கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 2,017 
 

(1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குறுக்குத் தெருவை வெட்டிக் கடந்து, முச்சந்தி முனையில் வலப் பக்கமாகத் திரும்பி அந்தப் பிரதான வீதிக்குக் காரைத் திருப்பிச் செலுத்திய போது, வீதி முனையில் இருந்த கோவிலில் மணியோசை ‘கணீ’ரெனக் கேட்டது.

‘முருகா!’ என மனதிற்குள் ஒரு தடவை சொல்லிக் கொண்டார் சோமநாதன். கோயிலைக் கார் ஒரு கணம் கைகள் இரண்டையும் கோர்த்திணைத்து கடந்து செல்லும் போது சற்றுத் தூக்கிக் கும்பிட்டுக் கொண்டார். அப்பொழுதுதான் அவருக்கு இன்றைக்கு வெள்ளிக் கிழமை என்ற ஞாபகம் திடீரென வந்தது. காருக்கு முன் சீட்டில் பக்கத்தே மௌனமாக உட்கார்ந்திருந்த மகனைத் திரும்பிப் பார்த்தார். ‘நகுலேசு கடையைத் திறந்ததும் கொஞ்ச நேரம் கடையிலை என்னோடை இரு. எனக்கு இண்டைக்குக் கனக்க வேலையிருக்கு. கணக்குப் பிள்ளையும் இண்டைக்கு நேரஞ் செல்ல வாறனெண்டு நேற்றுச் சொல்லிப் போட்டுப் போனவர். அதுதான் உன்னைக் கையோடு கூட்டிக் கொண்டு வந்தனான்….’ என்றார்.

நகுலேஸ்வரன், தான் இது வரை சொல்லிக் கொண்டு வந்ததைக் கேட்டானா இல்லையா என்பதை இவரால் அனுமானிக்க முடியவில்லை. பட்டதாரிப் பையன். படிப்பை முடித்து ஒரு வருடமாகி விட்டது. வீட்டில் சும்மா குந்திக்

குந்தியிருப்பது தான் படித்ததற்கு வேலை. படித்த பொடியனைச் சிரமப் படுத்த அவருக்கு விருப்பமில்லை. அவனொரு போக்கு தனிப் போக்குடைய நகுலேஸ்வரன் எந்த விதமான ஆசாபாசங்களுக்கும் உட்படாதவன் போன்ற ஒரு மனநிலை உணர்வுள்ளவன். வீட்டில் செல்லப் பிள்ளை. ஒரேயொரு மகன். இருந்தாலும் அந்தத் தனிப்பட்ட சலுகையைப் பாவித்து அவன் அடம் பிடிப்பதுமில்லை. தனது உண்மையான உணர்வுகளைக் காட்டிக் கொண்டதுமில்லை.

வீட்டில் தனித்துக் குந்தியிருந்தவனை எப்படியாவது தனது தொழில் நிலையத்திற்கு அழைத்து வந்து தொழில் நுட்பங்களையாவது தற்காலிகமாகப் போதித்து வைக்கலாம் என்ற அருட்டுணர்வில் தான் இன்று காலை அவனைக் காரில் தனது கடைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார் சோமநாதன்.

பிரதான வீதியில் நாற்சந்திசந்திக்கும் முனைக்குச் சமீபமாகத் தெருவோரம் காரை நிறுத்தி விட்டு இறங்கினார் அவர். கூடவே நகுலேஸ்வரனும் காரை விட்டு இறங்கிக் கொண்டான்?

கார்க் கதவில் ஒரு கையும், இடுப்பில் மறு கையுமாகக் காட்சி தந்தார் அவர். நிமிர்ந்து பார்த்தார். எட்டி நீளமுள்ள அந்த ஸ்தாபனத்தின் வடிவான விளம்பரப் பலகையை நோட்டமிட்டார். சோமநாதன் அன்ட் சன்’ என்ற மூவர்ணக் கொட்டை எழுத்துக்கள் அழகான ஆங்கிலத்தில் பளிச்சிட்டன. விளம்பரப் பலகை ஒரு மூலை மூளிப்பட்டது போலச் சிதைந்து காட்சி தந்தது.

சோமநாதனுக்கு நேற்றைய எரிச்சல் இன்றும் மனதிற்குள் கிளை விட்டுப்படர்ந்தது.

முன்னால் பிரபலமான பெரிய கண்ணாடி விற்பனவு நிலையம். கொழும்பில் இருந்து இராட்சத லொறிகளில் எல்லாம் கண்ணாடி வரும். இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்ணாடி இறக்கிய லொறியொன்று வெட்டித் திரும்பிப் போக வழி தேடுகையில் இசக்கு பிசக்காக இவரது கடையின் விளம்பரப் பலகையின் ஒரு மூலையைப் பதம் பார்த்து விட்டது. விளம்பரப் பலகையே மூளியாக்கப் பட்ட நிலையில் இரண்டு நாட்களாகக் காட்சி தந்து வருகின்றது.

அதைப் பார்க்கப் பார்க்கச் சோமநாதன் நெஞ்சில் எரிச்சல் வியாபித்தது. பக்கத்தே பேசாமல் மகன் நிற்பதைப் பார்க்க மன எரிச்சல் இன்னம் அதிகரிக்கவே செய்தது.

‘என்ன தம்பி பேசாமல் கொள்ளாமல் நிக்கிறாய்? இந்தா துறப்பு. போய்க் கடையைத் திறவன்’ என எரிச்சலை வார்த்தைக்குள் உட் புகுந்து விடாமல் மிக எச்சரிக்கையுடன் மென்று விழுங்கிக் கொண்டே சொன்னார். சிறிய, காக்கிப் பையில் கையில் தொங்கிக் கொண்டிருந்த திறப்புக் கோர்வைகளை எடுத்து மகனிடம் நீட்டினார். சோமநாதன். படித்த பொடியனைக் கோபித்தால் அவன் மனமுடைந்து விடக் கூடும் என்ற மனப் பயம் அவருக்கு. அத்துடன் அன்றுதான் அவனை முதன் முதலில் வியாபார நிமித்தமாகத் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். எனவே சுமுகமான குரலில் மீண்டும் சொன்னார்: ‘பூக்காரன் ஆமப் பூட்டுத் திறாங்குக்குள் பூ வைத்திருக்கிறான். அதையும் எடுத்துக் கொண்டு ஆமைப் பூட்டுக்களைத் திற’ என முதல் ஆலோசனையும் சொல்லி வைத்தார்.

நகைகள் அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்’ என விளம்பரப் பலகைக்குக் கீழே கரும்பலகை நிறத்தில் வெள்ளை எழுத்தில் பொறிக்கப் பட்டிருந்த வாசகங்களை முதன் முதலில் எழுத்துக் கூட்டி வாசித்துப் பார்க்கும் பள்ளிக் கூடச் சிறு குழந்தை மனப்போக்கில் அதை மனதிற்குள் வசித்துக் கொண்டே திறப்புக் கோர்வைகளைத் தகப்பனிடமிருந்து வாங்கினான் நகுலேஸ்வரன்.

சோமநாதனிடம் ஒரு சிறப்பம்சம் இருந்தது. ஆயிரம் பிரச்சினைகள் வீட்டிலும் வெளியிலும் இருக்கலாம். தலை போகிற காரியங்கள் கிடக்கலாம். ஆனால் கடைப்படி ஏறிவிட்டால் எந்தப் பிரச்சினையுமே அவரை அண்டி விட முடியாமல் கடைப் படிக் கட்டுகளுக்கு வெளியே நின்று விடும். கடமை உணர்வைத் தவிர வேறு உணர்வுகளே அவரிடம் தலை காட்டத் தயங்கிப் போய்விடும். அவைகளை அவர் என்றுமே அனுமதிப்பதுமில்லை.

தகப்பன், தகப்பனுடைய தகப்பன், தகப்பன்…. இப்படியே கொடி கொடியாக… பரம்பரை பரம்பரையாக மூன்று நான்கு தலைமுறைகளுக்கு மேல் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றது. தொடர்ந்து இந்தத் தொழிலில் இவர்கள் பரம்பரை செழுமையும் செல்வாக்கும் ஐசுவரியங்களும் பெற்றும் திகழ்வதற்கு அடிப்படைக் காரணமே இவரது முன்னோடிகளின் சலியாத உழைப்புத்தான் என்பது சோமநாதனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. தனது முன்னோர்கள் பற்றிய பவுத்திரமான நம்பிக்கைகளை ஒரு போதனையாகவும் வழிநடத்தலாகவும் நம்பித்தான் இன்றுவரை இதில் உழைத்து வருகின்றார் அவர்.

தன்னுடன் இந்த அடைவு- வட்டித் தொழில் ‘க்ஷிணி’த்துப் போய் விடுமோ என்ற அடிப்படப் பயம் அவரது மனதை அடிக்கடி உறுத்தாமலுமில்லை, மகனின் படிப்பைப் பார்த்தே அவர் பயப்பட்டார். அவன் பட்டதாரியாக வெளி வந்துவிட்டதைக் கண்டு அவர் நெஞ்சுக்குள் வெருண்டு போய்க் கிடந்தார். ஆரம்பத்தில் மகனைப் படிக்க வைக்கவே அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. ‘பரம்பரைச் சொத்துப் பத்துத் தலைமுறைக்குக் காணுமே….’ என அவர் மனைவிக்குச் சொல்வது வழக்கம். மகன் படித்தால் கெட்டுப் போவான் என்பது அவர் கட்சி. அதிலும் இந்த வியாபாரத்திற்குப் படிப்பே அவசியமில்லை கெட்டித்தனமும் சாதுர்யமும் குயுக்தி மூளையுமே அத்திவார மூலதனம் என்பது அவரது அபிப்பிராயம். ஆனால் அவரது மனைவி விசாலாட்சி படித்தவள். எனவே மகனை எப்படியும் படிக்க வைத்து விட வேண்டும் என்ற மனப் பாங்கு வேரூன்றியிருந்தது. தங்களது ஆண் சந்ததியில் படித்தவர்கள் இல்லையே என்ற தார்மீகக் கோபமும் அவளது மனதை நீண்ட நாட்களாகவே அரித்து வந்தது. எனவே நிர்ப்பந்தித்தாள்.

ஆகவே தனது சொந்தக் கருத்துக்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு மனைவியின் விருப்பத்திற்குக் குந்தகம் வராமல் மகனைப் படிக்க வைத்தார் சோமநாதன்.

அவனும் பட்டதாரியாகி விட்டான். அத்துடன் இன்று அவருக்குத் துணையாக வட்டிக் கடைக்குள்ளும் காலடி எடுத்து வைத்துவிட்டான்.

சுவாமிப் படங்கள் ஐந்து. சோமநாதன் மன அனுஷ்டானங்களில் சர்வமத் சம்பந்தன். படங்களும் அப்படியே. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மாலை போட்டார். ஊதுபத்திகளைக் கொழுத்தி அப்படியே ஒவ்வொன்றுக்கும் கீழ் செருகி வைத்தார்.

வாசனை மெது மெதுவாகக் கடையெங்கும் பரந்து படர்ந்தது.

தினசரி வேலைகள் எல்லாம் சுத்தமாக ஒப்பேறி விட்டன என்பதை நின்று நிதானித்தப் புரிந்து கொண்டவர் போல சுவரோரம் கிடந்த சாய்வு நாற்காலியில் ‘அப்பாடா’ எனச் சாய்ந்து கொண்டார் அவர். தனது செயல்களை மகன் அவதானிக்கிறானா என்ற சந்தேகம் அவரது மூளையில் தீடீரெனத் தட்டுப் பட்டது. மகனது மனநிலையை உணர்ந்து கொள்ளும் ஆர்வம் மேவிட அவனைத் திரும்பிப் பார்த்தார்.

நகுலேஸ்வரனது பார்வை ஊதுபத்திப் புகைகளுக்கு ஊடே நிழலாடும் சுவாமி படங்கள் மீதே மொய்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.

தகப்பனும் மகனும் தான். ஆனால், இருவரது சுபாவங்களும் மன ஓட்டங்களும் வேறு வேறு. இரு துருவங்கள் போன்றது – என அவருக்குப் பட்டது.

‘சரி தம்பி…. அப்பிடி ஒரு கதிரையில் இரன்!’

அவரது கட்டளைககுக் காத்துக் கொண்டிருந்தவன் போல – அல்லது, அப்பொழுதுதான், தான் இருக்கையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என உணர்ந்தவன் போல அவன் மறுகரையில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.

பேப்பர்க்காரன் அன்றைய தினசரியை வீசி விட்டுச் சென்றான். அது காற்றில் சிறகடித்து, அதனுடன் ஏதோ இரகசியம் பேசிவிட்டுப் பறந்து வந்து ஒரு மூலையில் தஞ்சமடைந்து, பிரிந்து கிடந்தது. ஒரு கணம் பேசாமல் அப்படியே சாய்ந்து கிடந்தார் அவர். மகன் பேப்பரை எடுத்துப் படிப்பான் என எண்ணினார். அவன் சுவாமிப் படங்களை விடுத்து, விசிறி இணைப்பு முனைக்குள் கூடு கட்டிக் குஞ்சு பொரித்திருக்கும் குருவிகள், குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும் அழகிய லாவகத்தில் லயித்துப் போயிருந்தான்.

‘நல்ல பேப்பர்காரன்கள் இவன்கள்! மாசம் முடிய முந்தியே காசுக்கு வந்து கரைச்சல் குடுப்பான்கள். ஆனா…. ஒரு நாளாவது பேப்பரை ஒழுங்காகக் கையிலை தரமாட்டான்கள். இப்பெல்லாம் கொழுப்புப் புடிச்சுப் போச்சு!’ என வாய் விட்டுச் சொல்லிப் புறுபுறுத்துக் கொண்டே எழுந்து வந்து பேப்பரைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு நிமிர்ந்தார் சோமநாதன்.

தினசரி பேப்பர் படிக்கத் தான் வேண்டும் என்ற ஆர்வமோ உணர்வோ அவரிடம் கிஞ்சித்தும் இருந்ததில்லை. உலகச் செய்திகளைப் படித்து இப்பூமண்டலத்தில் என்ன நடை பெறுகின்றது, குறைந்த பட்சம் நாம் வாழும் இந்தத் தேசத்தில் என்ன என்ன சம்பவங்கள் இடம் பெறுகின்றன என்பதை அறிய வேண்டுமென்ற எந்த விதமான அறிவுத் தேடலுமற்ற அவர், பேப்பர் வாங்குவதே தனது பஜார் கௌரவத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகத்தான்.

அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களுக்கெல்லாம் சைக்கிளில் பேப்பர் பொடியன் பேப்பர் கொண்டு வந்து தினசரி போடுவதும், தனது கடைக்கு மாத்திரம் அவன் எட்டிக் கூடப் பார்க்காமல் போவதுமான சம்பவங்கள் இடம் பெற்றால் அது தனது மானத்தையே பாதித்து விடும் என்ற கௌரவப் பிரச்சினை அவரிடம் பூதாகரமாக உருவெடுத்ததன் நிமித்தமாகவே பேப்பர் வாங்கும் பழக்கம் ஆரம்பத்தில் இவரிடம் இடம் பெற்றது.

‘யாவாரிக்கு என்னத்துக்கையா, பேப்பரும் கீப்பரும்? பேப்பர் படிச்சு நாங்களென்ன இந்த உலகத்தை ஆளப் போகிறோமோ என்ன? அதைப் படிக்கிறதாலே நேரந்தான் மினைக்கேடு. பேப்பர்க்காரன் பொய்யையும் புளுகையும் எழுதுவான். அவன்ரை புளுகைப் படிச்சுப் பார்க்க நாங்களேன் காசு கொடுக்க வேணும் அதுவும் ரத்தம் சிந்திப் பாடுபட்டு உழைக்கின்ற காசை?’ என்று முன்னொரு காலம் தனது பக்க, நியாயத்தை அடித்துச் சொல்லி விளங்க வைத்த சோமநாதன் இன்று! பேப்பரை எடுத்து விரித்தக் கொண்டு பழையபடி சாய்வு நாற்காலியில் குந்தியிருந்து தலைப்புச் செய்திகளில் கவனத்தை மேயவிட்டுக் கண்களை வரிகளில் ஓடவிட்டார்.

aஐயா.. முதலாளி..பிச்சை போடுங்களைய்யா…’

முதலில் இக் குரலை அவர் கவனித்ததாகவோ காது கொடுத்ததாகவோ தெரியவில்லை.

திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தடவை இந்த இரங்கல் ஓலம் அவரது காதைக் குடையவே எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தார். இடுப்பில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் பிச்சைக்காக இரந்து நிற்கிறாள்.

‘ஐயா..ஐயா..!’

‘இந்தா…இந்தா…போ!போ…!’ சோம நாதன் தனது கயபாணியின் கடினத் தன்மைக் குரலில் மிளிர வார்த்தைகளால் அவளை விரட்டினார்.

அவள் பத்தடி கூடச் சென்றிருக்க மாட்டாள். தொடர்ந்து ஒரு கிழப் பிச்சைககாரன். கோணல் காலை இழுத்திழுத்துத் தடியூன்றி நடந்து வந்து வாசல் பக்கம் நின்றான். ஒரு கணம் மௌனமாக அவரைப் பார்த்தான். அவர் ஒன்றுமே பேசாமல் பேப்பரில் கண் புதைத்து இருப்பதை கவனித்ததும் ‘ஐயா தருமதுரை… தருமம் தாருங்கோ…. ஐயா….’ என்று குரலை உயர்த்திக் கேட்டான். ‘இந்தாப்பா பிச்சை கிச்சை இங்கைகுடுக்கிறதில்லை. சும்மா கரைச்சல் தராமல் போ….’

‘இண்டைக்கு வெள்ளிக் கிழமை ஐயா…ஏதும் தாறதைத் தாருங்கோ..போறன்’.

‘சொல்லுறது உனக்குக் காதிலை விளேல்லையா? பிச்சை இல்லை..போ…’

அவன் போய்விட்டான். சோமநாதனுக்குப் படிப்பதில் மனஞ் செல்லவில்லை. மகனைப் பார்த்தார். நகுலேஸ்வரன் வெகு அமரிக்கையாகக் கதிரையில் உட்கார்ந்து கொண்டு தெருவைப் பார்த்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். இங்கு நடப்பதை அவன் கவனித்தானா இல்லையா என்பதைக் கூட அவனைப் பார்த்த அவரால் அனுமானித்துக் கொள்ள முடியவில்லை.

‘ஐயா…ஓ சாம் தாங்க..ஓசாம் தாங்க….’ என ஓங்கிய குரல் கொடுத்தபடி ஓர் அரைக்கிறுக்கன் வாசலில் நின்று கூப்பாடு வைத்தான். இவன் உண்மையில் ஒரு விசித்திரமானவன். புதிரானவன். அந்தத் தெருவே அவனுடன் தமாஷ் பண்ணும். விடலைகளுக்கு அவனைக் கண்டால் பெரு விருப்பம். ஒரு சதம் நாணயத்தை மாத்திரமே கேட்டு வாங்கும் அவனிடம் ஒரு சதத்துக்கு மேற்பட்ட நாணயங்களைக் கொடுத்தாலும் வாங்கமாட்டான். சுழற்றி எறிந்து விடுவான். அவனுக்குத் தேவை ஒரு சத நாணயமே. கடைத் தெருப் பையன்கள் பத்து இருபத்தைந்து சத நாணயங்களை திணிப்பார்கள். அவன் கோபத்துடன் அவைகளை வீசி எறிந்து விட்டு நடையைக் கட்டி விடுவான். ஒரு சதம் என்றால் தான் பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்டு போவான்.

அந்த அரைக் கிறுக்கனைக் கண்டதும் சோமநாதனுக்கு இந்த ஞாபகங்களே மேலெழுந்தன. அப்படியான தமாஷைக் கூட அவர் அவனிடம் இதுவரை செய்ய எண்ணிப் பார்த்ததில்லை.

‘ஓ…சாம்..ஓ…சாம்…’

‘போ! போ!’ – கையால் சைகை காட்டியதுடன் வாயால் விரட்டியடித்தார்.

இதற்கிடையில் பக்கத்துப் பிள்ளையார் கோயில் பையன் வந்தான். ஐயர் அனுப்பினாராம், உடன் வரச் சொல்லித் தகவல் சொன்னான்.

சோமநாதன் பிரதான வீதியில் பிரமுகர். அதனால் பிள்ளையார் கோயில் திருப்பணிச் சபையின் தலைவராகவும் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டவர். கோயில் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன. இந்த ஆடியில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. அதற்குச் சோமநாதனே பூரண பொறுப்பு.

‘தம்பி நகுலேசு…. ஒரு பத்து நிமிட்டிலை போயிட்டு வாறன். கடையைப் பத்திரமாப் பார்த்துக் கொள். கவனம்…. கோயிலுக்குப் போயிட்டு இந்தா வந்திடுறன் எனச் சொல்லிக் கொண்டே வந்த பையனுடன் படியிறங்கி நடந்தார்.

பத்து நிமிஷம் எனச் சொல்லிச் சென்றவர் அரை மணி நேரத்திற்குப் பின்னர் தான் வியர்த்துக் களைக்க திரும்பி வந்தார். வந்ததும் விசிறியைப் போட்டார். கூஜாவில் இருந்து குளிர்ந்த நீரை வார்த்துக் குடித்தார். சாய்வு நாற்காலியில் சிக்காராய்ச் சாய்ந்து உட்ார்ந்து கொண்டே, ‘இவன் கணக்கப் பிள்ளை இன்னமும் வரவில்லையா?’ எனக் கேட்டுக் கொண்டே பதிலை எதிர்பாராமல் தோளிற் கிடந்த சால்வையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டார்.

‘அது சரி நகுலேசு இண்டைக்கு வெள்ளிக்கிழமை. நானில்லை எண்டு தெரியும். வந்த பிச்சைக்காரருக்கு ஏதாவது ஐஞ்சு பத்துச் சதமெண்டாலும் எடுத்துப் போட்டியே?’ என்று மகனின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டார் சோமநாதன்.

நகுலேஸ்வரன் அவர் கேட்டது புரிந்தது போலவும், புரியாதது போலவும் முகத்தை வைத்துக் கொண்டு, வழக்கமற்ற பார்வையுடன் அவரைப் பார்த்தான். இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான்.

சோகங்களால் தின்னப் பட்டவர் போன்ற மன நெகிழ்வுடன் சோமநாதன் மகனைப் பார்த்தார். ‘ஹும்!’ என ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டார். ‘என்ரை பரம்பரைக் குணந்தான்…. பரவணிக்குணந் தான் உனக்கு நல்லாத் தெரியுமோ, இல்லையோ ஒரு சதக் காசு ஆருக்கும் ஈயமாட்டன்… நீயாவது வாழுற.- வளருற புள்ளை. அதோடை படிச்சனீ! நானில்லை எண்டது தெரிஞ்சதும் கொஞ்சம் சில்லறைகளை எடுத்து அதுகளுக்குப் போட்டிருக்கலாம் தானே? சே! தேடி வச்ச சொத்திலை படிச்ச புள்ள தருமம் செய்தா குறைஞ்சா போய் விடுவாய்? பேந்தேன் படிப்பு? என்ரை பரவணிக்கெண்டு நீயும் வந்து நல்லா வாய்ச்சிருக்கிறீயே? காலத்தோடை ஒட்டிப் புழைக்கத் தெரிஞ்ச புள்ளையாப்பா நீ?’ பரிதாபத்துக்குரிய ஒரு பிராணியின் பார்வையுடன் மகனையே வைத்த கண் வைத்தபடி சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் சோமநாதன்.

மீண்டும் ஒரு பெருமூச் செறிந்தார்.

நகுலேஸ்வரன் தெருவையே நோக்கமற்றுப் பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றான்.

வெளியே தெருவோரமாக ‘ஐயா… ஐயா… தருமம் தாருங்க ராசா….!’ என்ற இரங்கலோசை ஒரு லயம் கலந்த சுருதியுடன் ஒலித்துக் கொண்டிருந்தது. பல்லுப் போன கூனிக் குறுகிய கிழவி ஒருத்தி வாசலில் இரந்து நின்று கொண்டிருந்தாள்.

‘போ..! போ..!’ எனச் சுய பாணியில், கடினத் தன்மையோடு, சைகையாலும் வாய் விரட்டலாலும் அந்தக் கிழவியை விரட்டினார் சோமநாதன்.

– இதழ் 154 – 1981, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *