாயை “பொம் “ என்று வைத்துக் கொண்டு கையில் இருக்கும் உருண்டையையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
“எலே போதும்டா நடிப்பு.. நேத்து உருண்டதெல்லாம் மறந்து போச்சா.. இப்ப இந்த உருண்டையிலதான் பாசத்தக் காமிக்கறானுவோ “
ராசப்ப நாடார் வகையில் எப்போதுமே இரட்டைதான். அதுவும் பொட்டையே கிடையாது. எல்லாம் ஆம்பள புள்ளைங்கதான். ராசப்ப நாடார் தன் தம்பி கன்னியப்பனோடு கடை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்களே அவரை தன் மகன்களான பெரியசாமியையும் சின்னச் சாமியையும் அறிவுறுத்த வைத்தது.
“ஒனக்கு தெரியுமாலே.. ஊர் பயலுங்க எமகாதகங்க.. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற சனங்க..”
“அதனால் எதயாவது சொல்லி ஆதாயம் தேடணும்னு அலஞ்சிக்கிட்டு இருப்பாங்க.. சாக்கிரத சாக்கிரத..”
பெரியசாமி வெவரம் தெரியாம முழிப்பான். நாடார் விளக்குவார்.
“நானும் உங்க சித்தப்பனும் நகமும் சதையுமாத்தான் இருந்தோம். ஆனால் ஊர்க்காரங்க அதையே காரணம் காட்டி எங்களை நல்லா ஏய்ச்சுபிட்டாங்க”
“அய்யா என்னா சொல்றீங்க?”
“ஆமாலே.. ஊர்லயே பெரிய பலசரக்குக் கடை எங்களது தான்.. எதக் கேட்டாலும் அடுத்த நாளே டவுன்லேர்ந்து வாங்கியாந்து கொடுத்திருவோம்.. ஆனால் கடன்ற பேச்சுக்கே எடம் கெடையாது “ அது நல்லதுக்குத்தானே அய்யா”
“அதுவே வெனையாப் போச்சு.. நான் டவுனுக்கு போயிருக்கும்போது எவனாவது வந்து அண்ணன் சொல்லிச்சு அப்படின்னு சொல்லி நூறு ரூபாய்க்கு சரக்கு வாங்கிட்டு போயிருவான்.. தம்பி இல்லாதபோது எங்கிட்ட வந்து ‘தம்பி அவசரமா நூறு ரூபா வாங்கியாரச் சொல்லிச்சுன்னு ‘வாங்கிட்டு போயிருவான். இதக் கேட்டா ஏதாவது எங்களுக்குள்ள சண்டை வந்துருமோன்னு நான் வுட்டுருவேன். சரக்கு வாங்கிட்டு போனவன் அண்ணனுக்கு தெரிஞ்சவன் தானேன்னு உங்க சித்தப்பனும் விட்டுருவான். இப்படியே பணம் வாங்கினவன் தம்பி கடையில இருக்கும்போது சரக்கு வாங்கிடறதும், சரக்கு வாங்கினவன் நான் கடையில் இருக்கும்போது பணம் வாங்கிடறதும் நடந்துக் கிட்டே இருந்தது. ஒரு சமயம் கணக்கு பார்த்தா ஆயிரக்கணக்கில பாக்கி.. கடை நஷ்டத்தில போய்க்கிட்டு இருந்தது.’ அப்பறம் எப்படி சமாளிச்சீங்க ஐயா?”
“இந்தக் கிராமத்துல வார விடுமுறையை கொண்டுட்டு வந்தது எங்க கடையிலதான். வியாழக்கிழமை விடுமுறை.. அன்னிக்குதான் சந்தைக்கு போறது.. சரக்கு வாங்கறது.. கடன் பாக்கிய வசூல் பண்றது இதெல்லாம்.. ஓரளவு தேறி வந்தவுடனே விடுமுறையை ரத்து பண்ணிட்டோம். அதுக்கு முன்னால எங்களுக்குள்ளே ஒரு நாடகம் நடத்திக் கிட்டோம். நாடகமா? “
“ஆமாம் நாடகந்தேன்.. சண்டை போடற நாடகம்.. ஒரு நா அப்பன் ஆத்தா கிட்ட கூட சொல்லாம விடியக் காலைலே இரண்டு பேரும் தெருவில கட்டி புரண்டு சண்டை போட்டுக்கிட்டோம். ஊர் சனம் வேடிக்கை பாத்தது. அதுக்கப்புறம் என் கிட்ட உன் சித்தப்பனைப் பத்தியும் உன் சித்தப்பன் கிட்ட என்னை பத்தியும் யாரும் பேசறதில்லை. ஏய்க்கறதும் கொறைஞ்சு போச்சு.. “
ராசப்ப நாடார் மகன் பெரியசாமிக்கும் கன்னியப்ப நாடார் மகன் சின்னசாமிக்கும் இன்றளவும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் நடத்தும் கடையில் ஏய்ப்பு இல்லை.. கடன் தொந்தரவு இல்லை.
– ஜூலை 2015
– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.