கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 3,103 
 
 

பிறவிச் சமையல்காரி போலவே வரித்துக் கொண்ட சென்னம்மாள், அடுக்களையைத் தாண்டாமல்தான் உள்ளூரிலியே பேசித் திரிந்தாள். உறவினர் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்று வருவதை மட்டும், வழக்கமாக்கிக் கொண்டிருந்த அவளுடைய முகம், சவக்களைப் படிந்து போய்த்தான் இருந்தது. சின்னதாகப் புன்னகையைக் கூட வெளியேற்றமால், உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த அவள், செவ்வாய்க்கிழமை காலையில், மகளையும், பேரன் பேத்திகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். சம்பந்தி வீட்டுத் திருமணத்தை நினைத்து, ஒரு சுற்று ஊதிப் பெருத்திருந்த சென்னம்மாள், அசைந்து வந்து, பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஜான்சி வீட்டுக்குள் குடும்பத்துடன் நுழைந்தாள். இதுநாள் வரை, எட்டிக்கூட பார்க்காத சென்னம்மாளின் வருகையால், புளகாங்கிதம் அடைந்த ஜான்சி, அரக்கப் பறக்க அங்கும் இங்கும் ஓடி, டவராக்களில் காபியை வைத்து விட்டு, பக்கத்தில் உட்கார்ந்து கதைக்கத் தொடங்கினாள்.

காபி தம்ளரை வாய்வரைக் கொண்டு போய்விட்ட சென்னம்மாள், ஜான்சி கூப்பிட்டதால், வெறும் வாயில் எச்சில் விழுங்கிக் கொண்டே “என்னக்கா” என்று கேட்டாள். ”அடியே, ஒரு ஐடியா இருக்கு செய்றியா?” என்று கேட்ட ஜான்சி, “ஒன்னோட வீட்ல உள்ளவங்கெதான் உருப்படல. ஓம்மகளுக்கும் ரெண்டு புள்ளையாயிடுச்சு. அவங்களுக்காவது உருப்படியா ஏதாவது பண்ண வேணாமா?” என்றாள். “ஏதாவது பண்ணாத்தானடி, ஓஞ்சாவுக்குப் பின்னாலெ உன்னை நினைப்பாங்க” என்றாள். “என்ன சொல்றீங்கக்கா?” என்றாள். “ஒன்னோட சின்னாத்தா மக ஒரு குட்டிதான. அவளுக்குத்தான் ஏகப்பட்ட சொத்து இருக்குல. அதை எழுதி வாங்கப்பாரு” என்ற திட்டத்தை சொன்னாள். “அதை எப்பிடிக்கா நாஞ்செய்ய முடியும்?” என்ற சென்னம்மாள், “இதுக்கு ஏதாவது ஐடியா இருக்காக்கா?” என்றாள். “இருக்குடி, ஒஞ்சின்னாத்தாவோட மக புருசனை ஏதாவது பண்ணி பிரிச்சிடு” என்றாள். “ஒரு நிமிசம் இருக்கா. நல்ல சந்தர்ப்பம் இதுதான்” என்று, சின்னம்மா மகள் ரோசாவின் கணவனுக்குப் போன் செய்தாள் சென்னம்மா . போனை எடுத்த கணவனிடம் “எப்டி இருக்கீங்க?” என்று ஒரு வார்த்தை குசல விசாரிப்புடன், ஆவேசத்தை அள்ளி வீசினாள்.

“ஏந்தம்பியை எப்டி நீங்க வீட்டை விட்டு விரட்டுனீங்க?” என்றாள். அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை அடுத்த சில நொடிகளுக்குள். “அவென் இல்லாட்ட நீங்க வீடு புடிக்க முடியுமா?” என்று கேட்டாள். “வீடு புடிச்சவனையே விரட்டிட்டா என்ன அர்த்தம்னு கேக்குறேன்..” என்று காரசாரமாக கேட்டு விட்டு, இந்த மிரட்டுப் போதுமா இன்னுங்கொஞ்சம் வேணுமா என்பதைப் போல, ஜான்சியைப் பார்த்து கண்ணடித்தாள். என்னாச்சு என்று எதிர்முனையில் கேட்ட தங்கையின் கணவன், “குடும்பத்தைப் பிரிக்க திட்டம் போட்டுட்டியா?” என்றான். “நீ கல்லாணம் முடிஞ்சு வந்ததுமே எப்டியாவது, உன்னை விரட்டனும்னு, ஏம்மருமகன் வீட்லெ சொல்லிட்டாங்க. எவ்வளவோ பண்ணியும் நீ போற மாதிரி இல்லை. இப்பக்கூட, கொடி மகளுக்கு உங்க பரம எதிரி வீட்லெ தான் நாங்க கல்லாணம் பண்ணப்போறோம். அவங்க கூட உன்னை கட்டித்தொலைச்சுருங்கோன்னு சொல்லிட்டாங்க. இருக்குறதா இருந்தா இரு இல்லேன்னா அவளை விட்டிட்டுப் போய்டு” என்று, போனை கட் செய்து விட்டு, எஞ்சியிருந்த காபியில் ஒரு மடக்கு குடித்துவிட்டு, “என்னக்கா போதுமா” என்று ஜான்சியைப் பார்த்துக் கேட்டாள்.

“எப்டி பேசுனான் போய்டுவானா?” என்று ஆர்வமாக கேட்டாள் ஜான்சி. “எனக்கென்னமோ அவென் போய்டுவான் மாதிரித்தான் தெரியுது” என்று சொன்னாள். “சரி இதைக் கரெக்டா முடிச்சிரு. நம்ம ஒண்ணுக்கில்ல ஒண்ணு ஆயிட்டோம். உங்க பொண்ணு வேற எங்க வீட்லெ வாழ வர்றா… இது நடக்காம்ப் போயி, கொஞ்ச காலத்துக்குப் பின்னால, கொடி மக உங்க வீட்டுக்கு திரும்பி வந்திட்டான்னா, என்னையோ எந்தங்கச்சியவோ சொல்லிடாதீங்க” என்றாள் ஜான்சி. “இதைவிட இனி என்னக்கா எனக்கு வேலை, கூடிய சீக்கிரம் நல்ல செய்தியா சொல்றேன்கா” என்று, மகள் மற்றும் பேரப்பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு, வந்து நின்ற பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.

ஒற்றியூரில் வந்து இறங்கியதும் கண்மாய் கரை வழியே சென்ற சென்னம்மாள் குடும்பத்தினர், சம்பந்தி வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவுடன் எதிரே வந்த சம்பந்தியிடம், பொட்டலங்களை நீட்டினாள் பாகவி. உள்ளே சென்று பிரித்துப் பார்த்து விட்டு வந்த சம்பந்தி, ”என்னடி இது புதுசா இருக்கு. என்னென்னமோ கொண்டு வந்திருக்கீங்க. கல்யாணத்துக்கு பதினைஞ்சு நாள் இருக்கவே வந்துட்டீங்க… என்ன விசேசம் சொல்லுங்க” என்றாள் சம்பந்தி. “எல்லாம் விசேசந்தான் ரோசா புருசன் அவளெ விட்டிட்டு போய்ட்டானாம், நேத்துத்தான் போன் பண்ணா, உங்களுக்கு இந்த விசயம் தெரியுமா?” என்றாள் சென்னம்மா. “தெரியாதே என்னடி ஆச்சு? இப்ப என்ன பண்றது..?” என்று கேட்டாள் சம்பந்தி. “அவளெ அவனுக்கு கட்டுணதுலெ இருந்து, எவ்வளவு திட்டுனீங்க எங்கள, இனிமே அந்த தொல்லை உங்களுக்கும் இருக்காது, எனக்கும் இல்லை” என்றாள்.

“என்னடி சொல்றே?” என்ற சம்பந்தி கேட்டபோது, சென்னம்மாளின் மாமன் ராசு வீட்டுக்குள் நுழைந்தான். ஆக்கினையான அந்த முகத்துடன் “என்ன வேகமாப் பேசிக்கிறீங்க” என்றான். “ஆமா பிரச்சினைதான், ரோசா புருசன் அவளெ விட்டிட்டு ஊருக்குப் போய்ட்டானாம். அதைப் பேசத்தான் வந்தோம்” என்றாள் சென்னம்மாள். என்னாச்சு என்று பதறிய ராசுவின் கையில், அவனது மனைவி காபி கொடுத்ததும் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அப்போது “இதை நாம பெருசுபடுத்த வேணாம். எங்குடும்பமும் ரொம்ப கஷ்டப்படுது. இப்ப செய்ய வேண்டியதெல்லாம், அவ சொத்தை நாம பாகவிக்கு எழுத வேண்டியதுதான்” என்றாள் சென்னம்மாள். சென்னம்மாளின் யோசனையைக் கேட்டுவிட்டு சிறிது நேரம், சிந்தித்த ராசு, “சரி அவட்டெ ஒரு வார்த்தை கேட்டிட்டு முடிச்சிடலாம்” என்றான். “சரி நாளைக்கு இந்த வேலையிலெ எறங்கிறலாம். அடியே பாகவி, ஒம்புருசன் கஸ்பாரு எங்கே” என்று கேட்டான் ராசு. “கஸ்பாரைத் தெரியலெ தாத்தா, கவாசு வெளியிலெ போயிருக்காரு” என்றாள்.

“சரி வந்ததும் பேசிக்கலாம். சென்னம்மா இந்த ஐடியா உனக்கு எப்டி வந்துச்சு” என்றான் ராசு. “நம்ம கொடியோட பெரிய சம்பந்திதான் இதைச் சொன்னாங்க” என்ற சென்னம்மா, “மாமா பாகவி நல்லா இருக்கணும்னா, அந்தச் சொத்தை அவ பேருக்குத்தான் மாத்தணும்” என்றாள். “சரி விடு அப்டியே செஞ்சுறலாம். பசங்க ரெண்டு பேரு இருக்காங்கெளே” என்றான் ராசு. “அதைப்பத்தி கவலைப்படாதீங்க. ஒண்ணு பூவித்தாவது பொழைச்சுக்கிருவாங்கெ, இல்லேனா, அஏவங்கெளுக்கு வயரிங் வேலையை கத்துக் கொடுத்திடலாம்னு, எம்புருசனும் தம்பியும் சொல்லிட்டாங்க” என்றாள் சென்னம்மாள். “சரி அப்டியே நடந்தா சரி” என்ற ராசு, முடியில்லா அந்த தலையைச் சொறிந்து கொண்டு மீண்டும் கடைத்தெருவுக்குப் புறப்பட்டு விட்டான்.

அப்போது யதார்த்தமாக பாகவியின் செல்போன் அலறியது. எடுத்து ஹலோ என்ற பாகவி, “சித்தி, ரோசா பேர்லெ இருக்க சொத்தை, எம்பேருக்கு மாத்தப் போறாங்களாம், இங்கெ பேசிக்கிட்டாங்க” என்றாள். “ஏன்டி என்னடி ஆச்சு, அவங்கட்ட கேட்டாச்சா?” என்றாள். “ரோசா என்ன சொல்லப்போறா, கஞ்சி ஊத்துனாலே அவளுக்குப் போதும். அவந்தொல்லையும் இனி இல்லை” என்றாள் பாகவி. “என்னாச்சுடி” என்ற கேட்ட சித்தியிடம், “அம்மா இன்னைக்கு போன்லெ கூப்பிட்டு நல்லா திட்டி விட்ருச்சு” என்றாள். “அதனாலே என்னாச்சு?” என்றாள். “அதனாலே ஷாம் அப்பா ஊருக்குப் போய்ட்டாராம்” என்றாள் பாகவி. “அப்டியா, திரும்பி வந்தா நமக்குப் பிரச்சினையாகுமேடி” என்றாள் சித்தி. “இல்லை சுத்தமா வெட்டி விட்றதுக்கான ஏற்பாட்டை ஜான்சி அத்தை பண்றேன்னு சொல்லிட்டாங்க. அதனாலெ கவலை இல்லை” என்றாள். “சரி விடு, அவென் எப்டியும் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது பண்ணப்போறான். நா வேற வேலை பாக்குறேன். எனக்கு ஆப்பு விழுந்திடாமே” என்றாள் பாகவியின் சித்தி. “நா ஆப்பு வாங்குனவளே, இதே லேசா எடுத்துக்கும்போது நீ ஏன் யோசிக்கிறே?” என்று பாகவி தைரியம் சொன்னாள். “ஏதோ இவதான் புதுசா வாங்குன மாதிரி. அதானே பிரச்சினை” என்று சொல்லிவிட்டுப் போனை அணைத்தாள் சித்தி வெண்ணிலா.

விடிந்தது, நகரங்ளுக்குப் புறப்படுகிறவர்கள், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது பேருந்தில் சென்ற ராசும், கவாசும் தெரிந்தவர்களைப் பார்த்து கைகாட்டி விட்டு சென்றார்கள். பதிலுக்கு கையைக் காட்டியவர்கள் ”இன்னைக்கு எந்தக் குடும்பத்துக்கு உலை வைக்கப் பொறப்பட்டுட்டாங்கைன்னு தெரியலையே” என்றான் சுப்பிரமணி. “என்ன அப்டி சொல்றே” என்று கேட்ட முத்தையாவுக்கு, “ஏற்கனவே கூட இருந்த தங்கச்சியவே மலடியாக்குனவ, புருசனும், மாமனும் போறாங்கெ.. என்ன நடக்கப்போகுதோ” என்றான் சுப்பிரமணி, அப்போது “புள்ளெ இல்லையா” என்று கேட்டான் முத்தையா. “அட அது தெரியாதா” என்ற சுப்பிரமணி, “முன்னாலெ விழுந்திருக்கிற தொப்பையைப் பாத்துட்டு அப்டி சொல்றியா, அது ஏதாவது அவ அக்கா குடுத்த மருந்தோட எபெக்டா இருக்ம்டா” என்று, சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான் சுப்பிரமணி.

Print Friendly, PDF & Email

1 thought on “சகுனி

  1. பெரும்பாலான குடும்பங்கள் சொந்தக்காரர்களின் பாதிக்கப்படுகிறது என்பதை, உணர்த்தியுள்ளது இந்தக்கதை, வரவவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *