சகதி மண்ணில் ஒரு தர்ம தேவதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 9,724 
 
 

இரவு ஏழு மணியிருக்கும் ஆச்சியின் எட்டுச் சடங்கில் விருந்துண்டு போவதற்காக வந்தவர்களில் தனி ஒருவனாய் நாதனை இனம் கண்டு தேறிய மகிழ்ச்சியுடன் சுவேதா அடுக்களைக்குள் நிலையழிந்து நின்று கொண்டிருந்த நேரமது இந்த நிலையழிதல் என்பது அவளைப் பொறுத்தவரை வெளிப் பிரக்ஞை அற்றுப் போன உள் பிரகாசமாகத் தோன்றுகின்ற முற்றிலும் மாறுபட்ட ஒரு புது அனுபவமாய் அது அவளை எங்கேயோ கொண்டு சென்றது.

ஆச்சிக்கு எட்டுப் படையல் படைக்கிற நேரம் அம்மா கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருப்பது தெரிந்தது ஆச்சி செத்து இவ்வளவு நாளாகியும் அம்மாவுக்கு இன்னும் மனம் ஆறவில்லை ஆச்சியை நன்கு பராமரிக்க முடியாமல் போன மனக் குறையினால் தான் அவ இன்னும் அழுது கொண்டிருப்பதாக சுவேதாவுக்கு உறைத்தது கடைசிக் காலத்தில் புத்தி மாறாட்டம் வந்து ஆச்சி செய்த லீலைகளை அவளும் அறிவாள் அதற்குத் தாக்குப் பிடித்து நின்றதற்கே அம்மாவுக்கு மாலை போட வேண்டும்

ஆச்சி வீட்டை அசுத்தம் செய்ததால் வீட்டிற்குப் பின்புறமாகக் கொட்டில் போட்டு ஆச்சியை விட நேர்ந்தது குறித்து எழுந்த சர்ச்சைகள் நடுவே இதற்கான குற்றவாளியாய் அம்மாவையே இனம் கண்டு உலகம் அவ மீது புழுதி வாரித் தூற்றியதை ஜீரணிக்க முடியாமல் போனதன் பலனே அம்மாவினுடைய இந்த அழுகை மழை கண் மூடித்தனமாக உலகம் சொல்வதையெல்லாம் கருத்தில் கொண்டால் வாழ்க்கையே ஒரு சவால் தான் அதைப் புறம் தள்ளி மறக்காத வரை விடிவில்லை என்று பட்டது. அம்மாவே இதற்குச் சிறந்த உதாரணம் ஒன்றிலும் தெளிவில்லாத புத்தி மயக்கம் இருக்கும் வரை அம்மாவின் நிலை இதுவாகத்தான் இருக்கும் அது போகட்டும்

வெகு காலம் கழித்து நாதனைக் கண்ட மகிழ்ச்சி சுவேதாவுக்கு ஒரு விதத்தில் பார்த்தால் அவன் அவளுக்கு மச்சான் முறையாக வேண்டும் தூரத்து உறவு தான் மேலான இலட்சிய உணர்வோடு வாழ்க்கையை நோக்குகிற சிந்தனை மனம் அவனுக்கு இயல்பானது சிறு வயதிலேயே ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஊர் மண்ணிலே பவனி வந்த அவனோடு சுவேதாவுக்கு உறவு நிலையையும் தாண்டி ஓர் ஆத்மார்த்தமான நெருக்கம் இருந்தது அவன் போடும் நாடகங்களில் அவள் நடிக்காவிட்டாலும் அவற்றைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டாடுகிற அவனுக்கு மிகவும் பிடித்தமான முன்னணி ரசிகர்களில் அவளும் ஒருத்தி என்பதை என்றைக்குமே அவன் மறந்ததில்லை

திடீரென்று ஒரு நாள் காசு தேடி உழைப்பதற்காக மலைநாடு சென்று அடியோடு இந்த மண்ணின் சுவடுகளை விட்டு மறைந்து போனவன் திரை விலகி மீண்டும் வந்திருப்பது போல ஒளி முகம் காட்டி வந்து சேர்ந்தது சுவேதாவின் இருப்பு நிலை அறியவே .சின்ன வயதில் ஒன்றாக அவளோடு மணல் வீடு கட்டி மகிழ்ந்ததோடு மட்டும் நில்லாது தான் போடும் நாடகங்களுக்கு ஒருமுன்னணி ரசிகையாய் இருந்து தன்னை ஊக்குவித்த அவள் மீது ஒரு தலைப்பட்சமாகக் காதல் கொண்ட மனதோடுதான் அவன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்

அதை வெளிப்படையாக மனம் திறந்து கூறுவதற்கான சந்தர்ப்பம் அவர்களைப் பொறுத்த வரை மிக அரிதாகவே இருந்தது. ஏனென்றால் அந்தக் காலத்து ஒழுக்க வரம்புகளை உடைத்து இதைச் சாதிப்பதென்பது முடியாத காரியம், அவளைத் தனிமையில் சந்திக்கவும் முடியவில்லை

ஆச்சியின் எட்டுப் படையல் விருந்து களை கட்டி அரங்கேறிக் கொண்டிருந்தது கதிரையில் இறந்தவரின் போட்டோ வைத்து மாலை போட்டுத்தான் பெரும்பாலும் இந்தப் படையல் நடக்கும் ஆச்சிக்கு அந்தக் கொடுப்பனை இல்லை அந்தக் காலத்தில் இப்படிக் கமரா வைத்துப் போட்டோ எடுக்கிற கலை அவ்வளவாக நடப்பதில்லை இரு தலை முறைக்கு முன்னால் நவீன நாகரீகத்தில் உலகம் வளர்ச்சி காணாத மிகவும் பிற்போக்குத்தனமான காலப் போக்கில் நடைமுறை வாழ்க்கையனுபவங்கள் இவ்வாறு தான் இருந்தது அதனாலென்ன பெறுமதியான உயிரின் ஒளி துலங்க இது குறியீடல்லவே வெறும் உடலைக் காட்சிப்படுத்தவென்றே நேர்கின்ற இந்த வரட்டுச் சங்கத்திகள் குறித்து சுவேதா ஒரு போதுமே அலட்டிக் கொண்டதில்லை வாழ்க்கை பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் சலனக் குறியீடுகளற்ற ஆழமான அறிவியல் கண்ணோட்டத்தையே கொண்ட ஆன்மீக மனம் அவளது தனிப் பெருமை

ஆச்சியின் எட்டுச் சடங்கிற்கான படையல் உணவுகளே பல் வேறு வண்ணக் காட்சியொளியுடன் நடு வராந்தாவில் களை கொண்டு நிற்பதாக அடுக்களைக்குள் நின்றவாறே சுவேதாவால் மிக நன்றாகவே உணர முடிந்தது இழப்பு வீட்டின் தீட்டை உள் வாங்கியவாறே காட்சிக்கு நிற்கும் அதைத் தொடவும் மனம் கூசுகிற தருணத்தில், அதன் காட்சியழகை மட்டுமே கண்களால் காணத் தெரிந்த இந்தச் சுவேதா சராசரி பெண்களை விட மிகவும் அபூர்வமான ஓர் அதிசயப் பெண் தான்

அவள் அவ்வாறு மனதின் லயம் பிசகாது பார்க்கிற தருணம் அடுக்களைக்கு வெளியே நின்று அவளைக் கவனிக்கிற உத்வேகத்தோடு நாதன் ஒரு மிகப் பெரிய சிந்தனைவாதி போல் அவள் கண் முன் நடமாடுவது தெரிந்தது அவனுடைய அந்தத் தன் மீதான கவன நிலைப்பாடு குறித்த கவலையோடு யாரும் அறியாத தருணத்தில் கதவுத் திரை மறைவில் மறைந்து நின்றவாறு இரகசியமாக அவனிடம் கேட்டாள்

“‘இதுக்குத் தான் இஞ்சை வந்தீங்களா?”

“ஐயோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நீ நினக்கிற மாதிரி நான் அதுக்கு வரேலை “

“பின் எதுக்காம் இந்தக் கள்ளப் பார்வை? இது நடக்குமென்று நீங்கள் நம்பினால் நான் அதுக்குப் பொறுப்பில்லை”

“சுவேதா! அப்படித்தான் நீ நினைக்கிற மாதிரியே இருந்தாலும் இதைத் தவறென்று நினைக்கிற அளவுக்கு நான் என்ன தரம் குறைந்தவனா? சொல்லு சுவேதா”

“நான் அப்படி நினைக்காவிட்டாலும் என்ரை தலைவிதியைத் தீர்மானிக்கிறது நானல்லவே எனக்காக ஓர் அரசாங்க உத்தியோகத்தனைத் தான் அப்பா தேடிக் கொண்டிருக்கிறார் அவரிடம் போய் எங்கடை தெய்வீக நட்பு எடுபடுமா என்று எனக்குத் தோன்றேலை நீங்கள் ஓர் இலட்சியவாதி என்பதை நான் நம்பலாம் இந்த வரையறையுடனேயே எங்கள் நட்புக்கு ஓர் எல்லையைக் கண்ட திருப்தி மட்டுமே இப்ப என்னிடம் மிஞ்சியிருக்கு

அதன் பிறகு அவளை எதிர்த்து அவனுக்குப் பேச வரவில்லை அவள் ஆசைப்படாத போது தன் காதல் பூஜ்யம் தான் என்று மிகவும் ஆற்றாமையோடு அவன் நினைவு கூர்ந்தான் சலனப் புதை குழிக்குள் அகப்படாத சுவேதாவை அவன் ஓர் ஒளித் தேவதையாகவே இனம் கண்ட போதிலும் சிக்கலான சமூக முரண்பாடுகளின் பொருட்டே அவளை அடைய முடியாமல் போன ஏமாற்றத்துடனேயே எட்டுப் படையல் விருந்து தீண்டாமலே அவன் அங்கிருந்து கிளம்பிப் போவதைச் சுவேதாவால் மட்டுமே வெளிச்சக் கண்களுடன் மிக நன்றாகவே உணர முடிந்தது

அதை உணர்வுபூர்வமாய் உணர்ந்து மனம் வருந்திய வேளையில் தான் அவளுடைய கல்யாண வேள்வியும் கை கூடி வந்தது ஆச்சியின் மறைவுக்குப் பின் ஒரு வருட சாந்தி நிலைக்குப் பிறகு உறவு நிலையின் இன்னுமொரு பரிணாம நிலையாகவே இந்த உறவு மாற்றச் சங்கதிகளல்ல சகதி வலை என்று பிடிபடவே அந்தக் கல்யாணக் காட்சி நாடகம் அவளுக்கு

எப்படியானாலென்ன நாதன் கண் குளிரக் கண்டு தரிசித்தது போல் வாழ்க்கையின் கறைபடாத ஒளிச்சுவடுகளின் ஆதர்ஸ தேவதையான அவளைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான் சின்னச் சின்ன ஆசைகளோடு மட்டுமே வாழ்க்கை நிறைவு பெறுவதாக நம்பிக் காலத்தை ஓட்டுகின்ற சராசரி பெண்களுக்கு மத்தியிலே சலனங்களினூடே பயணிக்கும் மந்த புத்தியின்றி அன்பையே வரமாகப் பெற்று உயர்ந்து நிற்கிற நிர்மலமான ஒரு பளிங்கு தேவதையாய் இருந்து வரும் அவளுக்கு கல்யாணத்துக்குப் பிறகு அவளைப் புடம் போட்டுப் பரீட்சித்துப் பார்க்கிற மாதிரியே அடுக்கடுக்காய் வந்த சத்திய சோதனைகளை எதிர் கொள்ள நேர்ந்த நிலையிலும் நிலை தளும்பாத, உணர்ச்சிகளால் கொந்தளித்துத் தடம் புரண்டு சரிந்து போகாத உள் விழிப்பான ஆன்மீக ஞானம் கொண்டிருப்பதால் வாழ்க்கையின் சவால்களை எதிர் கொண்டு தாக்குப் பிடித்து வெற்றிவாகை சூடக் கூடிய மனோபலத்தை அவள் தனது பிறவிப் பெருமையாகவே பெற்று ஒளி மகுடம் தரித்து வாழ நேர்ந்ததை யாரும் கணக்கில் எடுத்ததாகவே தெரியவில்லை, அவளின் பெண்மை சார்ந்த ஒப்பற்ற குணநலன்கள் கூட இங்கு எடுபடவில்லை நடைமுறை வாழ்வை மையப் பொருளாக வைத்து எழுந்த கண்ணோட்டத்தில் அவள் துரும்பாகவே சிக்கிச் சீரழிஞ்சு போகத்தான் இந்தக் கல்யாண விதி ஒரு சாபமாக அவள் தலை மீது வந்து விடிந்தது

கல்யாணமான முதல் நாளன்றே காலனே வந்து கதவைத் தட்டின மாதிரி கொடூரமான ஓர் அனுபவத் தீக்குளிப்பு அவளுக்கு முதல் நாளிரவு பதினொரு மணியளவில்தான் அவள் கழுத்தில் அந்தத் திருமண விலங்கு அதன் மங்களக் காட்சிகள் மறைந்து பேய் பிடிபட்ட நேரம் பேய்களல்ல பேய்க் குணம் கொண்ட மனிதர்கள் குடியிருக்கும் வீடென்பதால் மணமகன் வீட்டில் நிகழ வேண்டிய முதலிரவு அவள் வீட்டிலேயே நடக்க இருந்தது

வறுமை இருக்கலாம் அதைத் தப்பு என்று நினைக்கிற மனப்பாங்கு கொண்டவளல்ல அவள் வறுமையோடு கூடச் சாத்தானும் குடியிருக்கிற வீடு தான் அது என்பதை அவளைப் புடம் போட்டு நிரூபிப்பதற்கே அப்படியொரு காட்டு வெறிச் சம்பவதை ஒரு துன்பக் கறைபடிந்த கருந்தீட்டு நாடகமாக அவள் எதிர் கொள்ள நேர்ந்தது.

அப்பா ஆசைப்பட்டது போல் புது மாப்பிள்ளை கண்ணன் ஓர் அரசாங்க ஊழியன் தான் அதுவே வாழ்க்கைக்கு நிறைவைக் கொண்டு வருமா என்று வாழ்ந்து தான் பார்க்க வேண்டும் கல்யாணம் முடிந்த கையோடு கால் மாறும் சடங்கை நிறைவேற்றுவதற்காகக் கண்ணன் வீட்டிற்கு அவர்கள் வர நேர்ந்தது அப்போது நேரம் பன்னிரண்டு மணிக்கு மேலிருக்கும். பகல் முழுக்கப் போட்டிருந்த மணப் பெண் வேடத்தின் கனதி ஒரு புறம். அத்துடன் கண்கள் துஞ்சி விடுமளவுக்கு நித்திரைக் களைப்பும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்? அவள் அப்படிக் கண் மயங்கிய வேளையில் தான் அந்த விபரீதம் நடந்தேறியது

அவளுக்கு அன்பளிப்புக் கொடுப்பதற்காக மாமனார் iஇளையதம்பி ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்திருந்தார். வரும் போது நித்திரை மயக்கத்தில் அதைத் தவறவிட்டு வந்தது அவளுக்கு ஞாபகம் இல்லை. வீட்டிற்கு வந்ததும் முதலிரவுப் பதட்டத்தில் எல்லாமே அவளுக்கு மறந்து போனது. இலட்சியக் காதலனாக வந்து மறைந்து போன நாதனையே அவள் அடியோடு மறந்து விட்ட நேரம். உயிரை அல்ல தன் உடலை இஷ்டப்படி ஆண்டு இரை விழுங்கவென்றே கண்ணன் கணவனென்ற புனிதப் போர்வைக்குள் வந்து சேர்ந்திருப்பது கூட அறியாமல் அவன் அள்ளித் தரும் சுகத்தில் தன்னை மறந்து குளிர்காயப் போனாளே அவள்.. அந்த வேளையில் அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர்களைக் கண் திறந்து விழிக்கச் செய்யப் பூதமே புறப்பட்டு வந்த மாதிரி, ,கண்ணன் வீட்டிலிருந்து வந்தவர்கள் நிலம் அதிர நடந்து வந்து அறைக் கதவைப் பட படவென்று தட்டிய போது அந்த மெய் மறந்து உடல் உருகிக் கிடந்த சுகமான அனுபவச் சிலிர்ப்புச் சட்டென்று கலைந்து விட திடுக்கிட்டு விழித்த கண்ணன் அவளை மேனி பிரித்து உதறி விட்டு ஓடிப்போய்க் கதவைத் திறந்து பார்த்த போது அழுது கலங்கிய முகத்துடன் அம்மாவும் அவளைச் சுற்றி உடன் பிறந்த சகோதரர்களும் பதட்டம் கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டு அவன் வெகுவாகப் பதறிப் போனான்

“பூசை வேளையில் கரடி புகுந்த மாதிரி இந்த அகால வேளையில் அவர்கள் இப்படி மனமொடிந்து வந்து நிற்பதன் காரணம் பிடிபடாத அதிர்ச்சியோடு அவன் கேட்டான்

“என்னம்மா? இந்த நேரத்திலை வந்திருக்கிறியள்?கதைக்கிற சத்தம் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டு விழிக்கப் போகின,ம் உள்ளே வாங்கோ கதைப்பம் “

“அங்கை ஐயா ஒரே சண்டை துணிமணியெல்லாம் தூக்கிப் போட்டுக் கொளுத்துறார்” நீ வந்தால் தான் மனிசன் அடங்கும் என்றாள் உள்ளே வந்த அம்மா அழுகையோடு

“என்னம்மா குழப்புறியள்? அவர் பார்த்துச் செய்து வைச்ச கல்யாணம் தானே இது இப்ப இடையிலே வந்து சன்னதம் கொண்டு குழப்புறதெண்டால் அதுக்கு என்ன அர்த்தம் ?

“உன்னிலை ஒரு பிழையுமில்லை அப்பன். எல்லாம் உன்ரை மனிசி செய்த வேலை. குடுத்த காசைத் தூக்கி எறிஞ்சு போட்டு வந்திருக்கிறாளே நாங்கள் சண்டை பிடிச்சால் தான் இவ சந்தோஷப்படுவா போலை இருக்கு”

“என்ன சுவேதா? அம்மா சொன்னதைக் கேட்டியே ஐயா குடுத்த காசிலை அப்படியென்ன அருவருப்பு உனக்கு? ஓ! நீ பெரிய பணக்காரியாச்சே எல்லாம் உன்ரை பணத்திமிர் கெதியிலை வெளிக்கிடு வீட்டை போய் ஐயாவின்ரை காலிலை விழுந்து நீ மன்னிப்புக் கேட்டால் தான் அவர் சமாதானப்படுவார். எழும்பிக் கெதியிலை வெளிக்கிடு வீட்டை போவம்”

இது ஒரு சின்ன விடயம் இப்போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது பூதாக்கலம் விருந்துண்ட கையோடு அவசரம் அவசரமாகப் புறப்பட்டு வந்ததால் நேர்ந்த தவறு தான் இது.. கை கழுவும் போது மாமா கொடுத்த காசைக் கட்டிலில் வைத்து விட்டு மறந்து போய் வந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? வீட்டையே கொளுத்துகிற அளவுக்கு அசுர குணம் படைத்த ஒரு தவறான மனிதரோடும் அவர் தம் உறவுகளோடும் விதிவசத்தால் கணவன் மனைவி என்ற உறவு நெருக்கத்தோடு பின்னிப் பிணக்கப்பட்ட என் நிலைமை இனி என்னவாகும்? இவர்கள் இப்படித் தான் என்று அப்பா அறிய நேர்ந்தால் எவ்வளவு மனவருத்தப்படுவார் சண்டித்தனங்களிலேயே கொடி கட்டிப் பறக்கின்ற பாவிகளின் வாடை பட்டாலே தோஷம் என்று நினைக்கிற அவரின் மகளான எனக்கு இப்படியொரு சோதனையா? பஞ்சபாதகளுக்கும் அஞ்சாத ஒருவரால் தான் இதையெல்லாம் மனம் கூசாமல் செய்து விடமுடியும் அப்படிப்பட்ட ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேக்கிற அளவுக்கு நானும் தரம் குறைந்து போக நேர்ந்ததே தர்மத்தையே உயிராய் நம்பி அப்பா காட்டிய பாதையில் வாழ்கிற என்னையே சகதி குளிக்க வைக்கத் தான் இதெல்லாம் நடக்குது போலும்”

ஒரு சகதி நிலத்தில் கால் வைத்த தடுமாற்றத்தோடு முகம் கவலை கொண்டு அவள் வந்த கூட்டத்தோடு காரில் ஏறி வருவதைப் பார்த்து விட்டு அவன் கேட்டான்

“இதை நீ வேணுமெண்டு தானே செய்தனீ. எல்லாம் உன்ரை பணத்திமிர் இதை மறைக்க நீ எத்தனை நாடகம் ஆடுவாய் சும்மா நடிக்காதை “

முதற் கோணல் முற்றும் கோணலாகவே அவன் அவ்வாறு பேசியதைக் கேட்டு அவள் வெகுவாக இடிந்து போனாள் தன்னை உள்ளபடி அவன் அறிந்து கொள்வதென்பது அப்படியொன்றும் இலகுவான காரிய,மல்ல என்று அவள் மிகவும் மன வேதனையுடன் நினைவு கூர்ந்தாள். ஏனென்றால் அவனின் பிறவிக் கறை அப்பேர்ப்பட்டது ஒரு நல்ல தந்தைக்கு மகனாக அவன் பிறந்திருந்தால் அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும் அவன் தயங்க மாட்டான். அப்படியில்லாத போது சிந்தனை வளம் குறைந்தோ முற்றாக வற்றியோ அவன் இவ்வாறு தரம் குறைந்து அவளையே சூறையாடுவது போல் பேசும் நிலைக்கான காரணம் வேறொன்றுமில்லை அப்பா அல்ல அந்த ஐயா இப்ப சகதி குளித்து நிக்கிறாரே அந்தப் பாவ மண்ணில் விழுந்தது விதையல்ல விருட்சமே விசுவரூபமெடுத்துத் தன்னை முழுவதுமே உயிர் உறிஞ்சிக் குடிக்க வைக்கத்தான் இப்ப நான் கழுத்தில் தொங்க விட்டிருகிற இந்தத் தாலியும் என்று நினைத்து ஆற்றாமை கொண்டு தனக்குள் அழுது தீர்த்தவள் அவர்கள் வீடு வந்ததும் ஒன்றுமே நடவாத பாவனையோடு கண்களைத் துடைத்துக் கொண்டு அவனுடன் உள்ளே வந்தாள்

வீடு நிசப்தமாக இருந்தது அது ஒன்றும் அவர்கள் வீடு மாதிரிப் பெரிய கல் வீடல்ல வீடு முக்கியமல்ல மனிதர்களையே பெரிதுபடுத்திப் பார்க்கிற விசாலமான துருப்பிடிக்காத மனம் அவளுடையது அவள் வளர்ந்த சூழல் அப்படி இப்போது அதற்கு முற்றிலும் எதிர்மறையான பாவ நெருப்பிலேயே கால் வைக்க நேர்ந்த பெருஞ்சோகம் மனதில் கனக்க அவள் உள்ளே வந்து பார்த்த போது தோளில் தொங்கும் சால்வையுடன் இளையதம்பி எதிர்ப்பட்டார். அவர் கள்ளோ சாராயமோ நன்றாகக் குடித்திருப்பது போல் சிவந்து வெறித்த பார்வையுடன் அன்பின் நிழல் கூடத் தீண்டியறியாத மிருகசுபாவம் கொண்ட ஒரு பாவியாய் கண்களில் கனல் பறக்க அவர் தன்னிலையழிந்து நின்று கொண்டிருப்பது உயிர்ப் பிரக்ஞை இல்லாதொழிந்த ஒரு கருந்தீட்டு நிழல் காட்சியாய் அவள் கண்களில் வெறித்தது சட்டை அணியாத வெறும் மேனியுடன் வேட்டி கட்டத் தெரிந்து தமிழ்ப் பண்பாட்டுக் கோலம் மறவாமல் வாழத் தெரிந்த அவருக்கு வாழ்க்கையின் நலன்களைத் தடம் புரண்டு போகச் செய்யும் அளவுக்கு மனிதம் தீர்ந்த மிருக புத்தி எப்படி வந்தது என்று பிடிபடாத மயக்கத்துடனேயே தர்ம நெறிகளையே மேலானதாக நம்பி வழிபடும் தன் புனிதங்களே இவர் பாவங்களைப் போக்கும் என்ற நம்பிக்கையொளி கண்களில் ஒளி வீச அவர் காலடியில் வீழ்ந்து கதறியழுதவாறு ஒரு சத்திய பிரகடனம் செய்வது போல உள்ளார்ந்த விழிப்புடன் மனதைத் திறந்து உருகி வழியும் குரலில் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள் அவள்

“மாமா! என்னை மன்னிச்சிடுங்கோ அப்ப இருந்த நித்திரை மயக்கத்திலைத் தெரியாமல் நீங்கள் குடுத்த காசைக் கட்டிலில் வைச்சிட்டு வந்திட்டன் இதுக்காக என்னைத் தண்டிக்கிற மாதிரி நீங்கள் எதைச் செய்தாலும் அனுசரித்துப் போற மனப்பக்குவம் தான் இப்ப எனக்கிருக்கிருக்கிற ஒரே பெருமை இதைக் களங்கப்படுத்துகிற மாதிரி வீட்டைக் கொளுத்துறதைத் தான் என்னாலை தாங்க முடியேலை “

அவர் அதைக் கேட்டவாறே ஒன்றும் பேசத் தோன்றாமல் சலனமின்றி நின்றிருந்தார் அவருக்கு இது முற்றிலும் மாறுப்பட்ட ஓர் புது அனுபவம். தன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்குமளவுக்குச் சூழ்நிலையின் விபரீதப் போக்குக்கு ஈடு கொடுத்து தனது பிறவிப் பெருமையான நிலை தளும்பாத சத்திய இருப்பு நிலையை மறந்து பெருந்தன்மையுடன் தன் காலில் அடி பணிந்து மன்னிப்புக் கேட்கிற அவள் முன் தனது மிருக வெறி தலைவிரித்தாடுகின்ற இருண்ட மனசையே நினைவு கூர்ந்த தடுமாற்றத்தோடு மெளனம் கனக்க அவர் நிற்கிறபோது இந்தச் சலன வெளியை ஊடறுத்துக் கொண்டு பேசுவது போல அப்போது கண்ணன் குரல் கேட்டது

“சரி சரி போதும் நீ நடிச்சது எழுந்திரு வீட்டை வா இன்னும் இருக்கு உனக்கு”

அவன் தரப் போகும் அந்த அன்புப் பரிசுகள் குறித்த கேள்விக் கணைகளின் நெருப்பு அணையாத நிலையிலேயே அவனுடனான இந்தப் பயணம் ஒரு துன்பியல் நாடகமாக வந்து தன்னைக் கருவறுத்துக் கழுவிலேற்றிவிடவா என்று பிடிபடாத மயக்கத்துடன் எழுந்து அவள் அவன் பின்னால் போனது ஒரு கனவுக் காட்சியாய் மனதில் பதியவேயில்லை அவனுக்குப் பதிலாகத் தன் மீது ஒரு தலைப்பட்சமாகக் காதல் கொண்ட நாதனையே மணந்திருந் தால் தன் களங்கமற்ற புனித அன்பின் மேலான குணங்களை அறியத் தவறிய இவர்களால் குறிப்பாகக் கண்ணனால் மனசளவில் காயப்பட்டு தெருவில் தூக்கி எறிந்து கசக்கிப் போட்ட மாலையாக இப்ப நான் நிக்கிறேனே இது நடவாமல் போயிருக்கும் “என்று ஏனோ அவளுக்கு நெஞ்சு முட்டிய சோகச் சுமையுடன் அப்போது நினைக்கத் தோன்றியது காலம் கடந்த ஞானம் இப்படித் தான் வரும். தவிர்க்க முடியாத காலச் சுழலில் நீந்திக் கரையேறாத முடியாத நிலையிலேயே அதுவும் கண் திறக்குமென்று பட்டது.

என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *