சர்வ அலங்ரார தேவதையாக மட்டுமல்ல தமிழின் புனித இருப்புக்கே ஒரு சாட்சி. தேவதையாகவும், தான், கழுத்தில், தாலி ஏறின களையோடு அன்றைய பெண் இருந்தாள். இனியும் இருப்பாள் என்று சொல்வதற்கில்லை. இது கடந்து இருள் மூழ்கிப் போய் ஒரு யுகமாகிறது. பண வரவு குறித்து வந்து சேர்ந்த வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாம் படு மோசமென்று சொன்னால் யார் தான் நம்புவர்? சொல்கிற நாங்களே வாழத் தெரியாத, வக்கற்ற மனிதர்கள் என்று தான் உலகம் இடித்துரைக்கும. இந்த பழிச் சொல்லுக்கு அஞ்சினால், உண்மை சத்திய இருப்பே மறை பொருளாகத் தான் போகும்
நேற்றைக்கு முதல், நாளன்று ஒரு கல்யாணம் காட்சி நாடகமாக முகநூலில் வந்தது. அலங்கார தேவதையாக அந்த மணப் பெண் கண்ணுக்குள் காட்சி தரிசனாக, நின்றாள். இப்படிச் சொல்லவே மனம் கூசுகிறது. இதில் தரிசிக்கவும் வழிபடவும், என்ன இருக்கிறது?
அவர்களெல்லாம் வெள்ளை மண் குளித்து வாழப் போன பெரும் பாக்கியசாலிகள். அமெரிக்கா லண்டன் அவுஸ்ரேலியாவுமாக, கொடி கட்டி ப் பறக்கிறது ஈழத் தமிழர் வாழ்க்கை. போடுகிற உடுப்பிலிருந்து எல்லாம் ஒளிமயம். திலகாவிற்கு அந்தக் கொடுப்பனை இல்லை என்பது மட்டுமில்லை இன்னுமொரு கசப்பான சம்பவமும், எப்பவோ நடந்தது.
அப்போது அவள் மூன்றாவது பிள்ளையைப் பெற்று ஒன்றரை வருடமாகிறது. பெண் பிள்ளை. நோஞ்சானாய் வயிற்றோட்டம் வந்து படுக்கையாய் கிடக்கிற, பிள்ளையை மடியில், போட்டவாறு திலகா வெளிப் படியில் அமர்ந்திருந்த நேரம். ஒருகிழமையாய், முற்றம் கூட்டாததால், பலாச் சருகுகள் குவிந்து கிடந்தது. நல்ல நிலையில் இருந்திருந்தால் அவள் கடைசிக் குழந்தை அபியே முற்றத்துக்கு வந்து பலாச் சருகுகள். பொறுக்கி முற்றத்தைக் காலி பண்ணியிருப்பாள். இப்போது அது நின்று போனதால், குப்பைக் காடாகக் காட்சியளிக்கிறது முற்றம், இதில் அவள் வேறு துருப்பிடித்த அவலட்சண கோலமாய் அவள் நிலை. உடம்பிலே நகைகள் மட்டுமில்லை தாலியும் போன பின் இந்த மூளிக் கோலத்தில் விழிக்கவே மனம் வராது. யாருக்கு? எல்லாம் நாகரீகத்தில் பளிங்கு வார்ப்பான அழகில் எடுப்பட்ட மனிதர்களுக்குத் தான்.
இதை மெய்ப்பிப்பது போலவே அப்போது திலகாவின் மாமியின் வருகை இருந்தது. அவளைக் கண்டவுடன் ஓடி ஒழிய மனம் வராமால், ஒரு சாட்சி தேவதையாகவே, அங்கு அவள் வீற்றிருந்தாள்.
அவளை அப்படிப் பார்த்து விட்டு, காறி உமிழ்ந்து கடை நிலை வார்த்தைகளைச் சொல்லி, மாமி அவளை ஏசி விட்டுப் போனது துருப்பிடித்த ஒரு பழங்கதை;
இருந்தாலும் அதிலும் ஒரு தத்துவம் அடங்கியிருப்பதாக, இப்போது அவளுக்குப் பட்டது. வெளிநாட்டு மண் குளித்து, வேடம் ஒன்றே, குறியாகி, வேத்தையே மறந்து போனவர்களின் கதியை நேரில் பார்க்கு,ம் போது, அதீத மகிழ்ச்சி கொண்டாட்டம் வருவதற்கு பதிலாக நெஞ்சிலே எரிமலையே வெடித்து சிதறுவது போல ஓர் உணர்வு
அப்படி, என்னதான் நடந்து விட்டது அங்கே?
களியாட்டமாக ஒரு கல்யாண விழாக் கோலம் அவளின் நெருங்கிய உறவான சுமதியின் மகள் பிரியாவிற்கு நடந்த கல்யாண நாடகம் முகநூலில் அரங்கேறியிருப்பதை பார்த்து திலகா மகிழ்ச்சி வருவதற்குப் பதிலாக, அதில் ஒரு வெற்றிடத்தைப் பார்த்து மனம் கசந்தாள். லண்டனில் இருக்கும் சுமதியின் அக்கா பானுவைத் தான் அங்கு காணோம். நெருங்கிய உறவு இல்லாமல் இப்படியொரு கல்யாணம் நடத்த வேண்டிய தேவை, சுமதிக்கு ஏன் வரவேண்டும்? இதை அவளிடமே , போய்க் கேட்பது உசிதமில்லையென்று பட்டது. இப்படி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக, அன்று மாலையே மெசென்ஞர் திரையில் பானுவின் முகம் தெரிந்தது அதைப் பார்த்து விட்டு அவள் கேட்டாள்.
என்ன பானு, பழுதாய் போனியள்?
எல்லாம் மன உளைச்சல் தான். ஒரு வருடமாக, சுமதி என்னோடு கதைக்கிறேலை. இப்படி மனஸ்தாபம் வர நான் பிழை விடுற ஆளூமில்லை. இதை அவளிட்டையே கேட்கலாம் தானே நீங்கள் அவள் எனக்கு முகம் கொடுக்கிறேலை எப்படிக் கேக்கிறது?
அது தான் கல்யாணத்திலை உங்களைக் காணேலையென்று நானும் யோசிச்சன். இதுவும் காதலோ? அன்றி பேசித் தான் செய்தவையோ?
நான் என்னத்தை சொல்லுறது? இப்ப ஒரு வருடமாய் அவையள் இரண்டு பேரும் ஒன்றாய்த் தான் இருந்து பழகிப் பார்த்திட்டுத் தானாம் இந்தக் கல்யாணம். இப்ப லண்டன் முழுதும் இது தான் நடக்குது.
அது தான் பார்த்தன். வெள்ளைக்காரன் மாதிரி கூத்து வேறு நடந்ததே. பின்பு சுயத்தை அறிந்து கொண்ட பிரமிப்பு ஒரு பயம் போலத் தோன்றவே, அவள் அதிர்ச்சியுற்றவள் போல் பானுவை நோக்கி அம்பு விடுகிற தோரணையில் அவள் குரல் உச்சஸ்தாயியில் கேட்டது.
அக்கா! இப்படி தோலுரிந்து போனதுக்காக உங்களுக்கு மன வருத்தமில்லையா?
நல்லாய் கேட்டாய் நாங்கள்போடுற வேஷத்திலை இது ஆருக்குத் தெரியப் போகுது.
எல்லாம் வெளி வேஷமாய் ஆனபிறகு, வாழ்க்கையென்று சங்கு ஊதிறதிலை என்ன வரப் போகுது. காசுக் குளியலில் கறை எல்லாம் அடிபட்டு போனால் நமக்கு அது போதுமே. பிறகு அவள் தனக்குள் மனம் நொந்து போய் சொல்லிக் கொண்டாள். வேதசாரமான வாழ்க்கையின் இருப்பை விட்டு நாம் தொலைந்து போய் ஒருயுகமே முடியப் போகுது எனக்கென்ன வந்தது.
வெகு தொலைவிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த பானுவிற்கு அவளின் அந்தக் குரலை கேட்க முடியாமல், இருள் வந்து மறைப்பது போல் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ஆத்மாவின் வெளிச்சம் பிடிபட்டவர்க்கே அதுவும் புரியும். அந்தகார இருள் சூழ்ந்த பின் ஆத்மாவாவது மண்ணாவது எல்லாம் மண்ணுக்குள் மறை பொருளாய் போன பின் இருட்டு ஒன்றே சாசுவதமாய் அவளைத் தலையில் அடுத்துக் கொன்று விடும் போலிருந்தது. குடி முழுகிப் போன இந்த சங்கதிகளூக்காக இப்போது அவள் அழவில்லை. இருட்டுத் தான் அவளை விழுங்கிற்று. அப்பட்டமான இருட்டு. அனாதரவான வாழ்க்கை இப்போது புரிகிறதா? யார் அனாதைகளென்று இப்போது மட்டுமல்ல என்றும் அவள் அனாதையல்ல. கார்சவாரி செய்யும் பெரும் பணக்காரியென்று தான் உலக கணிப்பீட்டில் அவள் கலாச்சார விழுமியங்களைக் கழுவித் துடைத்த அவளின் இந்தப் பெறுமதி மிக்க சந்தோஷக் களைக்கு முன்னால், துரும்பாக தான் மட்டுமல்ல உலகமும் ஒடுங்கி மறைந்து விடும் என்று நினைத்து இங்கிருந்து திலகா தன்னையே தேற்றிக் கொண்டாள்.