நமசிக் கிழவனுக்கு இரண்டு நாளாய் காய்ச்சல். வேலைக்குப் போகவில்லை. இன்று கஷாயம் காய்ச்சி குடித்துவிட்டு பார்க்குக்கு கிளம்பினான். அங்கே தோட்டப்பராமரிப்பு அவன் பணி.
எதிரே வந்த பரமு, ‘’என்ன நமசி! ரண்டு நாளா உன்னைக் காணலே! பார்க்ல பயிர் பச்சை எல்லாம் உன்னைத் தேடுது..!’ ’என்றான்
‘’ம்…ம்….அறிவிலா தாவரமாவது என்னத் தேடுறதா சொல்றியே’’ என்றான் நமசி ஒரு வித மனத்தாங்கலுடன்.
பரமு, ‘பெத்தவங்களை கவனிக்காத பிள்ளைகளை அரசாங்கமே கண்டிச்சு செலவைக் கொடுக்க வழி பண்ணுதாம். பேப்பர்ல படிச்சேன். நீயும் கலெக்டருக்கு ஒரு மனு போடேன். உன் புள்ளைதான் பட்டணத்துல நல்ல வேலையிலிருக்கானே’’
‘’அடப் போப்பா! அரசாங்கம் சொல்லியா தாயில்லா என் புள்ளையைக் கஷ்டப்பட்டு வளத்துப் படிக்க வச்சேன்.
அப்பனைக் கவனிக்கணும்னு அடிமனசுலே தோணனும். சட்டம் போட்டு பாசத்தையும் கடமையையும் உணர்த்தறதுல எனக்கு உடன்பாடு இல்ல.’’ என்றவாறே நகர்ந்தான்.
– மு.சிவகாமசுந்தரி (1-12-10)