சண்டைக் குமிழிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 3,166 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய ‘வாழாத’ வடக்குத் தெருவில், தங்கம்மா – லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஓடு போட்ட வீடோ அல்லது காரை’ வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில் ஓலமிட்டு துடி துடித்தன.

இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் தங்கம்மாவுக்கும் லி ங்கம்மாவுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது மகாயுத்தமாகும் இது. ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்ற பழமொழியை நம்புபவர்கள், இவர்களின் போர் முழக்கத்தைப் பார்க்கக்கூடாதுதான் மாதம் மூன்று தடவை மண்மாரியுடன் துவங்கும் அல்லது முடியும், இந்தச் சண்டையின் காரண காரியத்தைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு டாக்டர் பட்டமே வழங்கலாம். ஆனாலும் ஐம்பது வயது ஒடிசல் ஆசாமியான “தீக்கொளுத்தி” சின்னவயதில், அம்மாக்காரி, கோவில் கொடையின் போது கூட தோசை சுட்டுக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில், வீட்டுக்கூரையைத் தீயால் எரித்த பழைய மாடசாமிப் பையன்தான் – இந்த ஐம்பது வயதிலும் ஐந்து வயது குழந்தை உட்பட அனைவரும் ‘தீக்கொளுத்தி’ என்று அவருக்கு தெரியாமல் அழைக்கிறார்கள்.

வெளியூர் விளக்கெண்ணெய் வியாபாரியிடம் சண்டையின் சக்கையையும், சாரத்தையும் விளக்கிக் கொண்டிருக்கிறார்.

அதாவது –

நாற்பத்தைந்து வயது தங்கம்மா, வீட்டுத் தொழுவத்தில் கிடந்த மாட்டுச் சாணத்தையும், வைக்கோல் கழிவுகளையும், சாணிப் பெட்டியில் வாரிப் போட்டுக் கொண்டு, அந்தப் பெட்டியோடு வடக்கு பக்கமாக உள்ள தன்னோட எருக்குழியில் போட வந்தாளாம். வந்தாளா? வந்தாள். அப்போது, புடலங்காய் உடலும், பூணிக்குருவி குரலும் கொண்ட, அதே வயது லிங்கம்மா தன் வீட்டுக்குத் தெற்குப் பக்கமாய் நின்னாளாம். காறிக் காறித் துப்பினாளாம். சட்டாம்பட்டியில் பிறவியிலேயே நெருங்கிய சொந்தக்காரியான தங்கம்மாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே, அவள், தன்மீது கூடத் துப்பிக் கொண்டாளாம்.

அந்தச் சமயத்தில், இந்தத் தங்கம்மாவின் அருகே வாலையாட்டி நின்ற குடிமவனின் ராஜபாளைய நாய்க்கு, இருமல் வந்ததாம். லிங்கம்மாவிடம் விடைபெற்ற அந்த நாய், தங்கம்மாவிடம் வந்து காறித் துப்புவது போல், வாயை பண்ணியதாம். உடனே இந்த தங்கம்மா, லிங்கம்மாவை ஜாடையாய்ப் பார்த்தபடியே சாடை பேசினாளாம். எப்படி?

“பய நாயி… காறித் துப்புது பாரு காறி….. என்னமோ சொன்னான் கதையில்…. எலி ரவுக்கை கேட்டுதாம்…. சபையில்…. நீ ராசபாளையமா இருந்தாலும், நாய் நாயிதான்…”

லிங்கம்மா, விடுவாளா? விடவில்லை. “யாரைப் பாத்துழா நாயின்னு சொல்லுதே நாயே…..!”

“நீ எதுக்குழா என்னப் பாத்து துப்புனே….”

“நீ… வாரதுக்கு முன்னே, இங்க நின்னு துப்பிக்கிட்டே இருக்கேன்…. ஒனக்கு கண்ணுதான் அவிஞ்சிட்டு… காதுமா செவிடாயிட்டு….”

“நான் வருவேன்னு தெரிஞ்சே… முன்னாடியே வந்து நின்னு துப்புறியா? அவ்வளவு திமிராடி உனக்கு….?”

“ஆமாம். நீ அழகு ராணி…. ரம்ப… ரதி…. நீ வருவன்னு வந்து நிக்கேன். ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்….. உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.”

“ஏழா ஜாக்கிரதையா பேசு… இல்லன்னா கொண்டையை அறுத்துப்புடுவேன்.”

“ஒனக்கு கொண்ட போட முடியிலன்னன்னாழா இப்படி பேசறே… மொட்டச்சி… மூதேவி… பொட்டப்பய பொண்டாட்டிக்குத் திமுரப்பாரு…. என்னத் திரும்பித் திரும்பிப் பாத்து… திரும்பித் திரும்பி

நீ துப்புறதுக்கு…. எத்தனாவது சட்டத்துலழா எடமிருக்கு?”

“சீ.. நாய்கூட ஒன்னத் திரும்பிப் பாக்காது. நானா திரும்பிப் பாப்பேன்.”

“ஏய்… நாறப்பய பொண்டாட்டியே…. நண்டுப் பய பொண்டாட்டியே…. நீ இருந்த இருப்பு தெரியாதாழா… நடந்த நடப்பு மறந்துட்டாழா….”

“ஏடி… நீ நல்ல குலமானுன்னா …. என் இருப்பச் சொல்லு…. என் நடப்பச் சொல்லு…”

“நான் எதுக்குழா சொல்லணும்? படியும் தராசும் ஊர்ல்.. கைப்புண்ணுக்கு கண்ணாடியா…. ஏகேன்னானாம். எம்.ஆர்.ராதா”

“ஊர்ல வேணுமுன்னா கேட்டுப் பார்ப்போமாழா…. வெங்கப்பய பொண்டாட்டியே… வேட்றபய மவளே…. நான் நடந்து போற தூசில… அறுந்து போற தூசிக்கு பெறுவியாழா நீ….?”

தங்கம்மா – லிங்கம்மாவின் சொற்போர், வசவுப் போராய் மாறியதைக்கண்ட, கேட்ட அக்கத்து பக்கத்துக்காரிகளும், காரர்களும், ரசனையோடு, தத்தம் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள். ‘தீக்கொளுத்தி ‘ சாய்ந்து கிடந்த முருங்கை மரத்தில், உடம்பை சாய்த்தபடியே பீடிைையக் கொளுத்தினார். இருக்கிறபோது பேச்சி முத்து அண்ணாச்சி என்றும், இல்லாதபோது வாலன் (அதாவது வம்பன்) என்றும் கூப்பிடப்படும் ஒரு மனிதர் “ஏழுழா பேசிக்கிட்டே இருக்கியே… புடுச்சி பொறளுங்களா… சேவல் சண்டை மாதிரி கோழிக்சண்டையும் நடக்கட்டும்.” என்றார்குதூகலத்தோடு. வடகிழக்கு மூலையில் தென்னந்தட்டியை வாசல் கதவாய்க் கொண்ட ஓலைவீட்டுத் திண்ணையில், பல சரக்கு கடை நடத்தும் பலவேசம் ‘படியும் தராசம் ஊர்ல என்ற வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, எடுத்த தராசை இடையிலே விட்டார். மாட்டுத் தரகர் மாணிக்கம் அந்தப் பெண்களை, மாட்டுக்கு சுழிபார்ப்பதுபோல் கழித்துப் பார்த்தார். வட்டிப் பணம் வசூலிக்க வந்த தெற்குத் தெரு பிலாங்கன்’ (இவர் சின்ன வயதில் சிங்கப்பூரில் இருந்தவர். இதன் தலைநகர் பிலாங்)

ஒரு நிமிடம் வந்ததை மறந்தார்; வட்டியை மறந்தார்.

அந்த மளிகைக் கடைக்கும், இந்த எருக்குழிக்கும் இடையே இருந்த திட்டில், பீடிச் சுற்றிக்கொண்டிருந்து ஐந்தாறு பொட்டப் பிள்ளைகள் இருவர் வாய்களிலும் ஆவி பறக்க வந்த ‘ஆபாச’ வார்த்தைகளை கேட்க விரும்பாதவர்கள் போல், பாவலா காட்டி, காதுகளை லேசாய் பொத்திக் கொண்டார்கள். பிறகு, கொண்டை ஊசியை அட்ஜஸ்ட் செய்வதுபோல் காதுகளில் இருந்த கைகளை, தலைகளுக்கு கொண்டு வந்து, தங்கம்மா-ராசம்மாப் போரில் தாராளமாய் புரண்ட ‘ஏ’ராளமான வார்த்தைகளை, காதுகளில் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். அதேசமயம், ஒப்புக்கு முகஞ்சுழித்து நீராவுது இந்தச் சண்டையை நிறுத்தும்’ என்பது மாதிரி தீக்கொளுத்தியையும் நிறுத்திடாதயும்’ என்பது போல வாலனையும், இரு கண்களையும் வேறு வேறாக்கிப் பார்த்தார்கள்.

தங்கம்மாவோ , லிங்கம்மாவோ இவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாய் தெரியவில்லை. தங்கம்மா , காதுகளில் பாம்படம் பப்படமாய் ஆட , தன்வீட்டு எல்லைக்கோடான எருக்குழியில் இருந்து, லிங்கம்மா நின்ற திசையை நோக்கி மூன்றடி முன்னேறியபடியே, திட்டிக் கொண்டு போவாள். லிங்கம்மா பதிலடி கொடுக்கும்போது, அதை சிறிது உற்றுக் கேட்டுவிட்டு, பின்பு ரோஷமான பார்வை மாறாமல் நான்கடி பின்னே நடப்பாள். லிங்கம்மா கதையும் இதேதான்.

“கை நீட்டலாமுன்னு பாக்கியா… நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தால் இந்த எருக்குழியத் தாண்டி வாழா பாக்கலாம்.”

“நீ ஒருத்தனுக்கு முந்தாணி விரிச்சிருந்தா… இந்த முருங்கை மரத்த தாண்டுழா பார்க்கலாம்…”

“நான் ஒருத்தனுக்குத்தான் முந்தாணி விரிக்கேன். ஒன்ன மாதிரி பல பேருக்கு விரிக்கல… ஒன் கதயக் கேட்டா… ஊரே காறித் துப்பும்…”

“ஆமா…. ஒரு சமயத்துல ஒருத்தனுக்குத்தான் முந்தாணி விரிப்பே ….”

“ஒன் புத்திக்குத்தான் , ஒன்ன காஞ்சானுக்கு கொடுத்தாக…”

“என் புருஷன் காஞ்சான்தான். ஆனால், ஒன் வீட்டுக்காரன் மாதிரி நோஞ்சான் இல்ல….”

இப்படி, இவர்கள், எருக்குழியைத் தாண்டாமலும், முருங்கை மரத்தை மீறாமலும் எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடி பரதநாட்டியம் ஆடுவதுபோல் கால்களைத் தூக்கி, குச்சிபுடி ஆடுவதுபோல் கரங்களை வளைத்து, காப்ரே டான்ஸ்போல் புடவைகளைச் சுருக்கி, ரிக்கார்ட் டான்ஸ்போல் கழன்று சுழன்று ஆடியபடியே வசவுப் பாணங்களை ஏவுகணையாய் எய்து கொண்டிருந்தபோது –

லிங்கம்மாவின் வீட்டுக்காரார் தங்கையா எனப்படும் காஞ்சான் வயலில் கமலை அடித்துவிட்டு, காளைமாடுகளின் மூக்கணாங்கயிறுகளை சாட்டைக் கம்போடு கையில் சேர்த்துப் பிடித்தபடி, தோளில் வட்டை சுமந்தபடி வந்தார். இந்தத் தங்கையா வம்பு தும்புக்குப் போகாத மனிதர். எந்தப் போரிலும், தன் மனைவியையே மட்டந்தட்டிப் பேசும் மாமனிதர். இந்தச் சமயத்திலும், மனைவியை அடக்கப் போனார். அந்தச் சமயத்தில் தங்கம்மா, ஒரு ஏவுகணையை எகிறி விட்டாள்.

“ஒன் அல்பப் புத்திக்குத்தான், ஒன் புருஷன் காஞ்சான், இருக்கிற நெலத்த ஒவ்வொண்ணா விக்கான்……. மிராசுதார் ராமகப்பு இவன நல்லா ஏமாத்துறார். எல்லாம் ஒன் புத்தியால…”

“சரி… என் புத்தியால… இந்த மனுஷன் கெட்டது போதும்… நீ வேணுமுன்னால் இவன வச்சுக்கிடுறியா…? வேணுமுன்னா.. வாழா…. தூ…. எச்சிக்கல நாய…. இரப்பாளிப் பய மவளே…”

தங்கமான மனிதரான தங்கையாவால் தாங்க முடியவில்லை. “என் நெலத்தத்தான் விக்கேன். இவள் நெலத்தையா விக்கேன். நான் மட்டுமா மிராசுதாரர்கிட்டே மாட்டிக்கிட்டேன். இவா புருஷன் மேலத்தெரு… வில்வண்டிக்காரன் கிட்டே வில்லங்கமாக நிக்கலியா? இந்தச் சாக்குல – எனக்கு வாச்சவள் – ‘இவன்னு என்னை சொல்லுதா பாரு…”

தங்கையா, தனக்குக் கோபம் வந்துவிட்டதைக் காட்டும் வகையில், மாடுகளை சாட்டைக் கம்பால் அடித்தார். வட்டை தூக்கி தூரே எறிந்தார். இதற்கு தங்கம்மா ரன்னிங் கமென்ட்ரி’ கொடுத்தாள் :

“பொண்டாட்டிக்குப் பயந்தவன் ஓலப் பட்டய போட்டுப் போட்டு அடிச்சானாம்… ஆம்புளையாம் ஆம்புளை…”

“அதான் சொல்லிட்டேனே… அவர் ஆம்புளயான்னு தெரிஞ்சுக்கணுமுன்னா வாழா… கள்ளத் தாசி, புள்ளைக்கு அழுதாளாம்.”

தங்கம்மா-லிங்கம்மா வசவுப்போர் சென்சார் லெவலை தாண்டிவிட்டது. பீடி சுற்றும் சின்னஞ் சிறுசுகள், நிஜமாகவே காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். வாலன் ‘ஏழா…. ஏழா…’ என்று எச்சரித்துவிட்டு, துண்டை உதறியபடியே அங்குமிங்குமாய் நடந்தார். இதற்குள், வாய் வலித்த போராளிகள், கீழே குனிந்து குனிந்து மண்ணை அள்ளி, எதிர்த்திசையை நோக்கி வீச வீச, மண் துகள்கள், அணுத் துகள்கள் மாதிரி ஆகாயத்தை அப்பின.

இந்தச் சமயத்தில், அதிகாலையிலேயே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோரணமலைக்குப்போய், பல்வேறு மனித மிருக இடர்பாடுகளுக்கு இடையே விறகு வெட்டி, வெட்டியதைக் கட்டி, கட்டியதை தலையோடு தலையாய் கொண்டுவந்த பூவரசி. மற்போரிடும் அம்மாக்காரியான தங்கம்மாவை முறைத்தும், லிங்கம்மாவை முறைக்காமலும் பார்த்தபடியே விறகுக் கட்டை பொத்தென்று போட்டாள். தலையில் சிம்மாடு போல் கருள் சுருளாய் மடித்த முந்தானைச் சேலையை நேர்ப்படுத்தியபடியே முதுகுவலி யைப் போக்குபவள்போல், முதுகை முன்னாலும் பின்னாலும் ஆட்டினாள். பிறகு, இந்தச் சண்டை ஒரு பொருட்டல்ல என்பது போல், அவள் வீட்டுக்குள் போனபோது

மண்ணெடுத்துக் கைவலித்த தங்கம்மா, எதிர்தரப்பு சேதி ஒன்றை இலைமறைவு காய்மறைவாய் வெளிப்படுத்தினாள்:

“எங்க…. அக்கா… தங்கச்சி எவளும் கள்ளப் பிள்ள கழிக்கல…’ லிங்கம்மா, ராமபாணத்ததை எடுத்துவிட்டாள்:

“குத்தி காட்டுறியாக்கும் குத்தி… கள்ளப் பிள்ள கழிச்ச எங்க அக்காவ… எங்கய்யா ராத்திரியோடு ராத்திரியா… தோட்டத்துல எரிச்சாரு… ஆனால், மூளி அலங்காரி மூதேவி சண்டாளி… தட்டான்கூட கொஞ்சிக்குலாவல…? இவ்வளவு நீ பேசுன பிறவு… இந்த லிங்கம்மா யாருன்னு காட்டுறேன் பாரு… மாப்பிள்ள வீட்டுக்காரங்க கிட்ட… ஒன் மவள், கரெண்ட்காரன்கிட்டே ஆடுன ஆட்டத்தையும், பாடுன பாட்டையும் சினிமாவுல வாரது மாதிரி சொல்லப் போறேன்…. ஒன் மவள் கல்யாணத்த கருமாந்திரமாய் மாத்திக் காட்டாட்டால்…. என் பேர மாத்திக் கூப்புடுழா….”

தங்கம்மா , அதிர்ந்து போனாள். கரெண்ட் ஷாக் பட்டவள் போல், வாய் துடிக்க, கை துடிக்க, மெய் துடிக்க பதறிப் போனவளாய் கைகளை உதறினாள். லிங்கம்மாவின் கொண்டையைப் பிடித்திழுக்க நடக்கப் போனாள். கால்கள் நகரவில்லை. மண் அள்ளப் போனாள். குனிய முடியவில்லை. லிங்கம்மாவின் முகத்தை நோக்கிவிட்ட பார்வையை விலக்காமல், விலக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள். லிங்கம்மா வெற்றிப் பெருமிதத்தில் அக்கம் பக்கம் பார்த்தாள். பீடிப் பெண்கள், லிங்கம்மாவின் கடைசி அஸ்திரத்தை சகிக்க முடியாமல், பீடி இலையை ஒரு கையிலும், கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் பிடித்தபடி, லிங்கம்மாவை முறைத்தார்கள். பிறகு, ஒருத்தி அந்தப் பெண்கள் சார்பில் குரலிட்டாள்:

“ஏய்…. லிங்கம்மா சித்தி – ஒனக்கு மூள பிசகிட்டா …..? முன்னப் பின்ன யோசித்துப் போக…. வீட்ல ஆம்புளப் புள்ளங்க இருக்கிற தைரியத்துல பேசப்படாது…. ஒனக்கும் இந்த வயசுலயும் ஒரு பொம்புளப் பிள்ள பிறக்கலாம்… தங்கம்மா பாட்டியை என்ன வேணுமுன்னாலும் பேசு… அவா மவள்… நூறாண்டுப் பயிர… ஏமுழா நாக்கு மேல் பல்லுப் போட்டுப் பேசுறே…? வாய் அழுவிடப் போவுது…”

“சரிதான் போங்கடி சண்டை துவங்கும் போதுவரமாட்டியா? தானா முடியும்போது வருவியே… ஒங்க சங்கதியளும் எனக்குத் தெரியும்…”

பீடிப்பெண்கள், லிங்கம்மாவின் தாக்குதலைப் தாக்குப் பிடிக்க முடியாமல், தரையை நோக்கியபோது, இந்தத் தெருவிலி ருந்தும் கல்லூரிக்குப் படிக்கப் போகும் கனகலிங்கம், தன் வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டான். மேடைப் பேச்சாளி மாதிரி பேசினான். ஏற்கெனவே கல்லூரி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுகிறவன். எல்லா மாணவர்களும், செந்தமிழில் பேசும்போது இவன் மட்டும் பேச்சுத்தமிழில் பேசுவான். இதனாலயே, இவனுக்கு வெற்றி. நாளைக்கு மறுநாளும் ஒரு பேச்சுப்போட்டி, அதை ஒத்திகையாகவும், அங்குள்ள கூட்டத்தை கல்லூரி மாணவ மாணவிகளாகவும் அனுமானித்துக் கொண்டு ஒரு சிக்ஸர் அடித்தான்.

“உலகத்துல அவனவன், சந்திர மண்டலத்துல சஞ்சரிக்கான் ‘இன்சாட்-பியைவிட்டு, இந்தியாக்காரன் கூட என்னவெல்லாமோ சாதிக்கான்… சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணிக்கிறான். உலக மக்களே ஒன்றுபடுங்க என்கிறான். இந்த தெருவுல என்னடான்னா…. சொந்தக்காரர்களே… நாயும் பூனையும் மாதிரி அடிக்கிறாங்க…. சாகிறதுவரைக்கும் பக்கத்து வீட்டு மச்சான் பெண்டாட்டியையோ… சொந்தவீட்டு மாமியாரையோ… ஜென்ம எதிரியாய் நெனச்சு செக்குமாடு மாதிரி சண்டையிலேயே சுற்றிச் சுற்றி வாராளுவ…. இவளுவ பொழப்பே… இந்த ஒரு தெருவுக்குள்ளே முடிஞ்சுடுது…. தெக்குத் தெருவுல என்ன நடக்கு என்கிறது கூட வடக்குத் தெருக்காரிக்குத் தெரியாது… குழந்தையாய் இருக்கும்போது சின்னய்யா மவன் எதிரி… ஆளானபோது, அண்ணன் பெண்டாட்டி எதிரி… கல்யாணம் ஆன பிறகு மாமியார் எதிரி… பெண்ணெடுத்த பிறகு…. மருமகள் எதிரி… சாவு எதிரியாய் வாரது வரைக்கும் இவங்களுக்கு… எதிரித்தனமே சிநேகிதமாய் போயிடுது… சாகிறவள் கூட, சாவுக்கு வருத்தப்படாம, மச்சான் பொண்டாட்டி சாகிறதுக்கு முன்னால சாக போறமேன்னுதான் வருத்தப்படுறாள்… இதெல்லாம் ஒரு பொழப்பா…. ஊருலயே இது கேவலமான தெருவா போச்சு…. நானும்… இந்தத் தெருவவிட்டு எங்கேயாவது ஓடிப் போயிடலாமான்னு பார்க்கேன்.”

கல்லூரிப் பையன், தோளைக் குலுக்கி, கைகளை விரித்துக் காட்டி, கால்களை நடக்கவிடப் போனபோது, தீக்கொளுத்தி முருங்கை மரத்தில் இருந்து முதுகை எடுக்காமலே அவனை வைதார்.

“ஒண்ணே ஒண்ணு… கண்ணே கண்ணாய்… இந்த தெருவிலேயே படிச்ச பயல் நீதான் …. நம்ம சொந்தக்காரங்க எல்லோருக்குமே நீ செல்லப்பிள்ள… நீ இப்போ சொன்னீயே… உலக விஷயம். இத… இவளுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்ததால்… இவளுவ இப்பிடி… தெருவ நாறடிப்பாளுவளாடா? இவளுவளுக்கு, நாலு எழுத்து சொல்லிக் கொடுத்தியா? நாகரீகத்தைப் பற்றித் தெரியப்படுத்தினியா? இவளுவா… திருந்துறதுக்கு நீ என்னடா செஞ்சே….? இந்த ஒண்ணுந் தெரியாத மண்ணுவ.. நீ நெனச்சிருந்தால் தங்கமா மாத்தியிருக்கலாம்.”

தீக்கொளுத்தி, காதில் சொருகி இருந்த ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டார். அந்த சமயம், நகரப்போன கல்லூரிக்காரனை கையாட்டி தடுத்தப்படியே விட்டார் ஒரு பானம்.

“இது போவட்டும்… வட்டிக்கார தங்கபாண்டிகிட்டே நம்ம ஆளுக மாட்டிக்கிட்டு தவியாய் தவிக்காங்க….. நீ இவங்களுக்கு பேங்க்ல கடன் வாங்க…. ஏற்பாடு செய்தியா? கிடைக்கோ… கிடைக்கலியோ…? அது வேற விஷயம். மிராசுதாரர் சீமைச்சாமி, பெரியண்ணன்கிட்ட வெறுந் தாள்ல கையெழுத்து வாங்கி வில்லங்கம் பண்ணுனான். கண்டிராக்டர் ராமசாமி, ஆறுமுகம் நிலத்த அடாவடியாய் எழுதி வாங்குனான். அவ்வளவு ஏன்? எங்கேயோ நடந்த களவுக்கு, ஒன் பனையேறி சித்தப்பாவபோலீஸ்காரங்க… அடி அடின்னு அடிச்சி… விலங்கு போட்டுக்கொண்டு போனாங்க…. நீ தட்டிக் கேட்டியாடா? பேச்சுக்குப் பேச்சு…. தெக்குத் தெரு… தெக்குத் தெருன்னு… சொல்றியே… அங்கே இருக்கிற பொட்டப் பிள்ளியன்… கண்ணடிக்கத் தவிர…. நீ வேற உருப்படியாய் என்னடா செய்தே…?”

கல்லூரிப் பையன், தீக்கொளுத்தியை ஆச்சரியமாகப் பார்த்தான். அவரை அங்கீகரிப்பதுபோல், சின்னய்யா… இந்தாரும் பீடி’ என்று ஒரு வண்டல் கட்டைக் கொடுத்த, பீடி சுற்றி’ பெரியப்பா மகளை வியந்து பார்த்தான். குற்றமனோபாவம், அவன் தலையை குனிய வைத்தது. ‘அண்ணாச்சி… நமக்கு எதுவும் செய்யாண்டாம்… கல்யாண ஆன பிறவும் இந்த தெருவுக்கு, மாதம் ஒரு தடவ வந்துட்டுப் போனால் போதும். அதுவே நமக்கு மதிப்பு என்று நெகிழ்ந்து சொன்ன ஒருத்தியை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல், கவிழ்ந்து பார்த்தான். அப்புறம் பையப் பைய நடந்தான் – தெற்குத் தெருவை நோக்கி…புயலுக்குப்பின் ஏற்பட்ட அமைதி…

தங்கம்மா, வீட்டுக்குள் போய் கும்பாவை எடுத்தாள், மண்பானையை மூடியிருந்த “உல மூடியை அகற்றிவிட்டு, கும்பாவை நோக்கி பானையைச் சாய்த்தாள். சோளக்கஞ்சி, பொல பொலவென்று கும்பாவுக்குள் விழுந்தது. பிறகு, ஒரு சட்டியில் அவித்து வைத்த அகத்திக் கீரையை எடுத்து கும்பாவுக்குள் போட்டாள். நான்கைந்து மிளகாய்களை கும்பாவைப் பிடித்த கையோடு சேர்த்துக்கொண்டு, உப்புப் பெட்டியை இன்னொரு கையில் தூக்கிப் பிடித்தபடி முற்றத்தில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடி கிடந்த பூவரசியின் முன்னால் வைத்தாள். கும்பா முற்றத்துக் கல்லில் உரசிய சத்தத்தால் தன்வயமான மகளின் கண்கள், கும்பாவிற்குள் நீரை ஊற்றின. தங்கம்மா, தன்னைச் சமாளித்தபடியே, தன்மகளுக்கு ஆறுதல் கூறினாள் :

“ஏமுழா…. அழுவுறே…? அந்த ஆக்கங்கெட்ட கூவை. சொன்னான்னா புலம்புற…? கழுதய விடு… பதினெட்டு வயது வரைக்கும் ஒழுங்காய்த்தான் இருந்தே… என்ன நேரமோ…? அந்த கரென்ட்காரன் மயக்கிட்டான்.”

“நீ பெத்த மவள் ஒன்னை மாதிரியே இல்லாமப் போயிட்டேனே…?”

“நீ ஒரு தப்பும் பண்ண ல… இந்த வயசுல இது சகஜம். கரெண்டகாரன் ஒன்னை நிசமா விரும்புறான்னு லேசாய் இடம் கொடுத்தேன்….”

“ஆனாலும், எப்போ அந்தப் பயல்… கள்ளச்சாராயம் குடிக்கிறவன்… எல்லாப் பொட்டப் பிள்ளியட்டவும் ஒன்கிட்ட ஆச வார்த்த காட்டுனது மாதிரி காட்டுறான்னு தெரிஞ்சதும் நீ விலகுன பாரு அதுதான் பெரிசு…. மத்தது சிறிக….”

“லிங்கம்மா மயினி லேசுப்பட்டவள் இல்லியே….”

“அவளப் போயி ஏமுழா… மயினிங்கிற… சொள்ளமாடன் மேல் பாரத்தைப் போட்டுட்டு சும்மாக் கிடழா…. அப்படியே இந்த மாப்புள்ள போனால்… இன்னொரு மாப்புள்… விடு கழுதய…”

தங்கம்மா, மகளைத் தட்டிக் கொடுத்தாலும், உள்ளூர உதறலோடுதான் இருந்தாள். நாலு பெரிய மனிதர்களிடம் சொல்லி லிங்கம்மாவின் கல்யாணக் கலைப்பைப் பற்றி முறையிடலமா என்று கூட யோசித்தாள். இது, சும்மா இருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்ததுபோல் ஆகும் என்று அனுமானித்தாள், அமைதியிழந்தாள்.

லிங்கம்மா, வழக்கம்போல் காறித் துப்பும் போதெல்லாம், தங்கம்மா, தன் எச்சிலை தொண்டைக்குள் விட்டுக்கொண்டாள். அவள், சீவி சிங்காரித்து எங்கேயாவது புறப்படும் போதெல்லாம் இவள் படபடத்தாள். மாப்பிள்ளை வீட்டுக்குத் தான் போகப் போகிறாளோ என்று மயங்கினாள். போதாக்குறைக்கு, இந்த லிங்கம்மா, தன் மகனைப் பார்த்து, “பொறு பொறு… ஒன் பவுசு ஒரு வாரத்துல தெரியும்” ‘துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி என்கிட்டே இருக்குது சூரிக்கத்தி…’ என்று தாளலயத்தோடு ஜாடை போட்டாள்.

தங்கம்மா , பொருமினாள். ‘மாப்பிள்ளை நல்ல இடம். தங்கமான பையன்… பாவி மொட்ட கெடுத்துடப்படாதே… என் செல்ல மகள் வாழ்க்கை போயிடப்படாதே..’

ஒருவாரம் ஓடியது. மறுவாரம் திங்கள் கிழமையாக கழுத்தை மட்டும் நீட்டியது.

பூவரசி, தனக்கு வரப்போகிறவனையும், அவனை வரவிடாமல் தடுப்பதாய்ச் சபதம் போட்டலிங்கம்மா மயினியையும் ஒருசேர நினைத்தபடி, ஓய்ந்து கிடந்தாள். தங்கம்மா, வாடிப்போன மகளையே வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோது

திடுதிப்பென்று இருபது இருபத்தைந்து ஆண்களும், பெண்களும் உள்ளே வந்தார்கள். ஒவ்வொருத்தி இடுப்பிலும் கொட்டப் பெட்டி… அதன் உள்ளே நான்கைந்து கிலோ அரிசி. எல்லோரும், தாங்கள் கொண்டு வந்த அரிசியை, நெல் குத்தும் உரல் பக்கம் அம்பாரமாக்கினார்கள். இதற்குள், தீக்கொளுத்தி ஒரு வெள்ளாட்டை தலையைப் பிடித்து இழுத்தபோது, “வாலன்” அந்த ஆட்டை பின்னால் இருந்து தள்ளினார். வாலன், தங்கம்மாவை அதட்டினார்.

“என்ன மயினி…. கப்பல் கவுந்தாலும் கன்னத்துல கை வைக்கலாமா ? பூவரசிக்கு இன்னைக்கி சொக்காரங்க ஆக்கிப்போட வாரது தெரியாதது மாதிரி முழிக்கே? ஏழா…. ராசாத்தி – முட்டாப்பய மவமவளுக்கு பேர் மட்டும் பெரிசு… ஏழா… சரோஜா…. ஊர்க்கிணத்துல போயி, தண்ணியெடுத்துட்டு வாங்க…. ஏல ராமசுப்பு… குடிமகனை ஆட்ட அறுக்க கூட்டிட்டு வா…. நான் சத்திரம் சந்தையில் போயி… மஞ்ச மசாலா வாங்கிட்டு வாறேன் – உம் சீக்கிரம் ஏழா- இன்னைக்கு பீடி சுத்தி கிழிச்சது போதும். குடத்தை எடுங்களா…”

வாலனின் ஆணைக்குப் பயந்தும் பணிந்தும், பெண்கள் குடங்களையும், தவலைப்பானைகளையும் இடுப்பிலும் தலையிலும் போட்டபடி துள்ளி துள்ளி நடந்தார்கள். ஒருத்தி அம்மியை கழுவப் போனாள். இன்னொருத்தி அரிசியைப் புடைக்கப் போனாள். ஆலமரம் போல் கிளைவிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பங்காளி களான சொக்காரர்கள், வழக்கப்படி, தங்கள் குடும்பத்தில் கல்யாணம் ஆகப் போகிற பெண்ணுக்கு ஆக்கிப் போடுவார்கள். அதாவது, தத்தம் வீட்டில் இருந்து அரிசி கொண்டு வந்து, கூட்டாக ஆடு வாங்கி அறுத்து, மொத்தமாகச் சாப்பிடுவார்கள்.

கடந்த பத்து நாட்களாய் தனிமைப்பட்டுக் கிடந்த தங்கம்மா, கூட்டத்தை பாசத்தோடு பார்த்தாள். பிறகு அந்தக்கூட்டத்தில், “பாவி மொட்டை” லிங்கம்மா இருக்காளா என்று நோட்டம் விட்டாள். கண் வலித்ததுதான் மிச்சம். அவள் வராதது, தங்கம்மாவின் அதிர்ச்சியை அதிகமாக்கியது. வாலனை, அர்த்தபுஷ்டியாகப் பார்த்தாள். வாலன், பொதுப்படையாகப் பேசுவதுபோல், குறிப்பாய்ப் பேசினார்.

“எந்த நாயி சந்தைக்குக் போனால் உனக்கென்ன மயினி…? வந்தால் வாராள். வராட்டால் போறாள். அன்னைக்கு அவள் சபதம் போட்டதைப் பற்றி யோசிக்கியனா…. அப்படி அவள் சொன்னதை செய்தாள்னா…. அவள் குடலை உருவி தோள் மாலையா போட்டுட் மாட்டனா…? கவலைப்படாதிய. ஏழா… செல்லக்கனி! வாடாப்பூ கல்யாணப் பெண்… வார ஞாயிறுல கல்யாணம். அவள் ஏமுழா அடுப்புப் பக்கம் அனுப்புறி? ஆக்கிக் போட வந்த லட்சணத்தப் பாரு… நீங்க, ஏன் மயினி கவலைப்படுதிய…? அவள் வராட்டால், நாம அவ வீட்டு… எட்டுக்கோ…. எழவுக்கோ போவமாட்டோம்…. கரென்ட் கனைக்சன சொன்னான்னா… குடலை உருவி…”

வாலன், லிங்கம்மாவின் குடலை உருவி தோள் மாலை போட்டால், தங்கம்மாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது கரென்ட்காரன் – வாடாப்பூ காதல் விவகாரத்தை எட்டு ஊருக்கு’ தம்பட்டம் அடிக்கது மாதிரி ஆயிடுமே… இந்த நொறுங்குவான் வாலன், கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன்னு சொல்ல மாட்டக்கானே…. அந்த தட்டு கெட்ட லிங்கம்மா குடல் யாருக்கு வேணு? இப்பவே நான் பெத்த பொண்ணு… ராத்திரியில திடீர்னு எழுந்து உட்காருறாள்… பரக்கப் பரக்க விழிக்காள். பையப்பபைய அழுவுறாள். இந்த தட்டுக்கெட்ட முண்டயால , கல்யாணம் நின்னுட்டால், என் செல்ல மகள் ஆத்துலயோ… குளத்துலயோ… அரைமுழக் கயித்துலயோ…

தங்கம்மா, முக்கைச் சிந்தியபோது –

லிங்கம்மா, இடுப்பில் வலது கை சுற்றிப்பிடித்த, கொட்ட பெட்டியில் அரிசி குலுங்க, இடது கை சுற்றிப்பிடித்த பெரிய விறகு கட்டோடு உள்ளே வந்தாள். விறகுக்கட்டை பொத்தென்று தரையில் போட்டுவிட்டு, மூச்சோடு மூச்சாக அட்டகாசமாக கேட்டாள்.

‘ஏமுழா… உங்களுக்கு அறிவு இருக்கா? இவளு பேருக்கும் ஆக்குறதுக்கு தங்கம்மா அத்த வீட்டுல நிறையா விறகு இருக்குமான்னு யோசித்து பார்த்திகளா… தீக் கொழுத்தி மச்சான். அய்யோ தப்புதான் உம்ம அப்படி பேசப்படாதுதான். ஆனாலும், அடுப்புல தீக்கொளுத்துறதுக்கு முன்னால் நீரும் கொஞ்சம் விறகு வெட்டிக்கிட்டு வந்துடும்…’

– செம்மலர் 1988

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *