கோமதியம்மாள் தெரு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 7,275 
 
 

மேகங்கள் அலைந்து கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டே ஆலமரத்தின் அடியில் உள்ள நீள் சதுர வடிவ கருங்கல்லில் அமர்ந்து கொண்டிருந்தான் கணேசன். அவன் மனம் முழுவதும் நாளை வெளி வர இருக்கும் தன் ஆத்மார்த்தமான நாயகனின் படத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தது. தூரத்தில் பள்ளிக் கூட மணியோசைக் கேட்டதும், சந்தோசச் சாரல் அவன் முகத்தில் வீசியது.

‘அப்பாடா.. இன்னைக்கு பள்ளிக்கூடம் சீக்கிரமாகவே விட்டுட்டாங்களே..’ என தன் மனதுக்குள்ளாகவே எண்ணிக் கொண்டு ஆலமரத்தை விட்டு நகரத் தொடங்கினான். மனதில் தன் நாயகனைப் பற்றிய கனவுகளுடன் தன் குடிசை உள்ள கோமதியம்மாள் தெருவை நோக்கி நெருஞ்சி முட்கள் நிறைந்த பாதையைக் கடந்து கொண்டிருந்தான்.

கோமதியம்மாள் தெருவின் துவக்கத்திலேயே கம்பீரமாக நின்றிருக்கும் ஆலமரத்தின் சருகுகள், தெருவெங்கும் விரவிக் கிடந்தது. அந்த மரம் தெருவாசிகளின் வாழ்வோடு சுகத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டிருந்தது. தெருவாசிகளில் ஒருவரான அமுதா அக்கா “ச்சே.. இந்த மரத்த வெட்டிப் போட்டுருங்கன்னா யாரு கேக்குறா… மழையிலயோ, புயலுலயோ விழுந்து தொலைய மாட்டுதே, கூட்டி கூட்டி என் இடுப்பே போச்சே..” என புலம்பும் வார்த்தைகள் அடிக்கடி அந்தத் தெருவில் கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்த மரம் வெறும் மரமாய் மட்டும் இல்லாமல் தினமும் தன் விழுதுகளில் சிறார்களை அரவணைத்துக் கொண்டும், நிராகரித்து விரட்டப்பட்ட முதியோர்களுக்கு ஆதரவாகவும் நின்று கொண்டிருந்தது.

ஆலமரத்தை ஒட்டியுள்ள பழைய பம்ப் ஹவுஸின் சுவர்தான், புதிதாய் என்னென்ன படங்கள் ரிலீஸாகியுள்ளது என்பதை அறிவிக்கும் அறிவிப்புச் சுவராய் இருந்தது. அதில் தன் தலைவரின் படம் உள்ளதா என்பதை நோட்டம் விட்டான். “தம்பி யாராவது மூக்குப்பொடி வாங்கித் தாங்கையா..” என பம்ப் ஹவுசின் உள்ளிருந்து பாக்கியலட்சுமிப் பாட்டி புலம்பிக் கொண்டிருப்பது கணேசனின் செவிகளில் தெளிவாய் கேட்டது. பாட்டியின் அருகிலேயே ஒரு நாய், குட்டிகளை ஈன்றிருந்தது.

பாக்கியலட்சுமிப் பாட்டி பாக்கியமான குடும்பத்தில் பிறந்து, பாக்கியமான குடும்பத்தில் வாக்கப்பட்டு, பாக்கியமான பிள்ளைகளைப் பெற்று இன்று பாக்கியமாய் பம்ப் ஹவுஸில் அடைக்கலம் புகுந்திருந்தாள். அவள் தன் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருப்பதை அவனால் புரிந்து கொள்ள இயலாவிடினும் ஏதோ ஓர் உணர்வு அவனுள் எழுந்து மறைந்தது.

பின் ஆவலோடு தன் குடிசை இருக்கும் திசையை நோக்கி ஓட்டம் எடுத்தான்.

“அய்ய்யா சனி, ஞாயிரு ரெண்டு நா லீவு, அய்ய்யா..” என சப்தம் எழுப்பிக் கொண்டே குடிசைக்கு ஓடி வருபவனை ஆசையோடு அரவணைத்துக் கொண்டாள் அக்கா பார்வதி.

பச்சை பசேலென தன் கிளைகளைப் பரப்பி நின்றிருக்கும் வேம்பை ஒட்டியவாறு, பனை ஓலைகளால் வேயப்பட்ட அந்த சிறு குடிசை இருந்தது. அந்த அடர்ந்த வேம்புவின் பெரிய மரக்கிளைதான் சுறா கணேசனின் மேடை. அங்கேதான் இவனது ஆடல், பாடல் எல்லாமே அரங்கேற்றமாகும். தான் ஆட ஆட இலைப் பார்வையாளர்கள் தலையசைக்கிறார்கள் என எண்ணியவாறே மேலும் உற்சாகமாய் ஆடுவான் பாடுவான். இவனது இத்தகைய செய்கைகளைப் பார்த்து சந்தோசம் கொண்டு சிரித்து மகிழ்வாள் பார்வதி. பின்னிரவு வரை இவனது ஆடல் பாடல் தொடரும். பின் தூக்கம் கண்களைத் தழுவ, அக்காவை அணைத்தவாறே தூங்கி விடுவான்.

எப்போதும் வேலைக்கு போய் வந்த பின்பு, தனது குடிசையின் ஓரத்தில் உள்ள கருங்கல்லில் அமர்ந்தவாறு தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருப்பாள் பார்வதி. பத்தாம் வகுப்பு பெயில் ஆனதிலிருந்துதான் பார்வதிக்கு இந்த நிலை. கோமதியம்மாள் தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் தீப்பெட்டி மருந்தின் நெடி வீசிக்கொண்டேயிருக்கும்.பச்சை வண்ண அட்டைகளும், கலர் லேபிள்களும் அனைத்து வீடுகளிலும் நிறைந்து காணப்படும். பார்வதி அதிகாலையில் எழுந்து தனது கோமதியம்மாள் தெருவைவிட்டு இரண்டு தெரு தள்ளியுள்ள வேலன் மேச்சஸ் பேக்டரி என்ற தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று பணி செய்து கொண்டிருந்தாள். பின் மாலைப் பொழுதில் வீடு வந்து, இரவு வரை தெருவிளக்கின் வெளிச்சத்தில் பெட்டிகளை ஒட்டிக் கொண்டேயிருப்பாள்.

பார்வதி ஒட்டும் ஒவ்வொரு பெட்டியிலும் அவளது ஏக்கங்கள் நிறைந்து வழிந்தது. மல்லிகைப் பூ வைத்துக் கொள்ள மிகுந்த ஆசை கொண்டிருந்தது அவள் மனது, தன் குடிசைக்கு பின்புறம் இருக்கும் மாட்டு செவ்வந்திதான் பார்வதியின் கூந்தலை அலங்கரித்துக் கொண்டிருந்தது அனுதினமும்.

”பத்தாவது பெயில் ஆயிட்டால்ல.. இவள இதுவரை படிக்க வச்சதே பெரிய விசயம். இதுல அட்டம்ட்டு எழுதப்போறாளாமுள்ள அட்டம்ட்டு, பேசாம பொழப்ப பாருடின்னு புத்தி சொல்லி தீப்பெட்டி ஆபீசுல வேலைக்கு சேத்துட்டேன், இனி கால காலத்துல இவளுக்கு கல்யாணத்த முடிச்சுட்டேன்னா என் கடம தீந்து போயிரும்” என பக்கத்து வீட்டு பத்மா அக்காவிடம், அம்மா சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டபோது பார்வதியின் கண்களில் கண்ணீர்த்துளி பொங்கியது.

கோமதியம்மாள் தெரு அப்படி ஒன்றும் பெரிய தெரு இல்லைதான் இருப்பினும், அந்த தெருவில் உள்ள ஆலமரமும், தெருவின் கிழக்கு பக்கமுள்ள சின்னக் குளமும் ஒருவித அழகை தந்தவண்ணமிருந்தது. தெருக்கடைசியில் இருக்கும் மீசைக்கார பாண்டி வீட்டையும் சேர்த்தால் பத்து கார வீடும். பார்வதியின் குடிசையொடு ஐந்து குடிசைகளும் இருந்தது. அந்த தெருவின் துவக்கத்திலேயே பம்ப் ஹவுசும் , ஆலமரமும் இருந்தது.

அந்த ஆலமரத்தின் அடியில் சமீபத்தில் வந்து சேர்ந்துள்ளார் சுப்புக்குட்டி தாத்தா. நைந்து போன நார் கட்டிலும், அதன் பக்கத்தில் நெளிந்துகிடக்கும் ஒரு சிறிய தட்டும், தண்ணீர் குடிக்க ஒரு மண் குடமும்தான் தாத்தாவின் கடைசி கால சொத்தாய் இருந்தது. நாளுக்கு இரண்டு வேளை கஞ்சியை வந்து தட்டில் ஊற்றி விட்டு தாத்தாவை ஒரு தட்டு தட்டிவிட்டு சென்றுவிடுவாள் அவரது மருமகள் பஞ்சவர்ணம்.

“அம்மா தாயி எப்போதாச்சும் கறியுஞ் சோறும் ஊத்துங்கம்மா..” என ஏக்கத்தோடு முனகுவார். ‘ஆமாம் அதுக்கு ஒன்னுதான் குறைச்சல் பேசமா ஊத்துறத குடுச்சுட்டு கால காலத்துல செத்து தொல..’ என மருமகள் பேசுவதைக் கேட்டு ஏக்கப் பெரு மூச்சுடன் புலம்புவார். அந்த புலம்பல் வார்த்தைகள் கோமதியம்மாள் தெருவெங்கிலும் உள்ள அனைவரின் செவிகளுக்கும் சென்றுவிட்டு வெறுமையாய் மீண்டும் சுப்புக்குட்டி தாத்தாவிடமே வந்து சேரும்.

பார்வதி தீப்பெட்டி பேக்டரிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தாத்தாவை கடந்துதான் செல்வாள். அவளை அறியாமலேயே தாத்தாவின் மேல் ஒரு பாசம் வந்தது. அவரது நிலையை கண்டு அவளுக்குள்ளாகவே அழுதாள்.

வழக்கம் போல் தெருவாசிகளின் தீராத ஏக்கங்களையும், கனவுகளையும் சுமந்தவன்னம் கோமதியம்மாள் தெருவின் நாட்கள் கரைந்து கொண்டிருந்தது. குளிர் காற்று சிறிது சிறிதாய் கோமதியம்மாள் தெருவை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நீண்ட பின்னிரவில் பெரு மழை பெய்து கொண்டிருந்தது. மழையின் சப்தம் கேட்டு பார்வதி , சுறா கணேசனை எழுப்பிக் கொண்டு தன் குடிசையில் உள்ள நைந்த சாக்குகளை எடுத்துக் கொண்டு ஆலமரத்தின் அடியில் உள்ள சுப்புக்குட்டி தாத்தாவை தேடி ஓடினாள். தாத்தா பெரு மழையில் நனைந்து நடுங்கியவண்ணமிருந்தார் தம்பியோடு சேர்ந்து கட்டிலோடு தூக்கி பம்ப் ஹவுசிற்குள் கொண்டு சென்று தாத்தாவை வைத்தனர். பாக்கியலட்சுமி பாட்டியின் இருமல் சப்தத்தை கேட்டுப் புலம்பியவண்ணமிருந்தார். குட்டிகள் எங்கெங்கோ போய்விட்டாலும் அந்த நாய் மட்டும் இன்னும் அந்தப் பாட்டியின் அருகிலேயே இருப்பதைப் பார்த்து அக்காவிடம்ஆதைக் கிசுகிசுத்தான் கணேசன்.

பெரும் மழையால் கோமதியம்மாள் தெருவின் அழகு மேலும் கூடிவிட்டது. குளம் நிரம்பி வழிந்தது, சிறார்கள் விளையாடி மகிழ்ந்தனர். தன் குடிசையின் அருகில் உள்ள வேம்பு புத்துணர்வுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்திருந்தாள் பார்வதி. அவளது ஏக்கங்களை மழை கொஞ்சம் குறைத்திருந்தது.

“ஏலே கணேசா.. நாளைக்கி கடைசி ஆடி, ஒரு கிலோ கறி வேணுமுன்னு கறிக்கடை அண்ணாச்சிகிட்ட சொல்லிட்டு வாய்யா..” என அம்மா போடும் சப்தத்தை கேட்ட பின்தான் சுப்புக்குட்டி தாத்தாவின் நினைவு வந்தது பார்வதிக்கு. மறு நாள் வீட்டில் மீதமிருந்த ஆட்டுக் கறியை எடுத்துக் கொண்டு ஆல மரத்திற்கு சென்று தாத்தாவின் நெளிந்த தட்டில் போட்டுவிட்டு, தாத்தாவை ஒரு தட்டு தட்டி விட்டு தூர ஓடி வந்து தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி .

தூரத்தில் இருந்து தாத்தா ஆவலுடன் சாப்பிடும் அழகைப் பார்த்து பார்த்து ரசித்தாள். தாத்தா அவருடைய மருமகளை வாழ்த்திக் கொண்டே சாப்பிடுவதைக் கேட்டு மனசுக்குள்ளேயே சிரித்தாள். மறு நாள் காலை பார்வதி வேலைக்குச் செல்லும் போது தாத்தாவை ஆல மரத்தின் அடியில் காணாததைக் கண்டு, தோழி மாரியிடம் கேட்டாள். “ஏம் புள்ள அந்த தாத்தா எங்கெ போயிருச்சு.. நேத்து இங்கெனதான இருந்தாப்புல..”

“அடியே உனக்கு விசயம் தெரியாதா.. அந்த கெழடு காலையிலயே மண்டைய போட்டுருச்சு புள்ள..” என கூறியதைக் கேட்டவுடன் அவள் மனதில் சொல்லமுடியாத சில உணர்வுகள் எழுந்தன.

அன்றும் வழக்கம் போல அதே ஆலமரம், அதே நீள் சதுர கருங்கல், தூரத்து மணியோசைக்கேட்டவுடன், தன் தலைவரின் திரைப்பட போஸ்ட்டரின் கனவுகளை சுமந்து கொண்டு வேகமாக கோமதியம்மாள் தெருவை நோக்கி நெருஞ்சி முட்கள் நிறைந்த பாதையை கடந்து கொண்டிருந்தான் கணேசன். வழக்கத்திற்கு மாறாக பம்ப் ஹவுஸை சுற்றி நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு புரியாமல் தலைவரின் திரைப்பட போஸ்ட்டரைக் காண கூட்டத்தை விலக்கி கொண்டு ஆவலுடன் சென்றான் கணேசன்.

பம்ப் ஹவுஸின் உள்ளிருந்து பாக்கியலச்சுமி பாட்டியை வெளியே கொண்டு வந்து சுவரோரம் கிடத்தியிருந்தார்கள். பாக்கியலட்சுமி பாட்டியின் தொண்டைக்குழி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தது. கால்கள் நடுங்கி கொண்டிருந்தது. ‘யாராவது பால ஊத்துங்கையா, போற உசுரு நல்ல படியா போய் சேரட்டுமெ’ன கூட்டத்திலிருந்து சப்தம் போட்டாரொருவர்.

மழைத் தூரல் துவங்க அதிக நேரமில்லையென வானம் ”டம் டம்” என முன் அறிவிப்பு செய்தவண்ணமிருந்தது. ஆலமரத்தில் வந்தமரும் காகங்கள் அன்று இரைத்தேட செல்லாமல் மரத்திலேயே அமர்ந்திருந்தது. பாக்கியலட்சுமி பாட்டியின் வாயில் ஊற்றப்பட்ட பால் சிறிது நேரத்தில் கீழே வழியத் தொடங்கியது. பாக்கியலட்சுமி பாட்டியை ஒருவர் கையில் ஏந்தி தூக்கி சென்றார். பாட்டியின் அருகிலேயே இருந்த பெண் நாய் அவர் பின்னாலேயே சென்றது.

மழைத் தூர ஆரம்பித்தது, அன்று சுறா கணேசனின் கனவு நாயகனின் படம் வெளியாகி அந்த சுவரொட்டி, பம்ப் ஹவுஸ் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டியை பார்த்து விட்டு, தன் குடிசையை நோக்கி மெல்ல நகர்ந்தான் சுறா கணேசன். ஆனால் அவனிடம் எந்தக் குதூகலமும் இருக்கவில்லை. அன்றைய இரவில் அவன் தன் ஆட்டம், பாட்டம் எல்லா வற்றையும் தொலைத்து விட்டவனாய், அமைதியாய் தன் அக்கா பார்வதியின் மடியில் தலைசாய்த்து வானத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். இலைப்பார்வையாளர்கள் தன் கலைஞனைப் பார்த்தவாறு தலையசைக்காமல் நிசப்தத்தில் இருந்தன.

அன்றைய இரவில் ஆழ்ந்த மௌனம் கோமதியம்மாள் தெருவையே சூழ்ந்திருந்தது. தூரத்தில் அந்தப் பெண் நாய் மட்டும் சப்தத்தை எழுப்பிக் கொண்டே ஏதோ ஒன்றை தொலைத்தது போல் கோமதியம்மாள் தெருவையே சுற்றிக்கொண்டிருந்தது.

– டிசம்பர் 2011 அதீதம் இணைய இதழில் வெளிவந்துள்ளது (pazasu.atheetham.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *