சட்டத்துக்குள் சில மான்கள்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 8,508 
 

எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய ஊரெல்லாம் கிடையாது

வடக்கு தெற்கா ஒரு ஒண்ணரை கிலோமீட்டரும், கிழக்கு மேற்கா ஒரு அரை கிலோமீட்டரும்தான் இருக்கும். இதுக்குள்ளயே ஒரு பிள்ளையார் கோவில், அதையொட்டி ஓர் அழகான குளம், ஊருக்கு வெளியிலே ஓர் ஏரின்னு எல்லாமே இருக்கும். அந்த ஊரைப்பத்தியல்ல இந்தக் கதை.

நாங்க அந்த ஊருக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நாளிலே எங்கப்பா என்னை சலூனுக்குக் கூட்டிண்டு போனார். குளத்துக்கு இடப்புறம் ஒரு சிறிய கிளை நூலகம், அதன் பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை, ஒரு டெய்லர் கடை மற்றும் இந்த சலூன். அந்தக் காலத்திலே அது ஒண்ணே ஒண்ணுதான் சலூன். அதனால பேரே இல்லாத சலூன். மூணு நாற்காலி இருக்கும். வெளியே ரெண்டு பெஞ்சு போட்டிருக்கும், அதிலே ஒரு தமிழ்ப் பேப்பர். பலர் படித்ததால் கசங்கிப் போய் இருக்கும். எப்பவும் நாலுபேர் அந்த பெஞ்சிலே உட்காந்திருப்பதைப் பார்க்கலாம். ஏதாவது பேசிக் கொண்டும், ஓரிருவர் பீடி பிடித்துக் கொண்டும்.

அதுக்கு முன்னாடி வரைக்கும் நாங்கள் சென்னையின் புறநகரில் இருந்தபோதெல்லாம் சலூன் என்பது இந்த மாதிரி அவஸ்தை கிடையாது. இவ்வளவு கூட்டமுமில்லை, காத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. இங்கே ஒரு சின்ன ஆறுதல், அப்பாவின் பதவி காரணமாக ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் மூணாவதாக நாற்காலியில் உட்கார வைத்தார் அந்தப் பெரியவர். அயர்ன் பண்ணாவிட்டாலும் கசங்காமல் இருந்த எட்டு முழ வேட்டி, சந்தன நிறமும் இல்லாமல் வெள்ளையுமில்லாமல் ஒரு நிறத்தில் மடித்து விடப்பட்ட முழுக்கைச் சட்டை. மேல் மண்டையில் பளபளவென வழுக்கை, மண்டையைச் சுற்றிலும் வெள்ளையாய் நரைத்த முடிகள், அடர்த்தியாய் முறுக்கி விடப்பட்ட மீசை. பத்து நிமிடங்களுக்கொருமுறை நெஞ்சில் சளியினால் ஓர் இருமல். ஒவ்வொரு கட்டிங் முடிந்ததும் வெளியே போய் எச்சில் துப்பி விட்டு வருவார். கூடவே அவர் பசங்கள் இருவரும். ரெண்டு பேருக்கும் பதினைந்து பதினாறு வயசிருக்கலாம், அவ்வளவுதான்.

முதன் முதலில் போனபோது… அப்பப்பா ஒரு மெஷினை வைத்துக் கொண்டு என் தலைமுடியை வெட்டியது இன்னும் நெனைப்பில இருக்கு. அந்த மெஷினில் என் தலை முடி மாட்டிக்கொண்டு… நான் வலி தாங்க முடியாமல் தலையை அங்குமிங்கும் ஆட்ட, “”தம்பி தலைய அசக்காதீங்க, அப்புறம் கத்தி பட்டுடும்” அப்படீன்னு அவர் பயமுறுத்த, அதிலிருந்து மாதாமாதம் முடிவெட்டும் நிகழ்ச்சி ஒரு பயங்கர கனவாகவே இருந்தது. இதெல்லாம் கொஞ்ச காலம்தான். அதுக்கப்புறம் ஒருநாள் அப்பாவே அவரிடம் மெஷின் போட வேண்டாம் என்று சொல்லிவிட கொஞ்சம் தப்பித்தேன்.

ரெண்டு மூணு வருஷம் கழித்து அப்பா என்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போய்விடுவார். முடிந்ததுக்கப்புறம் நானே வீடு திரும்ப வேண்டும். அப்போதெல்லாம் அந்தக் கடையில் என்னைக் கவர்ந்தது கண்ணாடியின் அருகில் சட்டம் போட்டு வைத்திருந்த அந்த ஓவியம்தான். அடர்த்தியான பச்சை வண்ணத்தில் வரைந்திருந்த ஒரு வனம். அதில் இரண்டு மூன்று மான்கள். சில பல மரங்கள், அதில் பலவிதப் பறவைகள். அருகில் சிறு நீர்நிலை. அதில் நீந்துகின்ற வாத்துகள் என ஒரு பிருந்தாவனத்தையே சிருஷ்டி செய்திருந்தார் பெயர் தெரியாத அந்த ஓவியர். அந்தக் காலத்திலெல்லாம் சலூன்களில் இது போன்ற அருமையான ஓவியங்களைத்தான் மாட்டியிருப்பார்கள். பெரிய பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு இடையே இதுவும் இருக்கும். இன்றைக்கும் கிராமங்களில் உள்ள சலூன்களில் இதனைக் காணலாம்.

சட்டத்துக்குள் சில மான்கள்அந்த ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனது கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும். எத்தனை நேரமானாலும் அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. சில சமயம் சின்னப் பையன்தானே என்று எனது முறை வந்தாலும் என்னை விட்டுவிட்டு வேறு யாரையாவது உட்கார வைத்தாலும் தெரியாமல் அந்த ஓவியத்திலேயே லயித்திருப்பேன். முடி வெட்டி முடித்ததும் அவர் ஒரு டவலைப் போட்டு கழுத்தை இப்படியும் அப்படியும் ஒடிப்பதும், தோள்களையும் முதுகையும் அழுத்தி விடுவதும், சொல்ல முடியாத சுகானுபவங்கள்.

வருடங்கள் உருண்டோட நானும் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தேன். தொழில்நுட்பக்கல்லூரி என்பதாலும் வீட்டிலிருந்து போய் வர முடியாத தூரம் என்பதாலும் ஹாஸ்டல் வாசம்தான். முதன் முறையாக வீட்டை விட்டுத் தனியே. அப்போதுதான் ரொம்ப வருஷத்துக்கப்புறம் வேறொரு சலூனில். புதுசா ப்ளேடு மாத்தி சுகாதாரமாக ஷேவிங், வட்டமான கோத்ரெஜ் டப்பியிலுருந்து நுரை பூசாமல், கேனை அழுத்தியதும் முகத்தை நிரப்பும் நுரை என எல்லாமே ஒரு புது அனுபவமாயிருந்தது. ஆனாலும் முடி வெட்டிவிட்டு குளித்துவிட்டுக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் மனசுக்குத் திருப்தியாயில்லை.

கை மணம் என்கிறார்களே அது இதற்கும் உண்டு. அதனால் மாதமொருமுறை வீட்டுக்கு வரும்போது அவர் கையாலேயே முடிவெட்டிக் கொள்ளக் காத்திருந்தேன்.

அம்மாகூட திட்டுவாங்க.

“” வர்றதே ஒரு நாளோ ரெண்டு நாளோ,

அதுல கூட அங்கயே மணிக்கணக்குல போய் உக்காந்துக்கணுமா?” என்று. முடி வெட்டுவது மட்டுமில்லை, அந்த ஓவியமும் என்னை ஈர்த்தது. நான் மட்டுமா வளர்ந்தேன்? அவரது பசங்க ரெண்டு பேரும் கூட வளர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்யாணம் ஆன போது ஊரே திரண்டு வந்தது. எல்லோருடைய கழுத்திலும் கை வைக்கும் உரிமை படைத்தவர்களல்லவா?

சொன்னா நம்பமாட்டீங்க, இதெல்லாம் முடிந்து, அதாவது என் கல்லூரிப் படிப்பெல்லாம் முடிந்து வேலைக்குப் போன பிறகும் இது தொடரலாயிற்று. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் நடந்தது. ஆமாம், இன்னும் ரெண்டு சலூன்கள் தோன்றின எங்கள் ஊரில்.

நானும் அந்தக் கடைகளை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். வெளியே அலறும் பாடல், அழகாக நல்வரவு என்று போட்ட கண்ணாடிக் கதவு, அது எப்போதும் மூடியே வைத்திருக்கும். எப்போதாவது கரண்ட் கட் ஆனால் திறந்த கதவின் வழியே பார்த்தால் பெரிய பெரிய காலண்டர்களில் பெயர் தெரியாத ஆங்கில இந்தி நடிகைகள். ஆனாலும் என்னவோ எனக்கு அங்கே போகப் பிடிக்கவில்லை. இந்தக் கடைகள் வந்ததால் ஒரே ஒரு மாற்றம் மட்டும் எனக்குத் தென்பட்டது. அதாவது இப்போதெல்லாம் கடையில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கூட்டம் குறைந்து விட்டது கஸ்டமராகிய எனக்கு நல்லது. ஆனால் கடைக்காரருக்கு? பசங்களுக்கும் அப்பாவுக்கும் ஏதோ மனஸ்தாபம் போல. கடையில் சரியாகப் பேசிக் கொள்வதேயில்லை. பல நேரங்களில் ரெண்டு பேரும் கடையில் இருப்பதே இல்லை. நான் ஒருநாள் போயிருந்தபோது அவர் ரொம்பவும் வருத்தப்பட்டார்.

“”பசங்க ரெண்டு பேரும் கொஞ்சம்கூட மதிக்க மாட்டேங்குறாங்க தம்பி. கடைக்கு ஒழுங்கா வரதே இல்லை. அப்புறம் எப்படிக் கூட்டம் வரும்? கேட்டா, கூட்டம் வந்தா நாங்க வரோம் அப்படீன்னு எதிர்வாதம் பேசுறானுங்க. ரெண்டு மருமவ, பேரப்பசங்கன்னு எல்லாருமே இந்தத் தொழிலை நம்பித்தான் தம்பி. அப்படியிருக்க இந்தப் பயலுவ பொறுப்பில்லாம சுத்தறானுவ” என்று ரொம்பவே வருத்தப்பட்டார்.

எனக்குக் கேட்கவே கஷ்டமாயிருந்தது. நான் சின்ன வயசில பார்த்ததிலேயிருந்து அவர் அப்படியேதான் இருக்கிறார். அவர் பெயர்கூடத் தெரியாது எனக்கு. எப்போ பார்த்தாலும் ஒரு அறுபது வயசுக் கிழவர் மாதிரியே இருப்பார். இப்போ எப்படியும் ஒரு எழுபது வயசாவது இருக்கும்னு நினைக்கிறேன்.

“”என்ன பிரச்னையாம் அவங்களுக்கு?” ஆதரவாகக் கேட்டேன்.

“”பாட்டுப் பொட்டி வைக்கணுமாம். அப்புறம் இதோ இந்த தெய்வீகமா இருக்க இந்தப் படத்தை எடுத்துட்டு என்னென்னவோ அசிங்கம் புடிச்ச பொம்பளைங்க படத்தையெல்லாம் வைக்கணுமாம். முடிதிருத்துதல் அப்படீங்கறது ஒரு கலை தம்பி, இது கடவுள் குடுத்த வரம். நம்ம கையில இருக்க திறமைக்கு வரணும் தம்பி கூட்டம், படத்தைக் காட்டி கூட்டம் சேக்கறதுக்கு என் மனசொப்பலை தம்பி. அது நம்ம கையில இருக்கற கலைக்கு, அதிலே குடியிருக்கற தெய்வத்துக்குச் செய்யற துரோகம் தம்பி. ஒரு சாப்பாட்டுக் கடைக்கு (ஹோட்டலுக்கு அவரது பெயர்) போகிறவங்க சாப்பாடு நல்லா இருக்கான்னுதான் பாக்கணும். படம் பாக்கறதுக்கும் பாட்டு கேக்கிறதுக்கும் இது இடம் இல்லை பாருங்க”

அவரைப் பார்க்க எனக்கு ஒரு விதத்தில் பெருமையாகவும் அதே சமயத்தில் பொறாமையாகவும் இருந்தது. கலையையே விலையாக்கும் இந்த உலகத்தில் இப்படி ஒரு மனிதரா? விளம்பரமும் வெளிச்சமும் இல்லாவிட்டால் கலைக்கு மதிப்பு கிடையாதோ?

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு வருஷம் நான் ஊர்ப்பக்கமே போக முடியவில்லை. வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று ஒரே அலைச்சல். இப்போது ஒரு மாதம் விடுமுறை. உடம்பு ஓய்வுக்காகத் திணறிய நேரம். மறுபடியும் ஊருக்குப்போய் அவர் கையால் முடிவெட்டிக் கொண்டு கழுத்தையும் சுளுக்கெடுத்துவிட்டால்தான் தீரும் போல இருந்தது. அவர் சொல்லுவார்: “”தம்பி, மூளையிலேர்ந்து எல்லாக் கட்டளையும் எப்படி உடம்போட பிற உறுப்புகளுக்குப் போகுதுங்கிறீங்க? எல்லாம் கழுத்து வழியா இந்த முதுகுத்தண்டுக்கு வந்து அதிலேந்துதான். அதனால கழுத்து எப்பவும் ரொம்ப எளிசா, எந்தப் பிடிப்பும் இல்லாம இருந்தாதான் மூளையோட கட்டளைகள் வேகமாகப் போகும் தம்பி. இல்லேன்னா எப்பவுமே சோம்பலாத்தான் இருக்கணும்”

இப்போ ரொம்ப நாள் கழிச்சு அவரைப் பார்க்கணும்னு தோணிச்சு. ஊர்ப்பக்கம் புறப்பட்டேன். காரில் ஏறினால் அரைமணி நேரம்தான். காரை கோவிலின் மூலையில் விட்டுவிட்டு கடைக்குப் போனால் அதிர்ச்சி. கடையைக் காணவில்லை.

பக்கத்திலிருந்த டெய்லரிடம் கேட்டேன்.

“”அவங்க கடையை மூடி ரெண்டு மூணு வருஷம் ஆச்சே… பசங்க அடுத்த தெருவிலே பெரிய கடை போட்டிருக்காங்க” என்றார்.

அடுத்த தெருவில் கடையைத் தேடிப் போனேன். “ரவி ஹேர் ட்ரெஸ்ஸஸ்’ பெரிய போர்டில் யாரோ ஒரு ஹாலிவுட் நடிகை சிரித்தாள்.

உள்ளே நுழைந்ததும் பெரிய பையன் ரவி வரவேற்றான்.

“” வாங்க தம்பி, ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து” என்றான். உள்ளே ஏதோ ஆங்கிலப்பாடல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. திரும்பிய இடமெல்லாம் ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகைகள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“”ஆமாம், வெளியிலே சுத்த வேண்டிய வேலை, அதான் வர முடியாமப் போச்சு”

“”கட்டிங் பண்ணிடலாமா? அப்படியே ஒரு ஆயில் மஸாஜும் கூடப் பண்ணிடலாமா?”

“”சரி” என்று தலையாட்டினேன். நிஜமாகவே அற்புதமாக இருந்தது சலூன்.

“”எப்போ இந்தக் கடை திறந்தீங்க?”

“”மூணு வருஷம் ஆச்சு தம்பி. எவ்வளவு சொன்னாலும் அப்பா அந்தக் கடையை கொஞ்சம் கூட மாத்த விடலை. போட்டி அதிகமாயிடுச்சு தம்பி, கடையில ஆளே வரலை. இவர் எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்கிடலை. கடைக்கு வாடகை குடுக்கக்கூட முடியலை தம்பி. அப்போதான் நம்ம கவுன்சிலர் மூலமா பாங்கில கடன் வாங்கி, இந்தக் கடையை ஆரம்பிச்சோம். ஏதோ நல்லாப் போகுது தம்பி”

முடிவெட்டி முடிந்ததும் தலையை நன்றாகத் துடைத்து ஆயில் மஸாஜ் செய்தார். நல்ல தூக்கம் வருகிற நேரத்தில் எழுப்பி அப்படியே நாற்காலியைப் பின்னுக்குச் சாய்த்து என் தலையை ஷாம்பூவினால் கழுவினார்.

பிறகு, “”தம்பி முடிஞ்சிடிச்சி” என்றார். கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டேன். வீட்டுக்குப்போய்க் குளிக்க வேண்டிய வேலையே இல்லை போலிருக்கிறது.

500 ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, “”மீதியை வைத்துக் கொள்ளுங்கள்” என்றேன். “”அப்பா எப்படி இருக்கார்?”

“”நல்லா இருக்கார் தம்பி. என்ன கடைக்கு வற்ரதில்லை, எங்க மேல கோபம் இன்னும் தீரலை தம்பி. உங்களை மாதிரி பழைய ஆளுங்கள்லாம் இன்னும் அப்பாவைக் கேக்கறாங்க”

அவரை நினைத்துக் கொண்டே வெளியே நடந்தேன்.

காலத்துக்கு ஏற்றாற் போல மாறாதது தவறா? அல்லது மாறாமல் நின்றதுதான் சரியா? தனக்கென்று சில சட்டங்களை வகுத்துக் கொண்டு அதனை மீறாமல் இருப்பது தவறா? எனக்குப் புரியவில்லை.

திரும்பி வரும் போது ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போலத் தோன்றியது. பழைய கடைக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் நின்று சிகரெட் வாங்கிக் கொளுத்தினேன். முடியும் தருவாயில், “”தம்பி” என்று ஒரு குரல். யாரென்று திரும்பிப் பார்த்தால் அவர். சடக்கென்று சிகரெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, “”எப்படி இருக்கீங்க?” என்றேன்.

“”நல்லா இருக்கேன் தம்பி” என்றார்.

“”கடையத் தேடி வந்தீங்களா?”

“”ஆமாங்க. அப்புறம்தான் உங்க பசங்க அடுத்த தெருவிலே கடை போட்டிருக்கறதா சொன்னாங்க”

“”என்னத்தச் சொல்ல தம்பி… அங்கேதான் போயிட்டு வரீங்களா?”

“”ஆமாங்க”

என் முகத்தைக் கையால் பிடித்து இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தார்.

“” தம்பி, கொஞ்சம் என்னோடு வாங்க” என்றார்.

நானும் அவர் பின்னாலேயே நடந்தேன். பழைய கடைக்கு மிகவும் அருகில்தான் அவர் வீடு. பழைய காலத்து வீடு. சுற்றி நடந்தவர் வீட்டின் பின்புறம் மாமரத்தின் அடியில் ஒரு நாற்காலியைப் போட்டு என்னை உட்காரச் சொன்னார். ஒன்றும் புரியாமல் உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பித்தளைப் பெட்டியை எடுத்து வந்தார். அதனுள்ளிருந்து ஒரு கத்தியை எடுத்தவர் சாணைக் கல்லை எடுத்து அதில் தேய்க்க ஆரம்பித்தார். பிறகு என்னருகில் வந்து என் கிருதாவை மழிக்க ஆரம்பித்தார். இப்படியும் அப்படியும் முகத்தைத் திருப்பிப் பார்த்து திருப்தியடைந்ததும், “”என்னா வேலை செய்யறாங்க தம்பி, ரெண்டு பக்கமும் கிருதா சமமாயிருக்க வேண்டாமா? இப்போ பாருங்க தம்பி” என்று பழைய ரசம் போன கண்ணாடியைக் காண்பித்தார்.

கண்ணாடியில் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர் முகத்தில் தெரிந்த திருப்தியிலிருந்து இப்போது கிருதா சரியாக இருக்கும் என்று தெரிந்தது. புன்னகையுடன் தலையாட்டினேன். பிறகு பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.

“”அதெல்லாம் வேண்டாம் தம்பி, கடவுள் புண்ணியத்துல என் பசங்க என்னை நல்லாவே பாத்துக்கறாங்க. என்னா ஒண்ணு, தொழில் சுத்தம் இல்லை… இந்தக் காலத்துப் பசங்க கிட்டே”

அவரை நினைக்கையில் இன்னும் பெருமையாகவும் பொறாமையாகவும் இருந்தது. அவரிடம் விடைபெற்றுக் காரை நோக்கி நடந்தேன்.

சிறிது தூரம் போனதும் மறுபடியும் அவர் குரல் என்னை அழைத்தது.

“” தம்பி கொஞ்சம் நில்லுங்க” கையில் ஒரு பெரிய பையுடன் வேக வேகமாக என்னைத் தொடர்ந்து வந்தார்.

கேள்வியுடன்நின்றேன்.

“”இந்தாங்க தம்பி. இனிமே இது உங்ககிட்டே பத்திரமா இருக்கட்டும்”

பையை வாங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ஒரு பேப்பரில் சுற்றி, பிய்ந்து போன சட்டங்களுக்குள், கரும்பச்சை நிறத்தில் வனமும் அதில் மான்களும்.

– வி.எஸ்.அருண்குமார் (March 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *