கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 6,767 
 
 

ஊட்டச்சத்து தின்னுத் தின்னு நாளுக்கு நாள் வெரசா வளருது பார் கட்டடம். மாசத்துக்கு ஒரு கட்டடமாச்சும் முளைச்சுருதுடா சாமி இந்த கோலாலம்பூருல. பய மவனுங்களுக்கு மட்டும் பணம் காய்க்கிற மரம் எப்பிடிதான் கெடைக்குதோ? போன வாரம் வரைக்கும் அந்த பிரிக்பீல்ட்ஸ் ட்ராபிக்காண்ட நின்னாக்கா அந்தாண்ட ரோடு நல்லா தெரியும். திடுதிப்புனு காளான் மாதிரி மொளைச்சிடுச்சு இம்மாம்பெரிய கட்டடம். எம்மு, ஏ, எக்குசு, அப்பறம் ஐய்யி, கடசியா எஸ்ஸு, ன்னு நீலக்கலருல மலாய்ல எழிதி வச்சிருக்கானுங்க பெருஸ்ஸா.

நம்ம சுந்தரம் மாமாவோட கோல பெர்ணம் எஸ்டேட் கடைக்கு இப்பிடி ஒரு எழுத்துங்கள வச்சா எப்பிடி இருக்கும்? ஹி ஹி… கடையவே முழுசா முழுங்கிபுடும். சுந்தரம் மாமா நடுவுல இருக்குற எக்சு எழுத்து மேலதான் ஒக்காந்துக்குட்டு வியாபாரம் பண்ணுவாரு.

எஸ்டேட் பந்து வெளாட்டு தெடலு மாதிரி விரிஞ்சி கெடக்குற இந்த ரோட்டப் பாத்தாலே மொதல்ல கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. இப்ப ஹோண்டா கப்சாய் மோட்டர்ல வர்ர அளவுக்கு தெகிரியம் வந்துப்புட்டாலும் ரோட்டத் தாண்டரப்பயும் ட்ராபிக்குல நின்னுக்குட்டு நேரத்த வித்துக்குட்டு இருக்குற காருங்க வரிசைக்கு இடையில இருக்குற இத்தணூண்டு சந்துக்குள்ள வெட்டி வளச்சு முன்னால போவறப்பயும் மடி கொஞ்சம் கணமாத்தான் இருக்குது. இன்னும் கொஞ்சநாள்ள சரியாய்புடும்.

இந்த ரோட்டப் பாத்தே அளந்துபுடலாம் இந்த டவுனு லச்சணத்தயும் நம்ம எஸ்டேட் அழகையும். அங்க தார் ரோடோ கல்லு ரோடோ, வர்ரது போரது பூராவும் நம்ம மக்கைங்கதான். எல்லா பையலுங்களும் நம்மளக் கண்டா தூரத்துலயே தலையாட்டி மௌனமா குசலம் விசாரிச்சு வைப்பானுங்க.

ஆயிரந்தான் இருந்தானும் பதுனெட்டு மாதிரி வருமாய்யா? (கோல பெர்ணம் எஸ்டேட் பதினெட்டாவது மைலில் இருப்பதால் அதைப் பதினெட்டு என்றுதான் பரவலாகக் குறிப்பிடுவார்கள். இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை தோட்டங்களுக்கும் பெயர் இருந்தாலும் அதற்குறிய மைல் கணக்கில் குறிப்பதுதான் அவர்களுக்குச் சௌகரியம்).

சின்ன வயசா இருக்குறப்பவே பள்ளிக்கொடத்துக்குப் போற வெட்டி வேலய கெடாசிப்புட்டு அறுக்குற வேல செய்ய வேலாக்காட்டுக்குப் போயிடுவோம். அலக்கைய டம்கட்டித் தூக்கி தென்ன மரத்துத் தலயில வச்சு நாலு இழுப்பு இழுத்தா கொட்டோ கொட்டுன்னு கொட்டும் தேங்கா. வேர்வ உடம்புலயிருந்து கெணத்துத் தண்ணியாட்டம் சுரந்து அருவியாட்டம் கொட்டும். அந்த வியர்வ வாசம் மூக்கத் தொளைச்சி கொடலத் தட்டி உசுப்பேத்தி வுட்டுப்புடும். மணி பத்தற ஆவுற வரைக்கும் அந்த உசுப்பல அடக்கி வச்சிக்கிட்டு டாங்னு பத்தற மணிக்கு உசுப்பேறுன கொடலுக்கு வெராமீன் கறிய ஊத்திப் பெசஞ்ச சோத்த உள்ள எறக்கும்போத என்னா எதமா இருக்கும் தெரியுமா? தென்னங்காய அறுக்குறதுக்கு பணயம் வச்ச தெம்ப அல்லூர் மீன் கறிதான் கரெக்டா மீட்டுக் கொண்டாந்துபுடும்.
வயசாவுதுப்பா ஒங்களுக்குன்னு சொல்லி இந்த பய என்னிய இந்த சண்டாள எடத்துக்குக் கூட்டியாந்துபுட்டான். எனக்கு அறவே புடிக்கல இந்த டவுன் பொழப்புன்னு சொன்னாலும் கேக்க மாட்றான். இங்க வந்து தள்ளிட்டான்.
ஐயோ, மணியாவுது! இன்னும் பச்ச லைட்டு வந்த பாட்டக்காணம். இந்த ட்ராபிக் எழவக் கண்டுபிச்சவன் எவன்னு தெரிஞ்சிச்சின்னு வையி… முனியாண்டி கோயிலுக்கு பலி குடுத்துருவேன் சொல்லிப்புட்டேன்.

அட, இந்த டவுனுல முனியாண்டி கோயிலுகூட கெடயாது தெரிய்மா எனக்குத் தெரிஞ்சி? முனியாண்டி கோயிலு இல்லாத ஊருல குடியிருக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லிருக்காங்கதான? இத்தன தமழங்க இருந்துங்கூட ஒரு முனியாண்டி கோயிலாச்சம் முனீசுவரன் கோயிலாச்சம் கட்டுனானுங்களா பாரு?

எங்கப்பாவும் எங்கம்மாவும் இஷ்டப்பட்டுக்கிட்டாங்களாம். பேச்சு வார்த்த தோல்வியில முடிஞ்சிட்டதால எங்கம்மாவ யாருக்கும் தெரியாம கூட்டிக்கிட்டு ஓடி வந்துட்டாராம் பத்தம்போது எஸ்டேட்டுல இருந்து. எங்க அம்மாவோட அண்ணனுங்க, அதாவது அப்பாதொர மாமாவும் குப்புசாமி மாமாவும் சுந்தரம் மாமாவும் ராமகிருஸ்ணன் மாமாவும் ஆளுங்களக் கூட்டிக்கிட்டு ரெண்டு பேத்தயும் வலவீசி தேடுனாங்களாம். அப்ப அப்பா என்னா பண்ணாராம், ஓடிப்போயி முனியாண்டி கோயில்ல ஒளிஞ்சிக்குட்டாராம் அம்மாவக் கூட்டிக்கிட்டு. அப்ப முனியாண்டி சாமிக்கிட்ட ஒன்ன வேண்டிக்கிட்டாராம். எந்த பெரச்சனயும் இல்லாம எனக்கும் சிந்தாமணிக்கும் கலியாணம் ஆயிபுடுச்சினா பொறக்குற மொத புள்ளைக்கு ஒம்பேர வச்சிற்றேன்னு தட்டுல கொட்டிவச்சிருந்த தின்னூரு மேல அடிச்சி சத்தியம் செஞ்சாராம். சக்தி வாய்ஞ்ச பதுனெட்டுக் கோயிலு முனியாண்டி சாமி எங்கப்பாவயும் அம்மாவயும் காப்பாத்திபுடுசாம் எப்பிடியோ. அதுனால எனுக்கு முனியாண்டின்னு பேர வச்சிட்டாங்க.

ஒருவேள அந்த சம்பவம் இந்த ஊருல நடந்துருந்தா? யம்மாடியோய், நம்பளுக்கு பேரு எம்மு, ஏ, எக்குசு, ஐய்யி, எஸ்ஸுன்னு பேர வச்சிருப்பாங்க. ஆமா, இந்த எழுத்துங்கள கூட்டுனா என்னா வரும்?

பீம்… பீம்…

அடங்கொப்புறான! பச்ச லைட்டு உளுந்துருச்சி, நா இப்பத்தான் எழுத்தக் கூட்டிக்கிட்டு ஒக்காந்துருக்கேன் பாரு. யோய் இருய்யா கெளம்பறேன். அதுக்குள்ளயும் ஹோன அடிச்சிருவான்!

சமயத்துங்கள்ள தென்ன மரத்துல தேன் பூச்சி கூண்டு கட்டிருக்கும். அந்த மாதிரி மரத்துல கத்திய வக்கிறதுன்னா ரொம்ப ரொம்ப கவனமா இருக்கனும். கொஞ்சம் அசந்த… மவன நொங்கு நூலெடுத்துபுடும். எம்புட்டு ஜாக்கரதயா இருந்தாலும் வெவஸ்தகெட்ட தென்ன மட்ட அசஞ்சி லேசாவாச்சும் உசுப்பிப்புடும் கூண்ட. அந்த சமயத்துல தேன் பூச்சிங்களுக்கு வரும்பாரு வெறி… பக்கத்துல எவன் இருக்குறானோ மாட்டுனான் அவன். எங்க ஓடுனாலும் உடாம சுர்ருனு தொரத்திக்கிட்டு சீறும். அந்த மாதிரி சுர்ருன்னு பறக்குறானுங்கபாரு பச்ச லைட்டு உசுப்பேத்துனவொடன!

ஐய்யோ போச்சி போச்சி பச்ச போச்சி!

சே! இன்னொரு தடவ சோவ்ப்பு லைட்டு! இருவது அடிக்கு ஒருதரம் நட்டு வச்சிக்கிறான் ட்ராபிக் லைட்ட. அந்த ட்ராபிக்கத் தாண்டுனா இந்த ட்ராபிக்கு! மண்டைக்குத்தான் ஏத்திக்கிட்டு இருக்கானுன்ங்க. இப்பிடியே ரோட்டுல காலத்தக் கழிச்சிக்கிட்டு ஹாயா போய் சேந்தம்னா இந்தாப்பா நீ வேலைக்கு வந்தது போதும்னு சொல்லி மறுபடியும் பதுனெட்டுக்கே பஸ்ஸேத்தி அனுப்பிருவானுங்க.

அப்பவே சொன்னேன் இவங்கிட்ட. வைசானாலும் பரவாலடா. இன்னும் அம்பத அடிக்க ஒருவருசம் இருக்கு. நான் அங்கியே தேங்கா அறுக்குறதும் முட்டு போடுறதும் காய உறிக்கிறதும்னு இருந்துர்ரேன்னென். தெரிஞ்சவங்கன்னு சொல்லி இந்த நக கடைல ஜாகாகாரன் வேலய செய்யசொல்லிட்டான். மணி பத்தாவப் போவுது. நேத்தே லேட்டாத்தான் போய் கடயப் புடிச்சேன். இன்னிக்கும் லேட்டுதான். முனியாண்டி, ஆப்பு இருக்குதுடி உனுக்கு!

இந்த ட்ராபிக்குங்க மட்டும் பதுனெட்டுல இருந்துச்சின்னு வைய்யி…மவன, வேரோட புடிங்கி இரும்பு கடையில போட்டுருந்துருப்பேன். நம்மளையெல்லாம் நிப்பாட்ட முடியுமா அங்க…

சே… கோலாலம்பூருக்கு வந்து வேலைல சேந்து இப்பத்தான் ரெண்டே முக்கா மாசம் ஆவுது. அதுக்குள்ளார எஸ்டேட் ஞாபகமும் வீட்டு ஞாபகமுமாவே இருக்குது. பெரிய பையன் வேற வலுக்கட்டாயமா எல்லாரும் கோலாலம்பூருக்கு மாறிவந்துருங்கன்னு மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கான். வேனும்னா ஒவ்வொருத்தருக்கா இங்கயே வேலதேடி தரேன்னு வேற சொல்லி என்னிய கொண்டாந்து இங்கத் தள்ளிவுட்டுட்டான். அங்கம்மா வரவே மாட்டேன்னு அங்கயே எஸ்டேட் ஆயாகொட்டாய பாத்துகிட்டுருக்குது. இத ஏன் இந்தப் பய வெளங்கிக்க மாட்டேங்குறான்?

யப்பா, பச்ச உளுந்துச்சுடா சாமி…

டவுன்ல இருந்தாதான் ஒலகம் தெரியும்; சட்டுபுட்டுனு முன்னுக்கு வந்துடலாம்னு ஜாலங்காட்டுறான். யேன் நாங்கல்லாம் நல்லா வாழல எஸ்டேட்டுல? அடுத்த மாச வாக்குல சந்துருவையும் சால்னியயும் பங்காரு ஸ்கூலுக்கு… சே, பங்சாரு ஸ்கூலுக்கு மத்திடுவானாம். இவன டவுன் சைட்டு உட்டதே ஒபத்தரவமா போச்சி.

நல்ல வேள மொதலாளி இன்னும் வந்து சேரல. ஒம்போதர மணிக்கே வந்து நின்னுக்குட்டு இருக்குறதா சொல்லிரலாம். யப்பா யப்பா… நல்ல பேரு வாங்க அங்க சோப்பு போடனும், இங்க டூப்பு வுடனும்!

ஷ்ஷப்பா… ஓடியாடி வேல செஞ்ச ஒடம்பு ஒக்காந்த வாக்குலயே ஜாகா பாக்க என்னமோ மாதிரி செய்யுது. நெலியாமயே படுத்துக்கெடந்தா ஒருமாதிரி சோம்பேரி ஒடம்பு சதையில வந்து பூந்துக்குமே அதுமாதிரி இருக்குது.

அடுத்த வாரம் திங்கக்கெளம ஹஜி பெருநாள் லீவுக்கு பதினெட்டுக்குப் போவ டிக்கெட்டு எடுத்து வெய்க்கச் சொன்னேன். எடுத்து வச்சானா இல்லியான்னும் தெரியல. வேல முடிஞ்சி போனோன்ன மொத வேலயா டிக்கெட்ட கைய்யில எடுத்துக்கனும்.

சனிக்கெளம, நாய்த்துக்கெழம, திங்ககெளம, மூனு நாளு வீட்டுல இருக்கலாம்.

***

அறமணிநேரமா இந்த எஸ்டேட் ஜாகா கொட்டாய்ல நின்னுக்கிட்டு… லீவு இங்கியே முடிஞ்சிரும் போலருக்கே. இந்த எஸ்டேட்டுக்கு வாய்ச்ச இந்த சாபத்துக்கு மட்டும் விமோசனமே கெடையாது. நாலு கிலோமீட்டரு உள்ளார கொண்டுபோய் பதுக்கி வச்சிருக்கானுங்க பாரு லயத்த! எஸ்டேட் தலவாசல்ல பஸ்ஸு எறக்கி வுட்டுப்புட்டுப் போனா இந்தத் தலப்புல இருந்து உள்ளார போய் சேர நாயாட்டம் நிக்கனும் இங்க. எவனாச்சம் வெளியருந்து உள்ளப் போனாதான், அதுவும் ஒக்கார ஒரு எடம் கோசம் இருந்தாத்தான் ஏத்திக்கிட்டுப்போய் உள்ளார வுடுவானுங்க. தும்பாங் கேக்குற இந்த பொழப்புக்கு கோலாலம்பூரே தேவலாம். ஹ்ம்!

நாப்பது நிமிஷம் நாயாட்டம் நின்னதுக்குப் பலன் கெடச்சது. குப்புசாமி மாமா பேரன் எல்மட்டத் தலயில மாட்டாம முன்னுக்கு கம்பி வக்குல்ல மாட்டிக்கிட்டு சவடாலா வந்துகிட்டுருந்தான். என்னிய கவனிச்சதும் மோட்டர ஓரங்கட்டுனான். அவன் கூடத் தொத்திக்கிட்டு எஸ்டேட் லயத்துப் பக்கம் வந்து சேந்துட்டேன். என் வூடு மொத வரிசைல நாலாவதா நிக்குது பாரு குச்சி குச்சி பூச்செடிங்க வரவேர்ப்புல, அதுதான். பயலோட வூடு நாலாவது வரிசைலனால மொத வரிச தலப்புலயே என்னிய எறக்கி வுட்டுப்புட்டு சவடாலா கெளம்பிட்டான்.

தார் ரோடு போடுறதா வாக்குறுதி குடுத்துட்டு ஓட்டு வாங்கிகிட்டு போவறானுங்க; திரும்பி வந்தபாட்டக் காணோம். என்னா எழவு ரோடு? மோட்டர் போனா பொகையோட சேந்து செம்மண்ணும் மேல கெளம்பிடுது. கண்ணுலயெல்லாம் மண்ணு பூந்துகிடுச்சி! அங்க சொம்மா தெடலு மாதிரி கெடக்குது தார் ரோடு. இப்பிடி புழுதியக் களப்பிட்டு போற இந்த ரோட்டவெட அந்த தெடல் சைசு தார்ரோடு எவ்ளோ தேவலாம்யா.

வீட்டுக்கு நடந்து போவறப்ப சுந்தரம் மாமாவோட கட இங்கயிருந்தே நல்லா தெரியும். சுந்தரம் மாமாவுக்கு மட்டும் ஆயுசு கெட்டிதான். எங்கம்ம அங்கம்மா மொதக்கொண்டு அவுக கூடப் பொறந்த அத்தினிபேரும் போவவேண்டிய வயசுல வீம்பு பண்ணாமப் போய் சேந்துபுட்டாக; மனுசன் இவுரு மட்டும் போவமாட்டேன்னு அடம்புடிச்சிகிட்டுருக்காரு. போற போக்கப் பாத்தா என்னியவும் வழியனுப்பிட்டுத்தான் போய்ச் சேருவாரு போலருக்கு.

வெச்சிருக்குறதெல்லாம் ஒரு கட! உள்ளார ஒளிஞ்சி கெடக்குற இந்த எஸ்டேட்டுக்கு ஓட்ட ஒடிசல் இருந்தாலும் இதுதான் கட, இதுதான் சூப்பர் மார்க்கெட், இதுதான் எல்லாமே. கோலாலம்பூருல போயி யாருக்கிட்டியாச்சம் இதுதான் எங்க பூர்வீகத்தோட லச்சணம்னு சொன்னா என் மானம் போயிடும்றது முனியாண்டி சாமிமேல சத்தியம்!

அடங்கொப்புறான… எங்க நம்ம முனியாண்டி கோயிலு? இன்னும் இருக்குதா இல்ல உசுர விட்டுபுருச்சா? ஹ்ம்ம்! புதுசா திக்கா மஞ்ச சாயம் பூசியிருக்குறாப்புல இருக்கு. தென்னங்காடு ஆரம்பிக்குற எடத்தில இருக்குற வீரகருப்பன்னருக்கும் சாயம் அடிச்சிருப்பானுங்க போல.

ஒரு செங்கக்கல்ல மண்ணுல நெட்டுக்குத்தலா ஊனிவெச்சி தின்னூர மூனு வரி நெத்தியில வெக்கிறமாதிரி நேர்த்தியா கோடு வரைஞ்சி, அதுக்குக் கீழ தள்ளுபடில வாங்குன செவப்பு பட்டுத்துணிய சுத்திக் கட்டிப்புட்டு அதச் சுத்தி நாலு ப்லேவூட் அடிச்சா அதுதாண்டா தாத்தா கோய்லு! இன்னுமுங்கூட இப்பிடித்தாண்டா இருக்கானுங்க. கோலாலம்பூர்காரனுங்க எவனாச்சும் பாத்தானுங்க… இதான் உங்க ஊரு கோயிலாடான்னு சிரிச்சிபுடுவானுங்கோ. என்னாயிருந்தாலும் கோலாலம்பூரு கோயிலுங்க மாதிரி வருமா?
தோ நம்ம வூடு வந்தாச்சு.

***

மணி பத்தாவுது; இப்பத்தான் ட்ராபிக் லைட்டு வித்த காமிச்சிக்கிட்டு இருக்கு. வேலைக்கு நேரத்துக்குப் போய்ச் சேந்தாமாதிரிதான். இதுக்கு கோல பெர்ணமே தேவலாம்யா!

– அநங்கம் Malaysian Magazine [பிரசுரமான காலம் ஜனவரி 2010]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *