கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2024
பார்வையிட்டோர்: 601 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னிக்கு நங்க நல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி உற்சவம், போயி அந்த விஸ்வரூப ஆதி ஆஞ்சனேயரை தரித்து வரலாம் என்று பக்தியுடன் கேட்ட தாரிணியை மறுக்க முடியாமல் புறப்பட்டான் பத்ரி, இருவரும் அவர்களின் மகன் ராகவேந்திரனையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினர், ஒரு நிமிஷம் என்று அவசர அவசரமாக தாரிணி நேற்று போட்ட கூழ் வற்றலை எடுத்து மாடியில் உலத்தி விட்டு வந்து வாங்க போகலாம் என்றாள், கிளம்பினர், கோயிலில் வடைமாலை கோர்த்தாற்போல் நெருக்கமாக பக்தர் கூட்டம் நெருக்கியடித்தது, எப்படியோ வரிசையில் நின்று ஒரு வழியாக ஆதிவிஸ்வரூப ஆஞ்சனேயரை தரிசனம் செய்துவிட்டு அப்படியே ப்ரதக்ஷணமாக வந்து ராமர் சன்னதியிலும் சேவித்துக்கொண்டு, அங்கே ராமநாம பஜனை செய்துகொண்டிருந்த இடத்திலும் சற்று நேரம் உட்கார்ந்து வெளியெ வரும் இடத்தில் அவர்கள் அளித்த ப்ரசாதத்தையும் தொன்னையில் வாங்கிக் கொண்டு அந்தப் ப்ரசாதத்தை சாப்பிட்டுவிட்டு கோயில் எதிர்ப்பக்கம் இருந்த குப்பைத் தொட்டியில் தொன்னையைப் போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த குழாயில் கையை அலம்பிவிட்டு காரை நோக்கி நடந்தனர்.

தாரிணி இன்னிக்கு கூட்டம் அதிகமா இருந்தாலும் நல்ல தரிசனம் நிம்மதியா சேவிச்சோம் என்றான் பத்ரி, ஆமாம் என்றாள் தாரிணி.

வீட்டை அடைந்து அறைக்குள் சென்று புடவையை மாற்றிக்கொண்டு வந்த தாரிணி காக்கைகள் கும்பலாய்க் கத்துவதைக் கேட்டு திடுக்கிட்டு எங்க ஒருவேளை குரங்கு வந்திருக்குமோ, காக்காயெல்லாம் இப்பிடிக் கத்தறதே என்று கேட்டுவிட்டு அடேடே மாடிலே கூழ்வத்தல் காயப் போட்டிருக்கேனே என்று மாடிக்கு ஓடினாள். அங்கே கொழு கொழுவென்று ஒரு குரங்கு மொத்த வத்தலையும் கடித்து துப்பிக்கொண்டிருந்தது, தாரிணியின் குழந்தை ராகவேந்திரன் அந்தக் குரங்கையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மொத்த வத்தலும் போச்சே என்று ஆத்திரத்தோடு ஏண்டா ராக்வேந்திரா ஒரு குச்சியை எடுத்து அந்தக் குரங்கை விரட்டாம வேடிக்கை பாத்துண்டு நிக்கறையே என்று ஓங்கி ஒரு அறை விட்டாள் குழந்தையை. 

நங்க நல்லூரில் ராம நவமி உற்சவம் முடிந்து விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றினர், தீப ஆராதனை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கண்ணை மூடிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர். பக்தர்கள் கண்ணை மூடிய அந்த ஒரு வினாடியில் ராகவேந்திரன் அடிபட்டதற்கு ஆஞ்சநேயர் மனப்பூர்வமாக ஆறுதல் சொன்னார், குழந்தை ராகவேந்திரன் கண்களில் உதயமாகிய கண்ணீரில் ஆஞ்சநேயர் தெரிந்தார்.

– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.

Print Friendly, PDF & Email
முன்னுரை - வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), தமிழ்க் கமலம் பதிப்பகம். வாசகப் பெருமக்களே நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள் அனுமதியோடு உலா வருகின்ற நக்க்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள் கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள் இல்லத்துக்கு வரும் உங்கள் சகோதரன், தமிழ்த்தேனீ (Thamizh Thenee) அதுவும் உங்கள் மேல் அன்பும்,அக்கறையும்,பாசமும், நேசமும், கொண்ட உங்கள் சகோதரன் தமிழ்த்தேனீ. நான் ஒரு திரைப்பட நடிகன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *