கோழிக்கோட்டில் வரவேற்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 4,626 
 

(இதற்கு முந்தைய ‘விஷச் சொட்டு’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

நாட்கள் ஓடின.

ராஜாராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது.

மாதங்கள் ஓடின.

அவனுடைய கல்யாணமும் சிறப்பாக முடிந்தது.

திம்மராஜபுரத்தில் இந்த மாதிரி கல்யாணம் இதற்கு முன் நடந்திருக்குமா என்று ஊரே அசந்து போகிறமாதிரி ராஜாராமனின் கல்யாணம் தடபுடலாக நடந்ததாக செய்திகள் வந்தன.

கமலாச் சித்தி எனக்கு கல்யாணப் பத்திரிக்கை அனுப்பி வைத்திருந்தாள். ஆனாலும் நான் கல்யாணத்திற்கு செல்லவில்லை. பொதுவாக பண நெடி அடிக்கின்ற ஆடம்பரமான கல்யாணங்களுக்கோ பிற வைபவங்களுக்கோ நான் செல்லுவதில்லை. அந்த அதிர்வுகள் எனக்கு ஒவ்வாதவை.

கல்யாணத்தில் நாச்சியப்பனின் அட்டகாசங்கள் கொடிகட்டிப் பறந்த செய்திகளும் எனக்குத் தெரியவந்தன. அவர்தான் ராஜாராமனை சம்மதிக்க வைத்தார் என்ற செய்தி பரவி அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வேணுகோபால் நாச்சியப்பனை தனிப்பட்ட முறையில் நன்கு கவனித்ததாகவும் தகவல் வந்தது. அதைப்பற்றி நான் என்ன சொல்ல? அது அவர்களின் தனி உலகம்.

காலம் ஓடியது… எல்லோருடைய வாழ்க்கையிலும் எல்லா மாற்றங்களும் ஏற்பட்டன. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது எவ்வளவு உண்மை!

ராஜாராமன் கல்யாணம் முடிந்த கையோடு கோழிக்கோட்டில் குடியேறிவிட்டான். சொன்னபடி அவனுடைய மாமனார் அவனுக்கு அங்கேயே வீடு கட்டிக் கொடுத்து வாழை இலை நிறத்தில் ஒரு ‘ஆடி’ காரும் வாங்கித் தந்து ஒரு பெரிய ஹாஸ்பிடலையும் பிரமாதமாக வைத்துக் கொடுத்து விட்டார். சொன்ன மாதிரியே கமலாச் சித்தியின் இரண்டு மகள்களுக்கும் வேணுகோபாலே நல்ல மாப்பிள்ளைகளைத் தேடி அமர்க்களமாகக் கல்யாணத்தை நடத்திக் காட்டினார். திம்மராஜபுரமே மூக்கின்மேல் விரல் வைத்தது!

வருடங்கள் ஓடின…

நான் நிறைய சிறுகதைகள் எழுதத் தொடங்கி பின் தொடர்கதைகள் குறுநாவல்கள் எழுதி சிறிய அளவில் வெளியே தெரியும் படியான ஒரு எழுத்தாளனாகி விட்டிருந்தேன். அமேஸான் நிறுவனம் என் சிறுகதைகளையும், நாவல்களையும், குறுநாவல்களையும் ரெகுலராக வெளியிடத் தொடங்கியது. தமிழ் கூறும் நல்லுலகம் amazon.com/author/s.kannan சைட்டில் என் புக்ஸ் காலரியைப் பார்த்து ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தனர்.

எனக்கு திருமணமாகியது. திம்மராஜபுரத்தில் என் அம்மா, அப்பா காலமானார்கள். அடுத்த சில வருடங்களில் என் தம்பி குமாரசாமி திடீரென மரணமடைந்தான். ஒளியும் இருளும் கலந்த இயற்கை என வாழ்க்கை சந்தோஷங்களோடும் துயரங்களோடும் ஓடிக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இதன் இடைப்பட்ட வருடங்களில் கமலாச் சித்தியின் மகன் ராஜாராமனை திம்மராஜபுரத்தில் மூன்று நான்கு சந்தர்ப்பங்களில் மிகக் குறுகிய கால அவகாசத்தில் மட்டுமே சந்திக்கவும் பேசவும் நேர்ந்தது. பேச்சில் பொதுவாக என் எழுத்து வாழ்க்கை பற்றிய தகவல் பரிமாற்றங்கள்தான் அதிகம் இடம் பெற்றன.

ஆனாலும் ராஜாராமனைப் பார்க்க நேர்ந்த அந்தச் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலுமே பல வருஷங்களுக்கு முன்னால் நாச்சியப்பன் அவனுக்குச் செய்த உபதேசங்கள்தான் உடனே என் ஞாபகத்தில் வந்தன. அந்த ஞாபகம் இத்தனை வருஷத்தில் எனக்குள் ஆற முடியாத காயமாய் கசிந்து கொண்டிருக்கவில்லை என்றாலும், ஆழமான தழும்பாக; வடுவாக அழிக்கவே முடியாத பச்சைக் குத்தலாக மனதில் படிந்தேதான் இருந்தது.

நாச்சியப்பனின் உபதேசத்தை ஏற்றுக்கொண்டுதான் ராஜாராமன் வேணுகோபால் மகளைக் கல்யாணம் செய்துகொண்டானா என்ற கேள்வியும் என் மனதிற்குள் விடை தெரியாத புதிராய் நின்று கனன்று கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் என் எழுத்து வாழ்க்கையில் முகம்மது அன்ஸாரி என்ற வாசக நண்பர் ஒருவர் கிடைத்தார். அவருடைய ஊர் கேரளாவில் கோழிக்கோடு என்று தெரிந்ததும் சட்டென மிக இயல்பாக எனக்குள் ஒரு ஆச்சர்யம் தோன்றியது. என் வாழ்க்கையில் புதிய பிரதேசம் ஒன்று திறக்கப் போவது மாதிரி உணர்வுகள் எனக்குள் லேசாக அசைந்தாடின.

விரைவிலேயே அதற்கான வழியும் ஏற்பட்டது.

என் நாவல் ஒன்றை முகம்மது அன்ஸாரி என் அனுமதியுடன் மலையாள மொழியில் எழுதினார். உடனேயே அது மலையாள மொழியில் புத்தகமாகவும் வெளியாகியது. ஒரு எளிய விழாவின் மூலம் அந்த நூலை வெளியிடும் நிகழ்ச்சி ஒன்றையும் பதிப்பகத்தார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அந்த விழாவில் கண்டிப்பாக நான் கலந்து கொள்ள வேண்டும் என்று என்று நண்பர் முகம்மது அன்ஸாரி பெரிதும் விருப்பப் பட்டார். எனக்குத் தனிப்பட்ட முறையில் இம் மாதிரியான விழாக்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது. இருந்தாலும் மழை கொட்டும் வனப்பு மிகுந்த கேரளா என்பதற்காகவும், அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், குறிப்பாக கமலாச் சித்தியின் மகன் இருக்கும் கோழிக்கோடு என்பதற்காகவும் விழாவில் கலந்துகொள்ள நான் புறப்பட்டுப் போனேன்.

கோழிகோட்டில் நண்பர் முகம்மது அன்ஸாரியுடன் பேசிக் கொண்டிருந்த போதும், புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நேரத்திலும் என் மனம் அவ்வப்போது ராஜாராமனைச் சந்திக்கப் போகும் வேளைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தது. இருபத்தைந்து வருடங்களாக என் ஞாபகத்தில் ஆணி அடித்துத் தொங்க விடப் பட்டிருக்கும் கேள்விக்களுக்கான பதிலை அறிந்துகொள்ளும் முனைப்பில் இருந்தது.

புத்தக வெளியீட்டு விழா அதன் வழக்கமான வழி முறைகளோடு முடிவு பெற்றது. நண்பர் முகம்மது அன்ஸாரியிடம் டாக்டர் ராஜாராமனின் பெயரைச் சொல்லி விசாரித்தேன். அடுத்த நிமிடமே அவர் கூகுளில் தேடி டாக்டர் ராஜாராமின் முகவரியையும் மொபைல் நம்பரையும் எடுத்துக் கொடுத்தார். கூகுள் ரேட்டிங்கைப் பார்த்து ராஜாராமன்தான் கோழிக்கோட்டில் நம்பர் ஒன் டாக்டர் என்றார்.

“அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று நண்பர் கேட்டார்.

டாக்டர் ராஜாராமன் என் சித்தி மகன் என்கிற விவரத்தை மட்டும் அன்ஸாரியிடம் சொன்னேன். ராஜாராமன் வீட்டில் இருக்கும் நேரத்தைத் தெரிந்துகொண்டு அவனுக்கு போன் செய்தேன். மிக சந்தோஷத்துடன் என்னிடம் பேசிய ராஜாராமன் உடனே என்னை அவனுடைய வீட்டிற்கு வரச் சொன்னான்.

என்னை அழைத்துப் போக நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவனுடைய படகு போன்ற ஆடி காரை டிரைவருடன் அனுப்பி வைத்தான். கேரளாவிற்கே உரிய அந்தக் கொட்டுகிற மழையில் என்னை ஏற்றிக்கொண்டு அழகிய ஆடி கார் ராஜாராமனின் வீட்டிற்குப் புறப்பட்டது. பெரிய பங்களா என்று சொல்லும்படியான வீட்டின் போர்டிக்கோவில் நின்று ராஜாராமன் என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான்.

“இந்த வரவேற்பு என் பெரியம்மாவின் மகனுக்கு இல்லை; என் அபிமானத்துக்குரிய எழுத்தாளருக்கு” என்று சொல்லி ராஜாராமன் என்னை நோக்கி மிகுந்த அன்புடன் தன் கைகளைக் கூப்பினான். அந்த வரவேற்பு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *