கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 5,934 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8

அத்தியாயம்-1

அமிர்தா சின்னஞ்சிறு பெண்ணாக அத்தையிடம் தலைவாரிக்கொள்ளும் போது அத்தை தினந்தோறும் வாய் அலுக்காமல் சொல்லுவது இதுதான்: 

“டீ அமிர்தாக் கண்ணு, நீ பெரியவளா ஆனா உன்னைக் கலியாணம் பண்ணிக்கொடுக்க வேண்டிய சிரமம் உன் அப்பாவுக்கு இருக்காது டீ… உன்னைக் கொத்திக்கொண்டு போயிடுவா டீ!” 

ஏழுவயதுச் சிறுமிக்கு ஒன்றும் புரியாது. கோழியும், காக்காயும் கொத்துவதைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அது மாதிரி அவளை யாராவது கொத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்று அத்தை பயமுறுத்துவதாகத் தோன்றும். ஆனால் மெல்ல மெல்ல அவள் பாவாடையிலிருந்து தாவணிக்கு மாறிய பின், அத்தை சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது. 

இப்போது இருபத்து மூன்று வயதில் அமிர்தா. அன்று அத்தை சொன்னதை நினைத்துப் பார்த்தாள். அவளால் அழவும் முடியவில்லை. சிரிக்கவும் இயலவில்லை. கல்லூரி நாட்களில் அவளுடைய அழகைக் கண்டு சிநேகிதிகள் ஆச்சரியப்பட்டார்கள். பொறாமைப்பட்டார்கள். படிப்பை முடித்தபின் வேலை என்று ஒன்றுக்காக அவள் அலைந்த போது அழகு உதவி செய்யவில்லை. அழகு மட்டும் போதாது என்ற உண்மையை அவள்புரிந்து கொண்டாள். பிறகு வேலை ஒன்று கிடைத்த பின் (சாதாரண ரூ.130-10-330 என்ற சம்பளத்தில் குமாஸ்தா வேலைதான்) ஆபீஸில் இருக்கிற இளசுகளும், வீட்டில் அலுத்துப்போன நடு வயதுக்காரர்களும் அவளுடைய அழகையும், மார்பகக் கவர்ச்சியையும் மட்டுமே அனுபவிக்கத் துடித்தார்கள். இருபத்தெட்டு வயது நிரம்பிய 4 ஒரு மேல் அதிகாரி. பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளை, கண்ணுக்கு லட்சணமாக இருப்பவன் (பெயர் கூட லட்சுமணன்தான் ) அவளுடைய வேலையில் குற்றங்களைக் கண்டுபிடிப்பதோடு நிறுத்திக் கொண்டானே தவிர, அவளைக் ‘கொத்திக் கொண்டு போக முன்வரவில்லை. 

அத்தையின் ஆசீர்வாதமோ அல்லது சாபமோ பலிக்காததுகண்டு அமிர்தா மகிழ்ச்சியே அடைந்தாள். ஒரு சிலர் – தகுதியில்லாத கலியாணமான முப்பது வயதுக் காரர்கள் தயங்கித் தயங்கி அவளிடம் சினிமா தியேட்டர் பொழுது போக்க நல்ல இடம் என்பதை உணர்த்திய போது அவள் பதில் பேசாமல் தலை குனிந்து சென்றாள். ஒரு பிடிவாதக்காரனுடைய தொந்தரவு பொறுக்கமுடியாமற் போன போது, ஸபையர் தியேட்டரில் இரண்டு டிக்கட் வாங்கச் சொன்னாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தபொழுது ‘டிக்கட் யாருக்குத் தெரியுமா? கலியாண மான என் அண்ணனுக்கும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாரான உங்களுடைய மனைவிக்கும். அவளை நன்றாக டிரஸ் செய்து கொண்டு வரச்சொல்லுங்கள்” என்றாள். பிடிவாதக்காரன் அதன் பிறகு அவளுடைய மூச்சுக்காற்றைக் கூட உணரவில்லை, 

ஒழுக்கமும், கற்பும் பெண்களுக்கு மட்டும் தான். அதுவும் தங்கள் வீட்டுப் பெண்களுக்குதான் என்று கருதும் கும்பலை அவள் வெறுக்கவில்லை. ஒருவித பரிதாபத்துடன் அலட்சியம் செய்தாள். 

அமிர்தா இன்று அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருக் கிறாள். அவர் வந்ததும் இருவருமாக மேற்கு மாம்பலத்தில், போன சித்திரையில் கணவன் வீடு சென்றிருக்கும் அக்காவைப் பார்க்கப் புறப்பட வேண்டும். அக்கா வீட்டில் நகராறு. அவளுடைய மாமியார் 1976-லும் பத்தாம் பசலியாக தகராறு செய்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது. கலியாணத்துக்குப் பிறகு, நடந்தே தீரவேண்டிய சாந்தி முகூர்த்தத்துக்கு மெத்தை களும், தலையணைகளும் மட்டுமே வாங்கிக் கொடுத்தது போதாதாம். ஒரு ஜதைக் கட்டிலும், ஒரு கோத்ரெஜ் பிரோவும் கண்டிப்பாகத் தரவேண்டுமாம். சுலியானத்துக்கு முன் பாகவோ அல்லது கலியாணத்தின் போதோ இந்தப் பிரச்சினையை யாரும் கிளப்பவில்லை. கட்டில் இல்லாம லேயே தம்பதி சாந்தி முகூர்த்தம் நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆறுமாதத்தில் அதுவே பழகிப் போயிருக்க வேண்டும். பின் ஏன் கௌரியின் மாமியார் அடம் பிடிக்கிறாள்? மருமகளைத் துன்புறுத்துகிறாள்? 

முதன்முதலாக விஷயம் தெரிந்தபோது அப்பா சிற வில்லை, ஆத்திரப்படவில்லை. தமக்கே உரித்தான அமைதி யுடன், ‘அவர்கள் சொல்றபடி வாங்கியே கொடுத்தாலும் அந்த வீட்டில் கட்டிலையும், பீரோவையும் போட ஏது இடம்? இருக்கறதெல்லாம் ஒரு சமையல் அறையும் ஒருபடுக்கை அறையும் தானே?” என்றார். 

“அப்பா, உங்களுக்கு இன்னும் உலகமே தெரிய வில்லை” என்றாள் அமிர்தா. 

“ஏன்?” 

“அந்த மாமியார்க்காரி கேட்கிறது கட்டில், பீரோ இல்லை அப்பா… அதற்கு ஆகும் பணம். வீட்டிலே இடம் இல்லையின்னாலும் பணத்தைவைக்க பாங்கிலே இடம் இருக்கு-” 

“பணத்துக்கு நான் எங்கே போவேன், அமிர்தா? கலியாணத்துக்கு நான் எவ்வளவு கடன் பட்டேன்னு தான் உனக்குத் தெரியுமே”. 

“தம்புச் செட்டித்தெருவிலே ஒரு வெத்தலைபாக்கு கடைக்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் டைப் அடிச்சு டைப் அடிச்சு வாரி வாரிச் சம்பாதிக்கிறீர்கள்னு அவர்கள் நினைக்கிறார்கள். ” 

“நீயும் நானுமா ஒரு நாள் போய் கௌரியையும் பார்த்து விட்டு, அவளுடைய மாமியாரிடமும் கெஞ்சி விட்டு வருவோம்”.

“எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா, அவள், அந்த மாமியார்க்காரி நீங்க தினமும் சீட்டாட்டத்திலே தொலைக்கிறதை சேர்த்து வைச்சிருந்தா மூணு பீரோ வாங்கியிருக்கலாம்னு சொன்னா என்ன செய்வீர்கள்?”

“அமிர்தா, இதை நீயே என்னிடம் நேரடியாகக் நேளேன். ஏன் கௌரியின் மாமியாரை இழுக்கிறாய்?”

“நான் கேட்டு என்ன புண்ணியம் அப்பா…. முப்பது வருஷமா நீங்களும் தம்புச் செட்டித் தெருவுக்கு ஓயாம் ஒழியாமப் போகிறீர்கள். எத்தனையோ வக்கீல்களும், சுட்சிக்காரர்களும் உங்களை விரும்பி வேலை தருகிறார்கள். அம்மா இல்லாத பெண் வீட்டிலே தனியா இருக்கிறாள் என்கிற உணர்வு கூட இல்லாம நீங்க கிடைக்கிற பணத்தை டிரிப்ளிகேன்லேயே தாரை வார்த்துட்டு வந்து விடுகிறீர்கள். என்னிக்காவது ஒரு நாள் லாபம் கிடைச்சுதுன்னா, அதையே முப்பது நாளுக்கு சொல்லிச் சொல்லிக் குதிக்கிறீர்கள். உங்களுக்கு அட்வைஸ் பண்ண எனக்கு அருகதையும் இல்லை, ஆணையும் இல்லை.”

அப்பா பதில் சொல்லாமல் தலை குனிந்து நகர்ந்தார். அவருடைய நிலையைப் பார்த்தபோது, ஏன்அப்படி எல்லாம் பேசினோம் என்று அமிர்தாவுக்கு உதைத்துக் கொண்டது. காலையில் எட்டு மணிக்கே வீட்டை விட்டுச் செல்லும் அவருக்கு சாயங்காலமாவது ஒரு பொழுதுபோக்கு என்று இருக்கவேண்டாமா? ஆனால் அது சீட்டாட்டமாக இருந்து தொலைவானேன்? சூதாட்டம் ஆடியார் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறார்கள்? 

அமிர்தா பாலைக் காய்ச்சி இறக்கி வைத்தாள். காலையில் சமைத்த சாதமே நிறைய இருந்தது. இரவுக்கு வெறும் மோர் சாதம் போதும் என்று தீர்மானித்தாள். 

சரியாக நான்கரை மணிக்கு, காலனியில் இருக்கும் பர்வதம் வந்தாள். பர்வதமும் அமிர்தாவும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். பதினான்கு வயதில் ஒரு விஷ ஜூரம் பர்வதத்தின் உருவத்தையே மாற்றி விட்டது. கண்ணுக்கு லட்சணமாக, ஒற்றை நாடியாக இருந்த பெண் மெல்ல மெல்ல நாள் செல்லச் செல்ல, பலூன் மாதிரி ஊதிக் கொண்டே வந்தாள். இப்படியே போனால் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவள் வெடித்துப் போய்விடுவாள் என்று காலனி வாசிகள் பயமும் ஆர்வமும் கலந்த உணர்ச்சியுடன் எதிர் பார்த்தார்கள். 

நல்லவேளையாக அவர்கள் எதிர்பார்த்தது நடக்க வில்லை. தைராய்டுக் குறைவால் உடல் அதீதமாகப் பருத்துப் போய்விட்டது என்றும், பல ஆண்டுகள் தொடர்ந்து சிகிச்சை செய்தால் ஒருவேளை உடல் பெருக்கம் கொஞ்சம் கொஞ்சு மாகக் குறையலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள். ஒரு ஓட்டலில் சரக்கு மாஸ்டராக இருப்பவருடைய வருமானம், தாயார், மனைவி, மூன்று பெண்கள், இரண்டு பிள்ளைகள் என்ற கூட்டத்தையே சமாளிக்க முடியாமல் தத்தளிக்கையில், பர்வதத்துக்கு இல்லாத தைராய்டை மீட்டுக்கொடுக்க ஏது வழி? 

பர்வதத்தைக் கண்டு அமிர்தா வியந்தாள். அவளுக்கும் வயது இருபத்து மூன்று. ஆனால் என்ன பக்குவப்பட்ட உள்ளம் பழகிப் போன காலனி வாசிகள் பர்வதத்தை அசட்டை செய்தாலும், அவளை முதன் முதலாகப் பார்க்கிற வர்கள் அவளைப் பார்த்தும் சிரிக்கத்தானே செய்கிறார்கள். அந்தச் சிரிப்புக்களை யெல்லாம் தாங்கிக்கொண்டு பர்வதம் எப்படி மரத்துப்போனவளைப் போல இருக்கிறாள்? எவ்வளவு மனத்திடமும் உறுதியும் இருந்தால் பர்வதத்தைப் போல அசையாமல் இருக்க முடியும்? சறுக்கி விழுந்தால் கைகொட்டிச் சிரிக்கும் சமூகத்தில் பர்வதம் எப்படி இன்னும் சமாளிக்கப் போகிறாள்? 

“வா, பர்வதம். உன்னைப் பார்த்து இரண்டு நாள் ஆகிறது”. 

”அது என் தப்பு இல்லை. உள்னைக் கண்டு ஒளிந்து கொள்ளவும் இல்லை. ஒளிச்சு வைக்க முடியாத உடம்பு தானே என்உடம்பு” – பர்வதம் சிரித்தாள். 

“இதோ பாரு பர்வதம், நீ இனிமே உன் உடம்பைப் பத்தி எங்கிட்டேயும் சரி, பிறத்தியார்கிட்டேயும் சரி, வாய் திறக்காதே… திடீர்னு வீங்கின மாதிரி, அது திடீர்னு ஒரு நாள் வடியும்… என்ன விசேஷம், சொல்லு…. “

“அம்பது வயசுக்கு அப்புறம் என் உடம்பு வடிஞ்சா என்ன பிரயோசனம் அமிர்தா…. அந்த வயசிலே வீங்கினால் ஒரு மூலையிலே முடங்கிக்கிடக்கலாம்… “

“விஷயத்துக்கு வாயேன்… ” 

“நீ ஏன் ஆபீஸ்லேந்து மத்தியானமே திரும்பிவந்து விட்டோ…” 

“ஒரு வேலை இருக்கு. நானும் அப்பாவும் வெளியே போகிறோம். நீ வந்த காரியம் என்ன?”

“உனக்கு தினமும் சாயங்காலம் மல்லிப்பூ கொடுத்து உன்னை பூஜிக்கிறானே. அந்த ரகு ஆஸ்பத்திரியிலே இருக்கான். நேத்து ராத்திரி ஏழெட்டுத் தரம் வாந்தி எடுத்தானாம். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கிறார்கள்”. 

ஒருகணம் அமிர்தா நிலை குலைந்து போனாள். 

கடந்த ஏழு வருடங்களாகத் தினம் தினம் பத்துப் பூ பைசாவுக்கு பூ வாங்கி அவள் வீட்டுக்குள் போடும் ரகு-யாரை அவள் தன் மனத்தோடு ஒட்டாமல் வைத்திருந்தாளோ, அந்த ரகு-இப்போது அவளைக் கலக்கினான். 

அத்தியாயம்-2 

தம்முடைய ஐம்பத்தைந்து வயதில், இன்னும் தளராமல் மழையையும் வெயிலையும் லட்சியம் செய்யாமல் காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை, ஒரு பழைய, புராதனமான டைப்ரைட்டிங் மிஷினுடன் வயிற்றுப் பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாரே, இந்தப் பசுபதி, முன்னொரு காலத்தில் தங்கத் தட்டில் சாப்பிட்டு வெள்ளிச்செம்பால் கை கழுவியவர். அவருடைய தாத்தா தஞ்சை மாவட்டத்தில் நூறு வேலியை ஆண்டு கொண்டிருக்கும் போது, மூன்று வயசு பசுபதி தங்க அரைஞாணும் செயினும் காப்புமாய் சில்க் ஷர்ட்டுடன் மிளிர்ந்தான். எத்தனையோ தஞ்சாவூர் மிராசுதார்களைப் போலத் தான் நம்முடைய பாட்டனாரும் டம்பாச்சாரியாக வாழ்ந்தார் என்பதை அவர் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்தது. பாட்டனாருடைய ஏழு பிள்ளைகளும் அவருடைய பல லட்ச ரூபாய்க் கடனைப் பகிர்ந்துகொண்டு நிலபுலன்களையெல்லாம் விற்று, காவிரிக் கரையில் வெறும் ஈரத் துணிகளுடன் நின்றார்கள். எந்தப் பிள்ளைக்கும் படிப்புவாசனை, அப்பாவின் பணக் கொழுப்பால் இல்லாமற் போகவே, அவரவர்கள் கால் சென்ற திசையில் பிழைக்கச் சென்றார்கள்.

பசுபதி கொடுத்து வைத்தவராக இருந்தார்.தாத்தாபோன சூட்டிலேயே அப்பாவும், அதைத் தொடர்ந்து அம்மாவும். போனார்கள். ஒரே பிள்ளையான அவர் தம்முடைய அனாதைத்தனத்தில் மாய்ந்து போய்விடவில்லை. பன்னிரண்டு வயதிலேயே அதீதமான தைரியமும், வைராக்கியமும் அவருள் ஏற்பட்டிருந்தது. இவற்றையே மூலதனமாகக் கொண்டு தம்முடைய அரைச்சாணை நிரப்பி விடலாம் என்று முடிவெடுத்தார். 

அவர் சிறு பையனாக இருக்கும் போது தாத்தா வாரா வாரம் ரெயிலில் முதல் வகுப்பில் சென்னைக்குப் பிரயாணம் செய்வார். (கிண்டி குதிரைகளைச் சந்திக்கத்தான் அவர் அப்படிச் சென்று கொண்டிருந்தார் என்பது பிறகு தான் தெரிந்தது.) மாயவரம் ஜங்ஷனுக்கு ரெயிலேற்றிவிட கார் செல்லும் போது பசுபதியும் உடன் செல்லுவான். அந்த மாயவரம் ஸ்டேஷனுக்கு பன்னிரண்டாம் வயதில் எல்லா வற்றையும் துறந்த ஞானி போல பசுபதி வந்து நின்ற போது, தூரத்தே ரெயில் வருவது தெரிந்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்திலோ, மாயவரத்திலோ தங்கி நாட்களை ஓட்டப் பணம் காசு இல்லை. ஓட்டாண்டிகளாகி விட்ட பெரியப்பா, சித்தப்பாக்களோடு ஒட்டிக் கொள்ளு வதிலும் அர்த்தம் இல்லை. தாத்தாவைப்போலச் சிலர் பட்டணத்தில் கிடைத்த லட்சுமி கடாட்சத்தைக் கரைத்த போதிலும், எத்தனையோ ஆயிரம் பேர் அதே பட்டணத்தில் அவளைத் தேடி அலைந்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக் கிறார்கள். பசுபதியும் முயற்சி செய்து பார்த்தால் என்ன? 

பசுபதி எழும்பூரில் இறங்கினான். 1933-ம் ஆண்டு சென்னை அமைதியாக இருந்தது கையிலிருந்த பதினான்கு அணாவுடன் (இப்போதைய எண்பத்தேழுபைசா) கால் போன திசையில் நடந்தான். திருவல்லிக்கேணியில் ஒரு சின்னஞ்சிறு ஓட்டலில் தன்னுடைய கோரப்பசியை ஆற்றிக் கொண்டான் (4 இட்லி 6 பைசா -1 தோசை 3 பைசா. மொத்தம் 9 பைசா).

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் மண்டபத்தில் பகலையெல்லாம் தூக்கத்தில் கழித்த அவனுக்கு பெருமாளின் கருணையினாலோ என்னமோ அவருடைய திருவடியிலேயே ஒரு வேலை கிடைத்தது. எடுபிடி வேலை தான். உக்கிராண அறைப் பாத்திரங்களைத் தேய்ப்பது, தேய்த்த பாத்திரங்களை கழுவி வைப்பது, கூலி காசாக ஏதும் கிடைக்கவில்லை. பொங்கல், புவியோதரை என்று பிரசாதமாகக் கிடைத்தன. இரண்டு மூன்று மாதத்தில் ஒரு வக்கீல் குமாஸ்தாவின் பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பயனாக வக்கீலின் வீட்டில் குழந்தைகளை பள்ளிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றுவரும் பணி கிடைத்தது. வக்கீல் வீட்டு அம்மாளுக்கு சிற்றுண்டி வேலைகளும் செய்யவேண்டும். அங்கே இருக்கும்போது தான், மத்தியான வேளைகளில் வக்கீலுடைய அறையில் இருக்கும் டைப்ரைட்டிங் மிஷின் கண்ணில்பட்டது. ஏற்கனவே ஆறாவது வகுப்புவரை படித்திருந்ததால் ஆங்கில எழுத்துக்கள் அத்துபடி ஆகியிருந்தன. 

ஆள்காட்டி விரல்களால் தன் தொழிலின் பயிற்சியை ஆரம்பித்தான். இரண்டு அல்லது மூன்று மாதம் பயிற்சியில் தப்புக்கள் இல்லாமல் ஒருகடிதத்தை டைப் செய்யும் அளவுக்கு தேர்ச்சி உண்டாயிற்று. முயற்சியை விடவில்லை. 

ஒரு தடவை குமாஸ்தா ஜுரம் என்று வராமல் இருந்த போது, அன்று அடிக்கவேண்டிய தஸ்தாவேஜு களை அவனே அடித்து வக்கீலிடம் கொடுத்தபோது அவர் அயர்ந்தே போனார். திடீரென்று அவருக்கு அவன் மீது இதுவரை இல்லாத அக்கறை பிறந்தது. அவனுக்கு உற்சாகமூட்டினார். 

அவனுடைய பதினெட்டாவது வயதில் வக்கீல் காலமானார். குமாஸ்தா, உயிரோடு இருக்கும் வேறு ஒரு வக்கீலைத் தேடிப் போனார். ஆனால் பசுபதி அந்த வீட்டோ டேயே ஒட்டிக் கொண்டான். வக்கீலின் விதவைக்கும். அவளுடைய வயது வந்த பெண் பிள்ளைகளுக்கும் பணி விடைகளைத் தொடர்ந்து செய்தான். ஒரு நாள் வக்கீலின் மனைவி, பம்பாயில் வேலைபார்க்கும் பிள்ளையோடு வாழப் போவதாகக் கூறி அவனையும் பம்பாய்க்கு அழைத்தாள். பம்பாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் சென்னையைவிட்டுச் செல்ல மனம் வரவில்லை. 

அவள் போகும்போது, காலம்சென்ற வக்கீலின் டைப்ரைட்டிங் மிஷினை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தாள். அதிலேயே அவனுடைய பிழைப்பும் பதினெட்டாம் வயதில் தொடங்கியது. 

பசுபதியின் சரித்திரத்தில் இரண்டு முக்கியமான மைல் கல்கள் தோன்றின. இருபத்தாறாவது வயதில், பழைய வக்கல் குமாஸ்தாவின் பெண்ணைத் திருப்பதியில் கலியாணம் செய்து கொண்டார். அய்யர், அய்யங்கார், முதலியார், செட்டியார் என்ற வகுப்பு பேதங்களையே எண்ணிப்பாராத பசுபதி. எண்ணிப் பார்த்தாலும் துச்சமாக மதிக்கும் பசுபதி-குமாஸ்தா ராமானுஜ அய்யங்காரின் பெண்ணான குமுதாவைக் கலியாணம் செய்து கொண்டதை திருவல்லிக்கேணி அய்யங்கார்கள் பலர் நிந்தித்தாலும் அவளும் சரி. ராமானுஜமும் சரி கவலைப்படவில்லை. 

இருபத்தொன்பது வயதில் கெளரி பிறந்தாள். முப்பத் திரண்டு வயதில் அமிர்தா பிறந்தாள். அவருக்கு முப்பத்தாறு நடக்கையில், மூன்றாவது பிரசவத்தின் போது குமுதா ஆபரேஷனில் இறந்து போனாள். 

இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எண்ணமே இல்லாத பசுபதி குழந்தைகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு பிழைப்பைத் தொடர்ந்தார். 

எப்படியோ நாட்கள் ஓடி உருண்டு வயதுகளை விழுங்கிக் கொண்டு சென்றன. 

பெண்கள் இருவருமே எஸ். எஸ். எல். சி.. பி.யு.சி. வரை இலவசக்கல்வித் திட்டத்தில் படித்து முடித்தார்கள்.

கௌரியைப் போன சித்திரையில் கலியாணம் பண்ணிக் கொடுத்தார். கௌரி வேலை செய்யும் காரியாலயத்திலேயே பணிபுரிகிற ஒரு நல்லபிள்ளை, வாய் திறந்து அழைத்துப் பேசத் தெரியாத ஒரு ஜீவன். அவனுடைய ஆசையை அவனுடைய தகப்பனார் – இன்னொரு வாயில்லாத ஜீவன் தீர்த்துவைத்தார். 

இனி அமிர்தாவையும் ஒரு நல்ல இடத்தில் கொடுத்து விட்டால், அவர் டைப்ரைட்டிங் மிஷினோடு கங்கையில் கலக்கத் தயாராகி விடுவார். பெண்கள் இருவரும் நல்ல சமுத்திரங்களை அடைந்த பிறகு, அவருடைய வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது சாதிக்க? எதையுமே ஒரு பிரச்சினையாகக் கருதாத அவருக்கு பிரச்சினையில்லாத வாழ்வும் ஒன்றுதான்-சாவும் ஒன்று தான். 

கடந்த ஒரு மாதமாக கெளரியின் வீட்டிலிருந்து வரும் கட்டளைகள் பசுபதிக்கு மனவருத்தத்தை அளித்தன. 

கௌரியும் மாப்பிள்ளை மோகனும் பரஸ்பர அன்பின் காரணமாகக் கலியாணம் செய்து கொண்டிருந்த போதிலும், அக்கலியாணத்தை இருதரப்பார்களும் ஆமோதித்து. அங்கீகரித்தே நடத்தியிருந்தார்கள். தம்முடைய சக்திக்கு ஏற்ற வகையில் சீர்வரிசைகளை பசுபதி செய்யத்தான் செய்தார். மோகனுடைய தந்தை வாய் திறக்கவேயில்லை. அவனுடைய தாயார் ஏதேதோ அவ்வப்போது சின்னஞ்சிறு குறைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தாளே தவிர, தாம்பத்தியத்துக்கு இடையூறாக ஏதும் பேசவில்லை. 

மோகனுடைய கலியாணம் நடந்த மூன்று மாதங்களில் அவனுடைய தங்கை மீனாவுக்குக் கலியாணம் நடந்தது. தன் பிள்ளைக்கு வந்த சீர்வரிசைகளுக்கு மேலேயே, பெண்ணுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நாலுபேர் காதில் விழும்படியாகப் (முக்கியமாக பசுபதி, கெளரி காதுகளில் விழும்படியாக) பேசினாள். மோகனுடைய தாயார். அப்போது இந்தப் பேச்சின் தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ளாத பசுபதிக்கு இப்போதுதான் எல்லாம் புரிந்தது. மீனாவின் கணவன் வீட்டில் சாந்தி முகூர்த்தச் செலவுக்கு என்று தனியாக இரண்டு ஆயிரம் ரூபாய் நிபந்தனையாக வாங்கிக் கொண்டார்களாம். 

அந்தச் செலவை மீட்க கௌரியை இலக்காக வைத்திருக்கிறார்கள். 

இரு வாயில்லாப் பூச்சிகளுக்கிடையில் இருக்கும் கெளரி, மாமியாரின் ஏச்சுப்பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு தவிக்கும் தவிப்பு பசுபதியின் காதில் விழுந்தது. ஆனால் அவர் என்ன செய்ய முடியும்? 

அமிர்தா ஒரு வழி சொன்னாள். இதுவரையில் கௌரியின் மாமியார் ராஜம்மா நேரடியாக எதையும் சொல்ல வில்லை. வந்த செய்திகளும் தகவல்களும் கௌரி கொண்டு வந்தவை. ஏன் ராஜம்மாவையும் அவளுடைய கணவர் கைலாசத்தையும் நேரில் சந்தித்து அறிந்து கொள்ளக்கூடாது? 

அன்று மாலை ஐந்து மணிக்கு மேற்கு மாம்பலத்துக்குச் செல்லுவது என்று தீர்மானித்தார்கள், அமிர்தாவும் பசுபதியும். பசுபதிஅன்று சீட்டாட்டத்தைத் தியாகம் செய்து விட்டு மயிலாப்பூருக்கு நேரே சென்றார். 

வீட்டை அடைந்தபோது ஐந்து அடிக்க பத்து நிமிடங்கள். 

வீட்டில் அமிர்தா இல்லாததைக்கண்டு ஆச்சரியப்பட்ட அவர், அவளுடைய சிநேகிதி பர்வதம் சொன்ன செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார். 

அத்தியாயம்-3 

ரகு என்ற ரகுனாதனுக்கு இந்த டிசம்பரில் இருபத்தெட்டு வயது முடியப்போகிறது. அப்பா இல்லை. அம்மா கைநிறைய சம்பாதிக்கும் தன் மூத்த பிள்ளையுடன் கல்கத்தாவில் இருக்கிறாள். அமிர்தா உத்தியோகம் பார்க்கும் காரியாலயத்தில், அவளுக்கு நான்கு ஆண்டுகள் முன்ன தாகவே சேர்ந்து, இப்போது கிராக்கிப்படி, வாடகை அலவன்ஸ் உட்பட சுமார் எண்ணூறு ரூபாய் சம்பாதிக்கிறான். அம்மாவுக்கு அனுப்பவேண்டிய அவசியமில்லை. பிரம்மசாரி கட்டைக்கு இந்த எண்ணூறு ரூபாய் லாட்டரிப் பரிசு போல என்று அவன் தினம் தினம் அமிர்தாவின் வீட்டில் போடும் மல்லிகைப் பூவைப் பார்க்கும்போதெல்லாம் அமிர்தா நினைத்துக் கொள்ளுவாள். 

ஆனால் ரகுவுக்கு, சம்பளம் இன்னும் இருநூறு ரூபாய் இருந்தாலும் போதாது. அவனுடைய ரகசிய வாழ்க்கையைப் பலர் அறிந்ததில்லை. 

தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் அவன் கபாலீசுவரரையும், கேசவபெருமாளையும் சந்தித்துப் பேசி விட்டு நேரே ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருவான். அங்கேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து தனக்குத் தெரிந்த ஸ்தோத்திரங் களைத் தனக்குள்ளேயே முணுமுணுப்பான். பிறகு நேரேவஸ் முனைக்கு வந்து வினாயகரைத் தரிசனம் செய்வான். இதற்குள் மணி எட்டரை ஆகிவிடும். ஒவ்வொரு கோவிலுக்கும் தினசரி ஒருரூபாய்க்காவது பூவும் கற்பூரமும் போய்ச் சேரும். இதைத் தவிர வெள்ளிக்கிழமை, கிருத்திகை என்று அர்ச்சனைகள். மாதம் ஒரு தடவை திருப்பதி விஜயம். வாரம் ஒரு தடவை கருமாரி அம்மனுக்கு அபிஷேகம். 

இது மாதிரி கோயில்களுக்குச் செலவழித்தபின், அறை வாடகைக்கும், சாப்பாட்டுச் செலவுக்கும் மிஞ்சும் பணம் நூற்றைம்பதுகூட இருக்காது. எதை நம்பி எதற்காக இப்படித் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறான் என்று அவனுக்கே தெரியாது. சினிமா, பீச் எப்படி சிலருக்குப் பழக்கமாகி விடுகிறதோ அதுபோல கோயில் அவனுக்கு ஒரு வழக்கமாகி விட்டது. அவ்வளவுதான். 

அமிர்தாவை அவன் சந்தித்ததே ஒரு தனிக் கதை. அப்போது அவளுக்குப் பதினாறு வயது. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போய்க் கொண்டிருந்த நாட்கள். ஒருநாள் பத்துப்பைசா பூவுக்கு, அமிர்தா ஒரு ரூபாய் நோட்டை நீட்டினாள். பூக்காரனிடம் சில்லறை இல்லை. ‘போணி’ என்று வேறு அவன் சொல்லவே பூவையும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த சமயத்தில் கற்பகாம்பாளுக்கு ரோஜா மாலை சார்த்த வந்த ரருவிடம் ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா என்று விசாரித்தாள் அமிர்தா. இல்லை என்று சொல்லிவிட்டு பூக்கடைக்காரனிடம் மாலையை வாங்கி அமிர்தாவின் பூவுக்கும் காசைக் கொடுத்தான். 

மறுநாள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த அமிர்தா கடையில் ரகுவை மீண்டும் சந்தித்தாள். அவன்கையில் மல்லிகைப் பூவுடன் அவளுக்காக காத்திருந்தான். 

“நான் பூ வாங்கிக்க வரவில்லை.” அவள் பத்துப் பைசாவை நீட்டினாள். 

அவன் சிரித்தாள் 

“நான் கொடுக்க வந்துவிட்டேன். எந்தவிதமான கெட்ட எண்ணமும் இல்லாமல் தருகிறேன். வாங்கிக் கொள்.” 

அவளுக்கு ஆத்திரப்படுவதா-பத்துப் பைசாவைத் திருப்பிக் கொடுத்து விட்டு மௌனமாகத் திரும்பிச் செல்லுவதா என்று புரியவில்லை. 

“எனக்கு அக்காதங்கை இல்லை. இந்தப் பட்டணத்திலே வீடு வாசல்னு ஒண்ணும் கிடையாது. வாங்கிக் கொள்”. 

அவன் அவளுக்கு முன் பூவை வைத்தான். பிறகு விரைந்து நடந்தான். 

“இந்த ஆள் என்ன ஒரு மாதிரியா?” என்று அமிர்தா கடைக்காரனிடம் கேட்டாள். 

“நன்னாக் கேட்டீங்க அம்மா, அவனைப் போல ஒரு பிள்ளையை நான் இந்தக் காலத்திலே பார்த்ததில்லை விடியக் காலை அஞ்சரைமணியிலிருந்து கோயில்தான். 

“எனக்கு ஏன் பூ நரணுமாம்?” 

“அதாம்மா எனக்கும் புரியலை. எத்தனையோ பெண்கள் கடைக்கு வறாங்க….. யார் கிட்டேயும் இவன் பேசிக்கூட நாள் பார்த்ததில்லை. 

“வேலை செய்யறாரா?” 

“ஆமாம். சர்க்கார் ஆபீஸ்லே குமாஸ்தா. காலேஜ் படிப்பு படிச்சவன்,’ 

“இனிமே அவன் பூ கொடுத்தால் நான் உள் கடைக்கே வரமாட்டேன், ” 

“அதனாலென்ன அம்மா. இவன் தினம் ரெண்டு ரூபாய்க்கு எங்கிட்டே பூ வாங்கறான். அவன் வராமல் போளாத்தான் எனக்கு நஷ்டம்” என்றான் கடைக்காரன். 

அதன் பிறகு ஒரு வாரம் அவள் அந்தக் கடைப்பக்கமே செல்லவில்லை. எட்டாவது நாள் சென்றபோது. ரகுவைப் பார்க்கவில்லை கடைக்காரன் அவனைக்கண்டதும் புன்முறு வலித்தான். பிறகு எட்டு முழம் மல்லிகைப் பூவைப் பந்தாக்கி, வாழை இலையில் கட்டி நீட்டினான். 

“இவ்வளவு பூயார்கேட்டார்கள்?” என்றாள் அமிர்தா. “அவன், அந்தப் பிள்ளை கொடுக்கச் சொல்லியிருக்கிறாள்.”. 

“அவனைத்தாள் கேட்கணும்”. 

“எனக்கு…” 

அவள் முடிக்கும் முன். கடைக்காரன், ”வெள்ளிக் கிழமையும் அதுவுமாய் பூவை வேணாம்னு சொல்லி விடாதே… நீ வாழப்போற பொண்ணு.”

இரண்டாம் சந்திப்புக்குப் பிறகு இருவரும் பல மாதங்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை. அப்புறம் ஒருநாள் தற்செயலாக சந்தித்த போது, “நீங்கள் தினமும் எனக்காசு பூ வாங்கி வீட்டுக்கு அனுப்புவது எனக்குப் பிடிக்கவில்லை. கடைக்காரன் கிட்டேயே அனுப்பச் சொல்லியிருக்கிறீர்களாம் என்றாள். 

“உன் வீடு எங்கேன்னு எனக்குத் தெரியாது. தெரிந் தாலும் வரமாட்டேன். ஏன் தெரியுமா, நான் நல்ல எண்ணத் துடன் வந்து தந்தாலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தாறுமாறாகப் பேசுவார்கள். 

“எனக்கு உங்கள் பூ இனி மேல் தேவை இல்லை.”

”வீட்டில் சுவாமி படம் இருக்கிறது அல்லவா…. அதற்குப் போட்டு விடேன். ஸாரி, போட்டு விடுங்களேன். எனக்கு நேரமாகிறது. நாள் வருகிறேன். 

அமிர்தாவுக்கு அழவும் தெரியவில்லை. சிரிக்கவும்: தெரியவில்லை. பேசாமல் வீட்டுக்குத் திரும்பினாள். ரகு என்கிற ஒரு ஆண்பிள்ளை கண்ணுக்கு லட்சணமாக இருக்கத் தான் இருந்தான். ஆனால் அவனுடைய ஆண்மை,அவளுடைய பெண் மனத்தை ஈர்க்கவில்லை. அவன் மீது எந்த விதமான அன்போ அபிமானமோ ஏற்படவில்லை. 

டைப்ரைட்டிங் பயிற்சிக்குப் பிறகு, எல்லாப் படிப்பும் முடிந்த பின் ஒரு வருடம் வேலை இல்லாமலே கழித்த அவள் வீட்டுக்கு ஒருநாள் பூக்காரன் வந்தான். ஒரு விலாசத்தையும் கொடுத்தான். அது ஒரு சிறு எலக்ட்ரிக் கம்பெனியின் விலாச மாக இருந்தது. 

“அங்கே போனா. நூத்தைம்பது ரூபாய்க்கு ஒரு வேலை கிடைக்கும்னு ரகு சொன்னான் அம்மா.” 

பூவையே உதறாத அமிர்தா ஆச்சரியப்பட்டாள். ஏன்ரகு அவளுக்கு சிபாரிசு செய்கிறார்? 

கம்பெனிக்குப் போனாள். கம்பெனி அதிபர் எடுத்த எடுப்பிலேயே, மூணு மாசமாரகு என்னை அரிச்சுத் தின்றான். என் கம்பெனியில் பெண்களே இருக்கக் கூடாது என்று திடமாக தீர்மானித்திருந்தேன். ஆனா என் மனசை ரகு மாத்திட்டான். இன்ளிக்கே நீ வேலையை ஆரம்பிக்கலாம். 

தளக்கு வேலை வாங்கிக் கொடுத்த ரகுவைச் சந்தித்து தன்றி சொல்ல அமிர்தா துடித்தாள். ஆனால் மூன்று மாதங் களுக்கு முடியவில்லை. ஒருநாள் சந்தித்த போது, அவள் பேச்சின் திசையையே மாற்றினான் ரகு. 

‘இவன் ஒரு பித்துக்குளி, பைத்தியக்காரன்’ என்ற எண்ணம்தான் அன்று அவளுள் பிறந்தது. 

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள் ரகு அவளைத் தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்தான். பசுபதி அப்போது தான் எழுந்து பல்துலக்கி விட்டு காபி தம்ளரை எடுத்துக் கொண்டிருந்தார். 

“யார் வேணும்?” என்றார்.அவர், அவனைப் பார்த்ததும். ” நீங்கள் தான் பசுபதியா? 

“ஆமாம்.” 

”உங்கள் பெண் அமிர்தா நான் வேலைபார்க்கும் ஆபிசுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டிருந்தாள்.”

“அவளை-உனக்குத் தெரியுமா?”

“தெரியாது ஆனா பார்த்திருக்கிறேன்.’ “உன் பெயர் ரகுவா?” 

“ஆமாம்”. 

“தினம் தினம் பூகொடுக்கிற பேர்வழி நீதானே?”

“ஆமாம்.’ 

” நீ என்ன அவளுக்கு பூ கொடுத்து தாலி கட்டலாம்னு பார்க்கிறாயா….?”

“ஆம்!” 

“அப்போ வெளியே போ…. நல்ல இடத்திலே அவளுக்குக்கலியாணம் ஆகணும்.”

“இனிமே நான் வரமாட்டேன் அவளைக் கட்டாயம் இண்டர்வ்யூவுக்கு வரச்சொல்லுங்கள். எடுத்த எடுப்பில் நானூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும்”. 

“சரி போ” என்ற பசுபதி அடுத்த கணமே, “மிஸ்டர் ரகு, கொஞ்சம் இரு” என்றார். பிறகு, “காபி சாப்பிடு” என்றார். 

“தாங்க்ஸ். நான் காபி சாப்பிடறதில்லை.” 

“அந்தக் காசில் பூவாங்குகிறாயாக்கும். ” 

ரகு சிரித்தான். 

“நான் வரேன் சார். உங்க பெண்ணுக்கு வேலை கிடைக்கும். கம்பெனி வேலையை விட்டு விடலாம் “

“உனக்கு எந்த ஊர்?”

“மாயவரம்,” 

“அங்கே எங்கே?” 

“பட்ட மங்கலம்.” 

“உன் அப்பா?” 

“மூணு வயக நடக்கறப்போ போய்ட்டார்”. 

“மெட்ராஸ்லே யார் இருக்கா?”

“யாருமில்லே. கல்கத்தாவிலே அண்ணா என்ஜினியரா இருக்கார். அம்மா அவர்கூட இருக்கா!”

“நீ பி.ஏ.வா?” 

“இல்லை. பி.எஸ்.ஸி.”

“அமிர்தா உன்னைப் பத்தி என்ன நினைக்கிறாள்?”

“தெரியாது, பித்துக்குளின்னு நினைப்பாள்னு தோண்றது”.

”நான் ஏழை. தம்புச்செட்டித் தெருவிலே வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறவன். அமிர்தாவுக்கு மேலே இன்னொருந்தி இருக்கிறாள்.” 

“ஸார்… நான் இப்ப இதைக் கேட்க வர வில்லை”.

அடுத்த கணம் ரகு வெளியேறினான். 

அமிர்தாவுக்கு ஒரு காரியாலயத்தில் வேலை வாங்கிக் கொடுத்த அவனை ஆஸ்பத்திரியில் பார்க்க அமிர்தா ஓடியிருக் கிறாள். 

அத்தியாயம்-4 

அமிர்தா ராயப்பேட்டை ஆஸ்பத்திரியை அடைந்த போது சரியாக மணி ஐந்து. எங்கேயெல்லாமோ தேடிவிட்டு கடைசியில், அபாய நிலையில் இருக்கும் நோயாளிகள் கிடக்கும் வார்டுக்கு வந்தாள். ரகு உணர்வின்றி கிடப்பதைக் கண்டபோது அவளுடைய மனம் துணுக்குற்றது. நாசியின் வழியே பிராணவாயு இழையோடிக் கொண்டிருந்தது. வலது புறங்கையில் குத்தப்பட்டிருந்த ஒரு ஊசி மூலம் குளூகோஸ் சென்று கொண்டிருந்தது. 

நர்ஸிடம் விசாரித்து விட்டு நேரே டாக்டரிடம் சென்றாள். 

“டாக்டர், மிஸ்டர் ரகுனாதனுக்கு எப்படி இருக்கிறது?”

“இன்னும் ஒன்றும் சொல்வதற்சில்லை. நீங்கள் யார்? அவருடைய மனைவியா?” 

“நோ.எ ஃப்ரண்ட்… டாக்டர். அவர் எப்படியும் பிழைத்துத் தீரணும்”. 

“நாங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்கிறோம். நாளை பொழுது விடிந்தால் தான் சொல்ல முடியும்”. 

“ஒரே அறையில் எட்டு பேர் இருக்கிறார்களே, டாக்டர். வசதியாக வேறு ரூம் இல்லையா?” 

“இருக்கு. ஆனால் மிஸ்டர் ரகுனாதன் பணம் ஏதும் கட்டவில்லையே?” 

“என்னிடம் இருக்கிறது. எவ்வளவு ஆனாலும் பரவா யில்லை. அவரைத் தனி அறைக்கு அனுப்புங்கள். 

“பணத்தைக்கட்டுங்கள்”. 

“இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன்”. 

அமிர்தா விரைந்து வெளியே வந்து ஒரு டாக்சியில் ஏறிக்கொண்டாள். ஆழ்வார்பேட்டையில் மாலை ஐந்தி லிருந்து இரவு ஏழரை மணி வரை இயங்கும் ஒரு பாங்கி இருக்கிறது. அதில்தான் அவளுடைய சேமிப்பு இருந்தது. தன் கணக்கிலிருந்து ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அதே டாக்ஸியில் திரும்பினாள். 

டாக்டர் எத்தனையோ டாக்டர்களைப் போல நல்லவர். அமிர்தாவின் மனக் கலக்கத்தை உணர்ந்து கொண்ட அவர். அவள் பணத்துடன் திரும்பி வருவதற்குள் ரகுவை ஒரு தனி அறைக்கு மாற்றி இருந்தார். 

பணத்தைக்கட்டி விட்டு டாக்டரிடம் ரசீதைக் காட்டிக் கொண்டே, “டாக்டர், பணம் எவ்வளவு செலவுஆனாலும் பரவா வில்லை. மிஸ்டர் ரகுனாதன் பிழைக்க வேண்டும்” என்றாள். 

“டாக்டர்கள் கடமையைத் தானம்மா செய்யமுடியும்! அவர்களுக்கும் மேலே தெய்வம்னு ஒன்னு இருக்கு..” 

“அவருக்கு என்ன உபாதை டாக்டர்?” 

”டீ ஹைட்ரேஷன்…. உடல் வறண்டு கொண்டு வருகிறது. வாந்தியிலும் வயிற்றுப் போக்கிலும் உடல் வறண்டு விட்டது. ஸலைனும் குளூகோஸும் கொடுத்துக் கொண்டே இருக்கணும்… உடல் அதை முழுவதும் ஏற்றுக் கொண்டால் பிழைத்துக் கொள்ளுவார்.” 

“எப்படி இந்த வியாதி வந்தது?” 

“சாப்பிட்ட உணவில் ஏதாவது விஷம் கலந்திருக்கலாம். ரத்தம், மலம், சிறுநீர் எல்லாம் பரீட்சைக்கு அனுப்பிருக்கிறோம்”. 

“இரவு நான் இங்கேயே தங்கலாமா?” 

“ஷ்யூர். ஆபீஸில் ஒரு பாஸ் வாங்கிக் கொள்ளுங்கள். இரவிலோ, காலையிலோ அவர் கண் திறந்தால், பார்லி, குளூகோஸ், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுக்க சௌகரியமாக இருக்கும்.”

“அவர் இன்னிக்கு ராத்திரி கண் திறப்பார் டாக்டர்… அதற்குள் நான்போய் எல்லாம் கொண்டுவந்து விடுகிறேன்”.

அமிர்தா இப்போது பரபரப்பு அடையவில்லை. நிதானமாக வார்த்தைகள் வந்தன. 

டாக்டர் ஒரு நிமிடம் அவளையே உற்றுப் பார்த்தார். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர்மெல்லிய குரலில் கேட்டார். 

“நான் கேட்கறது தப்புன்னா என்னை மன்னித்து விடுங்கள். ரகுனாதன் உங்களுடைய காதலரா? 

“என்னுடைய காதலர் இல்லை டாக்டர். ஆனா நான் அவருடைய காதலி. எனக்கு அவர் சிநேகிதர்.”

“ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது!” 

“இதில் என்ன ஆச்சரியம் சார். அவர் என்னைக் காதலிக்கிறார்னு எனக்குத் தெரியும். ஆனா அதேமாதிரியான உணர்ச்சி என்னிடம் பிறக்கவில்லை. நான் அவரைக் காதலிக்காததால்; ஒதுங்க வேண்டுமா. இல்லை அலட்சியமாக இருக்க வேண்டுமா? அவர் என் நண்பர்”. 

“அவருக்கு அம்மா, அப்பாயாருமில்லையா?” 

“அம்மா இன்னொரு பிள்ளையுடன் வடக்கே இருக்கிறாள். எனக்கு விலாசம் கூடத் தெரியாது”. 

”அதைத் தெரிந்து கொள்ளுவது நல்லது”. 

“அப்போது ஏதானும் விபரீதம் ஏற்படலாம்னு தானே அர்த்தம் டாக்டர்?” 

“பூனை மதில்மேல் இருக்கிறது. எந்தப் பக்கம் குதிக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்”. 

“ரகுனாதன் தினம் தினம் கோயிலிலேயே தன் நேரத்தைச் செலவழிக்கிறவர். அவர் வணங்குகிற தெய்வங்கள் அவரைக் கைவிடாது டாக்டர்….” 

“வீவில் ஹோப் ஃபார் தி பெஸ்ட்….. “

சுமார் ஆறரை மணிக்கு அமிர்தா வீட்டுக்கு வந்தாள். அப்பாஅவளுக்காக காத்திருந்தார். 

“என்னம்மா, ரகுவுக்கு என்ன ஆபத்து?”

“உணர்வில்லாமல் கிடக்கிறார் அப்பா….. ஜெனரல் வார்டிலே பத்தோடு பதினொண்ணாக் கிடந்தார். நான்போய் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றி விட்டு வந்தேன்”. 

“அதுக்கு அவன்கிட்டே பணம் இருந்ததா?” என்று கேட்டார் பசுபதி. 

“அவருடைய ஷர்ட்டுப் பாக்கெட்டை நான் துருவிப் பார்க்கவில்லை அப்பா…. நான் பணம் கட்டினேன்.”

“அவன் திருப்பித் தருவானா?” 

“அதை எதிர்பார்த்து நான் கட்டவில்லை”. 

“கௌரியின் மாமியாரைப் பார்க்கப் போறதுன்னு இருந்தோம். ” பசுபதி முணுமுணுத்துக் கொண்டார். 

“கட்டிலும் பீரோவும் இல்லாமல் போனா கெளரியின் பிராணன் போகாதுப்பா…. ஆனா ஸலைனும், ஆக்ஸிஜனும் இல்லைன்னா ரகு பிழைக்க மாட்டார்.” 

“நான் ஒண்ணும் சொல்லலையே, அமிர்தா” 

“உங்க முணுமுணுப்பு எனக்குப் பிடிக்கவில்லை…உங்களுடைய இன்றைய சீட்டாட்டம் கெட்டுப் போச்சேன்னு உங்களுக்கு உள்ளூர ஆத்திரம் வர்றது. ஆனா வெளியே கொட்ட முடியாம முணுமுணுக்கிறீர்கள்…” 

ஏன் அப்பாவிடம் இப்படிப் பேசுகிறோம் என்று அமிர்தாவுக்கே புரியவில்லை. மனம் கலங்கிக் கொண்டிருக் கிறது. வாய் பீறிட்டுஅழ முடியாத அளவுக்கு அவள் தன்னையே அடக்கிக் கொண்டிருக்கிறாள். நாக்கு தன் இச்சையில் ஏதோ பேசுகிறது. 

பசுபதி வாய் திறவாமல் வாசற்பக்கம் சென்றார்.

“அப்பா?” 

அவர் வாய்திறவாமல் திரும்பிப் பார்த்தார்.

“எனக்கு ஒரு சின்ன உபகாரம் செய்கிறீர்களா?” 

“என்ன?’

“வீட்டில் பார்லி இல்லை. நூறு கிராம் பார்லியும், ஒரு பாட்டில் ஹார்லிக்ஸும் வாங்கிக் கொண்டு வருகிறீர்களா… என் ஹாண்ட் பாகில் பணம் இருக்கு. நான் அடுப்பை ஏற்றி தண்ணீரைக் கொதிக்க வைக்கிறேன்”. 

பசுபதி பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த போது அமிர்தா சொன்னாள். 

“அப்பா, நான் இப்போ ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறேன். திரும்பி எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது”.

“நீ ராத்திரி அங்கேயே தங்கப் போகிறாயா?”

“ஆமாம்”. 

திடீரென்று பசுபதிக்குக் கோபம் வந்தது. 

“நீ போகக் கூடாது”. 

“போகப் போகிறேன்.” 

“அமிர்தா, அவன் உன் ஆபீஸில் வேலை பார்க்கிறவனாக இருக்கலாம். தெரிஞ்சவனாக இருக்கலாம்… ஆனா ராத்திரியிலே அவனுடைய தலைமாட்டிலும் கால்மாட்டிலும் உட்கார வேண்டிய கடன் உனக்கு இல்லை”. 

“நான் ஒரு கடனைத் தீர்க்கப் போகவில்லை…”

“அவன் யாரோ, நாம் யாரோ. அவன் அன்னியன்.”

“அந்த அன்னியனுக்கு ஆபத்து வந்திருக்கு, அதனால் தான் போகிறேன்…” 

“எனக்குப் பிடிக்க வில்லை.” 

“உங்களுக்கு எது பிடிக்கக் கூடாது தெரியுமா? நானும் ரகுவும் கலியாணம் ஆகாமல் கைகோர்த்துக் கொண்டு பீச்சிலே நடந்தாலோ அல்லது ஒரு இரவு ஒட்டலில் தங்கினாலோதான். இப்போ நான் ஒரு ராத்திரியை, ஒரு ஆஸ்பத்திரி அறையில், உணர்வு இழந்த ஒரு நோயாளியுடன் கழிக்கப் போகிறேன்….” 

“அவன் என்ன உள் கழுத்திலே தாலியைக் கட்டியவனா… இல்லை கட்டப்போறவனா?” 

“அப்படி இருந்தால் நான் என் சுயநலத்துக்காக, மனைவியின் கடமைக்காகச் செய்யற காரியமாக இருக்கும் இதெல்லாம். ஆனா நான் இப்போ செய்யறது. மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய ஒரு தர்மம்”. 

“தர்மம்னா என்னன்னு உனக்குத் தெரியுமா?” 

“சாவகாசமா நாளைக்கு வந்து உங்ககிட்டே உபன்னியாசம் கேட்கிறேன்.”

“அமிர்தா, நான் கடைசியா சொல்றேன்… நீ ராத்திரி தனியா அங்கே தங்கக் கூடாது. நீ ஒரு பெண்… அதுவும் அழகான பெண். ஆஸ்பத்திரின்னா நாலும் இருக்கும்”. 

“என்னைப் பொறுத்த வரையில் ஒண்ணே ஒண்ணுதாள் இருக்கு. அதுவும் உணர்வு இல்லாம இருக்கு”. 

“என் பேச்சைக் கேட்காமப் போனே, அப்புறம் நீ யாரோ, நான் யாரோ?” 

அமிர்தா, அப்பாவின் பேச்சைக் கேட்டு, அயர்ந்து போனாள். இது நாள் வரையில் அவர் இப்படிப் பேசியதில்லை. ஒரு வார்த்தை கடுமையாகப் பேசியதில்லை. இன்று என் இந்த எல்லைக்குப் போய் விட்டார்? 

“அப்பா, மூணு வருஷம் முன்னாடி, என்னை ஒரு கேள்வி கேட்டீர்களே, நினைவு இருக்கா?”

“அப்பனுக்கு பரீட்சை வைத்துக் கேள்வி கேட்கிறாயா? என்ன கேட்டேன்?” 

“ரகுனாதனைக் கலியாணம் செய்து கொள்ள சம்மதமா? அவன் நல்ல பிள்ளையாக இருக்கிறான்னு கேட்டீர்கள்.

“சம்மதமில்லைன்னு அடிச்சுச் சொன்னாய்.“

“அப்படி இருந்தும் இன்னிக்கு அவருக்கு உதவியாக இருக்கப்போகிறேன்னா என்ன அர்த்தம்?”

“அது உனக்குத்தான் தெரியும். “

“அது என்னன்னு உங்களுக்குத் தெரியாம் இருக்கிறப்போ நான் விளக்கம் சொல்ல அவசியம் இல்லை. நான்வரேன்.” 

“போரேன்னு சொல்லு. இனிமே நீயும் நானும் தனி தான் அமிர்தா.”

“அதை நாளைக்குக் காலையிலே நிதானமா பேசிக் கொள்ளுவோம்.”

“ரெண்டு காசு சம்பாதிக்கிறோம் என்கிற திமிர் உனக்கு.”

அமிர்தா சிரித்தாள். 

“அப்பான்னா என்ன வேணுமானாலும் பேசலாம். பெற்ற பெண்ணை எப்படி வேணுமானாலும் நடத்தலாம். என்கிற திமிர் உங்களுக்கும் இருக்குன்னு நான் சொன்னா, அது தப்பாக இருக்குமா, அப்பா?”

”உன்னுடைய இந்த ரகு, இன்னிக்கு நட்ட நடு ராத்திரியிலே செத்துத் தொலைஞ்சா பிணத்தைக் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வருவாயோ?”

அப்பாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அமிர்தாவிற்கு உடல் நடுங்கியது. என்ன பேச்சுப் பேசுகிறார்? இப்படிப் பேசுகிறவருடன் நாளைக்கு வந்து நிதானமாகப் பேசவேண்டியது அவசியம் தானா? 

அவள் மீண்டும் இரவு எட்டு மணிக்கு ஆஸ்பத்திரியை அடைந்து, அந்த அறைக்குள் பிரவேசித்தாள். அங்கே கண்ட காட்சியில் அவள் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனாள். 

– தொடரும்…

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *